ஆணின் அத்தனை படைப்புகளும் பெண்ணின் கருவறையில் உருவாகும் குழந்தையின் முன் தோற்றுப் போகின்றன….
இது பாவை பிரிண்டர்ஸ் (பி)லிட்., ₹35 என்ற விலையில் வெளியிட்ட வெ. இறையன்பு அவர்கள் எழுதிய குழந்தைகள் என்னும் நூலில் உள்ள எனக்குப் பிடித்தமான வரிகள்..
குழந்தை, குழவி, மழலை என்ற சொற்களில் தமிழின் தனி சிறப்பான 'ழ'கரம் இருப்பது போல் குழந்தைகளும் மிகச் சிறப்பானவர்கள்.
குழந்தையைப் போன்ற சிறந்த கவிதை எதுவுமில்லை. எல்லா குழந்தைகளும் அழகு குழந்தைகள். மகிழ்ச்சியின் அடையாளங்கள். அதிலும் ஏங்கி,, தவமிருந்து, வருந்தி, காத்திருந்து, ஒவ்வொரு மாதமும் எதிர்பார்த்து அதற்குப் பின் பெறுகிற குழந்தைகள் பெற்றோருக்கும் உற்றோருக்கும் புதையலாய் மகிழ்ச்சியைத் தரும்.
குழந்தையை வளர்ப்பது செடியை வளர்ப்பதைப் போன்றோ செல்லப்பிராணியை வளர்ப்பதை போன்றோ எளிய செயல் அல்ல. மனம் என்ற ஒன்று இருப்பதாலும் எதைப் பார்த்தாலும் அதிசயப்படும் ஆற்றல் இருப்பதாலும் குழந்தைகளை வளர்த்தெடுப்பது ஒரு காவியத்தை படைப்பதை விடக் கடினம்.
குழந்தைகள் உலகம் மிகவும் அழகானது. அவர்களுக்கு பதவி பணம், பெருமை, புகழ், எதுவும் தெரியாது. அவர்களிடம் பொய் திருட்டு இல்லை. அவர்கள் மீது யார் அதிகம் அன்பு செலுத்துகிறார்களோ அவர்களே முக்கியமானவர்கள்.
குழந்தைகளுக்கு அளிக்கப்படுகிற அன்பின் அளவும் உப்பின் அளவைப் போல வெளியே தெரியாமலும் கச்சிதமாகவும் இருத்தல் அவசியம்.
"நான் மட்டுமே உலகில் முக்கியம், நான் ஒரு சக்கரவர்த்தி" என்கிற எண்ணங்கள் குழந்தைக்கு ஏற்பட்டால் அதன் தன்முனைப்பு அலாதியான அளவுகளை அடையும்.
கட்டுப்பாடுடனான சுதந்திரமும், கடமைக்கு கைகோர்க்கும் உரிமையும், கண்டிப்போடு கலந்த கனிவும், அளவோடு அளிக்கப்படுகின்ற அன்பும் தான் குழந்தைகள் தங்கள் பொறுப்பை உணர வழிவகுக்கும்.
ஐந்து வயது முதல் இந்த அணுகுமுறை அவசியம். இல்லாவிட்டால் குழந்தைகள் பெற்றோரை, தங்கள் வேலைக்காரர்களாக நினைத்துக் கொள்ள வாய்ப்புகள் உள்ளன, என்கிறார் ஆசிரியர் இறையன்பு.
தண்டித்தல் என்பது குழந்தை வளர்ப்பின் ஒரு பகுதி தானே தவிர அது மட்டுமே வழி ஆகாது.
சில வீடுகளில் பெற்றோருக்குள் சகல நேரமும் சண்டை. அவர்களுடைய வார்த்தை வாள்கள் மோதும் போது தெறிக்கும் நெருப்புப் பொறிகளும் குழந்தைகளைப் பொசுக்குகின்றன.
குழந்தைகள் வளரும் போதே அவர்களுக்கு சிறு சிறு தோல்விகளையும் அவமானங்களையும் எவ்வாறு கடந்து போவது என கற்றுக் கொடுக்க வேண்டும். ஏனெனில் எப்போதும் பாராட்டுக்களையும் பதக்கங்களையும் மட்டுமே வாழ்க்கை அவர்களுக்கு வழங்கப் போவதில்லை.
குழந்தைகளை அலங்கார பொருள்களாகவோ அடக்கு முறையின் அடையாளங்களாகவோ வளர்க்க வேண்டியதில்லை. அவர்களை உயிருள்ள உணர்வுள்ள ஜீவன்களாக வளர்ப்பது மிகவும் அவசியம்.
குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது சாதனை அல்ல. அவர்களை மகிழ்ச்சி மிக்க மனிதர்களாக உருவாக்குவதே சாதனைக்கான சாணைக்கல்.
குழந்தை பருவம் என்பது பள்ளியை தாண்டிய, வசதியை தாண்டிய அனுபவம். அதை முழுமையாக தருகிற பெற்றோர் வாய்த்தால் முதியோர் இல்லங்கள் வருவதற்கு வாய்ப்பே இல்லை.
நமக்கு இருக்கும் சத்தான நம்பிக்கை குழந்தைகள் தான். அவர்களே எதிர்காலத்தின் தூண்களாகவும் விளங்குகிறார்கள்.
அவர்களை ஒளி பொருந்தியவர்களாகவும் உண்மையை தரிப்பவர்களாகவும் ஆக்கிவிட்டால் உலகமே அன்பும் அமைதியும் நன்றியும் நிம்மதியும் நிறைந்தவர்களாய் மாறும்.
குழந்தைகளை வாரிசாக நினைக்காமல் வரமாக நினைப்பவர்களே அவர்களை தரமாக வளர்க்கும் உரமாக மாற முடியும்.