புழுதி இணைய இதழ் தொடர்ந்து சிறப்பிதழாக வெளிவந்ததை சமூக வலைத்தளங்கள் மூலமாக நண்பர்களுக்கு பகிர்ந்து வந்த எனக்கும் இயக்கங்கள் சிறப்பிதழ் ஆசிரியராகும் வாய்ப்பினை வழங்கிய நமது புழுதி இதழ் நிர்வாக ஆசிரியர்கள் அனைவருக்கும் முதலில் நன்றி. .
நம் மனிதர்கள் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்பவர்கள், அச்சார்பு தான் தனக்கான கூட்டங்களை உருவாக்கிக்கொண்டது. கூட்டங்கள் பல்கிப்பெருகும்போது பலகிளைகளாக பிரிந்தன. பிரிந்தாலும் உணர்வால் ஒத்தகருத்துடையோர் மீண்டும் கூடி தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் களமாக தோற்று விக்கப்படுபவைகளே இயக்கங்களாக அமைப்புகளாக உருவெடுத்தன.
“வாழ்க்கை மகத்தானது மக்களுக்காக வாழும்போது” என்பதற்கிணங்க அதைக்கல்லூரி காலத்திலே அறிவொளி இயக்கம் மூலமாகவும், இந்திய மாணவர் சங்கம் மூலமாகவும் செயல்படலாயினோம். அப்போதைய தமுஎசவில் இணைந்து கலை இலக்கிய இரவினை கண்டுகளித்தோம். பொதுச்சேவையாக நாங்கள் நடத்திய தனி வகுப்பில் எளிய மாணவர்களிடம் கட்டணம் வாங்காமல் நடத்தினோம். அத்தோடு உதவி கேட்டு வருவோரிடம் யோசிக்காமல் தன்னால் இயன்றதை கொடுத்துதவும் என் அப்பாவின் செயல்பாடு மனதுள் வேரூன்றியது. பணப்பற்றாக்குறையினால் ஆசிரியர் கனவு தகர்ந்ததும் என்னுள் விதைத்தது எப்படியாவது வசதிவாய்ப்பற்றோருக்கு கல்வியில் உதவவேண்டுமென்று. அவைகளின் வெளிப்பாடுதான் இராஜபாளையத்தில் நாங்கள் தொடங்கிய மனித நேய நற்பணி இயக்கம், இராஜபாளையம் முகநூல் நண்பர்கள் அமைப்பு, பகிர்வு அறக்கட்டளை.
“மனிதனாகப் பிறந்தவன் பிறருக்கு பயனின்றி ஒருபோதும் அழியக்கூடாது” அதைக்கருத்தில்கொண்டு எளிய மக்களின் உரிமைகளுக்காக, தேவையானவற்றை பெற்றுத்தர, அவர்களுக்கான குரல் கொடுக்க இயக்கங்கள் செயல்படுகின்றன.
எளிய மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய, பசுமையை உருவாக்கி சுற்றுச்சூழலை பாதுகாக்க, வசதிவாய்ப்பற்றோர் கல்வியினை தொடர, வறியவர்களின் பசிப்பிணியைபோக்க, அவசரகால மருத்துவ உதவி செய்ய, பேரிடர்காலங்களில் மக்களைக்காக்க தன்னார்வத் தொண்டுபுரியும் அரசு சாரா அமைப்புகள் செயல்படுகின்றன.
எளிய மக்களைப் பாடவும், அவர்களின் நிலைகளை அனைவரும் அறிந்துகொள்ளவும், அரசினை கேள்வி கேட்கவும், பண்பாட்டினை, தாய்மொழியினைக் காக்கவும் எழுத்தும் கலையும் பிணைந்து இலக்கிய அமைப்புகளாக செயல்படுகின்றன.
மேற்கண்ட இயக்கங்கள் , பொதுச் சேவை, இலக்கிய அமைப்புகளின் தோற்றங்களையும், செயல்பாடுகளையும் ,அதன் வளர்ச்சியையும் , அவைகள் ஏற்படுத்திய தாக்கங்களையும் ஆவணப்படுத்தும் விதமாக புழுதி இணைய இதழ் இயக்கங்கள் சிறப்பிதழை வெளியிடுகிறது. இவ்விதழின் தொடர்ச்சியாக இரண்டாவது இதழையும் அறிவித்துள்ளது. இவ்விதழ் நிச்சயம் வரலாறு படைக்கும் ஏனெனில், நாங்கள் எதார்த்தவாதிகள் அதனால் தான் அசாத்தியங்களை கனவு காண்கிறோம். அறிவிப்பை பார்த்து தாங்களாக முன்வந்து கட்டுரை வழங்கிய தோழமைகளுக்கு, கேட்டமாத்திரத்தில் பல்வேறு பணிகளுக்கு மத்தியில் எழுதிக் கொடுத்த தோழமைகளுக்கு நன்றி…
செயல்பாட்டாளர் க.செல்வகுமார்
வெள்ளிக்கிழமை இரவில் கடைகளை அடைத்து கற்பூரம் காட்டி தேங்காயை உடைத்துச் செல்வார்கள். நாங்கள் அத்தேங்காயை எடுத்து வைத்துக் கொண்டு அவ்வப்போது தின்றபடி ஞாயிறு நிகழ்வுக்கான போஸ்டர்களை விடிய விடிய ஒட்டிச் செல்வோம். இது கூலிக்காக செய்யும் வேலை அல்ல. சல்லிப்பைசா கூட கிடைக்காது. டீ செலவுகூட சொந்த காசில்தான். நாங்கள் இருக்கும் அமைப்பிற்காக அதை செய்கிறோம். அமைப்பின் செயல்பாடுகள் விரும்பத்தக்கதாக இருப்பதால் செய்கிறோம். ஜெயபிரகாஷ் புழுதி இயக்கங்களின் சிறப்பிதழை கொண்டு வருகிறது எனச் சொன்னபோது எனக்கு ஒசூர் தமுஎகசவில் போஸ்டர் ஒட்டிய நாட்கள் நினைவுக்கு வந்தன.
நாம் சுதந்திர இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருப்பதற்கு ஏராளமானவர்களின் உயிர் தியாகத்தோடு தொடர் போராட்டமே காரணம் என்பதை அறியாதவர்கள் அல்ல. இந்திய தேசிய இயக்கம் உருவாகியது. அது ஆங்கிலேயர்களை கலங்கடித்த முதல் இயக்கம்.
இவ்வாறு காலத்தின் தேவையை கருதி உருவாக்கப்படுவதுதான் இயக்கங்கள். வேலை வெட்டி இல்லாமல் பொழுதுபோக்கிற்காகவோ, தங்கள் பகட்டுகளை ஒன்றுகூடி காட்டிக் கொள்வதற்காகவோ உருவாக்கப்படுவதில்லை.
அரசியல் சார்ந்த பெரிய இயக்கங்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே. அரசியலற்று கட்சி பேதமற்று செயலாற்றும் வேலையின் பொருட்டு இணைந்து செயலாற்றும் அமைப்புகள் நிறைய உள்ளன. ஒவ்வொரு ஊரின் சூழலுக்கேற்ப உரு கொள்கின்றன. இலக்கியம், சூழல், கல்வி, மாற்று திறனாளிகளுக்காக, குருதிக் கொடைக்காக, பசித்தோருக்கு தினசரி உணவு கொடுப்பதற்கு, பெண்கள் நலம் சார்ந்தென நிறைய அமைப்புகள் உருவாகிக்கொண்டே இருக்கின்றன.
இப்படியான அமைப்புகளில் இருப்பவர்கள் தங்கள் நேரம், மற்றும் பொருளாதாரம் இழந்து தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருப்பதால் கண்ணுக்குத் தெரியாமல் ஓர் ஊரின் அல்லது நாட்டின் இயல்பு வாழ்வு பாதிப்பு இல்லாமல் இயங்கிக் கொண்னிருப்பதை உணர முடியும். சமீபத்திய புயலால் சிதைவுண்ட சென்னையை மீட்டெடுத்ததில் அரசோடு, தன்னார்வலர்கள் பங்களிப்பும் முக்கியமானதுதானே.
இயக்கங்கள் குறித்த சிறப்பிதழுக்காக எங்களுக்கு தெரிந்த அளவில் தொடர்பு கொண்டு சேகரித்தோம். நிறைவான பங்களிப்புகள் வந்துள்ளன. இன்னும் வருவதற்கான சூழலும் இருப்பதால் இப்போதைக்கு வந்தவரை இயக்கங்களின் சிறப்பிதழ்-1 என கொண்டு வந்துள்ளோம். அடுத்த இயக்கங்களின் சிறப்பிதழ்-2ம் வரும்.
தங்கள் நலன் மட்டும் பாராது மக்களின் பிரச்சினைக்காக தங்களால் இயன்ற அளவு தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் இயக்கங்களின் நோக்கங்களை கௌரவிக்கும் விதமாகவும், பெரும் ஆவணமாக இது இருக்கும் எனும் நம்பிக்கையை புழுதி வாசகர்களோடு பகிர்ந்து கொள்கிறோம். விடுபடல்கள் இருக்கலாம், எங்களிடம் சுட்டிக்காட்டுங்கள், தொடர்பு கொண்டு அடுத்த இதழில் இணைத்திடுகிறோம். பங்களிப்பு செய்த, செய்து கொண்டிருக்கும் இயக்கங்களின் தோழமைகளுக்கு மிக்க நன்றி.
பற்று கொண்ட அமைப்பிற்காக
பாதைகள் பல கண்டு
பயணிப்போம்…
கவிஞர் ந.பெரியசாமி