மலையாளத் திரையுலகம் தரமான படங்களுக்கு மட்டுமல்லாது நல்ல நடிகர்களுக்காகவும் பெயர் பெற்றது. இந்தியத் திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்கள் இங்குதான் இருக்கிறார்கள். நடிகர் என்கிற சொல்லை ஆண், பெண் என இருபாலருக்கும் சேர்த்துத்தான் அர்த்தப்படுத்துகிறேன். இந்த வளமான சூழலில் இருந்துதான் ஜோஜு ஜார்ஜ் மேலெழுந்து வருகிறார். இன்று நேற்றில்லை 1995 ஆம் வருடத்திலிருந்து நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனாலும் அவருக்கு பெரிய அங்கீகாரமோ, கவனமோ கிடைத்ததில்லை. 2018 ஆம் ஆண்டு வெளிவந்த ஜோசப் படம்தான் அவரது வாழ்வையே மாற்றிப் போட்டது. ஒரு நடிகனுக்கு நடிக்க வந்து கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்களுக்குப் பிறகு திருப்புமுனை அமையுமா என்றால் அமையும். ஜோஜூவுக்கு அமைந்தது. இதே காலகட்டத்தில் புகழடைந்த சுராஜ் வெஞ்சரமூடு, இந்திரன்ஸ் போன்றோருக்கும் இது பொருந்தும்.
ஜோசப் – நான் அதிகம் முறை பார்த்தத் திரைப்படம். வேண்டியே அல்லது விரும்பியே தோல்வியையும் வீழ்ச்சியையும் விரும்பும் ஒரு மனிதனின் வாழ்வுதான் ஜோசப் திரைப்படம். இந்தப் படத்திற்கு முன்னுதாரணமாக மோகன்லால் நடிப்பில் 90 களில் வெளிவந்தப் படங்களான கிரீடமும் அதன் இரண்டாம் பாகமான செங்கோலும் இருக்கிறது. ஜோசப் இந்த இரண்டையும் தாண்டிய படம் கிடையாதுதான் என்றாலும் வீழ்ச்சியின் காவியமான செங்கோலை என்னால் இரண்டாம் முறை பார்க்க முடியாது. ஜோசப்பை பார்க்க முடியும். அதற்கான முக்கிய காரணங்களாக ஜோஜுவின் பிரதான இருப்பையும், இசையையும் சொல்லலாம். படத்தின் பாடல்களில் மின்னும் ஆதூரமும், பின்னணி இசையில் இருக்கும் காவிய சோகமும் அடிக்கடி இந்தப் படத்தைப் பார்க்க வைக்கிறது.
“கண்ணெத்தா தூரம் நீ மாயுந்நு” பாடலை இப்போதும் கூட கேட்டுக் கரைவதுண்டு. துக்கமும் பிரிவும்தான் மனித இயல்பின் ஆத்மார்த்தமான உணர்வுகளாக இருக்கின்றன. மனம் அதன் இருப்பில் மிக ஆழமாகத் துக்கத்தில்தான் உறைகிறது. சந்தோஷமும், கொண்டாட்டமும், மகிழ்ச்சியும் மிக மேலோட்டமானவைகள் அல்லது சாஸ்வதமற்றவைகள். நாம் இன்னொருவருடன் மகிழ்ச்சியாக உணரும் தருணங்கள் யாவும் பின்னாளில் மிகக் கொடூரமான நினைவுகளாக ஆகும் தன்மையைக் கொண்டவை. ஆனால் துக்க உணர்வு அப்படிப்பட்டதில்லை.
ஜோசப் திரைப்படத்தை ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் மிக ஆழமானத் துக்கத்தில் வீழ்கிறேன். ஜோஜூவின் உடல் மொழியும் நிதானமான ஆனால் ஆழமான பார்வையும் காண்போரின் உயிரைப் பிழியும். ஜோசப் படத்திற்குப் பிறகு அவரது பெரும் ரசிகனாகவே மாறிப்போனேன். அவர் நடித்த பழைய படங்களைத் தேடிப் பார்த்தேன். பல படங்களை இது ஜோஜூ என பொருட்படுத்தாமல் அல்லது பெயரே தெரியாமல் அவரை ரசித்திருந்தது தெரியவந்தது. நண்பன் பினு பாஸ்கர் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்த லுக்கா சுப்பியில் அவர் ஏற்றிருந்த ரஃபீக் கதாபாத்திரம் சுவாரசியமானது. போலவே ஆக்ஷன் ஹீரோ பிஜூ திரைப்படத்தில் வாக்கி டாக்கியை தொலைத்துவிடும் போலிஸ்காரர் கதாபாத்திரத்திலும் மிளிர்ந்திருப்பார். 1983 திரைப்படத்தின் கிரிக்கெட் கோச் கதாபாத்திரமும் முக்கியமானது. ஜோசப் படம் மட்டும்தான் அவருக்கே அவருக்கானதாக அமைந்தது. இது ஜோஜூவுக்காகவே எழுதப்பட்டது மற்றும் எடுக்கப்பட்டது என்கிற உணர்வை தனது ஆத்மார்த்தமான பங்களிப்பால் படம் நெடுகக் கடத்தியிருப்பார்.
ஜோசப் படத்தை மலையாளிகள் கொண்டாடினர். திரையரங்கிலேயே நூறு நாட்கள் ஓடிய படமிது. ஜோஜூ தனக்குக் கிடைத்த இந்தப் பெரும் வரவேற்பை ஒன்றும் செய்யவில்லை. அவர் வழக்கம்போல இன்று வரை சிறிய கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்துக் கொண்டிருக்கிறார். வைரஸ், ட்ரான்ஸ் போன்ற படங்களில் தலைகாட்டியபோது கொஞ்சம் எரிச்சலாகக் கூட இருந்தது. அவர் தன் புகழை ஏன் இப்படி மழுங்கடிக்கிறார் எனவும் யோசித்ததுண்டு ஆனால் மலையாளத்தில் இது இயல்பானது. நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என பெரும்பாலும் அங்கு யாரும் அடம்பிடிப்பதில்லை.
‘ஜூன்’, ‘பொரிஞ்ஞு மரியம் ஜோஸ்’, ‘ஹலால் லவ் ஸ்டோரி’, ‘மாலிக்’ லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரியின் சுருளி, மிக முக்கியமான அரசியல் படமான படா என எல்லாவிதமான கதாபாத்திரங்களிலும் நடித்தார். எல்லாமுமே ரசிக்கும்படி இருந்தது. தமிழிலும் கார்த்திக் சுப்புராஜின் ஜெகமே தந்திரம் படத்தில் நடித்தார். அது மிக மோசமாக எழுதப்பட்டிருந்ததால் சரியாக வரவில்லை.
தனிப்பட்ட வகையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஜோஜுவின் நடிப்பில் வெளிவந்த நான்கு படங்களை மிக முக்கியமான படங்களாகக் கருதுவேன்.
சணல் குமார் சசிதரன் இயக்கத்தில் வெளிவந்த வித்தியாசமான களமான சோளா, மிக மென்மையான மதுரம், தீவிரமான நாயாட்டு, அழுத்தமான இரட்டா என நான்குமே சிறப்பான படங்களாக அமைந்தன. விமர்சகர்களும் கொண்டாடித் தீர்த்தனர்.
குறிப்பாக இரட்டா படம் ஜோஜுவுக்கு பெரிய பாராட்டுக்களைத் தந்தது. நாயாட்டு படத்தை இயக்கிய மார்ட்டின் ப்ரக்காட் தயாரிப்பில் ஜோஜூ இரட்டை வேடங்களில் அசத்தியிருந்தார். போலிஸ் கதாபாத்திரம் ஜோஜூவுக்கு அப்படிப் பொருந்துகிறது. இயக்கம் மார்ட்டின் இல்லையென்றாலும் கூட அவரின் சாயலை படம் நெடுகக் காணமுடிந்தது. ஜோஜூவும் ஜோசப் பாதி நாயாட்டு பாதியாக வாழ்ந்திருந்தார். கள்ளு குடியன், நாறி கதாபாத்திரங்களுக்கு ஜோஜூ வை விட்டால் வேறு யாருமில்லை என்கிற அளவுக்கு எதிர்மறை கதாபாத்திரங்களை சலிக்கும் அளவிற்கு ஜோஜூ செய்திருக்கிறார். இரட்டா படம் பார்த்து முடிக்கையில் கனத்த மெளனமும் சுமையும் வந்து சேர்ந்தது. அதன் இறுதிக் காட்சி மிகவும் புகழ்பெற்ற உலக சினிமாவான இன்செண்டீஸ் ஐயையும் நினைவூட்டத் தவறவில்லை.
இரட்டா படம் முழுக்க அடுத்தடுத்துக் காண்பிக்கப்படும் இரண்டு ஜோஜூ களும் இருவேறு ஆட்களாகத்தான் தோற்றமளித்தனர். அவ்வளவு கவனமான வித்தியாசத்தை தன் அசாத்தியமான நடிப்பால் வழங்கியிருந்தார். இரண்டு ஜோஜூக்களும் முகம் கழுவும் காட்சி மட்டும்தான் ஒரே மாதிரி இருந்தது. அதை வைத்து வழக்கமான ஆள் மாறாட்டக் கதையோ என்றெல்லாம் படம் பார்க்கும்போது யூகித்தேன். ஆள் மாறாட்டம்தான் ஆனால் இறப்பில் அல்ல என்பதை படத்தின் கடைசி நொடியில்தான் தெரிந்து கொள்ள முடிகிறது. சவாலான திரைக்கதை. நன்றாக வந்திருந்தது. ஜோஜூவும் மிரட்டியிருந்தார்.
இதற்கு முன்னர் மார்டின் இயக்கத்தில் வந்த நாயாட்டு படத்தில், ஜோஜூ எனும் அசுரத்தனமான பிம்பத்தைப் பார்த்துக் கொண்டே இருக்க அவ்வளவு பிடித்தது. நாயாட்டு, காவல்துறையின் இன்னொரு முகத்தை நமக்கு அறியத்தருகிறது. போலிஸ் என்றால் அதிகாரம், அத்துமீறல் அல்லது ஹீரோயிசக் குவிப்பு என்பன போன்ற பொது பிம்பத்திலிருந்து சற்று விலகி போலிஸ் என்பது அரசியல் அதிகாரத்தின் பிடியில் இருக்கும் வெறும் ஏவல் துறை மட்டும்தான் என்பதை இந்தப் படம் முன்வைத்தது.
போலிஸ் துறையில் பணிபுரியும் அதிகாரிகள் அல்லது ஏவல் ஆட்கள் அதிகாரம் தரும் நெருக்கடிகளால் அவர்களில் சிலரையே பலியாடுகளாக ஆக்கவும் தயங்குவதில்லை அதுவும் சிறுபான்மையினராக இருந்துவிட்டால் (நிமிஷாவும், ஜோஜூவும் தலித்துகள், குஞ்சாக்கோ கிறிஸ்தவர்) அவர்களை முழுமையாய் நசுக்கவும் தயங்குவதில்லை. இந்தச் சகலக் கூறுகளையும் படம் சற்று அழுத்தமாகவே முன்வைத்தது.
நமது சூழலில் தற்போது மிகப் பரபரப்பாக பேசப்படும் இயக்குநரான வெற்றிமாறன், கோட்டை விடும் களம் அல்லது புள்ளி இதுதான். அவர் தனது விசாரணைப் படமாகட்டும் அல்லது சமீபத்தில் வந்து பேசப்பட்டுக் கொண்டிருக்கும் விடுதலை படமாகட்டும் இரண்டிலேயும் தவறவிட்ட ஒரு புள்ளியை நாயாட்டு சில வருடங்களுக்கு முன்னரே மிக கவனமாகப் பேசியிருந்தது.
நாயாட்டு படத்தில் சித்தரிக்கப்படும் தலித் இளைஞனின் கோபம் நியாயமானது, போலிஸ்காரர்களின் அந்த நேரச் சீற்றமும் இயல்பானது. அதன் விளைவால் நிகழும் அசம்பாவிதங்களை தங்களுக்கான ஓட்டுகளாக மாற்றும் அரசியல் அதிகாரமே இழிவானது. படமும் அதையே சுட்ட முயல்கிறது. வெற்றிமாறன் நகர்ந்து செல்ல வேண்டிய இடமும், அறிதலும் இதுதான். அவர் தொடர்ந்து போலிஸ் வன்முறைகளை மட்டுமே காட்சிப்படுத்தி பார்வையாளரிடத்தில் பரிதாபத்தை ஏற்படுத்தி, ஜெயிக்கிறார். உண்மையில் அவர் அசலான அதிகாரத்தை நோக்கி ஒரு கேள்வியையும் எழுப்புவதில்லை. எனவேதான் தமிழ் திரையுலகின் நட்சத்திர இயக்குநராக பெரும்போக்காக அறியப்படுகிறார்.
மலையாளத் திரை இந்த மேம்போக்குகளுக்கு ஒரு போதும் இடம் தராது. பெரும்பாலான மலையாள இயக்குநர்கள் அரசியல் ஞானம் மிக்கவர்கள். சமூகக் குற்றங்கள், தண்டனைகள், அரச அதிகாரம் மற்றும் வன்முறை போன்றவற்றை தெளிவாகப் புரிந்து கொண்ட பின்னரே அவர்கள் திரைத் துறைக்கு வருகிறார்கள். தஸ்தாயெவ்ஸ்கியை வாசிக்காத இயக்குநர்களே மலையாளத்தில் கிடையாது என்றும் கூட சொல்லிவிடலாம். நம் சூழலில் விரிவான அரசியல் புரிதல்களைக் கொண்ட இயக்குநர்கள் குறைவு. அப்படியே சரியானப் புரிதலைக் கொண்டிருந்தாலும் தமிழ் சினிமாவின் வியாபார நெருக்கடி அத்தகைய இயக்குநர்களுக்கு ஒரு போதும் இடமளிக்காது. இது நமது சூழலின் சாபக்கேடு என்றுதான் சொல்லவேண்டும்.
ஓர் உதாரணத்திற்கு சொல்கிறேன் வெற்றிமாறனின் விடுதலையையும் இரண்டாண்டுகளுக்கு முன்பு வந்த படா (Pada ) மலையாளத் திரைப்படத்தையும் பாருங்கள். நான் சொல்ல வருவது உங்களுக்குப் புரியலாம்.
படா திரைப்படம் 1996 ஆம் வருடம் பாலக்காட்டில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. திரைப்படமும் உண்மைச் சம்பவம் என்றே சொல்லும். ஆனால் விடுதலை திரைப்படம் படத்தில் வருபவற்றை புனைவு எனச் சொல்கிறது. இந்த ஒரு வரியிலேயே வெற்றி, தோல்வியடைந்து விடுகிறார்.
விநாயகன், குஞ்சாக்கோ, ஜோஜூ, திலீஷ் போத்தன் இந் நால்வரும் கலெக்டர் அலுவலகத்தை கைப்பற்றுவதுதான் கதை. மென்மையான வன்முறை வழியாக அரசதிகாரத்தை கேள்விகேட்கும் அசலான மக்கள் படையின் செயல்பாடுகளை திரைப்படம் பேசியிருக்கும்.
அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினையை ஆழமாகவும், சரியாகவும், நேர்மையாகவும், பேசும் தைரியம் மலையாளத் திரைக்கு இருக்கிறது. ஆனால் தமிழ்த்திரை என்ன செய்கிறது, பெரும் முதலீட்டுச் செலவில் இதே களத்தில் ஹீரோயிசத்தைப் புகுத்தி உண்மையைச் சாகடிக்கிறார்கள். வெற்றி அதைத் திறம்படச் செய்கிறார். வெற்றியும் பெருகிறார்.
இந்தக் கட்டுரையின் நோக்கம் ஜோஜூ ஜார்ஜ் எனும் நடிகரின் சமீபத்திய படங்களைக் குறித்தும் மலையாளத் திரைக்கு அல்லது இந்தியச் சினிமாவுக்கு அவரின் பங்களிப்பைக் குறித்தும்தான் என்பதால் இதோடு நிறுத்திக் கொள்வோம். சுட்டியிருக்கும் மற்ற அபத்தங்களை இன்னொரு கட்டுரையில் பேசுவோம்