ஒரு தனிநபர் கைது ஒரு பகுதி மக்களையே கொந்தளிக்க வைத்தது என்றால் அவர் மீதான பற்றும் அவர் நாட்டிற்கு ஆற்றிய தொண்டும் முழுமுதற்காரணம் என்பதை இந்த நூல் முழுமையாக அறியத் தருகிறது.
இந்தியா ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்த வேளையில் 1885 இல் காங்கிரஸ் கட்சி ஆரம்பிக்கப்படுகிறது.அது பேச்சுவார்த்தைகள் மூலம் இந்திய விடுதலைக்காக போராடத் துவங்கிய போது 1905 இல் கர்சன் பிரபு வங்காளத்தை இரண்டாகப் பிரித்து மக்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்த காரணமாகிறார். இந்த வேளையில் 1907 இல் சூரத் மாநாட்டில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் கட்சி தீவிரவாதிகள் மிதவாதிகள் என பிளவுபடுகிறது. திலகர் தலைமையில் தீவிரவாத செயல்களில் தன்னை இணைத்துக் கொண்ட வ உ சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா, பாரதியார் போன்றோர் தீவிர நடவடிக்கைகளின் மூலமே தேச விடுதலைக்கு வித்திட முடியும் என்று போராட்டத்தை முன்னெடுக்கின்றனர்.
பிபின் சந்திர பால் விடுதலையை ஒட்டி தேசம் முழுவதும் விடுதலைக் கொண்டாட்டங்கள் நடைபெற்ற நிலையில் வ உ சிதம்பரம் பிள்ளையும், சுப்பிரமணிய சிவாவும், திருநெல்வேலியில் விடுதலைக் கொண்டாட்டத்திற்கு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்கின்றனர். இதை அறிந்த அரசாங்கம் அவரது பேச்சு மக்களிடையே வெடிகுண்டென விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், அரசின் மீது மக்கள் புரட்சியை செய்து போராட்டத்தை தீவிரப் படுத்துவார்கள் என்று அஞ்சியும், 1908 ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி, இருவரையும் கைது செய்கிறது. இது திருநெல்வேலி தூத்துக்குடி தச்சநல்லூர் ஆகிய மூன்று பகுதிகளில் மிகப்பெரிய கடையடைப்புப் போராட்டமாகத் தொடங்கி ஊர்வலமாக மாறி துப்பாக்கிச் சூடு வரை செல்கிறது. நான்கு தொண்டர்கள் மரணமடைகின்றனர். நிறையப் பேர் பெருங்காயங்களுடன் போராடுகின்றனர். இதன் விளைவு அரசு நூற்றுக்கும் மேற்பட்டோரை கைது செய்து அவர்கள் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்து ஆறு ஆண்டுகளுக்கும் மேலான தண்டனையை உறுதிப்படுத்துகிறது. மேலும் திமிர் வரி என்ற வரியை ஏற்படுத்தி தொடர்ச்சியாக மூன்று பகுதிகளிலும்,ஆறு மாத ராணுவ அணிவகுப்பை மேற்கொள்கிறது. இத்தகு நிகழ்வை நாம் நேரில் கண்டு அதிர்ச்சி அடையும் தருணங்களைப் போலவே நூல் மிகச் சிறப்பான விவரங்களுடன் எழுதப்பட்டு ,சிதம்பரம் பிள்ளையின் பேச்சாற்றலையும் அவர் மக்கள் மீது வைத்திருந்த அபிமானத்தையும் தெளிவாக எடுத்துரைக்கிறது.
எந்த ஒரு தேசத்தையும் அதன் மக்களே ஆள வேண்டும் அப்போதுதான் அந்த தேசம் செழிக்கும். அந்நிய தேசம் அதனை ஆளுவது சுரண்டுவதற்கே வழி வகுக்கும். இத்தகு சூழலில் சாதி மத வேறுபாடுகளைக் கடந்து மக்களுடைய ஒற்றுமையை வலியுறுத்த பாரதி, கவிதை வழியாகவும், சிதம்பரம் பேச்சின் வழியாகவும் அணித் திரட்டி அந்நிய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தை ஒருங்கிணைக்கிறார்கள். நாடு முழுவதும் பிபின் சந்திரபால் விடுதலையைக் கொண்டாட அனுமதி அளித்த அரசாங்கம் திருநெல்வேலியில் மட்டும் வ உ சிதம்பரம் பிள்ளைக்கு தடை விதிக்கிறது. அதற்கு காரணம் அவரது தீவிர செயலாற்றல் என்பதை இந்த நூல் வழியாக அறிய முடிகிறது. கோர்ல் ஆலைத் தொழிலாளர் பிரச்சினை காரணமாக சிதம்பரம் முன்னின்று நடத்திய போராட்டத்தில் அவருக்கே வெற்றி கிடைக்கிறது. அது நடந்து ஒரு மாதத்திற்கு உள்ளாகவே அடுத்த நிகழ்வை சிதம்பரம் முன்னெடுக்கும் போது அது ஆட்சியாளர்களுக்கு மிகப்பெரிய அவமானமாக மாறிவிடும் என்ற அடிப்படையில் அவருக்கு வாய்ப்பூட்டு போடப்படுகிறது. ஒரு கட்டத்தில் அவரது கைது மக்களிடையே யாரும் எந்தவிதமான அறிவிப்பும் சொல்லாமலேயே காட்டுத் தீ என பரவி பொதுமக்களை ஒன்று சேர்க்கிறது.
திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்திற்கு பிறகு கைது செய்யப்பட்ட தொண்டர்கள் மீது சிதம்பரம் பிள்ளை காட்டிய அக்கறையும் நூலில் விரிவாக எடுத்துரைக்கப்படுகிறது. அவர்களது விடுதலையைப் பற்றியும் அவர்களைத் தொடர்ந்து கண்காணித்து ஆங்கில அரசுக்கு கடிதம் மேல் கடிதம் எழுதி அவர்களை விடுவிக்க சிதம்பரம் மிகப்பெரிய முயற்சியை மேற்கொண்டார் என்பதையும் நூல் அறியத் தருகிறது.
இத்தகு மக்கள் போராட்டங்கள் ஏன் முழுமையான வெற்றியை எட்டவில்லை என்பதற்கான காரணங்களைப் பட்டியலிடும் நூல் .மிகக் குறைந்த எண்ணிக்கையில் ஆங்கிலேயர்கள் இருந்தபோதிலும் பரவலாக லட்சக்கணக்கில் இருந்த இந்தியர்களை எப்படி அடக்கி ஆள முடிந்தது என்பதையும் அதற்கான காரணங்களையும் நூலின் பிற்பகுதி பட்டியல் இடுகிறது.
சுதேசி இயக்கம் பெரிதும் நகர்ப்புறம் சார்ந்து இயங்கிய இயக்கமாகவே செயல்பட்டது. அனைத்து மாகாணங்களையும் தழுவிய இயக்கமாக அது வளரவில்லை . கிராமப்புறங்களில் வாழ்ந்த பெருவாரியான மக்களை தேசிய இயக்கத்தால் அணிதிரட்ட முடியவில்லை. கிராமப்புற மக்கள் சமூக அடிப்படைக் கற்றல் இல்லாதவர்களாகவும் சாதிவாரியாகவும், இனவாதியாகவும், பிளவுபட்டு இருந்த காரணத்தினாலும் அவர்களை பொதுக் கருத்தின் கீழ் அணி திரட்டுவதற்கு மிகப்பெரிய இடையூறாக இருந்திருக்கிறது. முதற்கட்ட தலைவர்கள் கைதாகி சிறை சென்ற பிறகு, இரண்டாம் கட்ட , மூன்றாம் கட்டத் தலைவர்கள் மக்களிடையே முழுமையான விழிப்புணர்வை ஏற்படுத்தாத காரணமும், போராட்டத்தின் எழுச்சியை நீர்த்துப் போக செய்கின்றன. இதைத்தவிர ஆங்கிலேயர்களின் ஆயுதங்களைக் கண்டு மக்களுக்கு ஏற்பட்ட பீதியும் அச்சமும் அவர்களை வீதிக்கு வர தடை செய்கிறது. இதுபோன்ற காரணங்கள் இந்தியா முழுவதும் மக்கள் ஆங்காங்கே போராட்டத்தை முன்னிறுத்தி சென்ற போதிலும் முழுமையான போராட்ட குணத்தை காண்பிக்க முடியாமல் ஆங்கிலேயர்களுக்கு அடிபணிந்து செல்லத் தலைப்பட்டனர்.
விடுதலைப் போராட்ட வரலாற்றில் எத்தனையோ நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்ட போதிலும், ஒரு தனி நபரின் கைதுக்காக மக்கள் தன்னிச்சையாக போராட்ட களத்தில் குதித்து அதற்கு அரசாங்கம் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி தவிர வேறு எங்கும் நிகழ்ந்ததில்லை என்பதையும் இந்த நூல் எடுத்துரைக்கிறது.
திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் நடந்த போராட்ட கலவர நிகழ்வுகளை முழுமையான புள்ளி விவரங்களுடனும், அதில் எத்தனை பேர் கலந்து கொண்டார்கள் , போராட்டம் எங்கிருந்து எதுவரை நடந்தது என்ற குறிப்புகளுடனும், தண்டனை பெற்றவர்கள் எத்தனை பேர் எங்கெங்கு சிறையில் இருந்தார்கள் என்பது குறித்த தகவல்களும் முழுமையாக திரட்டப்பட்டு ஆய்வு நூலாகவும் எழுதப்பட்ட இந்த நூல் அண்மையில் சாகித்திய அகாடமி விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.
திருநெல்வேலி எழுச்சியும் வ உ சி யும் 1908
ஆ இரா வேங்கடாசலபதி
வெளியீடு காலச்சுவடு பதிப்பகம்
முதல் பதிப்பு பிப்ரவரி 2022
பத்தாம் பதிப்பு ஜூன் 2025
பக்கம் 248
விலை ரூபாய் 320