வரலாற்றைத் தேடி ஒரு பயணம் : திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம்

2010 இல் ஆழி பதிப்பகத்தின் உரிமையாளரும் எனது அண்ணனுமான ஆழி செந்தில் நாதன் வேலூரில் நூலாறு என்ற பெரிய புத்தக கண்காட்சிக்கு பொறுப்பாளராக இருந்து ஒருங்கிணைத்து வந்தார். அப்போது தேவிகாபுரத்தில் உள்ள எங்கள் இல்லத்தில் ஊர் வரலாறு நூலாக்க திட்டம் என்ற பெயரில் வரலாற்றை தொகுக்கும் பணிக்கான ஒரு கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது. வேலூர், குடியாத்தம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ஆரணி, ஆற்காடு பல நகரங்களைப்பற்றிய வரலாறு நூல் எழுத ஆலோசனை செய்யப்பட்டு வந்த நேரத்தில் தேவிகாபுரத்தைப் பற்றி நீ எழுதுகிறாயா  என என்னைக் கேட்க, நானும் சம்மத்தித்தேன். அதன் பின்பு தேவிகாபுரத்தை ஆய்வுக் களமாகக் கொண்டு ஊரைச் சுற்ற ஆரம்பித்தேன். அப்போது தான் அவ்வூரில் பல அரிய நடுகற்களும் சிலைகளும், பாழடைந்த கோயில்களும் கல்வெட்டுகளும் கண்டேன். அதற்கு முன்பு இதைத் ஒருவாறு  பார்த்திருந்தாலும் அதைப் பற்றிய புரிதல் இல்லை. சமூக வலைத்தளம் பரவ ஆரம்பித்த காலம். தொடர்ந்து தேவிகாபுரத்தைப் பற்றிய ஆய்வு நீடித்தது, பல புதிய செய்திகள் ஆவணப்படுத்தப்பட்டது. புதிய நிகழ்ச்சிகள், மாணவர்களுக்கான நன்னடை நிகழ்ச்சி ஆகியவற்றை  2015 வரை செய்து வந்தேன். அதன் பிறகு பணியின் காரணமாக திருவண்ணாமலையில் இருப்பதால் தேவிகாபுரம் செல்வது குறைந்தது. ஒரு  தேக்க நிலை ஏற்றபட்டது. ஆனாலும் உள்ளுக்குள் புதியதாக எதையாவதுதேடி ஆவணப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருந்தது. 

இந்நிலையில் தேவிகாபுரம் பகுதியில் செய்த ஆய்வை ஏன் திருவண்ணாமலை மாவட்டம் முழுக்க செய்யக்கூடாது என்றும் தோன்றியது. அந்நேரம் ஆதமங்கலம் புதூர் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் மஞ்சுவிரட்டு நடுகல் ஒன்று உள்ளது என்ற தகவல் தரவே அதைப்பார்க்க பயணம் ஆனேன். அங்கு ஒரு மஞ்சு விரட்டு நடுகல்லும் வேறு சில நடுகல்லும் பார்த்தேன். திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக பல வரலாற்றுச் சின்னங்கள் இருக்கும் என்று ஊகித்தேன். 2014 ஓசூரில் நடைபெற்ற நடுகற்கள் மாநாட்டில் பல அறிஞர்கள் அறிமுகம் கிடைத்தது, 2016 இல் சென்னையில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் மேலும் பல அறிமுகம் கிடைத்தது.  முகநூலிலும் பல தொடர்புகள் ஏற்பட்டன. உற்சாகமான மனநிலையில் இருந்த காலம் அது. 

2e28f177-76f1-4d6e-a565-1cf31deaaecc.jfif

இந்த வேளையில் எழுத்தாளர் நக்கீரனின் காடோடி நாவல் அறிமுகக்கூட்டம் திருவண்ணாமலை கிண்டர் கார்டன் பள்ளியில் நவம்பர் 2016 இல் நடந்தது. அப்போது அங்கு வந்த பேராசியர் வே. நெடுஞ்செழியனிடம் மாவட்டம் முழுக்க உள்ள வரலாற்றுச் சின்னங்களை ஆவணப்படுத்த ஒரு அமைப்பு ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தைக் கூறினேன். அவரும் ஒப்புக்கொள்ளவே, 2017,  மார்ச் 5 ஆம் தேதி முகநூலில் ஒரு வேண்டுகோள் விடுத்து , வரலாற்று ஆய்வுப்  பணிக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது என தெரிவித்தேன். சுமார் 20 பேர் கலந்து கொண்டனர்.  இக்கூட்டத்தை நூலகர் சாய்ராம் அவர்கள் ஆர்வத்துடன் முன்னின்று நடத்தினார். இக்கூட்டத்தின் முடிவில் திருவண்ணாமலை மாவட்ட அளவிலான வரலாற்று ஆய்வு மையம் ஏற்படுத்த வேண்டிய தேவையை அனைவரும் வலியுறுத்தினர்.  அதன்படி அடுத்த கூட்டம் 2017 ஏப்ரல் 2 ஆம் தேதி நடந்தது. இக்கூட்டத்தில் அமைப்பின் பெயரை முடிவு செய்தும் நிர்வாகிகளை முடிவுசெய்தும் முடிவுற்றது. அதன்படி மாவட்ட அளவிலான அமைப்பை .திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் என்று பெயரிடலாம் என்றும் இவ்வமைப்பின் தலைவராக திரு. த.ம.பிரகாஷ், துணைத்தலைவராக வே. நெடுஞ்செழியன், இரா,. ஸ்தனிஸ்லாஸ், செயலாளராக ச.பாலமுருகன், இணைச் செயலாளராக நீதிதாஸ் விஜயராஜ், பிரேம் குமார், பிரேம்ஆனந்த், மணியரசன், சு.சேது உள்ளிட்டவர்களும் பொருளாளராக இராஜ் பன்னீர் செல்வமும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

841b84ef-f695-40d2-a537-32f96dd05291.jfif

இவ்வமைப்பின் பெயர் முடிவானதும் இதற்கென பிரத்யேகமாக ஒரு சின்னம் முடிவுசெய்ய கலந்தாலோசிக்கப்பட்டது. அதன்படி த.மோட்டூர் தாய்தெய்வக்கல் உள்ளிட்ட பல நினைவுச் சின்னங்கள் பரிசீலிக்கப்பட்டன. இறுதியில் திருவண்ணாமலையின் மதிப்பு மிக்க ஓவியரான இராமச்சந்திரன் அவர்கள் திருவண்ணாமலையும் அதன் சுற்றுப்புறமும் இணைந்தவாறான பல்குன்றக்கோட்டத்தை பிரதிபலிக்கும் வகையில் அற்புதமான ஒரு சின்னம் வரைந்து தந்தார். அதை அப்படியே இவ்வமைப்பின் சின்னமாக அறிவித்து பயன்படுத்தப்பட்டது. 

இந்த அமைப்பின் தொடக்கவிழாவினை முறைப்படி செய்ய முடிவெடுத்து 2017 மே 7 ஆம் தேதி அன்று மாலை திருவண்ணாமலை ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டப குரளரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தொல்லியல் கண்காட்சியுடன் தொடக்கவிழா இனிதே நடைபெற்றது. இதில் தமிழகத்தின் முக்கிய வரலாற்று ஆய்வாளர்கள் அறிஞர்களான இரா. பூங்குன்றன், தமிழ் கணக்கியல் அறிஞர் கு. வெங்கடாசலம், விழுப்புரம் வீரராகவன், சுகவனமுருகன், ஓவியர் ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அமைப்பு தொடங்கிய பிறகு செப்டம்பர் 3 ஆம் தேதி ஜவ்வாதுமலை வாழ்வும் வரலாறும் என்ற ஒரு நாள் தேசியக் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில்  100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். முக்கிய வரலாற்று அறிஞர்கள் சிறப்பு சொற்பொழிவு ஆற்றினர்.  இக்கருத்தரங்கின் இறுதியாக பார்த்திபராஜா அவர்கள் குழுவினரின்   நாடகம் நடைபெற்றது. 

bc6135f4-ff3c-4061-9375-654e18b06f4a.jfif

தொடர்ந்து பல வரலாற்று மற்றும் தொல்லியல் தேடல்களுக்கு நடுவே சிறப்புக்கருத்தரங்கங்களும் நடைபெற்று வந்தன. அதன்படி மார்ச் 2018 இல் நாட்டார் வழக்காற்றியல் தொடர்பாக திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் கண்மணி குணசேகரன் மற்றும் சுகவனமுருகன் சிறப்புரை ஆற்றினர். 2018 உலக பாரம்பரிய நாளான ஏப்ரல் 22 இல் கோயில் சிற்பக்கலை என்ற தலைப்பில் மா. சந்திரமூர்த்தி அவர்களால் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. பின்னர் தமிழகத்தின் சிறப்பு மிக்க தொல்லியல் கழகத்தின் ஆண்டுக் கருத்தரங்கம் இவ்வமைப்பின் சார்பில் இவ்வமைப்பின் செயலர் ச.பாலமுருகன் அவர்களை உள்ளூர் செயலாகக் கொண்டு நடைபெற்றது. ஜுலை 21,22 தேதியில் திருவண்ணாமலை ஆண்டாள் சிங்காரவேலு திருமணமண்டபத்தில் நடைபெற்ற இக்கருத்தரங்கம் வெகுஜன மக்கள் கலந்து கொள்ளும் அளவில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. சாகித்ய அகாடமி விருது பெற்ற சோ. தர்மனின் சூல் நாவலுக்கு பாராட்டுவிழா, செய்யாரில் கோயில் கட்டடக்கலை கருத்தரங்கம், தொல்லியல் அறிஞர் பூங்குன்றனுக்கு பேரிசை நவிரம் என்ற பாராட்டு மலர், சீயமங்கலம், கூழமந்தல், வெண்குன்றம், அத்தி, நார்த்தாம்பூண்டி, எறும்பூர் ஆகிய ஊர்களுக்கு ஊர் வரலாறு நூல் என தொடர்ந்து பல்வேறு செயல்பாடுகள் நடைபெற்று வந்துள்ளது. தொடந்து இந்நடுவம் மாவட்டம் எங்கிலும் உள்ள கல்வெட்டுகள்,நடுகற்கள்  உள்ளிட்ட தொல்லியல் தடயங்களை நோக்கி பயணம் செய்தது. மாவட்டத்தில் பதிவு பெறாத கல்வெட்டுகளை தேடியும், நடுகற்களைத் தேடியும் பல பயணங்களை மேற்கொண்டது. இதுவரை 350 க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டு வருகிறது.  மேலும் களஆய்வில் உடைந்து, சீரமைக்காமல் உள்ள கல்வெட்டுகளையும் நடுகற்களையும் சீரமைக்கும் பணியும் தொடர்ந்து செய்து வருகிறது. மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீப சிறப்பு மலரை சிறப்பாக கொண்டு வரவும் உற்ற பணிகளை இந்நடுவம் செய்துவருகிறது. இந்நடுவம்  அதிக அளவில் கல்வெட்டுகளையும் நடுகற்களையும் கண்டு ஆவணப்படுத்திவருவதற்கு அந்தந்த பகுதியில் உள்ள ஆர்வலகளே முக்கிய காரணம். எவ்வாறு இந்த சங்கிலித் தொடர் போல நடைபெறுகிறது என்பதற்கு சில சான்றுகள், அவை.,

eddb384a-37e7-46a7-8af3-b4a91953efa5.jfif

திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் ஒரு திட்டமான நடுகற்கள் ஆவணப்படுத்தும் பணியின் ஒரு பகுதியாக 2020 ஆம் ஆண்டு ஜவ்வாதுமலைக்கு குழுவாகச் சென்று ஆய்வு செய்தோம். அது வரை ஜவ்வாதுமலையில் ஒரிரு நடுகற்களே ஆவணப்படுத்தப்பட்டிருந்தது. அந்த ஆய்வின் போது எங்களுடன் இருந்த கிராம உதவியாளர் மேல்பட்டு பகுதியிலும் கல்வெட்டும் கோட்டை போன்ற அமைப்பும் உள்ளது என்று கூறினார். ஒரு நாள் அதை நோக்கி பயணம் தொடர்ந்தோம். அன்று நடுகல்லும் ஒரு கோட்டை பகுதியும் கண்டறிந்தோம், அன்று கிடைத்த வேறு ஒரு தகவல் மூலம் மீண்டும் பயணம் செய்தோம்… மீண்டும் கல்வெட்டுகளும் நடுகற்களும் கண்டறிந்தோம். இது போல இதுவரை சுமார் 50 முறை ஜவ்வாதுமலைக்கு ஆய்வுக்காக சென்றுள்ளோம். ஒவ்வொரு முறையும் குறைந்த பட்சம் ஒரு நடுகல்லோ, ஒரு கல்வெட்டோ, ஒரு தொல்லியல் இடமோ கிடைத்துக்கொண்டே வருகிறது. இன்னும் ஆய்வு தொடர்ந்துகொண்டுதான் உள்ளது. தொல்லியல் தயடங்களும் கிடைத்துக்கொண்டுதான் உள்ளது. இந்த ஆய்வுகள் மூலம் சங்க இலக்கிய நூலான மலைபடுகடாம் குறிப்பிடும் நவிரமலை ஜவ்வாதுமலையே என்ற முடிவு உறுதியானது, இந்த ஆய்வுகளில் ஆவணப்படுத்தப்பட்ட  கோவிலூர் சிவன் கோயில் தற்போது அரசின் உதவியுடன் 2.00 கோடி மதிப்பில் புனரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுகளில் நாங்கள் கண்ட இடங்களை மரபு நடை மூலம் நூற்றுக்கணக்கானவர்களை காணச் செய்துவருகிறாம் இன்று, தமிழ்நாட்டின் வரலாற்றுச் சிறப்பு மிக்க மலையாக ஜவ்வாதுமலை திகழ்கிறது என்பதற்கு இந்த பயணங்களே முக்கியக்காரணம்.

6b44c44c-4a3d-41af-aae9-58d165f5bb1f.jfif
c155369f-1971-418d-b1cf-04d1e96a45fd.jfif

இது போலத்தான் 2017 இல் ஒருமுறை ஆய்வுக்காக கீழ்ராவந்தவாடி சிற்பக்குளத்தைப் பார்வையிடும் வாய்ப்பு கிடைத்தது, புதர்மண்டி, மரங்கள் வளர்ந்து, படிக்கட்டுகளும் சிற்பங்களும் பெயர்ந்து போய் காட்சியளித்தன, தொடர்ந்து வைக்கப்பட்ட கோரிக்கைகளால் இந்த சிற்பக்குளத்தை அரசின் உதவியுடன் அதன் தன்மை மாறாமல் மீட்டுரூவாக்கம் செய்ததும் அதை தமிழக அரசின் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டு தற்போது பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதில் ஆய்வு நடுவத்தின் பணி முக்கியமானது. 

வந்தவாசி அடுத்த தேசூரில் கோட்டைப்பகுதியில் உள்ள சிற்பத்தைப் நண்பர் ஒருவர் படமெடுத்தது அனுப்ப அதை நீண்ட நாள் கழித்து பார்க்கச் சென்றோம். ஆச்சர்யம் என்ன என்றால் அந்த சிற்பங்கள் அனைத்தும் நடுகற்களாக இருந்ததுதான். அதில் 2 நடுகற்கள் 6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அப்பகுதியின் தொன்மையான நடுகல்லாக அமைந்தது, தொடர்ந்து வந்தவாசி பகுதியில் ஆர்வலர்கள் மூலமும் கிராம நிர்வாக அலுவலர் மூலமாக தகவல் வந்து கொண்டே இருந்தது. பயணங்கள் தொடர்ந்து, முடிவில் 20 க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் கண்டறிந்து ஆவணப்படுத்தப்பட்டது. பல தொல்லியல் இடங்கள் கண்டறியப்பட்டது. அந்த ஆய்வுகளில் கிடைத்த தொல்லியல் இடம் தான் கீழ்நமண்டி என்ற கிராமத்தில் உள்ள பெருங்கற்கால நினைவுச் சின்னங்கள், தனித்துவமான இந்த நினைவுச்சின்னம் பின்னர் தமிழக அரசின் முயற்சியால் அகழாய்வு செய்யப்பட்டு அரிய அரும்பொருட்கள் கண்டறியப்பட்டது. 

திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் இதுவரை கண்டறிந்த கல்வெட்டுகளை தொகுக்கும் பணியைச் செய்து வரும் போது, வட்ட வாரியாக கண்டறிந்த விவரங்கள் தொகுக்கப்பட்டதில் வெம்பாக்கம், கலசபாக்கம் பகுதியில் மிகக் குறைவான எண்ணிக்கையில் கல்வெட்டுகள் கண்டறிந்தது தெரியவந்தது. மீண்டும் வெம்பாக்கம், செய்யாறு பகுதியில் அப்பகுதி ஆர்வலரை  ஊர் ஊராகச் தேடச் செய்தோம். அவரின் தேடுதலில் 20 க்கும் மேற்பட்ட புதிய கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன. இதே போல கலசபாக்கம் பகுதியில் தேடச் செய்ததில் 10க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் கிடைத்தன.  அனைத்து வட்டங்களிலும் தற்போது அருகில் உள்ள மாவட்டங்களிலும் ஆய்வுகள் தொடர்கிறது. இக்கல்வெட்டுகள் தமிழகத்தின்  சிறந்த இதழான ஆவணம் இதழில் வெளியிடப்பட்டு வருகிறது. இக்கல்வெட்டுகளை தொல்லியல் துறை அறிஞர்களிடம் சரிபார்த்து வெளியிடப்படுகின்றன. இம்மாவட்டத்தில் இதுவரை 50 க்கும் மேற்பட்ட வரலாற்றுக்கு முற்பட்ட இடங்களை கண்டறிந்துள்ளோம். 100கும் மேற்பட்ட நடுகற்களை கண்டறிந்துள்ளோம். 30 க்கும் மேற்பட்ட பாறை ஓவியங்களை ஆவணப்படுத்தியுள்ளோம். இவையெல்லாம், திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் மட்டுமே ஒரு சிறிய குழுவாக நாங்கள் கண்டறிந்தது. 7 ஆண்டுகளாக நாங்கள் இப்பகுதியில் கண்டறிந்து வருகிறோம். இன்னும் வரலாற்றுத்தடங்கள் கிடைத்துக்கொண்டுதான் இருக்கின்றன. தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தைப் பற்றி பல்வேறு தலைப்புகளில் 5 க்கும் மேற்பட்ட நூல்கள் தயாராகி வருகின்றன. 

மாவட்டமெங்கும் காணப்படும் கல்வெட்டுகளும், நடுகற்களும், பாறை ஓவியங்களும் வெறும் தொல்லியல் சின்னங்கள் அல்ல. அவை மனித நாகரித்தின் அக்காலத்தின் கண்ணாடி, கல்வெட்டுகளில் அக்கால மக்களின் வாழ்வியலையும் அரசியல் சமூக செயல்பாடுகளையும் அறியலாம். நடுகற்கள் மூலம் அக்கால மக்களின் வீரத்தையும் அவர்கள் வாழ்ந்த நிலப்பரப்பின் தன்மையும் அறியலாம். பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்களில் மனிதனின் சிறப்பான கலை வரலாற்றின் தொடர்ச்சியை அறியலாம். இவை எல்லாம் எக்காலத்திற்கும் மனித குலத்திற்குத் தேவையான ஆவணங்கள். அதை எளிதாக அழிந்து போகவோ,  சிதைந்து போகவோ விடக்கூடாது என்ற ஒரு எண்ணம் தான் பல்வேறு பணிகளுக்கு இடையேயும் இதை காப்பாற்றியாக வேண்டும் என்று குழுவாகப் பயணிக்கின்றோம். பயணம் தொடங்கி சிறிது தூரம் தான் சென்றிருக்கிறோம். இன்னும் போக வேண்டிய தூரம் எவ்வளவோ உள்ளது. 

பயணம் ஒன்றே போதுமே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *