மாதவிடாய் – உயிர்ப்பு 

இத்தனை தொழில்நுட்பம் வளர்ந்தும்கூட இன்னும் இருபாலருக்கும் மாதவிடாய் பற்றிய புரிதல் தெள்ளத்தெளிவாக அறியப்பட்டிருக்கிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.  ஏதோ மாதவிடாய் என்றாலே பெண்கள் மட்டுமே சம்பந்தப்பட்டது என்பது போல அதைப் பற்றிய அறிதல்கூட தமக்குத் தேவையற்றது எனும் போக்கே நிறைந்திருக்கிறது. 

பெண் குழந்தைகளுக்கு பதின்மத் தொடக்கத்திலேயே வீட்டிலோ வீட்டில் வாய்ப்பற்றவர்களுக்கு பள்ளிகளிலோ பூப்பெய்தல் பற்றிய குழப்பத்தைத் தவிர்க்கும் விதமாக சிறிதுசிறிதாக உரையாடல் நிகழ்த்த வேண்டும்.  கூடவே ஆண் குழந்தைகளுக்கும் பருவ வயதில் உடலில் நிகழும் மாற்றங்கள் குறித்து புரிதல் ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக ஆண் குழந்தைகளுக்கு அம்மாவிடமிருந்து அணுக்கமான முறையில் அவசியத்திற்கேற்ப அறிவியல் பூர்வமான தெளிதல் கிடைக்கப் பெற வேண்டும். 

 எட்டாம் வகுப்பு அறிவியல் புத்தகத்தில் Adolescence பற்றி  தெளிவாக அருமையாகக்  குறிப்பிடப்பட்டிருந்தாலும் எந்தப் பள்ளியிலும் பெரும்பாலும் அந்தப்பாடத்தை கற்றுத்தராமல்  விட்டுவிடுகிறார்கள். ஆனால் நான் என் குழந்தைக்கு எல்லாவிதமான ஐயங்களுக்கும் விடையளித்திருக்கிறேன். கூடவே அவளது நட்புவட்டத்திற்கும். 

இன்னும்கூட திருமணமான ஆண்களேகூட மாதவிடாய் என்பதை முழுமையாக அறிவதேயில்லை என்பது அதிர்ச்சிகரமான உண்மையான தகவல்தான். அவர்களுக்கு உடலுறவிற்கான ஒரு உறுப்பு. மற்றபடி மாதத்தில் ஐந்து முதல் ஏழு நாட்கள் அதிலிருந்து விலக்கு. அவ்வளவே.  ஒவ்வொரு ஆணும் பெண்ணும் முடிந்தளவு திருமண பந்தத்திற்குள் நுழையும்முன் உடல் இயங்கியலையும் உடற்கூறியலையும் வாழ்தலையொட்டியேனும் அறிந்து கொள்ள வேண்டும்.  என்னைக் கேட்டால் ஆணும் பெண்ணும் சேர்ந்தே தம் மக்களுக்கு மாதவிடாய் சார்ந்த சந்தேகங்களுக்கு விடையளிக்கத் தயாராய் இருக்க வேண்டும். 

என் பதின்மத்தில் நான் பூப்பெய்த போது அக்கம்பக்கத்தாருக்கோ உறவினர்க்கோ தெரியப்படுத்தக்கூடாது.  தெரியப்படுத்தினால் நாளைமுதல் பள்ளி செல்லமாட்டேன் என்ற போது என் தந்தை என் சொல்லை மதித்து ஏற்றுக்கொண்டார்.  என் சகோதரிக்கு ஊரெல்லாம் அழைத்து விளம்பியதில் எனக்கு விருப்பமேயில்லை. அது அம்மாவின் விருப்பம் ஆதலால் அப்பா நிறைவேற்றித் தந்தார்.  அப்பா முற்போக்குவாதி. அதனால் அம்மாவுக்கும் மதிப்பளித்தார். என் கருத்தையும் மதித்தார். 

அதேவேளை என் தோழி என் வயதொத்தவள்  பருவமடையாததால் அதாவது பத்தொன்பது வயதுவரை ஆனபிறகும் பூப்பெய்யவில்லை. அவளது பெற்றோர் மிகுந்த மனவுளைச்சலுக்கு ஆளாகினர். யார்யாரெல்லாமோ என்னென்ன மருத்துவம் சொல்கிறார்களோ அதையெல்லாம் செய்துபார்த்து பல மருத்துவர்களை அணுகியும் எந்த மாற்றமும் நிகழவில்லை.  ஏதேதோ கோவில்களுக்கு அழைத்துச் சென்று பரிகாரமும் பூஜையும் என்று அவளை அலைக்கழித்ததை என்னால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. 

ஒருகட்டத்தில் அவளது அம்மாவிடம்,  “நீங்களும் ஒரு அம்மாதானே? ஏன் இப்படி அவளை உயிரோடு வதைக்கிறீங்க? சொல்றவங்க சொல்லட்டும்.  கேக்கறவங்க வந்து மாசாமாசம் பார்க்கவா போறாக? வயசுக்கு வந்துட்டான்னு சும்மா சொல்லிவைங்க.  லேட்டா ஆனதால சொல்லலன்னு சொல்லி சமாளிங்க ஆகறது ஆகட்டும்னு கடுமையாத்திட்டித் தீர்த்தேன். அதன்பிறகுதான் அவளது அம்மா அமைதியானாங்க. என்ன மாயமோ மந்திரமோ தெரியல… இயற்கையாகவே ஓரிரு மாதங்களில் அவள் பூப்பெய்தினாள். அது அவளின் மனம் சார்ந்த விளைவாய்க்கூட  இருந்திருக்கலாம்.  

சரி பிரச்னை அதோடு முடிந்ததா என்றால் அதுதான் இல்லை. இரண்டுமூன்று ஆண்டுகளில் வரன் பார்க்கத் தொடங்கியபோது தாமதமாக பூப்பெய்த விஷயம் விஷமாய்ப்பரவி பல வரன்கள் ஓடியே போனார்கள்.  ஆயினும் நல்மகனொருவன் வாழ்க்கைத் துணையானான். இரண்டாம் ஆண்டே குழந்தையும் பிறந்தது.   சமீபத்தில் வெளியான அயலி வெப் சீரியஸ் பார்த்தபோது நான் சொன்ன டயலாக் நினைவு வந்தது. 

மாதவிடாய் நாட்களில் அணியும் நாப்கின் ஆரம்பகாலத்தில் பருத்தித் துணிதான். அதன்பிறகு கேர்ஃப்ரீ எனும் பெயரில் வரத்தொடங்கி இன்று ஏகப்பட்ட ரகங்களில் வந்தாலும் எல்லாமே வணிகரீதியிலானவை தான். இரத்தக்கசிவு வெளியே தெரியாது, உடனடியாக ஜெல்லாகிவிடும், துர்நாற்றம்வீசாது, எட்டுமணிநேரம் தாக்குப்பிடிக்கும் என்பதெல்லாம் வியாபார நோக்கம் மட்டுமின்றி ஆரோக்கியக்கேடு என்று யார் சொல்வது? இதன்மூலம் கர்ப்பப்பை சம்பந்தமான தொற்றும் நோயும் வர வாய்ப்புள்ளது. 

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே என் வெளிநாடுவாழ் தோழி ஒருத்தி Tampon மற்றும் Menturational cup இவைகளை வாங்கி வந்தாள்.  அப்போது வரை எனக்கு அவைகளின் வடிவமைப்போ உபயோகிக்கும் முறையோ தெரியாது. உபயோகிக்க எளிதானது என்பதை பின்னர் அறிந்துகொண்டேன்.  ஆனாலும் அதிஉதிரப்போக்கிற்கு இவை உகந்ததும் இல்லை.  வளரிளம் குழந்தைகளுக்கு உகந்ததில்லை. திருணமான மற்றும் பணிக்குச் செல்லும் பெண்களுக்கு ஏற்புடையதாக இருக்கலாம்.  இவை  எல்லா ஊர்களில் விற்பனையில் இல்லை. ஏன் பெருநகரங்களிலேகூட எல்லாக்கடைகளிலும் கிடைப்பதில்லை. இப்போது வேண்டுமானால் online ல் பெறலாம் என்ற நிலை.

இப்படியான நாப்கின்களை குறிப்பாக வளரிளம் குழந்தைகள் உபயோகிக்கிறார்கள். இன்னுஞ்சொல்லப்போனால் விளையாட்டு வீராங்கனைகள் உபயோகிக்கிறார்கள். வளரிளம் குழந்தைகள் பயிலும் பல பள்ளிகளில் கழிவறை இல்லாத அல்லது தண்ணீர் வசதியற்று இருப்பதால் இத்தகைய நாப்கின்களை உபயோகிக்கிறார்கள்.  இப்போதெல்லாம் வணிக நோக்கம் சற்றே மாற்றமடைந்து பருத்தியினால் ஆன நாப்கின்கள் வரத் தொடங்கியுள்ளன. 

திருமணத்திற்குப்பின் தன் இணையருக்கு ஒவ்வொரு பெண்ணும் மாதவிடாய் பற்றி எடுத்துச் சொல்லவேண்டும். அதேபோல ஒவ்வொரு ஆணுமே பொறுமையாகக் காதுகொடுத்துக் கேட்கவேண்டும். வெறும் நாப்கின் வாங்கித் தருவதோடு முடிகிற விஷயமில்லை. 

பயன்படுத்திய நாப்கின்களை பேப்பரிலோ பேப்பர் கவர்களிலோ சோப் கவர்களிலோ தனியாகச் சுற்றி குப்பையில் அதாவது மக்கும் குப்பையில் போடலாம். ஆனால் நெகிழிப்பையில் சுற்றிச் சுருட்டிப் போட்டுவிடும் அபாயத்தால் துப்புரவுப் பணியாளர்கள் தான் சிரமத்துக்கு உள்ளாவார்கள் என்பதை மனதில்  கொள்ளவேண்டும்.  நாம் தவறாகச் செய்துவிடும் காரியத்தால் துப்புரவுப் பணியாளர் ஆணோ பெண்ணோ கையால் அந்த நெகிழிப் பையிலிருந்து நாப்கினை எடுப்பது நியாயமில்லை. இதையெல்லாம் நாம் நம் அருகிலிருப்போருக்கு அறிவுறுத்த வேண்டியதும் நமது  கடமை. 

படித்தவர்களே அல்லது  கல்வித்தளங்களில் விடுதிகளில் மாணவிகள் மற்றும் சில பெண்கள் உபயோகித்த நாப்கின்களை சரியாக குப்பைக்கூடையில் போடாமல் கைக்கெட்டும் தூரத்தில்  சுவற்றிலோ கழிவறை மூலையிலோ அசிரத்தையாகப் போட்டுவிடுகிறார்கள். இதையெல்லாம் ஆரம்பத்திலேயே சொல்லி அறிவுறுத்தவேண்டும். கேட்காதபோது நடவடிக்கை எடுக்கவேண்டும். வேறுவழியில்லை.

அப்போதுதான் பேறுகாலத்திற்குப் பிறகு அவளை எப்படி அணுகவேண்டும் என்ற புரிதல் வரும்.  அதேவேளையில் அந்தப் பெண்ணும் தன் பேறுகாலத்தில் ஏற்படும் உதிரப்போக்கு அதன்பிறகான மாதவிடாய் பற்றி வீட்டுப் பெரியவர்களிடம் கேட்டு அறிவது முக்கியம். தாய்ப்பால் தரும்போது பெரும்பாலும் அதாவது கிட்டத்தட்ட ஆறேழு மாதங்களுக்கு மாதவிடாய் ஏற்படாது. இதுவே உடனடிக் கருவுறுதலைத் தடுக்கும்.   அப்போதும் பெண்களுக்கு மாதவிடாய் பற்றிய பதட்டமோ கருவுறுதல் பற்றிய பயமோ ஏற்படாது பார்த்துக் கொள்ளவேண்டும். 

அதே அந்தபெண் பிள்ளை வளர்ப்பில் கவனம் கொள்வதால் ஒவ்வொரு மாத மாதவிடாய்த் தொல்லைகளை பெரிதாக அலட்டிக்கொள்ளாமலும் தனது அசௌகரியங்களை கவனத்தில் கொள்வதுமில்லை. இப்படி கடக்கும் காலமானது அவளது நாற்பதுகளில் மெனோபாஸ் பருவத்துக்கு வரும்போது பல்வேறு பிரச்சனைகளைச் சவாலோடு சந்திக்க வேண்டியுள்ளது. 

பிள்ளைகள் வளர்ந்து ஆளாகியிருப்பர். ஆனால் அவளோ தனக்கான வாழ்க்கையை சரியாக வாழாதது குறித்து அவளது தனித்தன்மையோ திறமையோ வீணானது குறித்து இயலாமையில் பொங்கத் துவங்குவாள். ஏனெனில் அப்போது தான் அவளுக்கு உடல்ரீதியாக பல்வேறு பிரச்சனைகள் தொடங்கும்… அதாவது மூட்டுவலி, முழங்கால் வலி, சீரற்ற மாதவிடாய் அல்லது அதிகப்படியான ரத்தப் போக்கு, இரத்த அழுத்தம், படபடப்பு, தலைசுற்றல்  இதனால் தலைக்கேறும் கோபம் இப்படி வரிசைகட்டி வந்து நிற்கும். 

அப்போது அங்கே கணவன் மற்றும் வீட்டிலுள்ளோர் புரிதலோடு அவளுக்கு வீட்டு வேலைகளில் உதவி அவளுக்கு தாங்கள் எல்லோரும் அனுசரணையாக இருப்பதை உணர்த்தவேண்டும். அதுதான் இந்தியக்குடும்பங்களில் நிகழ்வதேயில்லை. அதுவே ஒரு பெண்ணுக்கு மிகுந்த துயர். 

உலகத்தில் மானுடப் பிறவியை உண்டாக்கவும் உயிர்ப்பிக்கவுமான அற்புதச் செயலுக்கான உடற்கூறியலின் முக்கியமான நிகழ்வைப் பெற்றவர்கள் என்பதால் பெண்கள் மிகுந்த கவனத்தோடும் தம் பொறுப்புணர்ந்தும் அடுத்த தலைமுறைக்கு சரியாக வழிகாட்ட வேண்டும். 

கவிஞர் தோழர் சேலம் ராஜாவின்

“கோழிக்கறி வாங்குபவனின் சித்திரக்குறிப்புகள்” நூலில் இடம்பெற்ற கருப்பி கவிதையை வாசித்தது  இன்றளவும் மறக்க முடியாது. அப்படியான தாய்மை நிரம்பிய ஆணுலகம் வாய்க்கப் பெற்றால் எத்தனை அற்புதமாய் இருக்கும் என்று ஏங்கவைத்த ஒரு கவிதையோடு நிறைவு செய்கிறேன்.

******

அவளுக்கென எப்போதும்

பெரிய சந்தோசங்களே இருந்ததில்லை

அவளுடைய சந்தோசங்களெல்லாம் யாதெனில் 

தன்சார் குடும்பம்

இந்தப்பயணம்

பயணமுடிவில் தொடங்கும் வேலைமட்டுமே

இப்போதெல்லாம் அவளற்ற பயணம்

நினைவில் கூட பூப்பதில்லை

இன்று பேருந்திலேறி

என்னருகே அமர்ந்ததுமே

“பீரியட்ஸ் டைம்டா வயிறுவலி முடியல

நாப்கினே நனஞ்சிடுச்சு 

எந்தவித சங்கோஜமுமின்றி சொல்லிவிட்டுத் தோள்சாய்ந்தாள்

எனக்குள் தாய்மை 

பூக்கும் முன்

வேர்த்த நொடி

பாறையிடுக்கில் விதை முட்டும்

தருணம் போலிருந்தது

5 thoughts on “மாதவிடாய் – உயிர்ப்பு 

    1. அக்கா வெகுசிறப்பு.
      இதழாசிரியராகவும் சிறப்புற செய்துள்ளீர்கள்.வாழ்த்தும் அன்பும்

  1. உயிர்ப்பு நாளைய விடியலின் நம்பிக்கைக்கு உயிரூட்டியிருக்கிறது.
    கட்டுரையாசிரியர் தன் பணியைச் செவ்வனே செய்திருப்பதற்கு மனமார்ந்த பாராட்டுகள் !

  2. அருமையான நடை.. அற்புதம் மா. வாழ்த்தும் அன்பும். இதுகுறித்து ஆரம்பம் முதல் நல்ல புரிதல் கிடைக்க வழிவகை செய்த அம்மாவுக்கும் சித்தி களுக்கும் தான் நன்றி சொல்ல வேண்டும். இதையே மகளுக்கும் சொன்னதில் அவளுக்கும் நற் தெளிவு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *