தமிழில் பூப்பு என்ற சொல் தான் தொடக்க காலத்திலிருந்து தொன்று தொட்டு வருகிறது. தற்காலத்தில் பூப்பு என்பதைக் குறிக்க மாதவிடாய் என்ற சொல்லைப் குறிக்கின்றனர். இந்த மாதவிடாய் என்ற சொல்லில் விடாய் என்பது களைப்பைக் குறிக்கிறது. மாதம் தோறும் பெண்களுக்கு ஏற்படுகிற களைப்பை மாதவிடாய் என்ற சொல் குறிக்கிறது. தமிழ் இலக்கியங்களிலும் இலக்கணங்களிலிலும் மாதவிடாய் என்பதற்கு பூப்பு என்று சொல்லைக் குறிப்பிடுகின்றனர் புலவர்கள். இந்தப் பூப்புக் காலங்களில் பெண்கள் உடல் சார்ந்தும் உள்ளம் சார்ந்தும் சோர்வடைகின்றனர். இதனைத் தொடக்க காலம் முதல் தற்காலப் பதின்பருவப் பெண்கள் வரை எவ்வாறு எதிர்கொள்கின்றனர் என்பதை இக்கட்டுரை முன்வைக்கிறது.
தொல்காப்பியத்தில் பூப்பு
தொல்காப்பியத்தில் பூப்பு பற்றி நேரடியான செய்திகள் இல்லை. தலைவனும் தலைவியும் மணந்து மக்கட்பேறு அடைதல் பற்றிப் பேசும் போது பூப்பு பற்றிய செய்தியைக் குறிப்பிடுகிறார் தொல்காப்பியர். தலைவன் மக்கட்பேறு வேண்டித் தலைவியைப் பிரியாமல் கூட வேண்டிய காலத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது,
“பூப்பின் புறப்பாடு ஈராறு நாளும்
நீத்தகன்று உறையார் என்மனார் புலவர்” (தொல்-பொருள்-கற்பியல் – 46)
இந்நூற்பாவில், தலைவிக்குத் பூப்பு நிகழ்ந்தவுடன் அடுத்த பன்னிரண்டு நாளும் கருத்தரிக்கும் காலம் ஆகும். எனவே, அந்தக் காலத்தில் தலைவன் தலைவியைப் பிரியாது கூடினால் கருத்தரிக்கும் என்று குறிப்பிடுகிறார். கற்பில் தலைவன் தலைவியை விட்டு ஆறு காரணத்திற்காகப் பிரிவான். அப்பிரிவுகள் முறையே, பரத்தையிற் பிரிவு, ஓதல் பிரிவு, காவல் பிரிவு, தூதிற் பிரிவு, துணைவயின் பிரிவு, பொருள்வயின் பிரிவு முதலிய பிரிவுகள் ஆகும். இதில் முதன்மையாக இருப்பது பரத்தையர் பிரிவு. தலைவிக்குப் பூப்பு நிகழும் போதும் தலைவிக்குக் குழந்தை பிறந்த போதும் இப்பிரிவு நிகழும். அக்கால கட்டத்தில் பரத்தையர் பிரிவு இயல்பானதொன்றாக இருந்தாலும் தலைவியின் மனநிலை எவ்வாறு இருந்திருக்கும் என்பது சிந்திக்கத்தக்கது. தலைவன் திரும்பி வருகையில் வாயில் மறுத்து ஊடல் கொள்கிறாள் என்கிற போது அவள் மனம் சார்ந்து பாதிக்கப்பட்டிருப்பாள் என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.
சங்க இலக்கியங்களில் பூப்பு
சங்க இலக்கியங்களில் பூப்புக் காலத்தில் தலைவனின் பிரிவு பற்றிய செய்தியும், பூப்பு நிகழ்ந்த சிற்றரசன் பெண்ணிற்குச் சடங்கு செய்தல் பற்றியும், பூப்பு நிகழும் போது பெண்களைத் தனித்து இருக்கச் செய்திருக்கின்றனர். இதனைக் குறிக்க கலந்தொடா மகளிர் (புறம்.299:5-7) என்ற சொல்லைக் குறித்திருக்கின்றார்கள் சங்கப் புலவர்கள். பெண்களைப் பூப்புக் காலத்தில் வீட்டினுள் இற்செறித்து வைத்துள்ளனர் என்ற செய்தியை “முலை முகம் செய்தன” (அகம்-7) என்ற அகநானூறு பாடல் குறிப்பிடுகிறது. கலந்தொடா மகளிர் என்ற இத்தொடர் குறிப்பிடும் கருத்தை இன்றைய காலகட்டத்திலும் பெண்களைப் பூப்புக் காலத்தில் தனியாக அமரச் செய்வது, எந்தப் பாத்திரங்களையும் தொடக்கூடாது, செடிகளுக்கு நீர் ஊற்றக் கூடாது என்பன போன்றவற்றை கடைபிடிக்கப் சொல்லுகின்றனர் சிலர். இது ஒரு வகையில் பெண்களுக்குக் கொடுக்கப்படுகிற ஓய்வு என்று பார்க்கலாம். ஆனால் இதனை மூடநம்பிக்கைத் தனமாக தீட்டு என்று சொல்லி சிலர் ஒதுக்குகின்றனர். இது ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை. இவ்வாறாக சங்க காலகட்டத்திலும் பெண்கள் பூப்புக் காலத்தில் மன அழுத்தத்திற்கு உள்ளாகி இருப்பார்கள் என்பதே உண்மை.
பக்தி இலக்கிய காலகட்டத்தில் பூப்பு
பக்தி இலக்கிய காலகட்டத்தில் காரைக்கால் அம்மையார் தன் பக்தியின் மிகுதியால் இறைவனையே கண்டிருக்கிறார். ஆண்டாள் நாச்சியார் தம்முடைய பக்தியினால் இறைவனையே ஆட்கொண்டிருக்கிறார். இப்படி மனித நிலை கடந்து இறைவனோடு இறைவியாக அல்லது இறைவனின் திருவருளைப் பெற்ற பெண்கள் வாழ்ந்த காலம் பல்லவர் காலம். எனவே இறைவனை வணங்குதற்கோ அவன் மீது அன்பு செதுத்துதற்கு இந்தப் பூப்பு ஒரு தடையாக இல்லை என்பதை இவ்விருவர் வழி அறியலாம். பூப்பு என்பது பெண்கள் உடலில் ஏற்படும் இயற்கையான நிகழ்வு. அதைப் புனிதம் என்றும் சொல்லுவதற்குக் காரணம் உண்டு. ஒரு கருவை அதாவது உயிரை உருவாக்குகிற ஆற்றல் பூப்பிற்கே இருக்கிறது. அந்த வகையில் அதைப் புனிதமானது என்று சொல்லலாம். ஒரு உயிர் உருவாகக் காரணமாக இருந்த இப்பூப்பை தீட்டென்று சொல்லி விலக்குவது எப்படி புனிதமாகும்? எனவே பக்திக்கும் பூப்புக் காலத்திற்கும் எந்த வேறுபாடும் இல்லை. பூப்பு நிகழ்ந்தாலும் இறைவனை வணங்கலாம். இதைத் தான் சைவ சமயமும் சொல்கிறது. பெண்களுக்கு எல்லா உரிமைகளையும் கொடுத்தது பக்தி இலக்கிய காலம். இன்றும் சைவ மரபில் பெண்கள் பூப்புக் காலங்களில் வழிபாடு செய்யலாம் அதே போல ருத்திராட்சம் அணியலாம் முதலியவற்றைச் சொல்லுகிறது பன்னிரு திருமுறை. ஆன்மீகத்தைப் புனிதமாக்கப் பெண்களின் பூப்பை தீட்டெனச் சொல்லுவது எவ்வகையில் சரியாகும். இதனை மக்கள் கருத்தில் கொள்ள வேண்டும். காரைக்கால் அம்மையார், ஆண்டாள் நாச்சியாருக்கு இருந்த அந்த அகம் மற்றும் புறம் சார்ந்த சுதந்திரம் இன்றைய காலகட்டத்திலும் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்காலத்தில் பூப்பு
இயற்கையின் படைப்பில் பெண்களுக்கு ஏற்படும் உடல் வகைப்பாட்ட முதல் நிகழ்வு பூப்பு ஆகும். “பெண் உடல் ரீதியாகக் குழந்தைப் பருவத்திலிருந்து கருத்தரிக்கும் தகுதியை அடைகிற நிலைக்கு மாறிச் செல்வதைக் குறிப்பது பூப்பு” என்று ராஜ்கௌதமன் குறிப்பிடுகிறார். இன்றைய காலகட்டத்தில் பதின் பருவப் பெண்களுக்குப் பூப்பை பற்றிய விழிப்புணர்வு முன்னதாகவே இருக்கிறது. இதைப் பற்றித் தன் குடும்பத்தார் அல்லது நண்பர்கள் அல்லது இணையம் வழியாக அறிந்து கொள்கின்றனர். மாதா மாதம் இளம்பெண்கள் இதனை மிகக் கடினமாகவே எதிர்கொள்கின்றனர்.
சாதாரண நாட்களைக் காட்டிலும் பூப்பு நாட்களில் கொஞ்சம் டென்சனாகவே இருக்கிறார்கள் ஆடையில் ஸ்டெயின் ஆகிவிடுமோ என்று. அது மட்டுமன்றி சரியான உணவுப் பழக்கமின்மையால் பெரும்பாலும் வயிற்று வலியால் அவதிப்படுகின்றனர். இம்மாதிரியான நேரங்களில் ஆசிரியரின் அனுமதி பெற்று வகுப்புகளில் ஓய்வெடுக்கும் மாணவிகள் நிறைய உள்ளனர். இன்னும் சிலர் இந்த வயிற்று வலியால் சரியாகச் சாப்பிடுவதில்லை. இதனால் இவர்கள் மயக்க நிலைக்கு ஆளாகி நம்மை அச்சுருத்தவும் செய்கின்றனர். அப்படியான சூழலில் இவர்களுக்கு ஒரு B12 ஊசியைப் போடுங்கப்பான்னு சொல்லிட்டு கடந்து போகவேண்டிய நிலை தான் இருக்கிறது. இன்னும் பலர் கோ எஜுகேஷன்ல படிக்கறதால ஆண்கள் மத்தியில் இந்த மாதிரி நேரத்துல எப்படி வலியப் தாங்கறதுன்னு தயங்குகின்ற சூழலும் ஏற்படுகிறது.
நிறைய இளம்பெண்களுக்குச் சரியான கால இடைவெளியில் பூப்பு நிகழ்வதில்ல. அதனால் இவர்களுக்கு சானிடட்ரி நேப்க்கின் கொண்டு வருகிற பழக்கமும் இல்லை. இந்தச் சூழலில் இந்தப் பெண்பிள்ளைகள் வகுப்பு வகுப்பாகச் சென்று நேப்க்கின் கேட்பதைப் பாற்கிற போது இந்த நூற்றாண்டிலும் இப்படி விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறார்கள் எனத் தோன்றும். சில நேரம் எங்கும் கிடைக்காமல் ஆசிரியரிடமே கேட்பார்கள். இருந்தால் பையிலிருக்கும் நேப்க்கின்னைக் கொடுத்துவிட்டு, இனிமேல் எப்பவும் ஒரு நேப்க்கின்ன பையில் வைத்துக்கொள் எனச் சின்னதா ஒரு அட்வைஸையும் சொல்லி விடுவது வழக்கமாக வைத்திருக்கிறார்கள் சிலர்.
சில பெண்பிள்ளைகளுக்குக் கிடைக்காத சூழலில் அவளின் தோழிகள் கடைக்குச் சென்று வாங்கிவந்து கொடுப்பார்கள். அதுவரை அந்தப்பெண் கழிவறையிலேயே அவளுக்காகக் காத்துக் கொண்டிருப்பாள். வாங்கி வருகிற நேப்க்கினை, யாரும் பார்த்து விடக்கூடாது, குறிப்பாக எந்தப் பையனும் பார்த்து விடக்கூடாது என்று மறைத்துக் கொண்டு வரும் வரை அவள் ஒரு தாழ்வு மனப்பான்மையோடு இருப்பதை நாம் கண்கூடாகப் பார்க்கலாம்.
சிலபிள்ளைகளின் துணிகளில் கறை பட்டிருப்பதை அறிந்தால் வகுப்பறையிலிருந்து வெளியேறுவது தர்ம சங்கடமான சூழலாக இருக்கும் அவர்களுக்கு. விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவிகள் சிலர் தங்களுடைய ஆடையை எடுத்து வந்து கொடுத்து அவர்களின் மனநிலையை மகிழ்ச்சியாக மாற்றுவார்கள். பல பிள்ளைகள் விடுப்பும் எடுத்துக் கொள்கின்றார்கள். இதைப் பற்றி பல இளம் பெண்களிடம் கேட்டபோது, ஏன்டா இந்தப் பீரியட்ஸ் வருது? இது வந்தா பரவாயில்லை கூடவே வயிற்று வலியும் வருது? பீரியட்ஸ் வரும்போது ரொம்ப டென்ஷனா தான் இருக்கும் எப்படா முடியும்ன்னு இருக்கும்? சிலர் எனக்கு இன்னும் பிரீயட்ஸ் வர்ல. எப்ப வருமோ தெரியல. வந்தா ஒரு கடமை முடிஞ்சுறும். அய்யோ அது வந்தாலும் பிரச்சனை. வரவில்லையென்றாலும் பிரச்சனைன்னு சொன்னாங்க. இத விட ஒரு படி மேல போய் இந்தப் பொண்ணுங்களுக்கு தான் இந்தப்பிரச்சன, ஏன்டா பொண்ணா பிறந்தேன்னு சிலர் சொல்லும்போது அந்த மாதவிடாயினுடைய வலிகள் மற்றறும் அவர்களின் மன உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது. சில பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேப்க்கின் வெண்டிங் மெசின் இருக்கிறது. இதனை எல்லாப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மற்றும் பல்கலைக்கழகங்களில் உள்ள கழிவறைகளில் கட்டாயமாகப் பொருத்த வேண்டும். அது மட்டுமல்லாமல் இந்த மாதிரியான சூழலில் அவர்களுக்கு ஓய்வறை மற்றும் கவுன்சிலிங் கொடுக்க வேண்டும். முதலில் இளம்பெண்களுக்கு மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வையும் மற்றும் சுகாதாரத்தையும் அவர்கள் குடும்பத்தார் மற்றும் கல்வி நிலையங்களில் அறிவுறுத்த வேண்டும். முப்பது வருடங்களுக்கு முன்னதாகவே பீகாரில் மாதவிடாயின் போது பள்ளி மற்றும் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு விடுமுறை அளித்துள்ளது இதைப்போல தமிழ்நாட்டிலும் இப்படியான சூழல் வந்தால் மாதாமாதம் கல்விச் சூழல் மற்றும் அலுவலகச் சூழலை உடலாலும் உள்ளத்தாலும் எளிமையாக எதிர் கொள்வார்கள் இந்த மாதவம் படைத்த பெண்கள். தமிழ்நாடு அரசு இதனைக் கருத்தில் கொள்ளுமா எனக் காத்திருந்து பார்ப்போம்.
நிறைவாக பூப்பைத் தீட்டென எக்காலத்திலும் எப்புலவனும் பாடவில்லை. பூப்பைப் புனிதமெனவே கருதுகின்ற சூழலில் புனிதத்தை மூட நம்பிக்கையோடு இணைப்பது நடைமுறைக்கும் பக்திக்கும் ஒவ்வாதது என்பதையும் அறியமுடிகிறது. எல்லாக் காலங்களிலும் பெண்கள் பூப்பின் போது உடல் வலியோடு தங்கள் மனவலியை எதிர்கொள்கின்றனர் என்பதை நுண்ணிதின் விளங்கிக் கொள்ள முடிகிறது. பூப்பென்பது பெண்களின் வலி மிகும் இடம் என்பதை இக்கட்டுரை வழியாகப் புரிந்து கொள்ள முடிகிறது. பூப்பின் போது ஒவ்வொரு பெண்ணும் தங்களின் அகப்புறச் சுதந்திரத்தைத் தாங்களே கையில் எடுத்தாலும் அதைத் தட்டிப் பறிக்காமல் அவளது புனித வானில் பறக்க விடுங்கள் என்பதே எல்லாப் பெண்களுடைய வேண்டுகோளாக இருக்கிறது.
சிறப்பு மா. இதில் தாங்கள் குறிப்பிட்ட வயிற்று வலி எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் உண்டு. கருப்பையில் யாதொரு கோளாறும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தாலும் தலைமுறை யாக வயிற்றில் வலி தொடர்கிறது. நாங்கள் வெளி உணவு எதுவும் உண்பதில்லை என்பதோடு இன்று வரை இதற்காகவே விடுப்பு எடுக்கும் நிலை தான். அதோடு வாந்தி வயிற்று போக்கு என்று கடுமையான தொந்தரவை சந்திந்துள்ளேன். அது ஓய்வு எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று பேசுபவர் கண்டால் ஓங்கி அடிக்க வேண்டும் என்ற அளவில் ஆத்திரம் வரும். அவரவர் உடல் நலம் அவருக்கு. கட்டுரை சிறப்பு. வலி குறித்து பேசியதில் ஆசுவாசம்
நன்றி சகோ