பள்ளிக்கூடத்தில் பெண் குழந்தைகள் 

பெண் புனிதம் என்றோ,  தீட்டு என்றோ தேவைப்பட்ட கற்பிதங்களை வைத்துக்கொண்டு பெண்களை வேலை செய்பவர்களாக மட்டும் வைத்துக் கொண்டிருந்த சமுதாயத்தில் பெண் அனுபவித்த வேதனைகள் பல.

பள்ளிக்கூடம் பெண் குழந்தைகள் நடமாடும் சமத்துவம் நிறைந்த இடமாக சில ஆண்டுகளாக மாறி வந்துகொண்டிருக்கிறது.

பள்ளிக்கூடங்களில் பெண் குழந்தைகள்:

பெண் குழந்தைகள் பள்ளிக்கு வர மிகவும் விரும்புகிறார்கள். சனிக்கிழமைகளில் பள்ளி என்றால் கூட,அவர்களின் முகத்தில் மகிழ்ச்சிதான். வீட்டிலிருந்தால் வீட்டு வேலைகள் மொத்தமும் அவர்களுக்காக காத்திருப்பதே அவர்கள் பள்ளியை விரும்புவதற்கான முதல் காரணம். காலையிலேயே வீட்டில் சமையல் முதல் வீடு பராமரிப்பு வரை அனைத்து வேலைகளையும் செய்துவிட்டுவரும் பெண் குழந்தைகள் பெரும்பான்மையோர்.

என் வகுப்பில் உள்ள மாணவி ஒருத்தி வைக்கும் காரக்குழம்பு போல, எனக்கு குழம்பு வைக்க தெரியவில்லை. அவ்வளவு சுவையாக செய்கிறாள் எட்டாம் வகுப்பு படிக்கும் அந்த மாணவி. வீட்டு வேலைகளால் பள்ளியின் வீட்டுப்பாடங்களை முடிக்காமல் வரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாகத்தான் உள்ளது. ஆசிரியர்கள் பெண் குழந்தைகளிடம் எப்போதும்  கனிவாக நடந்துகொள்ள வேண்டிய தேவையிருக்கிறது.

மாதவிடாய்:

மாறிப்போன உணவுப் பழக்கங்களால் பெண் குழந்தைகள் ஆறு அல்லது ஏழு வகுப்புகளிலேயே மாதவிடாய் காலத்தை நெருங்குகின்றனர்.

கிராமங்களில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவிகள் மாதவிடாய் காலத்தில் அடையும் இன்னல்கள் அதிகம்.

ஐந்து கி.மீ தூரத்தில் உள்ள ஊர்களிலிருந்து பள்ளிக்கு  நடந்து வருகின்றனர்.

தன்னை விட வயது அதிகமுள்ள அண்ணன், அக்காள்களைக் கொண்டவர்களுக்கு,  பள்ளிக்கு வர மூத்தவர்களின் சைக்கிள் கிடைத்துவிடுகிறது.

ஆக, பள்ளிக்கு வரும் பயணம் என்பது அவர்களுக்கு கடுமையாகவே உள்ளது. இதை எளிமையாக வார்த்தைகளில் சொல்லிவிட்டு கடந்துவிடுகிறேன். ஆனால் தினமும் இந்த துன்பத்தை அனுபவிக்கும் மாணவிகள் மனக்குமுறலை எந்த எரிமலையும் கூட வெளிப்படுத்த முடியாது என்றே நினைக்கிறேன்.

பள்ளிகளில் உள்ள வசதி:

எல்லா அரசுப் பள்ளிகளிலும் கழிவறைகள் போதுமான அளவும், சுத்தமாகவும், தண்ணீர் வசதியுடனும் இருக்கும் என்று உறுதியளித்திட முடியவில்லை.

நிர்வாகச் சிக்கல் காரணமாக, பெண் குழந்தைகள் பயன்படுத்தும் கழிவறைகள் தூய்மை செய்யப்படாமலும், போதுமான தண்ணீர் வசதியின்றியும் உள்ளன.

வகுப்பில் இடைவேளை சமயத்தில் மாணவிகள் வகுப்பிற்குள்ளேயேதான் இருப்பர். கழிவறைக்கு சென்று வாருங்கள் என்றாலும், நாங்கள் பள்ளிக் கழிப்பறையை பயன்படுத்துவதில்லை என்கின்றனர். காரணம் நமக்கே தெரியும்.

இதன்காரணமாக சிறுவயதிலேயே பெண் குழந்தைககள் சிறுநீரகத்தொற்று சார்ந்த நோய்களுக்கு ஆளாகவும் வேண்டியிருக்கிறது.

கழிப்பறைத் தேவை என்பது பெண்களுக்கு உயிரைக் காட்டிலும் உன்னதம் மிகுந்த ஒன்றாகவே உள்ளது.

ஆனால் சமுதாயத்தில் பெண்ணின் இந்தத் தேவையை கவனத்தில் கொண்டோர் எவருமில்லை. அதனால் தீர்வும் எட்டப்படாமலே உள்ளது.

மாதவிடாய் சுழற்சி:

பெண் குழந்தைகளுக்கு மாதவிடாய் பற்றிய புரிதல் இருப்பதில்லை. பள்ளிகளில் உள்ள அறிவியல் பாடங்களில் மாதவிடாய் பற்றிய பக்கங்கள்,  படித்து கடக்கப்படுகிறது. உரையாடலாய் வகுப்பறைகள் புரிதலுக்கு உட்படுத்துவதில்லை.

வீடுகளில் தாய் மற்றும் உறவுக்காரப் பெண்களின் மாதவிடாய் அறிவே,  பெண் குழந்தைகளுக்கு சொல்லித்தரப்படுகிறது.

மாதவிடாய் காலத்தில் தலைக்கு குளிப்பதும்,கோவிலுக்கு செல்லாமல் இருப்பதுவுமே மாதவிடாய் என்பதுதான் பெரும்பாலான பெண்களின் புரிதலாக உள்ளது.

வியர்வை, சிறுநீர் போல கருப்பையின் கழிவே மாதவிடாய். அந்த நேரத்தில் உடலைத் தூய்மையாகவும், ஏற்படும் இரத்த இழப்புக்கு ஈடாக,  சத்துள்ள உணவு உட்கொள்ள வேண்டும் என்பதும் கிராமங்களில் உள்ள தாய்மார்களுக்கு தெரியவில்லை. நகரங்களில் உள்ள தாய்மார்களுக்கு நேரமில்லை.

பெண் குழந்தைகள் உணவுமுறை:

பருவ வயதை அடைந்த  மாணவிகள் தங்கள் தோற்றத்தின் மீது மிகுந்த கவனம் செலுத்த விரும்புகின்றனர்.உடல் எடையைப் பராமரிக்க மதியவேளையில் உணவு உட்கொள்ளாமல் உள்ளனர். கொண்டுவரும் சிறிய உணவு டப்பாக்களின் உணவும் கீழே கொட்டப்படுகிறது.

சத்தான உணவு உட்கொள்ளாததால் மெலிந்த உடலும், கல்வியில் கவனம் செலுத்த இயலாத சூழலும் மாணவிகளிடையே காணப்படுகிறது. அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வாரம் ஒருநாள் இரும்புத் சத்து குறைபாட்டைப் போக்க,  சத்து மாத்திரை வழங்கப்படுகிறது.

வீட்டில் தோட்டத்தில் கிடைக்கும்  முருங்கைக்கீரை மற்றும் பப்பாளி பழங்களை உண்ணுவது இல்லை. விளம்பரங்களைப் பார்த்து சீர்கெட்டுப்போன மனநிலையின் வெளிப்பாடே இம்மாதிரியான ஆரோக்கியமான உணவுகளை அடையாளம் காணமுடியாத நிலை. பீட்சா, பர்கர், என தேடியலைகின்றனர். கிராமத்தில் உள்ள குழந்தைகள் பேக்கரி உணவுகளுக்கு அடிமையாகின்றனர்.

நாப்கின் பெட்டி:

அரசுப் பள்ளிகளில் உள்ள குழந்தைகளுக்கான வரமாய் நாப்கின் பெட்டிகள் உள்ளன. அரசு மருத்துவமனைகளில் உள்ள செவிலியர்கள் சரியான காலத்தில் நாப்கின் பெட்டிகளை பள்ளிகளுக்கு விநியோகிக்கின்றனர்.  இதனால் பெண் குழந்தைகள் நாப்கின்களை விலையில்லாமல் பெற்று பயன்படுத்த உதவியாக இருக்கிறது. 

கடைகளில் விற்பனை செய்யப்படும் நாப்கின்களின் விலைஉயர்வுக்கு, கிராமத்திலுள்ள ஏழைப்பெற்றோர்கள் விலைகொடுத்து வாங்கிட முடியாது. அரசுப் பள்ளிகள் அவ்வகையில் பெண் குழந்தைகளுக்கு வரமாய் உள்ளது.

பெண் குழந்தைகள் மாதவிடாய் காலத்தை சிரமமின்றி கடக்கவும்,அவசியத் தேவையான கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தி தருவதும் ஒவ்வொருவரின் கடமையேயாகும்.

பள்ளிகளில் கழிப்பறை வசதிகளை கண்காணிக்கவும், ஏற்படுத்தித் தருவதுமான செயல்களை சமூக நல ஆர்வலர்கள் முன்னெடுக்க வேண்டும். கழிப்பறை வசதியற்ற பள்ளிகளை அரசுக்கு அடையாளம் காண்பித்து,  வசதிகளை உருவாக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை உணர வேண்டும்.

3 thoughts on “பள்ளிக்கூடத்தில் பெண் குழந்தைகள் 

  1. Wonderful write up. This write up is today’s government school’s mirror… it hD shown real picture n need for the day for the Girls in Govt. Schools.
    If free cycle distribution starts from. Mid school, then more than 50% of prob.would be solved.
    Also it’s nice to know availability of napkins in schools at free of cost.
    As a Gist, this online magazine, bitngsout truth of present society from the society itself.
    Lovely… keep rocking 👌

  2. வீடு, பள்ளி, கல்லூரி, அலுவலகம் என எல்லா இடங்களிலும் எல்லோருக்கும் கழிப்பிடம் தேவைப்படுகிறது என்பது போலவே எல்லாப் பெண்களுக்கும், குறிப்பாகப் பள்ளிக்குச் செல்லும் எல்லா இளம் பெண்களுக்கும் சானிட்டரி நாப்கின்கள் கட்டாயமாகத் தேவைப்படுகிறது.

    அரசுப் பள்ளியோ, தனியார் பள்ளியோ, எல்லாப் பள்ளிகளிலும் பெண் குழந்தைகளுக்குத் தண்ணீரும், தண்ணீரோடு கூடிய கழிப்பறையும், சானிட்டரி நாப்கின்களும் விலை இல்லாமல் வழங்கப்பட வேண்டும்.

    இவை அடிப்படைத் தேவைகள். இவற்றுக்காகக் காசு கேட்பது ஏற்க இயலாதது.

    பள்ளி ஆசிரியைகள் கற்பித்தலை வழங்குவதோடு, மேற்சொன்னவற்றை வழங்குவதையும் உறுதி செய்ய வேண்டும்.

    எல்லாப் பள்ளிகளும் நம் பெண் குழந்தைகளுக்கு இவற்றை வழங்க வேண்டும்.

    இவற்றை வழங்குவதற்குத் தேவையான அனைத்தையும் நம் அரசு உறுதி செய்ய வேண்டும்.

    4 நாள்களுக்கு முன்பு தான் 77-ஆவது சுதந்திர தினம் என்று சொல்லி நாம் அனைவரும் மார்தட்டிக் கொண்டு ஊர்வலம் / நகர்வலம் வந்தோம். நினைத்துப் பார்த்தால் வெட்கமாகத்தான் இருக்கிறது.

    பெண் பிள்ளைகளின் வலிகளைத் தெளிவாக, வெளிப்படையாகக் கூறி இருக்கும் ஆசிரியை உதயலக்ஷ்மி அவர்களுக்கு வாழ்த்துகளும், பாராட்டும்.

  3. மிக எதார்த்தமாகவம் நேர்த்தியாகவும் நம் பள்ளிகளில் பெண் குழந்தைகளின் நிலைய பதிவு செய்துள்ளீர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *