பருவங்களின் ஆலாபனை

சுஜாதாவின் கதையுலகத்தைப் “பருவங்களின் ஆலாபனை” என்று குறிப்பிடுவதற்குக் காரணம் பெண்களின் பருவ வகைகளில் வரும் அனைத்து விதமான பெண்களுமே கதைகளின் நாயகிகள். பேதை தொடங்கி பேரிளம்பெண் வரை உள்ளோரின் அன்றாடப் பாடுகள். இயல்பு மீறிய பெண்கள், முற்போக்குப் பெண்கள் நேரடியாக இல்லை, ஆனால் இருக்கிறார்கள். எப்படி என்றால் வாழ்வைப் போகிற போக்கில் அணுகுவது,கைவிடப்பட்ட மனிதர்கள் முன்பு, காலத்தின் முன்பு சத்தமின்றி தாண்டவம் ஆடுவது, சன்னத மனநிலையோடு யாருமறியாது எந்நேரமும் கொதிநிலையில் இருப்பது என்றெல்லாம் நம் கிராமங்களில் அன்றாடம் காணும் ஒருத்தியைத்தான் அவர் கதைகள் வழியாகப் பார்க்கிறோம். ஆகமொத்தம் எந்தப் பருவம் என்றாலும் ஆணை விட பெண்ணுக்குத் தான் அதிகப் போராட்டம். பொருளாதார, மன, உடல் ரீதியான போராட்டக் களத்தில் தினமும் வாழவேண்டிய கட்டாயம் இன்னும் விதிக்கப் பட்டிருக்கிறது. சுஜாதாவின் கதைகள் எந்த இடத்தில் வெற்றி பெறுகின்றன என்றால் பெரும்பான்மையான அளவில் இருக்கும் அடித்தட்டு, நடுத்தர வர்க்கப் பெண்களின் வாழ்வியலை அலசுவதால் மட்டுமே. விதிவிலக்குகள் பற்றிப் பேசாமல் இயல்புகளைப் பேசுவதாலும். காலமாற்றங்களில் முற்றிலும் அழிந்து போகாத, இன்னும் நம் ஆதாரமாக இருக்கும் குடும்ப அமைப்பின் கண்ணுக்குப் புலப்படாத, புலப்படும் சுரண்டல்கள் பற்றிப் பேசுவதாலும். சில கதைகளில் பெண்களே பெண்களைச் சுரண்டுவதை நேர்மையோடு காண்பிப்பதாலும்.
ஒரு கதைக்குள் தனித்தனியே நிலம் பொழுது கதை நடக்கும் காலம் என்று குறிப்பிடப்படவில்லை என்றாலும் வாழ்வியல் முறையை வைத்தும், பாடுகளின் தன்மையைப் பொறுத்தும், வழக்கு மொழிகளைப் பேசும் விதத்திலும் இவை எந்தெந்த காலக் கட்டங்களில் நடக்கின்றன என்பதை யூகிக்க முடிகிறது. அந்தப் பேசுபொருள்களில் பல இன்னும் இன்றளவும் மாறாமல் இருப்பது பற்றியும் அழுத்தமாகச் சொல்லிச்செல்கின்றன.
தஞ்சை (திருச்சி) கரூருக்கு இடைப்பட்ட மாவட்டமான திருச்சியின் கலவையான புதிய பொதுமையான வட்டார வழக்கு கிராமங்களின் கதைகள் முழுவதிலும் ஆற்றொழுக்கான நடையில் தடையின்றி ஓடிக்கொண்டேயிருக்கின்றன. வட்டார வழக்கைக் கைப்பிடித்தபடி சென்றால் ஒரு மனிதன், வீடு, தெரு, ஊர் என்று பலவற்றை ஆசிரியரோடு சேர்ந்து சுற்றிப் பார்க்கலாம். மேலும் கதை மாந்தர்கள் ஊருக்கு, சொல்லுக்கு, மானத்துக்கு அஞ்சி வாழ்வை நெருக்கடியோடு எதிர்கொள்வதையும் வழக்குச் சொற்கள் வழியாகக் கண்டுவிட முடிகிறது. இவற்றின் மூலம் கலவையான ஒரு புதிய நிலப்பரப்பின் வட்டார வழக்கு மொழியைத் தமிழ் எழுத்துலகில் அழுத்தமாகப் பதிய வைக்கிறார் ஆசிரியர்.
வசந்தி கதையில் வருகிற வசந்தி தனக்கு நேரும் பாலியல் தொந்தரவு பற்றி சொல்லமுடியாது தவிப்பது, நந்தினி குடிகார அப்பாவை அறைவிடுவது, கன்னிமார் சாமி கதையில் தனிப்பட்ட உணர்வுகளை யோசிக்காமல் நல்லம்மாவின் வாழ்வைத் தியாகமாக குடும்பமே (அம்மாவே) மாற்றிவிடுவது, சிற்பம் சுமதி கணவனோடு விருப்பமின்றி சடங்கெனக் கூடுவது, மலர் அப்பாவுக்கு ஆனி ஃப்ரெஞ்ச் போட்டு ஷேவ் செய்து விடுவது, கந்தாயி திலகத்தின் உணர்வுகளைப் புரிந்து பரிவோடு நடந்துகொள்வது, சந்தேகத்தீயில் பொசுக்கும் கணவனை பொறுத்துப் பொறுத்துப் பொங்கி மாரிலேறி குத்துவது, சங்கு கதையின் தாளாத முதிர் கன்னி மீறலைப் புரிந்து யதார்த்தம் பேசும் தாய், ஒரு கோடித் துணிக்காகத்தான் தன் மகளின் வாழ்வை அழித்த மகனிடம் கத்தியழும் அம்மா, பிறந்த வீட்டில் கோடித்துணி வாங்கிப் பாசத்தை ஒப்பாரியில் காட்டும் ராமாயி, கர்ப்பப்பை இறங்கி அதனால் படும் மன அவஸ்தைகளால் மகன் வீட்டினுள் தவிக்கும் கற்பகாம்பாள், தழும்பை மறைத்துவிட்டு அல்சைமர் வந்து கிடக்கும் மனைவி, வறுமையிலும் , குடிகாரக் கணவன் சொந்தங்கள் முன்பு கௌரவமாக வாழத்துடிக்கும் லட்சுமி இன்னும் இரண்டு கதைகளை மிச்சம் வைக்கிறேன். எத்தனை எத்தனை விதமான பெண்கள். கதைகளில் ஆண்களுக்கும், உறவுகளுக்கும் குறையில்லை.
இந்தப் பெண்களின் அப்பாவாக, கணவனாக, தம்பியாக, அண்ணனாக, காதலனாக இப்படி ஒவ்வொரு ஆணும் ஒவ்வொரு நற்குணங்களோடும், குணக்கேடுகளோடும் வாழ்வதைக் காண்பிப்பது கதைகளுக்கு மேலும் சிறப்பு செய்கிறது.
மற்றொரு விஷயம் வித்யாசமான பெயரமைப்பு கொண்ட கதாப்பாத்திரங்கள் இல்லாமல் தினசரி புழங்கும் பெண்களின் கிராமத்துப் பெயர்கள் என்பதால் பெயரைக்கொண்டு கதாப்பாத்திரத்தை நினைவு கொள்ளாமல் கதாப்பாத்திரத்தினை வைத்துப்பெயரை நினைவில் கொள்ளும் அளவிற்குப் பெயர்களைப் பெயரளவில் பயன்படுத்தி இருப்பதால் வாழ்ந்து கரைந்து போகிறார்கள் பெண்கள். அந்தக் கரைதலில் பெயர்கள் வடிகட்டப்பட்டு கதாப்பாத்திரங்கள் மனதோடு எஞ்சித் தங்கி விடுகின்றன. என்றோ ஒரு நாளில் “சுஜாதா செல்வராஜ்” கதையில் வரும் பெண் ஒருத்தி என்று குறிப்பிடுகையில் அந்தப்பெண் சமூகத்தின் பெரும்பாலான பெண்களுக்குள் வந்து நின்று விடுவாள். அதுவே அவரது கதைகளின் ஆகச் சிறந்த வெற்றி.
குறை என்பதை விட ஆசிரியர் மொழியிலும் வழக்குச் சொற்கள், கதாப்பாத்திர, உரையாடல் மொழியிலும் வழக்குச் சொற்கள் இருப்பது ஆசிரியர் உள்ளேயே சுற்றும் தோற்றத்தை ஏற்படுத்துகிறது. பின்னாளில் வேறு கருக்களை எடுக்கும்போது ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்க ஆசிரியர் தனிமொழி உருவாக்கிக் கொண்டால் மென்மேலும் சிறப்பாக இருக்கும் .

அனைவரும் வாசிக்க வேண்டிய அருமையான நூல்…

புத்தகம்: கன்னிமார் சாமி
வகைமை: சிறுகதைகள்
பதிப்பகம்: காலச்சுவடு
ஆசிரியர்: சுஜாதா செல்வராஜ்
விலை: ரூ190/-

One thought on “பருவங்களின் ஆலாபனை

  1. அருமையான விமர்சனம்
    எனக்கு சுஜாதா அவர்களின் முதல் அறிமுகம்கூட நன்று

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!