
சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள வீடு தான்
சுத்தம் என்பதை மறந்தால் நாடும் குப்பைமேடு தான்“
கமல் நடித்த நம்மவர் படத்தில் இடம்பெற்ற பாடல் வரிகள் இது .சுத்தம் என்பதை மறந்தால் நாடு குப்பை மேடு தானே..? குப்பை என்பதற்கான அளவீடு எது? ஒரு பொருளை நாம் பயன்படுத்தும் வரை அது உயயோகமுள்ளதாக இருக்கிறது. அதுவே நல்ல நிலையில் இருந்தாலும் நமக்குத் தேவையில்லை என்று தூக்கி எறியும் போது அது குப்பையாகி விடுகிறது. சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்பும் இப்போதும் உள்ள சுற்றுச்சூழலை ஒப்பீடு செய்து பார்த்தால் தெரியும்.
அன்றைய தெருக்கள் சுத்தமாக இருந்தது.இன்று எங்கு பார்த்தாலும் நெகிழி மற்றும் விதவிதமான நெகிழிப் பொருட்களால் ஆன குப்பைகள். பயன்படுத்திய மின்சாதன, மின்னணுக் கழிவுகள் ,மருத்துவக்கழிவுகள் போன்ற ஆபத்தான கழிவுகள் ஏராளம். இவை நிலத்தை மட்டும் மாசுபடுத்தவில்லை. மனித உயிர்களையும் , விலங்குகளையும் காவு வாங்கக்கூடிய அளவுக்கு அதி பயங்கரமான ஆபத்தை விளைவிப்பவை.
நம் நாட்டில் தான் நம் வீட்டுக் குப்பையை அடுத்த வீட்டு வாசலில் கொட்டுவது தொடங்கி…நம் மாநிலத்தில் உள்ள குப்பைகளை ,ஆபத்தான கழிவுகளை அடுத்த மாநில எல்லையில் கொட்டுவது வரை எந்த குற்ற உணர்வுமின்றி மிக தைரியமாக செய்கிறோம். குப்பைகளை இடம் மாற்றுகிறோமேயொழிய முறையாக அப்புறப்படுத்துவது பற்றி யோசிக்க, செயல் படுத்த மறந்து விடுகிறோம். தொழிற்சாலைகள் நிறைந்த இடங்களில் வாழும் மக்களின் துயரங்களோ கணக்கிலடங்காதது. நிலத்தடி நீர் முற்றிலும் நிறம் மாறி விவசாயம் செய்யவோ வீட்டு உபயோகத்திற்கோ முற்றிலும் தகுதியற்றதாக மாறிவிடுகிறது. இதனால் மலட்டுத்தன்மை, தோல் வியாதிகள் போன்ற பல்வேறு நோய்கள் ஏற்படும்.
வயிற்றுப் பாட்டுக்காக வாழ்வையே பறிகொடுத்த பரிதாபக் கதைகள் ஏராளம் உண்டு.
மனிதர்களின் புதுப்புது கண்டுபிடிப்புகள், அறிவியல் வளர்ச்சி போன்றவை குப்பைகள் உருவாகக் காரணமாக இருக்கிறது. என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? உதாரணமாக
நாம் பயன்படுத்தும் செல்போனையே எடுத்துக் கொள்வோம். நாளொரு மாடல் நொடிக்கொரு அப்டேட் என மாறிக் கொண்டே இருக்கிறது. வாங்கிய சில மாதங்களிலேயே பழைய மாடலாகி விடுகிறது. இரண்டு அல்லது மூன்று வருடங்கள் மட்டுமே பயன்படுத்தும் விதமாகவே பல பொருள்களும் தயாரிக்கப்படுகிறது. ஒன்றையே பத்து வருடங்கள் பயன்படுத்தினால் எப்படி வியாபாரம் பெருகும்? உற்பத்தி செய்த பொருள்களை என்ன செய்வது? இதே போல தான் நாம் பயன்படுத்தும் கார், பைக், வீட்டில் பயன்படுத்தும் மிக்ஸி , கிரைண்டர் ,டிவி என அனைத்து பொருள்களின் ஆயுட் காலமும் குறைக்கப்பட்டு விட்டது.
நாம் வாங்கி வாங்கிக் குவிக்கும் பொருள்களை எப்படி அப்புறப்படுத்துவது? சிலவற்றை எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் மூலம் மாற்றலாம். மாற்றவும் செய்கிறோம். இருப்பினும் ஒவ்வொரு வீட்டிலும் எவ்வளவு குப்பைகளை பரணிலும் , அங்கும் இங்கும் என சேர்த்து வைத்து இருக்கிறோம். இதோ இதை எழுதும் போது என் அறையை நோட்டமிட்டேன். உபயோகத்தில் இல்லாத உபயோகிக்க இயலாத இரண்டு செல்போன்கள், ஓடாத கடிகாரம், பேட்டரி தீர்ந்த சேதமடைந்த பொம்மைகள் . பாதி மை தீர்ந்தும் தீராத பேனாக்கள் …இந்த ஒரு அறையிலேயே இவ்வளவு என்றால் வீடு முழுவதும் …? ஒரு வீட்டிலேயே இவ்வளவு எனில்.. எத்தனை வீடுகள்,கிராமங்கள், நகரங்கள்…? நினைத்துப் பார்க்கவே மலைப்பாக இருக்கிறது தானே? அடுத்து நீர் நிலைகள் பற்றிப் பார்ப்போம்.
அன்று ஆறுகளில் தெளிந்த நீர் ஓடிக்கொண்டிருந்தது. அப்படியே கைகளில் அள்ளிக் குடிக்கலாம். குடித்திருக்கிறோம்.
இன்று ? நீர்வழித் தடங்கள் அனைத்தும் சாக்கடையாகவும் குப்பைகள் நிறைந்த இடமாகவும் மாறிவிட்டது. மனித நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதிகளில் ஓடும் வரை மட்டுமே அது ஆறாக இருக்கிறது.. மனித நடமாட்டமும் தொழிற்சாலைகள் நிறைந்த இடங்களுக்கும் வரும் போது அது சாக்கடையாகி விடுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில்,புயல்,வெள்ளத்தில் சென்னை மக்கள் பட்ட பாடும், இழந்த உயிர்களும் கொஞ்ச நஞ்சமா? ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளையும் ஆக்கிரமித்து குடியிருப்பாக மாற்றுயதும்,நீர் வழிகளை அடைத்ததும் , சாக்கடைகளை குப்பைகளால் நிறைத்ததுமே காரணம் என்று அறிந்தாலும் அதை மாற்ற முயற்சித்தோமா? கடந்த ஆண்டுகளில் தூத்துக்குடி, திருநெல்வேலி என தென் மாவட்டங்களிலும் இதுவரை இல்லாத அளவுக்கு வெள்ளச் சேதம் ஏற்பட்டது.
கோவில் திருக்குளங்களின் நிலை இன்னும் மோசம். பரிகாரம் என்ற பெயரில் குளத்தில் உள்ள நீரை அவ்வளவு அசுத்தப்படுத்தி வைத்திருக்கிறோம். சமீபத்தில் இராமேஸ்வரம் சென்று வந்தோம். கடலில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தண்ணீரே தெரியவில்லை. எங்கு பார்த்தாலும் பழந்துணிகள் மிதந்து கொண்டு இருந்தன. கடற்கரையில் அம்பாரமாய் துணிகள்… எந்த திசையில் திரும்பிப் பார்த்தாலும் துணிகளும் மனிதத் தலைகளும் தான்.கடலில் கால் வைக்கவே கூசுமளவுக்கு இருந்தது. கடலில் மூழ்க மனம் ஒப்பவே இல்லை. எனக்கு புண்ணியமே வேண்டாம் சாமி என்று ஓடிவந்து விட்டேன்.
கழிவு மேலாண்மை பற்றிய காணொளி ஒன்று பார்த்தேன். இரண்டு வருடங்களுக்கு முன்பு மத்திய அரசு உள்ளாட்சி அமைப்புகளுக்கு திடக்கழிவு மேலாண்மை விதிகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க உத்தரவு போடப்பட்ட நிலையில் நிறைய உள்ளாட்சி அமைப்புகள் அதை செயல்படுத்த முடியாமல் கைவிட்டு விட்டார்கள்.போதிய ஊழியர்கள் இல்லாதது மிக முக்கியமான காரணம் என்று சொல்கிறார்கள். மக்கும் குப்பை,மக்காக் குப்பை என பிரிப்பது சாதாரண வேலையல்ல.வீடுகளிலும் குப்பையை வீட்டில் இருந்து வெளியேற்றினால் போதும் என்று அப்படியே தூக்கிப் போட்டு விடுவார்கள். மெனக்கெட்டு பிரித்துப் போடுவது வீண் வேலை என்ற மனோபாவம். இத்தனை சிரமங்கள் இருந்தாலும் நாரவாரிக்குப்பம் பேரூராட்சி மட்டும் மிக வெற்றிகரமாக இத்திட்டத்தை செயல்படுத்திக் கொண்டு இருப்பதோடு இதன் மூலம் இலாபமும் ஈட்டுகிறார்களாம்.இவர்கள் தனியார் அமைப்பு ஒன்றுடன் இணைந்து மக்கும் குப்பைகளில் இருந்து இயற்கை உரம், மண்புழு உரம் தயாரித்து விற்பனை செய்கிறார்கள். சிட்ரிக் அமிலம் உள்ள பழக்கழிவுகளிலிருந்து டாய்லெட் கிளீனரும்,பித்தளைப் பாத்திரங்களைத் தேய்க்க பவுடரும் தயாரித்து விற்பனை செய்கிறார்கள்.
பெரிய டயர்கள், தண்ணீர் பாட்டில்கள்,ஷூக்கள் போன்றவற்றில் செடிகள் வளர்க்கிறார்கள். அந்தக் காணொளியைப் பார்க்கப் பார்க்க அத்தனை ஆச்சரியமாக மகிழ்ச்சியாக இருந்தது. ஏன் இந்தத் திட்டங்களை தீவிரமாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரியவில்லை. தேவையான பணியாளர்களை நியமித்து முறையாக செயல்படுத்தினால் குப்பை இல்லாத் தமிழகம், குப்பை இல்லா இந்தியா சாத்தியம் தான்.
கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இதற்கெல்லாம் பள்ளி, கல்லூரி அளவில் கட்டுரை ,பேச்சு,ஓவியப் போட்டிகள் நடத்தப்படுகிறது . இதனால் வருங்கால சமுதாயம் ஓரளவுக்கு மாறலாம். சாலையோரக் கடைகள்,சந்தைகள் ,மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தான் குப்பைகள் அதிகம் சேரும். அதை முறையாக அகற்ற பயிற்சி அளித்து கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
முன்பு எல்லாம் தேவைக்காக மட்டுமே பொருட்கள் வாங்கினோம்.இன்றோ விளம்பரங்களைப் பார்த்து தேவையோ இல்லையோ பொருட்களை வாங்கி வீடு முழுவதும் அடைத்து வைத்திருக்கிறோம். சில பொருட்கள் பயன்படுத்தாமலே காலாவதியாகி இடத்தை அடைத்துக் கொண்டு இருக்கும். RRR- Reduce ,Reuse,Recycle ஐ அனைவரும் பின்பற்ற வேண்டும். நெகிழிப் பொருட்களின் பயன்பாட்டைக் குறைத்தல், மீண்டும் பயன்படுத்த முடிகின்ற பொருட்களைப் பயன்படுத்துதல், உபயோகித்தப் பொருட்களை மறுசுழற்சிக்கு உட்படுத்துதல் போன்றவற்றைக் கடைபிடிக்கலாம்.
நம்மால் நிச்சயமாக பழைய காலத்தில் வாழ்ந்ததைப் போல வாழமுடியாது. அறிவியல் கண்டுபிடிப்புகள் நம் வாழ்வை வளமாகவும் ,சுகமாகவும் மாற்றி இருப்பதை நாம் மறுக்க முடியாது. அவைகள் இன்றி நம்மால் வாழவும் முடியாது. அதே நேரத்தில் உபயோகித்தப் பொருட்கள் அனைத்தையும் தெருவில் வீசி குப்பையாக்காமல் முறையாக அப்புறப்படுத்த வேண்டும்.
பள்ளிகளில் நீதிபோதனை வகுப்புகள் போலவே சுத்தம், சுகாதாரம்,கழிவு மேலாண்மை போன்றவற்றிற்கும் ஒரு பாடவேளை ஒதுக்கி அதற்கும் தேர்வு வைக்க வேண்டும். ஒரே நாளில் இல்லை என்றாலும் மெதுவாகவேனும் நிச்சயமாக மாற்றம் வரும்.





