பீஸ் ரேட், சைபர் கூலி, டிரிப் ரேட், சப்ளை ரேட் என பலவகை கூலி முறைகள் உருவாகி வரும் காலத்தில், தொழிற்சங்க இயக்கத்தின் வரலாறை பேசுவது மிகத் தேவையான ஒன்று. பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சியும் அமைப்புசாராத தொழிலாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வரும் நிலையில், கூடுதல் முக்கியத்துவம் தொழிற்சங்க வரலாற்றிற்கு உள்ளது. தினக்கூலி மற்றும் குறிப்பிட்ட வேலைக்கான கூலியை பீஸ் ரேட் என்கின்றனர். போக்குவரத்து துறையில் ஒரு டிரிப்பிற்கான கூலி டிரிப் கூலி என அழைக்கப் படுகிறது. கணினி சார்ந்த நிபுணர்கள் எந்த ஒரு சட்ட பாதுகாப்பும் இல்லாதவர்களை, சைபர் கூலி என்கின்றனர். அப்ளை ரேட் என்பது உணவு விநியோகத் தொழிலாளர்கள் பெறுவது. இப்படியான சூழ்நிலையில் வரலாறையும் அனுபவத்தையும் உள்வாங்கி கொள்ள வேண்டியுள்ளது.
பிரிட்டிஷ் இந்தியாவிலேயே, பிரிட்டிஷாரை எதிர்த்த போராட்டத்தில், தொழிலாளர்களின் வேலை தன்மை மற்றும் உரிமை ஆகியவை பேசப்பட்டது. அதற்கு போராட்டங்கள் உதவியது, என சொல்கிறது வரலாறு. இந்திய மண்ணில் 1862லேயே ரயில்வே தொழிலாளர்கள் 8 மணி நேரம் வேலை நேரமாக தீர்மானிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்காக போராடியுள்ளனர். உலகம் முழுவதும் தொழிலாளர்கள் போராட்டங்கள் மூலமாகவே தங்கள் வாழ்க்கை நிலையிலும், வேலை செய்யும் தளத்திலும் முன்னேற்றம் காண்பவர்களாக உள்ளனர். போராட்டம் தனித்த தொழிலாளியின் போராட்டமாக இல்லை. கூட்டான போராட்டமாகவே இருந்துள்ளது. ரஷ்யப் புரட்சிக்கு தலைமை தாங்கிய லெனின், தொழிலாளர் தனிப்பட்ட முறையில் கோரிக்கை வைக்கும் வாய்ப்பு இல்லாத காரணத்தால் தான் தொழிற்சங்கம் என்ற தேவை உருவாகிறது. தொழிற்சங்கம் கூட்டாக சுரண்டலை எதிர்க்க முடிகிறது. தனக்கான உரிமைகளை பெற கூட்டான போராட்டம் மூலமாகவும், தொழிற்சங்கம் மூலமாகவும் தான் பெற முடிந்தது, என்கிறார்.
இந்திய தொழிற்சங்க மையம் உருவாக்கம்:
இந்தியாவைப் பொறுத்தளவில், அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (AITUC) 1920ல் உருவான முதல் தொழிற்சங்கம். நாடு விடுதலை அடைந்த பின்னணியில் 1948ல் ஐ.என்.டி.யு.சி உருவானது. 1957ல் பி.எம்.எஸ் உருவானது. பின்னர் எச்.எம்.எஸ் உள்ளிட்ட சங்கங்கள் உருவானாலும், 1970 மே 30ல் சி.ஐ.டி.யு உதயமானது. தொழிலாளர்களின் கூட்டு பேரம் மற்றும் ஒன்று போராட்டம் வலுப்பெற வேண்டும், என பேசும் சூழ்நிலையில், விடுதலைக்கு பின் ஏன் தொழிற்சங்கங்கள் தங்களுக்குள் பிரிந்து கொண்டன? என்ற கேள்வி முக்கியமானது.
ஆளும் வர்க்கத்தின் ஆதிக்கம், தொழிற்சங்கத்தில் ஜனநாயகமற்ற செயல்பாடு, ஆகியவை கேள்விக்கு உள்ளாகும் போது, முதலாளி வர்க்கத்தை எதிர்த்த தொழிற்சங்கத்திற்குள் எது சரியான பாதை? என்பதும் கேள்விக்குள்ளாவது தவிர்க்க முடியாத ஒன்றாகும். இந்தியாவைப் பொறுத்தளவில் நேரு, சுபாஸ் சந்திர போஸ் ஆகியோர் துவங்கி, டாங்கே, எம். கல்யாண சுந்தரம், பி.ராமமூர்த்தி, பி.டி. ரணதிவேபோன்ற தலைவர்கள் தலைமை ஏற்று வழி நடத்தி உள்ளனர். நேரு பிரதமர் பொறுப்பேற்ற பின், சோசலிசம் குறித்து பேசியதும், அது ஏற்படுத்திய தாக்கமும், பின்னர் அது செயல்படாமல் போனதும், கூட தொழிற்சங்கங்களுக்குள் பிளவை உருவாக்க காரணமானது.
தமிழ்நாட்டில் சி.ஐ.டி.யு:
தமிழ்நாட்டை பொறுத்தளவில் தொழிற்சங்கத்திற்கான துவக்க புள்ளியாக பஞ்சாலை தான் இருந்தது. சென்னை பி.அண்ட் சி, பின்னி, கோவை ஸ்டேன்ஸ், மதுரை, வி.கே.புரம் மெஜூரா கோட்ஸ், ஹார்வி போன்ற பஞ்சாலைகள் தான் தொழிலாளர்கள் குவியலாக இருந்தனர். அவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை எதிர்த்தும் போராடினர். பின்னர் ரயில்வே, ஐ.சி.எப், துறைமுகம், ஆவடி டாங்க், திருச்சி துப்பாக்கி, குன்னூர் வெடிமருந்து தொழிற்சாலை, நெய்வேலி, மேட்டூர், தூத்துக்குடி மின் உற்பத்தி நிலையங்கள்திருச்சி பி.எச்.இ.எல், சேலம் ஸ்டீல், சென்னை சிம்சன், சென்னை மற்றும் ஓசூர் அசோக் லே லேண்ட், ஸ்டாண்டர்டு மோட்டார், எம்.ஆர்.எப், டி.வி.எஸ் மற்றும் ஓட்டல் தொழிலாளர்கள், நெல்லிக்குப்பம், திருச்சி மாவட்டங்களில் சர்க்கரை மற்றும் சிமெண்ட் ஆலைகள், திண்டுக்கல் மாவட்டத்தில் தோல் பதனிடும் தொழிலாளர்கள், என பொதுத்துறை மற்றும் தனியார் துறை விரிவாக்கமும் அதைத் தொடர்ந்து, மின்சார வாரியம், போக்குவரத்து, குடிநீர், சுகாதாரப் பணி, என அரசின் சேவைத் துறைகளிலும், தொழிலாளர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் இடையிலான முரண்பாடுகள் அதிகரித்த போது, தொழிற்சங்கம் வலுவாக மாறியது. போராட்டங்களும் வேலை நிறுத்தங்களும் பெரும் பங்காற்றின. இதில் 1970 சி.ஐ.டி.யு துவக்கப் பட்ட காலத்தில் இருந்தே வலுவான போராட்டங்கள் நடந்துள்ளது. தொழிலாளர்கள் முன்னேற்றங்களையும் சந்தித்துள்ளனர். தொழிற்சங்கத் தலைவர்கள் சந்தித்த, சிறைத் தண்டனையும், தாக்குதல்களும், பழி வாங்கல்களும், தொழிற்சங்க இயக்கத்திற்கு உரமாக அமைந்தது.
மற்றொருபுறம் பாரம்பரியத் தொழில்களாக இருந்த கைத்தறி, விசைத் தறி, பீடி சுருட்டுதல், தோட்டத் தொழில் ஆகியவற்றிலும் தொழிலாளர்கள் மீதான சுரண்டலை எதிர்த்து வலுவான போராட்டங்கள் நடந்தது அரசும் தனிச் சட்டங்கள் இயற்றுவது போன்ற சில நடவடிக்கைகளையும் எடுத்தது. அதேபோல் திருப்பூர், கோவை உள்ளிட்ட நகரங்களில் டெக்ஸ்டூல் மற்றும் பனியன் தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள், தாங்கள் சந்தித்த பிரச்சனைகளுக்கு எதிராக அணி திரண்டனர். அதில் தொழிற்சங்கம் முக்கிய பங்கு வகித்தது. ஆண்கள், பெண்கள் என பாரபட்சம் இல்லாமல் தொழிலாளர்க்ள் அணி திரளும் நிலை உருவானது. அந்தளவிற்கு, ஜனநாயகமற்ற சமூகத்தில், தொழிற்சங்க அமைப்பை கட்ட வேண்டி இருந்தது. ஒரு சமூகத்தில் தொழிலாளிக்குரிய கூலியை, தொழிற்சங்கம் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்மானிக்க முடிந்தால், அங்கு ஜனநாயகம் ஓரளவுக்கு உருவாகி இருக்கிறது என்பதை காணமுடியும். இதற்கு அனுமதி மறுக்கப் பட்டதன் விளைவே தொழிலாளர்களும், தொழிற்சங்க ஊழியர்களும் கைது செய்யப்படுவது, தாக்குதலுக்கு உள்ளாவது, நடைபெற்றது. காவல்துறையை பயன் படுத்தியது போதாது என, அடியாள்களும், முதலாளிகளால் பயன் படுத்தப் பட்டனர்.
நீதிமன்றங்கள் மற்றும் தொழிலாளர் துறை அதிகாரிகளும் கூட, அவ்வளவு எளிதில் இன்று நாம் காணும் தன்மையில் மாறவில்லை. சி.ஐ.டி.யுவின் தலைவராக இருந்த டாக்டர். எம்.கே பாந்தே “ ஒருமுறை தமிழ்நாட்டில் இருந்து 130 வழக்கறிஞர்கள் வந்திருந்தனர். அவர்கள் ஒரு நீதிபதி குறித்த புகாரை தெரிவித்தனர். ஓர் ஆண்டில் ஒரு தீர்ப்பு கூட தொழிலாளர்களுக்கு சாதகமாக வழங்கவில்லை, என்று அந்த புகாரில் இருந்தது”, எனக் கூறினார்.அதேபோல் சி.ஐ.டி.யு தலைவராக இருந்த தோழர். வி.பி.சிந்தன் அவர்கள் பற்றிய வரலாற்று புத்தகத்தில், சென்னை, சிம்சன், டி.வி.எஸ் லூகாஸ், போன்ற போராட்டங்களில் சமூக விராதிகள் கும்பலை முதலாளிகளுடன் சேர்ந்து ஆளும் வர்க்கமும் இணைந்து ஏவி விட்டது. சிந்தன், கத்தியால் குத்தப்பட்டு, ரத்த வெள்ளத்தில் இறந்து விட்டார், என்று தான் விட்டு சென்றனர். அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இருவரும் உரிய நேரத்தில் அரசு மருத்துவமனையில் சேர்த்ததால் பாதுகாக்கப் பட்டார்.
நமது முன்னோர்கள். அவர்கள் ஒவ்வொரு உரிமைகளுக்காகவும் போராடும் காலத்தில் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி, அறிவியல் மற்றும் பல்வேறு தகவல் தொழில் நுட்ப முன்னேற்றங்களைப் பெற்று இருக்கவில்லை. பள்ளி கல்வியைக் கூட முழுமையாக படிக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களே அதிகம். தோழர்கள் ஏ. பாலசுப்பிரமணியம், என். சங்கரய்யா, ஆர். உமாநாத், மைதிலி சிவராமன், டபுள்யு. ஆர். வரதராஜன் போன்றோர் தங்களின் உயர் கல்வியை முடித்து தொழிற்சங்க பணிகளில் ஈடுபட்டனர். மற்றொருபுறம், தோழர்கள் ஏ. நல்லசிவன், வி.பி.சிந்தன், கே.ரமணி, சி.கோவிந்தராஜன், கே.எம். ஹரிபட், எஸ்.ஏ. தங்கராஜன், எம். நஞ்சப்பன் உள்ளிட்ட எண்ணற்ற சி.ஐ.டி.யு தலைவர்கள் அத்தகைய வாய்ப்பு கிடைக்காதவர்கள் ஆவர். போராட்டங்கள் அவர்களை செழுமைப் படுத்தியது. அதிகார வர்க்கத்தின், ஆளும் வர்க்கத்தின் சிந்தனைகளை அறிந்து எதிர்வினையாற்றும் பக்குவத்தை பெற்றது, போராட்ட களத்தில் தான்.
மின்வாரியத்தில் 18000க்கும் மேற்பட்ட காண்ட் ராக்ட் தொழிலாளர்கள் நிரந்தரம் செய்யப் படவும், காலித் கமிசன் என்ற கமிட்டியை பயன்படுத்தியதிலும் சி.ஐ.டி.யு வின் பங்கு மகத்தானது. சிம்கோ மீட்டர் தொழிலாளர்களின் நெடிய போராட்டம் திருச்சியில் ஏற்படுத்திய தாக்கம் கணக்கிட முடியாத ஒன்று. இன்றைக்கும் பல வழிகாட்டுதல்களுக்கு சொந்தக்காரரான சி.ஐ.டி.யு தலைவரான டி.கே. ரங்கராஜன் அவர்களின் பங்களிப்பு, இது போன்ற போராட்டங்களில் இருந்துள்ளது.மொத்த இயக்கம் கூட்டாக ஆற்றிய பங்களிப்பில், தனிநபர்களின் பங்கு பெருமளவில் குறிப்பிட வேண்டியதாகும். இந்த பங்களிப்பு அரசியல் மற்றும் சித்தாந்த புரிதல் மற்றும் கொள்கை பற்று மூலமே சாத்தியமாகிறது. அது சமத்துவம், பொதுவுடமை எனும் இலட்சியம் சார்ந்து நிற்கிறது. தொழிற் சங்க உரிமைகளோ, அணி திரள்வதோ எளிதில் கிடைத்ததல்ல, என்பதை இதன் மூலம் அறிய முடியும்.இன்றைய பாலிடெக்னிக், பொறியியல் மற்றும் பல்வேறு உயர் கல்வி பெற்ற தொழிலாளர்கள் தான் இந்த வரலாறை தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. வரலாற்றை அன்றைய சமூக, அரசியல், பொருளாதார சூழல்களை இணைத்து படைத்துள்ளனர், மேற்படி வரலாற்று விவரங்களையும் கற்றுக் கொள்வதன் மூலமே சமூகம் தொடர்ந்து முன்னோக்கி பயனிக்க முடியும்.
பன்னாட்டு ஆலைகள் வருகை:
உலகமயமாக்கல் கொள்கை, இந்தியா போன்ற வளரும் நாடுகளின் வேலையின்மையை பயன்படுத்தி கொள்கிறது. மூலதனத்தின் வேட்டைக்கான கதவுகளை திறந்து வைப்பது, தாராளமய கொள்கை என அழைக்கப்படுகிறது. நமது ஆட்சியாளர்கள் அந்நிய முதலீடு இல்லையென்றால், நமக்கு வேலை எப்படி கிடைக்கும், நாம் எப்படி உலக நாடுகளுடன் போட்டியிட முடியும் என்ற கேள்வியில், படித்த இளைஞர்களை வாய் மூட வைக்கின்றனர். இவை அனைத்தும் அற்ப பங்களிப்புகள் மட்டுமே செய்துள்ளது. நமது தொழிலாளர்கள் மீது கட்டவிழ்த்த உழைப்பு சுரண்டல் தான் பெரு மூலதனமாக மாறியுள்ளது.
இந்தியாவின் டெட்ராய்ட் சென்னை மற்றும் புறநகர் என்பதில் நாம் கொள்ளும் பெருமிதத்திற்கு அளவில்லை. உண்மையில் அவர்களிடம் மூலதனமும், நம்மிடம் உழைப்பு, இயற்கைவளம் ஆகியவற்றுடன் புதிய சந்தை உருவாக்கமும் இருக்கிறது. இதை கண்கூடாக, கார், இருசக்கர வாகனம், கைபேசி உற்பத்தி, சலவை இயந்திரம், தொலைக்காட்சி பெட்டி தயாரிப்பு, பிரிஜ் உள்ளிட்ட ஏராளமான நுகர் பொருள்கள் உற்பத்தியில் காண முடியும். அவை உற்பத்தியில் பெருகி இருப்பதும், ஏற்றுமதி ஆவதும், மிக குறைந்த உற்பத்தி செலவில் என்பதை கவனிக்க வேண்டும்.
இதற்கு ஆட்சியாளர்கள் அளித்த வெகுமதிகளில் தொழிலாளர் உரிமைகளும் அடங்கி உள்ளது. நிரந்தர தொழிலாளர்கள் மேற்படி பன்னாட்டு ஆலைகளில் சொற்பமாகவும், காண்ட்ராக்ட், பயிற்சி, உள்ளிட்ட பல்வேறு புதிய நாமகரண காரர்களும் நிறைந்த தொழிற்சாலைகளாக மேற்படி தொழிற்சாலை உள்ளது. ஃபோர்டு, நோக்கியா, பாக்ஸ்கான், பி.ஒய்.டி ஆகிய ஆலைகள் சில குறிப்பிட்ட ஆண்டுகளிலேயே அதிக லாபத்தை குவித்து ஒரு கட்டத்தில் நட்டம் என கூறி வெளியேறி இருப்பதை காண முடியும். இந்த ஆலை மூடல்களால் பல்லாயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். வேடந்தாங்கலுக்கு வந்து மீன்களையும், ஏரி உயிரினங்களையும்உண்டு சிலமாதம் வாழ்ந்து பின் இடம் பெயரும் பறவைகள் போல், அந்நிய மூலதனம் குறிப்பிட்ட ஆண்டுகளில் பெயரையும், ஊரையும் மாற்றிக்கொள்ளும் வாய்ப்பு, இந்த பன்னாட்டு ஆலைகளுக்கு தரப் பட்டிருக்கிறது. தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் பலவும் வருவதும் போவது தெரியாமல் உள்ளன. காரணம் தொழிற்சங்கம் இல்லாமை என்பதாகும்.
நோக்கியா, ஃபோர்டு, பாக்ஸ்கான் ஆலைகளில் தொழிற்சங்கம் உருவானது. சி.ஐ.டியு தலைவர்கள் அ. சவுந்தரராஜன், கே. பழனிவேல், இ.பொன்முடி, இ. முத்துக்குமார் ஆகியோர் உள்பட பலர் தலைமையேற்று நடத்திய போராட்டங்கள் அதிகம். அதன் விளைவுதான் ஊதிய உயர்வு, உரிமைகள் ஆகியவை கிடைத்தது. ஆலை மூடப்படும் போது குறைந்த பட்ச நிவாரணம் நிரந்தர ஊழியர்களுக்கு கிடைத்தது. காண்ட்ராக்ட் போன்ற ஊழியர்களுக்கான நிவாரணத்தை சி.ஐ.டி.யு ஃபைசர், ஆர்கிட் போன்ற அமெரிக்க மருந்து உற்பத்தி நிறுவனங்களில் போராடி பெற முடிந்தது.தொழிற்சங்கம் தான் பாதுகாப்பு கவசம் ஆகும்.
கடந்த நூற்றாண்டின் துவக்கத்தில், இருந்ததைப் போல், கொடியேற்றுவது, வெளியில் இருந்து வழி காட்டும் தொழிற்சங்க தலைவர் ஆகியவை கூடாது என்பதே தற்போது நிறுவனங்களின் கோரிக்கையாக உள்ளது. இதற்கு அரசுகளும் உடன்படுவது, ஆபத்தானது. இப்பொது தொடுக்கப்படும் தாக்குதல்கள் விசாரணையின்றி டிஸ்மிஸ் அல்லது விசாரணை என்பதே டிஸ்மிஸ் செய்யப்படும் நோக்கத்துடன் நடக்கிறது. குற்றம்சுமத்தப் பட்டவர் நான் குற்றவாளி அல்ல என்பதை நிரூபிக்க வேண்டும். குற்றம் சுமத்தியவர் நிரூபிப்பது இல்லை. இந்த விசித்திரங்கள் பன்னாட்டு கார்ப்பரேட் ஆலைகளில் அரங்கேறுகிறது. எனவே தொழிற்சங்க ஜனநாயகத்திற்கான போராட்டம். கூட்டுபேர உரிமைக்கான போராட்டம், நவீன ஆலைகளில் நீடித்த ஒன்றாக இருக்கிறது. இது சுட்டுவது, ஆலைகள் மட்டுமே நவீனம், சமூக சுரண்டல் பழையது. இந்த உண்மையை உரக்க சொல்வது தான் சி.ஐ.டி.யு செய்யும் செயல். ஒன்றிணைவதும், போராடுவதுமே முன்னேற்றத்திற்கான உரம் ஆகும்.