நவீனத்தில் உலகம் அண்டங்களை கடந்துவிட்டது. செவ்வாயில் நீராதாரம் தேடுகிறது நாசா. இங்கு பூமியின் இயற்கையை சுரண்டியது போக வேற்றுக் கிரகங்களையும் சுரண்ட தயாராகிவிட்டோம். ஆனால் இயற்கையாக நிகழும் எதையுமே மனிதனோ அவனது அறிவியலோ தடுக்கவோ மாற்றவோ முற்றிலும் இயலாது. வேண்டுமென்றால் அதன் தீவிரத்தை அறிந்துக் கட்டுப்படுத்த முடியும். இன்றைய நவீன மருத்துவத்தின் மூலம் உயிர்களைக் காக்கலாம். ஆனால் இறப்பைத் தடுத்துவிட யாராலும் எதனாலும் முடியாது. இயற்கை மறைபொருள் ஒன்றை பத்திரமாக ஒருகையில் வைத்துக்கொண்டு மறுகையைத்தான் மனிதர்களுக்குக் காட்டுகிறது. பெண் எனப்படும் உயிரும் இயற்கையின் மறைபொருள் தான்.
உலகின் முதல் பெண் பூப்பெய்தியதால்தான் உலகம் மனிதர்களால் செழித்தது. அவள் கருவுற்றிராமல் இருந்திருந்தால் அவளின் சந்ததிகளாகிய நாம் இல்லை. ஏன்? மனித குலமே இல்லை. இன்று விலங்குகளே இந்த பூமியை நிம்மதியாக ஒருவேளை ஆண்டிருக்கலாம். பெண்களுக்கு உடலில் ஏற்படும் இயற்கை நிகழ்வுதான் இந்த மாதவிடாய். மாத விலக்கு என்று சொல்வது சரியில்லை. விலக்கி வைத்திருப்பது நாம்தான். இயற்கை அல்ல.
மாதவிடாய் ஏன் ஏற்படுகிறது என்ற அறிவியல் விளக்கங்கள் அனைத்து வயதுப் பெண்களுக்கும் முக்கியமாக ஆண்களுக்கும் தெரிய வேண்டிய ஒன்று. பருவமடைந்த ஒரு பெண்ணிற்கு ஒவ்வொரு மாதமும் (28 நாட்கள்) சினைப்பையிலிருந்து ஒரு கருமுட்டை முதிர்ச்சியடைந்து, சினைக்குழாய்க்கு வரும். இரண்டு சினைப்பைகள் இருந்தாலும் ஒரு மாதம் ஒரு சினைப்பையில் இருந்து ஒரு கருமுட்டை மட்டுமே வெளிவரும், அடுத்த மாதம் மற்றொரு சினைப்பையில் இருந்து ஒரு கருமுட்டை வெளிவரும். கருப்பையில் இருந்து வெளியேறும் இந்த கருமுட்டையானது ஆணுடைய விந்துவுடன் இணைந்தால் கருப்பையில் தங்கி குழந்தையை உருவாக்கும். கருவின் வளர்ச்சிக்காகக் கருப்பையின் உட்புறத்தில் ரத்த நாளங்களான மெல்லிய உள்ளுறை ஒன்றும் ஒவ்வொரு மாதமும் உருவாகும். கருமுட்டை கருவுறாதபோது, அத்துடன் சேர்ந்து கருப்பையில் இருக்கும் இந்த ரத்த நாளங்களான உள்ளுறையும் சிதைந்து கருப்பை வாய் வழியே வெளியாகிவிடும். இந்த உதிரப்போக்கையே மாதவிலக்கு என்கிறோம்.
என்னதான் அறிவியல் காரணிகளை எடுத்துரைத்தாலும் நம் ஊர் மூத்த பெண்களின் மனம் அதை வெறும் உடலியலாக மட்டுமே பார்க்க முடிவதில்லை. அவர்களைப் பொறுத்தவரை அது பெண்கள் மட்டுமே அறிந்த ஆண்கள் அறியக்கூடாத ஒரு ரகசியம். அது தீட்டு சமாச்சாரம். அந்த நேரங்களில் கடவுளை நெருங்கக்கூடாது. கோவிலுக்குச் செல்லக்கூடாது. கிணற்றடிக்கு போகக்கூடாது. ஊறுகாய் தொடக்கூடாது. புனித காரியங்களில் தலையிடக்கூடாது. மெத்தையில் படுத்துறங்கக்கூடாது. இன்னும் ஊருக்கு ஊர் கட்டுபாடுகள் மாறுபடும். ஆனால், அடிப்படையில் மாதவிடாய் என்றாலே அது அருவருப்பான ஒதுக்கி வைத்து பார்க்கும் விஷயம் தான் அவர்கள் பொறுத்தவரை.
நீங்கள் சொல்லலாம். “இப்போதெல்லாம் யாரும் அப்படி பார்ப்பதில்லை, இந்த காலங்களில் பெண்கள் எல்லா செயல்களிலும் ஈடுபடுகிறார்கள். கடைகளில் நாப்கின்களை பிறர் கண்படவே எடுத்துச்செல்கிறார்கள்” என்று. இருக்கலாம். ஆனால் கிராம புறங்களில் இந்நிலை இருபது வருடங்களுக்கு பின்தங்கி தான் இருக்கிறது. எனக்கு தெரிந்த கிராமத்து பெண்மணிகள் சிலர் வீட்டருகே வேலை பார்க்கிறார்கள். அவர்கள் தங்கள் மாதவிடாய் காலங்களில் வீட்டிற்கு வெளியே தான் இருக்க வேண்டுமாம். வீட்டில் யாரும் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர்கள் அங்குதான் தங்க வேண்டுமாம். அந்த நாட்களில் உணவு, உடை என்று சகலத்திற்கும் பிறரை நாடியே இருக்க வேண்டும். பெண் பிள்ளைகள் இல்லாத வீடுகளில் ஆண்களே இந்த நாட்களில் சமைக்கிறார்கள். இது ஒருவகையில் பெண்களுக்கான ஓய்வு நாட்கள் என்று வைத்துக்கொண்டாலும் கடும் மழையிலும், சுடும் வெயிலிலும் வாசலில் பிறர் காண அமர்ந்திருப்பதில் அவர்களுக்கு என்ன நிம்மதி கிடைத்துவிடும்? ” ஏன் நீங்கள் இன்னும் இப்படியே இருக்கிறீர்கள்? யார் உங்களை பார்க்கப் போகிறார்கள் ? நீங்கள் பாட்டுக்கு வீட்டிற்குள் சென்று படுத்துக்கொள்ள வேண்டியதுதானே?” என்று கேட்டால் “அய்யோ.. ஊர் கட்டுபாடு அது. அதை மீறினோம் என்று தெரிந்தால் ஊரை விட்டு விலக்கி விடுவார்கள்” என்றார். எனக்கு அதிர்ச்சித்தான் அது. போயும் போயும் பெண்களின் உடல் மாற்றங்களுக்காகவா ஊரை விட்டு விலக்குவார்கள்? இது இங்கு என்று இல்லை. கலாச்சாரம் என்ற பெயரில் பெண்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் உலகெங்கும் தாராளமாக பரந்து கிடக்கிறது.
முன்பெல்லாம் இந்த மாதவிடாய் காலங்கள் பெண்களுக்கு பெருந்தொல்லையான நாட்கள் ஆக இருந்திருக்கும். இப்போது இருப்பது போல சானிட்டரி நாப்கின்களுக்கு அவர்கள் அறிமுகமற்றவர்களாக இருப்பார்கள். தூமத்துணி எனும் பழைய கிழிந்த துணிகளை பயன்படுத்துவர். அதை துவைத்து மறைவிடத்தில் காயவைக்க வேண்டும். ஆண்கள் கண்களில் படக்கூடாது என்று சொல்வார்கள். இன்னும் கொடுமையாக சில பகுதிகளில் பெண்கள் ரத்தப்போக்கை மறைக்க அடுப்பு சாம்பல் அள்ளி பூசிக்கொள்வார்களாம். அன்றைய பெண்கள் மிக இளம் வயதிலேயே நோய் கண்டு இறந்து போனதற்கு இதுவும் ஒரு காரணம்.
உலகின் சில பகுதிகளில் மாதவிடாய் புனிதமாக பார்க்கப்படுகிறது. ஆனால் நம் இந்தியாவில் அதை அழுக்காகவும், தீட்டாகவும் பார்க்கிறார்கள். பண்டைய தமிழரின் ஒவ்வொரு செயலுக்கும் பின்புல அர்த்தம் இருந்திருக்கும் என்பதில் ஐயமேதுமில்லை. பெண்கள் மாதவிடாய் காலங்களில் முழு ஓய்வாக இருக்க வேண்டும் என்ற காரணத்தினால் அவர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்கு உபகாரம் செய்து ஓய்வு கொடுத்திருக்கலாம். ஆனால் பின்னாட்களில் அதுவே அவர்களை ஒதுக்குதலுக்கு என்று ஆகிவிட்டது.
பொதுவாக புறத்தில் உண்டாகும் மாற்றங்களையும் வலிகளையும் புரிந்து கொள்கிறார்களோ இல்லையோ பிறருக்கு எளிதாக விளக்கிவிட முடியும். ஆனால் இந்த நேரங்களில் உண்டாகும் அக மாற்றங்களை எவருமே புரிந்து கொள்ள முயற்சி செய்வதில்லை. ஆங்கிலத்தில் post menstrual syndrome என்றும் pre menstrual syndrome என்றும் சொல்வார்கள். அதாவது பெண்ணின் மாதவிடாய் காலங்களுக்கு முன்பும் பின்புமான குறைபாடு. இவை பொதுவாக மனகுறைபாடுகளைதான் குறிக்கும்.
எப்போது ஏன் என்று தெரியாமல் கோபப்படுவார்கள், எரிச்சல் அடைவார்கள், கத்துவார்கள், பின் அவர்களாகவே வந்து சாந்தமாக பேசுவார்கள். இது அவர்களின் தவறில்லை. ஹார்மோன் மாயாஜாலங்கள். இதை வீட்டில் உள்ளவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். மாதவிடாய் காலத்திற்கும் முன்பும் பின்பும் உடல் மற்றும் மன மாற்றங்கள் உண்டாவது சகஜம் தான். இந்த நேரத்தில் அவர்களுடன் பதில் வாக்குவாதம் செய்து அவர்களை துன்பப்படுத்துவது நியாயம் இல்லை.
28 நாட்கள் சுழற்சியில் ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும். பொதுவாக ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் உச்சத்தில் இருக்கும் காலங்களில் ஒருவித உடல் மற்றும் மனநிலை இருக்கும். அதுவே ஈஸ்ட்ரோஜன் குறைந்து போகும்போது ஒருவித உடல் மற்றும் மனநிலை இருக்கும். இதை சமாளித்துக்கொண்டு உடலளவிலும் மனதளவிலும் கடுமையான சுமைகளை ஏற்று பணி செய்யும் பெண்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள்.
பெண் பிள்ளைகளின் முதல் மாதவிடாய் நிகழ்வை ‘பூப்பெய்துதல்’ என்று கொண்டாடும் கலாச்சாரம் படைத்தவர்கள் நாம். வெளிநாடுகளில் ஒன்பது பத்து வயதில் இருந்தே பெண் பிள்ளைகளை இதற்கென தயார்படுத்துவார்கள். அவர்களின் பைகளில் எப்போதும் சானிட்டரி நாப்கின்கள் இருக்கும். வலி குறைக்கும் மருந்துகள், சுகாதாரம் காக்கும் பொருட்கள் என்று ஒரு மருத்துவ பெட்டியே அவர்களுடன் எப்போதும் இருக்கும். அதுபோக அவர்கள் ஒருவேளை முதல் மாதவிடாய் வந்தால் எப்படி பதற்றப்படாமல் இருக்க வேண்டும் என்ன செய்ய வேண்டும் என்பதையும் கற்றுக்கொடுத்து விடுவார்கள். ஆனால் நாம் இதை பற்றி பிள்ளைகளிடம் பேசத் தயங்குகிறோம். நவீனத்தில் விதிவிலக்குகளும் உண்டு. நகர்புறுங்களில் கொஞ்சம் மாற்றம் ஏற்பட்டிருந்தாலும் முதுகெலும்பான கிராமப் புறங்களில் எதுவும் இன்னும் மாறவில்லை.
முதல் மாதவிடாய் நிகழ்ந்தால் அப்பிள்ளை தனியே குடிசைகளில் அமர வைக்கப்பட்டு அவளுக்குச் சிறப்பான கவனிப்பு தருவார்கள். பதினொரு, பதிமூன்று நாட்களுக்கு பிறகு அவளுக்கு விழா எடுத்து ஊரே அறியும் படி கொண்டாடுவார்கள். இதில் அந்தப் பிள்ளைக்கு என்ன மாதிரியான மனநிலை இருக்கும் என்று யாரும் அறிய முற்படுவதில்லை. துள்ளி விளையாடிக்கொண்டிருந்த குழந்தைக்கு புடவை கட்டி மூலையில் அமர வைத்து சடங்கென்ற பெயரில் அவளை ஊரே அறிய பெரிய மனுஷியாக அறிவிப்பதை அவள் நிச்சயம் விரும்பமாட்டாள். அவளின் இந்நிகழ்வை சாதாரணமாக பார்க்கும் மனநிலை நம் நாட்டில் வர வேண்டும்.
பண்டைய கலாச்சாரங்களை ஏன் எதற்கு என்று புரிந்துக்கொள்ளாமல் , இயற்கையின் செயல்களை தெரிந்துக்கொள்ளாமல், நவீனத்தின் பிடியில் இருந்து நழுவிக்கொள்ள முயற்சிப்பது எல்லாம் பெண்களை அடிமையாகவே வைத்திருக்கும் ஒரு யுக்திதான். அவளுக்கு ஏற்படும் உடல் மாற்றங்களை காரணமாகக் கொண்டு அவளை வீட்டிற்குள்ளேயே சிறைபடுத்தி வைத்திருக்கும் திட்டங்களுக்கு செவிமடுக்காமல் இருந்தாலேப் போதும். இதையெல்லாம் ஆண்கள் மட்டுமே செய்கிறார்கள் என்றும் சொல்ல முடியாது. இந்த மாதவிடாய் சம்பவங்கள் ஒவ்வொன்றின் பின்னும் இன்னொரு பெண்ணே நின்று தன் பிள்ளைகளுக்கு முட்டுக்கட்டை வீசுகிறாற்கள்.
அதனால் தான் சொன்னேன். மாதவிடாய் குறித்த விழிப்புணர்வு ஆண் பெண் இருபாலருக்கும் கற்பிக்கப்பட வேண்டும். அதுவும் இளம் பருவத்திலேயே. அது காலம் காலமாக இருப்பதைப போல பெண்களை ரகசிய பொக்கிஷமாக ஆண்கள் நினைக்காதிருக்க உதவும். அவளுக்கு உடல் உண்டு. அதில் மனம் உண்டு. அதற்குள் உணர்வுகள் பல உண்டு என்று ஆண் பிள்ளைகள் அறிய வேண்டும். முடிந்த வரை அவளை தொந்திரவுப் படுத்தாமல் இருந்தாலே போதும். பாலியல் கல்வியில் பெண்ணுடல் குறித்த அறிவியலும் பள்ளிகளில் பாடமாகக் கொண்டு கற்ப்பிக்கப்பட வேண்டும். இதனால் சமூகத்திற்கு என்ன நன்மை கிடைக்கும் என்பதை நான் கூறிதான் உங்களுக்கு தெரிய வேண்டுமா என்ன? பெண்கள் மீதான வன்முறை குற்றங்கள் குறைவதற்கு அடிப்படை கல்வி காரணமாயிருக்கும் என்றால் அதை பிரகடனப்படுத்துவதற்கு ஏன் தயங்க வேண்டும். இனி வரும் காலங்களில் குறைந்த பட்சம் வீட்டில் உள்ள ஆண் பெண் பிள்ளைகளிடம் பெற்றோர்கள் மனம் திறந்து பேசவேண்டும். மாதவிடாய் என்பது தீட்டல்ல. அது இயற்கை. அந்த நிகழ்வின் விளைவால் தான் நாம் வாழ்கிறோம். நாம் தீட்டுகளின் திரட்டல்கள்.
நன்று