1999 இல் சென்னை மாநிலக்கல்லூரியில் இளங்கலை தமிழ் இலக்கியம் பயில சேர்ந்தேன். அப்போது அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த பேராசிரியர் மா.ப.அண்ணதுரை அய்யா அவர்களின் வகுப்பு என்னை வெகுவாக கவர்ந்தது. அவருடைய வகுப்பு மற்ற பேராசிரியர்களைவிட மாறுபட்டு இருந்தது. ஆனால், எனக்கு அவருடைய வகுப்பு பிடித்தமானதாக இருந்தது. இரண்டாமாண்டு பயிலும் போதுதான் அவருடைய வகுப்பு மார்க்சிய கண்ணோட்டத்துடன் கூடியது என விளங்கிக்கொண்டேன். நான் படித்த அதே கல்லூரியில் ஓராண்டு முந்தியவனாக நண்பர் சி.முருகன் அங்கு பயின்று வந்தான். அவனும் பேராசியர் அண்ணாதுரை அவர்களின் வகுப்பின்பால் ஈர்க்கப்பட்டவன்தான் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
கிராமபுரத்திலிருந்து சென்னை பெருநகரம் நோக்கி படிக்க சென்ற எங்களுக்குள் ஏக்கமும், தாகமும், தவிப்பும், வேட்கையும், விடுதலை உணர்ச்சியும் நிறைந்திருந்தது. இந்த சூழ்நிலையில் பேராசிரியர் அண்ணாதுரை அவர்களின் வகுப்பு எங்களை மார்க்சிய வாதியாக மாற்றியது. சமூக மாற்றம் நடைபெற வேண்டுமானால், புரட்சிகர அரசியல் பாதைக்கு தங்களை தயார் செய்துகொள்ள வேண்டுமென முடிவு செய்தோம். பாட புத்தகம் தாண்டி கலை, இலக்கியம், அரசியல் என படிக்க தொடங்கினோம். குறிப்பாக, மார்சிய லெனினிய தேர்வு நூல்கள், தாய் நாவல் என பலவற்றை படிக்கத் தொடங்கினோம்.
இடதுசாரி சிந்தனையோடு பயணிந்துகொண்டிருந்த சூழலில் வியசர்பாடி மகாகவி பாரதியார் நகரில் உள்ள பள்ளி வளாகத்தில் பேராசிரியர் அண்ணாதுரை அவர்களின் தலைமையில் கூடுவோம். கலை இலக்கியம் அரசியல் குறித்தும், மார்சிய லெனிய மாவோ அவர்களின் கருத்தியல் குறித்தும் கலந்துரையாடுவோம். அவ்வபோது அம்பேத்கர் குறித்தான உரையாடல்களும் நிகழும். அப்போது, அம்பேத்கர் ஒரு முதலாளித்துவ சிந்தனைவாதி, அவருடைய பொருளாதார சிந்தனை முதலாளிகளுக்கு ஆதரவானது. அவர் முதலாளித்துவ நாடாளுமன்ற ஜனநாயகத்தை ஏற்றுக்கொண்டார் என்றெல்லாம் பல தோழர்கள் கருத்துக்களை வைத்தார்கள். அம்பேத்கர் குறித்தான வாசிப்பு என்னிடம் இல்லாததால் மறுத்துப் பேசவில்லை. ஆனால், அவர்கள் வைத்த கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. அம்பேத்கரை அப்படி சுருக்கிப் பார்த்துவிட முடியாது என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கைக் கொண்டேன். அதற்கு ஒரே வழி அவருடைய நூல்களையெல்லாம் வாங்கிப் படிப்பதென்று முடிவெடுத்தேன்.
இரண்டாமாண்டு கல்லூரி உதவித்தொகை பணத்தை வாங்கிக்கொண்டு NCPH பதிப்பகத்திற்கு சென்று அம்பேத்கர் நூல் தொகுதிகள் அனைத்தையும் வாங்கி வைராக்கியமாக படித்தேன். பெரும்பாலான இடதுசாரிகள் அம்பேத்கரைப் படித்தறியாமலே மேலே குறிப்பிட்ட முடிவுக்கு வந்துவிடுகிறார்கள் என்பதை அறிந்தேன். அம்பேத்கரை படிக்க படிக்க இந்தியாவில் அவரின் தேவை எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தாக என்பதை உணர்ந்தேன். அவர் மட்டும் ஏன் தனித்தும் தனித்துவமாகவும் சிந்தித்தார், செயல்பட்டார் என்பதை அறியும்பொழுது எனக்கு வியப்பாக தோன்றியது. இந்திய ஒடுக்கப்பட்ட மக்களின் நிலைமைகள்தான் அனைத்திற்கும் காரணம் என்பதை புரிந்துகொண்டேன். புரட்சிகர ஆயுத போராட்டத்தில் சேர்ந்துவிட வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்த என்னை அம்பேத்கரிய வாசிப்பு திசைமாற்றிவிட்டுவிட்டது. ஒடுக்கப்பட்ட மக்கள் சார்ந்த கலை, இலக்கியம், அரசியல் குறித்து செயல்படுவதற்கு முடிவெடுத்தேன். பேராசிரியர் அண்ணாதுரை அவர்களின் தலைமையில் செயல்பட்ட இடதுசாரி தோழர்களுடனான பயணத்திலிருந்து திசைமாற்றிக்கொண்டேன். நண்பர் முருகன் அவர்களுடனும் எங்களுடனும் இரண்டு தரப்பிலும் பயணித்தான்.
மேற்கண்ட அனுபவங்கள் கிராமம் நோக்கி வந்த எனக்குள் பல சிந்தனைகளைத் தூண்டின. குறிப்பாக, அம்பேத்கர் வாசிப்பு என்னை தலித் மக்கள் மத்தியில் வேலைச் செய்ய வேண்டுமென தூண்டின. பள்ளி வகுப்பு நண்பனான கோ.சந்தமூர்த்தி மற்றும் அவனுடைய நண்பனான சு.பிரேம் குமார் ஆகியோருடன் இணைந்து தலித் கலை இலக்கியம் அரசியல் குறித்தான நிகழ்வுகளை முன்னெடுக்க தொடங்கினோம். அதன்படி, 2005 இல் திருவண்ணாமலை பெரியார் சிலை அருகில் உள்ள கார்மேல் கிண்டர் கார்டன் பள்ளியில் அரசியல் கருத்தரங்கம் ஏற்பாடுசெய்தோம். அக்கருத்தரங்கில் தோழர் சிந்தனை செல்வன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.
தோழர் சிந்தனை செல்வன் அவர்களை நான்தான் அழைத்துவர விழுப்புரம் சென்றேன். அப்போது கூரைவீட்டில் மிக எளிமையாக அமர்ந்திருந்த காட்சி இன்னும் என் நினைவில் அழியாமல் உள்ளது. அரசு பணியை இழந்து இவ்வளவு எளிமையாக வாழ்ந்துகொண்டு ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிக்கொண்டிருக்கும் அவரை நேரில் கண்ட எனக்கு பிரமிப்பாக இருந்தது. எனக்கும் ஒரு நம்பிக்கை அளிக்கும் வகையில் அவர் தென்பட்டார். தோழர் சிந்தனை செல்வன் அவர்கள் கலந்துகொண்ட அக்கருத்தரங்கம் மிகவும் காரசாரமாக நடைப்பெற்றது. இடதுசாரி அரசியலுக்கும் தலித் அரசியலுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகள் குறித்தான விவாதங்கள் நடைபெற்றன. இளமைத் துடிப்போடு இடதுசாரி சிந்தனையில் இருந்த எங்களின் வினாக்கள் கரடுமுரடாக இருந்தது. ஆனால், அத்தனை வினாக்களுக்கும் நிதானமாக பதிலளித்தார் தோழர் சிந்தனை செல்வன் என்பது குறிப்பிடத்தக்கது.
தலித் மாணவர் பேரவைத் தொடக்கம்
அரசியல் கருத்தரங்கில் கலந்துகொண்ட தோழர் த.மா.பிரகாஷ், தோழர் முருகராகன் ஆகியோர்களின் நட்பு கிடைத்தது. அந்த நட்பு இணைந்து பயணிக்கும் அளவில் நீண்டது. அவர்களோடு கலந்து ஆலோசித்து தலித் மாணவர் பேரவையை தொடங்குவது என்று முடிவெடுத்தோம். அதன்படி 25.03.2007 அன்று பூமாலை வணிக வளாகத்தில் தொடக்கவிழா நடைப்பெற்றது. அவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக பேராசிரியர் அய்.இளங்கோவன், எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம் கலந்துகொண்டனர். இவர்களோடு பேரா.தங்கராசு, பேரா.சண்முகவேல், பேரா.முனியப்பன், பேரா.சேகர், பேரா.செந்தில் வேலன் ஆகியோர்களும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர். மாரியம்மன் கோயில் தெரு கவுன்சிலர் வழக்கறிஞர் சுரேஷ் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பு செய்தார். அரங்கம் முழுக்க மாணவர்கள் நிறைந்திருந்தனர். திருவண்ணாமலை சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள கல்லூரி மாணவர்களை நானும், சாந்தமூர்த்தியும், பிரேம்குமாரும் நேரில் சென்று சந்தித்து பேரவையின் முக்கியத்துவம் குறித்து விளக்கினோம். அப்படியான சந்திப்புகள் வழிதான் மாணவர்களின் வருகை பெருகியது என்பதை நாங்கள் பின்னர் உணர்ந்தோம்.
பேரவை தொடங்கியதன் நோக்கம்
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கலை, இலக்கியம், அரசியல் விழிப்புணர்வை கொடுத்து அதன் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்தவதே நோக்கமென அறைகூவல் விடுத்தோம். பேரவைத் தொடக்க விழா நிகழ்வை தினிமணி செய்தித்தாள் படத்துடன் வெளியிட்டது. இதைக் கண்ட எங்களுக்கு மகிழ்ச்சி இரட்டிப்பானது. அடுத்தடுத்து பேரவையை எப்படி வழிநடத்துவது என்ற திட்டமிடல்கள் பல வகையிலும் விவாதிக்க தொடங்கினோம். பேரவையை முறையாக பதிவுச்செய்வது, பொறுப்பாளர்களை நியமிப்பது உட்பட விவாதித்தோம். ஆனால், இவையாவும் நடந்தேறும் முன்னரே பேரவை செயல்பாடுகள் முடங்கின.
எந்த வேகத்தில் பேரவைத் தொடங்கினோமோ அதே வேகத்தில் பேரவைக்கு தொய்வும் ஏற்பட்டது. பேரவையை வழிநடத்தும் என்னை உட்பட பேரவை நண்பர்களுக்கு வேலையும் வருமானமும் அவசியமான ஒன்றாக மாறியது. நான் சென்னையை நோக்கி வந்துவிட்டேன். அவர்கள் திருவண்ணாமலை கல்லூரியிலே பணிக்கு சேர்ந்துவிட்டனர். வேலை, வருமானம் என்று நகர்ந்த எங்கள் வாழ்வு அடுத்து திருமண வாழ்க்கை என்ற இடத்திற்கு நகர்ந்தது. இப்படியாக, ஒன்பது ஆண்டுகள் இடைவெளி ஏற்பட்டுவிட்டது. கல்வி வேலை திருமணம் என எங்கள் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள் அமைப்பு நடைவடிக்கையில் தேக்கத்தை ஏற்படுத்தியது.
தம்மம் மாணவர் பேரவை தொடக்கம்
மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு தலித் என்ற அடையாளத்திற்கு மாற்றாக புரட்சியாளர் கண்டடைந்த தம்மம் என்ற பௌத்த கோட்பாட்டு அடையாளத்தை முன்னெடுக்கலாம் என்று தம்மம் சிந்தனையாளர் பேரவை என்ற அமைப்பை 15.04.2016 அன்று கிராமங்கள் சூழ்ந்த சிறு நகரமான தண்டராம்பட்டில் தொடங்கினோம். இத்தொடக்க விழாவிலும் எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம் அவர்களே சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். நான் நோக்கவுரை ஆற்றினேன். அவரோடு தோழர் கருப்பு கருணா, ஓவியர் பெ.அன்பு, வழக்கறிஞர் சந்திரசேகர், ஆசிரியர் பாண்டுரங்கன், பேராசிரியர் சு.பிரேம்குமார், ஆசிரியர் முருகன், தோழர் வெற்றி முரசு பேராசிரியர் சி்குமார் ஆகியோரும் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். அப்போதைய தண்டராம்பட்டு ஊராட்சிமன்ற தலைவர் காமராஜ், எடுத்தனூர் ஊராட்சிமன்ற தலைவர் சங்கமித்திரை ஆகிய இருவரும் கலந்துகொண்டார்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆசிரியர் ராமஜெயரம் வரவேற்புரை வழங்க, தோழர் மாதேஷ்வரன் நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்வை பேராசிரியர் கோ.சாந்தமூர்த்தி தொகுத்து வழங்கினார்.
இவ்விழாவில் பாப்பாம்பாடி ஜமா மேலம் அடித்து சிறப்பித்தது. செல்லங்குப்பம் சுப்பிரமணி குழுவினர் நாட்டுப்புற இசையுடன் பாடல்களை வழங்கினார்கள். பேரவையின் நோக்கமாக, மாணவர்கள் வேலைவாய்ப்புக்கு திறன் பெறும் வகையில் கல்விப் பயில வழிகாட்டல், கலை, இலக்கியம், பண்பாடு, அரசியல் தொடர்பான கருத்துகளை பகிர்ந்துகொள்ளுதல், பள்ளி மற்றும் கல்லூரிகளில் நிலவும் சாதிய பாகுபாடுகளை தடுத்து நிறுத்துதல், தியாக மனப்பான்மையோடு பணியாற்றும் ஆசிரியர்களைப் பாராட்டி நற்சாற்றிதழ் வழங்குதல் என்ற அளவில் திட்டங்களை வடிவமைத்தோம்.
மாணவர்கள் மட்டுமின்றி தலித் விடுதலைக் களத்தில் பயணிக்க வரும்பிய பல இளைஞர்கள் பேரவையில் இணைந்து பணியாற்ற ஆர்வம் காட்டினர். சுற்றுவட்டார தலித் இளைஞர்கள் பேரவையில் இணையவும் செய்தனர். இதனைப் பொருத்துக்கொள்ள இயலாத சில விஷமிகள் காழ்ப்புணர்ச்சிக் கொண்டு அவதூறுகளைப் பரப்பினர். இணைந்த இளைஞர்களை தனித்தனியாக அலைபேசியில் அழைத்து பேரவையிலிருந்து வெளியேற வைத்தனர். அதையெல்லாம் நாங்கள் பெருட்படுத்தவில்லை. தொடர்ந்து பேரவையை நடத்த திட்டமிட்டோம் என்பதையும் இவ்விடத்தில் பதிவுச்செய்வது முக்கியமாகும்.
புரட்சியாளர் மாமேதை அண்ணன் அம்பேத்கர் நினைவுநாள் கருத்தரங்கம்
புரட்சியாளர் அம்பேத்கர் நினைவுநாளான டிசம்பர் 6 ஆம் நாளை நினைவுகூறும் வகையில் தலித் முரசு வெளியிட்ட “நான் இந்துவாக சாகமாட்டேன்” என்ற நூலுக்கு அறிமுக கூட்டத்தை 17.12.2017 அன்று தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் அறிமுக கூட்டம் நடத்தினோம். அரங்கம் முழுமையும் கூட்டம் நிறைந்திருந்தது. தோழர் கருப்பு கருணா கருத்துரை வழங்கினார். ஏன் இந்த வெளியீடு? என்ற தலைப்பில் தோழர் புனிதபாண்டியன் அவர்களும், ஏன் இந்த தமிழாக்கம்? என்ற தலைப்பில் மருத்துவர் தாயப்பன் அவர்களும் விரிவாக பேசினார்கள். இந்நிகழ்விற்கு ஆசிரியர் பாண்டுரங்கன் அவர்கள் தலைமைத் தாங்கினார். வழக்கறிஞர் சந்திரசேகர், ஆசிரியர் சீனிவாசன், தோழர் கர்ணன் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர். தோழர் புத்தா நேரு மற்றும் தோழர் வெற்றி முரசு வாழ்த்துரை வழங்கினர்கள்.
அழைப்பிதழில் புரட்சியாளர் அம்பேத்கரின் அதிரடி முழுக்கமான “கெடுவாய்ப்பாக நான் ஒரு தீண்டத்தகாத இந்துவாக பிறந்து விட்டேன். அதைத் தடுப்பது என் சக்திக்கு அப்பாற்பட்டது. ஆனால், அருவறுக்கத் தக்க இழிவான நிலையில் வாழ்வதை என்னால் தடுத்துக் கொள்ள முடியும். எனவே, நான் உறுதியாக கூறுகிறேன் நான் ஒரு இந்துவாக சாக மாட்டேன்.” என்ற முழக்கத்தை அழைப்பிதழில் இடம்பெறச் செய்து பலருக்கும் அழைப்பிதழைக் கொண்டு சேர்த்தோம். இவ்விழாவிற்கான உதவி வேண்டி இயக்குநர் இரஞ்சித் அவர்களை சந்தித்த போது இந்த அழைப்பிழை வேண்டி விரும்பி கேட்டு பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. சேரிக்குயில் சேட்டு, பாடகர் செல்லங்குப்பம் சுப்பிரமணி ஆகியோர் மண்ணிசைப் பாடல்களை வழங்கினார்கள்.
அம்பேத்கர் பிறந்தநாள் விழா மற்றும் தலித் பண்பாட்டு கலைவிழா
புரட்ணியாளர் அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14 ஆம் நாளை தலித் பண்பாட்டு கலைவிழாவாக நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டு 2017 ஏப்ரல் 22 இல் தண்டராம்பட்டில் விழாவை ஒருங்கிணைத்தோம். விடுதலைக் கலைஇலக்கியப் பேரவை மாநிலத்துணைச் செயலாளார் கவிஞர் வெண்ணிலவன் அவர்கள் இந்நிகழ்வைத் தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை போர்பறை இசைக்குழு தப்பாட்டம் நிகழ்த்தியது. பேராசிரியர் ச.செந்தில் வேலன், சேரிக்குயில் சேட்டு, செல்லங்குப்பம் சுப்பிரமணி ஆகியோர் மண்ணிசைப் பாடலை வழங்கினார்கள். இந்நிகழ்விற்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலப் பொதுச்செயலாளர் தோழர் சாமுவேல்ராஜ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். எழுத்தாளர் அழகிய பெரியவன் அவர்களும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார். நான் தலைமைத்தாங்கிய ஒரே நிகழ்வு இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. தம்பி ஜெ.பாஸ்கரன் வரவேற்புரை வழங்க ஆசிரியர் சி.முருகன் முன்னிலை வகித்தார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் தோழர் செல்வன், வழக்கறிஞர் கு.சந்திரசேகர், தோழர் வெற்றி முரசு, தோழர் ஏ.அருளரசு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
விருதுகள் வழங்கி பெருமைப்படுத்தினோம்
பேரவைத் தொடங்கப்பட்டபோது தலித் மக்களுக்காக பல தளங்களில் செயல்படும் ஆளுமைகளைக் கண்டு அவர்களுக்கு விருதுகள் வழங்கிப் பெருமைப்படுத்துவது என்பதையும் நோக்கமாக குறிப்பிட்டிருந்தோம். அதன்படி இவ்விழாவில், மகாத்மா ஜொதிராவ் பூலே சேவை விருது தண்டராம்பட்டு தொடங்கப்பள்ளி தலைமையாசிரியர் வெ.அழகரி அவர்களுக்கும், தலைமையாசிரியர் கவிஞர் அ.முரளி அவர்களுக்கும் வழங்கி பெருமைப்படுத்தினோம். தோழர் கருப்பு கருணா அவர்களுக்கு புரட்சியாளர் அம்பேத்கர் ஒளி விருதும், மகிளிர் விடுதலை இயக்க மாநில துணைச்செயலாளர் தோழர் ப.வளர்மதி அவர்களுக்கு தந்தைப் பெரியார் பகுத்தறிவு சுடர் விருதும் வழங்கி பெருமைப்படுத்தினோம். பேராசிரியர் செந்தில் வேலன், சேரிக்குயில் சேட்டு, செல்லங்குப்பம் சுப்பிரமணி ஆகியோர்களுக்கு கே.ஏ.குணசேகரன் குரல் விருது வழங்கி பெருமைப்படுத்தினோம். இந்நிகழ்விற்காக ஏற்பாடு செய்த திறந்தவெளி அரங்கத்திற்கு கவிஞர் இன்குலாப் கலையரங்கம் என்று பெயர் சூட்டி அவரின் நினைவைப் போற்றினோம்.
தலித்துகளின் முன்னேற்றத்திற்கு இடதுசாரிகளின் பங்களிப்பு
தலித் மக்களின் முன்னேற்றத்திற்கு இடதுசாரிகள் ஒரு நம்பிக்கையான சக்தி என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. திருண்ணாமலை மாவட்டத்தை பொருத்தவரை தலித் மாணவர் பேரவை செயல்பாடானாலும் தம்மம் சிந்தனையாளர் பேரவை செயல்பாடானாலும் இடதுசாரிகளின் ஆதரவு மகத்துவமானது. இந்த ஆதரவு என்பது வரலாற்று பூர்வமானது என்பதை நாங்கள் அறிவோம். அந்த வகையில் “தலித்துகளின் முன்னேற்றத்திற்கு இடதுசாரிகளின் பங்களிப்பு” என்ற தலைப்பில் ஒரு சிறப்பு கருத்தரங்கம் நடத்துவது என்று திட்டமிட்டோம். 2017 பிப்ரவரி 19 அன்று திருவண்ணாமலை கார்மேல் துவக்கப்பள்ளியில் நிகழ்வை ஒருங்கிணைத்தோம். இந்நிகழ்விற்கு ஆசிரியர் சி.முருகன் தலைமைத் தாக்கினான். கருத்தரங்கின் தலைப்பு குறித்து எழுத்தாளர் வ.கீதா விரிவாக பேசினார். சி.பி.எம் மாநில குழு உறுப்பினர் தோழர் வீரபத்திரன், சி.பி.ஐ மாவட்ட செயலாளர் தோழர் கு.ஜோதி, வி.சி.க நாடாளுமன்ற தொகுதிச்செயளார் தோழர் எ.நேரு ஆகியோர் தங்களின் களப்பணிகள் குறித்து விரிவாக பேசினர். இந்நிகழ்வை பேராசிரியர் கோ.சாந்தமூர்த்தி தொகுத்து வழங்கினான். நன்றி உரை ஜெ.பாஸ்கரன் வழங்கினான். சாதி ஒழிப்புக்கு களம் காணுவோம் வாருங்கள் திறந்த மனதோடு விவாதிப்போம் என்று அழைப்பிதழில் குறிப்பிட்டிருந்தோம். இந்நிகழ்விலும் சேரிக்குயில் சேட்டு, செல்லங்குப்பம் சுப்பிரமணி ஆகிய இருவரும் மண்ணிசைப் பாடலை வழங்கினார்கள்.
அண்ணல் அம்பேத்கரின் அறியப்படாத ஆளுமை
அண்ணல் அம்பேத்கர் ஆளுமைகள் குறித்து விரிவாக அறிந்துகொள்ளப்பட வேண்டும் என்று இரண்டுநாள் கருத்தரங்கு நிகழ்வாக திருவண்ணாமலை சி.பி.எம் அலுவலகத்தில் சிங்காரவேலர் அரங்கத்தில் 2017 ஜூலை 29, 30 ஆகிய தேதிகளில் ஒருங்கிணைத்தோம். இக்கருத்தரங்கு விடுதலைக் கலைஇலக்கிய பேரவையோடு இணைந்து தம்மம் சிந்தனையாளர் பேரவை முன்னெடுத்தது. இக்கருத்தரங்கிற்கான பெரும்பாலான வேலையை தம்மம் சிந்தனையாளர் பேரவையே ஏற்றுக்கொண்டது என்பது என்பது குறிப்பிடத்தகுந்தது. இக்கருத்தரங்கை சாதி ஒழிப்பு போராளி கௌசல்யா தொடங்கி வைத்தார். இளங்கவி இளங்கோ தலைத்தாங்கினார்.
அம்பேத்கரின் எழுத்தும் பேச்சும் என்ற தலைப்பில் எழுத்தாளர் வ.கீதா விரிவாக பேசினார். அப்போது, சோவித் ரஷ்யாவில் ஜோசப் ஸ்டாலின் ஆட்சி காலத்தை கடுமையாக விமர்சித்தார். உடன்பாடாத இடதுசாரிகள் தோழர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். சிறிது நேரம் அரங்கம் சலசலப்பானது என்றாலும் மிகையல்ல. ஆனால், அண்ணல் அம்பேத்கரின் எழுத்தும் பேசுச்சும் குறித்து விரிவாக எடுத்து வைத்தார். அம்பேத்கர் நிறுவிய சித்தார்த்தா கல்லூரிக்கு சென்றுவந்த அனுபவங்களையெல்லாம் பகிர்ந்து கொண்டார். இந்நிகழ்விற்கு விடுதலைக் கலைஇலக்கியப் பேரவை கவிஞர் வெண்ணிலவன் மற்றும் பேராசிரியர் கோ.சந்தமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். விடுதலைக் கலைஇலக்கியப் பேரவை மாவட்ட அமைப்பாளர் கவிஞர் தமிழ் இலக்கியன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். விடுதலைக் கலைஇலக்கியப் பேரவை மாவட்ட துணை அமைப்பாளர் தம்பி சுரேஷ் திவான் அவர்கள் நன்றியுரை வழங்க நிகழ்வை நான் தொகுத்து வழங்கினேன்.
இரண்டாம் நாள் நிகழ்வு இரண்டாம் அமர்வு
இரண்டாம் நாள் நிகழ்விற்கு விடுதலைக் கலைஇலக்கியப் பேரவை மாநிலச் செயலாளர் கவிஞர் யாழன் ஆதி அவர்கள் தலைத்தாங்கினார். விடுதலை கலைஇலக்கியப் பேரவை மாநிலத் துணைச்செயலாளர் பேராசிரியர் செல்ல பாலு மற்றும் பேராசிரியர் வி.தீ.குமார் ஆகிய இருவரும் முன்னிலை வகித்தார்கள். அம்பேத்கரியமும் மார்க்சியமும் என்ற தலைப்பில் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா அவர்கள் அம்பேத்கர் குறித்தான புரிதலில் இடதுசாரிகள் தவறவிட்ட செய்திகளையும் மார்க்சியம் குறித்தான புரிதலில் அம்பேத்கரிஸ்டுகள் தவறவிட்ட செய்திகளையும் விரிவாக எடுத்து வைத்தார். சிலவேளை நகைச்சுவையுடன் கிண்டல் செய்தும் தனது கருத்துக்களை எடுத்து வைத்தார். இந்நிகழ்விற்க்கு விடுதலைக் கலைஇலக்கியப் பேரவை மாநிலத் துணைச்செயலாளர் கவிஞர் மு.சாக்கியமுகிலன் வரவேற்புரை வழங்க விடுதலைக் கலைஇலக்கிய பேரவை மாவட்ட துணை அமைப்பாளர் ஆசிரியர் மகாலட்சுமி நன்றியுரை வழங்கினார்.
இரண்டாம் நாள் நிகழ்வு மூன்றாம் அமர்வு
இந்த அமர்விற்கு அரசு ஊழியர் ஐக்கியப் பேரவை மாநில துணைச்செயலாளர் பேராசிரியர் ஏ.மாரிமுத்து அவர்கள் தலைமைத்தாங்கினார். விடுதலைக் கலைஇலக்கியப் பேரவை மாநிலத்துணைச் செயலாளர் செ.பி.முகிலன், ஆசிரியர் சி.முருகன் ஆகிய இருவரும் முன்னிலை வகித்தனர். அம்பேத்கரியமும் பெரியாரும் என்ற தலைப்பில் திராவிடர் விடுதலைக் கழகம் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் விரிவாக பேசினார். அம்பேத்கரை பெரியார் தலைவராக ஏற்றுக்கொண்டு அவரின் நிலைப்பாட்டிற்கு பெரும் ஆதரவளித்தார். காந்தியின் தீவிர உண்ணாவிரதத்தால் அம்பேத்கர் யோசிக்க தொடங்கியபோதும் காந்தியைப் பொருட்படுத்த வேண்டாம் என்று பெரியார் கேட்டுக்கொண்டார் என அம்பேத்கரையும் பெரியாரை ஒப்பிட்டு நல்லதொரு உரையை வழங்கினார். இந்நிகழ்விற்கு விடுதலைக் கலைஇலக்கியப் பேரவை மாநிலத் துணைச்செயலாளர் சேரிக்குயில் சேட்டு வரவேற்புரை வழங்க விடுதலைக் கலைஇலக்கியப் பேரவை மாவட்ட அமைப்பாளர் தோழர் அன்பு நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்வில் மாட்டுக்கறி பிரியாணி விருந்து வழங்கினோம் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரியார் பிறந்த நாள் விழா மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் களப்பணிக்கு பாராட்டு விழா
பகுத்தறிவு பகலவன் தந்தைப் பெரியார் பிறந்தநாள் விழாவை நடத்துவது என்று பேரவை திட்டமிட்டது. அதே விழாவில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் களப்பணியைப் பாராட்டி நினைவுப் பரிசும் வழங்க பெருமைப்படுத்த வேண்டும் என்று முடிவுச்செய்தோம். இந்நிகழ்வை 2017 செப்டம்பர் 23 ஆம் நாள் தண்டராம்பட்டில் ஒருங்கிணைத்தோம். இந்நிகழ்விற்கு பேராசிரியர் கோ.சாந்தமூர்த்தி தலைத்தாங்கினான். ஆசிரியர் சி.முருகன், தி.மு.க ஒன்றியச் செயலாளர் கோ.ரமேஷ், தி.மு.க ஒன்றிய துணைச் செயலாளர் து.வேலு, தோழர் வெற்றி முரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி, சி.பி.எம் மாநிலக்குழு உறுப்பினர் தோழர் வீரபத்திரன், ம.தி.மு.க மாநில இளைஞரணி துணைச் செயலாளர் வழக்கறிஞர் பாசறை பாபு, நில உரிமை மீட்பு இயக்கம் மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் க.மோகன், அரசு ஊழியர் ஐக்கிய பேரவை மாவட்ட அமைப்பாளர் பெல்.ரவி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இந்நிகழ்வில் சாதி ஒழிப்பு போராளி கௌசல்யா அவர்கள் கருத்துரை வழங்க, தந்தைப் பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் அவர்கள் சிறப்புரை வழங்கினார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச்செயலாளர் சாமுவேல் ராஜ் பாராட்டு ஏற்புரை வழங்கினார். விடுதலைக் கலைஇலக்கியப் பேரவை மாவட்ட துணை அமைப்பாளர் தம்பி சுரேஷ் திவான் வரவேற்புரை வழங்க, வி.சி.க ஒன்றிய துணைச்செயலாளர் சி.வி.கபிலன் நன்றியுரை வழங்க, நான் நிகச்சியைச் தொகுத்து வழங்கினேன். இந்நிகழ்வு அரங்கிற்கு போர்பரணி மருத்துவர் அனிதா திடல் என்று பெயர் சூட்டி அனிதாவிற்கு வீரவணக்கத்தைச் செலுத்தினோம்.
அண்ணல் அம்பேத்கர் நினைவுநாள் கருத்தரங்கம்
2017 டிசம்பர் 17 அன்று திருவண்ணாமலை ALC ஆசிரியர் பயிற்சி பள்ளியில் அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளையொட்டி முழு நாள் கருத்தரங்காக ஒருங்கிணைத்தோம். அண்ணல் அம்பேத்கர் நுனைவு நாளையொட்டி பேரவை எடுத்த இரண்டாவது நிகழ்வாகும். முதல் அமர்வில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச்செயலாளர் தோழர் சாமுவேல் ராஜ் அவர்கள் “தமிழகத்தில் ஆணவப் படுகொலைகள்” என்ற தலைப்பில் பல சம்பவங்களை விவரித்து நீண்டதொரு உரையை வழங்கினார். இந்நிகழ்விற்கு தலித் எழுச்சி மையம் நிறுவனர் R.L ரொசாரியோ அவர்கள் தலைமைத் தாங்கினார். விடுதலைக் கலைஇலக்கியப் பேரவை மாநிலத் துணைச்செயலாளர் முனைவர் செல்லபாலு, தோழர் வெற்றி முரசு ஆகிய இருவரும் முன்னிலை வகித்தனர். நான் வரவேற்புரை வழங்க மாணவி சினேகா நன்றி உரை வழங்கினார். நிகழ்ச்சியை பேராசிரியர் கோ.சாந்தமூர்த்தி தொகுத்து வழங்கினார்.
இரண்டாவது அமர்வு
இரண்டாவது அமர்வில் அம்பேத்கரும் பௌத்தமும் குறித்து திரைப்பட இயக்குநர் கோபி நயினார் மிக நுட்பமாக பேசினார். இந்த அமர்விற்கு இளங்கவி இளங்கோ அவர்கள் தலைத்தாங்கினார். அரசு ஊழியர் ஐக்கிய பேரவை தோழர் கலிமுல்லா, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தோழர் ச.ரமதாஸ், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் தோழர் அ.செந்தில் குமார் ஆகியோரும் முன்னிலை வகித்தனர். விடுதலைக் கலைஇலக்கியப் பேரவை தோழர் சுரேஷ் திவான் வரவேற்பு வழங்க, ஆசிரியர் ராமஜெயம் நன்றி உரை வழங்கினார். இந்நிகழ்வை விசிக ஒன்றிய செயலாளர் தோழர் சஞ்சய் தொகுத்து வழங்கினார். செல்லங்குப்பம் சுப்பிரமணி, தேனி இளமதி ஆகிய இருவரும் மண்ணிசைப் பாடலை வழங்கினார்கள்.
தமிழகத்தில் தலித் இயக்கங்களின் செயல்பாடும் – தலித் விடுதலையும்
தமிழகத்தில் வட்டார அளவில் சிறிய சிறிய தலித் அமைப்புகள் தலித் மக்களுக்களின் உரிமைகளுக்காக மிகப்பெரும் பங்களிப்பு செய்துள்ளன. பெரிய இயக்கங்கள் குறித்து பேசும் நாம் இவற்றை கவனிக்காமல் விட்டுவிடுகிறோம். ஆனால், வட்டார அளவிலான தலித் மக்களின் விடுதலையை சிறிய சிறிய அமைப்புகள் மிக தீவரமாக மக்கள் போராட்ட வடிவிலும் சட்ட போராட்ட வடிவிலும் வென்றெடுத்திருக்கிறார்கள். இவ்வமைப்புகள் குறித்து பேசப்பட வேண்டும் என்று பேரவை முடிவுச்செய்து அதற்கு தக்க ஆளுமையை அழைக்க வேண்டுமென்று எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம் அவர்களை அழைத்து திருவண்ணாமலை சிஜடியு அலுவலகத்தில் 2018 ஜனவரி 7 ஆம் தேதி மேற்சொன்ன தலைப்பில் விரைவாக பேச வைத்தோம். தோழரும் மிக விரிவாக பேசினார். வட்டார அளவிலான சிறிய சிறிய அமைப்புகள் தொய்வடைவது தலித் மக்களின் உரிமையை வென்றெடுப்பதில் நாம் பின்னடைவை சந்திப்போம் என்றார். கள எதார்த்தமும் அதுதான் உண்மை என்பதை பின்னாட்களில் உணர்ந்தோம். இந்நிகழ்விற்கு கவிஞர் வெண்ணிலவன் தலைத்தாங்கினார். தோழர் எழில் முன்னிலை வகித்தார். நான் வரவேற்புரை வழங்க பேராசிரியர் கோ.சாந்தமூர்த்தி தொகுத்து வழங்கினார். இந்நிகழ்வில் சுற்றவட்டார பட்டதாரி இளைஞர்கள் பலர் பங்கெடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மகளிர் தின சிறப்புக் கருத்தரங்கம் மற்றும் அமைப்பாய்த் திரள்வோம் நூல் அறிமுகம்
ஆண்டுதோறும் மார்ச் 8 மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் பேரவைச் சார்பாக சிறப்பு கருத்தரங்கம் ஒருங்கிணைக்கப்பட வேண்டுமென்று முடிவுச்செய்து 2018 மார்ச் 3 ஆம் நாள் திருவண்ணாமலை கிண்டர்கார்டன் பள்ளியில் மாலைநேர நிகழ்வாக ஒருங்கிணைத்தோம். இந்நிகழ்விற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்க மாவட்ட செயலாளர் லூர்துமேரி தலைமைத்தங்கினார். முனைவர் வே.சுலோச்சனா, முனைவர் கு.லட்சுமி, தோழர் பெல்.ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்விற்கான நோக்கி உரையை பேராசிரியர் ந.வெண்ணிலா அவர்கள் வழங்கினார்.
தஞ்சை சூரக்கோட்டை அபிராமி மாரிமுத்துவை காதலித்து மணம் செய்துகொண்டார். அபிராமியின் அப்பா பழனிமேகமும் அண்ணன் அருண்குமாரும் மாரிமுத்துவை விருந்துக்கு அழைத்து படுகொலைச் செய்துவிட்டனர். ஒரு வயது பெண் குழந்தையோடு ஆதரவற்ற நிலையில் நீதிக்குப் போராடிய சாதி ஒழிப்பு போராளி அபிராமி அவர்களை இந்நிகழ்வில் கருத்துரை வழங்க அழைத்திருந்தோம். அவரோடு த.நா.பெ.இ.குழு தோழர் சு.சுமதி அவர்களும் கருத்துரை வழங்கினார். இந்நிகழ்விற்கு சிறப்புரை வழங்க தோழர் பாலபாரதி அவர்களை அழைத்திருந்தோம். மிக விரிவாக பேசினார். நிகழ்வின் இறுதிப் பகுதியாக “அமைப்பாய்த் திரள்வோம்” நூல் குறித்து விடுதலைக் கலைஇலக்கியப் பேரவை மாநிலச் செயலாளர் கவிஞர் யாழன் ஆதி அவர்கள் மிக சிறப்பானதொரு அறிமுகத்தை வழங்கினார். அமைப்பாய்த் திரள்வோம் நூல் வெளியீட்டிற்குப் பிறகு அறிமுக கூட்டத்தை பேரவைதான் முதலில் நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிகழ்விற்கு பேராசிரியர் கோ.சாந்தமூர்த்தி வரவேற்புரை வழங்க நான் நன்றியுரை வழங்கினேன். விடுதலைக் கலைஇலக்கியப் பேரவை சுரேஷ் திவான் நிகழ்வைத் தொகுத்து வழங்கினார்.
குறிப்பு: தம்மம் சிந்தனையாளர் பேரவைக் கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்கும்போது மலைப்பாக இருக்கிறது. எழுத எழுத நடத்திய நிகழ்வுகள் சீட்டுக்கட்டாய் அடுத்தடுத்து வந்துகொண்டே உள்ளது. வெளிவர உள்ள இதழின் பக்கங்கள் கருதி இதன் தொடர்ச்சி அடுத்த இதழில் வெளிவரும் என்பதை பெருமையோடு சொல்லிக்கொள்கிறோம்.
அரிய பணி…. வாழ்த்துகள் தோழர்களே
Ganapathi மிகவும் சிறப்பு தோழர் பழைய நினைவுகளை அசைபொழுதாக நான் உணர்ந்தேன் இடதுசாரி சிந்தனையோடு இருந்த நீங்கள் மார்க்சியம் பெரியாரியம் அம்பேத்காரையும் கிராமப்புறத்தில் இருக்கின்ற இளைஞர்களை தட்டி எழுப்பிய ஒரு பதிவாக நான் கருதுகிறேன் கட்டுரையின் சாராம்சம் மிகவும் சிறப்பு நன்றி உங்களோடு தோழர் கணபதி சங்கம்