தனிமை..

சொந்தம் விடுத்து 

சொந்த மண்ணைவிட்டு

வேலை தேடி வெளிநாடு வந்து 

காலை ஊன்றி நிற்க

காலத்தைத் தொலைத்துவிட்ட 

என்னைப் போன்றவரின்

எண்ணக் குமுறல்கள் கவிதையாய்

வார இறுதி நாட்கள் 

நண்பர்களின் ஏதாவது ஒரு வீட்டில் 

ஒன்று கூடிக் கழிக்கும் 

சராசரி ஆண்களில் ஒருவனாய்

ஆட்கள் நிறைந்து கிடக்க 

ஆட்டம் கலையாய் நடக்க

விதம்விதமாய் உணவுகள் பரிமாற 

அகத்தின் அழகினை மறைத்து 

முகத்தில் புன்னகை அணிந்தாலும் 

தனிமையில் தவிக்கத்தான் செய்கிறது மனம்

நான் வாழ்க்கையில் முன்னேற 

தாண்டி வந்தவர்கள் மட்டுமின்றி 

மண்ணில் புதைந்து போனவற்றையும் 

எண்ணிக் கண்ணீர் வடிக்கிறது

எப்படியாவது முன்னேற வேண்டும் 

என்ற வெறியுடன் வந்த உள்மனம்

இயற்கையை அழித்து 

செயற்கையாய் கட்டிய மாடிவீடு

பல நூறு மரங்களைச் சவங்களாக்கி 

சுவர்களாய் நிற்கும் சவச்சிறையில்

சடலங்களின் மத்தியில் 

குற்ற உணர்வின்றி வாழப் பழகிக் கொள்கிறேன் 

வெயிலில் காய்ந்த மேகம் 

சேர்த்து வைத்த வியர்வையை சிந்தி

தூய்மையாக்கிய வெளியை 

வசதியைக் காட்ட 

வாகனங்களை 

தேவைக்கு அதிகமாக வாங்கி 

மாசு படுத்தி மகிழ்கிறேன் 

பன்னாட்டு நிறுவனத்திற்கு 

பண்புகளைக் கொடுத்து விட்டு 

பதவியை வாங்கி அணிந்து கொண்டு 

கிடைக்கும் வருமானத்தில்

அரிதாரம் பூசிய பிணமாய் 

பணத்தின் பின்னே அலைகிறேன்

உறவுகளற்ற உலகத்தில் 

உரமாக தனிமையில் வாழ்வது எப்படியென்று

என் பிள்ளைகளைப் பழக்குகிறேன் 

அன்னிய கலாச்சாரத்தின் அடிமைகளாய் 

சுயநலமாக இருக்கும் கலையை 

அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கிறேன்

ஒவ்வொரு முறை

சாலைச் சந்திப்பில் நிற்கும் போதும்

கையேந்தி நிற்கும் பிச்சைக்காரர்கள்  

நினைவுபடுத்தி விடுகிறார்கள்  

நான் கடந்து வந்தவற்றை…

சொந்தங்கள் வசித்து 

சுவாசம் நிறைத்த கூடுகள்

மாந்தரற்று அனாதையாகி 

கல்லறைகள் கல்லறையாய்

பதிந்த காலடிச்சுவடுகள் 

மடிந்து மரணமாகி

இடிந்த இதயக்கீறல்கள் விழுந்து பாலமானதளம்

பாசத்தைக் குழைத்துப் 

பூச்சாய்பூசிய கண்ணாடியில்

ரசமிழந்து கறைபடிந்து 

செங்குருதியாய் செங்கற்கள்

கூவிக்களித்த குரல்களை 

கூரையில் நிரப்பிவைக்க

சிலந்தியவிழ்த்த மேலாடையில் 

பத்திரமாய் பதிவுசெய்து

அதிர்வலையில் ஒலியெழுப்பி 

வளையத்தில் ஊஞ்சலாடும்

வௌவாலாய் நினைவுகள்

வியர்வையில் குளித்தகட்டிலும் 

விரலிடுக்கில் சிலிர்த்ததொட்டிலும்

களையிழந்து காவியுடைக்காவியமாகிட 

அழியாத நினைவுகளைத் தாங்கியபடி

அலங்கோலமாய் கிடக்கும் வீடுகள்

பருவத்தில் பயிர் செய்ய 

பருத்த மடிகளைச் சுமந்து

பிரசவிக்கும் நெல் குழந்தைகள் 

களத்துமேட்டில் தவழ்ந்து விளையாட

களவாடிய பொழுதுகளில் 

காதலில் திளைக்கும் இளசுகள்

கண்கள் கலந்து 

கவிதை வாசித்த 

காலத்தின் காட்சிகள் 

காணாமல் போய்விட

மடிகனக்க படியளந்த நிலமோ 

வடிவிழந்து தரிசாகி மலடாகிக் கிடக்கிறது

கறவை வாசம் தேடி 

காளை வந்து விழுந்து 

களவின் அழகினை ரசித்த ஏரி

காய்ந்த மீனைக் கவர 

ஆகாயத்தில் அலையும் கழுகின் 

காமத்தைக் கண்டு தினம் பிணம் சுமக்கிறது

வாசுகி இறைத்த வாளியும் 

வாண்டுகள் எறிந்த சில்லறையும்

நீந்தி விளையாடிய கிணறுகள் 

நீர் வறண்டு தூர்வாராமல் துவண்டு கிடக்கிறது 

பக்தரின் பாதம் தேடி 

வாசல் பார்த்துக் காணாமல் 

கல்லாகி நிற்கிறது கடவுளும் கூட

வயோதிகப் பெற்றோரோ 

வருவர் பிள்ளையும் பேரனும்

வாய்க்கரிசி போடவாவது என்று 

புலனத்தில் புகைப்படத்தைப் பார்த்திருக்க

வந்தால் விசா பிரச்சினை என்று 

சாவிற்கும் சமாதானம் சொல்லி விட

தனிப் பிணமாய் பயணம் நடக்கிறது 

மடிந்து போனவற்றின் 

படிந்து கிடக்கும் நினைவுகள்

என்றும் விட்டுப் போகாது 

என்று எண்ணிய படியே

கடந்து போகிறேன் நாட்களை 

தனிமையில்…

நிறவெறி களைவோம்..!! மனிதநேயம் காப்போம்..!!

விடிந்தது காலைப் பொழுது…

மேக முந்தானைக்குள் முகம் பதித்து மயங்கிக் கிடந்த மஞ்சள் கதிரவன் 

கிழக்குக் கடலில் உதித்து விளக்காய்ப் பகலினை உமிழ

உலகமும் வெளிச்சத்தில் நனைந்து பனி விலகிப் பணியைத் துவக்கியது 

கலைமகளும் திருமகளும் வீட்டிற்கு வராது போக

பசியும் பட்டினியும் தம் ஆட்டத்தை நிகழ்த்திட

பெற்ற பிள்ளைகளின் அழுகையை அணைத்திட

கற்ற வித்தையை கடையில் காட்ட முயன்றான் நம் கதாநாயகன் 

கையும் களவுமாய் காவலரின் காலடியில் சிக்கி

மூச்சுவிட முடியவில்லையென முக்கி முனகியும்

பேச்சினைக் கேட்காமல் குரல்வளையை நெரித்திட

ஏழடி உயரச் சதைப்பிண்டமும் சரிந்து விழுந்து மாண்டது

சாலையோரச் சக்கரவிளிம்பில் சவமாகி நின்று போனது

தனிமனிதனின் தனித்த உயிர்மூச்சு மட்டுமல்ல

மனிதவெறி கொண்ட ஓநாய்களின் வெறியாட்டத்தில்

மரணித்துப் போன மனிதநேயத்தின் உயிர்முடிச்சும்தான்

துடித்து அடங்கிய நாடியின் காணொளி கண்டு

துடித்துப் போனது உலகிலுள்ள நல்லிதயம் மொத்தமும்

வெடித்து எழுந்தது வீதிகளில் கலவரமும் ஆர்ப்பாட்டமும்

பிடித்து எரிந்தது கடைகளும் வாகனமும்..ஏன் மக்கள் இதயமும்தான்..!!

உயிர்குடிக்கக் காத்திருக்கும் கிருமியே ஒடுங்கி நின்றது அன்று

உயர்குடியினரும் துயர்கண்டு கைகோர்த்து களத்திலிறங்கிப் போராட

கேட்டால் அழியும் தேசம் கேட்டாலன்றி பிழைக்காதென உணர்ந்து

கூட்டமாய் இளைஞரோடு முதியோரும் கோட்டை முன் நின்று முழங்கி முறையிட

இல்லையென்று இழுத்துமூடி இடுக்கினில் பதுங்கியவரும்

வெள்ளைமனம் திறந்து ஊடகத்தில் பூடகமாய் மாற்றத்தை அறிவிக்க

மனிதநேயத்திற்கு என்றும் மரணமில்லையென மகிழ்ந்து

மெதுவாக மேற்குக் கடலில் மூழ்கியது செஞ்சிவப்புச் சூரியன்..!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *