டீன் ஏஜ் வயது பிள்ளைகளை எளிதாக அணுகும்முறை

இன்றையக் காலகட்டத்தில்  பதின்ம வயது பிள்ளைகளைக் கொண்ட பெற்றோர்கள் பலரும் அப்பிள்ளைகளின் எதிர்கால பயத்தையும், அவர்களின்  நிகழ்கால பொறுப்பின்மையைக் குறித்தும் பெரும் கவலையோடு இருக்கிறார்கள். 

வயதுவந்த பிள்ளைகளை வளர்ப்பது என்பது பெரும் சவாலை எதிர் கொள்ளும் வேலையாக இருக்கிறது. காரணம் நம் பிள்ளைகள் நம் கையை விட்டு போய்விடுவார்களோ என்ற பயத்தை  இன்றைய அறிவியல் தொழில் நுட்பம் மற்றும் சினிமாக்களும் கூட தரத் துவங்கி விட்டன. பிள்ளைகளை கைக்குள் வைத்துக்கொள்ளும் யுக்தியை தேடி பெற்றோர்கள்  தவிக்கின்றனர்

பிள்ளைகளிடம் நட்புறவைப் பலப்படுத்துவோம்:

முந்தைய தலைமுறை போல் இன்றைய தலைமுறை இல்லை என்பதே பெற்றோர்களின் கூடுதல் பயத்திற்கு காரணம். இன்றைய இளந்தலைமுறை அப்பாவித்தனத்தை இழந்ததோடு சகிப்புத்தன்மை இன்றியும் வளர்கிறார்கள்.

தேவையற்ற வயதில் தேவையில்லாத விசயங்களை இணையத்தில் மூலம் தங்களது அறிவில் புகுத்துக் கொள்கிறார்கள். இதன் காரணமாக வயதுக்கு மீறிய சிந்தனைகளையும் செயல்களையும் புரிந்து பெற்றோர்களையும் கலக்கமடையச் செய்கிறார்கள்

எந்த ஒரு பிரச்சனையும் தீர்வு இன்றி இருக்காது என்பார்கள் அதுபோலவே சவாலான இந்த விசயத்தையும் நாம் எளிதாகவே அணுகலாம்.

பொதுவாக பெற்றோரின் பயத்திற்கு கீழ்கண்ட  முதல் உளவியல் காரணம் இதுதான்,

” தாங்கள் சிறுவயதில் செய்த தவறுகள் சதங்கள் பிள்ளைகளும் செய்யக்கூடும் என்ற சந்தேகத்தோடு வயதுவந்த பிள்ளைகளை காண்பதாலேயே பெற்றொர்களின் பயம் அதிகரிக்கிறது அந்த சந்தேகத்தைத் தூர எறிந்தாலே பயம் குறைந்துவிடும்.

இந்த பதின்ம வயது பிள்ளைகள் அதிகம் விரும்புவது நட்புக்களை மட்டுமே என்பதால் பெற்றோர்கள் தங்கள்  கண்டிப்பு எண்ணத்தை கொஞ்சம் விலக்கி வைத்து அவர்களின் நண்பர்களாக மாற வேண்டும். அவர்களுக்கென நம் நேரத்தை கொடுத்து, அவர்களோடு பயணிக்க வேண்டும் அவர்களின் நண்பர்களைப் பற்றி நாமும் தெரிந்துக்கொண்டு அவர்களின் நண்பர்களிடமும் நட்பு பாராட்ட வேண்டும்.

மேலும் ஒவ்வொரு நாளும் அவர்கள் பள்ளியில் நடந்த நிகழ்வுகளை, நண்பர்களிடையே நடந்த விசயங்களை அவர்களின் அன்றைய மனநிலையையும் கேட்டுத் தெரிந்துக் கொள்வது மிக அவசியம். ஏனெனில் இன்றைய பதின்ம வயது பிள்ளைகள் அதிகளவில் மனச்சிதைவிற்கு உள்ளாகிறார்கள் இதன் காரணமாக தனிமையைத் தேடுகிறார்கள். தனிமை எவ்விதத் தவறையும் தூண்டும் வல்லமையானது என்பதால்,வயதுவந்த பிள்ளைகளை தனிமையில் விடாது பெற்றோர்கள் தங்கள் பார்வைக்குள் வைத்துக்கொள்வதே நன்று.

ஒவ்வொரு நாளும் அவர்களின் மனநிலை அறிந்து அதற்கு சாதகமாக பாசிட்டிவ் விசயங்களைப் பேசப்பேச பிள்ளைகள் நம்மை நெருங்கி வருவார்கள். மேலும் இந்த வயதில் வரும் ஆண்பெண் ஈர்ப்பு பற்றியும் அதனை நல்ல நட்பாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கையையும் தருவது ஒவ்வொரு பெற்றோரின் கடமை.

சுதந்திரத்தின் எல்லைகளை தீர்மானிக்க வேண்டும்:

அவர்களின் சுதந்திரத்துடன் இருக்கும் சூழலை நாம் ஏற்படுத்தி தரவேண்டும். எல்லாவற்றும் கேள்விகேட்பது, எல்லாவற்றையும் மறுப்பது போன்ற செயல்களை செய்யாமல் அவர்களை நம்பத் தொடங்க வேண்டும்.  

பதின்ம வயது நம் பிள்ளைகள் பொறுப்போடு நடந்துகொள்கையில் அதனை அங்கீகரிக்க வேண்டும். இந்த பொறுப்பை நீட்டித்தால் சுதந்திரம் உண்டு என்பதை  அவர்களுக்கு தெளிவுப் படுத்த வேண்டும்.

அதுபோல்  அவர்கள் தவறான செயல்களை செய்கிறார்கள் என்பது தெரியவருகையில்  அவர்களின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தி காரணத்தை உணர வையுங்கள்.

பொறுப்புதான் சுதந்திரத்தை தக்கவைத்துக்கொள்ளும் ஒரே வழி என்பதை அவர்களுக்கு உணர்த்துவது பெற்றோர்களின் கடமையாகும்.

அவர்களுக்குப் பேசவும், பொதுவான கேள்விகளைக் கேட்கவும், பதில்களை அளிக்கவும் வாய்ப்பு கொடுங்கள்.

 பதின்மவயது பிள்ளைகளை கையாள எளிதான பத்து வழிகள்:

*அமைதியான வார்த்தைகளாலும் செயல்களாலும் குழந்தைகளுக்கு சரியானதையும் தவறையும் கற்றுக்கொடுங்கள்

* அவர்கள் மீது நீங்கள் சந்தேகப்படவில்லை என்பதை அவர்களை நம்ப வையுங்கள்

*தொடர்ந்து அவர்களை பாராட்டிக்கொண்டிருங்கள்

* வயது வந்த பிள்ளைகளோடு கண்டிப்புகளைத் தளர்த்தி நகைச்சுவை உணர்வோடு நடந்துக் கொள்ளுங்கள்

*அவசரக் காலத்தில் சரியான முடிவுகளை எடுக்கச் சொல்லி பழக்குங்கள்

* தோல்வியை பழக்கப்படுத்துங்கள் தோல்விகளையும் புகழ்ந்து பாராட்டி அடுத்த வெற்றிக்கான தன்னம்பிக்கைக் கொடுங்கள்

*நீண்டநேரம் அவர்கள் தனிமையில் இருக்க அனுமதிக்காதீர்.பிள்ளைகளுக்கு சுதந்திரத்தையும் அதேநேரம் நம் கவனத்தை அவர்கள் மீது வைப்பதும் நம் கடமை.

*தவறான செயல்கள் மூலம் வரும் விபரீதங்களின் ஆதாரங்களை இணையத்தின் மூலமாகவோ அனுபவக்கதையாகவோ அவர்களிடம் சொல்வதும் நல்ல பலனைத் தரும்.

* அவர்களின் எல்லா விசயங்களிலும் தலையிடாமல் அவர்களுக்கான இடத்தை அவர்களிடமே கொடுங்கள்

* நீங்கள் சிறந்த நண்பர் என்பதை பிள்ளைகள் நம்பும்படியான நம்பிக்கையை விதையுங்கள்

ஒரு பெற்றோராக, இந்த சமூகத்தில் உங்கள் பிள்ளைகள் நடந்துகொள்ளக் கற்றுக்கொடுப்பது உங்கள் வேலைகளில் ஒன்று. இது நேரத்தையும் பொறுமையையும் எடுக்கும் வேலை. ஆனால், பயனுள்ள மற்றும் ஆரோக்கியமான ஒழுங்குமுறை உத்திகளை அவர்கள் கற்றுக்கொள்ள இது உதவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!