சேலத்துச் செடிகளின் வேர்களில் கமழும் மணம்   

சமீபத்தில் வெற்றித் தமிழர் பேரவையின் 2024 ஆம் ஆண்டிற்கான கவிஞர்கள் திருநாள் விருதைப் பெற்றுள்ள கவிஞர் பழ.புகழேந்தியின் பதினாறாவது படைப்பு பிறிதொரு வேரில் பூத்தல். முன்னதாக பதினாறு வயதினிலே, முடிவிலா சோகம், சுவடுகள், ஒற்றைப் பூ, ஊமை நெஞ்சின் ஓசைகள், கரும்பலகையில் எழுதாதவை, சருகாவதற்கும் சற்று முன்பு, இரவும் நீயும் இருளும் நானும், எமைத் திருத்தி வரைந்த தூரிகை, புலன்களின் மீதான எழுத்தலங்காரம், எனது தோட்டத்திலும் சில வண்ணத்துப் பூச்சிகள், கருப்புப் பறவையின் குரல், ஒப்புதலற்ற வாக்குமூலங்கள், ஒளிபெயர்ப்பு, நிலாக்குட்டி ஆகியன வெளிவந்திருந்தன. ஏப்ரல் 2024இல் பிறிதொரு வேரில் பூத்தலைப் பரிதி பதிப்பகம் முதற்பதிப்பாகக் கொண்டுவந்தது. ஜூன் 23, 2024 அன்று சொற்கூடு, பரிதி பதிப்பகம் மற்றும் சேலம் இலக்கிய அமைப்புகள் நடத்திய ‘புகழ் விழா’வில் ‘பிறிதொரு வேரில் பூத்தல்’ வெளியிடப்பட்டது. பழ.புகழேந்தியின் முந்தைய கவிதைப் பிரதிகளிலிருந்து பிறிதொரு வேரில் பூத்தலைத் தனித்து அடையாளப்படுத்த முடியும். ஏனெனில், இப்பிரதி கவிதைப் பிரதிகள் பற்றியதொரு கவிதைப் பிரதி. ஒருங்கிணைந்த சேலம் மாவட்டங்களின் எல்லைக்குட்பட்ட அறுபத்திரண்டு கவிஞர்களின் கவிதைப் பிரதிகளைக் கருவாகக் கொண்டு இக்கவிதைப் பிரதி ஆக்கம் பெற்றுள்ளது. அக்கவிஞர்களின் கவிதைப் பிரதிகளின் தலைப்புகளைக் கவிதைத் தலைப்புகளாக அமைத்து அப்பிரதிகளுக்கான கவிதைகளை கவிஞர் பழ.புகழேந்தி யாத்துள்ளார். இத்தகைய வடிவ ஆக்கமும் ஒரு வகையில் விமர்சனக் கலையே. நூலுள் உட்புகும் முன்பாக கவிஞர்களின் பெயர்களும் அவர்களது கவிதைப் பிரதிகளின் தலைப்பும் அக்கவிதைப் பிரதிகளுக்கு கவிஞர் எழுதியுள்ள கவிதைகள் இடம்பெற்றுள்ள பக்க எண்களும் ஒரு பிரதிக்குள் பல பிரதிகளை பயிலும் அனுபவத்தை வாசகனுக்குத் தருவதாகவே உள்ளது.
கவிதை என்பது தோன்றி வர வேண்டுமேயன்றி தோண்டி எடுத்து வருவதல்ல என்பதுதான் எனது கவிதைக் கோட்பாடும் என தன் கவிதை நிலைப்பாட்டை உணர்த்தியவாறே இத்தகைய பிரதியாக்கத்தைச் செய்யும் பழ.புகழேந்தி அதற்குப் பல காரணங்களை முன்மொழிகிறார். அவற்றுள் குறிப்பாக, “இக்கவிஞர்களுக்கெல்லாம் ஏதோ ஒரு வகையில் நன்றி சொல்ல வேண்டும் போல் தோன்றியது எனக்கு. எப்படிச் சொல்வது என்று யோசிக்கையில்தான் இந்நூலுக்கான விதை விழுந்தது மனசுக்குள். ஒவ்வொரு நூலையும் ஒவ்வொருவருக்கும் காணிக்கை ஆக்குவது போல், ஒரு தொகுப்பின் ஒவ்வொரு கவிதையையும் ஒரு கவிஞருக்கு காணிக்கையாக்கினால் என்ன என்று தோன்றியது ? கூடவே, அவரவர் எழுதிய நூல்களின் பெயர்களையே தலைப்பாக வைத்துக் கொண்டு அக்கவிதைகளை எழுதி காணிக்கையாக்கினால், அச்செயலுக்கொரு கூடுதல் கனம் இருக்கும் என்றும் தோன்றியது. அச்சிந்தனையின் வெளிப்பாடுதான் பிறிதொரு வேரில் பூத்தல்” என்பதாகக் கவிஞர் குறிப்பிடுவதிலிருந்து சேலத்துச் செடிகளின் வேர்களின் வழியாக அவரும் பூத்துக் கொண்டதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
“வெவ்வேறு வேர்களின் துணை கொண்டு பூத்திருக்கிறேன். பூக்கள் – என்னுடையவை. வேர்கள் – என் மண்ணுக்குரியவை” என்பதாகத் தன் கவிதைகளைப் பூக்களாகவும், தன் கவிதைகளுக்குக் கருவாகிய கவிஞர்களின் கவிதைப் பிரதிகளை வேர்களாகவும் உருவகப்படுத்திக்கொண்ட கவிஞர் இந்நூலை அ. பரந்தாமனுக்குச் சமர்ப்பணம் செய்துள்ளார். 
பழ.புகழேந்தி தனது தந்தையான அன்னையன்பனின் ‘காலத்தின் கொடை’ என்னும் நூலுக்கான கவிதையொன்றில்,

“எப்போதேனும் கிடைக்க நேர்கிற
கற்கண்டுகளுக்காக 
வெங்கிச்சான் கற்களைக் கடித்துக் கடித்து
புண்ணாக்கிக்கொண்டே இருக்க முடியாது
மென்மையான உட்புறங்களை”

என்று குறிப்பிட்டுள்ள உண்மையை இன்னும் பலமுறையேனும் உரக்கப் படித்துப் பார்த்து இன்புறத் தோன்றுகிறது.

கி.சரவணக்குமாரின் ‘வார்த்தைகள் வெளியேற்றப்பட்ட அறை’ பற்றி எழுதுமிடத்து,

“கதவுகளின் கிரீச்சிடல்களில்
திரைச்சீலைகளின் சரசரப்பில்
மின்விசிறியின் சுழற்சியில்
இராப்பொழுது கடிகாரத்தில்
என்று ஓசைகளுக்குள் ஒளிந்து கொண்ட
இரக்கமற்ற சொற்கள்
அவன் காதுகளை
அறைந்து கொண்டே இருந்தன”

என்பதனுள் ஒரு பெருங் கதையை எழுதிச் செல்கிறார் கவிஞர்.

“இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு
நேர்ந்திருக்கிறது
உனது ஊரின் வழியாய்ப் போகும்
இந்த ரயில் பயணம்.
அங்கு
வண்டி நின்ற போது
எனது பெட்டியில்
நீ ஏறிக் கொண்டதைப் போலவும்
உனது ஊரில்
நான் இறங்கிக் கொண்டதைப் போலவும்
ஒரு பிரமை” 

என்று சூர்யநிலாவின் ‘அங்கு நீயும் இங்கு நானும்’ தொகுப்பிற்குக் கவிஞர் எழுதியிருக்கும் வரிகள் நமக்குள் எங்கிருந்தோ பல நினைவுகளைக் கடத்தி வருகின்றன.

“இந்தப் பொழுதுவரை
நான் ஆரோக்கியமாகவே இருக்கிறேன்
தோழர்களே
சிரித்தபடி
ஒரு நல்ல நிழற்படம் ஒன்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.”

எனப் பொன்.குமாரின் ‘இருப்பு’ குறித்துப் பேசும் கவிஞரின் சொற்கள் நம்மோடிருந்து இப்போது இல்லாமல் போனவர்களின் இருப்பை நினைவூட்டியவாறு மனதைக் கனக்கச் செய்கின்றன.
கண்ணனின் ‘நதி தொலைந்த கதை’ பற்றி பேசுகையில், 
“பயன்பாட்டில் இருக்கும் வரைக்கும்
இருந்து கொண்டிருந்த நதி
திடீரென்று ஒருநாள் காணாமல் போனது
கரையுடைத்து வெள்ளம் ஊருக்குள் பாய்ந்த போது” 
என்கிறார். இங்கு கவிஞர் பேசுவது நதியின் இயல்பையன்று மனித மனங்களின் இயல்பைதான். 

“கொலை செய்தல் என்பது
கழுத்தை நெரிப்பது மட்டுமல்ல
அணைத்துக் கொண்டிருந்த கரங்களை
தளர்த்திக் கொள்ளுதலும் கூடத்தான்.”

என்பன முல்லைவேந்தனின் ‘யாரிடம் சொல்லுவதோ?’ கவிதைக்கானவை. 

இவை அன்பின் வலியை, பிரியங்களை, நிராகரிப்பின் துயரங்களை இன்னும் இன்னும் அர்த்தப்படுத்திக் காட்டுகின்றன. 
க.வை.பழனிசாமியின் ‘வெண்மை ஒரு நிறமல்ல’ நூலுக்குக் கவிஞர் வடித்துள்ள வரிகள் அத்துணை அழகானவை. காதல் வயப்பட்ட ஒருவன் தன்நிலை மாறி எல்லாமும் அவளுக்காக, அவளாக மாறி நிற்பதனை அக்கவிதையில் காணமுடிகிறது. தமிழ்நாடனின் ‘காமரூபம்’ நூலுக்குக் கவிஞர் வடித்துள்ளவை ஓர் அறநூல் தத்துவங்களைப் போல்வன. அளவில் வரிகளும் வார்த்தைகளும் சுருங்கிப் போயிருக்கின்றன. வள்ளுவம், நாலடி போல ஏதோ ஒரு வாழ்வியல் போதனையை அவை சமயம் சாராது சாற்றுகின்றன; அவை சித்த நிலையெனினும் ஒக்கும். இவ்வாறே அறுபத்திரண்டு கவிதைகளும் தனித்துச் சுட்டத்தக்கன. கடந்த ஜூலை 9, 2024 அன்று கலைஞர் தொலைக்காட்சியில் ‘விடியலே வா’ நிகழ்வில் சுப.வீரபாண்டியன் அவர்கள் இந்நூல் குறித்துப் பேசியிருந்தார். மொத்தத்தில் இந்நூல் சேலத்துச் செடிகளின் வேர்களில் கமழும் மணத்தை வாசகர்களை நுகர்ந்திட செய்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!