சுற்றுச்சூழல் மாசுபாடு, ஓசோன் படலத்தில் ஓட்டை, காலநிலை மாற்றம் – இவை பல ஆண்டுகளாக எதிர் கொள்ளப்படும் சவாலான விடயமாக இருப்பினும், சமீப காலமாக அனைத்து தரப்பிலும் (அரசாங்கம், ஊடகங்கள், தன்னார்வலர்கள்) – மிக அதிகமாக விவாதிக்கப்படும் பொருளாக மாறியுள்ளது. மேலும், இதனால் ஏற்படும் பாதிப்புகளை எங்கனம் குறைக்க முடியும் (அ) சீர்படுத்த முடியும் என்று 193 நாடுகளின் கூட்டமைப்பாக செயல்படும் ஐக்கிய நாடுகளின் சபையில் விவாதிக்கப்பட்டு, தீர்விற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு அரசாங்கமும் இதற்கான தனி இலாக்காவை உருவாக்கி, சிறப்பு செயல் திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி வருகின்றன. இக்கால நிலை மாற்றம் என்பது பல கிளைகளைக் கொண்ட மிகப் பெரிய, விவாதப் பொருளாக இருப்பினும், சாமானிய மக்களும் அதன் விளைவுகளை உணரக் கூடிய தருணங்கள் தற்சமயம் அதிகரித்து வருகின்றது.
சுற்றுச்சூழல் என்றவுடன் என் நினைவில் முதலில் தோன்றுவது – 1980 களில் நான் அனுபவித்து மகிழ்ந்த – அருவி குளியல், சுனை நீர் (ம), பல தாவரங்கள், விலங்கினங்கள் நிறைந்த, வெட்டிவேர் வாசம் வீசும் மலை, வயல்வெளிகள், சில்லென்ற காற்று முகத்தில் அறைய மேற்கொண்ட இனிமையான பயணங்கள். இவற்றில் பெரும்பாலானவற்றை மனிதனின் பேராசைக்கு காவு கொடுத்து விட்டோம் என்ற முடங்கி இராமல், அதனை மீட்டெடுக்கும் முயற்சிகளை தொடர்ந்து செய்து வருகிறேன். அதற்காக, அன்றாட வாழ்வில் மேற்கொள்ளக் கூடிய விஷயங்கள் சிலவற்றை இங்கு பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.
மார்கழி மாதத்தில் மழை, ஐப்பசியில் காற்று, ஆடியில் புழுக்கம், கோடையில் அதீத வெப்பம் !! – இவை எல்லாம் நாம் தற்சமயம் அனுபவிக்கும் கால நிலை மாற்றத்தின் சில சான்றுகள்.
“விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து, உள்நின்று உடற்றும் பசி” என்பது வள்ளுவப் பெருந்தகையின் வாக்கு.
பசி என்பதே மனிதனை இயங்க வைக்கும் முழு முதல் காரணியாகும். அதனை நிறைவு செய்யும் வேளாண்மை செழிக்க வேண்டுமெனில், ஐம்பூதங்கள் என தொல் தமிழர்களால் வகைப்படுத்தப்பட்டுள்ள நிலம், நீர், ஆகாயம், காற்று, நெருப்பு (சூரிய ஓளி) – இவற்றை மாசுபடாமல் காக்க வேண்டும்.
“எல்லாம் சரி தான்… அதுக்கு நான் என்ன பண்ண முடியும், அத செய்ய வேண்டியது அரசாங்கமும் அதிகாரிகளும் தானே… “என்பது உங்கள் பதிலாக இருப்பின், உங்கள் சிந்தனையின் கோணம் மாற வேண்டும்.
உங்கள் வளர்ச்சியையும் தேவைகளையும், சுற்றுச் சூழலை பாதிக்காத வகையில் வாழ்க்கையை அனுபவிக்க பழக வேண்டும்.
சதுப்பு நிலங்கள் பூமியில் நீரை உள்வாங்கி இருத்தி, பல உயிரனங்களி்ன் உறைவிடமாகவும் இருப்பதை உணர்ந்து அதனை பாதுகாக்க விழையலாம்.
மனித இனம் மட்டுமல்லாது, பிற உயிரினங்களுக்கும் இந்த பூமியில் சம உரிமை உண்டு. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் பண்பை மறந்து, நான் எனது என்ற பேராசையினுள் சிக்கியதன் விளைவே இந்த பேரழிவுகளின் காரணகர்த்தா.
நுகர்வோர் கலாச்சாரம் என்ற பூதத்தின் பிடியில் சிக்கி, நல்ல உணவு பொருட்களுக்கு செலவழிப்பதைக் காட்டிலும் நாகரீகம் என்ற பெயரில் ஒவ்வாத உணவுகளை உண்பதும், வீணாக்குவதும், சமூகத்தில் போலியான மதிப்புக்காக தேவையற்ற பொருட்களை வாங்கிக் குப்பைகளை உருவாக்குவதும் கூட இதற்கான காரணிகளாகும்.
இது என்னுடைய தனிப்பட்ட பிரச்சனை அல்ல என்ற எண்ணத்தை விட்டொழித்து, நமது அடிப்படை பழக்க வழக்கங்களை சிறிதளவேனும் மாற்றிக் கொள்வதன் மூலம் நமது பங்களிப்பைக் கொடுக்க முடியும்.
சிறு துளி பெரு வெள்ளம் – உங்களின் ஒவ்வொரு சிறிய மாற்றமும் பெருமளவு மாற்றத்திற்கான வித்தாக அமையும்.
எங்கு ஆரம்பிக்கலாம் ??
வீட்டில் ஆரம்பித்து, தெரு, நகர், ஊர், மாவட்டம் என சிறிது சிறிதாக விரிவடையலாம்.
எப்படி ஆரம்பிக்கலாம்??
வட்டச் சுழற்சி பொருளாதாரம் (Circular Economy) என்னும் கோட்பாட்டை நம்மால் இயன்ற அளவு கடைப்பிடித்தாலே நல்ல மாற்றங்கள் உருவாகும்.
1. குறைத்தல் (Reduce) – தேவையற்ற மின்சார, வாகன, நீர் பயன்பாடு.
2. மறு உபயோகம் (Reuse): ஒரு முறை மட்டுமே உபயோகப்படுத்தக் கூடிய – நெகிழிப் பைகள், பேனா, நெகிழி/பேப்பர் கப்புகள் /கிண்ணங்கள் / தட்டுகள் / பாட்டில்கள் உறுஞ்சு குழாய்கள் (straw) தவிர்த்து, துணிப்பைகள், எவர்சல்வர் (stainless steel), கண்ணாடி (glass) பீங்கான் (ceramics) – பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் குப்பை மேலாண்மையும் சுலபமாகும்.
3. மறுசுழற்சி (Recycle): குப்பைகளை வீட்டிலேயே பிரித்து, மறுசுழற்சி மையங்களுக்கு அனுப்பலாம். குளிரூட்டி, துணி துவைக்கும் இயந்திரங்களில் இருந்து வெளியேறும் நீரை வேறு பல விஷயங்களுக்கு உபயோகிக்கலாம். இதன் மூலம் நிலத்தடி நீரை எடுப்பதை ஒரளவு மட்டுப்படுத்தலாம்.
மேலும், இரசாயனமற்ற உணவு (விவசாயம்), அழகு சாதனம் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் நிலத்தையும் நீரையும் பாதுகாக்கலாம்.
அருகில் உள்ள இடங்களுக்கு நடந்து (அ) மிதி ஊர்தி மூலமாக செல்வதால் எரிபொருள் சேமிக்கப்படும் – இதனால் ஏற்படும் மறைமுக லாபம்: பண விரயம் தவிர்த்தல் / உடல் ஆரோக்கியம்.
நாம் உபயோகிக்கும் குளிரூட்டும் சாதனங்கள் வெளயிடும் வாயுக்களால் ஏற்படும் பாதிப்பை மரங்கள் நடுவதன் மூலம் சமன்படுத்தி, காற்று மாசை கட்டுப்படுத்தலாம். வீட்டில் உருவாகும் மக்கும் குப்பைகளை உரமாக்கலாம். வீட்டில் இட வசதிக்கு ஏற்ப செடிகள் வளர்க்கலாம்.
கால நிலை மாற்றம் என்றால் என்ன, அதனை எப்படி கையாள்வது என்பது குறித்து வீட்டிலும், பள்ளி, கல்லூரிகளலும் உரையாடுவதன் மூலம், அதில் தனி மனிதனின் பங்களிப்பு எவ்வளவு முக்கியம் என அறிவுறுத்தலாம்.
இது சார்ந்த அரசாங்கத்தின் திட்டங்களில் பங்கெடுக்கக் கூடிய வாய்ப்புக்களை குழுக்களாக இணைந்து உருவாக்கி செயல்படலாம்.
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.
நாளைய விடியல் அனைவருக்கும் நலமாக அமைய, “சென்றது குறித்தல் வேண்டா…நீவீர் இன்று புதிதாய் பிறந்தோம் என்ற எண்ணமதை திண்ணமுற இசைத்து கொண்டு…” என்னும் கவி பாரதியின் சொற்களை மனத்தில் இருத்தி, செயல்படத் துவங்குவோம். துன்பமெலாம் தொலைந்து போகும்..திரும்பி வாரா…
செயல் – அது ஒன்றே சிறந்தது (சேகுவேரா).
சிந்திப்போம் ; செயல்படுவோம் ; மாற்றத்தை உருவாக்குவோம்.
சிறந்த கட்டுரை
வாழ்த்துக்கள்