“மனித கரங்கள், மனித மூளை, மன உறுதி ஆகியவற்றின் படைப்பாற்றலுக்கு எல்லைகளை ஐக் கிடையாது” என்பார்கள். இந்த வரியைத் தவறான முன்னுதாரண வாழ்விற்குள் இருந்தவர்களின் செயல்களும் பிரதிபலிப்பதுதான் முரண் .
அப்துல் கரீம் தெல்கி என்ற மனிதரின் வாழ்க்கையை ‘ஸ்கேம் 2003’ என்ற வலைத்தொடர் துல்லியமாக எடுத்துரைப்பதன் மூலம் அரச நிர்வாகத்தின் அவலங்களை இந்தியாவின் கடைக்கோடி குடிமகனும் அறிந்து கொள்ள முடிகிறது.
இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டு 10 எபிசோடுகளாக இத்தொடர் அமைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக இத்தொடரைப் பார்த்து முடித்த பின் அப்துல் கரீம் தெல்கியின் மிகப் பெரிய ஊழலின் மூலம் இந்த நாட்டின் ஒட்டுமொத்த நிர்வாகத் தோல்விகளை உணர முடிகிறது..
“எதையும் கட்டுமுன் முதலில் மனிதன், தன் மூளையில் அதை உருவாக்குகிறான் ” என்றார் கார்ல் மார்க்ஸ் .
அப்துலின் மூளை ஒவ்வொரு தடவையும் உடைத்துப் புதிதாக கட்டிக் கொண்டே இருந்தது. மனிதர்களின் நோக்கம் உள்ள உணர்வுப்பூர்வமான நடவடிக்கையான உழைப்பை அப்துல் செலுத்திய திசை உழைப்பின் உன்னதம் என்ற இடத்தை தகர்க்கிறது.
ஒரு கதை சொல்லட்டுமா சார் :
நடுத்தர வர்க்கத்திற்கு கீழான வாழ்வில் உழலும் மனிதர்களின் பேராசை உருக் கொண்டு நடமாடத் தொடங்கும் போது, எல்லோரும் அதை நியாயப்படுத்த ஒரு பின்னணிக் கதையை வைத்திருப்பார்கள். இல்லையெனில் தங்களின் அநியாய வழிப் பயணங்களுக்கு அதன் வழியாக ஒரு நியாயத்தை கற்பிக்க ஒரு கதையை பயன்படுத்திக் கொள்ளுவார்கள்.
அப்படியானால் உயர்தர வாழ்க்கைக்குள் இருக்கும் மனிதர்களுக்கு பேராசை இல்லையா? என்ற கேள்வி எழலாம். உயர்தர மனித வாழ்வு என்பதே பேராசைகளால் கட்டப்பட்ட ஒன்றுதான்.
அப்துல் கரீம் தெல்கிக்கும் பின்னணிக் கதை உள்ளது .கர்நாடக மாநிலம்
கனபூர் என்ற ஊரில் ரயில்வேயில் கடை நிலை ஊழியர்களாகப் பணியாற்றுபவர்களின் குடும்பத்தில் பிறந்தவர் அப்துல் கரீம் தெல்கி. அவரின் சிறிய வயதிலே தந்தை இறந்துவிட, வறுமையான சூழலில் தாயாரின் சிறிய வருமானத்தில் வளர்கிறார் .படிக்கும் போதே பகுதி நேரமாக வேலைகள் செய்து தன்னுடைய குடும்பத்திற்கு உதவி செய்கிறார் . இளம் வயதில் சவுதி அரேபியாவிற்கு வேலைக்குச் செல்கிறார். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பி வந்து போலி விசா எடுத்து ஆட்களை அனுப்பும் சட்டவிரோதச் செயல்களை செய்யத் தொடங்குகிறார் .விதவிதமாக திருடுவதற்கு வழி இருக்கும் திருநாடு இருக்கையில் ,தான் மட்டும் ஏன் வெளிநாட்டில் கஷ்டப்பட வேண்டும் என்று அப்துல் நினைத்து இருக்கலாம்.
ஆனால் இது போன்ற பின்னணிக் கதைகள் இந்தியாவில் கோடி பேருக்கும் உண்டு. இதில் இடம், பெயர் மாறும். மற்றபடி அசலாகப் பலருக்கும் இதுபோன்ற துயரக் கதைகள் இருக்கும் .சிறிதும் ,பெரிதுமாக உள்ளூர் அளவிலான சட்டவிரோதச் செயல்களை செய்து வந்த அப்துல் கரீம் தெல்கி, இந்திய அரசாங்கத்தின் கருவூலத்தை பெரிதும் நிரப்பும் முத்திரைத்தாள்களை போலியாக அச்சு எடுத்து விற்பனை செய்யும் பெரிய திருட்டுக்குள் இறங்குகிறார் .இந்தியாவில் முத்திரைகள் தேவைப்படும் ஆவணங்கள் மீது வரி வசூலிக்க முத்திரைத் தாள்கள் கோடிக் கணக்கில் தேவைப்படுகின்றன.அதில் துணிந்து கைவைக்கிறார் அப்துல்.அதற்கு ஒரு லாஜிக் கூறுகிறார்.பெரிய கடலில் ஒரு தேக்கரண்டி அள்ளும் போது யாரும் அதை அறியப் போவதில்லை என்கிறார்.
எல்லை தாண்டும் திருட்டு :
கர்நாடகா கடந்து நாசிக், ராஜஸ்தான், புதுடெல்லி, மும்பை என அப்துலின் மோசடித் தொழில் எல்லை விரிகிறது. அதிகாரம் ,அரசியல் துறைகளில் பங்குதாரர்களை உருவாக்குகிறார். முத்திரைத்தாள் மோசடி தொகை ரூபாய் 32,000 கோடி என்று சொல்லப்படுகிறது.இந்தியாவின் மிகப் பெரிய ஊழல் இது.
சிடிஐ,எஸ்டிஐ விசாரணை குழுக்கள் அமைக்கப்பட்டு அப்துல் கரீம் தெல்கி சட்டத்தால் தண்டிக்கப்பட்டாரா என்பதே ‘ஸ்கேம்-2003’ வலைத் தொடரின் கதை. பத்திரிகையாளர் சஞ்சய்சிங் எழுதிய
“Telgi Scam: Reporter’s Diary ” என்ற புத்தகத்தைத் தழுவி இத்தொடர் எடுக்கப்பட்டுள்ளது.உண்மை சம்பவங்களின் அடிப்படையிலான இத்தொடர் நாடகத் தன்மை மிக்க பரபரப்பான விசாரணைகள் அடங்கிய ஒன்று.
அப்துல் கரீம் தெல்கி மூளையாகச் செயல்பட்ட முத்திரைத்தாள் ஊழலில் அரசு ஊழியர்கள் ,அரசியல்வாதிகள் எனப் பலரும் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டதை தொடர் தெளிவாக முன்வைக்கிறது.
அமைப்பின் சிதைவுகள் :
இந்தியாவில் அரசின் கட்டமைப்பில் பல இடங்களில் விழுந்துள்ள ஓட்டைகள், அதன் வழியாக அரசியல், அரச அதிகாரப் பெருச்சாளிகள் எவ்வாறு லாவகமாக நுழைந்து திரிகின்றன என்பதை இத்தொடர் வெளிச்சமிடுகிறது. அரசியலும் அதிகாரமும் இறுகக் கைகளைப் பற்றிக் கொண்டு மக்களின் பணத்தை வாரித் தின்கின்றன .
அப்துல் கரீம் தெல்கி, ரயிலில் பழங்கள் விற்கும் காட்சியில் இருந்து தொடர் தொடங்குகிறது. சுவையாகப் பேசி அவர் பழங்கள் விற்கும் போது அதே ரயிலில் பயணிக்கும் ஒருவர் அதில் ஈர்க்கப்படுகிறார் .அவர் அப்துலை பெரிய நகரத்துக்கு அழைக்கிறார். சுவையாகப் பேசுவது என்பது வியாபாரத்தில் நுகர்வோரின் ஆசையைத் தூண்டுவது. அதையே அப்துல் எல்லா இடங்களிலும் கை கொள்கிறார். உழைப்பின் அடிப்படையே ,தேவைகளால் உந்தித் தள்ளப்படும் மனிதர்களின் விரிவுபடுத்தப்பட்ட நடவடிக்கை. இதை அப்துல் ஆசைகளால் உந்தித் தள்ளுகிறார். யாருக்கு என்ன தேவையோ, அதை அவர்கள் முன் வைக்கிறார் .கறரான ஒரு அதிகாரிக்கும் ஒரு தேவை இருக்கும். அதைக் கண்டறிந்து அவர் கண் முன் பளபளப்பான பரிசுப் பொட்டலமாக அப்துல் அதை வைக்கிறார்.கறைபடியாதக் கைகள் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக கறைகளுக்குப் பழகத் தொடங்கி விடுகின்றன.அரசின் தீவிர விசுவாசிகளையும் இது அசைத்து விடுகிறது.
குற்றத்தின் ஏணிப்படிகள் :
ஒவ்வொரு கன்னியாக இணைந்ததுதான் அரச நிர்வாகம். நாசிக்கில் பத்திரத்தாள்கள் அச்சடிக்கும் நிறுவனத்தில் தொடங்கி, சட்டம், காவல்துறை, அரசியலில் நிரம்பி வழியும் பணமூட்டைகளால் அரசியல் அதிகாரத்தில் அறத்தின் வெளுப்புத் தன்மையை கண்முன் இத்தொடர் வைக்கின்றது .
இதுபோன்ற எல்லா தர ஊழல்வாதிகளுக்கும் ஒரு குடும்பம் இருக்கிறது. அழகான குடும்பம். அதற்காக அவர்கள் பதட்டப்படுகிறார்கள் .குடும்பத்தில் மனைவி, குழந்தைகள் ,அம்மாவின் அன்பிற்காக ஊழல்வாதிகள் ஏங்குகிறார்கள் .அவர்களுக்கு தங்களின் கயமைத்தனங்களை தெரியாமல் பாதுகாத்துக் கொள்ள முயல்கின்றனர். அப்துலுக்கு ஒரு காதல் மனைவி இருக்கிறாள். மகள் இருக்கிறாள். ஆனால் அப்துலின் எல்லை தாண்டிய பணத்தின் மீதான ஆசைகள் அத்தனைக்கும் சவாலாக அமைந்து விடுகின்றன.
இந்தியாவில் திருட்டுத்தனங்களை செய்ய முன் வருபவர்கள் அதிகாரிகள் அரசியல்வாதிகளோடு கூட்டு வைத்துக் கொள்கின்றனர். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதம் இன்றி அனைவருக்கும் ஒரு விலையை அபதுல் வைக்கிறார் .அந்த மஞ்சள் தண்ணீர் ஊற்றப்பட்ட ஆடுகள் அதற்கு ராகமாக தலையை அசைக்கின்றன.அரசியலின் திரைமறைவு வேலைகளில் ஆண்,பெண் பேதமின்றி தலைவர்கள் விலை போகின்றனர்.
நண்பர்களை உருவாக்கிக் கொண்டே செல்லும் அப்துல், நண்பர்களின் துரோகத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் பழிவாங்கவும் செய்கிறார். ஒரே ஒரு அவசரத்தினால் அவரின் வாழ்நாள் முழுவதையும் குற்றம் உணர்வுக்குள் தள்ளிக் கொள்கிறார். அந்த குற்ற உணர்வுதான் அவரின் உடல், மனம் செல்களை மெல்ல அரிக்கத் தொடங்குகிறது.அந்த குற்ற உணர்வு மேலிடும் காட்சிகளை நன்றாக படமாக்கி உள்ளார் இயக்குநர்.
தூக்கம் விலைக்கு கிடைப்பதல்ல:
ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது அப்துல் போலி பத்திரத்தாள் மோசடியைத் தொடங்கிய பிறகு செல்வந்தன் ஆகிறார் .அதிகாரத்தில் மேலானவர் ஆகிறார். ஆனால் அவரது நாட்கள் அவரை நிம்மதியின்மைக்குள் தள்ளி விடுகின்றன .
ஒருவேளை அப்துல் இந்த திருட்டுத்தனங்களை நேரடி அரசியல் தளத்திற்குள் இருந்து செய்திருப்பாரெனில் அவர் கூடுதல் அதிகாரத்தோடு கடைசி வரை வாழ்ந்து இருப்பார் என்றும் நினைக்க வைக்கிறது .
” பத்து பத்து காசாக திருடினால் தப்பா” என்ற சங்கர் பட வசனத்தை இயக்குநரும் எழுத்தாளர்களும் சேர்ந்து வேறு வேறு வார்த்தைகளில் அப்துல் பக்கம் நின்று கூறுகின்றனர். அரசின் கஜானா எனும் கடலிலிருந்து ஒரு தேக்கரண்டி அப்துல் அள்ளிக்கொள்ள நினைக்கும் தொகையின் மதிப்பு 80 கோடி என்று அப்துலே கூறுகிறார்.
ஒரு சாமானியனாக இந்த தொடரை பார்க்கும்போது நம் மனம் விட்டுப் போகிறது. ஒரு இருநூற்று அம்பது ரூபாய் காசுக்காக நம் வீட்டு அருகாமையில் இருக்கும் சகோதரி,ஏதோவொருத் துணிக்கடையில் நாள் முழுவதும் நிற்கிறார். சலூன் கடையில் வேலை செய்யும் தொழிலாளர்களின் கால் நரம்புகள் தினமும் 200 ரூபாய்க்காக சுருங்கி, சுருட்டிக் கொள்கின்றன.
பெட்டி பெட்டியாக பணம் வாரம் தோறும் அப்துல் கரீம் தெல்கியால் அரசு,காவல்துறை அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு அளிக்கப்படுகிறது.
ஆறுதலாக ஒரு சில நேர்மையான அதிகாரிகள் அறத்தோடு நிற்கின்றனர் .
அவர்களின் துணிச்சல் அப்துலை சிறைக்குள் தள்ளுகிறது. ஆனால் அப்துலால் பயனடைந்த எவரும் சிறு கீறல் கூட இன்றி தப்பி விடுகின்றனர் .
அப்துலின் மும்தாஜ்:
திருடன் அப்துலின் மனசில் மனைவிக்காக கட்டப்பட்ட பளிங்கு கற்களால் ஆன தாஜ்மஹால் ஒன்று இருக்கிறது .அந்தக் காதலுக்காக கடைசியில் அவன் தன் தலையை பலிபீடத்தில் தானாகவே வைத்துக் கொள்கிறான்.எவ்வளவோ தவறுகளை செய்து விடுகிறோம்.அவை அம்பலப்பட்டு குடும்பத்தின் பிரதிநிதியாக மகள்,மனைவி முன் நிற்கும்போது மனிதன் கூசிக் குறுகிப் போய் நின்று விடுகிறான்.நிறைய கோடிகள் சம்பாதித்தும் அம்மாவை ரயில் சத்தம் கேட்காத ஒரு இடத்தில் புதைக்க முடியவில்லை என்று கதறுகிறான்.அம்மாவின் முகத்தை கடைசியாக அவனால் பார்க்கக் கூட முடியவில்லை.
இது மக்களின் சொத்து:
அப்துல் ஒரு கனவு நகரத்துக்குள் நுழைந்து ,திருடியது பல நூறு சாமானியர்களின் கனவுகளுக்கான ஆதாரங்களை என்பதை நேர்மையான அதிகாரி கூறுகிறார்.
“நான் மக்களிடம் நேரடியாக எதையும் எடுக்கவில்லை” என்று அப்துல் ஒரு இடத்தில் ஒரு போலீஸ் அதிகாரியிடம் கூறுகிறான். அதற்கு அந்த அதிகாரி “அப்துல் நீ எடுத்த 32 ஆயிரம் கோடியும் மக்களின் பணம். அதில் தான் இங்கு சாலைகள் போடப்படுகின்றன. மருத்துவமனைகள் கட்டப்படுகின்றன” என்பார்.
பிறரின் பேராசையை பயன்படுத்திக் கொண்ட அப்துல் தன் தலைக்கு மேல் ஒரு கூரை வேண்டும் என்றுதான் ஆரம்பத்தில் இத்திருட்டில் ஈடுபடத் தொடங்குவான். போகப் போக அவனது ஆசைகள் விரிந்து கொண்டே செல்லும். “பணத்தை சம்பாதிக்க அல்ல அவற்றை உருவாக்கவே விரும்புகிறேன்” என்று அவன் அடிக்கடி கூறுவான்.
ராஜிவ் கொலை ,நரசிம்மராவின் வருகை ,பொருளாதார நெருக்கடி, மன்மோகன்சிங்கின் தாராளமயம் என பல்வேறு அரசியல் கூறுகள் இத்தொடரில் தொட மட்டும் செய்யப்படுகின்றன.சந்தன கடத்தல்காரன் கர்நாடகாவில் இருந்து கடத்திய நடிகரை மீட்ட சம்பவத்தின் பின்புலத்திலும் அப்துலின் பணம் அரசின் சார்பில் இருந்துள்ளது என்பதை அறியும் போது ஒரு இந்திய நாட்டின் குடிமகன் அதிர்ந்துதான் போவான். திருடனின் பணத்திற்கு அரசின் அங்கீகாரமும் வழங்கப்படுகிறது.
ஒரு திருட்டின் கன்னிகள் பல்வேறு இடங்களில் முடிச்சிடப்படுகின்றன.
அந்த முடிச்சுகளை இதுபோன்ற சூழல்கள் திறக்க உதவுகின்றன.
தத்துவ விசாரணைகள்:
மீன் வாங்க வரும் ஒருவரிடம், “எப்போதும் வாலை,அயிரை போன்ற மீன்கள்தானா?. வஞ்சிரம் மீன் வாங்க வேண்டாமா சார் ” என்று ஆசைத் தூண்டிலை அப்துல் மீன் மார்க்கெட்டில் வைத்துக் கூட போடுகிறார் .
சட்டத்தின் நீண்டக் கைகளோடு அப்துலுடைய கைகளும் நேரடியாக சேரத் தொடங்கி விடுகின்றன. அதை அப்துலே ஒரு இடத்தில் சொல்லி சிரிப்பார் .
சிங்கம், கழுதைப்புலிகளை வைத்து அதிகாரத்தின் பசிகளுக்கு பணம் என்னும் உணவை அப்துல் வீசிக் கொண்டே இருக்கும் கதையை ஓரிடத்தில் கூறுவார். சிங்கம் சாப்பிட மறுத்ததை கழுதைப்புலிகள் சாப்பிட காத்திருக்கும். எந்த டேபிள் பணத்தை மறுக்கிறதோ அவற்றின் அடுத்த டேபிளுக்கு பணம் நகர்ந்து எப்படியோ தான் நினைத்ததை சாதித்துவிடுகிறது.
எங்கள் ஊரில் ஒரு வியாபாரியை பார்த்திருக்கிறேன். அவர் நிறைய சம்பாதிப்பார். ஆனால் பொது இடங்களுக்கு நேரில் வரமாட்டார். அவருடைய அறையில் வைத்தே அவருடைய எல்லா ஆசைகளையும் தீர்த்துக் கொள்வார் .புகழுக்கு ஆசைப்படாமல் தன்னளவில், மனமும் உடலும் ஒருங்கே மகிழ்ச்சியாக இருப்பார். அப்துல் இத்தொடரில் எலி- சிங்கம் என ஒரு உதாரணத்தை கூறுவார் .அப்துல் தன்னை எலியாக வைத்துக் கொண்டிருக்கும் வரை அவருக்கு எந்த பிரச்சினையும் வருவதில்லை. அவர் தன்னையும் அறியாமல் ஒரு இரவில் தன்னுடைய அதிகாரத்தின் ஆசை துளிர்விட ராஜாவாக தன்னை ஒரே ஒரு இரவுக்கு மட்டும் மாற்றிக் கொள்வார் .மறு இரவுகளிலிருந்து அவரை ,அது தூங்க விடாமல் செய்துவிடும் .அப்துல்,தான் ஊருக்கு
எலியாக காட்சி தருவதும் கூட ஒரு தந்திரமே.
மேலும் பல இடங்களில் அவர் தத்துவங்களைக் கூறிக் கொண்டே இருப்பார் .”போகப் போற இடம் பக்கத்தில் வந்து விட்டால் ,மனசு இன்னும் வேகமாக ஓட ஆரம்பிச்சுடும்” .
இப்படி எல்லா தத்துவங்களும் உண்மைக்கு அடிபணிந்தவையே. தத்துவத்தின் நாக்கு கூட வளையலாம்.ஏனெனில் அது ஈர்ப்பை நம்பி இருக்கிறது.ஆனால்
உண்மையை வளைக்க இயலாது. அதுதான் அப்துல் அத்தனை ஆண்டுகள் ஆடிய ஆட்டத்தை ஒரு இரவில் தடுமாற வைத்துவிடுகிறது.
அரசியல் கட்சிகளின் சாயம்:
கர்நாடகா, மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் தலைவர்கள் மாறி மாறி இந்த மோசடிக்கான நியாயம் கோரும் குரலை எழுப்புவர். அத்தனையும் நாடகமாக முன்கூட்டியே திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டவை. ஒரு சாமானியன் இவ்வாறுதான் ஏமாற்றப்படுகிறார்.எல்லாவற்றிற்குப் பின்னும் அதிகாரமும் அரசியல் இருக்கிறது என்றால் சாமானியன் நீதியைத் தேடி எங்குதான் செல்வான்? இப்படி எல்லா அரசியல் நாடகத்தையும் அவன் நம்பி பார்த்துக் கொண்டிருக்கிறான் .அவ்வப்போது விசில் அடிப்பது கூட அவன்தான்.
13 மாநிலங்கள், 74 நகரங்கள் ,170க்கும் மேற்பட்ட அலுவலகங்கள் ,900-க்கும் மேற்பட்ட பணியாளர்களை வைத்து வியாபாரம் செய்துள்ளான் அப்துல் கரீம் தெல்கி.அதிகாரமும் ,அரசியலும் அவனின் இரு கைகளாக இருந்துள்ளது.
விசா மோசடியில் சிறைக்கு செல்பவன் கூடுதல் உற்சாகத்தோடு திரும்பி, முத்திரைத்தாள்கள் மோசடிக்கு தயாராகிறான்.
சிறைச்சாலைகள் இவ்வாறுதான் அவனை பண்படுத்தி உள்ளது.
அச்சமும் கவலையும்:
இயக்குனர் துஷார் ஹிரா நந்தானி, ஒரு நேர்கோட்டில் கதையைக் கொண்டு செல்கிறார். ககன் தேவ் ரியார், அப்துல் கரீம் தெல்கியாக எல்லாக் காட்சிகளிலும் கச்சிதமாகப் பொருந்திப் போகிறார். சீரியல் பார்த்து முடித்தப் பிறகும் ககன் தேவ் ரியாரின் மர்மமான சிரிப்பு ,பேன்டை சரிசெய்து இழுத்துப் போட்டுக் கொண்டு நடக்கும் காட்சி கண்களில் நிழலாடிக் கொண்டே இருக்கிறது.
ஏற்கனவே ஸ்கேன் 92 பார்த்து இருக்கிறேன். அதன் பின்னணி இசையைதான் நீண்ட நாட்களாக அலைபேசி அழைப்புக்கும் இசையாக வைத்திருந்தேன். இதிலும் அதே இசை டைட்டில் கார்டில் வருகிறது. ஊழல்வாதிகள் எவ்வாறு இப்படி
திரை நாயகப் பிம்பங்களாகின்றனர்? அவர்கள் பேசும் வசனங்கள் வெற்றியை மையமிட்டு நம் நெஞ்சிலும் இறங்குகிறது? இது சரியா? தவறா? என்ற ஊசலாட்டம் ஒருபுறம் இருக்கவே செய்கிறது.
“அரசியல் தளத்தில் இன்று வலதுசாரிகள் கை ஓங்கி விட்டனர்” என்று பலரும் புலம்புகின்றனர் .நாம் எல்லைக்கோட்டின் கடைசியில் நின்று கொண்டு இந்த புலம்பலை எழுப்பி வருகிறோம். இதே குரலை பெரியார்,அம்பேத்கர் எனப் பலரும் பல வருடங்களுக்கு முன்பே எழுப்பினர் .ஆனால் நம்மிடம் ஒரு அலட்சியம் இருந்தது இவர்கள் அவ்வளவு தூரம் வரமாட்டார்கள் என்று நினைத்தோம். இன்று வலதுசாரிகள் திட்டமிட்டு வேலைகளை செய்து ஆபத்தின் எல்லையில் உரசிக்கொண்டு நிற்கின்றனர். சமத்துவத்தை வலியுறுத்துபவர்கள் மீண்டும் பழையபடி மக்களைத் தயார் செய்யும் குரல் கொடுக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.
இதுபோன்ற பெரும் ஊழல்வாதிகளின் சுயசரிதைகள், சமூகத்தில் என்ன மாதிரியான விளைவுகளை உருவாக்கும் !? என்ற அச்சமும் இதை பார்க்கும்போது இருக்கவே செய்கிறது .அதே நேரம் இந்த அதிகார, அரசியல் கட்டமைப்பின் ஊழலுக்கு உட்பட்ட சிதைவுகளை நினைத்து கவலையும் மேலோங்குகிறது.
அறம் தோற்காது :
அரச நிர்வாகங்கள் ஊழலுக்குத் துணைப் போகின்றன, அரசியல் கட்சிகள் மக்களை வஞ்சிக்கின்றன. இந்த டயர்களின் அடியில் நசுக்கப்படாத ஒரு வாழ்வை வாழத்தான் தன் ஆயுளைப் பணயமாக வைக்கிறான், ஒரு இந்திய சாமானியன் .
அப்துல் கரீம் தெல்கி ஆயிரம் கோடிகள் கொள்ளை அடிக்கிறார். பங்கு வைக்கிறார் .ஆனால் அவர் உடலால், மனதால் ஒரு நிமிடம் கூட ஆரோக்கியமான ஒரு வாழ்வை வாழ முடியவில்லை .இதுவே நாம் இத்தொடரில் எடுத்துக் கொள்ள வேண்டிய செய்திகளில் ஒன்று.
நீண்ட அரசியல் அதிகாரத்தின் கைகள் நமது பாக்கெட்டில் இருந்து எடுத்துதான் கோடிகளில் வாழ்கின்றன. அதன் அமைப்பு முறை இப்படித்தான் இருக்கிறது. இதை சலித்துக் கொண்டே நாம் வாழப் பழகிக் கொண்டிருக்கிறோம்.
இந்த அரச நிர்வாக அமைப்பு மாற்றப்பட வேண்டும் .அதேநேரம் குற்றம் சாட்டுதலினால் மட்டும் தீர்வுகள் கிடைத்துவிடாது.மாற்றங்கள்தான் தேவை.உங்கள் குற்றச்சாட்டு விரல், உங்கள் பக்கமும் திரும்பட்டும் .ஒவ்வொரு குடும்பமும் அநியாய வழியில் சம்பாதிக்கப்படும் பணத்தை புறக்கணிக்கட்டும்.
அறம் மிக்க வாழ்வுக்கு குடும்பமும், தனி மனிதர்களும் முன் வரவேண்டும்.நீண்ட பயணம் அது.ஒருநாள் பெறுவோம்.ஆரோக்கியமான சமூகத்தில் அப்போது குப்பைகளுக்கு ஏது இடம்!?