சர்வம் ஏ.ஐ மயம்

அலாவுதீனின் அற்புத விளக்கு.  

சிறு வயதில் அனைவராலும் ரசித்து வாசிக்கப்பட்ட காமிக் புத்தகம்.  

பட்டணத்தில் பூதம்,  

நடிகர் ஜெய்ஷங்கர் நடிப்பில் வெளியான பிரபல திரைப்படம்.  

இவ்விரண்டு கதைகளிலும் ஒரு பூதம் வெளியேறும். 

நீண்ட தொங்கும் தாடியுடன் 

“ கட்டளையிடுங்கள் எஜமானரே, இனி இந்தப் பூதம் உங்கள் அடிமை.. 

ஹி.. ஹி.. ஹி..” 

என்று வயிறு குலுங்கச் சிரித்துக்கொண்டே ஒரு உருவம் நம்மை அசத்தும். 

எஜமானரின் ஆணைப்படி…  முக்கியமாக,  

முகம் சுளிக்காமல் அனைத்து வேலைகளையும் அந்தப் பூதம் செய்து முடிக்கும். 

அப்பூதத்தின் இன்றைய பெயர் தான், 

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence).  

ஏ.ஐ என்பது இயந்திரங்கள் மனித நடத்தையைப் பிரதிபலிக்கும் ஒரு நுட்பமாகும்.  செயற்கை நுண்ணறிவு  மனிதனுக்குத் தேவைப்படும் பணிகளைச் செய்யக்கூடிய, கணினி அமைப்புகளின் கோட்பாடு.  அதாவது நம் கட்டளையைக் கண்டு, கேட்டு, புரிந்து செயல்படும்.

வீட்டு வேலை ஆகட்டும், அலுவலக வேலையாகட்டும், 

பள்ளி, கல்லூரி, 

அரசாங்க அலுவலகம், தனியார் நிறுவனங்கள் என்று சர்வ வியாபியாக இன்று நம்மை அசத்திக் கொண்டிருப்பது ஏ.ஐ. என்னும் செயற்கை நுண்ணறிவு.

இயந்திரமயமான நம் வாழ்க்கை, இயந்திரங்களைச் சார்ந்தே இருக்கப் பழகிக்கொள்கிறோம். 

ஏ.ஐ யின் நன்மைகள் :

அலாரம் அடித்தவுடன், 

காபி பில்டர், 

தானே டிகாக்‌ஷனை இறக்கித் தயாராய் வைத்திருக்கும். 

குளியலறையின் கீசர், 

நாம் சொல்லும் பதத்திற்குத்  தண்ணீரைத் தயார்ப் படுத்திவைக்கும். 

வானிலை அறிக்கை (தொலைக்காட்சி செய்தியில் வருவது போல் அல்லாமல்) 

துல்லியமாகக் கணிக்கும். 

ஒரு முறை ஒரு காணொளியைப் பார்த்தால் போதும், 

நம் மனதைப் புரிந்துகொண்டது போல (ஹூம்… அதுக்காவது புரிந்தே..), 

அதே ரீதியிலான காணொளிகள் நம் கைப்பேசியில் தொடர்ந்து வரும். 

நான் வெளியூரில் இருந்துகொண்டே, 

இங்கு என் வீட்டு மின் விளக்கை, மாலை ஆறு மணிக்கு, 

ஒரு பொத்தானை அழுத்தி, 

என் கைகளாலேயே ஏற்றிவிடலாம். 

“அலெக்ஸா ஒரு பாட்டு பாடு டீ..” 

என்றவுடன் 

“தம்தன தம்தன தாளம் வரும்..” 

என்ற பாடல் ஒலிக்கும்.

மருத்துவத்தில் செயற்கை நுண்ணறிவின் ஆற்றல் அபாரம். 

உடல் உபாதைகளைச் சரியான முறையில் கணித்துச் சிகிச்சை செய்ய உதவும். 

மனித வாழ்வைக் காப்பாற்றும் விதமாக, வேற்று கிரகத்தில் நுழைய, ஒரு வெடிகுண்டைத்  தகர்க்க, 

ஆழ் கடலில் ஆராய்ச்சி செய்ய, 

எண்ணைக் கிடங்கில் நுழைய, செயற்கை நுண்ணறிவு அதிகம் பயன்படும். 

தவறு செய்வது மனித இயல்பு. 

இதைச் சவால் செய்யும் விதமாக, 

ஏ.ஐ. மூலமாகக் கணக்கிடப்படும் அனைத்துமே துல்லியமாக இருக்கும். 

வீடு பெருக்கித் துடைப்பதிலிருந்து, விண்வெளி ஆராய்ச்சி வரை எல்லாவற்றிலும் ஏ.ஐ. யின் உபயம் உண்டு.  

ஏ.ஐ யின் அடுத்த பக்கம் :

எல்லாவற்றையும் செய்து முடிக்க இயந்திரம் இருந்தால் போதுமா? 

“மணி 11 ஆச்சு.. இந்த மல்லிகாவை இன்னும் காணோம்..” 

என்ற நம் கோபத்தைப் பொருட்படுத்தாமல், நிதானமாக வந்ததும், 

தேநீர் போட்டுக்கொண்டு தன் சொந்தக் கதை, 

சோகக் கதையை நம்மிடம் ஒப்புவிக்கும் சம்பிரதாயம் இருக்காது. 

நாம் பேசுவதை ஏ.ஐ. அமைதியாகக் குறித்துக் கொண்டே இருக்கும்(ஆத்தாடீ..). 

நம் நாட்டுத் தலைவர்களின் நடவடிக்கை வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் கண்காணிப்பில் இருக்கும்.

மக்கள் ஒரு கட்டத்தில் வேலைவாய்ப்பை இழக்க நேரிடலாம். ஏ.ஐ. உடன் போட்டியிட முடியாமல், மனிதனும், இயந்திரமும் இணைந்து வேலை செய்வார்கள். வேலை இல்லாதவர்கள், ஏ.ஐ. இயந்திரங்களைப் பழுது பார்ப்பதிலும், இயக்குவதிலும் தன் வாழ்நாளைச் செலவிடுவார்கள். 

ஒரு அறைக்குள் நுழைந்தால், விளக்குகள் தானே ஒளிருமாம். 

ஆனால், உள்ளே நுழைந்தது மனிதனா, பூனையா என்பதைப் பற்றி ஏ.ஐ. க்கு கவலையில்லை. (அதுசரி.. பூனைக்கும் வெளிச்சம் தேவைதானே)

ஒரு காதல் கடிதம் எழுதச் சொன்னாலும், முகம் பாராமல் உடனே சட்டென்று எழுதிக் கொடுத்துவிடும்  நம் ஏ.ஐ. 

ஆனால், அதில் நடு நடுவே மானே, தேனே, பொன்மானே என்று இடையில் போட்டுக்கொள்ள உணர்ச்சிகள் கொண்ட மனிதர்களால் மட்டுமே முடியும். 

ஏ.ஐ அமைப்புகளை உருவாக்கவும் செயல்படுத்தவும் அதற்கான வளங்களும், அதிகப் பணமும் தேவைப்படும்.  

ஏ.ஐ அமைப்புகள் எப்பொழுதும் முழுமையாக நம்பகத்தன்மை கொண்டதாக இருக்காது. 

செயற்கை நுண்ணறிவை அதிகமாக நம்புவது மனிதர்களைத் தொழில்நுட்பத்தின் மீது சார்ந்து இருக்கச் செய்து, சுய விமர்சனச் சிந்தனைத் திறனைக் குறைக்கும். 

ஏ.ஐ.அமைப்புகள் மாணவர்களின் செயல்திறன், நடத்தை மற்றும் தனிப்பட்ட தகவல் உள்ளிட்ட  தரவுகளைச் சேகரித்துப் பகுப்பாய்வு செய்யும். 

இந்த தனிப்பட்டத் தகவல்கள்  பாதுகாப்புடன் கையாளப்படுவதை உறுதிசெய்ய வேண்டியது மிக அவசியம். 

இறுதியாக, நம் உலகில் உள்ள அனைத்து கண்டுபிடிப்புகளுமே புத்திசாலித்தனத்தின் விளைவாகும். 

செயற்கை நுண்ணறிவால் சில நன்மைகளும் உண்டு, தீமைகளும் உண்டு. ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்பும், இரண்டையும் கொண்டிருக்கும். 

இருக்கு என்பதற்காக மட்டுமே பயன்படுத்தாமல், நம் அத்தியாவசியத் தேவைக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். 

புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தினால், அவை புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுக்கும். 

மனிதர்களாகிய நாம் அதைக் கவனித்து, சிறந்த உலகத்தை உருவாக்க, கண்டுபிடிப்பின் நேர்மறையான பக்கங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *