
நாம் வாழும் இந்த உலகம் உண்மையில் முன்னேற்றம் காண்கிறதா? இல்லையென்றால், நம்மைப் பல முக்கியமான விஷயங்களை மறக்கச் செய்து, முன்னேற்றத்தின் தோற்றத்தை மட்டும் தருகிறதா என்ற எண்ணம் எழுகிறது. புதுமையின் பேரில் பழையவற்றை விலக்கி, காரணம் கேட்காமல் நாம் இன்று மீண்டும் சில பழையவற்றைத் தேடி ஏற்கத் தொடங்கியிருக்கிறோம்.
ஒவ்வொரு நாளும் நம் வாழ்க்கையில் புகும் புதிய பொருட்கள் அவற்றின் பின்னாலிருக்கும் அமைதியான, ஆழமான சூழ்ச்சியை நாம் கவனிக்க மறுக்கிறோம். இது பழமையை போற்றும் நோக்கமோ அல்லது புதுமையை நிராகரிக்கும் நோக்கமோ இல்லை .குப்பை என்பது கழிவல்ல; அது நம் கலாச்சாரத்தின் மறைந்த கதையை மீண்டும் பேச வைக்கும் சின்னம்!
மாதவிடாய் பாதுகாப்பு என்பது ஒரு மனிதநேயத் தேவை. ஆனால் இன்று இது ஒரு பெரிய வணிகம் ஆகிவிட்டது. முன்பு நம் பெண்கள் பருத்தித் துணிகள், இயற்கை முறைகள், மீள்பயன்பாடு செய்யக்கூடிய உள்ளாடைகள் போன்ற பாதுகாப்பான வழிகளைப் பின்பற்றி வந்தனர். இவை உடலுக்கும், சுற்றுச்சூழலுக்கும் தீங்கில்லாத, நம்பத்தகுந்த முறைகள். ஆனால் காலப்போக்கில், கார்ப்பரேட் நிறுவனங்கள் அதிக லாபத்திற்காக ‘சுகாதாரம், சௌகரியம்’ என்ற பெயரில் பேட்கள், டாம்பான்கள், menstrual cups போன்ற தயாரிப்புகளையே பாதுகாப்பானவை என விளம்பரங்களின் மூலம் வலியுறுத்தின. இதனால், பழமையான முறைகள் மெதுவாக மறக்கப்பட்டன.
இத்தகைய ஒருதலைப்பட்ச வளர்ச்சிக்கு பின்னால் பெரும் சுற்றுச்சூழல் அழிவு நிகழ்கிறது. Menstrual cup எல்லா பெண்களுக்கும் பொருத்தமானதாக இருக்காது. ஒரு பெண் தனது வாழ்நாளில் சுமார் 10,000 – 15,000 disposable pads அல்லது tampons பயன்படுத்துகிறார். இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 12.3 பில்லியன் pads குப்பையாக சேர்க்கப்படுகின்றன — இது 1.13 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் என மதிப்பீடு செய்யப்படுகிறது.
ஒரு pad-ல் 90% வரை பிளாஸ்டிக் இருக்கிறது. 500 முதல் 800 ஆண்டுகள் வரை அழியாமல் நிலத்திலேயே காணப்படும். பயன்படுத்திய padகள் பொது இடங்களில் எரிக்கப்படும்போது, டயாக்ஸின், கார்பன் மொனாக்ஸைடு போன்ற நச்சு வாயுக்கள் வெளியேறி மனித உடலுக்கும், சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிக்கின்றன. ஆனால் இப்பொழுது reusable pad( cotton detachable pad) , periods panty மிகவும் சுகாதாரமான, உடல்நலத்திற்கும் சுற்றுப்புறத்திற்கும் தீங்கில்லை என்று கூறி பழைய முறைக்கே அதிக லாபத்துடன் விற்பதை வாங்கத் தள்ளப்படுகிறோம்.
இது ஒரு புறம் இருக்க மற்றொரு புறம் Baby Diaper. உலகெங்கும் வெளியேறும் கழிவுகளில் குறிப்பாக ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய கழிவுகளில் பேபி டயப்பர் மூன்றாவது இடம் பிடிக்கிறது. இந்தியா மட்டுமே ஒரு ஆண்டிற்கு தோராயமாக 12 பில்லியன் பேபி டயப்பர்களை உபயோகப்படுத்துகிறது. உலக அளவில் நினைத்துப் பாருங்கள்.
ஒரு காலத்தில் தமிழ்நாட்டின் அடையாளமாக மஞ்சப்பையும் சணல் பையும் இருந்தது. ஒவ்வொரு வீட்டிற்கும், சந்தையும், பயணமும், திருவிழாக்களும் எல்லாமே மஞ்சப்பை இல்லாமல் இருக்காது. இதனால் சுற்றுச்சூழலுக்கும் தீங்கில்லை.
அதன் பின்னர் உலகெங்கும் பிளாஸ்டிக் பைகள் உருவாகின. மஞ்சப்பை எடுத்து செல்வது ஏழ்மை எனவும் கேவலம் எனவும் சித்தரிக்கப்பட்டு பிளாஸ்டிக் பைகளை ஏற்றுக்கொள்ள வைத்தனர். நம் வீட்டில் பல கட்ட பைகள் இருந்த இடத்தில் ஒரு பிளாஸ்டிக் பைக்குள் பல பிளாஸ்டிக் பைகள் இருக்கின்றன. பிளாஸ்டிக்கால் ஏற்படக்கூடிய தீமைகள் நாம் நன்கு அறிந்தனவே. எனினும் அதனை கைவிட முடியாத நிலைக்கு நாம் தள்ளப்பட்டோம். நாம் அன்றாட உபயோகிக்கும் ஒவ்வொரு பொருட்களின் வெளிப்புற கவரும் பிளாஸ்டிக்கே!
இப்போது மஞ்சப்பை மீண்டும் வருகிறது அதிலும் அதிக விலையுடன் Totebag என்னும் வடிவில்., “Reuse” என்ற சொல்லை புதிதாக கண்டு பிடித்தது போலவே பண்டைய மஞ்சப்பையை மீண்டும் விற்று லாபம் காண்கிறது.
ஒரு காலத்தில் தண்ணீர் என்பது பொதுச் சொத்து. கிணறுகள், ஏரிகள், குளங்கள், நதிகள் இவை அனைவருக்கும் பொதுவாக இருந்தன. சிறிய குடிநீர் தேவை கூட தண்ணீர் ஊற்றில் இருந்து நேரடியாக வந்தது பிளாஸ்டிக் இல்லை, ஃபில்ட்டர் இல்லை, வாடகை இல்லை. ஆனால் தனியார்மயமானது நீர் தூய்மையாக இல்லை, நீரில் தேவையான வைட்டமின்கள் தாதுக்கள் இல்லை, அதனால் Reverse osmosis செய்தே பருக வேண்டும் என மக்களை பயமுறுத்தியது. ஆக இலவசமாக கிடைத்த நீரை RO என்று சொல்லியும் பாட்டிலில் அடைத்தும் விற்கத் தொடங்கினர். பயணம் செய்தாலும் ஹோட்டலுக்கு சென்றாலும் ஏன் கல்யாண வீடுகளில் கூட தற்பொழுது பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில் வந்துவிட்டது. குவளையில் தண்ணீர் ஊற்றி பரிமாறுவதை விட பிளாஸ்டிக் பாட்டில் அடைத்து பரிமாறுவதால் பிளாஸ்டிக் பாட்டிலும் கேடு மற்றும் தண்ணீரும் அதிகமாக வீணாகிறது.
இப்போது மீண்டும் விழிப்புணர்வு வருகிறது. மழைநீர் சேமிப்பு, நிலத்தடி நீர் மேலாண்மை, பழைய கிணறு, ஓடைகள், பாட்டிலற்ற தண்ணீர் இவை மீண்டும் பேசப்படுகின்றன.
ஒரு ரேடியோ, ஒரு டிவி, ஒரு லேப்டாப் பல வருடங்கள் பயன்படுத்தப்பட்டன. திருத்தும் கலையும் இருந்தது, நீடிக்கும் நம்பிக்கையும் இருந்தது. ஆனால் இன்று, புது போன் வரும் போது பழையது ‘ஓல்ட் மாடல்’ என எளிதில் புறக்கணிக்கப்படுகிறது.
உண்மையில், இது ஒரு திட்டமிட்ட அழிவு Planned Obsolescence. தயாரிப்பாளர்கள் விரைவில் பழுதாகும் பொருட்களை உருவாக்குகிறார்கள். புதிது வாங்கும் வாடிக்கையாளர்களை உருவாக்க, பழையவை வேகமாக செயலிழந்து விடுகின்றன. இப்படி உருவாகும் மின்னணுக் கழிவுகள் ஒவ்வொன்றும் விஷமாகும் குப்பை. இந்த மின்னணுக் கழிவுகள் அழிக்கவேமுடியாதவை. ஆனால் இன்னும் இந்த விஷத்தைக் குறித்து உரக்கப் பேச யாரும் முன்வரவில்லை. ஏனெனில் டெக்னாலஜி என்ற பெயரில் லாபம் குவிக்கிறது பெரிய நிறுவனங்கள்.
நாம் சிந்திக்காமல் ஏற்றுக்கொண்டு வரும் பல புதிய பழக்கங்கள் நம்மையும், சுற்றுச்சூழலையும் வெகுவாகப் பாதிக்கின்றன.
பழைய முறைகள் சுலபமாகவும், பாதுகாப்பாகவும் இருந்தன. ஆனால் இன்று அந்த வழிகளை விலக்கி, விளம்பரங்களின் மேல் உள்ள நம்பிக்கையால் நம்மை நாமே குப்பையால் சூழ்ந்துகொள்கிறோம். பழமைக்கு நாகரிகமின்மை என்ற முத்திரையைக் கொடுத்து அவ்வகை பொருட்களே இல்லாமல் செய்து, அதை லாபமாக்க புதுமை என்னும் பெயரில் நச்சு விளைவிக்கிறது.
பழமையை இழக்காமல், புதுமையை பொறுப்புடன் ஏற்கக்கற்றுக் கொள்ள வேண்டும்.நம் தேர்வுகள் தான் நம் எதிர்காலத்தை தீர்மானிக்கும். குப்பை கலாச்சாரம் தொடர வேண்டுமா? இல்லை என்றால், அதை நிறுத்தும் முதல் அடி நம்மிடம்தான்.





