காலநிலை மாற்றமும் பெண்களும்

Advancing gender equality, through

reversing the various social and economic

handicaps that make women voiceless and

powerless, may also be one of the best

ways of saving the environment. ”

—Amartya Sen

, 1998 Nobel Laureate in Economics

பெண் என்பவளை நிலத்தோடும், நீரோடும் ஒப்பிடும் தன்மை தமிழர்தம் தொன்மை. உலகெங்கும் பெண் என்பவள் நிலத்தை போன்றே, எதைக் கொடுத்தாலும் பல்கிப் பெருகச் செய்யும் வல்லமை கொண்டவள். இந்த கருத்தை வில்லியம் கோல்டிங் அவர்களும் கூறியிருக்கிறார்கள்.

வீட்டைக் கொடுத்தால், அதை குடும்பமாக்குவாள், மளிகைப் பொருளை கொடுத்தால் விருந்து படைப்பாள், ஒரு புன்னகைக்கு தன் பேரன்பு இதயத்தை தருவாள், துயரத்தை கொடுத்தால் வலிமையை தரித்துக்கொள்வாள். இத்தகைய சீல குணங்களை கொண்டிருக்கும் பெண் எப்போதும் உறவின் உரிமையை நிலைநாட்டுபவள். தனக்குரிய உறவையோ, உடைமையையோ வேறு யாரும் கைப்பற்ற நினைத்தால் பொங்கியெழுந்து போர் முரசொலிப்பாள். இத்தனை குணங்களையும் கொண்டிருக்கும் பெண்தான் விவசாயத்தை கண்டுபிடித்தவள். ஆனால், இன்று விவசாயி என்ற பொதுப்பெயர் ஆணுக்கானதாக கருதப்படுகிறது. 

ஒரு வயலில் ஆணை விட இரண்டு மடங்கு நேரம் அதிகமாக, கடுமையான பணிகளை செய்தாலும், பெண்ணை விவசாயி என இந்த சமூகம் ஏற்றுக்கொள்வதில்லை. குறிப்பாக இந்தியாவில்… மேலும், ஆணுக்கும், பெண்ணுக்குமான கூலி வேறுபாடும் பெண்ணின் உழைப்பையும், இயற்கையையும் சுரண்டும் ஆணாதிக்க மனோநிலையை காட்டுகிறது.

நில உரிமையிலிருந்தே, விவசாயி எனும் அங்கீகாரம் இந்தியாவில் அளிக்கப்படுகிறது. ஆனால் பதினைந்து சதவீதத்திற்கும் குறைவான பெண்களுக்கே நிலம் உடைமையாக உரிமையாக உள்ளது. முதன் முதலில் விவசாயத்தை கண்டவளின், நிலத்தின் மீதான உறவு என்பது மிகவும் உறுதியானதும், உணர்வுபூர்வமானதுமாகும். காலங்காலமாக இதன் அடிப்படையில்தான், பெண்ணைக்கொண்டே மண்ணைக் கைப்பற்றினர். தன் ஆண்மையை நிருபிக்க, பெண்ணையோ, மண்ணையோ கவர்வதே சிறப்பு என கருதி பல நாட்டை தன்னுடைமையாக்கி கொள்ள பெண்களின் அனுமதியின்றி, திருமணம் என்ற பெயரிலே பெண் கைமாற்றப்பட்டு இருப்பதை நமது வரலாறுகளும், இதிகாசங்களும் கூறுகின்றன.

பெண் கைமாற்றப்படும் போதே மண்ணும் கைமாற்றப்படுகிறது. பெண்ணின் இயல்புக்கு மாறான ஒன்றை ஒவ்வொரு நொடியும் சகித்துக்கொள்ள நிர்பந்திக்கப்படுவதை போலவே, மண்ணும் நிர்பந்திக்கப்படுகிறது. அப்படிதான் நெல் விளையும் பூமி கட்டடம் கட்டுபவனின் கைக்கு மாறினால், கான்கீரிட்டை விளைவிக்கும் பூமியாக மாறிவிடுகிறது நிலம். மழையை தன்னுள் அனுமதிக்காத இந்த கயமைச் செயலை தாங்கிக்கொள்ள நிர்பந்திக்கப்படும் இப்பூமி பெண் எனும் பெருநிலம் அல்லவா? முதலாளித்துவம்,  தொழில்மயமாக்கல், ஆண்மய்யச் சிந்தனை ஆகிய மூன்றும் இணையும் புள்ளியிலிருந்தே இதை அணுக வேண்டும். ‘மற்றைய அனைத்தும்’ அடக்கி ஆளப்பட வேண்டும் என்கிற எண்ணம், இந்தப் புள்ளியிலிருந்தே தொடங்குகிறது. இதில் பெண்கள், தொல்குடிகள், ஒடுக்கப்பட்டவர்கள், இயற்கை என்று எல்லாமே அடங்கும். ஆண்மையச் சிந்தனையானது (Patriarchy), பெண்களையும் இயற்கையையும் ஒருசேர ஒடுக்கு கிறது.

அணு ஆயுதங்கள், தீவிர ராணுவமயம், மாசுபடுத்துதல், காடழிப்பு ஆகிய சுற்றுச்சூழலுக்கு எதிரான நடவடிக்கைகள், ஆண்மையச் சிந்தனையிலிருந்து தோன்றும் செயல்பாடுகள். இதற்கு எதிராக, பெண்ணியத்தையும் சூழலியல் பாதுகாப்பையும் இணைத்து உரு வாக்கப்பட்ட கருத்தாக்கமே சூழலில் பெண்ணியம் (Eco feminism). ஃபிரான்சுவா த உபன் (Francoise d’Eaubonne) என்கிற பெண்ணியவாதி 1974-ல் முன்வைத்த கருத்தாக்கம் இது. பெண்ணை மட்டுமன்று, ஆதிகுடிகளையும் மண்ணை விட்டு துரத்தும் ஈன செயல்களை செய்யும் தலைமுறையை சேர்ந்தவர்களாக இருக்கிறோம் நாம். தாயை பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே என்ற இதே நாட்டில்தான், தண்ணீரை சீரழித்து பெண்ணையும் சீரழிக்கும் காட்சி நிகழ்கிறது. ஒவ்வொரு நாளும், நிலத்திற்கும், நீருக்கும் இழைக்கபடும் அநீதி பெண் மீது இழைக்கப்படும் அநீதியே ஆகும்.

ஒரு வீட்டில், நீரை சேகரிக்கும் பணி பெண்ணுடையது என்பது எழுதப்படாத சட்டம். “Dropout for a Drop” என்று  அமெரிக்க குடியரசு துணைத்தலைவர் கமலா ஹாரிஸ் சொன்ன இச்சொற்றொடரை நினைவு கூர விரும்புகிறேன். பெண்மையை போற்றும்‌ பெருந்தகைகளே! தண்ணீர் என்பது ஒரு பெண்ணின் மீது சுமத்தப்படும் தலையாய பிரச்சனை என்பதை அறிவீர்களா? Dropout for a drop என்ற வாசகம் கலங்க செய்கிறது, தண்ணீர் பிடிக்க நேரத்தை செலவழிப்பதாலும், பூப்பெய்திய பெண் குழந்தைகளுக்கு தன்னை தூய்மைபடுத்திக்கொள்ள பள்ளியில் போதிய நீர் இல்லாததால் தனது படிப்பை கைவிடும் அவலம் நிகழ்கின்ற இதே பூமியில்தான், தண்ணீர் புட்டிகளை வைத்து, நாகரிகம்‌ என்ற பெயரில் ஒரு வாய் குடித்துவிட்டு, மீதியை குப்பையில் வீசுகிறோம்.

நெகிழிப்புட்டிகளோ பூமியின் மீது மாறாத வடுக்களை உருவாக்குகின்றன. நிலத்தடி நீரை உறிஞ்சி நிலத்தை பாழ் செய்ய பெண்ணே  கருவியாக பயன்படுத்தப்படுகிறாள்…

சூழலியல் சீர்கேடுகளால் பெண்களே அதிகம் பாதிக்கப்படு கிறார்கள்: சூழலியல் சீர்கேடு நிகழும் போது, பெண்கள் அடிப்படைத் தேவைகளான, உணவுக்காகவும், நீருக்காகவும் அதிக நேரம் செலவழிக்க வேண்டியிருக்கிறது.

பெண்ணின் சுதந்திரம் அவளின் நிலத்தில் உள்ளது, அவளின் நிலம் என்பது, அவள் வளர்ந்த கடலாக, காடாக, வயலாக இருக்கலாம். அவளின் உரிமை , உணர்வு, சுதந்திரம் அவளின் நிலமாக இருக்கிறது.‌ அந்த நிலத்திற்கு கேடு வரும்போது அதை சரிசெய்ய, பாதுகாக்க குரல் கொடுப்பவள் பெண்ணாக இருக்கிறாள், பெண்ணாகதான் இருக்க முடியும்.

உயிரும், உணர்வுமான நிலம் கையகப்படுத்தப்படும்போது, நிலைமாறும்போது உரத்து குரல் கொடுத்த வங்காரி மாத்தாய், ரேச்சல் கார்சன், பெட்ரா கெல்லி, வந்தனா சிவா என நீளும் வரிசையில் நீருக்காக போராடும் திருவண்ணாமலை (செங்கம்) பார்வதியும், அணு உலைக்கு எதிராக குரல் கொடுத்த மில்ரெட் வரை தன்னுடைய நிலத்தையும், நீரையும் காப்பாற்ற போராடும் இப்பெண்களின் கேள்விக்கு பதில் சொல்ல நாமும் போராட்டத்தில் ஈடுபடுவதன் மூலம் இப்பெண்களோடு ஒரே புள்ளியில் இணைவோம்.

போராட்டம் என்பது சாலையில் கத்தி கூச்சலிட்டு, ஊடகத்தில் தன் பெயரை வரவழைத்துக் கொள்வது அல்ல. மாறாக செயல்படுத்துதல் ஆகும். ஒன்றை சட்டமாக்க ஆணிடமும், செயலாக்க பெண்ணிடமும் சொல்ல வேண்டும் எனும் வாசகத்தை நினைவுகூருவது சாலப் பொருந்தும் என்று எண்ணுகிறேன். பெண்ணையும், இயற்கையையும்‌ ஒரு சேர மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பை உணர்த்தும் சொற்றொடர்தான் சூழலியல் பெண்ணியம். இயற்கையெனும் பெருங்கொடையின் கருணையால் இப்பூமியில் உயிர்கள் தழைத்தும், செழித்தும் வாழ்கின்றன. இந்த பூமி நிலவிலிருந்து பார்க்கும்போது நீல கல்லாக ஜொலிக்கிறதாம். நீல பாத்திரத்தில் பச்சையம் துளிர்க்கும்‌ பாத்திரம்தான் இப்பூமி.

பூமி என்பது ஆகாயம், நெருப்பு நிலம், நீர், காற்று ஆகியவற்றால் ஆனது, ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லையென பின்னி பிணைந்திருக்கும் பெரும் பந்தம். மனித சமூகம், தாய்வழி சமூகமாக இருந்த வரை நிலம் என்பது பொதுவுடமையாகவே இருந்தது, நிலத்தில் கிடைக்கும் யாவற்றையும் பொதுவாக வைத்து, சமமாக பங்கிட்டுகொண்டார்கள். பலதார மணமென்பது ஆணிற்கும், பெண்ணிற்கும் பொதுவாக இருந்தது. இனக்குழுக்களாய் வாழ்ந்த சமூகம், பெண்ணை, ஆணைவிடவும் உயர்வாய் வைத்திருந்தது. அவளின் மாதவிடாய், பிள்ளைபேறு ஆகியவற்றால் ஆணினத்திடமிருந்து வேறுபட்ட பெண்ணினத்தை கண்டு பயமும், மரியாதையும் கொண்டிருந்தான் ஆண். பெண் என்பவள் மனித இனத்தை படைக்கும் உயிர் தொடர்ச்சங்கிலியாக போற்றப்பட்டாள்.

மெள்ள, பெண்ணுடலை புரிந்துக்கொள்ள தொடங்கிய பின்னர், தன் ஆதிக்கத்தை செலுத்த தொடங்கிய நாள், தாய்வழி சமூகம், தன் தலைமை மாறி சரியத் தொடங்கியது. இனக்குழு வாழ்விலிருந்து நிலவுடமை சமூகமாக மாறத் தொடங்கியது. விவசாயத்தை ஒரு பெண்ணே கண்டறிந்தாள், எனினும் நிலவுடமைச் சமூகமாக உருப்பெற்ற பின்னர், பெண் என்பவள் பணியாள் மட்டுமே என்ற இடத்திற்கு மெள்ள நகர்த்தப்பட்டாள். அன்று முதல் இன்று வரை நிலத்தோடு ஊனும் உயிருமாய் உணர்வுபூர்வமான நெருங்கிய உறவு கொண்டிருந்தாலும், நிலத்தில் பாடுபட்டாலும், நிலத்தின் மீதான உரிமை அவளுக்கு மறுக்கப்பட்டது. 

கூடுதலாக, நிலத்திற்கு பெண்ணுடல் பதிலீடாக கொள்ளப்பட்டது. பயிர்க் காலத்தில், ஆண் 1860 மணி நேரம் நிலத்தில் உழைக்கிறான் எனில், பெண் 3300 மணிநேரம் நிலத்தில் உழைக்கிறாள், எனினும் விவசாயி என்ற அங்கீகாரம் பெண்ணிற்கு கிடைக்கவில்லை. இனக்குழு சமூகத்திலிருந்து, நிலவுடமை சமூகமாக மாறிய பின், தனக்கான நிலச்சொத்து மிகுந்து இருக்க வேண்டும் என்பதின் அடிப்படையில் பலதார மணம், ஒரு தார மணமாக மாறுகிறது.

பெண்ணின் பொருளாதார நிலை, கட்டற்ற சுதந்திரம், சக்தியாக பார்க்கப்பட்டவளின் நிலை முற்றிலும் சிதைந்துவிட, அதற்கு வைத்த விலைதான் இயற்கை. பெண்ணிற்காக நிலமும், நிலத்திற்காக பெண்ணும் சூறையாடப்பட்டார்கள். நில ஆக்கிரமிப்புகள், காடழிப்புகள், கானுயிர் அழிப்புகள், மண் வளம் சுரண்டல் என  நிலம் சுரண்டலுக்கு உட்பட்டது.

விவசாயம், மீன்பிடித்தல்,போன்ற பொருளாதார மூலதனத்திற்குரிய தொழில்கள் யாவும் ஆணின் கைக்கு மாற, பெண், மூலதனத்தை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக்கி பொருளாதாரத்தை பெருக்குபவளாக மாற்றப்பட்டாள், அன்று அவளின் பொருளாதார சார்பு நிலை தொடங்கியது.

ஆக்கிரமிப்பு குணத்தால், மண்ணை ஆக்கிரமித்து, அதிலிருந்து கிடைக்கும் மூலதனத்தை பெருக்க, இயற்கைக்கு முரணான எதிலும் ஈடுபட தொடங்கிய சமூகம், வேளாண் சமூகத்திலிருந்து தொழிற்சாலை சமூகமாக மாற.

கலாச்சாரமாக இருந்த விவசாயம், தொழிலாக மாற, மகசூல் பெருக்க வேண்டி ,இரசாயன உரங்கள் பயன்படுத்தப்படுகின்றன, விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் தண்ணீர் வழியே பல்வேறு நீர்நிலைகளை அடைகின்றன, கூடவே நிலத்தின் வழி ஊடுருவி  1000 அடி வரை கூட பயணித்து நிலத்தடி நீரை அடைந்து விடுகிறது. நிலத்திலும் தங்கி விடும் இரசாயனங்கள், நிலத்தின் உயிர்ப்புத்தன்மையை உறிஞ்சிவிட, நிலம் என்பது உயிர்ப்பற்ற சக்கையாக கிடக்கிறது.

நிலத்தடி நீர், பாய்ச்சும் நீர் இரண்டிலும் இரசாயனம் இருக்க, விளையும் பயிர்களில் தங்கிவிடும் இராசயனங்கள் வைக்கோல் வழி கால்நடைகளை அடைகின்றன.

வைக்கோல் வழியே பசுவின் பாலிலும் இரண்டற கலந்து விடுகின்றன இரசாயனங்கள். இதை, ஒரு கர்ப்பிணி பெண் அருந்தும்போது அவளின் உடலிலும் கலந்து விடுகிறது. அவள் ஈன்றெடுக்கும்‌ மகவுக்கு கொடுக்கப்படும் முதல் உணவான தாய் பாலே விஷமாக இருப்பின், இச்சமூகத்தின் உடல் மற்றும்  மன கட்டமைப்புகள் மாறும் அபாயங்கள் இருக்கின்றன.

காசர் கோட்டில், கறிவேப்பிலைக்கு அடிக்கப்படும் எண்டோ சல்ஃபான், இலைகளில் தங்கிவிட, அவற்றை உண்ணும் பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகள் பல் வேறு உடல் மற்றும் மனபிறழ்வுடன் பிறக்கிறார்கள் என்பது கண்கூடாக பார்க்க முடிகின்ற ஒன்று. கூடவே, இரசாயன உரங்களை பயன்படுத்துவதம் மூலம் பூமிக்கு நிகழ்வது என்ன?

ஒரு பிடி மண்ணில் இலட்சக்கணக்கான பாக்டீரியாக்கள், நுண்ணுயிரிகள், பூஞ்சைகள், பாசி வகைகள், நூற்புழுக்கள்‌ இருக்கிறது. இரசாயன உரங்களால், அவற்றை அழித்து விட்டோம், அதன் விளைவுகளை பின் பார்ப்போம். ஒரு சதுர அடிக்கு பத்து மண்புழுக்களும், ஒரு ஏக்கருக்கு நான்கு இலட்சம் மண்புழுக்களும் இருந்தால் போதும், நிலத்தை உழவு செய்ய வேண்டியதில்லை ஒரு மண்புழு ஒரு நாளில் பத்து முறை மண்ணில் மேலும் கீழும் நகர்ந்து செல்கிறது. அது 20 துளைகள் போடுகிறது . ஒரு நாளில் ஒரு ஏக்கரில் 80 லட்சம் துளைகள் போடும்போது 90 நாட்களில் 72 கோடி துளைகள் போடுகிறது இதனால் நிலத்தை உருகிட வேண்டிய அவசியம் இல்லை.

மண்ணைப் பெண்ணாக பார்க்கும் நம் கலாச்சாரமும், மண் விளைச்சலுக்கு தயாராகும் நிலையையும் கவனிக்க வேண்டும். விளைச்சலை நலமாக்க மண்ணிற்கு தேவை மண்புழு. முதல் வகை மண்புழுக்கள் மண்ணின் மேற்பரப்பில் இருந்து ஒரு அடி ஆழத்தில் வாழ்பவை இரண்டாம் வகை மண்புழுக்கள் ஒரு அடி ஆழத்திற்கு கீழேயும் 3 அடி ஆழம் வரையிலும் வாழக்கூடியவை மூன்றாம் வகை மண்புழுக்கள் மேற்பரப்பிலிருந்து மூன்று அடிக்கு 10 அடி வரையிலும் வாழ்பவை.

இரண்டாம் வகை மண் புழுக்கள் மண்ணில் உள்ள உயிரின பொருட்களை உண்பதோடு விவசாய கழிவுகளையும் உட்கொள்கிறது மண்ணின் உட்பகுதியில் மேலும் கீழும் நகர்வதால் மண்ணிற்கு நல்ல காற்றோட்ட வசதி ஏற்படுத்தித் தருகிறது.

மூன்றாம் வகை மண் புழுக்கள் நிலத்திற்குள் நீர்ப்பிடிப்பு அதிகமாக்கும் வகையில் செயல்படுகிறது பணி துளி நீரைக்கூட 3 அடிக்கு கீழ் கொண்டு செல்லும் தன்மை படைத்தவை. மண்புழுவினால் மண்ணின் வளம் பெருகும், மண்ணின் மூச்சுவிடும் (respiration of soil) திறன் அதிகரிக்க,seepage of water மற்றும்  நுண்ணுயிர்கள் செழித்து இருக்கும். அதனால் என்ன பயன்  நம்மாழ்வார் அய்யா என்ன சொல்கிறார் கேட்போம். நுண்ணுயிர், உயிரியியல், நிலவளம், நீர்வளம் – ஒருங்கிணைந்த பார்வை. “செம் புலப் பெயல் நீர் போல” என்ற குறுந்தொகை பாடலும் அதையே சொல்கிறது “மண்ணில் விழுந்த மழைநீர் மண்ணின் தன்மை பெறுதல் போல்” நில வளமே நீர்வளம் என்பதை உறுதி செய்கிறது. நம்மாழ்வார் அய்யா சொல்கிறார்…

நிலவளம் என்பது  மண்ணின் இயற்பியல், உயிரியல், மற்றும் இரசாயனத் தன்மையை பொறுத்து அமையும். மண் பொலபொலவென இருக்க வேண்டும்‌ இது இயற்பியல் தன்மை. மண்ணில் நுண்ணுயிரிகள், மண்புழு, பூரான், கரப்பான் பூச்சி போன்ற உயிரினங்கள் வாழவேண்டும் இது உயிரியல், இலைதான் வேருக்கு உணவளிக்கிறது, எனில் வேரில் தண்ணீர் மற்றும் எரு இடுவதன் பயன்தான் என்ன?

எரு என்பது‌ விலங்கு மற்றும் தாவர கழிவுகளே, அதில் வளரும் நுண்ணுயிர் மற்றும் உயிரினங்கள்தான் மண்ணிலிருந்து வரும் நைட்ரஜன்( உயிர்சத்து),  பாஸ்பரஸ்(மணி சத்து) மற்றும் பொட்டாஷ்( சாம்பல்‌ சத்து),  (இரசாயனத் தன்மை) ஆகியவை இலகுவாக வேர்வழியே தாவரங்களுக்கு செல்ல, மண்ணை இலகுவாக்கி தருகிறது. வளிமண்டலத்திலிருந்து இலவசமாக 78% நைட்ரஜன் கிடைக்கும் போது,வெறும் 46% மட்டுமே நைட்ரஜனை கொண்ட யூரியா விவசாயிகளின்  மத்தியில் விற்பனைக்கு பிரபலமானது.

இயற்கை உரம் இல்லாத காரணத்தால்,மண் கடினமானது. இரசாயன உரம் மண்ணில் உள்ள உயிர்களை அழித்து மண்ணை கெட்டிப்படுத்தி விடுவதால், ட்ராக்டர் கொண்டே உழவேண்டிய சூழல்,இதனால் ஏரோட்டி உழும்போது கிடைக்கும் மாட்டு சாணம் கிடைக்காது. மேலும் இரசாயன உரங்களில் உப்பு அதிகமாக இருப்பதால், “உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிப்பான்”  என்பதற்கிணங்க, விவசாயத்திற்கு அய்ந்து மடங்கு தண்ணீர் அதிகமாக தேவைப்படுவதோடு, தண்ணீரின் தரமும்  கேள்விக்குரியதாகி விடுவதோடு, நிலத்தடி நீரையும் மாசுபடுத்தி விஷத்தன்மையை பரவ வழி வகுத்து விடுகிறது. ஆனால், மண்புழுவும்,‌மற்ற உயிரினங்களும் நிலத்திற்குள் நீர்பிடிப்பு அதிகமாகும் வகையில் செயல்படும் என்கிறார். இவ்வாறு, விவசாயத்திற்கு அதிகமாக தேவைப்படும் தண்ணீரை எதைக்கொண்டு சரிக்கட்டுவது? நீர் சேகரித்தல் பெண்ணின் பணி, ஆனால் அவளுக்கு நிலத்தில் உரிமையில்லை.

தொழிற்சாலைகளிலிருந்து வெளியிடப்படும் புகை, வளிமண்டலத்தை முற்றிலும் மாசடைய செய்கின்றன. பசுமை குடில் வாயுக்களை கடலும், காடும் ஓரளவு உறிஞ்சி சமன் செய்கின்றன. எனினும், காடுகளை அழித்து விட்ட காரணத்தினால், கடலின் பணிச்சுமை கூடிவிடுகிறது. கடலின் வெப்பத்தன்மை மாறும்போது காலநிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன. அதீத மழை அல்லது அதீத வறட்சி ஏற்பட்டு பல்வேறு நோய்களையும், அழிவுகளையும் உருவாக்குகின்றன.

காலநிலை மாற்றமும் விளைநில ஆக்கிரமிப்பும் உணவு பாதுகாப்பு இன்று பெரும் கேள்வியாகி உள்ளது. உணவு பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. நில மாசு, காடழிப்பு, கடலை மாசு செய்தல் ஆகியவற்றின் மூலம் காலநிலை மாற்றம் நிகழ்கிறது.

சூழலியல் எனும் போது காலநிலை மாற்றம் குறித்து பேசாது வேறு எதை குறித்தும் தனித்து பேசிட இயலாது. மேகவெடிப்பு, அதீத வெப்பம், நிலச்சரிவு, கடல் கொந்தளிப்பு, கடல் நீர் மட்டம் உயர்தல், உணவு பற்றாக்குறை, உணவு பாதுகாப்பு என எதையும், காலநிலை மாற்றத்தை பேசாது, புரிந்துக்கொள்ள முடியாது. எனினும், பொதுவில் ஒவ்வொன்றையும் தனி நிகழ்வாக கண்டு கடந்து விடும் இயல்பே நிலவி வருகிறது.

பசிஃபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்ப மயமானதே இப்பெரும் காலநிலை மாற்றத்திற்கு காரணம். அவ்வகையில், பூமியின் மேற்பரப்பில் சுமார் 71  சதவீதத்தை பெருங்கடல்கள் கொண்டுள்ளன. நீரின் அளவில் 98 சதவீதத்தை கொண்டுள்ளன. இப்பெருங்கடல்களை குப்பை தொட்டிகளாக்கி விட்டோம்.  மின்னணு இன்றைய உலகத்தை உள்ளங்கையில் தந்திருக்கிறது என்று இறுமாந்திருக்கும் நாம் மறந்து விட்டது,

மின்னணு உபகரணங்களை தயாரிக்கும் போது உருவாகும் கழிவுகளையும், பயன்படுத்த இயலாத நிலையை அடைந்த மின்னணு உபகரணங்கள் குப்பையாகும் போது இவற்றையெல்லாம் எங்கே கொட்டுவது?அதன் விளைவுகள் என்ன என்பதை யோசிக்க மறந்ததுதான். மின்னணுக் குப்பைகளை கடலில் கொட்டுகிறோம், மற்றும் நிலத்தில் குவித்தும், எரித்தும் கடலை, நிலத்தை, காற்றை மாசுபடுத்தி விடுகிறோம். மின்னணு குப்பை என்ற ஒற்றை வரியில் விரிகின்ற செய்திகள்…

ஐ.நா.சபை அறிக்கையின்படி மின்னணுக் கழிவுகள் பிரச்சினையில் ஆசியாவில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் புள்ளி விவரப்படி இந்தியாவில் மின்னணுக் கழிவுகளை உருவாக்குவதில் மும்பை முதலிடத்திலும், இரண்டாம் இடத்தில் தமிழகமும் உள்ளதாக அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

ஒரு நிமிடத்திற்கு உலகில் எட்டு டன் எடையுள்ள மின்னணுக் குப்பைகள் உருவாகுவதாக ஆய்வு அறிக்கை ஒன்று அதிர்ச்சி தகவலை அளிக்கிறது… எதிர்காலத்தில் உலகமே ஒரு  குப்பைத்தொட்டியாக மாற்றிவிடும் அபாயம் இருக்கிறது. 2021 ல் மட்டும்‌ தூக்கி வீசப்பட்ட மின்னணுக் குப்பைகள் 5.70 கோடி டன் எடை உடையதாக இருக்கிறது, இது சீனப் பெருஞ்சுவரின் எடையை விட அதிகம்.

கடலில் கொட்டப்படும் மின்னணுக் குப்பையை உண்ணும் கடல்வாழ் உயிரினங்கள் மூலம் மனிதர்களின் உடலுக்கு இடம் மாறும் இந்த மின்னணுக் குப்பைகள் உருவாக்கும் நோய்கள் ஏராளம்.  துசுயந்தன் வரலாற்றில் சகுந்தலை ஆற்றில் தவறவிடும் மோதிரம் மீன் வழியே துசுயந்தனை அடைவதுதான், நீர்வாழ் உயிரினம் மூலம் கன உலோகங்கள் மனிதனை அடைந்தற்கான சான்று.

கடலில் எதை வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும்‌ கொட்டலாம் என்கிற மனிதனின் தட்டையான அறிவு குப்பையின்றி வேறென்ன. பெருங்கடலின் சூழல்‌ (Ocean Ecology) கெடுவதால் ஏற்படும் அபாயம் வனத்தை நிலைக்குலைய செய்யும்.

கடலும் வனமும் வான்வழியே பேசிக்கொள்ளும். கடல் வனத்திற்கு நிகராக 40% ஆக்ஸிஜனை கொடுத்து, கரியமில வாயுவை உறிஞ்சிக்கொள்ள கூடியவை. கடலின் மிகப்பெரிய நீர்பரப்பிலிருந்து ஆவியாகும் நீரைதான், வனங்கள் மழையாக்குகின்றன என்ற மிக நுட்பமான அவதானிப்பை இழந்த சமூகத்திற்கு பல சூழலியல் செய்திகளை கடத்த வேண்டிய நேரத்தில் நிற்கிறோம் நாம். கடல்வாழ் உயிரினங்களின் அழிவால், கடலின் வெப்ப நிலை மாறும்போது பெரிய காலநிலை‌மாற்றம் உருவாகுகிறது.

பசிஃபிக் பெருங்கடல் சூடாகி உள்ளது, காரணம் கடலின் அடியில் 14 லட்சம் சதுரகிலோமீட்டருக்கு Great pacific garbage patch ( பெரிய பசிபிக் குப்பை இணைப்பு ) உள்ளது, என்பதை சார்லஸ் மோர் 1992 ல் கண்டுபிடித்து சொல்லியிருக்கிறார். மரத்தை கொல்லாதே என்பதற்கு பல்வேறு பாடல்களை நம் தமிழிலக்கியம் தன்னகத்தே கொண்டுள்ளது நச்சு மாமரமாயினுங் கொலார்” திருச்சதகம், திருவாசகம், பாடல் 96.

என மாணிக்க வாசகர் பாடுகிறார். விஷ மரமெனினும் கொல்ல மாட்டார்கள் என்ற வரிகளின் மூலம் மரங்களை எப்படி போற்றி பாதுகாத்து வந்துள்ளனர் என்பதும், ஒவ்வொரு மரமும் இப்பூமியில் வாழத் தகுதியுள்ளது, அதன் பயனை நாம் அறியாமல் இருக்கலாம். ஆனால் இந்த பூமி அதை அறிந்து வைத்திருக்கும் என உணர்ந்தவர்கள் நம் முன்னோர்கள்.

விஷ மரமானாலும் கூட மனிதர்கள் வெட்ட மாட்டார்கள் என்று காளிதாசரும் குமார சம்பவ காவியத்தில் பாடுகிறார் (2-55). மரங்களை வெட்டாதே என்று காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடிய பாடலும் புறநானூற்றில் (57) வருகிறது:-

“கடிமரம் தடிதல் ஓம்பு – நின்

நெடுநல் யானைக்குக் கந்து ஆற்றாகவே”

– என்கிறார் புலவர். ஆனால், மூத்தோர் சொல்லை மதியாது,‌ ஏற்கனவே காடுகளை அழித்து விட்டோம் என்பதால் கடல் தன்னியல்பில் உறிஞ்சும் கார்பன் டை ஆக்ஸைடை விட அதிகமாக உறிஞ்சுகின்றன. இதனால் கடலின் மேற்பரப்பு வெப்பமடைந்து வருகிறது இதன் மூலம்‌ லாநினா, எல்நினோ போன்ற காலநிலை மாற்றங்கள் உருவாகின்றன. ஏனென்றால், கடலுக்கடியில் கிடக்கும் குப்பையில் 46 % மீன்பிடி உபகரணங்கள், மீதமுள்ளவை  மின்னணுக் குப்பைகள். அதில் நெகிழி அதிகம்,நெகிழி மட்கிப்போக 1000 ஆண்டுகள் ஆகும். மண்ணின் மீது கொட்டிக்கிடக்கும் நெகிழி குப்பைகளோ மண்ணின் மீது விழும் மழைநீரை ஊடுருவி செல்ல தடை செய்யும்.‌நிலத்தடி நீர் recharge ஆகாமல் போகும்.

இந்த மின்னணுக் குப்பைகள், துகள்களாக மாற 600 ஆண்டுகள் ஆகும்.

 இந்த மின்னணுக் குப்பையில் அதிகம்‌ இருப்பது சிலிகான், காரியம், யிட்ரியம், வெள்ளி, கேலியம் தங்கம்,ஆர்சனிக், இன்டியம், டான்டுலம்‌‌‌ என பல்வேறு தனிமங்கள், இவைகளை எரிக்கும்போது வரும் நச்சுவால் ஏற்படும் நோய்கள் கணக்கிலடங்கா. கடல்கள் குறித்த தட்டையான அறிவிலிருந்து நாம் மீள வேண்டும்.  கடல் பிராண வாயு தந்து, கரியமில வாயு உறிஞ்சி, பூமியின் ஆதாரமான மழை தந்து, உயிர்ச் சங்கிலி பேணி, உணவு தந்து, கடல் வழி போக்குவரத்தும் தரும் கடல் குப்பைத்தொட்டியானதால்,  காலநிலை மாற்றம் நிகழ்கிறது.

காடு கொன்று நாடு ஆக்கி என்கிறது பட்டினப்பாலை. கொன்று என்ற ஒற்றைச்சொல் போதுமானது, எதையெல்லாம் நான் கொன்று குவித்திருக்கிறோம் என புரிந்துக்கொள்வதற்கு.

காட்டை கொன்று கழனி ஆக்கினோம்…

கழனிக் கொன்று கட்டிடம் ஆக்கினோம்…

பொய்த்தது மழை, குறைந்தன தானியங்கள்

பெருகின தொழில்நுட்பம்

வளர்ந்தன நோய்கள்

வளமடைந்தன கார்ப்பரேட்கள்.

இதுதான் இன்றைய நிதர்சனம்.

காலநிலை மாற்றமும் பெண்ணும்

காலநிலை நடவடிக்கைகளுக்கு பெண் ஏன் முக்கியம்?

காலநிலை நெருக்கடி அனைவரையும் சமமாக பாதிப்பதில்லை. பெண்களும் சிறுமிகளும் காலநிலை மாற்றத்தால் சமமற்ற தாக்கங்களை எதிர்கொள்கின்றனர். பெரும்பாலும் அவர்கள் உலகின் பெரும்பான்மையான ஏழைகளாக இருப்பதால், அவர்கள் வாழ்வாதாரத்திற்காக உள்ளூர் இயற்கை வளங்களை அதிகம் சார்ந்துள்ளனர்.

குறிப்பாக கிராமப்புறங்களில், பெண்கள் மற்றும் வளரிளம் பெண் குழந்தைகள், தங்கள் குடும்பங்களுக்கு உணவு, தண்ணீர் மற்றும் விறகு ஆகியவற்றைப் பாதுகாப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றனர்.வறட்சி மற்றும் ஒழுங்கற்ற மழை காலங்களில், கிராமப்புற பெண்கள் கடினமாக உழைத்து, அதிக தூரம் நடந்து, தங்கள் குடும்பங்களுக்கு வருமானம் மற்றும் வளங்களைப் பாதுகாப்பதில் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள். காலநிலை மாற்றம், தற்போதுள்ள மோதல்கள், ஏற்றத்தாழ்வுகள் மற்றும் பாதிப்புகளை அதிகப்படுத்துவதால், இது பாலின அடிப்படையிலான வன்முறையின் அதிகரித்த அபாயங்களுக்கு பெண்களை உட்படுத்தக்கூடும்.

தீவிர வானிலை பேரழிவுகள் தாக்கும் போது, ​​​​பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆண்களை விட 14 மடங்கு அதிகமாக இறக்கின்றனர், பெரும்பாலும் குறைந்த தகவல் அணுகல், வரையறுக்கப்பட்ட இயக்கம், முடிவெடுத்தல் மற்றும் வளங்கள் காரணமாக. காலநிலை மாற்றத்தின் தாக்கங்களால் இடம்பெயர்ந்த 5 பேரில் 4 பேர் பெண்கள் மற்றும் சிறுமிகள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கடுமையான பேரழிவுகள் பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரப் பாதுகாப்பு உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை சீர்குலைத்து, பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிர்மறையான தாக்கங்களை அதிகரிக்கலாம்.

Water wives அல்லது Panni பைச் ( பானி பாய்ஸ்) தண்ணீர் மனைவிகள்  என்றழைக்கப்படும் பெண்களை பற்றி அறிந்தால், காலநிலை மாற்றம் பெண்களின் வாழ்வில் நிகழ்த்தும் மாற்றத்தை உணரலாம்.தாய்வழி சமூகம் அடைந்திருக்கும் வீழ்ச்சியும் இதன் வழியே புரியும்.

இந்தியாவில் பருவமழை என்பது ஒரு வானியல் அமைப்பு மட்டுமன்று. மொத்த உயிரினத்திற்குமான உயிர்நாடியாகும், காலநிலை மாற்றத்தின் காரணமாக, மிக மிக குறைவான மழை பொழிவினால் தண்ணீர் பற்றாக்குறை இந்தியாவின் பல மாநிலங்களிலும் பரவி வருகிறது. இந்நிலையில், இந்தியாவில்  சட்டப்பூர்வமாக தடைசெய்யப்பட்ட சமூகப் பழக்கம் மகாராஷ்டிராவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பழக்கத்திற்கு வந்துள்ளது, எவ்வித தடையுமற்று செழித்தும் வருகிறது. அது என்ன?

மகாராஷ்டிரா மாநிலத்தில், தெங்கான்மால் கிராமத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள ஒரு மனைவியும், தண்ணீர் எடுத்து வர இரு மனைவிகளும் என பலதார மணம் செய்துகொள்கிற முறைதான் அது. இவ்வகை பலதார மணம்தான் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ஒரே வழியென சொல்கிறார்கள்.

இரவு இரண்டு மணிக்கும் கூட தண்ணீருக்காக வெகுதூரம் நடந்து சென்று தண்ணீர் கொண்டு வரும் பணிதான் இப்பெண்கள் மீது சுமத்தப்படுகிறது. நீண்ட நெடிய பயணத்தை மேற்கொள்வதால், குழந்தைகளையும், குடும்பத்தை யும் பராமரிக்க ஒரு பெண்ணால் இயலவில்லை என்பதோடு, குடிநீர் மற்றும் மற்ற தேவைக்கான நீர் தேவையை போக்குவதற்கும்‌ இவ்வகை ஏற்பாடு செய்துகொள்கிறார்கள்.

தண்ணீர் மனைவிகளுக்கு, மணந்து கொள்ளும் ஆண்‌மீது எந்த உரிமையும் கிடையாது, இனப்பெருக்கம் செய்வதில்லை, குடும்ப விவாகரங்களிலும்  தலையிட முடியாது, தனி குடியிருப்பில் வாழ்ந்துக் கொண்டு நீர் சேகரிக்கும் இப்பெண்கள், கணவனை இழந்தவர்கள் அல்லது ஒற்றை பெற்றோராய் வாழும் பெண்கள் மீண்டும் சமூக மரியாதையை பெறுவதற்காக இத்திருமணங்களை செய்து கொள்கிறார்கள்

கிராமத்தில் மிகப்பெரிய குடும்பத்தை கொண்ட சகாராம் பகத் மூன்று முறை திருமணம் செய்து கொண்டார். அவரது இரண்டாவது மற்றும் மூன்றாவது மனைவிகள் அவரது வீட்டில் குடிக்கவும் சமைக்கவும் தண்ணீர் இருப்பதை உறுதி செய்கின்றனர். “எங்களுக்கு தண்ணீர் கொண்டு வர யாராவது இருக்க வேண்டும், மீண்டும் திருமணம் செய்துகொள்வதுதான் ஒரே வழி” எனது முதல் மனைவி குழந்தைகளுடன் பிஸியாக இருந்தார். எனது இரண்டாவது மனைவி ( பானி பாய்) நோய்வாய்ப்பட்டு தண்ணீர் எடுக்க முடியாமல் தவித்தபோது நான் மூன்றாவதாக திருமணம் செய்துக்கொண்டேன்

என்று அருகிலுள்ள கிராமத்தில் ஒரு பண்ணையில் தினக்கூலியாக பணிபுரியும் பகத் கூறியதாக செய்தி வெளியாகி இருந்தது. ( கலிங்கம் டிவி)

  இதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய செய்தி சூழலியலில் ஏற்படும் இயற்கைக்கு எதிரான மாற்றங்களால் பெண்களுக்கே சுமை அதிகம்,  அதனால் மரணத்தையும் தழுவுகிறார்கள், அது நீரானாலும், நிலமானாலும் அதுவே நிதர்சனம். சூழலை பாதுகாக்க வேண்டிய பங்கு பெண்களுக்கு இருப்பதை உணர வேண்டிய முக்கியமான தருணமிது.

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அதிகாரம் அளிப்பது காலநிலை நடவடிக்கைக்கு முக்கியமானது என்பதற்கான மூன்று காரணங்கள் இங்கே:

1. பெண்கள் சுற்றுச்சூழல் பொறுப்பாளர்கள்

உலக உணவு உற்பத்தியில் பாதிக்கு பெண்களே காரணம். வளரும் நாடுகளில், அவை 80 சதவீதம் வரை உணவை உற்பத்தி செய்கின்றன. விவசாயிகளாகிய பெண்கள், பருவநிலை மாற்றத்தை எவ்வாறு சமாளிப்பது மற்றும் மாற்றியமைப்பது என்பதை கற்றுக்கொண்டனர், எடுத்துக்காட்டாக, இயற்கைக்கு இணங்க நிலையான விவசாயத்தை கடைப்பிடிப்பது, வறட்சியை எதிர்க்கும் விதைகளுக்கு மாறுதல், குறைந்த தாக்கம் அல்லது கரிம மண் மேலாண்மை நுட்பங்களைப் பயன்படுத்துதல் அல்லது சமூகம் சார்ந்த முன்னணி. மறு காடழிப்பு மற்றும் மறுசீரமைப்பு முயற்சிகள்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பழங்குடியின பெண்கள் முன்னணியில் உள்ளனர். அவர்கள் விலைமதிப்பற்ற மூதாதையர் அறிவு மற்றும் நடைமுறைகளை மாற்றியமைக்கும் காலநிலையில்  விரிதிறனை மீட்பதில் முன்னணியில் இருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக, பயிர் பல்லுயிர் மற்றும் விதை வகைகளைப் பாதுகாத்தல், மகரந்தச் சேர்க்கைகள் மற்றும் உள்ளூர் தேனீக்களின் எண்ணிக்கையைப் பாதுகாத்தல், இயற்கை மண் கட்டுமானம் மற்றும் உரமிடும் முறைகளைப் பயன்படுத்துதல் அல்லது காடுகளை அப்படியே விட்டுவிடுதல்

ஆனால் பெண்களுக்கு நில உரிமைகள் மற்றும் கடன் முதல் கல்வி மற்றும் தொழில்நுட்பம் வரையிலான வளங்களின் வரம்பிற்கு குறைவான அணுகல் உள்ளது. ஆண்களைப் போலவே பெண்களுக்கும் உற்பத்தி வளங்கள் கிடைத்தால், பண்ணை விளைச்சல் 20-30 சதவீதம் அதிகரித்து, 100 முதல் 150 மில்லியன் மக்களுக்கு உணவளிக்கும். இது அதிக விவசாய நிலங்களுக்கு மரங்களை வெட்டுவதற்கான அழுத்தத்தை குறைக்கும் – இது காலநிலை மாற்றத்தின் மிகப்பெரிய இயக்கிகளில் ஒன்றாகும். உலகளவில், காடுகளை விளைநிலமாக மாற்றுவதால் பாதிக்கு மேல் காடுகள் இழப்பு ஏற்படுகிறது.

2.பெண்கள் விரிதிறனின் ( Resilience) 

முதுகெலும்பு ஆண்களை விட பெண்கள் குறைந்த பட்சம் இரண்டரை மடங்கு ஊதியம் இல்லாத வீட்டு மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்கின்றனர். வெள்ளம், காட்டுத்தீ, வறட்சி மற்றும் புயல் போன்ற காலநிலை பேரழிவுகள் ஏற்படும் போது – பெண்கள் கூடுதல் சுமைகளை சுமக்கிறார்கள்.

பொதுவாக ஒரு வீட்டையும் அதில் உள்ள மக்களையும் பராமரிப்பதில் முதன்மைப் பொறுப்பு அவர்களுக்கு இருப்பதால், பேரிடர்களில், குழந்தைகள், முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் பிற சமூக உறுப்பினர்களை மீட்பது, உள்ளூர் அதிகாரிகள் மற்றும் அவசரக் குழுக்களுக்குத் தகவல் கொடுப்பது போன்றவற்றில் பெண்களே முதன்மையானவர்கள்.

ஒரு பேரழிவிற்குப் பிறகு, நோய்வாய்ப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களைக் கவனித்துக்கொள்வதற்கும், அவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவை வழங்குவதற்கும், சமூகங்கள் மீட்கவும் மீண்டும் கட்டியெழுப்பவும் பெண்களே பொறுப்பாவார்கள். இன்னும், பேரழிவுகளால் பெண்கள் விகிதாச்சாரத்தில் பாதிக்கப்படுகிறார்கள் மற்றும் பேரழிவுக்குப் பிந்தைய மீட்சியில் முன்னணியில் இருந்தாலும், அவர்கள் பெரும்பாலும் பேரழிவு ஆபத்து மற்றும் விரிதிறன் நிவர்த்தி செய்வதற்கான கொள்கைகள், உத்திகள் மற்றும் திட்டங்களை வடிவமைப்பதில் இருந்து விலக்கப்படுகிறார்கள்.

பெண்கள் முடிவெடுப்பதில் தீவிரமாக ஈடுபடுவது மீட்பு மற்றும் புனரமைப்பு முயற்சிகளுக்கு முக்கியமானதாகும். பேரிடர்களுக்குத் தயாராகி, அதிலிருந்து மீண்டு வரும்போது பெண்களின் திறன்கள், அறிவு மற்றும் திறன்களை முழுமையாகப் பயன்படுத்துவது பேரழிவு அபாயங்களைக் கண்டறிந்து குடும்பங்கள் மற்றும் சமூகங்களுக்கான பாதுகாப்பைக் கட்டியெழுப்ப உதவும்.

3.பெண்கள் மாற்றத்தின் முகவர்கள்

பெண்கள் மற்றும் பெண்கள் – மாணவர்கள், அம்மாக்கள், பழங்குடிப் பெண்கள் மற்றும் பிரபலங்கள் உட்பட – உலகளாவிய மற்றும் தேசிய காலநிலை இயக்கங்களை வழிநடத்தி வருகின்றனர், அவை காலநிலை நெருக்கடியின் அவசரம் மற்றும் எதிர்கால சந்ததியினருக்காக நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

நுகர்வோர், தொழிலாளர்கள், அரசியல் மற்றும் வணிகத் தலைவர்கள் என மாற்றத்தை ஏற்படுத்துவதில் பெண்களும் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

பணக்கார சமூகங்களில், அனைத்து நுகர்வோர் வாங்குதல் முடிவுகளில் 70-80 சதவீதத்தை பெண்கள் ஓட்டுகிறார்கள், இது மிகவும் நிலையான வாழ்க்கை முறைக்கு மாற்றத்தை வழிநடத்துகிறது. பெண்கள் மறுசுழற்சி செய்வதற்கும், கழிவுகளைக் குறைப்பதற்கும், ஆர்கானிக் உணவு மற்றும் சுற்றுச்சூழல்-லேபிளிடப்பட்ட பொருட்களை வாங்குவதற்கும், வீட்டில் தண்ணீர் மற்றும் ஆற்றலைச் சேமிப்பதற்கும் அதிக வாய்ப்புள்ளது. முன்னணி நடத்தை மாற்றம் மற்றும் நுகர்வோர் மனப்பான்மை மூலம், பெண்கள் துறைகளில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

அரசியல் மட்டத்தில், காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதற்கான பெண்களின் தலைமைக்கும் நடவடிக்கைக்கும் இடையே தெளிவான தொடர்பை ஆராய்ச்சி காட்டுகிறது. எடுத்துக்காட்டாக, பாராளுமன்றத்தில் பெண்களின் அதிக விகிதாச்சாரத்தைக் கொண்ட நாடுகள் சர்வதேச சுற்றுச்சூழல் ஒப்பந்தங்களை ஏற்றுக்கொள்வதற்கும் கடுமையான காலநிலைக் கொள்கைகளைக் கொண்டிருப்பதற்கும் அதிக வாய்ப்புகள் இருப்பதாக ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.

வணிகத்தில், பாலின-பல்வேறு நிறுவனங்கள் தங்கள் சகாக்களை விட சிறந்த சுற்றுச்சூழல் அறிக்கை மற்றும் காலநிலை நிர்வாகத்தைக் கொண்டிருக்கின்றன, மேலும் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி மற்றும் ஆற்றல் திறன் மேம்பாட்டில் அதிக முதலீடுகளைச் செய்கின்றன.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் பெண்களும் அதிகளவில் பங்களிக்கின்றனர், தற்போது சூரிய சக்தியில் 40 சதவீத பணியாளர்கள் உள்ளனர் – இது எண்ணெய் மற்றும் எரிவாயு துறையை விட (22 சதவீதம்) அதிக பங்கு. மாற்றத்திற்கான வலுவான சக்தியாக பெண்களில் முதலீடு செய்ய வேண்டிய நேரம் இது, மேலும், இந்த முதலீடு நிலையான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும்.

தீர்வுகள் 

  • பெண்களுக்கு கல்வி மற்றும் சுய தொழில் செய்வதற்கான பயிற்சியும், பொருளாதார உதவியும் செய்தல்.
  • கடல்சார் மற்றும் காடுசார், ஆதிகுடி பெண்களின் பாரம்பரிய அறிவை பயன்படுத்தி கொள்ளுதல்.
  • சட்டப்படி, பெண்களுக்கான நிலவுரிமையை மீட்டுத் தருதல்
  • விவசாயம், இயற்கை, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பெண்களுக்கு முன்னுரிமை அளித்தல்.
  • தண்ணீர் சேகரிப்பில், பணியை ஆண், பெண் இருவரும் பகிர்ந்துக்கொள்ளும் வகையில் சட்டம் இயற்றுதல்
  • நில பயன்பாடு, சுழற்சி முறையில் பயிடுதல், காடு பராமரிப்பு ஆகியவற்றை குறித்த விழிப்புணர்வை அளித்தல்
  • பெண்கள் கட்டமைத்த சுற்றுச்சூழல் இயக்கங்களை அங்கீகரித்தும், அவ்வியக்கத்தின் ஆலோசனைகளை முதன்மைப்படுத்துதல்.
  • பெண் சூழலியல் போராளிகள் மற்றும் எழுத்தாளர்களை ஊக்குவித்தல் எ.கா வங்காரி மாத்தாய், ரேச்சல் கார்சன்.
  • ஒடுக்கப்பட்ட பெண்கள் மற்றும் மக்களை, இயற்கை வளங்களை ( எ.கா : நீர்) அணுகுவதற்கான வழிவகைகளை செய்தல்.
  • உலகளாவிய ஒப்பந்தத்தின்படி, பாலின சமத்துவ இடைவெளி தரவரிசை ( EGI – Environmental Gender Index) யில் முன்னணியில் இருக்க ஒவ்வொரு நாட்டையும் ஊக்குவித்தல்.
  • தேசிய வனக் கொள்கை 1988 மற்றும் கூட்டு வன மேலாண்மை (JFM) 1990 களின் திட்டத்தின்படி
  • வனசமர -க்ஷண சமிதிகள் உறுப்பினரில் 33% பெண்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
  • பல்லுயிர் சட்டம் 2002 முக்கியமானது பங்குதாரர்களாக பெண்களுக்கான பங்கு மற்றும்
  • பாரம்பரிய அறிவின் பாதுகாவலர்கள்.
  • வரலாற்று ரீதியாக, பெண்கள் தான் விவசாய சமூகத்தில் விதை பராமரிப்பாளர்களாக நியமித்தலை உறுதி செய்ய வேண்டும்.

பெண்கள் சமையல் மற்றும் வீட்டு வேலைகள்,  விவசாய பணிகளில் ஈடுபடுவதால், க்ரீன் குக்கிங் போன்ற திட்டங்களை பெண்கள் மூலம் ஆண்களுக்கும் ஏனையோருக்கும் போதிக்க செய்தல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *