“The Earth has enough resources for our need but not for our greed.”
– M.K. Gandhi
சுற்றுச்சூழல் குறித்து பேச எழுத நாம் அறிவியல் துறைசார்ந்த அல்லது தொழில்நுட்பத் துறை சார்ந்த நபராக இருக்க வேண்டிய அவசியமில்லை. இப்பூமியில் வாழும் யாவரும் கட்டாயம் பேச வேண்டும். மாறிவரும் பருவநிலை மாற்றங்கள் அனுமானிக்கமுடியாத சூழல் நெருக்கடிகளையும் பேரிடர்களையும் நாம் சந்தித்து வருகிறோம். நீர், நிலம் , காற்று மாசுபாடு என்று பேசும் சூழலில் கருத்து மாசுபாடு என்ற ஒன்றே எல்லா மாசுபாட்டிற்கும் முதல் புள்ளியாக நான் கருதுகிறேன். சுற்றுச்சூழல் குறித்த அக்கறையும் பொறுப்பும் அனைவரிடத்திலும் வேர்ரூன்றி இருக்க வேண்டும் .
சமூக அரசியல் தளத்தில் இயங்கிய பேருவாரியான தலைவர்கள் சுற்றுச்சூழல் நலன் / பாதுகாப்பு குறித்து பேசியும் இயங்கியும் இருக்கின்றனர். அகிம்சைக் கொள்கையில் சர்வதேச அரசியலில் இயங்கிய மகாத்மா காந்தி அவர்கள் சுற்றுச்சூழல்’ (environment) என்ற சொல்லை ஒரு முறைகூடப் பயன்படுத்தாதவர். ஆனால், உலகெங்கிலும் இந்தியா முழுவதிலும் உள்ள சுற்றுச்சூழலியர்கள், சூழலியல் பொருளாதார நிபுணர்கள் என மகாத்மா காந்தியின் கருத்தியல் கொள்கையால் ஈர்க்கப்பெற்று உலக அளவில் ஈ.எஃப். ஷூமாக்கர், ஆர்ன் நேஸ் போன்றோரும், இந்திய அளவில் சுந்தர்லால் பகுகுணா, வந்தனா சிவா, மாதவ் காட்கில், மேதா பட்கர், ராமச்சந்திர குஹா ஆகியோர்கள் குறிப்பிடத் தக்கவர்கள்.
காந்தியின் சீடர்களான ஜே.சி.குமரப்பா, மீரா பென் போன்றோர் சுற்றுச்சூழல் செயல்பாடுகளுக்கு முக்கியமான பங்காற்றியிருக்கிறார்கள். இந்தியாவில் உருவான சிப்கோ இயக்கம், நர்மதா பச்சாவ் அந்தோலன் போன்ற சுற்றுச்சூழல் இயக்கங்கள் சத்தியாகிரகப் போராட்ட வழிமுறைகளைப் பின்பற்றியவை.
காந்தியின் அகிம்சைமுறை போர்கள் மற்றும் ஏவுகணைகளின் உற்பத்தி ஆகியவற்றினால் ஏற்படும் கார்பன் தடயங்களைக் குறைக்க பயனுள்ளதாக இருக்கும். இயற்கை வளங்களின் முக்கியத்துவத்தையும் அதன் பாதுகாப்பையும் காந்தி வலியுறுத்தினார். இது மனிதனுக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையிலான உறவில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மனிதர்களின் வாழ்க்கை முறை அதிக நுகர்வு மற்றும் கழிவுகளை உருவாக்கும் திசையில் உருவாகியுள்ள இன்றைய காலகட்டத்தில் காந்திய தத்துவத்தின் முக்கியத்துவம் நன்கு உணரப்படுகிறது. இது இயற்கையின் மீது இருதரப்பு தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
அகிம்சையின் சிந்தனையானது தனிநபர் மற்றும் சமூகத்தின் பேராசையைக் குறைக்க பயனுள்ளதாக இருக்கும். அகிம்சை பற்றிய அவரது கருத்து அனைத்து உயிரினங்களையும் உள்ளடக்கியது மற்றும் அவரது சிந்தனை மற்றும் செயல்களில் வாழ்க்கையின் நித்திய மதிப்புகளை உள்ளடக்கியது. ஒரு மரம், செடி பல்லுயிர்களை உள்ளடக்கிய வாழ்க்கையின் நித்திய புனிதத்தை அவர் வலியுறுத்தினார். ஆங்கில வரலாற்றாசிரியர் எட்வர்ட் தாம்சன் ஒருமுறை காந்தியிடம் வனவிலங்குகள் இந்தியாவில் வேகமாக குறைந்து வருவதாகக் குறிப்பிட்டார், அதற்கு காந்தி கிண்டலாக பதிலளித்தார், “காடுகளில் வனவிலங்குகள் குறைந்து வருகின்றன, ஆனால் நகரங்களில் அதிகரித்து வருகின்றன.” அவரைப் பொறுத்தவரை, அனைத்து நாடுகளும் தொழில்மயமாக்கலின் பொறுப்பற்ற மற்றும் வரம்பற்ற நாட்டம் மனிதனின் இருப்புக்கு மட்டுமல்ல, நமது பூமியில் உள்ள அனைத்து வகையான உயிரினங்களுக்கும் கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது.
காந்தி உருவாக்கிய ஆசிரமங்களில் மேலாண்மைக்கு உள்ளாக்கப்பட்ட மனித, விலங்குக் கழிவுகளை உரமாக மாற்றி, தோட்டப் பயிர்களுக்கு உரமாக்குவது. உணவு, உடை பொருளாதாரம் என்று எல்லாவற்றிலும் சிக்கனம் கடைப்பிடிக்கப்பட்டது. தேவைக்கு அதிகமாக பயன்படுத்துவதை ஆபத்தானதாக கருதினார். இயற்கை தாக்குப்பிடிக்கும் அளவுக்கு மட்டுமே அதைப் பயன்படுத்துவதை காந்தியம் வலியுறுத்துகிறது. அதற்கேற்ப ஒட்டுமொத்த வாழ்க்கைமுறையையே அமைத்துக்கொள்வதைப் பற்றி காந்தியம் பேசுகிறது. தாக்குப்பிடிக்கும் பொருளியலும், நுகர்வு மறுப்பும் காந்திய அடிப்படைகள்.
ஆங்கிலேய அரசு இந்தியாவின் இயற்கை வளங்க்களை கொள்ளையடித்தது. அனைத்து வளங்களையும் சுரண்டி பொருளாதார வளர்ச்சியடைந்தது. காந்தியின் ஆங்கிலேய எதிர்ப்பானது இந்தியாவின் இயற்க்கையை காப்பதாகவும் அமைந்தது. காந்தியின் அரசியல் மேலாண்மை கிராமங்களைச் சாதி ஏற்றத்தாழ்வோடு விதந்தோதினாலும் அதில் இருக்கும் இயற்கை சார்ந்த கூறுகளை மட்டும் நாம் அணுகலாம், இன்று பெருநகரங்களில் இருந்து வெளியேற்றப்படும் உழைக்கும் மக்களின் குடியிருப்புக்களின் அரசியல் இன்றிருக்கும் அந்த மின்னனு நுகர்வானது கூடவே தன் ஈடாக மின்னனு கழிவுகளையும் உருவாக்கி வருகிறது. வளர்ச்சி முக்கியம்தான். ஆனால் அது அனைவருக்குமானதாக இருக்க வேண்டும். அனைவரும் என்பது இயற்கையும் சேர்த்துத்தான் இதைத்தான் காந்தியம் வலியுறுத்துகிறது.