கணியன் கூற்று.

புழுதிக்கும் புழுதியின் பூரிப்புமிகு வாசகர்களுக்கும் எமது அன்பான வணக்கங்கள். நெடிய வடிவான தெருக்களும் இல்லை, உலக வரைப்படத்தில் ஒண்டிக்கொள்ள ஒரு இடமும் இல்லை, எண்ணங்கள் கூட கிராம எல்லைக்கோட்டை தாண்டியது இல்லை, ஆனாலும் தாயுள்ளமும், கிராம வாசமும் சற்றும் குலையாத ஒரு அழகான சிறு கிராமத்தில் இருந்து முதல் முறையாக படிப்பிற்காக கடல் தாண்டி சென்று வென்று “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்கிற கணியன் பூங்குன்றனாரின் பொன்மொழியை புரிந்து உணர்ந்தவனின் அயல் நாட்டு வாழ்வை சொல்கிறேன் கேளுங்கள்.  

அன்னைத்தமிழ் மண்ணின் வாசமும், தமிழ் அன்னை மீதான நேசமும் என்னுள் நிறையுண்டு, நாட்டுப்பற்றும் மதப்பற்றும் எமது இரத்த நாளங்களில் எல்லாம் புரையோடி கிடந்து, இந்திய ஆட்சி பணித்தேர்விற்காக சென்னையில் உள்ள ஒரு முக்கிய இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையத்தில் பயிற்சி நூல்களைப் பெற்று தயார் செய்துக்கொண்டு இருந்த எமக்கு, எமது முதுநிலை கல்லூரிக்கால இறுதி ஆண்டின் பாதிவரை வெளிநாடு போக வேண்டும் என்ற எண்ணமோ, முனைவர் பட்டம் பயில வேண்டும் என்பதோ என் கற்பனையிலும் இல்லை. எமது கல்லூரியின் சக தோழர்கள் வெளிநாடு செல்வதற்கான ஆங்கிலத் தகுதித்தேர்விற்காக தயார் செய்துக்கொண்டிருந்தபொழுது கூட  அவர்களை பரிகசித்துக்கொண்டிருந்த ஒரு ஆணவன் நான். ஆனால், என் வாழ்வில் அடுத்தடுத்த நடந்த செயல்களின் விளைவுகள் எமது வாழ்வை திருப்பிப் போட்டுவிட்டது. முதுநிலை பட்டயபடிப்பின் இறுதி ஆண்டில் தேர்ச்சிப்பெற கட்டாயமாக்கப்பட்ட மூன்று மாதக்கால ஆய்வு எமது ஆர்வத்தை  அறிவியல் ஆய்வின் மீதும் முனைவர் பட்டத்தின் மீதும் திணித்தது. ‘செய்வனை திருந்தச் செய்’ என்பதை ஓரளர்விற்காவது கடைப்பிடிக்க வேண்டும் என்ற திண்ணம் கொண்ட எமது செயலின் விளைவு எங்கள் வகுப்பின் ஆய்வு அறிக்கைகளில் எமது ஆய்வு அறிக்கையும் சிறந்த ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டு பாராட்டப்பெற்றதில் நான் முழுமையாய் அறிவியல் மீது மோகம் கொண்டேன். நான் பெரிதும் மதிக்கத்தக்க அய்யநாதன் அய்யா அவர்கள் எமது இந்திய ஆட்சிப்பணி கனவை ஓர் இரவு நேர உரையாடலில் உடைத்து எரிந்தது என் அறிவியல் மோகத்திற்கு பெரும் வினையூக்கியாகி முனைவர் ஆய்விற்கான வாய்ப்பைத் தேட எம்மை சென்னைத் தெருக்களில் இழுத்துவிட்டது.

அரசுப் பல்கலைக்கழகங்களில் முனைவர் ஆய்விற்கான வாய்ப்பினை பெற அரசியல் வாதிகளின் சிபாரிசு, மந்திரிகளின் சிபாரிசு, பெரும்புள்ளிகளின் சிபாரிசு என்று எதாவது ஒரு இந்திய தேசிய பாரம்பரிய தகுதி வேண்டும். இல்லையெனில், அதே பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டயப்படிப்பு படித்திருக்க வேண்டும், அங்குள்ள பேராசிரியர்களின் வீட்டில் முறை வாசல் செய்யாத குறையாக அனைத்து பணிகளையும் செய்து ஆண்டுக் கணக்கில் கார்த்திருக்க வேண்டும், அப்படி காத்து இருந்தாலும் என்றோ ஒரு நாள் உன் முகம் கோணினால் காத்திருந்த காலம் எல்லாம் வீணாகிவிடும். இதற்கு அவர்கள் வைத்த பெயர் அர்ப்பணிப்பு, குருப்பணிவு என்று ஆயிரம் புராணக்கதைகளை மேற்கோள் காட்டுவார்கள் ஆனால் என் பார்வையில் இது அப்பட்டமான  அடிமைத்தனம். 

தனியார் பல்கலைக்கழகங்களில் போதிய நிதியும் இருக்காது அதோடு ஆய்வு செய்வதற்கான உதவித்தொகையும் அரிது. பல்கலை அளவிலான, மாநில மற்றும் தேசிய அளவிலான தகுதி தேர்வுகளும் நடக்கும் ஆனால் அந்த தேர்வுகளும் நம்பகத்தன்மை அற்றதாகவே இருந்தது. சென்னையின் ஒரு முக்கிய பல்கலை கழகத்தில் அப்பொழுது முனைவருக்கான ஆய்வில்  இருந்த அண்ணன் ஒருவர் கூறியதில் இருந்து நான் அந்த தேர்வுகளுக்கு தயார் செய்வதை வீணென்று கை விட்டு விட்டேன். அவர் என்னை ஒருமுறை முனைவர் ஆய்வு சேர்க்கைக்கான நேர்முகத் தேர்விற்கு அழைத்து இருந்தார். 

நான் உண்மை என்று நம்பியதில் எமது மகிழ்ச்சி எமது பழுதடைந்த இரு சக்கர வாகன புகைப்போல பொங்கியெழ அங்கு சென்றேன். “தம்பி தப்பா எடுத்துக்காத, இது கணக்கு காட்ட நடக்கும் வெறும் சம்பிரதாயம் தான், மாணவர்களை ஏற்கனவே எடுத்து விட்டார்கள்” என்று சொன்னதோடு அன்று அங்கேயே முழு பழுதாகி நின்றுப்போன எமது இரு சக்கர வாகனம்  போல நின்று போனது இந்தியாவில் முனைவர் ஆய்விற்க்கான எமது தேடல். அப்பொழுது நான் Armats Biotek என்ற நிறுவனத்தில் ஆய்வுப்பணியில் இருந்தேன். எமது பல்கலைக்கழக பேராசிரியர்கள் மதிப்புமிகு அம்மா இராஜலக்ஷ்மி, திரு குருநாதன், திரு மனோஜ் மற்றும் திருமதி அனிதா தேவி மற்றும் Armats Biotek நிறுவன இயக்குனர் முனைவர் ஆறுமுகம் அவர்களின் பரிந்துரைப் பெயரிலும்  ஏற்கனவே வெளிநாடுகளில் இருந்த தோழர்களின் அறிவுரையின் பெயரிலும்  நான் வெளிநாடுகளில் முனைவருக்கான ஆய்வு வாய்ப்பை தேடத்தொங்கி, சென்னையில் உள்ள வெளிநாடு செல்வதற்கான பல்வேறு கல்வி ஆலோசனை நிறுவனங்களில் ஏறி இறங்கி, எனக்கு தெரிந்த அரைகுறை ஆங்கிலத்தை வைத்துக்கொண்டு சில ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டு, ஆங்கிலத் தகுதித் தேர்வில் கழுத்தளவு தேர்ச்சிப்பெற்று, இந்தியாவில் புறக்கணிப்பட்ட நான், முனைவர் ஆய்விற்கான வாய்ப்பையம் , ஆய்வு மற்றும் வாழ்வியலுக்கான முழு உதவித்தொகையையும் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் பெற்று ஆஸ்திரிலேலியாவின் குயின்ஸ்லாந்து  மாகாணத்தின்  டவுன்ஸ்வில் நகரில் உள்ள ஜேம்ஸ் குக் பல்கலைக்கழகம் வந்தடைந்தேன். 

வெள்ளையர்கள் எல்லாம் கிறிஸ்துவர்கள்; வெள்ளையர்கள் எல்லாம் மதம் மாற்றம் செய்யக்கூடியவர்கள்; வெள்ளையர்கள் எல்லாம் நமது எதிரிகள்; வெள்ளையர்கள் நம்மை அடிமைப்படுத்தி கொன்றுக் குவித்தவர்கள் என்று நம் மீது திணிக்கப்பட்ட எண்ணற்ற எதிர்மறை எண்ணங்களோடு அந்த எதிரிகளின் மத்தியில் வாய்ப்பை பெற்ற நன்றியுணர்வோடு வாழத்தொடங்கினேன். 

ஆஸ்திரேலியா என்றால் வெறும் வெள்ளைக்கார கிறிஸ்துவர்களை உள்ளடக்கிய நாடு அல்ல என்பதனை முதலில் அறிய நேர்ந்தேன். தமிழர்களின் மரபியலோடு ஒன்றித்த இம்மண்ணின் பூர்வக்குடிகள், நியூஸிலாந்து, பல்வேறு ஆசிய, ஐரோப்பிய, ஆப்பிரிக்க, வட மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் இருந்து புலப்பெயர்ந்த பல்வேறு தேசிய இனங்கள் வாழும் ஒரு கூட்டு கலாச்சார வாழ்வை உள்ளடக்கியதே ஆஸ்திரேலியா என்பதை உணர எனக்கு நீண்ட காலம் தேவைப்படவில்லை. ஆஸ்திரேலிய வாழ்வு எமக்கு எல்லா விதத்திலும் வியப்பு மிகுந்ததாகவே இருந்தது. இந்த நாட்டின் கல்விமுறை, தனி மனித சுதந்திரம், திறமைக்கான முன்னுரிமை மற்றும் வாய்ப்பு, உணவு முறை, பொழுதுப்போக்கு, சக மனிதர்களை நடத்தும் விதம், முறைப்படுத்தும் விதம், மதிக்கும் விதம், மன அழுத்தமில்லா கல்வி மற்றும் பணி, செல்லப்பிராணிகள் மீது அவர்கள் காட்டும் அன்பு, வாழ்வியல் முறை, கடவுள், அறிவியல், இயற்கை, மற்றும் மதம் மீதான அவர்களின் பார்வை. இப்படியான எல்லாவிதத்திலும் இந்த நாடு எனக்கு வித்தியாசமாக இருந்தது மட்டுமல்லாமல் பெரும்பாண்மையாக எனக்கு பிடித்தும் இருந்தது.

இந்த நாட்டின் அடிப்படை பண்பு எம்மை மிகவும் கவர்ந்த ஒன்று. முதலாவதாக எம்மை தொட்டது இந்த நாட்டு மக்களின் வாழ்வியல், அவர்கள் வாழ்வதற்காக வாழ்கிறார்கள், வங்கி கணக்கில் சேமிப்பை உயர்த்தவோ, அடுத்த ஐந்தாறு சந்ததிகளுக்கு கோடிகளை குவிக்கவோ வாழவில்லை. அது தான் அவர்களின் எதார்த்த வாழ்வியல். ஒரு நாளில் ஒரு மனிதரை எத்தனை முறை சந்தித்தாலும் அத்தனை முறையும் எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்பார்கள்; நமக்கு முன்னாள் அவர்கள் செல்கிறார்கள் என்றால், ஒரு அறைக்கான அல்லது கட்டிடத்தின் கதவை அவர்கள் முதலில் திறந்தால் நாம் கடந்து செல்லும்வரை அவர்கள் கதவை கையில் பிடித்துக்கொண்டு காத்திருந்து பிறகு அவர்கள் செல்வார்கள்;  ஒதுங்க இடமற்ற ஒற்றைவழி இடங்களில் நடந்து செல்ல நேற்கையில் அவர்கள் ஒதுங்கி நின்று நமக்கு வழி விட்டு பிறகு அவர்கள் செல்வார்கள்; மன்னிப்பும் நன்றியும் அவர்களிடம் இருந்து சாராளமாக வெளிப்படும்; செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்களும் பூனைகளும் தான் அவர்களின் வளர்ப்பு பிள்ளைகள்; பொது இடங்களிலும் சாலைகளிலும் அவர்களின் ஒழுங்கு மேன்மையானது; இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

விஐபி கலாச்சாரம் இந்த நாட்டில் அறவே இல்லை என்பேன். அரசன் ஆனாலும் ஆண்டி ஆனாலும் விதி ஒன்று தான். ஆபத்துக்கால சேவைக்கு செல்லும் அவசர ஊர்தி, தீயணைப்பு வாகனம், மற்றும் காவல் துறை வாகனங்களைத் தவிர வேறு எவரின் வாகனங்களுக்கும் பொது மக்கள் எங்கும் காத்துக்கிடக்க தேவை இல்லை. நடிகர்களுக்கும் விளையாட்டு வீரர்களுக்கும் மற்றும் பாடகர்களுக்கும் இங்கு இரசிகர்கள் உண்டு ஆனால் பைத்தியகார கூட்டம் எல்லாம் இங்கு இல்லை. மதமும் கடவுளும் இவர்களுக்கு ஒரு பொறுட்டல்ல, இங்குள்ள 40% மக்கள் கடவுள் நம்பிக்கை அற்றவர்கள், அல்லது உலகநாயகனை போல், இல்லையென்று சொல்லவில்லை இருந்தால் நால்லா இருக்கும் என்று தான் சொல்கிறோம் என்று கடவுளையும் மதங்களையும் தட்டிக் கழிப்பவர்கள், மாறாக உழைப்பையையும், அறிவியலையும், உண்மையையும், செயலின் விலைவையும் நம்பி பயணிப்பவர்கள், தன் வாழ்வின் நன்மைகளுக்கும் தீமைகளுக்கும் தாங்களே பொறுப்பு என்று நம்புகிறவர்கள். 

தீதும் நன்றும் பிறர்தர வாரா அல்லவா. ஆதலால் தான் இங்குள்ள மலைகளிலும் காடுகளிலும் போலி கடவுள்கள் குடியேறவில்லை மாறாக இயற்கையன்னை ஆனந்தமாய் அவளாய் உள்ளாள். மீதமுள்ள கடவுள் நம்பிக்கையுள்ளவர்களும் கடவுளை தெருவில் இழுத்து விடுவதில்லை. நான் கடவுள், கடவுள் என்னிடம் பேசுகிறார், இறந்த ஆன்மாக்கள் என்னிடம் பேசுகிறது, நான் உன் வாழ்க்கையை சரி செய்கிறேன், இந்த பரிகாரம் செய், அந்த பரிகாரம் செய் என்ற ஏமாற்றும் கூட்டமும் ஏமாறும் கூட்டமும் இங்கில்லை. 

இந்தியா, இலங்கை மற்றும் நேபாளில் இருந்து வந்த ஹிந்துகளும், மத்திய ஆசியாவில் இருந்து வந்த இஸ்லாமியர்களும், கிறிஸ்துவ மதத்தை தழுவுகிற பல நாடுகளை சேர்ந்த சிறு கூட்டம் தான் இந்த நாட்டினை மதத்தின் பெயரால் சீரழிக்கும் கூட்டம். சில ஆப்பரிக்க மற்றும் ஆசிய மதமாற்றும் கூட்டம் எம்மை பலமுறை இயேசு அழைக்கிறார் அல்லா தான் ஒரே கடவுள் என்று மூளை சலவை எல்லாம் செய்ய முயன்றார்கள். நானோ நான் மத நம்பிக்கை அற்றவன் என்றேன், என் நெற்றியில் இருந்த திருநீரைப் பார்த்து நீ இந்து தானே என்றார்கள், நான் இது எமது மதத்தின் அடையாளம் அல்ல மரபியல் மற்றும் மண்ணின் அடையாளம் என்றேன், ஆஸ்திரிலேலிய பூர்வக்கூடிகள் திருநீரு பூசுகிறார்களே அவர்கள் இந்துக்களா என்றேன் குழம்பி ஓடிவிட்டார்கள். இந்த சிறு கூட்டத்திற்கு, மதம் இங்கு வாணிபமும் வருமானமும் கூட, ஒரு இந்துவாக ஒரு இந்துக் கோவிலில் நான் கண்ட அனுபவம் இது. ஒரு நாள் ஆஸ்திரேலியர்கள் பொங்கி எழுந்தால் இந்த கீழ்மை எல்லாம் அழியும் என்று நம்புகிறேன். மற்றப்படி மதத்தின் பெயரால் இங்கு அரசியலும் இல்லை ஓட்டும் இல்லை. 

விலைவாசி உயர்வும் வாழ்வாதரத்திற்கான செலவும் இந்த நாட்டிற்கு ஒரு பெரும் சவாலாக நிலைத்து நின்றாலும், அனைத்து அடிப்படை வசதிகளும் தன்னிறைவில் ஓரளவு முழுமைக்கண்ட நாடு என்றே சொல்வேன். சாலை மற்றும் போக்குவரத்து வசதிகளும் மேம்பட்டே இருக்கின்றன, அடுத்ததாக, இவர்களின் கல்வி இவர்களின் வாழ்வியல் சார்ந்தே உள்ளது, இங்கு கல்வி திணிக்கப்படுவது இல்லை.   அரசாங்க பள்ளிகளில் தான் பெரும்பான்மையோர் தங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்கின்றனர். இந்தியா இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இருந்து குடி பெயர்ந்தக் கூட்டம் தான் தங்களின் கௌரவத்தை நிலை நாட்ட தனியார்ப் பள்ளிகளை தேர்ந்தெடுக்கின்றனர். கல்வியில் எந்த பாரபட்சமும் இல்லை. பால் மறந்த மூன்று வயதில் எவரும் தங்கள் பிள்ளைகளை பள்ளியில் சேர்ப்பதில்லை, 5 வயதை தொட்டவுடன் தான் இவர்கள் பள்ளிக்கு செல்வார்கள் அதுவும் முதல் ஒரு வருடம் குழந்தையை பழக்கப்படுத்த தான் பள்ளி, பிறகு ஆறு வயதை தொட்டவுடன் தான் முதல் வகுப்பு. பத்தாம் வகுப்புவரை படிப்பார்கள் அதற்கு படிப்பு ஏறவில்லை என்றால் ஏதோ ஒரு தொழில் கல்வியை தேர்ந்தெடுத்து அதை நோக்கி சென்று விடுவார்கள்…. 

அரசாங்கம் அதற்குப் பல சலுகைகளை வழங்குகிறது. இந்த தொழில் சார்ந்த பாடங்கள் 6 வகுப்பிலேயே துவங்கிவிடும், அவர்களின் ஆர்வத்திற்கு குழந்தைகள் ஒவ்வொன்றை தேர்ந்தெடுத்து செய்வார்கள். கல்லூரி படிப்பு கட்டாயமில்லை ஆனால், படிக்க விரும்பும் மாணவர்களுக்கு எவ்வித நிபந்தனையும் இன்றி இந்த நாட்டின் குடிமகன் அல்லது நிரந்தர வகிப்பிட உரிமைக்கான ஆதாரம் இருந்தால் போதும், அரசாங்கம் கல்விக்கடனை வழங்கும். மாணவர்கள் வேலைக்கு சென்றவுடன் அவர்களின் சம்பள அளவை பொறுத்து மாதம் மாதம் அரசாங்கம் பிடித்துக்கொள்ளும். கல்விக் கடன் வாங்கி கட்ட முடியாத பெற்றோர்களை தனியார் அடியாட்களை வைத்து அரசாங்கம் மிரட்டுவது இல்லை. குறைவான சம்பளம் வாங்கும் பெற்றோர்கள் அல்லது வேலை அற்ற பெற்றோர்களின் குழந்தைகளுக்கும், பதினெட்டு வயது பூர்த்தியாக தனியாக வசிக்கும் குழந்தைகளுக்கு அரசாங்கம் வாரம் வாரம் அல்லது இரண்டு வாரத்திற்கு ஒருமுறை உதவித்தொகை கொடுத்துக்கொண்டே இருக்கும். ஒரு வேலை மாணவர்கள் படித்து முடித்து விட்டு வேலை இன்றி இருந்தாலும் இது தொடரும். 

அந்த மாணவன் வேலை பெறுவதற்காண தகுதியை வளர்க்க மேம்பட தேவையான பயிற்சி மற்றும் ஆலோசனைகளை அரசாங்கம் வழங்கும்.

சுகாதாரம் மற்றும் மருத்துவத்திலும் இந்த நாடு  தொழில் நுட்ப அளவில் மிகைஈர்ந்த நாடே என்றே கூறலாம். போதிய மனிதவளம் மட்டுமே இல்லை. இங்கு மருத்துவம் இலவசம் என்றே கூற வேண்டும். ஆம், அதாவது மருத்துவத்திற்காக இந்த நாடு இந்த நாட்டின் குடிமக்களுக்கும் நிரந்திர வசிப்பிட உரிமை பெற்றவர்களுக்கும் ஒரு மருத்துவ அடையாள அட்டையை வழங்கி உள்ளது. மருத்துவாதத்திற்காக அவர்கள்  செல்கையில் மேற்கண்ட அடையாள அட்டையை காண்பித்தால் போதுமானது. இதன்பொருட்டு, அனைவரின் சம்பளத்தில் இருந்து இரண்டு விழுக்காடு பிடித்துக்கொள்ளும். 

ஆஸ்திரிலேயாவில் வேலையில்லா திண்டாட்டம் பொதுவாக ஒரு பெரும் சவாலாக இருந்தது இல்லை. ஆனால், தொழிலாளர்கள் பற்றாக்குறை எப்பொழுதும் இருந்துக்கொண்டே இருக்கும். அதற்காக இந்த அரசாங்கம்  பல்வேறு திட்டங்களை செயல்படுத்திக்கொண்டே உள்ளார்கள். திறமையும் தகுதியும் சரியான நடத்தையும் மற்றும் நேர்மையான பரிந்துரைக்கடிதமும்  இருக்குமாயின், வேலை கிடைப்பது என்பது அவ்வளவு கடினமானது அல்ல. உண்மையான உழைப்பும், நேரிய நடத்தையும் மற்றும் வெளிப்படைத்தன்மையும்  இருக்குமாயின் எவ்வித உயர் பதவியையம் எளிதில் அடையலாம். உயர் பதவையை அடைய , பதவியை தக்கவைத்துக்கொள்ள எவ்வித பின்பக்க கதவு வழியான பாதையையும் தேர்ந்தெடுக்க வேண்டியதில்லை. முனைவர் பட்டம் பெற்றபிறகு ஒரு சாதாரண ஆய்வக தொழில் நுட்ப வல்லுனராக துவங்கிய சிறிது காலத்தில் ஒரு இயக்க மேலாளராக படிப்படியாக உயர எமக்கு நீண்டகாலம் எடுக்கவில்லை. எமது இந்த உயர்விற்கு காரணம் எமது பல்வேறு மேலாளர்கள் எம்மை அந்தந்த நிறுவனங்களில் எவ்வித இன நிற மொழிப்பாகுபாடுமின்றி எமக்கு வாய்ப்புகளை திறமையின் அடிப்படையில் தந்தமையும் அதனை நான் சரியாகப்பயன்படுத்தியமை தான் காரணம். 

இத்தனைப்பெரிய வளர்ச்சியை அடைந்த நான், இந்த ஆஸ்திரேலியா வாழ்விற்காக இழந்தவை கொஞ்சம் நஞ்சமில்லை. தாய் தந்தை உடன் பிறந்தோர் உறவினர் நட்பினர் என அனைவரையும் விட்டு பிரிந்து தனிமையில் வாழும் ஒரு வாழ்வை எதிர்க்கொண்டேன், மண்ணின் வாசத்தை இழந்தேன், சில நேரங்களில் நிற மற்றும் இனவெறியை எதிர்க்கொண்டுள்ளேன், இளமையை இழந்துள்ளேன், நம் நாட்டு வாழ்வியலை, கலையை, கலை நயம் நிறைந்த பொழுதுபோக்கை, சுக மற்றும் துக்க நிகழ்வுகளின் பங்களிப்பை இழந்துள்ளேன் என்று சொல்லிக்கொண்டே போகலாம். ஆனாலும், இந்த மண் எமக்கும் எமது குடும்பத்திற்கும் நிறைவான அமைதியான பாதுகாப்பான உயர்வான வாழ்வை கொடுத்து அங்கீகரித்துள்ளது. இந்த வாழ்வு அய்யா கணியன் பூங்குன்றனாரின் “யாதும் ஊரே, யாவரும் கேளீர்” என்ற கூற்றை எம் வாழ்வின் மூலம் உணர்த்தியுள்ளது.  

எத்தனையோ இழந்து தான் இங்கே இருக்கேன், ஆனால் எனக்கான ஒரு அங்கீகாரமும் தகுதியான பணியும் எம் தாய் மண்ணில் எனக்கு  கிடைக்க பெருமாயின், எம் தாய் மண்ணிற்கான எமது ஒரு ஒருவழி விமானப்பயணச்சீட்டிற்கானத் தொகை எப்பொழுதும் எமது வங்கி கணக்கில் காத்து கிடக்கிறது. அழைப்பதும் புறக்கணிப்பதும் எம் தாய் மண்ணின் பொறுப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *