பெண்ணின் முதல் பூப்பு பற்றியும் அதற்கான சடங்குகள் குறித்தும் புறநானூற்றில் மகட்பாற் காஞ்சித்துறைப் பாடலில்(337:6:12) குறிப்பிடப்பட்டுள்ளது.
“பாரி பறம்பின் பனிச்சுனை போல
காண்டற் கரியளாகி மாண்ட
பெண்மை நிறைந்த பொலிவோடு மண்ணிய
துகில்விரி கடுப்ப நுடங்கி தண்ணென
அகில் ஆர் நறும்புகை சென்றடங்கிய
கபில நெடுநகர்க் கமழும் நாற்றமொடு
மனைச் செறிந்தனளே வாணுதல்”
மனைச் செறிதல் என்ற பெயரில்
தனியாகப் பெண்கள் இருத்தி வைக்கப்பட்டது பற்றிய குறிப்பு காணக் கிடைக்கிறது.
பாஞ்சாலி சபதத்தில்
பாஞ்சாலி சபைக்கு இழுத்து வரப்பட்டபோது
அச்சா, கேள். மாதவிலக் காதலா லோராடை
தன்னி லிருக்கிறேன். தார்வேந்தர் பொற்சபைமுன்
என்னை யழைத்தல் இயல்பில்லை
என்று கூறுவதாகப் பாரதி எழுதியிருக்கிறார்.
மரபாகவே, பெண்களது மாதவிடாயின்போது தனித்திருக்கச் செய்தல் இருந்திருக்கிறது. சமூகம் என்ற ஒன்று இயங்க ஆரம்பித்த நாட்களில் பெண் அந்தந்தக் குழுக்களின் வழிநடத்து சக்தியாக இருந்தாள். உடலிலிருந்து குருதி வெளியேறும் போது நல்ல ஓய்வும் பதற்றமற்ற மனநிலையும் பெற அவள் தனித்திருக்கத் தொடங்கினாள்.
வலுப்பெறவும் வழிநடத்த ஆயத்தப்படுத்தவுமான நாட்களாக அவை அமைந்திருந்தன.
கால ஓட்டத்தில் ஆணாதிக்கச் சமுதாயம் உருவாகி, வலுப்படத் தொடங்கியபோது பெண் என்பவளுக்கான எல்லைகள் வரையறுக்கப்பட்டன. பெண்கள் மீது திணிக்கப்பட்ட ஒன்றாகவும் என்றுமே மீற இயலாத கடும் கட்டுப்பாடாகவும் மாதவிடாய் சம்பிரதாயங்கள் உருமாற்றம் பெற்றன.
பெண் புழக்கடையில் அந்த நாட்களில் சிறைவைக்கப்பட்டாள். பல்லிகளும் கரப்பான் பூச்சிகளும் குடியிருக்கும் ஒரு மூலையில் அந்த மூன்று நாட்களில் ஒதுங்க வைக்கப்பட்டு மழை, வெயில், குளிர் என எதற்கும் அசைந்து கொடுக்க இயலாத ஒரு கல் என அங்கு அமர்ந்திருந்தாள்.
அந்த நாட்களில் பூ வைத்துக் கொள்ளுதல், வேறு ஆடைகள் உடுத்திக் கொள்ளுதல், நல்ல உணவு உண்ணுதல், வேற்று மனிதர்களைப்
பார்ப்பது என அனைத்தும் தடை செய்யப்பட்டிருந்தன. ஒரு ஓலைப் பாயும் பழைய தட்டும் குவளையும் மட்டுமே அனுமதிக்கப் பட்டவையாக இருந்தன. தலையண வைத்துக் கொள்ளவோ வீட்டில் பிறர் நடமாடும் போது, தன் இடத்தை விட்டு வெளியில் வரவோ அவள் மறுக்கப்பட்டாள்.
வீட்டில் இந்த நிலை எனில், கோயில்கள், விழாக்கள் பிற பொது இடங்கள் பற்றிக் கூறவே தேவையின்றித் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.
வீட்டில் சுப காரியங்கள் மாதவிடாய் நேரங்களில் பெண்களைத் தள்ளி வைத்தே நடந்து வந்தன.
தீட்டு என்ற பெயரில் பெண்ணைச் சமூகம் ஒதுக்கியுள்ளது. அந்தக் காலங்களில் வீட்டில் சமைக்கும் பாத்திரங்களைத் தொடக்கூடாது கோவிலுக்குச் செல்லக்கூடாது எனவும் சங்க காலச் சமூகம் புறந்தள்ளியுள்ளது. இதனை,
“தண்ணடை மன்னர் தாருடைப் புரவி
அணங்குஉடை முருகன் கோட்டத்துக்
கலன்தொடா மகளிரின் இகழ்ந்துநின் றவ்வே” – (புறம் . 299)
என்ற பாடல் தெளிவுறுத்துகின்றது. நெய்யிட்ட உணவை உண்ட பகை மன்னரின் குதிரைகள் எல்லாம், முருகன் கோயிலிலே புகுந்த தூய்மையற்றார், கலம் தொடுவதற்கு அஞ்சினராக ஒதுங்கி நிற்றலைப்போல அஞ்சி ஒதுங்கி நின்றன காணீர், என்று பெண்ணை உவமையாக கூறியுள்ளமையைக் காணமுடிகின்றது.
நாளடைவில் பெண்ணை மனதளவில் பெருங் காயப்படுத்தும் ஒரு கொடுஞ்செயலாக இது பரிணாம வளர்ச்சி கண்டது. இதனால், தீட்டு என்று சொல்லவே பெண்கள் அஞ்சும் நிலை வந்தது.
ஆன்மிகமும் மதமும் அரசியலுமாகப் பெண்ணைப் புறக்கணிக்கப் பேராயுதம் என இதைக் கொண்டதை மறுக்க இயலாது.
இதற்கு சாட்சியாக, மாதவிடாய்க் குருதியை அசுத்தமானதாகக் கருதும் போக்கைக் கூறலாம். இன்றுவரை பெண் பிள்ளைகளுக்கு மாதவிடாயும் மாதவிடாய் தொடர்பான பிரச்சனைகளும் வெளியில் சொல்லத்தகாதவை என்ற மனநிலையே காணப்படுவதை ஓர் ஆசிரியையாக நான் பலமுறை கண்டிருக்கிறேன்.
குருதிக் கறை ஆடையில் பட்டுவிட்டால், அது வெளியில் தெரிந்துவிடக்கூடாது என வெகுபாடுபட்டுப் பெருங் குற்றாவாளி போல ஒளிந்து மறைந்து சென்று ஒடுங்கும் பெண் பிள்ளைகளைக் கண்டு அவர்களைச் சமாதானப்படுத்தியிருக்கிறேன்.
ஒரு முறை வகுப்பிற்கு அரை மணிநேரம் தாமதமாக வந்த மாணவியிடம் காரணம் கேட்ட போது, குளித்து முடித்து, சாப்பிட்டுவிட்டுப் பள்ளிக்குக் கிளம்பும்போது, மாதவிடாய் ஆனதில், மீண்டும் தலைக்குத் தண்ணீர் விட்டுக்கொண்டு செல்லும்படி வீட்டில் வற்புறுத்தியிருக்கிறார்கள். அவசரமாகக் கிளம்பி, தலையில் இருந்து தண்ணீர் சொட்டச் சொட்ட வந்திருக்கிறாள் அந்த மாணவி.
வேறொரு மாணவி, பழந்துணியில் செங்குளவி இருந்ததைக் கவனிக்காது பயன்படுத்தியதில் தொடைப்பகுதியில் குளவி கொட்டி விஷம் ஏறி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றாள்.
மாதவிடாய் என்ற சொல்லும் அதைச் சார்ந்த கட்டுப்பாடுகளும் மிகுந்த மனச் சோர்வைப் பெண்களுக்கு அளிப்பதைக் காண முடிகிறது. குருதிப் போக்கு நாட்களைப் பதட்டத்தோடு அணுக விதிக்கப்பட்டிருக்கிறார்கள் பெரும் எண்ணிக்கையிலான பெண்கள்.
இப்படிப்பட்ட பதட்டம் என்பது சமுதாயத்தால் உருவாக்கப்பட்டது.
தொலைக்காட்சி விளம்பரங்களில் உறிஞ்சு பஞ்சு காணப்பட்டால் அதற்கும் பதற்றம் கொண்டு அவசரமாக வேறு காட்சிகளைத் தேடுவோர் இருக்க, உறிஞ்சு அட்டைகள் பற்றியே அறியாதவர்களும் உண்டு என்பதை வியப்படையாமல் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும். ஏனெனில் மாதவிடாய்ச் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு அப்படி. அது பழந்துணியில் துடைத்து எறியத்தக்க ஒன்று என்றே கருதும் ஓர் உலகம் இன்னும் இருக்கிறது.
மாதவிடாய் அரசியலில் மனம் புண்பட்ட பெண்கள் சில முன்னெடுப்புகளைச் செய்தனர். வீட்டுக் காவலில் இருந்து வெளியே வருவது முதல் கோவில்களுக்குச் செல்வது வரை விதம்விதமான எதிர்ப்புகளைத் தெரிவிக்கத் தொடங்கினர்.
மாதவிடாய்க் கால மூட நம்பிக்கைகள் ஏராளம் உண்டு. அவற்றுள் சில அறிவியல் பின்னணியில் விளக்கப்பட்டாலும் கூட, நெடுங்காலமாக ஒதுக்கப்பட்டிருந்த வேதனையோ என்னவோ, அவற்றைப் பெண்கள் கருதுவதேயில்லை.
ஊறுகாய் ஜாடியை மாதவிடாயின்போது தொட்டால் ஊறுகாய் முழுதும் கெட்டுவிடும் என்ற உண்மைக்குப் புறம்பான விஷயத்தை எதிர்த்து, ஊறுகாயைத் தொடுவோம் என்ற இயக்கம் தொடங்கப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது.
துளசி, கறிவேப்பிலை, திருநீற்றுப் பச்சை, எலுமிச்சை, இன்னும் பட்டியலில் சேரும் பலவகைச் செடிகளின் அருகில் அந்த நாட்களின் போது செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடுகள் இன்னும் உண்டு.
என் தோழியின் வீட்டில் துளசியுடன் சேர்த்து நடப்பட்டிருந்த மஞ்சள் செடி சோர்வுற்றுத் தெரிந்தபோது, தோழியின் மாமியார் அவளைச் சந்தேகப்பட்டு, அந்த நாட்களில் செடியின் அருகில் அவள் சென்றிருப்பாள் எனச் சண்டை போட்டதாக அவள் கூறியது நினைவுக்கு வருகிறது.
ஐம்பது வயதிற்கு மேலும் மாதவிடாய் தொடர்ந்தால், அந்தப் பெண் நல்லவள் இல்லை என்ற நம்பிக்கை தன் ஊரில் நிலவுவதாக ஒரு தோழி கூறியது என்னை வியப்பில் ஆழ்த்தியது.
தேர்தல் பணிகளுக்கு நாங்கள் செல்லும்போது மாதவிடாயை ஒத்திப் போடும் வழிகளைத் தேடுகிறோம். எங்கோ ஒரு தண்ணீர் வசதியற்ற மூலையில், கழிப்பறை அறியாத இடத்தில் இரண்டு நாட்களை அந்தச் சமயத்தில் கழிப்பது என்பதும், சாப்பிடக் கூட நேரமற்ற தொடர் பணியில், எழுந்து சென்று உறிஞ்சு பஞ்சு மாற்றத் தோதுப்படாமல் கசகசத்துக் கிடத்தலுக்கு அஞ்சுகிறோம்.
அஸ்ஸாமில் காமக்கியா தேவி கோயிலில் பெண் கடவுளுக்கு மாதவிடாய் உண்டாகும்போது மூன்று – நான்கு நாட்கள் கோயிலின் கதவுகள் மூடப்பட்டு திருவிழா கொண்டாடப்படுகிறது. இங்கு இருக்கும் காமாக்யா தேவியின் மாதவிடாய்க் கால இடமாக அம்புபாச்சி எனும் பகுதி அறியப்படுகிறது. அம்புபாச்சியில் மாதவிடாய் என்ற புனித செயல்முறை வழிபடப்படுகிறது. இது நடைபெறும் மழைக்காலத்தில் திருவிழாவிற்கு பிறகு காமாக்கிய தேவியின் அருளால் மண்ணின் வளம் பெருகும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த நான்கு நாட்களில் தேவியின் இரத்த அடையாளமாக பக்தர்கள் உடல் எங்கும் குங்குமம் பூசி வழிபடுகின்றனர்.
ஆனால், இந்தியாவில், மாதவிடாயின் போது பெண் “தூய்மையற்றவள்” என்ற கருத்தின் அடிப்படையில் இந்து சமூகத்தைச் சேர்ந்த அனைத்துப் பெண்களும் மாதவிடாய் காலத்தில் கோவில்களுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் மாதவிடாய் நீண்ட காலமாக தடைசெய்யப்பட்ட ஒன்றாகவே இருந்து வருகிறது, அதனால், இப்போது கூட, ஒரு பெண் தனது வழக்கமான உதிரப் போக்குக் காலத்தின் போது சமூகக் கட்டுப்பாட்டு எல்லைகளைக் கடந்து மத வழிபாட்டுத் தலத்திற்குள் நுழைவது மிகவும் கடினம்.
Gloria Orwoba எனும் கென்யன் செனட்டர் தனது ஆடையில் குருதிக் கறை பட்டதும் பார்லிமெண்ட் ஹவுசில் இருந்து வெளியேறும்படிக் கூறப்பட்டதாகக் கூறவும். அது குறித்த சர்ச்சைகள் மேலெழுந்தன. பிறகு, அவர் ஆடை மாற்றி வர அவகாசம் தந்ததாக அந்த விஷயம் கூறப்பட்டு சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது.
( தற்போது குருதிப் போக்கு நேரத்தில் ஏற்படும் அசவுரியங்களைக் கருத்தில் கொண்டு, அந்த நாட்களில் விடுமுறை தருவது வரை ஓரளவு புரிந்துணர்வு ஏற்பட்டிருக்கிறது.)
கட்டுப்பாடுகள் என்பனவற்றைத் தாண்டி, கொடுங்கோன்மை என்பது வரை நீடித்து இருக்கும் இந்தப் புறக்கணிப்பு பற்றி எழுதும்போதே இன்னொரு விஷயம் நினைவுக்கு வருகிறது.
பேருந்தில் என்னுடன் பயணிக்கும் என் தோழிகள் ஒரு விஷயத்திற்கு அங்கலாய்ப்பார்கள். முன்பு போல என் வீட்டில் இந்த மூன்று நாட்கள் தனியாக அமரச் செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? பழைய சோறு கூட போதும்.முடியலப்பா இந்த ஓட்டம் என்பார்கள்.
இது நகைமுரணா? இயலாமையா?
இயற்கையின் கொடையா? வஞ்சனையா? கேள்விகள் தொடர்கின்றன.
சிறு வயதில் பூப்படைதல் அதிகரித்துள்ள இன்றைய நிலையில் இது பற்றியத் தீவிரப் பிரச்சாரமும் வழிநடத்தலும் அவசியப்படுகிறது.
உளவியல் ரீதியான ஆலோசனைகள், விழிப்புணர்வு, சூழ்நிலைகளை எதிர்கொள்ளப் பழக்குதல், இயல்பாக ஏற்றுக் கொள்ளுதல், தேவைப்படும் போது நிச்சயமாக ஓய்வு தருதல் , சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ளுதல், தூய்மை பேணல் போன்ற அறிவார்ந்த நடவடிக்கைளும் அன்பும் ஆதரவுமான இல்லமும் சூழலும் அமையும் வரை மாதவிடாய் என்பது நிற்காமல் வலி தந்து வழியும் வெறுங் குருதியாகவே நீடிக்கும்.