என்னங்க சார் உங்க சட்டம்?

இன்றைய தேதியில் நீங்கள் சுற்றுச்சூழல் சரியில்லை அல்லது சுற்றுச்சூழல் பாதுகாப்பு என வாய்திறந்து பாருங்கள். அவ்வளவு தான். அட இவர்களுக்கு வேறு வேலையே இல்லை. எதற்கெடுத்தாலும் பூமி சூடாகிறது, அழியப்போகிறது, வருங்காலம் கேள்விக்குறி ஆகிவிடும் என்று நம்மை பயமுறுத்திக்கொண்டே இருப்பார்கள் என்று நம்மீது பாய்ந்துவிடுவார்கள். இன்னும் ஒருபடி மேல சென்று சுற்றுச்சூழலை எதுவும் செய்யாமல் எப்படி வளர்ச்சி ஏற்படுத்த முடியும் என்று கேட்பார்கள். இப்படியான மோசமான தாராளமயமாதலிலும் முதலாளித்துவத்தினாலும் தான் நம்முடைய பூவுலகை தாரைவார்த்துக் கொடுத்துக்கொண்டிருக்கிறோம்.

இலட்சம் பேரில் பத்து பேர் தான் தீர்க்கமான சுற்றுச்சூழல் பிரச்சனையைப் பற்றி ஆய்வுசெய்து கொண்டும் சூழல் பிரச்சனையை உலகிற்கு தெரியப்படுத்திக்கொண்டும் இருக்கிறார்கள். ஆனால் அவர்களை மீதமிருக்கும் இம்மக்கள் கிள்ளுக்கீரையாக எண்ணி ஏளனம் பேசுவார்கள். போகட்டும்.

இவர்களிடத்தில் சும்மா கேட்டுப்பாருங்களேன் சூழல் மண்டலம், உயிரினப்பன்மை, பல்லுயிர்த்தொகுதிகள் இவைகளைப் பற்றி எதுவும் தெரியுமா என? வாய்ப்பே இல்லை. இதுவே புரியாத ஒரு பெரும் கூட்டத்திற்கு இந்த பூவலகைப் பற்றி கவலைப்பட என்ன இருக்கிறது? ஆனால் நாம் கவலைப்பட்டு தான் ஆக வேண்டும். அதனால் தான் இக்கட்டுரையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் நமக்கிருக்கும் கடமைகளைப் பற்றியும் சட்டங்களைப் பற்றியும் விவரிக்க இருக்கிறேன்.

எந்தவொரு நாட்டிலும் சட்டங்களை இயற்றுவதும் காலத்திற்கேற்றவாறு சட்டத்தை மாற்றியமைக்கும் தன்மையில் அந்த நாடு எதற்காக எந்தெந்த சட்டங்களுக்கு முன்னிலையும் முக்கியத்துவமும் தருகிறது என்பதை வைத்தே ஒரு அரசு எந்த வழியில் பயணிக்கிறதென நம்மால் புரிந்துகொள்ளமுடியும்.

சுற்றுச்சூழல் சட்டங்கள் : ஒரு பார்வை.

மறைந்த பிரதமர் இந்திராகாந்தி 1972ல் ஸ்டாக்ஹோமில் மனித சுற்றுச்சூழல் குறித்த ஐக்கிய நாடுகள் மாநாட்டில் கலந்துகொண்டதை அடுத்து இந்திய சுற்றுச்சூழல் சட்டங்கள் புது பாதையில் பயணம் செய்ய ஆரம்பித்தது எனலாம்.

சுற்றுச்சூழல் சட்டங்கள் இரண்டு முக்கிய விசயங்களின் அடிப்படையில் செயல்படுவதாக வைத்துக்கொள்வோம்.

1.முன்னெச்சரிக்கைக் நடவடிக்கை

2.சுற்றுச்சூழலை அழிப்பவரே சரிசெய்ய வேண்டியவைகள்.

இதில் வேடிக்கை என்னவென்றால் சட்டரீதியான நடவடிக்கைகள் எதுவும் எடுக்க இயலாத  நிலை இருந்தது. காரணம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் கீழ் இந்த சுற்றுச்சூழல் சட்டங்கள் அமைந்திருக்கின்றன. அப்போது சுற்றுச்சூழல் சீர்கேட்டால் ஒருவர் பாதிக்கப்பட்டால் தனிமனிதராக எதுவுமே செய்ய இயலாதா எனக் கேட்கலாம்.

குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 133-ன் படி பெரும்பாலான சூழல் சார்ந்த குற்றங்களை தடுக்க இயலும். இதனை விசாரிக்க மாவட்ட நீதிபதி, துணைக்கோட்ட நீதிபதியோ அதற்கு இணையான பதவி அந்தஸ்து உள்ள ஒருவரால் தடுக்கவோ முடக்கவோ இயலும். ஆனால் இதிலும் வேடிக்கை என்னவென்றால் இந்த மாவட்ட,துணைக்கோட்ட நீதிபதிகள் நீதித்துறை சார்ந்த நீதிபதிகள் அல்ல.மாறாக மாவட்ட ஆட்சியர்,வருவாய் கோட்டாட்சியர் போன்ற வருவாய்த்துறை சார்ந்த நபர்கள்.சொல்லவே வேண்டாம்.கோடிட்ட இடங்களை நீங்களே நிரப்பிக்கொள்ளலாம்.

அதற்காக முழுவதுமாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இல்லை.நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகளில் நீதிமன்றங்கள் பல்வேறான சூழலுக்கு சாதகமான தீர்ப்புகளை வழங்கியுள்ளது. எடுத்துக்காட்டிற்கு கடந்த ஏப்ரல் 2024ல் உயர்மின்னழுத்தக் கம்பிகளை நிலத்தில் புதைக்க அனுமதி மறுக்க வேண்டும் என ராஜஸ்தானில் ஒரு வழக்கு தொடுக்கப்பட்டது. காரணம் உலகத்தில் மிச்சமீதி இருக்கும் 200 இந்திய கானமயில்கள் இந்த திட்டத்தால் அழிந்துபோகும் என வாதிட்டனர். இதற்கு நீதிமன்றம் சொன்னது மிகமுக்கியமாக கவனிக்கக்கூடிய விசயம்.

            *சுற்றுச்சூழல் சீர்கேடால் தனிநபர் பாதிக்கப்பட்டால் அது அரசமைப்புச் சட்ட உறுப்பு 21 அளிக்கும் பாதுகாப்பை மீறுவதாக இருக்கும் என்கிறது நீதிமன்றம். மேலும் இது ஒரு உரிமை மீரல் என்றும் இதற்கு அரசே பொறுபேற்க நேரிடும் என்று உரைக்கிறது.

இந்தியக் குடிமக்களின் அடிப்படைக் கடமைகளைப் பட்டியலிடும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் உறுப்பு 51A(g)-ன் படி, இந்தியாவின் காடுகள், ஏரிகள், ஆறுகள் மற்றும் வனவிலங்குகள் போன்ற சூழ்நிலைகளை பாதுகாக்கவும்,மேம்படுத்தவும், உயிரினங்கள் மீது அக்கறை(to have compassion for living creatures)கொள்ளவும் வலியுறுத்துகிறது.

இதன்படி ஒவ்வொரு மாநில அரசுக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் பகுதி 4 அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகளை பட்டியலிடுகிறது. இதில் உறுப்பு 48-ல் 48A மற்றும் 51A என்கிற இரண்டு புதிய பிரிவுகள் 1972ல் இணைக்கப்பட்டன.

Directive Principles of State Policy (Part IV) Article 48A-ன் படி அந்தந்த மாநில அரசுகள் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் மேம்படுத்தவும் வழிகாட்டுகிறது. உடன் காடுகளையும் வனவிலங்குகளையும் பாதுகாப்பதோடு மேம்படுத்த வழிவகை செய்கிறது.

சட்டமோ இப்படிச் சொல்கிறது. ஆனால் பாருங்கள் உலகமாயதாலின் ஓர் அங்கமாக வளர்ந்துவரும் இந்தியா தனித்தும் இயங்குவதில்லை, கூட்டாகவும் இயங்குவதில்லை. சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து உலக நாடுகள் எல்லாம் கவலைகொள்ளும் நேரத்தில் கூட இந்தியா இது குறித்து எந்த கவலையும் கொள்வதில்லை. எடுத்துக்காட்டிற்கு சில வாதங்களை வைக்கிறேன். உறுப்பு 21ன் படி சில கொள்கைகள் வகுக்கப்பட்டன.

மாசுபடுத்துபவரே இழப்பீடு வழங்கவேண்டும் என்கிற ஒரு சட்டத்தை சரியாக நடைமுறையில் உள்ளதா என யோசித்துப்பாருங்கள்?

சூழல் சட்டங்களை மதிக்காமல் தொழில்முறைகளை மேற்கொள்வோர்களை, வளர்ச்சிப்பணிகள் என்கிற பெயரில் ஏரி, குளங்களை ஆக்கிரமிப்பு செய்வோரை தண்டிக்கலாம் என்கிறது சட்டம். முடியுமா?

இது போல ஏராளமான எடுத்துக்காட்டுகளை கூறமுடியும். சில முக்கியமான சுற்றுச்சூழல் சட்டங்களையும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் நாம் என்னவெல்லாம் பெறமுடியும் என்பதை விளக்கிவிடுகிறேன்.

முன்பே சொன்னதைப் போல இந்திராகாந்தி அவர்களின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாநாட்டிற்கு சென்று வந்ததன் பின்பு சில சட்டங்கள் உடனடியாக இயற்றப்பட்டது.வ்

  • அதில் முதலாவதாக 1972லேயே வனவிலங்குகள் பாதுகாப்புச்சட்டம் இயற்றப்பட்டது.
  • 1974ல் தண்ணீர்ச் சட்டம்(பாதுகாப்பு மற்றும் மாசுத்தடுப்பு) கொண்டுவரப்பட்டது
  • 1981ல் காற்றுச்சட்டம்(பாதுகாப்பு மற்றும் மாசுத்தடுப்பு) கொண்டுவரப்பட்டது.
  • 1986ல் சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம் கொண்டுவரப்பட்டது
  • 2001ல் எரிசக்தி பாதுகாப்புச் சட்டம்
  • 2002ல் உயிரியல் பன்முகத்தன்மைச் சட்டம்
  • 2006ல் பட்டியல் பழங்குடியினர் மற்றும் பிற பாரம்பரிய வனவாசிகள்(வன உரிமைகளை அங்கீகரித்தல்) சட்டம்
  • 2010ல் தேசிய பசுமை தீர்ப்பாயச் சட்டம்

இப்படி பலவாறான சட்டங்கள் இயற்றப்பட்டன. இதில் ஒவ்வொன்றிலும் சாதக பாதகங்கள் உண்டு. 1974ல் கொண்டுவரப்பட்ட நீர் சட்டத்தில் தான் ‘மாசுபடுதல்’ என்பதற்கு வரையறை செய்யப்பட்டது.

அந்த வரையறையின்படி பொது உடல்நலம், வீடு, தொழில், வேளாண் மற்றும் இன்னபிற சட்டமுறையான செயல்களின் பயன்பாடுகளுக்கு அல்லது விலங்குகள், தாவரங்கள் அல்லது நீரில் வாழும் உயிரினங்களின் நலத்திற்கு தொல்லை கொடுத்தல் அல்லது கேடு விளைவிக்கும் வகையில் நீரின் தூய்மையைக் கெடுத்தல் அல்லது இயற்பியல், வேதியியல், உயிரியல் கூறுகளை மாற்றுதல் அல்லது தொழில்கழிவு அல்லது திட, திரவ, வாயுப்பொருட்களை நீரில் வெளியேற்றம் செய்தல் போன்ற அனைத்து செயல்களும் “மாசுபடுதல்” ஆகும்.

இப்போது சொல்லுங்கள் எவ்வளவு ஆறுகள் நாசமாய் போயிருக்கும். தொழில்கழிவுகளால் நீர்வளம், மண்வளம், மக்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டு போராடியிருப்பார்கள். ஏதேனும் தீர்வு கிடைத்ததுண்டா? அதனால் தான் சொன்னேன் இந்த சட்டங்களினால் சாதக பாதங்கள் உண்டென.

சுற்றுச்சூழலை எவ்வாறு பாதுகாப்பதென ஒரு கேள்வியைக் கேட்டால் பலரும் பலவிதமான பதில்களைக் கூறுவோம். என்னளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது பாதிப்புகளின் தகவல்களை சேகரிப்பது. வெறுமென ஒரு மரம் அழிக்கப்படுகிறது என்பது பொதுப்பார்வை. ஆனால் ஒரு மரம் என்பது வெறுமென ஒரு மரம் மட்டுமேயல்ல. அது ஒரு சூழ்நிலை மண்டலம். அதற்குள் பல உயிர்கள் வாழ்கின்றன. இது எல்லாமே சேர்ந்தது தான் சுற்றுச்சூழல். ஆகவே ஒரு மரம் அழிக்கப்படும் போது, ஒரு நீர்நிலை அழிக்கப்படும் போது அதைப்பற்றிய தகவலே நமக்கு சுற்றுச்சூழல் குறித்தான தெளிவான புரிதலை ஏற்படுத்தும்.

சுற்றுச்சூழல் பாதிப்பை உண்டாக்கும் எந்தவொரு நிறுவனத்தைப் பற்றியும் நம்மால் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தால் அவர்களின் அனைத்து விதிமீறல்களையும் அறிய முடியும். ஆனால் பாருங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஈடுபடும் எவரின் உயிருக்கும் உத்தரவாதம் இல்லை. முன்னொருமுறை ஒரு ஏரியின் ஒருபகுதியில் படுத்துக்கொண்டு பறவைகளை பார்த்துக்கொண்டிருந்தேன். திடீரென ஒருவர் கிட்டே வந்து ஓ போட்டோ எடுக்குறியா? இங்கெல்லாம் வரக்கூடாதுபா. மீன் விட்ருக்கோம். எதுவும் மீடியாவா எனக் கேட்டுவிட்டு, சீக்கிரம் கெளம்பி போப்பா என துரத்திவிட்டார். குருவி பார்க்கச் செல்வதற்கே இதான் நிலை.

மேலே சொன்னேன் அல்லவா சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தகவல்கள் மிக முக்கியமென. அதைக்கூட தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் வாயிலாக பெறமுடியுமென. ஆனால் பாருங்கள் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் வாயிலாகக் கூட அவ்வளவு எளிதில் தகவல்களை பெற்றுவிட முடியாது. அதற்கு மலையளவு பொறுமையும் கடலளவு அறிவும் வேண்டும். ஏனென்றால் அதிகாரிகள் மிகத்தெளிவாக நீங்கள் கேட்பதைவிட்டு வேறொரு தகவல்களை கொடுப்பார்கள். இதுபோல பல்வேறு விதமான மறைமுக நிகழ்வுகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் உண்டு.

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஈடுபடும் எவருக்கும் பாதுகாப்பில்லை. சூழலை சுரண்டி பொருள் சேர்க்கும் 10 சதவீத பெருமுதலாளிகளின் மாபியா குணம் எதையும் ஒருகை பார்க்கும் மனநிலையிலேயே உள்ளது. இதில் ஆங்காங்க அளிக்கப்படும் சில சூழலியல் தீர்ப்புகள் மனநிறைவை தந்தாலும் மிக அதிகமான சுற்றுச்சூழல் வழக்குகள் நிலுவையில் இருக்கும் காரணத்தினாலேயே 2010ல் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தொடங்கப்பட்டது. இப்படியாக இந்தியாவில் சுற்றுச்சூழல் சட்டங்கள் பல கிளைகளாக பரந்து விரிந்து காணப்படுகிறது. இதிலே குறிப்பிட்டிருக்கும் தகவல்கல் 0.1% மட்டுமே. மீதமிருக்கும் அனைத்து சட்டங்களையும் நாம் தெளிவாக அறிந்துகொள்ளும் பட்சத்தில் நமக்கு சுற்றுச்சூழல் குறித்தான புரிதல் வரத் தொடங்கும் என நம்புகிறேன். முழுவதுமாகக்  வேண்டாம் ஒரு 10% அறிந்துகொண்டாலே போதும். அதற்கு நாம் வழக்கறிஞராக இருக்கவேண்டிய அவசியம் இல்லை.

இந்தச் சட்டங்களைப் பற்றி இணையத்தில் தேடிக்கொண்டிருக்கும் போது எனக்கு தோன்றியது, நானோ வழக்கறிஞர் அல்ல ஆனால் இதைப்பற்றி எழுத வேண்டிய அவசியம் என்ன? அப்போது மாஸ்டர் சாலிம் அலி சொன்ன வார்த்தைகள் தான் எனக்கு நினைவில் வந்து போனது.

“You don’t need to be trained zoologist to enjoy birds”

நன்றி

தரவுகள்:

1.Environment Law-Sumit Malik

2.சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்கு சட்டத்தீர்வுகள்-பூவுலகின் நண்பர்கள்

3.Environment Laws – Web

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *