இந்த உலகம் ஆண்களால் ஆனது. அவர்களால் அவர்களுக்காக படைக்கப்பட்டதுதான் அத்தனையும். இங்கே சமூகம் என்கிற பெயரிலோ தனிமனிதன் என்கிற பெயரிலோ வகுக்கப்பட்ட கற்பிதங்கள், விழுமியங்கள், அபத்தங்கள் எல்லாமே பெண்ணை ஏதோ ஒன்றின் பெயரால் தன்னை விடக் கீழானவளாகக் காண்பிக்க உருவாக்கப்பட்டது. இது உண்மை, பொய், மாற்றம் வந்திருக்கிறது, இல்லை என்று எந்தக் கருத்தியலையும் நான் முன்வைக்கவில்லை.

இந்த நாவலின் பெண்கள் அவரவருக்கு தனிப்பட்ட விதத்தில் ஏற்படும் துயர்களால் இப்படியான ஒரு மனநிலையைத் தெரிந்தோ, தெரியாமலோ அடைந்து விட்டிருக்கிறார்கள். அதை அவரவர் வழியில் எப்படிக் கடக்கிறார்கள்
என்பது தான் நாவலின் முழுச்சித்திரம்.

சரி இனி நாவலை நோக்கி…

பவித்ரா தேவி, உமையாள் என
இரண்டு அக்கா தங்கைகள் அம்மாவை இழந்து முதிர் கன்னிகளாக வாழ்வதாக கதை தொடங்குகிறது. முதல் அத்தியாயத்திலேயே அப்பாவும் இறந்து விட அதை ஒரு சாதாரண காரியமாக, வேண்டிய சடங்குகளைச் செய்துவிட்டு இயல்புக்குத் திரும்புகிற அளவுக்கு அவர்களது மனம் வெறுமையாகிச் சிதறுண்டு கிடக்கிறது. சிதறுண்ட தங்கள் உலகை மேலும் சிதறிப்போகாமல் இருக்க அவர்கள் தங்களைச் சுற்றி ஓர் உலகை உருவாக்கி அதனுள் சுழல , சுழற்ற ஆரம்பிக்கிறார்கள்.

பாத்திரங்கள்:


பவித்ரா தேவி உமையாள் உருவாக்கிக்கொண்ட உலகம்தான் ஏஜிபி மருத்துவமனை. அதில் இருக்கும் கேன்டீனை நிர்வாகம் செய்யும் பொறுப்பாளராக பவித்ரா தேவி.
அவளுக்கு கேன்டீன் நடத்த உதவியாக அந்தோணிமுத்து, பாண்டியம்மா, ரெபேக்கா, இறுதியில் கமலா.

மருத்துவமனையில் பணிபுரிகிறவர்களாக அருணா, கண்மணி சாரதா, பூங்கொடி, இளங்கோ.

இந்த மருத்துவமனைக்கு
பார்வையாளர்களாக, நோயாளிகளாக, அவர்களோடு இருப்பவர்களாக ஏதோ ஒன்றாக சரிதா, அவள் கணவன், அவள் அப்பா, வசந்தமுல்லை, வாசவதத்தை, அவள் மருமகள், சின்ன விருமாண்டி, போலிசாக மல்லிகா.

இவர்களுக்குள் உருவாகும் ஒத்திசைவுகள், முரண்கள், காதல்,
உணர்வுப் போராட்டம் இவற்றை ஓர் அழகிய பனை விசிறியைப் போல
விரித்து வைத்தால் அது உள்ளடக்கம். பெரிய பெரிய தீர்வுகளை நோக்கி யாரும் பயணிக்கவில்லை. சில விஷயங்கள் காலத்தால் சரி செய்ய முடியும். சில விஷயங்களை எதுவும் செய்ய முடியாது. அதனதன் கோணல்களோடு ஏற்றுக் கொள்ளவோ மறுக்கவோ முடியும். நம் கையில் இருப்பது அந்த அளவில் தான். அதை இந்தக் கதாபாத்திரங்கள் தங்களுக்குள் செய்து கொள்கின்றன.

களங்கள்


ஏஜிபி மருத்துவமனை, கேன்டீன், சேதுராமன் தோட்டம், மதுரை.

இதில் சேதுராமன் தோட்டத்திற்கு முக்கியப்பங்கு இருக்கிறது.
காதலிக்க, களவு போக, ஆறுதல் பெற, அன்னக்கொடி சேதுராமனைப் புதைக்க, குடிக்க, அதையொற்றி ஆடப்பாட, காமமோ, சினமோ, தனிமையோ எந்த ஒரு காரணத்திற்காகவும் ஆற்றில் குளித்து நிம்மதி பெற இப்படி ஏதோ ஒரு வகையில் ஓர் உயிருள்ள மனிதன் போல நம்மோடு துணை வந்தபடியே இருக்கிறது.

**

முதலாவதாக ஆசிரியருக்கு ஒரு ஷொட்டு. எல்லாக் கதாபாத்திரங்களிலும் ஒரு ஸ்திரத்தன்மையை உருவாக்கி இருப்பது. அதற்காகக் காட்சிகளை, குணங்களைக் கவனித்துச் செதுக்கி இருப்பது நாவலுக்கு சுவாரசியமான ஒன்றாக இருக்கிறது. ஒவ்வொரு கதாபாத்திரமும் பெயருக்கு வந்து போகாமல் தங்கள் இருப்பை அவரவர் இயல்புகளோடு பதிய வைத்திருப்பது கவனித்துத் தீட்டிய ஓவியம் போலிருக்கிறது.

இரண்டாவது காட்சிக் குழப்பங்கள், உரையாடல் குழப்பங்கள் ஏதும் அற்ற
ஆற்றொழுக்கு போன்ற நடையை வசமாக்கியிருப்பது. இவை இரண்டும் இருப்பதாலேயே நாவலைத் தடையற்ற வாசிப்புடன் வாசிக்க முடிகிறது.

அன்னக்கொடி_ சேதுராமன் காதல் காட்சிகள் அருமை. ஆளுமை நிறைந்த பெண்ணாக அன்னக்கொடியின் சீட்டு ஏலக்காட்சிகள், அவள் பற்றிய அக, புற வர்ணிப்புகள் அற்புதமான வடிவமைப்பு. அவளின் வைராக்கியம் நிறைந்த வாழ்வே அவளுக்கு எதிரியாகிப்போகிறது.
கொடு வைராக்கியம், கெடு வைராக்கியம் என்பதாக அவளின் அந்தக் குணமே அத்தனையும் கொடுத்துக் கெடுத்துவிடுகிறது.
அந்தக் குணத்தின் வீரியத்தை சித்தியிடம் சீட்டுப்பணம் வசூலிக்கையில், தன் ‘நாணயம்’ குறித்துக் குறிப்பிடும் சொல்லாடல் அழகு. வாசவதத்தை ஓரிடத்தில் குறிப்பிடும் பணம் பற்றிய மதிப்பீட்டில் சின்ன விருமாண்டியைப் போல, அன்னக்கொடிக்கும் அது உண்டு என்று சொல்லும் இடம் மனித மனத்தின் முரண் வெளிப்படும் இடங்கள்.

ஆங்காங்கே ஆசிரியர் பார்வையில் வரும் கருத்துகள் நன்கு முதிர்வோடு வெளிப்பட்டிருக்கின்றன. அதை ஆசிரியர் குரலாக ஒலிக்கவிடாமல்
சாதுர்யமாக அந்தக் கதாபாத்திரங்கள், சூழல்கள் பொறுத்து இடைச்செருகலாக வரிகளைச் செருகியிருப்பது எழுத்தில் தேர்ந்த அனுபவத்தைக் காட்டுகிறது.

பூங்கொடி கணவனிடம் முனி வந்து புகுந்தது போல் ஆடும் இடங்கள் அவளுக்கு உள்ள வலியை மறந்து நான் சிரித்த இடங்கள். ஆசிரியரின் நையாண்டித் தொனி அழகாக வெளிப்படும் இடங்கள். ஓர் எழுத்தாளனுக்கு வாசகனை அழவைக்க கோபப்பட விரைவில் முடிந்துவிடும். சிரிக்க வைப்பது மிகவும் கடினம். அதிலும் தன் திறமையை வெளிக் காண்பித்து இருக்கிறார். மேலும் கணவனை வார்த்தைகளால் விளாசும் போது
உண்மையாகவே முனி புகுந்தாற் போலத்தான் தெரிகிறது நமக்கும்.
அதை உமையாளுக்கு கல்யாணம் செய்யச் சொல்லி அறிவுரை சொல்லும் இடத்தில் ஏதாவதுனா..முனி ஆட்டம் போட்ரலாம் எனச் சொல்கையில் நகைச்சுவை தெறிக்கிறது.

ஆசிரியரே சொல்வது போல்
வெறுப்புற்றவர்கள் ஒன்று சேர்ந்தாற்போல் … ஒரே நூலில் கட்டப்பட்டிருக்கும் பெண்கள் போல இந்த நாவலின் ஆண்களுக்குள்ளும் ஓர் ஒற்றுமை இருக்கிறது.

அதீத ஆணாதிக்க மனப்பான்மையோடு மனைவியை சந்தேகப்படுவது,
அடித்துத் துன்புறுத்துவது , வார்த்தைகளால் வசவுச்சொற்களை வீசி காயப்படுத்துவது அல்லது அதீத நற்குணங்களோடு இருப்பது.
முன்னதிற்கு சேதுராமன், சின்ன விருமாண்டி, வசந்த முல்லை கணவன், பூங்கொடி கணவன் இப்படி எல்லோரும் நல்லதும், கெட்டதும் அதிகம் கலந்த கொஞ்சம் கூடுதல் டோஸ் ஏறிய அசாதாரண ஆண்களாக இருக்கிறார்கள். பின்னதற்குக் கணேசன், மாறன், வளர்ப்பு முஸ்லீம் தந்தை என்று ஒரு தனி நூலில் நம்ப முடியாத அளவிற்கு நல்லவர்களாக இருக்கிறார்கள். இப்படி இருப்பவர்களும் சமூகத்தில் இருக்கத்தானே செய்கிறார்கள் என்பதால் அது பெரிய அளவில் லாஜிக்கலான உறுத்தலாக அல்லாமல் நகர்ந்து விடுகிறோம்.
அல்லது நகர்த்தி விடுகிறார் ஆசிரியர்.

பவித்ரா தேவி ‘அவள் ஒரு தொடர்கதை’ சுஜாதாவை நினைவுபடுத்துகிறாள். ஓர் ஆணைப்போல இழுத்துப்போட்டுக் கொண்டு அத்தனை வேலைகளைத் தோரணையோடு செய்யும் போதும், கருணையோடு மற்றவர்களுக்கு உதவும் போதும், தங்கையுடன் அவ்வப்போது கண்டிப்புடன் இருக்கும் போதும், தனக்கென ஒரு வாழ்வை யோசிக்காமலே தனிமையில் வாழப் பழகிக் கொள்ளும் போதும், எங்கேனும் தனக்கென ஒரு தோள் கிடைக்காதா என இறுதியாக ஏங்கும் போதும் ‘சுஜாதா’ கண் முன்னே வந்து போகிறாள்.

அவள் தாய் அன்னக்கொடியின் குணங்களோடு ஒத்திருக்கும் படியான ஆளுமையும், உமையாள் தந்தை போல நல்ல வாழ்க்கை அமைந்தவுடன் அக்காவின் மீது மீண்டும் சுமைகளைத் தள்ளி சுமைதாங்கி ஆக்குவது, சேதுராமனின் ஆரம்ப கால சுயநலத் தன்மையை வெளிக்காட்டும் குண ஆளுமையாக சித்தரித்திருப்பதும் கச்சிதம். எதையும் சொல்லாமல் ‘நீ பாத்துக்குவேல்ல…பாத்துக்குவ’ என்று ஒருத்தியை மட்டும் தள்ளிவிடுவது.

பவித்ராதேவி போன்றவர்களைக் காதலிக்க மட்டுமே வேண்டும். முடியும். அவர்களைக் கட்டுக்குள் வைக்க முடியாது. அது நிற்காது ஓடும் நதி. அவள் அப்படித்தான் போல அவர்கள் அப்படித்தான்.

மற்றுமொரு கேள்வி எழுந்தது…… அந்தக் காலம் முதல் இப்போது வரை ஒரு பெண்ணுக்குத் திருமணம் ஆனவுடன் அவள் ஆண் இருக்கும் இடத்திற்கு இடம் பெயர்வது தான் வழக்கமாக இருப்பது. எந்த ஒரு காரணத்திற்காகவும் இளங்கோக்கள் தன்னை மாற்றிக்கொள்ள மாட்டார்கள். பெண்ணுக்கு அதிகமாக சுதந்திரம் தந்ததாகத்தான் நினைக்கிறார்கள்.
உணர்வுகளைப் புரிந்து கொள்கிற ஆணும் ஒரு சிறிய ஸ்கேல் அளவிலாவது வரையறையை வைத்திருக்கிறான். அது அவனுக்கான சுதந்திர வெளியாக மட்டும் இருக்கிறது. அதற்குள் எந்தப் பெண்ணும் வருவதை, ஆள்வதை விரும்பாத போது பெண் அப்படி நினைப்பதை மட்டும் பெண்ணியம் தூக்கல் என்று எப்படிச் சுருக்கிவிட முடியும் என்ற முடிவுக்கு நாமே நகர்கிறோம். அதற்கான காரண காரியங்களை நியாயமாக உருவாக்கி இருக்கிறார்.

பிரபஞ்சத்தின் திறன் வாய்ந்த உயிர்களாக ஆணையும், பெண்ணையும் இணைய வைக்கக் காதல் என்கிற பெயரில் ஒன்றை உருவாக்கி அவர்கள் உலகங்களை மிகவும் அழகாகவும், வெகுவாகச் சிதைக்கவும் செய்கிறது. தன்னைத் தொலைத்தலே காதல் எனில் ஒரு புறம் மட்டும் நிகழும் போது அது காதல் என்கிற அந்தஸ்தை இழந்து நடுத்தெருவில் நின்று செய்வதறியாது விழிக்கிறது.
பவித்ரா தேவி காதலனைத் தேடாமல் சலனமற்று நிற்கையில் ‘நீயும் இப்படிதானா’ என்கிற உணர்வை நமக்குக் கடத்துகிறாள்.

எங்கே சுதந்திரம் இல்லையோ அங்கே போராட்டம் வெடிக்கும்.
எங்கே உணர்வுகள் மதிக்கப்படவில்லையோ அங்கே
கொந்தளிப்பு உருவாகும்.
எங்கே அடக்குமுறை இருக்கிறதோ
அங்கே திமிறி எழுவார்கள்.
எங்கே சுதந்திரம் வழங்கப்படவில்லையோ அங்கே அவர்களே சுதந்திரத்தை ஏதோ ஒரு விதத்தில் கையில் எடுத்துக் கொள்வார்கள்.

அதையே அத்தினி நாவலின் பெண்கள் செய்கிறார்கள்.

ஆசிரியருக்கு மனமார்ந்த வாழ்த்துகள் ❤️.

 

புத்தகம் : அத்தினி

ஆசிரியர் : சித்ரா சிவன்

வெளியீடு : எழுத்து பிரசுரம்

விலை :280/-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!