இங்கிலாந்து கல்வி முறை

அனைவருக்கும் சமமான வாய்ப்பை உறுதி செய்வதே தங்களது முக்கியமான நோக்கம் என்கிறது இங்கிலாந்து கல்வித் துறை. இன்றைய மாணவர்களுக்குக் கல்வியில் போதுமான வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் நாளைய சமூகத்தைப் பொருளாதார ரீதியாக வலுப்படுத்தவும், சமத்துவத்தை நிலைநாட்டவும் அவர்கள் சுதந்திரம் பெறுவர் என்பதில் நம்பிக்கை கொள்கிறது இங்கிலாந்து அரசு. 

இங்கிலாந்தில் கல்வி என்பது மழலையர் கல்வி(early years) ஆரம்பக் கல்வி(primary), இடைநிலைக் கல்வி(secondary), மேல்நிலைக் கல்வி(Further Education), உயர்நிலைக் கல்வி(Higher Education) என ஐந்து படிநிலைகள் கொண்டது. ஆரம்பக் கல்வி முதல் மேல் நிலைக் கல்வி வரை உள்ள வகுப்புகளை  Key Stages என்கின்றனர். 

பள்ளி: ஒன்று முதல் ஆறாம் வகுப்பு வரை ஆரம்பக் கல்வி, ஏழு முதல் 11ஆம் வகுப்பு வரை இடை நிலை. அதன் பிறகு மேல்நிலை வகுப்புகள். இதில் 11ஆம் வகுப்பில் General Certificate of Secondary Education (GCSE) எனும் பொதுத் தேர்வும், 13ஆம் வகுப்பில் A Level (Advanced Level) எனும் பொதுத் தேர்வும் நடக்கிறது. இந்தப் பொதுத் தேர்வுகள் அல்லாமல், இரண்டாம் வகுப்பிலும், ஆறாம் வகுப்பிலும் SAT’s (standardised assessment tests) தேர்வு நடைபெறும். இந்த SAT தேர்வு பள்ளியின் செயல்திறனை அறிந்து கொள்வதற்காகவே நடத்தப்படுவதால் இதற்கென தனிப்பட்ட தயாரிப்புகள் எதுவும் பெரிதாக நடப்பதில்லை. GCSE & A Level தேர்வுகளை நமது இந்தியக் கல்வியில் எஸ்.எஸ்.எல்.சி & +2 பொதுத் தேர்வுகளோடு ஒப்பிடலாம்.

கல்லூரி: 12 & 13ஆம் வகுப்புகள் Sixth Form என்று அழைக்கப்படுகிறது.  Primary School, Secondary School & Sixth Form College என இதற்கான கல்விக்கூடங்கள் அழைக்கப்படுகின்றன.  (இது நமது ஊரிலிருந்த PUC முறையோடு ஒப்பிடலாம்)

பல்கலைக்கழகம்: பள்ளிக் கல்வி முடிந்ததும் பல்கலைக்கழகங்கள்(Universities) வழியே பட்டப்படிப்பு நடைபெறுகிறது.

வயதுவகுப்பு(Key Stages – KS)Compulsoryதேர்வு
மழலையர் கல்வி(early years)3-4NurseryReceptionNo
ஆரம்பக் கல்வி(primary)5-11Year 1 – 2(KS1)Yes
Year 3 – 6(KS2)
இடைநிலைக் கல்வி(secondary)11-16Year 7 – 9(KS3)YesGCSE – பொது தேர்வு
Year 10 – 11(KS4)
மேல்நிலைக் கல்வி(Further Education)16-18Year 12-13(KS5)Yes (பள்ளிக் கல்வி / தொழிற்சார் பயிற்சிகள்)A Level – பொது தேர்வு
உயர்நிலைக் கல்வி(Higher Education)18+

இங்கிலாந்தைப் பொறுத்தவரைப் பள்ளிக்கூடங்கள் குழந்தைகளுக்கு விருப்பமான இடமாகவே இருந்து வருகிறது என்று நான் கருதுகிறேன். கட்டாய கல்வி ஐந்து வயதில் தொடங்குகிறது என்றாலும் சராசரியாக மூன்று வயதில் நர்சரி வகுப்பின் வழியே ஒரு குழந்தை பள்ளிக் கல்வியைத் தொடங்குகிறது. வகுப்பறை என்ற கட்டமைப்பிற்குள் நுழைந்த சில நாட்களிலே  வகுப்பறையைத் தனக்கான இடமாகக் குழந்தை தன்னிச்சையாக உணர்ந்துகொள்வதைக் கவனிக்க முடிகிறது. விடுமுறை நாட்களைவிட குழந்தைகளுக்குப் பள்ளி நாட்களே பிடித்தமானதாகவும் இருக்கிறது. குழந்தைகள் தயக்கங்கள் ஏதுமின்றி ஆசிரியர்களோடு உரையாடவும், விவாதிக்கவும் எதேச்சையான சூழல் வகுப்பறையில் நிலவுகிறது. இதுவே மாணவர்களைச் சுதந்திர உணர்வோடும் அதே நேரம் வகுப்பறைக்கான விதிகளை பின்பற்றவும் செய்ய வைக்கிறது. இங்கு அனைத்தும் 100% சரியாக உள்ளது என்று சொல்லும் நோக்கமில்லை, ஆனால் அதே நேரம் மாணவர்கள் தங்களுக்கான இடமாக வகுப்பறையைப் பார்க்கிறார்கள் என்பதைக் கவனிக்க முடிகிறது. அதனை மேற்கோள் காட்டும் நோக்கம் மட்டுமே. 

இந்தியாவில் (முக்கியமாகத் தமிழ்நாட்டில்) ஆசிரியர்கள் குழந்தைகளை அடிக்கும் உரிமையை இழந்ததால்தான் பல்வேறு சீர்கேடுகள் நடக்கிறது என்று பலரும் கூறுவதை நாம் பார்த்திருப்போம். ஆனால் இங்கிலாந்து, ஐரோப்பியா, அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளில் குழந்தைகளை அடிப்பது மனித உரிமை மீறல் மட்டுமல்ல அது குற்ற செயலும்கூட. குழந்தைகளை அடிப்பது சட்டப்படி தவறு என்ற சூழலில்தான் வகுப்பறையில் ஒழுக்கமும் பேணப்படுகிறது. குழந்தைகளை வகுப்பறையின் அங்கத்தினராக மதித்தல், சக மாணவர்களின் உரிமையை விளக்குதல், வகுப்பறைக்கு உள்ள எதிர்பார்ப்பையும் விதிகளையும் எடுத்துரைத்தல், விதிகளை மீறும் மாணவர்களுக்குத் தனிமைப்படுத்துதல், வகுப்பறை முடிந்த பிறகு அமர வைத்தல் போன்ற சிறு சிறு தண்டனைகள் வழங்குதல் என பல்வேறு வழிமுறைகளின் துணைகொண்டு வகுப்பறையில் ஒழுக்கம் சாத்தியமாகிறது.

பள்ளியில் ஒரு குழந்தையின் வருகை என்பது குறைந்தது 90% எதிர்பார்க்கப்படுகிறது. உடல்நிலை பிரச்சனைகள் சார்ந்து விடுப்பு எடுத்தால் உடனே பள்ளிக்குத் தெரிவிக்க வேண்டும். மற்ற காரணங்களுக்கு முறையாக பள்ளியில் அனுமதி பெற வேண்டியது பெற்றோரின் கடமை. அதே போல் பள்ளிக்குச் சரியான நேரத்தில் குழந்தைகள் வர வேண்டும். தாமதமாக வந்தாலோ, முன் அறிவிப்புமின்றி விடுப்பு எடுத்தாலோ உடனடியாகப் பள்ளி பெற்றோரைத் தொடர்புகொண்டு எச்சரிக்கும். எச்சரித்த பிறகும் இது தொடர்ந்தால் நீதிமன்றத்திலிருந்து பெற்றோருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும், அபராதமும் விதிக்கப்படும். குழந்தைகளுக்கு வீட்டில் காயம் ஏற்பட்டால் அதுவும் “குடும்ப வன்முறை” காரணத்தால் ஏற்பட்டதா என்று பள்ளியால் கண்காணிக்கப்படும். விவாகரத்து போன்றவை காரணிகளால் குழந்தைகள் தங்களது biological பெற்றோரைவிட்டுப் பிரிந்திருக்கும் சூழல் ஏற்படுவதால் அரசு மிகுந்த எச்சரிகை உணர்வோடு இருக்கிறது. அதே போல் இங்குப் பள்ளியில் “Bullying” என்பது மிகப் பெரிய பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. ஒன்றாக வகுப்பு முதலே, Bullying என்றால் என்ன, எதெல்லாம் Bullying, Bullying நடந்தால் என்ன செய்ய வேண்டும், யாரிடம் உதவி கோர வேண்டும், யாரிடம் புகார் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. பெற்றோர்களுக்கும் இதுகுறித்து வகுப்புகள் நடத்தப்படுகிறது. அதேபோல் இங்கு மத, இன, நிற, பாலினப் பாகுபாடுகள் மிகப் பெரிய பிரச்சனையாகக் கருதப்படுகிறது. அவற்றையெல்லாம் கடந்து அனைவருக்கும் சமமான கல்வி, வாய்ப்பு தருவதே தங்களது நோக்கம் என்கின்றனர்.

ஆரம்பநிலை கல்வி நிதானமானது, இந்தியாவோடு ஒப்பீட்டுப் பார்த்தால், பாடச்சுமை மிக மிகக் குறைவு. ஆரம்பநிலை கல்வியில் இலக்கியம் மிக முக்கியமான இடத்தினைப் பெறுகிறது. ஒரு வருடத்திற்கு நான்கு பருவங்கள்(term – மூன்று மாதக் காலம்). நர்சரி முதல் இரண்டாம் வகுப்பு வரையிலுள்ள வகுப்புகளில், ஒவ்வொரு பருவத்திற்கும் ஒரு படக் கதைப் புத்தகத்தினைக் கொண்டு எண்கள், வெவ்வேறு நிலங்கள், நிறங்களின் வேறுபாடு, எழுத்து எனப் பாடத்தினை அந்தப் புத்தகத்தின் துணைகொண்டே எடுத்துச் செல்கின்றனர். Phonetics எனும் ஒலி முறைகளுக்கு அதிக காலம் எடுத்துக்கொள்கின்றனர். எழுதும் பயிற்சி இரண்டாம் வகுப்பு வரும் வரை பெரிதாக இல்லை என்றே சொல்ல வேண்டும். Phonetics பயிற்சிகளுக்கு தனியே படக் கதைகள் அறிமுகம் செய்கிறார்கள். அதே போல், அவர்கள் எடுத்துக் கொண்ட படக் கதையினை சிறு நாடகமாகவும் அரங்கேற்றுகிறார்கள். அந்தந்த வகுப்புகளின் பெற்றோர்களே இதன் பார்வையாளர்கள். நாடகம் ஒரு பாடமாகவும் மேல்நிலையில் வருகிறது. ஒன்றாம் வகுப்பில் 10-15 நிமிட நாடகத்தில் தொடங்குபவர்கள் மேல்நிலை வகுப்புகளில் 45 நிமிட நாடகமாக ஒரு முழு சிறுவர் நாவலை அரங்கேற்றுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

பாடச்சுமை எட்டாம் வகுப்பிலிருந்து அதிகரிக்கிறது என்று சொல்லலாம். கணிதம், ஆங்கிலம்(மொழி & இலக்கியம்), அறிவியல் (உயிரியல், வேதியியல் & இயற்பியல்) ஆகியவை கட்டாயப் பாடம். இவை அல்லாது, Arts (e.g. drama, music, art), Design and technology (e.g. electronics, food and nutrition), Humanities (e.g. geography, history, Religious Studies), Modern foreign languages (e.g. French, Spanish) ஆகியவற்றை விருப்ப பாடமாக எடுக்க வேண்டும். பொதுத் தேர்வில் மாணவர்கள் குறைந்தது ஐந்து பாடங்கள் தேர்ச்சி பெற வேண்டும். சராசரியாக ஒன்பது முதல் பத்து பாடங்களுக்கு மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள்.

பாடமுறையில் மனப்பாடம் என்பது எந்த ஒரு இடத்திலும் வலியுறுத்தப்படவில்லை. செய்யுள், கவிதைகள் போன்ற இலக்கியப் பாடத்தில்கூட அந்தக் கவிதை என்ன சொல்கிறது, கவிஞர் எப்படி வர்ணிக்கிறார், அந்தக் காலத்தைப் பாடல் எப்படி எடுத்துரைக்கிறது, இந்தக் கவிதையைப் எதையெல்லாம் பேசுகிறது போன்ற கேள்விகளே முதன்மையானதால் மாணவர்களுக்கு மனப்பாடம் அவசியமற்றதாகிவிடுகிறது.

இங்கிலாந்தில் 93% மாணவர்கள் அரசு நடத்தும் பள்ளிகளின் வழியே கட்டணமில்லா கல்வி பெறுகின்றனர். தனியார்ப் பள்ளிகள் independent schools என்றும் அரசு நடத்தும் பள்ளிகள் State funded schools என்றும் அழைக்கப்படுகிறது. அரசு பள்ளிகளிலும் community schools, foundation schools and voluntary schools, academies and free schools, grammar schools, faith schools என பல வடிவங்கள் உண்டு. இவை நிர்வாக முறை, பயிற்றுவிக்கும் விதம் கொண்டும் மாறுபடுகிறது. ஆரம்ப நிலைப் பள்ளி என்பது வீட்டிலிருந்து நடக்கும் தூரத்தில் இருப்பதையும் குறைந்த தூரத்தில் போதுமான மேல்நிலைப் பள்ளிகள் இருப்பதையும் அரசு உறுதி செய்கிறது. அந்தந்த பகுதிக்கான (நகராட்சி போன்ற) அரசு நிர்வாகமே பள்ளிக்கான நிதி ஒதுக்கீடு, மாணவர்கள் சேர்க்கை ஆகியவற்றைக் கவனித்துக்கொள்கிறது. 

இடைநிலைப் பள்ளிகள்(secondary) பொறுத்தவரை Comprehensive & Selective என இரண்டு முக்கியப் பிரிவுகள் உண்டு. பள்ளியின் மாணவர்கள் சேர்க்கையை நுழைவுத் தேர்வு கொண்டு முடிவு செய்யும் பள்ளிகளே  Selective பள்ளிகள். மேலே குறிப்பிடப்பட்ட Grammar Schools அனைத்தும் Selective பள்ளிகள். இங்கிலாந்தில் 3000க்கும் மேலான இடைநிலைப் பள்ளிகள் உள்ளன அதில் வெறும் 163 grammar school பள்ளிகளே உள்ளன. ஆனால், இங்குப் புலம்பெயர்ந்த ஆசிய மக்களிடையே (முக்கியமாக இந்தியர்கள்,  தமிழர்கள், இலங்கை தமிழர்கள் உட்பட)  இந்தப் பள்ளிகளில் இடம்பிடிப்பதை லட்சியமாகக் கருதுகின்றனர்.

Grammar பள்ளிகளில் இடம் பிடிக்க 11+ எனும் நுழைவுத் தேர்வில் 85 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற வேண்டும்.  11 வயதில் எழுதப்படும் தேர்வு என்பதால் இதற்கு 11+ என்று பெயர். Comprehensive பள்ளிகளைவிட grammar school களே சிறந்த பள்ளி எனும் நம்பிக்கை(மூட நம்பிக்கை??) இங்கு ஆசிய மக்களிடையே பெரிதாக நிலவுகிறது. இந்தப் போட்டித் தேர்வுக்காகப் பெற்றோர் மற்றும் குழந்தைகள் கடுமையாக உழைப்பதும், அதற்காக வாழும் இடத்தினை மாற்றுவதும், அதுவே பெரும் சுமையாக மாறுவதும் என தங்களை தாங்களேத் தேவையில்லாமல் ஒரு கடினமான சூழலுக்கு உட்படுத்தி, grammar schoolதான்  தரமான கல்வி என்ற மாயையை உருவாக்குகிறார்கள்.  தேர்வுகளுக்காகவே நிறைய கோச்சிங் வகுப்புகளும் உண்டு.  அதற்கும் நம்மவர்கள் மிகவும் சிரமப்பட்டு உழைப்பது மட்டுமல்லாது குழந்தைகளைத் தேவையில்லாமல் அழுத்தத்திற்குள் தள்ளுவதைக் காண முடிகிறது.

இதனை நம் ஊரில் சமச்சீர்க்  கல்வியோடும், நீட் தேர்வுக்கான கோச்சிங் வகுப்புகளோடும்  ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

ஒரு பக்கம்  புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் இடம் கிடைக்க Grammar school களில் நுழைவதே சிறந்த வழி என்று பெரும்பான்மையான ஆசியர்கள் நம்புகின்றனர். இன்னொரு பக்கம், பல்கலைக்கழகங்கள் – சமமான வாய்ப்புகளை உறுதி செய்வதே தங்களது கடமை என்கின்றனர்.

பல்கலைக்கழகங்களுக்கான சேர்ப்பு என்பது 13ஆம் வகுப்புத் தேர்வான A level தேர்வுக்கு முன்னரே தொடங்கிவிடுகிறது. பொதுத் தேர்வுக்கு முன்னரே மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதுவும் தாங்கள் ஏன் இந்தக் குறிப்பிட்ட பல்கலைக்கழகத்தில் சேர விரும்புகிறோம், ஏன் இந்தப் படிப்பைப் பெற விரும்புகிறோம், பொதுத் தேர்வில் தாங்கள் எத்தனை மதிப்பெண் பெறுவோம் என்பதையெல்லாம் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும். மருத்துவப்படிப்பு என்றால் 6 பல்கலைக்கழகங்களுக்கே விண்ணப்பிக்க முடியுமாம். மாணவர்களைத் தேர்வு செய்யும் முறை பல்கலைக்கழகங்களுடையது.

மதிப்பெண் கடந்து சமூக நீதியை உறுதிப்படுத்தும் விதமாக  அனைத்து பகுதி (இன, பாலின, மத பாகுபாடுகள் கடந்து) மக்களுக்கும் வாய்ப்பு தர வேண்டியது பல்கலைக்கழகங்களின் முதன்மையான கடமை. இது சமூகநீதியை உறுதிப்படுத்தும் இட ஒதுக்கீடு முறை. இந்த முறையை அந்தந்த பல்கலைக்கழகங்களே செயல்படுத்த வேண்டும். அது வெளிப்படையாக இதுதான் என அறிவிக்கப்படவில்லை.

அரசியல் ரீதியாகவும் Grammar school பள்ளிகள் இரண்டு பிரிவுகளாக நிற்கிறது. Conservative அரசு தொடர்ந்து ஆதரவு தருகிறது. நன்றாகப் பயிலும் குழந்தைகளைத் தனியாகப் பிரித்து அவர்களைப் பள்ளி அளவிலே தயார் செய்வது அவசியம் என்கிறது.

ஆனால், லேபர் கட்சி Grammar பள்ளிகளை முற்றிலுமாக எதிர்க்கிறது. grammar பள்ளி சமத்துவமான கல்வி முறைக்கு எதிரானது என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அவர்கள் கொடுத்த அழுத்தத்தினால் Grammar பள்ளிகள் 163 என்ற எண்ணிக்கையிலிருந்து வளரவேயில்லை. அதுமட்டுமல்ல grammar schoolகள் social mobility ஐ தரவில்லை என்ற வாதத்தையும் முன்வைக்கின்றனர். இந்தப் பள்ளிகள் சமத்துவத்தை வழங்குவதில்லை, வாழ்வியலிலும் முன்னேற்றத்தை தரவில்லை – மாறாக இடைவெளியைத்தான் அதிகம் உருவாக்குகிறது என்கின்றனர்.  மேலும் பள்ளிக் கல்வி என்பது கற்றலுக்கான இடம், அது வேலை வாய்ப்புக்கான நுழைவாயில் அல்ல. இங்கு மகிழ்வாக ஒரு குழந்தை இருப்பதே மிகவும் முக்கியமானது. தேர்வு எனும் பூதத்தை இந்தச் சிறுவயதில் ஏன் எதிர்கொள்ள வேண்டும் என்றெல்லாம் கேள்வி எழுப்புகிறார்கள். 

“Grammar schools didn’t give more opportunities to more people, they gave more opportunities to the same people”

We would do better to focus on schools making kids happier and healthier, with strong academic standards, rather than thinking they improve one’s position in the race for life. Grammar schools didn’t give more opportunities to more people, they gave more opportunities to the same people. 

(Peter Mandler  Professor of Modern Cultural History in the Faculty of History, Cambridge)


இத்தனை எதிர்ப்புகள் கடந்தும் இந்தப் போட்டித் தேர்வு புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் ஒரு சமூக அந்தஸ்தாகவும் மாறி வருகிறதோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்துகிறது. சமச்சீர் கல்வி குறித்து என்னவெல்லாம் தமிழ்ச் சமூகம் பேசி CBSEக்கு சிவப்புக் கம்பளம் விரித்ததோ, அதே நிலைதான் இங்கு நிலவுகிறது. 

References:

  1. www.gov.uk
  2. https://en.wikipedia.org/wiki/Education_in_England
  3. https://www.brightworldguardianships.com/en/guardianship/british-education-system/
  4. www.bbc.co.uk
  5. https://www.ucas.com/advisers/help-and-training/develop-your-skills-adviser/how-advise-students-about-gcse-choices
  6. www.parentkind.org.uk
  7. https://www.education-uk.org/history/timeline.html
  8. https://www.oxfordstudent.com/2024/02/19/the-problem-with-grammar-schools/
  9. https://comprehensivefuture.org.uk/grammar-schools-not-solution-social-mobility-crisis/
  10. https://www.bdiresourcing.com/img-media-hub/blog/looking-beyond-grammar-schools–an-overview-of-secondary-education-in-the-uk/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *