அவளும் அவளும்

முன்பெல்லாம் பெண்கள் இருவகையில் பார்க்கப் பட்டனர். ஒருவகை நதி, தெய்வம், இயற்கை என மிதமிஞ்சிய அளவில் புனிதப் படுத்துவது. இன்னொரு வகை புனிதத்தைக் காப்பாற்றுகிறோம் என்ற பெயரில் அடிமைப்படுத்துவது. இப்போது காலம் மாறியிருக்கிறது. ஆனால் சரியானபடிக்கு மாறியிருக்கிறதா? பெண்கள் நிம்மதியாயிருக்கிறார்களா என்று கேட்டால் அதற்கும் கையைப் பிசைந்து கொண்டுதான் நிற்க வேண்டியிருக்கிறது. அதிலும் பெண்களின் சலுகைகளாக அவள் பயன்படுத்திய மெல்லியல்கள் அனைத்தும் இன்று க்ளீஷே என்ற பெயரில் மாறி அதன்மீது சுயநலமுலாம் பூசப்படுகிறது. உண்மையில் ஆண்கள் பெரிதும் குழப்பத்திலிருக்கின்றனர். ஒரு பெண்ணை அணுக முடியாது தவிக்கின்றனர். காப்பாற்றினால் அது பிற்போக்கு எனவும், கைவிட்டால் அக்கறையின்மை எனவும் குற்றம் சாட்டப்படுவதாக முன்வைக்கிறார்கள். பெண்களே சில சமயம் பெரும் குழப்பத்திற்கு ஆளாகிறார்கள். இழுக்கும் எதிர்காலமும் கடந்து வந்த பழங்காலமும் பேலன்ஸ் செய்ய முடியாமல் தடுமாறுகிறார்கள். ஏன்? பெண்ணுக்கு ஏனிந்த குழப்பம்?

இதுதான் படைப்பு ரகசியம் எனவும், இதை மீட்க முடியாதெனவும் கூறுகிறார்கள். ஒருவகையில் சரிதான். இதை சரிப்படுத்த முடியாதுதான். தொடரும் கால மாற்றங்கள் சமூக மாற்றங்களை கட்டாயமாக்குகின்றன. போன தலைமுறையில் கூட அப்பாக்கள் தன் மகள்களை கல்லூரிக்கு அனுப்ப தயங்கினார்கள். இப்போது வேறு வழி இல்லை. காலம் அவர்களை மாற்றியிருக்கிறது.

சட்டென துணை மாற்றிக் கொள்வதோ, மறுமணமோ, திருமணமற்ற உறவுகளோ எல்லாமே ஒருவகையில் நியாயப் படுத்தப் பட்டு விட்டன. சாத்தியப்பட்டும் விட்டன. பெரியவர்களின் தலையீடற்ற வாழ்வை வாழ முடிகிறது. ஆனால் எங்கும் அன்பின் தேடலை காணமுடிகிறது. அந்தத் தவிப்பை வெளிப்படுத்தும் விதவிதமான காட்சிகளை தரும் ஊடகங்கள்தான் அதிகரித்து விட்டன.

அன்பைத்தரும் அன்னபூரணிகளாகவே பெண்கள் இருந்ததாக ஆண்கள் குறைப்படுகிறார்கள் இந்த தலைமுறையில். பெண்கள் ஆண்களை சம்பாதிக்கும் கருவியாக உபயோகப்படுத்திக் கொள்வதாக நிறைய குற்றச்சாட்டுகள் உண்டு. அவர்களின் சுதந்திரத்தை களவாடியதாக, பொறுப்பை தான் மட்டுமே சுமப்பதாக, அழுகை, ஆர்ப்பாட்டம், செக்ஸ், குடும்பம் என்ற பல பெயரில் தன்னைச் சிறைப் படுத்துவதாக இன்றைய ஆண் உணர்கிறான்.

சாதாரணமாக  ஆணைப் பார்த்து  பெண் சந்தேகப் படுவது போல ஒரு ஆண் அவ்வளவு சுலபத்தில் பெண்ணைக் கேட்டு விட முடியாது. பெண்கள் சந்தேகத்தின் போது கேட்கும் கேள்விகளெல்லாம் ஆண் திருப்பிக் கேட்பதானால் அந்தப் பெண் உருக்குலைந்து போய்விடுவாள். பெண்களுக்கு பல விஷயங்கள் சாதகமாக இருப்பதாக ஒரு தோற்றம் இருக்கிறது. அப்பொழுதும் இந்தப் பெண்கள் ஏன் அழுது புலம்புகிறார்கள்?

ஏன் ஏமாற்றி விட்டதாக உரிமை கொடுக்காதவனாக பேசுகிறார்கள்? ஏன் சம உரிமை, சம உரிமை என ஜிங்கு ஜிங்கென ஆட்டம் போடுகிறார்கள்? ஒரு வார்த்தைக்கு ஒரு லிட்டர் கண்ணீர் விடுகிறார்கள்? என்ன கொடுத்தாலும் ஏன் திருப்தி இல்லை? எவ்வளவு குழப்பங்கள்..

இதேபோல பெண்ணிடம் ஒரு லட்சம் கேள்விகள். ஆனால் அவளுக்கு கேட்க வேண்டிய ஆள் யாரென்றே தெரியவில்லை. யாரைப்பார்த்து குற்றவாளிக் கூண்டில் நில் என்று சொல்வதென்றே தெரியாமல் நிற்கிறாள். முடிச்சுகளால் நிறைந்த தன் வாழ்க்கையை மேலும் மேலுமாய் முடிச்சிட்டுக் கொள்கிறாள். எத்தனையோ சாதித்த பிறகும் நடுநிசியில் பெருங்குரலிட்டு அழுகிறாள். மொத்தமாய் தன் உணர்வில் கரைந்து தன்னையோ, தன்னுடன் இருப்பவர்களையோ அந்த தீயில் தகதகவென எரிய வைக்கிறாள். நல்ல தங்காள் முதல் சில்க் வரை பலநூறு உதாரணங்கள்.

ஆனால் இப்போது ‘உங்களுக்கு என்னதான்மா பிரச்னை?’ என கேட்க ஆண்களின் காதுகள் முன்னெப்பொழுதும் இல்லாத அளவிற்கு திறக்கப்பட்டுள்ளன. ஆண்களின் சுதந்திரங்களையும், உலக அறிவையும் அதற்கு மெனக்கெடுதலையும் பெண்களால் இப்பொழுது உணர முடிகிறது. இரண்டு உலகங்களும் பேதமற்று வாழத் தொடங்கியிருக்கிறது.

இயற்கை ஒரு நியதியை பெண்மீது எதன்காரணமாகவோ விதித்து விட்டது. சில சந்தோஷங்களையும் அதற்காக இழப்பீட்டுத் தொகையாக வழங்கி விட்டது. பல மிருகங்கள் ஒற்றைத் துணையுடன் மட்டுமே வாழ்கின்றன. பறவைகள் மிகுந்த பிரியத்துடன் காதல் கொள்கின்றன. எல்லாவற்றிலும் ஆணே அழகு. ஏனெனில் பெண்ணைக் கவர பெரும்பிரயத்தனம் நடத்த வேண்டும். வலிமையை தலைமையை நிரூபிக்க வேண்டும். என்ன தலைகீழாய் நின்றாலும் பெண்ணின் விருப்பம்தான் முதலில். ஆனால் மனித இனத்தில் மட்டும் பெண்களுக்கு ஆண்களை விட சற்று கூடுதலான அழகு அமைந்து விட்டது. ஆனால் மிருகமோ, பறவையோ, மனிதியோ அவளுக்கு ஆண்டாண்டு காலமாய் இடப்பட்ட கட்டளை தன் இனத்தைப் பாதுகாத்தல், பெருக்குதல்.

இதுதான் பெண்ணின் மனதில் அழியாமல் படிந்திருக்கும் தாரக மந்திரம். ஜானி படத்தின் தீபா கேரக்டரை மோசமான பெண்ணுக்கு உதாரணமாக காட்டுவார்கள். அவள் அதில் தேர்ந்தெடுத்தது பொருளாதாரம். ஒன்றை விடச் சிறந்தது இன்னொன்று. சிலருக்கு அது படிப்பாக இருக்கலாம், சிலருக்கு மனோபாவமாக இருக்கலாம் சிலருக்கு தன்மேல் அவன் வைக்கும் பிரியமாக கூட இருக்கலாம்.. என்னவாயினும் சிறந்ததை தேர்ந்தெடுப்பதில் தான் அவள் மரபணு அவளை பயிற்றுவிக்கிறது. பிறகு அந்தச் சிறந்ததைத் தக்க வைத்துக் கொள்வதிலும்… சிறந்ததாக கிடைக்கவில்லை எனினும் கிடைத்ததை சிறந்ததாக மாற்றுவதையும் ஒரு முனைப்பாக மாற்றிக் கொண்டு விளையாடத் தொடங்குகிறாள்.

எப்படி? புதிதாய் திருமணமானவள் தன் எல்லா குணநலன்களையும் அவனுக்கு சாதகமாகவே மாற்றுவது. பின் ‘காலையில் இனிமே சீக்கிரம் எழுந்து பழகுங்க’

”அண்ணா வீட்டுல டீவி 43 இன்ச். நாம வாங்க முடியாதா என்ன?

”வீக் எண்ட் ல சும்மாதான இருக்கீங்க. பேசாம ஈவ்னிங் காலேஜ் சேரலாமே”.

”நாம ரெண்டு பேர் மட்டும் இருந்தா நாம இன்னும் கொஞ்சம் பிரைவசியா இருக்கலாம்”

அப்புறமாக குழந்தை என்று வந்தவுடன் கலர் மாறும். ’நான்தான் சரி, சரினு போறேன். என் குழந்தைக்கு அந்த நிலைமை தேவையில்லை. யாருக்காக இல்லன்னாலும் என் குழந்தைக்காக நான் விட்டுத்தர மாட்டேன்’.

ஆனால் இதெல்லாமில்லாத தெளிவான பெண்களும் இருக்கிறார்கள். கவனிக்க வேண்டியது இவர்களுக்கும் இந்த சிறந்ததை மேலும் சிறந்ததாக மாற்றும் உந்துதல் இருக்கவே செய்யும். ஆண்கள் இதைப் புரிவதற்குள் எரிச்சலாகி விடுவான். ஆனால் ஏற்கனவே முன்னேற பாதை வகுத்து வைத்திருக்கும் ஆணை இந்த சாட்டைகளால் ஒன்றுமே செய்ய இயலாது. உண்மையில் அப்படி தெளிவும் தீர்க்கமும் நிறைந்த ஆண்களிடம் பெண்கள் பெரும்பாலும் அடங்கியே வாழ்கிறார்கள்.

பெண்ணுக்கு எப்பொழுதும் ஒரு இலக்கு தட்டுப்பட வேண்டும். குறைந்ததோ, நீளமானதோ இலக்கின்றி அவளால் பயணப்பட முடியாது. எனவேதான் ஒரு திருமணமாகட்டும், விருந்தாகட்டும் ஆண்களை விட பெண்கள் பரிமளிக்கின்றனர். பொறுப்பும் இலக்கும் சேர சேர அவளின் பாதுகாப்பின்மை கழண்டு விடும். அவளின் பாதை அந்த இலக்கை நோக்கியதாய் மட்டுமே அமையும்.

தேவிபாலா சார் எழுதிய மடிசார் மாமி படித்திருக்கிறீர்களா? அந்தக் காலத்தில் ஸ்ரீவித்யா போட்டோவில் சக்கைப்போடு போட்ட தொடர் அது. நிறைய விசு பட டைப்பிலான க்ளீஷேக்கள் இருந்தாலும் ஒரு தைரியமான, இலக்கை நோக்கிய பெண்ணாக அந்த ரங்க நாயகியை வடிவமைத்திருப்பார். சில பெண்கள் மெழுகாய் தன்னை எரித்துக் கொண்டு இலக்கை அடைவதை நான் அதிலேயே உணர்ந்தேன். தன்னுடைய கடமைகள் முழுவதுமாய் முடிந்ததும் செய்வதற்கு ஏதுமின்றி திகைத்த அந்த ரங்கநாயகி முழுவதுமாய் தன் இறந்த காலத்துக்கே பயணப்பட்டு விடுவாள். உண்மைதான். பெண்ணுக்கோ, பையனுக்கோ நல்ல வாழ்க்கை முடித்துக் கொடுத்த சில பெண்கள் நல்லதோர் இணை வாய்க்கப் பெறாதவர்கள் அந்த மனச்சிதைவில் வீழ்கிறார்கள்.

பாதுகாப்பின்மை, இலக்கை உருவாக்க முடியாமல் போதல், தன்னுடைய முக்கியத்துவம் குறையாமல் காத்தல் இதெல்லாம் பெண்களை எவ்வாறு மாற்றும் தெரியுமா?

ஆண்களிடம் இதைக் கேட்கிறேன். உங்களுக்கு அவசரமாய் அலுவலகத்தில் இரண்டு நாள் விடுப்பு எடுக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டு விட்டது. அதை தெரிவிக்கக் கூட உங்களால் இயலவில்லை. மறுநாள் உங்களால் மட்டுமே எடுக்கக்கூடிய முடிவுகள், அடிக்க வேண்டிய ரிப்போர்ட்கள் என உங்கள் மேஜையில் வைத்துவிட்டு வந்ததையோ கம்ப்யூட்டரில் எந்த பெயரில் சேமித்துள்ளீர்கள் என்பதையோ கூட யாராலும் கண்டுபிடிக்க இயலாது. முக்கியமான மீட்டிங்குகள் வேறு. பரிதவிக்கிறீர்கள். மனைவி சிடுசிடுக்கிறார், ” இவர் இல்லையென்றால் அங்கே எதுவும் நடக்காது பாரு, ஆபிஸையே இவர்தான் தலைல தாங்கற மாதிரி,”.. முறைப்பாய் ஒரு பார்வை பார்ப்பீர்கள் இவளுக்கு என்ன தெரியும் என்னைப் பற்றி என..

அடித்துப்பிடித்து அடுத்த நாள் பதட்டத்துடன் போனால் அலுவலகம் சிரித்துக்கொண்டே வரவேற்கிறது.

எப்படி சமாளித்தீர்கள்? எனக் கேட்டால் ’இதெல்லாம் என்ன விஷயம்’ என கெக்கலிக்கிறது. இந்த வேலைக்குத்தான் இவ்வளவு நாள் சீன் போட்டீர்களா? புதிதாக சேர்ந்த பையன் எல்லாவற்றையுமே அரை மணிநேரத்தில் எடுத்து தந்து விட்டான். அடுத்த அரைமணிநேரத்தில் ரிப்போர்ட்டும் கூட.. எம்.டி கூப்பிடுகிறார், லீவின் காரணத்தை மேலோட்டமாக விசாரித்தவர் நீங்கள் கொஞ்சம் அப்கிரேட் செய்துகொள்ளலாமே என அறிவுரைகளையும் வழங்குகிறார்.

இப்போது உங்களின் மனநிலை என்னவாக இருக்கும்? நீங்கள் இல்லாமல் இயங்காது என ஃபோனிலேயே அரைநாள் விடுமுறையில் கூட துரத்திக் கொண்டிருக்கும் ஆபிஸ் இன்று உங்களிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்டது. மனைவி சொன்னதும் உங்களுக்கு ஞாபகம் வருகிறது. இதற்கு மேல் அந்தப் பணிகளை உங்களால் அதே அளவு அர்ப்பணிப்புடன் செய்ய இயலுமா? சிலர் இதை பாடமாக எடுத்துக் கொண்டு upgrade செய்து கொள்ளக்கூடும். சில சமயம் நீங்கள் ஒதுக்கப்பட்ட காரணமே அது இல்லை என்பதாகக் கூட இருக்கலாம். ஆனாலும் உங்கள் ஏமாற்றம் தவிர்க்க இயலாதது தானே..

மனிதனின் இயல்பு அது. உங்களின் இருப்பு தேவைப்படும் இடங்களிலேயே நீங்கள் உங்களை முழுமையாக உணர்வீீர்கள். இந்த உணர்வு ஆண்களை விட பெண்களுக்கு மிக முக்கியம். எவ்வளவு தூரம் சென்றாலும் பெண்களால் தங்கள் இல்லங்களை கைவிட முடியாது. உடன் என்னுடன் பணிபுரியும் சக தோழிகள் மூன்று மணி ஆனால் குழந்தைகள் வந்து விட்டதா என அலாரம் அடித்தாற்போல வீட்டிற்கு போன் செய்து கேட்பார்கள். 5 மணிக்கு போன் செய்து பாலுக்கு உறையூற்ற சொல்வார்கள். நேரமாகுமென தெரிந்தால் இரவுச் சாப்பாட்டுக்கான ஆயத்தங்களை செய்யச் சொல்வார்கள். உ.ம் – ரவை வாங்கிட்டு வந்திடு. தேங்காய் துருவிடு.. முகூர்த்த நாளில் எல்லாம் ரெடியாக வைத்தால் தாலி மட்டும் எடுத்துக் கொடுக்க வரும் பிரமுகர் போல. ஒருமுறை கேட்டேன் .. இத்தனை செய்வதற்கு அடுப்பில் வைத்தும் உப்புமா கிளறி விட சொல்லலாமே மேடம் என. சிரித்துக் கொண்டே பதிலளித்தார், ” அப்புறம் நான் செய்தேன் எனச் சொல்வதற்கு ஒன்றுமேயில்லையே மேடம்”, என்றார். இது போல விவரமாக வெளிப்படையாக சொல்லாமலேயே இதுதான் விஷயம் எனத் தெரியாமலேயே இது நடந்து கொண்டிருக்கிறது.

பெண்களுக்கு தான் மட்டுமே அங்கு தேவை என்ற இடத்தில் மட்டுமே காலூன்ற முடியும். நீ என் தேவை என இறைஞ்சும் எந்த உயிர்க்கும் அது நாய்க்குட்டியாயிருந்தால் கூட அவள் தன்னை முழுமையாக அர்ப்பணித்துவிடுவாள். மணமுடித்த ஒரு வருடத்தின் பின் சாப்பாடுக்கு கஷ்டப்படுவாங்க.. ரொம்ப நாள்லாம் இருக்க முடியாது என கண்டிஷன் போடும் மகள்களே அதற்கு சாட்சி. எனது பெரிய பாட்டி கடைசிநாள் வரை அதுபோலவே வாழ்ந்தார். யார் வீட்டிலேனும் பிள்ளைப்பேறு, திருமணம், கிரகப்பிரவேசம் போன்ற விசேஷங்களானாலும் சரி, மருத்துவனையில் அனுமதிக்கப் பட்ட நோயாளிகளின் துணை நிற்பதாயினும் சரி முதல் ஆளாக வந்து நிற்பார். அவரின் சேவை மதிப்பற்றது. தேவையில்லாமல் அலைந்து அவஸ்தை படுகிறாரே என்றால் கூட தனியா யாருக்கும் உபயோகமில்லாம இருக்கறத விட இப்டி துணையாவானா பொழுது போகட்டுமே என்பார். அல்ஸீமரில் விழுவதற்கு முன்வரை இப்படியேதான் அவர் தன் வாழ்நாளை கடத்தினார்.

சரி. அது கடமைதானே.. அதற்கென்ன இப்போது? நாலு வார்த்தையில் அங்கீீகாரம் கொடுக்க வேண்டுமா? அங்கீகரித்தாயிற்று. இன்னும் என்ன? தினமும் சொல்ல வேண்டுமா? சொன்னால்தான் புரியுமா? ஆமாம். கடமையைச் செய்வது போல் மட்டுமே அவர்கள் தங்கள் வேலையைச் செய்ய ஆரம்பித்தால் மட்டுமே உங்களுக்கு வித்யாசம் தெரியும். வெளியூரில் தங்கி மெஸ் சாப்பாடு மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு வீட்டுச் சாப்பாடின் அருமை தெரியும். அடிக்கடி அவளுக்கு. நீதான் … நீதான். என வலியுறுத்திக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையெனில் அதைச் சொல்வதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொண்டே இருப்பார்கள். இது எதனால்? இப்படியே வாழ்நாள் முழுக்க உறுதி படுத்திக் கொண்டே இருக்க முடியுமா? தெரியாது. ஆனால் அவள் அதைத்தான் யோசிக்கிறாள். தன் முக்கியத்துவம் என்ன? ஒரு விஷயம் நடந்தால் தனக்கு எவ்வளவு மரியாதையைத் தரும் எனவே அவள் மனம் கணக்கு போடுகிறது. ஒரு கட்டத்தில் கணவன் சலித்து நிறுத்தி விடுவான். அப்போது சமூகத்தின் பேரில் அவள் கவனம் திரும்புகிறது. சமூகம் அவளை எவ்வாறு பார்க்கிறது. சொந்தங்கள், நட்பு இதில் குழந்தைகளை விட்டு விடலாம். எதற்காகவும் காம்ப்ரமைஸ் செய்து கொள்ள முடியாத உறவு அது.

இப்படி தன் முக்கியத்துவத்தை அவள் நிலைநாட்டி ஆகப்போவது என்ன? அவர்கள் சொல்வதால் தான் அவள் தன்னை மதிப்பிடுகிறாளா? அப்படி என்ன பாதுகாப்பின்மையை அவள் உணர்கிறாள்? இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் கிடைத்து விட்டாலே பெண் தெளிவாகி விடுவாள். இதற்கெல்லாம் பதில் யாரிடம் இருக்கிறது. அதுவும் பெண்களிடம்தான். 

முதலில் பெண்களுக்கு தன் உடல்நிலை பற்றியதான எச்சரிக்கை புரிய வேண்டும். அதாவது பெண்ணின் உடல்நிலை ஒரு மாத சுழற்சியில் அவள் மனநிலையை தன் போக்கில் மாற்றுவதுற்குண்டான பெரும்பாலான கூறுகளை உள்ளடக்கியது. மாதவிலக்குக்கு முந்தைய பிந்தைய நாட்கள் மனதில் வெவ்வேறு விதமான எண்ணங்களை தோற்றுவிக்கக் கூடியது. இது அடிப்படையிலேயே ஒவ்வொருவருக்கும் மாறும். மேலும் பூப்படைதல், அதைத்தாண்டிய வளர்ச்சி, திருமணம் முடிந்த சில நாட்கள், கருவடைதல், குழந்தை பிறப்பு, நடுத்தர வயது, அதைத்தாண்டிய மெனோபாஸ் பருவம் என சமநிலையற்ற உடல்வாகு.அதனைப் பொறுத்து மாறும் பலவிதமான மனநிலைகள். அதன் அழுத்தங்கள். உடலும் மனமும் நன்றாயிருக்கும் காலத்தில் ஏற்படும் இடர்களை சமாளிப்பதே பெரியபாடு எனில் இது இரண்டும் தவறும் பட்சத்தில் ஏற்படும் ப்ரச்னைகளை சொல்லி முடிவதில்லை. 

எனவே தன் வயதை, தன் மாதாந்திர சுழற்சியை, தன் ப்ரச்சினையை முதலில் பெண்கள் புரிந்து கொள்ள வேண்டு. தனக்கு என்ன வேண்டுமென்ற தெளிவும், இலக்கும். புற சூழல்களால் அகம் பாதிக்காமலிருக்கும் பயிற்சியும் வேண்டும். அடுத்ததாக, பாதுகாப்பின்மையை உணர்தல். இன்செக்யூரிட்டி.. இது படுத்தும் பாடு சாதாரணமானதில்லை. பொருளாதார ரீதியாகவும், உடல்ரீதியாகவும், உணர்வுரீதியாகவும் இதைக் கையாளத் தெரியாமல் பெரும்பாலும் தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்வதும், அடுத்தவரைக் காயப்படுத்துவதும் நடக்கும்.  பின் அதற்கான குற்றவுணர்வும் தொடர்ந்து நடக்கும். இதன் காரணமாக பொசசிவ்நெஸ், சமநிலை தடுமாறுதல், உறவுகளில் சண்டை போன்றவை வெடிக்க வாய்ப்பிருக்கிறது. 

இதற்காகவே பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் முக்கியமென அறிவுறுத்தப் படுகிறது. ஆனால் அதுமட்டுமே முக்கியமென கைக்கொள்ளும் பெண்ணும் உணர்வுரீதியாக உடையும் நிலையை இப்போது பார்க்கிறோம். சம அளவில் எல்லாவற்றையும் கையாளத் தெரியும் பெண்கள் ஓரளவு சமாளிக்கிறார்கள். எனவே எந்த மாற்றமெனினும் நம்மிடமிருந்தே தொடங்குவது மிக முக்கியமானது. நம்மை திருத்திக் கொண்டு நம்மிடம் திருப்தி கொள்வதே இன்றியமையாதது. கடைசியாய் ஒரே ஒரு கேள்வி. நீங்கள் உங்களைச் சார்ந்தவர்களை சந்தோஷமாக வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறீர்களா? முதலில் அதை உங்களிடமிருந்து தொடங்குங்கள். உங்களால் அதற்கே முடியவில்லையெனில், அடுத்ததும் உங்களால் முடியாமல் போகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *