‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ என்ற இந்த சொற்றொடர் மிக பிரலமானது. உலகில் பணம் இல்லாதவனை யாரும் மதிக்க மாட்டார்கள். எனவே, கடல் கடந்து வெளிநாடு சென்றாவது செல்வம் ஈட்டிட வேண்டும் என்று கூறினார்கள். பணத்திற்கான தேவை என்பது ஏதோ ஒரு வகையில் எல்லா குடும்பங்களிலும் இருந்து கொண்டே தான் இருக்கும். வெளிநாடு வந்து சம்பாதிப்பதற்கான அவசியம் என்பது குடும்பக் கடன், உடன்பிறந்தவர்களின் படிப்பு திருமணம், பெற்றோர்களின் மருத்துவம், சமூக அந்தஸ்து என்று நிறைய காரணங்களால் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிக்கப்படுகிறது.
முதன்முதலில் வெளிநாடு வரும் அனைவரும் உதிர்க்கும் முத்தான வாக்கியங்களில் ஒன்று, “ இங்கேயே நிரந்தரமாகவெல்லாம் இருக்க முடியாது. இரண்டு வருடம் தான்.. அதற்குள் கடனை அடைத்து, கையில் கொஞ்சம் சேமிப்பை வைத்துக் கொண்டு ஊருக்குப் போய்விட வேண்டும்” என்பது. இப்படிச் சொல்பவர்கள் அநேகம் பேரின் விதி வேறு மாதிரி எழுதப்பட்டிருக்கும். அந்த நாட்டின் குடியுரிமை வாங்கி பிள்ளைகள் திருமணம் வரை அந்த நாட்டிலேயே நடத்தியவர்களும் உண்டு.
‘சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா’ என்பதெல்லாம் வெறும் பாட்டுக்காக மட்டும் தானா? என்றெனக்கு எண்ணம் வருவதுண்டு. நான் சிங்கப்பூர் வந்து பதின்மூன்று வருடங்களுக்கு மேல் ஆகப் போகிறது. இங்கே மிகப் பிடித்தது உள் கட்டமைப்பு வசதிகள், பொது சுகாதாரம், பாதுகாப்பு முதலான அம்சங்கள். அரசு, வங்கி உள்ளிட்ட எது சார்ந்த விஷயங்கள் என்றாலும் காத்திருப்பு, அலைக்கழிப்பு போன்றவற்றிற்கு இடமிருக்காது. எந்த வித்தியாசமும் இன்றி பழகும் பிற நாட்டு மக்களின் நட்பு, நம் ஊர் பொருட்கள் எல்லாமே கிட்டத்தட்ட இங்கு கிடைப்பது போன்றவை இன்னும் ஆகப்பெரிய சவுகரியம். இவையெல்லாம் இங்கேயே தொடர்ந்திருக்க எங்களைப் பிடித்து வைத்திருக்கும் காரணிகள். அப்படியென்றால் பிரச்சனைகளே இல்லை என்று சொல்லிவிட இயலுமா என்ன? முதல் தலையாய பிரச்சனை பொருளாதாரம். இங்கே வீட்டு வாடகையும், பிள்ளைகளின் கல்விச் செலவும் மற்ற வெளிநாடுகள் எல்லாவற்றைக் காட்டிலும் அதிகம். குடியுரிமையோ, நிரந்தரக் குடியுரிமையோ பெற்றவர்களால் மட்டுமே பிள்ளைகளின் கல்விச் செலவை சமாளிக்க இயலும். மற்றவர்கள், பிள்ளைகளை தங்களோடு தக்க வைத்துக் கொள்ள பொருளாதாரத்திற்காய் ஓட வேண்டியதிருக்கும். கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் சென்றே ஆக வேண்டிய கட்டாயம் உண்டாகும். என் சக தோழிகள் நிறைய பேர் இங்கே அதிகரிக்கும் கல்விக் கட்டணத்தை சமாளிக்க இயலாமல் பிள்ளைகளை ஊருக்கு அனுப்பி படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். பிள்ளைகளைப் பிரிந்து, மன அழுத்தத்தோடு இங்கு வேலை செய்வோர் அநேகம் பேர். பிள்ளைகளின் படிப்பிற்காக, அகவை நாற்பதுக்கும் ஐம்பதுக்கும் மேலான பின்பு, அத்தனை உடல் உபாதைகளையும் வைத்துக் கொண்டு வேலைக்குச் சென்று வருபவர்களும் உண்டு.
குடும்பத்தினருடன் இங்கே வசிப்பவர்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் எல்லோரும் ஓரிடத்தில் ஒன்றாக இருக்க முடிகிறது என்பது மட்டுமே. தனியாக வசிக்கும் ஊழியர்களுக்கு குடும்பம் அருகில் இல்லாத ஏக்கம் தரும் அழுத்தம் ஒரு புறம், சங்கிலித் தொடர் போல் நீளும் குடும்ப பொறுப்புகள் தரும் அழுத்தம் மறுபுறம். இன்னும் சிலர் இருக்கிறார்கள்.. கொடுத்து கொடுத்தே சிவந்த கைகள் அவர்களுக்கு. ஒட்டு மொத்த குடும்பத்தில் எங்கோ யாருக்கோ பொருளாதாரத் தேவை ஏற்பட்டு விட்டால் உடனே உதவும் தாராள பிரபுக்கள் இவர்கள். இப்படிப்பட்டவர்களுக்கு அவர்கள் உடல்நிலையோ, அவர்கள் குடும்பத் தேவைகளோ பெரிதாய் தெரியாது. குடும்பத்தில் அவர்களுக்கு இருக்கும் நல்லபெயர் மட்டும் தொடர்ந்தால் போதும் அவர்களுக்கு. தங்களைத் தாங்களே வருத்திக் கொண்டு மற்றவர்களுக்கு தர்மபிரபுவாய் காட்சிதரும் போதை அதிகம் சிலருக்கு.
தன் நெருங்கிய உறவுகளை அழைத்து வந்து இங்கேயே உடன் வைத்துக் கொள்ளும் கொடுப்பினையும் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. குடியுரிமையில் காண்பிக்கப்படும் கண்டிப்பான அணுகுமுறைகளால் பலருக்கு பெற்றோர்களை, மனைவி குழந்தைகளை தொடர்ந்து தங்களுடன் வைத்துக் கொள்ளவியலா சூழல் உண்டாகும். அதுவரை இணைந்து வாழ்ந்து வந்தவர்கள் இந்த சூழலில் பிரிகையில் உண்டாகும் அழுத்தங்கள் பலருக்கு வாழ்நாள் முழுவதும் தொடரும் அழுத்தமாக மாறிவிடும்.
அடுத்ததாக, இங்கேயே பிறந்து இங்கேயே வளரும் பிள்ளைகள் எந்த சூழலிலும் ஊரில் போய் செட்டிலாவதை விரும்பவே மாட்டார்கள். இங்கேயே வளர்வதில் உண்டாகும் முதல் சிக்கல், தாய்மொழியில் பேசுவதென்பதோ, தாய்மொழியில் சிந்திப்பதென்பதோ மிக மிக குறைவு. சிங்கப்பூரைப் பொறுத்த வரை ஆரம்பக் கல்வியில் இருந்தே தமிழை ஒரு மொழிப்பாடமாக பிள்ளைகளால் படிக்க முடியும். ஏப்ரல் மாதம் முழுவதும் இங்கே ‘தமிழ்மொழி விழா’ கொண்டாடப்படும். அதையொட்டி மாணவர்களுக்கு விழிப்புணர்வை உண்டாக்கும் நிறைய நிகழ்ச்சிகள் பள்ளிகளாலும் முன்னெடுக்கப்படும். இத்தனை இருந்தாலும் பிள்ளைகள் அவர்களின் சக தமிழ் நண்பர்களோடு பேசுகையிலும், உறவினர்களோடு பேசும் சூழல் வருகையிலும் ஆங்கிலத்தில் தான் உரையாடுகிறார்கள். இப்படி வளரும் பிள்ளைகளின் அடுத்த தலைமுறைக்கு நம் மொழியும் வாழ்வியலும் எப்படி கடத்தப்படும்?
இருவரும் வேலைக்குச் செல்கையில் தனித்து விடப்படும் பிள்ளைகளைக் கையாள்வதில் உண்டாகும் சிரமங்கள் அதிகம். பிள்ளைகளிடம் அதிகரிக்கும் கணினிப் பயன்பாடு, மொபைல் பயன்பாடு இவை இரண்டுமே பலர் வீடுகளில் பேசுபொருள். பிள்ளைகளைக் கண்காணிக்கவும் வேண்டும், எது சரி எது தவறெனப் புரிய வைக்கவும் வேண்டும், இவை அனைத்தும் அவர்கள் மனம் கோணாதபடியும் பேச வேண்டும். பெற்றோர்களுக்கு மிகச் சவாலான பணி இது. பருவ வயதுப் பிள்ளைகளிடம் தெறிக்கும் முன்கோபம், மேற்படிப்பு தொடர்பான முடிவுகள் இவற்றைக் கையாள்வதில் பெற்றோர்களுக்கு நிறைய தெளிவு தேவை.
வேலை, வீடு, மீண்டும் வேலை, வீடு என்று ஓடிக் கொண்டேயிருக்கும் வாழ்க்கை தான் எல்லோருக்கும். சொந்த ஊரில் வசிக்கையில் இதிலிருந்து விடுபட்டு கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ள பெற்றோர்களின் அருகாமையோ, உறவினர்கள் வீட்டு விசேஷங்களோ, பண்டிகை நாள் ஒன்று கூடல்களோ, நண்பர்களுடனான பயணங்களோ இப்படி ஏதாவது ஒன்று மாறி மாறி வருகையில் அழுத்தங்களை குறைத்துக் கொள்ள இயலும். வெளிநாடுகளில் வசிப்பவர்கள் இந்த வகையில் துரதிருஷ்டசாலிகளே!
இருவரும் வேலைக்குச் செல்லும் வீடுகளில் யாரேனும் ஒருவர் தலையில் மட்டுமே சுமத்தப்படும் பொறுப்புகள், அதீத வேலைகள், பேசுவதற்கு நேரமின்மை, இரு பாலரில் ஒருவரின் உணர்வுகள் புறக்கணிக்கப்படுகையில் உண்டாகும் ஏமாற்றம், இதன் ஒட்டு மொத்த பாதிப்பாய் உண்டாகும் வெற்றிடம், அந்த வெற்றிடத்திற்குள் நுழையும் புதிய நட்பு, அதன் மூலம் உண்டாகும் அகச்சிக்கல்கள், அந்த அகச்சிக்கல்களை கையாள்வதில் உண்டாகும் தோல்வி என்று இங்கே பட்டியல் நீளும்.
இந்த அழுத்தங்களிலிருந்து விடுபட எல்லோராலும் முடிகிறதா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். சில இடங்களில் நண்பர்கள் குடும்பத்துடன் குழுவாக இணைந்து குறிப்பிட்ட நாட்களுக்கொரு முறை ‘கெட் டூ கெதர்’ போன்று ஏற்பாடு செய்வார்கள். சிலர் தங்களுக்கு மிகப்பிடித்த விளையாட்டில் கவனம் செலுத்துவார்கள். சிலருக்கு பாடுவது, எழுதுவது, புத்தகங்கள் வாசிப்பது போன்றவை இந்த அழுத்தங்களிலிருந்து விடுபட வைக்கும். அதிகபட்சம் போனால், தொடர் விடுமுறையாக கிடைக்கும் நான்கைந்து நாட்களில் உள்ளூரிலேயே ஏதேனும் இடத்திற்குப் போகின்றவர்கள் தான் அநேகம் பேர். வேறொரு நாட்டிற்கு பயணம் செய்வது போன்றவை எல்லாம் இப்பொழுது தான் அங்கொன்றும் இங்கொன்றுமாக எட்டிப் பார்க்க ஆரம்பித்திருக்கிறது.
திரவியம் தேடி வந்த பயணத்திற்கு முற்றுப்புள்ளி என்று ஏதாவது இருக்கிறதா என்ன? பெரும்பாலானவர்களுக்கு அது புலி வாலைப் பிடித்த கதை தான். வெளிநாட்டிற்கு வருவதற்கு முன் இருந்த சமூக அந்தஸ்திற்கும் வெளிநாட்டிற்கு வந்த பின் உண்டான சமூக அந்தஸ்திற்கும் இடையேயான வேறுபாடே பலரை வெளிநாட்டை விட்டு வரவிடாமல் தடுத்து அங்கேயே வைத்திருக்கிறது. இந்த அந்தஸ்தை தக்க வைத்துக் கொள்ள இங்கே சில பல இழப்புகளை எதிர் கொள்வதென்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது.
ஊரில் இருப்பவர்கள் பலரிடம் ஒரு சொல்வழக்கு பிரபலம்.. ‘அவனுக்கென்னப்பா? வெளிநாட்டு சம்பாத்தியம்.. கையில காசு புரளாமலா எல்லாத்தையும் சமாளிக்கான்’ என்பார்கள். அந்த சம்பாத்தியம் என்பது எளிதில் கிடைத்துவிடும் ஒன்றல்ல. சக்கையாய் பிழிந்து எடுத்த பிறகு தான் அந்த சம்பாத்தியம் கிடைக்கும். அதிலும் இங்கே உடனிருப்பவர்கள் தேவையை நிவர்த்தி செய்து, ஊரில் இருப்பவர்கள் தேவையையும் நிவர்த்தி செய்து, வாய்ப்பிருக்கும் அத்தனை கடன் அட்டைகளையும் சுரண்டி, அதைக் கட்டுவதற்குள் தன் தேவைகள் பலவற்றை சுருக்கி வாழும் மனிதர்களே இங்கு அதிகம்.
‘தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசி எடுக்கும்
தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசி இருக்கும்’
திரவியத் தேடலுக்கான தேவை என்பது எப்பொழுதும் இருந்து கொண்டே இருப்பது தான். அந்த தேடலுக்கான பயணத்தில் நிறைய இழப்புகள் இருந்தாலும், பிடித்த ஏதோ ஒன்றில் ஒப்படைத்து, எங்களை உயிர்ப்பித்துக் கொண்டு ஓடிக்கொண்டே இருக்கின்றோம் வாழ்தலை இனிதாக்குவதற்காக!