வெட்கப்பட ஒன்றும்மில்லை

இந்த உலகில் தோன்றிய உயிரினங்களின் உயிர்த்தொடர் சங்கிலியில் மனிதனும் ஒரு கன்னி என்பதை நாம் எப்போதும் மறந்துவிடுகிறோம்.மாதவிடாய் என்பது பெண் உயிரினங்களுக்கு உரித்தான ஒரு இயற்கையான நிகழ்வு. ஆனால் இது குறித்த சமூக,கலாச்சார மூடநம்பிக்கைகளும், தடைகளும் முற்றிலும் களையப்பட வேண்டிய ஒன்றாக இருக்கிறது… 

மாதவிடாய் காலங்களில் பெண்கள் கோவிலுக்கு செல்லக் கூடாது,உணவு சமைக்கக் கூடாது,எல்லோரும் ஒன்றாக அமர்ந்து கலந்து உண்ணக்கூடாது என்று பல கட்டுப்பாடுகள் இன்றும், அதுவும் பெரும்பாலான பெண்களாலேயே மிகச் சாதாரணமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.. இதற்குக் காரணம் மதங்களின் பெயரால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் கொள்கைகளே..

மாதவிடாய் காலங்களில் பெண்களின் உடலானது அவர்களைச் சுற்றி இருக்கும் காஸ்மிக் எனர்ஜியை முழுவதுமாக உறிஞ்சிக் கொள்ளக் கூடியதாக இருக்கிறது.. அதனால் கோவில்களில் அமைக்கப்பட்டிருக்கும் இறைவனின் சிலையில் இருக்கும் மேல் நோக்கிய நேர்மறையான சக்தியை அவளின் உடல் முழுவதும் உறிஞ்சிக்கொள்ளும்.. அதே சமயம் அந்த காலகட்டங்களில் அவளுடைய உடலின் பிராண சக்தி கீழ் நோக்கி செயல்படுவதாய் இருக்கிறது.. அதனால் இது போன்ற காலங்களில் அவள் உடலில் உண்டாகும் “சக்தி இழப்பு” அவளுக்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்தும் என்று மதங்கள் கூறுகிறது.. இந்தியாவின் பெரும்பான்மையான மதங்களில் மாதவிடாய் என்பது மிகவும் புனிதமான ஒன்றாக கருதப்பட்டு, மாதவிடாய் ஆன காலங்களில் பெண்கள் மிகவும் தூய்மையானவர்களாக இருக்கிறார்கள் என்ற கருத்தை முன்வைக்கிறது…

ஆனால் இந்து சமயமோ மாதவிடாய் பெண்கள் என்றாலே “தீட்டு”, “அசுத்தமானவர்கள்” என்று ஒதுக்கி வைக்கிறது.. மாதவிடாய் சமயங்களில் பெண்கள் வெளியே செல்லக்கூடாது.. அப்படி சென்றால் ஊர் முழுவதும் நோய் தொற்றுகள் பரவ காரணமாகிறார்கள் என்று வாதிடுகிறார்கள்..  உணவு உண்ணும் போது பிராமணர்கள் ஓதும் மந்திர சக்திகளின் அதிர்வு, உணவில் இருக்கும் சக்தி நேர்மறையானதா எதிர்மறையானதா என்பதை அறிந்துகொள்ள உதவுகிறது.. ஆனால் மாதவிடாய் பெண்களோடு சேர்ந்து கலந்துண்ணும்போது அந்த அதிர்வுகள் நிலைமாற்றம் பெறுகின்றன என்ற கருத்தை முன்வைத்து அவர்கள் தள்ளி வைக்கப்படுகிறார்கள்… 

எந்த கலாச்சார கருத்துகளுக்கும் செவி சாய்க்காத சாதாரண பாமர மக்களும் மாதவிடாய் காலங்களை அசுத்தம் நிறைந்த நாட்களாகவே எண்ணி பெண்ணை தள்ளி வைக்கவே பழக்கப்படுத்தப்பட்டுள்ளனர்.. சுகாதார வசதி குறைந்த அந்த நாட்களில் அவர்கள் அப்படி ஒரு நிலைப்பாட்டினை கொண்டு இருந்திருக்கலாம்.. 

கடுமையான உதிரப்போக்கு, பழைய துணிகளை துவைத்து உபயோகப்படுத்துவது, வெளியேறும் ரத்தத்தினை கழுவி சுத்தம் செய்து கொள்ள போதுமான நீர் வசதியோ கழிப்பறை வசதியோ இல்லாத அந்த நாட்கள் மலையேறிச் சென்று நிறைய ஆண்டுகள் ஆகிவிட்டன.. இன்றைய காலகட்டங்களில் யூஸ் அண்ட் த்ரோ சானிட்டரி நாப்கின்கள் மற்றும் டாம்பாண்ஸ் போன்றவைகள் எல்லாம் வந்துவிட்ட காலத்திலும் தனியாக ஒதுக்கி வைப்பதை பற்றியும் யோசிக்காமல், அந்த நேரத்தில் அவர்களின் உடலில் நிகழும் சமநிலையின்மையை உணர்ந்து கொண்டு, அவளுக்கு சிறிது ஓய்வினை எடுத்துக்கொள்ள வாய்ப்பேற்படுத்திக் கொடுக்கலாம்…

“மாதவிடாய் சுழற்சி” என்பது எல்லாப் பெண்களுக்கும் ஏற்படும் ஒரு நிகழ்வு தான் என்பதை பெண்கள் ஒத்துக்கொள்கிறார்கள்..  ஆனால் அந்த நாட்களில் உடலிலும் மனதிலும் ஏற்படும் மாற்றங்களும், அசவுரியங்களும் எல்லா பெண்களுக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.. அதை தவிர்த்து எல்லோருக்கும் நடக்கிறது தானே உனக்கும் இருக்கு பெருசா சீன் போடுற என வார்த்தைகளால் காயப்படுத்தாமல் தவிர்க்கலாம்… 

அதோடு மாதவிடாய் சுழற்சி என்றால் என்ன என்பதை அறிவியல் பூர்வமாக முழுமையாக உணர்ந்து கொள்வது அவசியம் அதனால் அதனைப் பற்றிய சிறிய அறிவியல் விளக்கங்களை பார்ப்போம்… 

பெண்களின் இனப்பெருக்க மண்டலத்தில் நிகழும் மாதவிடாய் என்ற இந்த இயற்கை நிகழ்வை மொத்தம் நான்கு நிலைகளாக பிரித்து விளக்கம் தருகிறது அறிவியல் உலகம்.. அதனை புரிந்து கொள்வது மிகவும் அவசியமான ஒன்று.. பெண்களுக்கு மாதவிடாய் என்பது இன்றைய காலகட்டங்களில் 10 வயது முதலை தொடங்கி 50 வருடங்கள் வரை கிட்டத்தட்ட 40 வருடங்கள் ஒவ்வொரு மாதமும் நடக்கும் சுழற்சி ஆகும்.. 

1 முதல் 5 நாட்கள் வரை :- 

இந்த முதல் நிலையில் பெண்களின் பிறப்புறுப்புகளில் இருந்து ரத்தம் கசிய தொடங்கி 5 முதல் 7 நாட்கள் வரை தொடர்கிறது.. ரத்தப்போக்கின் அளவு பெண்களுக்கு பெண்கள் மாறுபடுகிறது..இந்த காலகட்டங்களில் கடுமையான வயிற்று தசைப்பிடிப்பு, சோர்வு,தலைவலி, அடி முதுகு வலி, mood swing போன்ற அறிகுறிகள் இருக்கும்.. இது ஒவ்வொருவருக்கும் வேறுபடும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்…

5 முதல் 13 நாட்கள் வரை :- 

சினைப்பையில் கருமுட்டைகள் உருவாகக்கூடிய காலம்.. இந்த நாட்களில் கருமுட்டைகளை உருவாக்கி தங்களின் சந்ததிகளை உருவாக்க தயாராகிவிட்ட நிலையில், அதற்கு அடித்தளமாக அமையும் உடலுறவுவின்பால் விருப்பங்கள் பெண்களுக்கு அதிகமாகின்றன..  உடலின் தோல் மெருகு கூடி, பெண் வசீகரமாக தோற்றமளிக்கிறாள்..  இக்கால கட்டங்களில் உடலுறவு இச்சை என்பது பெண்களுக்கு “இயற்கையாகவே” அமைகிறது என்பதை அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும்.. அதை விட்டுவிட்டு என்ன மாதிரியான பெண் இவர் என்ற அர்த்தமற்ற ஆதிக்க மனப்பான்மையை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும்.. 

14 வது நாள் :-

கருமுட்டையானது சினைப்பையில் இருந்து விடுபட்டு கருப்பைக்குள் நுழையக்கூடிய காலம்.. விடுபட்ட கருமுட்டையின் ஆயுட்காலம் 24 மணி நேரம்.. இந்த நாளில் விந்தணுவுடன் கருமுட்டை இணையும்போது கரு உருவாகிறது.. குழந்தை பெற்றுக்கொள்ள முனையும் இணையானது 7 முதல் 14 ஆம் நாள் வரை இணை சேர வற்புறுத்தப்படுகிறார்கள்.. இந்த நாட்களில் பெண்களின் உடல் வெப்பநிலையில் மாற்றங்கள் ஏற்படுகிறது.. கருப்பை வாயிலிருந்து ஒரு வகையான வழவழப்பான திரவமும் வெளியேறுகிறது..

15 முதல் 28 நாட்கள் வரை :-

இந்த நான்காவது நிலையில் மீண்டும் கருமுட்டை உற்பத்திக்கான சுழற்சி தொடங்குகிறது.. சினைப்பையில் இருந்து கருமுட்டை விடுபட்டவுடன் சினைப்பையை சுற்றி கார்பஸ் லூட்டியம் என்ற நீர்க்கட்டி போன்ற அமைப்பு உருவாகிறது..இது போன்ற இந்த நான்கு நிலைகளும் ஒவ்வொரு மாதமும் நிகழ்கிறது..

இயற்கையாய் நிகழும் இந்த நிகழ்வினை பற்றிப் பேசுவதற்கு சங்கடப்படுவதோ, வெட்கப்படுவதோ தேவையில்லாத மனநிலை.. வெளிப்படையான கலந்துரையாடல்கள் மிகுந்த நன்மையை அளிக்கும்.. மாதவிடாய் காலங்களில் பள்ளிக்கும் கல்லூரிகளுக்கும் செல்லும் குழந்தைகளின் மிகுந்த பதட்டத்திற்கும் மன அழுத்தத்திற்கும் விடைதரும்.. ரத்தக்கறை பட்டு அனைவருக்கும் தெரிந்து விடுமோ என்று இதுகுறித்து பதட்டப்படுதல் மக்களின் மனநிலையில் இருந்து நீக்கப்படுதல் வேண்டும்.. இதுகுறித்து நகைப்பதற்கு அவமானமாய் உணர வைப்பதற்கு ஒன்றுமில்லை என்ற மனநிலையை உருவாக்க வேண்டும்.. இந்த நிகழ்வுகள் மூடி மூடி வைத்து ரகசியம் போல் காக்கப்பட வேண்டிய ஒன்றல்ல என்பதை பெற்றோர்கள் தன்னுடைய மாணவப் பருவத்திலேயே ஆண் மகனுக்கும் புரிய வைக்கப்பட வேண்டிய கட்டாயங்களில் இதுவும் ஒன்று… 

மாதவிடாய் காலங்களில் ஏற்படும் பிரச்சனைகளையும், உடல்நலக் கோளாறுகளையும் அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய அவசியம் இருக்கிறது..  நாம் மேற்கொள்ளும் வாழ்க்கை முறையும், மன அழுத்தம் போன்றவைகளும் இந்த சுழற்சியில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.. கர்ப்பப்பை நீர்க்கட்டிகள் (பாலி சிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்),தைராய்டு பிரச்சனைகள், கருத்தடை மாத்திரைகள், ஃபைபராய்ட் (கருப்பை நார்திசுக் கட்டிகள், அடினோமயோசிஸ் போன்ற அதிக வலியை ஏற்படுத்தக் கூடிய அறிகுறிகள் போன்ற பல்வேறு காரணங்களால் முறையற்ற மாதவிடாய் ஏற்படுகிறது.. வெறும் வயிறு வலி தானே என்று இவைகளை மிகச் சாதாரணமாக எடுத்துக்கொண்டு மருத்துவரை அணுகுவதை தவிர்க்க வேண்டாம்… 

மெனோபாஸ் என்ற பெண்களின் மாதவிடாய் நிற்கும் காலகட்டங்கள் 45 முதல் 50 வயது வரை.. இக்கால கட்டங்களில் அவர்களின் உடம்பில் ஏற்படும் ஹார்மோன் சமநிலையற்ற தன்மையினை ஒவ்வொரு ஆண்களும் கட்டாயம் புரிந்துகொள்ள வேண்டும்.. இந்த சமயங்களில் அதிகமான mood swing கிற்கு பெண்கள் ஆளாகின்றனர்.. 

பிறப்புறுப்புகளில் வறட்சித் தன்மை, உடலுறவில் நாட்டமின்மை, வலிநிறைந்த உடலுறவு, உடல் எடை கூடுதல் அல்லது இழத்தல், உடல் வெப்ப நிலையில் மாற்றங்கள் (hot flashes), ஒழுங்கற்ற மாதவிடாய், தசை வலிகள், தலைவலி, இரவில் வியர்த்தல், சோர்வு, செரிமான பிரச்சனைகள் இப்படி அவர்களை தாக்கும் நோய் அறிகுறிகள் ஏராளம்.. வெறுமனே வயசாயிடுச்சுல்ல அப்படி தான் இருக்கும் என மேலோட்டமாக இதை தட்டிக் கழிக்க வேண்டாம்..

சரிவிகித உணவு (balanced diet), உடற்பயிற்சி அல்லது மிதமான நடைப் பயிற்சி, யோகா,வாழ்க்கை முறையில் மாற்றம், நிறைய தண்ணீர் குடித்தல் போன்ற அத்யாவசியமான சில வழிமுறைகளை, மாற்றங்களை பெண்கள் மேற்கொள்ள பழக வேண்டும்…

பெண்களானாலும் சரி ஆண்களானாலும் சரி பெண்ணின் உடலில் நிகழும் இந்த இயற்கை சுழற்சியையும் அதன் அறிகுறிகளையும் முழுமையாக புரிந்து கொண்டு அதனால் ஏற்படும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.. ஒரு பெண் ஓய்வெடுக்க விரும்புகிறாள் என்றால் அதற்கான வழிவகைகளை செய்து கொடுங்கள்.. நல்ல சுகாதாரமான ஆரோக்கியமான ஒரு வாழ்வினை மேற்கொள்ள இனியாவது முயற்சி மேற்கொள்ளுங்கள்…

2 thoughts on “வெட்கப்பட ஒன்றும்மில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *