விடாய் (எ) வாதை

பல அடுக்குகளாகப் பேச வேண்டிய தலைப்பு இது. அடுத்த வீட்டுப் பெண்ணின், நம் வீட்டுப் பெண்ணின் உணர்வுகளை முடிந்த வரை அனைத்தையும் தொட்டுப் பார்க்கும் முயற்சியில் இந்தக் கட்டுரையைத் தொடங்குகிறேன்.

முதலில் பெண்களின் ஒவ்வொரு காலகட்டங்களைப் பிரித்துக் கொள்வோம்

 1. பூப்பெய்துதல் முதல் திருமணம் வரையிலான படிப்பு, வேலை, உடல், உளவியல் சார்ந்த காலகட்டம். 
 2. திருமணம் முதல் வேலை, குழந்தைகள், குடும்பம், உடல், உளவியல் சார்ந்த காலகட்டம்
 3. குழந்தைகள் வளர்ந்த நிலையில் வேலை, உடல், குழந்தைகள் திருமணம்  உளவியல் சார்ந்த காலகட்டம். 
 1. பூப்பெய்துதல் முதல் திருமணம் வரை

ஒரு பெண் பருவ மாற்றங்களை சந்திக்கும் போது ஏற்படும் தடுமாற்றங்கள், ஆசைகள், விழிப்புணர்வு, உடல் சார்ந்த தூய்மை இப்படி ஒவ்வொன்றும் சவாலானவை. வயதுக்கு வந்த குழந்தைகளின்  மனநிலையைப் புரிந்து கொள்ள தனிப்பொறுமை வேண்டும். ஆணைப்போலன்றி பளிச்சென்று தெரிந்து விடுகிற அதிக மாற்றங்கள் அவளை சோர்வுறச் செய்யும் காரணிகள். ஆணுக்கு மீசை அரும்புதல் போல பெண்ணுக்கு மார்பகங்கள் பெரிதாதல் போன்றவை நிகழும் போது அவளும் மறைமுகமாக ரசிக்கத்தான் செய்கிறாள். இருந்தும் உடல் ரீதியாக ஏற்படும் மற்றொரு மாற்றமான மாதவிடாய் அவளுக்கு அசூயை, எரிச்சல், நமக்கு மட்டும் ஏன் இப்படி போன்ற பல உளவியல் சோர்வுகளைத் தருவதைத் தவிர்க்க முடிவதில்லை. 

அதனால் நிகழும் வயிற்றுவலி, அதிக உதிரப்போக்கு, ஆடைகளில் தெரிந்து விடக்கூடாது என்கிற பதட்டம் போன்றவை அந்த நாட்களில் ஒவ்வொரு பெண்ணும் சந்திக்கும் சங்கடங்கள். 

இது எதற்கு வருகிறது? முன்பு போல விளையாட முடியவில்லை? போன்ற பல கேள்விகள், சந்தேகங்கள் தோன்றுகின்றன. அந்த நேரங்களில் பள்ளிக்குச் செல்லப் பிடிக்காமல் இருப்பது, படிப்பில் நாட்டமற்று இருப்பது இதெல்லாம் செய்து கவனத்தை திருப்பி முரண்டுகளாக்குகிறாள். இது இயல்பு. அனைத்துப் பெண்களுக்குமானது. இதை ஒவ்வொரு பெண்ணும் சந்தித்தே கடந்தாக வேண்டும் என்று மெல்ல மெல்ல அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். தன்னுடைய இளமையின் தொடக்கமான ஆரவாரம் ஒரு புறம், குழந்தைமை தொலைகிற குழப்பம் ஒரு புறம் என்று மாற்றி மாற்றி நடக்கும்

ஊடாட்டங்களில் அவர்கள் உணர்வை நாம் புரிந்து கொண்டே ஆகவேண்டும். வேறு வழியே இல்லை. அப்போதெல்லாம் வயதுக்கு வந்த குழந்தைகள் மனநிலையைப் புரிந்து கொள்ள வாய்ப்பில்லை. அதைப்பற்றி பேசுவதே ஒரு தடுக்கப்பட்ட விஷயமாக இருந்ததது கூட உண்டு. இப்போது தாய்மார்கள் ஓரளவு நன்கு தன் குழந்தைகளிடம் பேச தயக்கமற்று இருக்கின்றனர். 

அவ்வயதில் ஒரு ஆணின் மீது  ஏற்படும் இனக்கவர்ச்சி, மாதவிடாய் காலங்களில் உடலைத் தூய்மையுடன் வைத்திருத்தல், குழந்தைப் பருவத்திலேயே குட் டச், பேட் டச், பருவ வளர்ச்சிகளைக் கண்டு மிரளாமல் இருத்தல் இப்படி எதைப் பற்றி குழந்தைகள் பேசினாலும் அதை காது கொடுத்து கேட்டு அவர்கள் கேரக்டரையே குற்றம் சாட்டாமல் அவர்கள் அனுபவங்களை கேட்க மட்டும் வேண்டும். தேவைப்படும் இடங்களில் மட்டும் இலேசான திருத்தங்கள் அறிவுரைகள் வழங்கலாம். முக்கியமான  விஷயங்களான இனக்கவர்ச்சி சார்ந்த விஷயங்களை, ஆண் நண்பர்கள் பற்றிய பேச்சுகள் வரும் போது அதைத்தவிர்க்கவோ அல்லது இந்த வயதில் இதெல்லாம் என்ன என்று மறுதலித்தால் நம் குழந்தைகள் சந்தேகங்கள் தீர்க்க வேறிடம் நோக்கி பயணப்பட்டு விடுவார்கள். 

இந்த வயதில் ஆண்கள் நடந்து கொள்ளும் விதம் பற்றி எந்த ஒளிவுமற்று பெற்றோரிடம் வந்து சொல்லிவிடும் படி குழந்தைகளிடம் சொல்லித்தான் ஆகவேண்டும். சில நேரங்களில் வயதின் குறுகுறுப்பு  காரணமாக ஆண் நண்பர்கள் செய்யும் சில்மிஷங்களை சொல்லாமல் கூட தவிர்ப்பார்கள். அது நாளடைவில் வேறு விதமான பிரச்சனைகளை தருவிக்கலாம் என்பது பற்றிய புரிதலை சொல்லி விட வேண்டும். 

ஆங்காங்கே நடக்கும் குற்றங்கள் பற்றி குழந்தைகள் கேள்வி கேட்டால் அதன் முழுக் கதைகளை பக்குவமாக சொல்லத் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் தினசரி ரொட்டீன்கள் மேல் ஒரு கவனம் வைத்துக் கொண்டே இருப்பது நாம் கடைப்பிடிக்க வேண்டியவற்றில் ஒன்று. நாம் எந்தத் தவறு செய்தாலும் பெற்றோர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்கிற எண்ணம் இருந்தால் தவறு செய்கிற குழந்தைகள் கூட நம்மிடம் சரணடைந்து மீள வழி தேடுவர். எப்படி இருந்தாலும் வயதின் கோளாறுகளை தாண்டுவது வரை நம் சாட்டைகளை சுழற்றாமல் கைகளில் அவளறியாது வைத்துக் கொண்டிருக்க வேண்டித் தான் ஆகிறது. 

போலவே உடல் சார்ந்த மாற்றங்களை கவனிக்க வேண்டியதும் இன்றியமையாததாகிறது. 

     1.திடீரென உடல் எடை கூடுதல்

     2. முடி உதிர்தல்

     3. முறையற்ற மாதவிலக்குகள்

( ஆரம்ப கட்டத்தில் பிரச்சினை இல்லை. ஆனால் பின்னாளில் தைராய்டு, பிசிஓடி ,ஃபைப்ராய்டு போன்ற பிரச்சனைகள் தோன்ற ஆரம்பிப்பது இக்காலகட்டத்தில் தான்.) 

அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த இந்த உடல் சார் பிரச்னைகள் இன்று பொதுவான வியாதிகள் என்கிற அளவில் வளர்ச்சி அடைந்திருக்கின்றன. 

 இதற்கான காரணிகள்

          1.மாறிவரும் உணவுப் பழக்கம். வெளியே தங்கி படிக்கும் இடங்களில், வேலை

செய்யும் இடத்தில் நேரமில்லை என்று ஜங்க் புட் அதிகமாக எடுப்பது. 

           2. உட்கார்ந்து மட்டுமே படிக்கும், வேலை பார்க்கும் சூழல்

            3. டயட் என்கிற பெயரில் டாக்டர் அறிவுரை இன்றி சரிவிகித சத்துணவு எடுக்காதது

            4. ஸீரோ சைஸ் பெல்லி மோகம்

            5.போதிய உடற்பயிற்சி இல்லாமை.

             6. அதிகப் படியாக எடை கூடுதல் அல்லது குறைதலை கவனிக்காமல் படிப்பு,

வேலை பற்றி மட்டும் சிந்தித்து இதில் கோட்டை விடுவது

              7.பெரு நகர நடுத்தர மக்கள் கூட திருமணத்திற்கு முன்பு தைராய்டு, பிசிஓடி 

போன்ற சோதனைகள் செய்ய முன் வராமல் இருப்பது… அதற்கு காரணம் இந்தப்

பொண்ணுக்கு என்ன பிரச்னையோவென மாப்பிள்ளை வீட்டில் நினைப்பார்கள்

என்கிற ஒரு வித பதட்டம். 

              8. வேலை பார்க்கும் இடங்களில் இருக்கும் ஸ்டெரஸ்.

இவை அனைத்திற்கும் சிகிச்சை முறைகள் வந்து விட்டன. இந்தத் தலைமுறை இளம்பெண்கள் தனது உடல் சார்ந்த அறிவை வளர்ப்பதோடு மட்டுமல்லாது பிரச்னைகள் வந்து விட்டால் அதற்கான தீர்வு நோக்கி நகர முன்வரவேண்டும்… அதுவே திருமணத்திற்குப் பிறகு வரும் குழந்தைப் பேறு பிரச்னைகளை சந்திக்க வேண்டிய தேவைகளைக் குறைக்கும். 

 1. திருமணம் முதல் மெனோபாஸ் ஆரம்ப கட்டம் வரை

**************************************************************************

நமது சமூக கட்டமைப்பின் பெரும்பான்மை திருமண பந்தத்தையே வலியுறுத்துகிறது. அதன் மூலம் ஏக சிக்கல்களை சந்தித்தாலும் அதற்கு மாற்றாக அதை விட சிறப்பான ஒரு சமூக அமைப்பை நம்மால் இன்னும் நிறுவ முடியவில்லை. அதனால் பெரும்பாலான பெண்கள் திருமண வாழ்க்கையைத் தான் தேர்ந்தெடுக்கின்றனர் என்பது காணக் கிடைப்பது. 

ஆயிற்று. திருமணம் முடிந்தவுடன் முன்பு போலல்லாது தனியே வசிக்கத் துவங்கி விட்டாலும் கலவி மூலம் உண்டாகிற ஹார்மோன் மாற்றங்கள், திருமணத்திற்கு பிறகு வேலைக்கும் சென்று விட்டு வீட்டு வேலைகளை பகிர்ந்தோ, பகிராமலோ செய்து விட்டு கிளம்புவது, இன்னும் குழந்தை இல்லையா ? என்கிற அரதப்பழையதான கேள்விகளை சந்தித்துக்கொண்டும், வேலை இடங்களில் நடக்கிற வேலை அரசியல், பாலியல் அரசியல் இவற்றை எல்லாம் எத்தனை பேரால் வெற்றிகரமாக கையாள முடிகிறது. அப்படிக் கையாள்கிற போது உருவாகிற அழுத்தங்கள் எத்தனை? அப்படி கையாண்டு விட்டால் அவளை நோக்கி வீசும் அம்புகள் எத்தனை? 

தினசரி வாழ்வில் எப்படி பார்த்தாலும் ஒரு ஆணும் பெண்ணும் தங்களுக்குரிய 

இன்பங்களை, பிரச்னைகளை சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். மறுப்பேதும் இல்லை. அதில் சில சதவிகிதமேனும் பெண்கள் கூடுதலாக சந்திக்கிறார்கள் எனில் பெண்கள் கொஞ்சம் உசத்தி தானே?

பெண்களின் பாலியல் அறிவு, பாலியல் தேவைகள், சுதந்திரம், பங்கு  என்று இதிலும் பல தளங்களில் பயணிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இரண்டு வரிகளில் பொத்தாம் பொதுவாக கடக்க முடியாத எத்தனை விஷயங்கள் ஒளிந்து கிடக்கிறது பொதுமைகளின் முன்னால். 

இன்று பெண்கள் அவரவர் நினைக்கும் எதுவுமே நடத்திக் கொள்ள முடியும் என்று ஓங்கி ஒலிக்கும் நிலைக்கு வந்துவிட்டதாக நீங்கள் கேட்கலாம்? 

முட்டிச் சண்டையிடலாம்? குறைந்த சதவிகிதங்கள்,  விதிவிலக்குகள் எப்போதும் வெற்றியின் அர்த்தமல்ல. பெரும்பாலானவை மட்டுமே நமது இலக்கு. இள, நடுத்தர, முதிர்ந்த பெண்கள் அனைவரையும் கருத்தில் கொண்டு எழுதவதே இதன் நோக்கம். 

நமது பாட்டிகள் தலைமுறை, நமது அம்மாக்கள் தலைமுறை, நமது தலைமுறை இந்தக் கால இடைவெளியில் பயணிப்பது இந்தக் கட்டுரைக்கு அவசியமானதாகிறது. 

நமது பாட்டிகள், அம்மாக்கள் தலைமுறையில் பாலியல் அறிவு என்பது பற்றிய யோசனைக்குக் கூட பெரும்பாலும் இடமில்லை. அது ஆணுக்கான இயற்கை உந்துதல். கூட்டுக் குடும்பங்களில் பிரயத்தனம் செய்து சந்திக்கற போது பெரும்பாலும் ஆண் திருப்தி அடைந்தவுடன் விலகியாக வேண்டிய கட்டாயம் இருந்திருக்கிறது. உணர்வுகளால் தூண்டப்பட்ட பெண் என்ன செய்திருப்பாள்? குளித்து விட்டு மூக்கைச் சிந்தியிருப்பாள்! வறுமையில் அடக்கிக் கொண்டு பசியோடு கிடப்பவனைப் போல தேவையைச் சுருக்கி மறைத்திருப்பாள். தன் ஆசையைச் சொல்ல கூச்சமும் வெட்கமும் கொண்டு பரிதவிப்பை மட்டுமே சொத்தாகக் கொண்டிருப்பாள். எங்கேனும் ஒன்றிரண்டு பெண்கள் கணவனுடன் நன்றாக இருப்பது கண்டு பொறாமையுற்றிருப்பாள், வெந்து தணிந்திருப்பாள். மிக அதிகமாக இதற்கான சாத்தியக்கூறுகளே அதிகம்.

அப்போது முதல் இப்போது வரை குறைந்த பட்சம் திருமண வாழ்வில் தானே ஆசை கொண்டு கணவனிடம் வரும் பெண்ணை எவ்வளவு ஏளனமாக நோக்கியிருக்கிறார்கள்? அப்படி வருகிறவர்களின் கற்பை எப்படி விமர்சிக்கிறார்கள்? அவளை அசூயையாக பார்த்திருந்த மனங்கள் எத்தனை? அந்தப் பார்வைகளால் துணுக்குற்று தன் தேவையைக் கடமையாக மாற்றிக் கொண்டவர்கள் எத்தனை பேர்? ஒரு ஆணைப் போலவே ஒரு பெண்ணுக்கும் பாலியல் ஆசைகள் உண்டு என்பதை ஏற்க மறுக்கும் பொதுப்புத்திகள் எத்தனை? அவளது கேரக்டரையே சிதைக்கும் குரூரங்கள் எத்தனை? இதெல்லாம் இல்லை என்று மட்டும் சொல்லச் சொல்லுங்கள் பெண்களை. பலர் வெளியே சொல்வதே இல்லை என்பது தான் உண்மை. விதிவிலக்குகளைக் கணக்கில் எப்போதும் எடுக்கவே முடியாது ஆணோ, பெண்ணோ. 

பாலியல் சங்கதிகள் இப்படி இருக்க ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் அற்புதத்தை இயற்கை அவளுக்கே வழங்குகிறது. அந்த நாட்களில் ஏற்படும் உடல் மாற்றங்கள், மன மாற்றங்கள் என்று எப்போதும் ரோலர் கோஸ்ட் வாழ்வில் தான் பெண் ஏறி ஏறி இறங்கிய படியே இருக்கிறாள். குழந்தை பிறப்பைத் தள்ளிப் போடுகிறார்கள் என்று ஒரு சாரார் கிளம்பலாம். வேலைக்குச் செல்ல வேண்டும்.. வருமானம் கிடைக்க வேண்டும், வேலைகளைப் பகிர ஆட்களை முழுவதுமாக நம்ப முடிவதில்லை, குழந்தை பிறந்தால் பார்த்துக் கொள்ள, பிரசவ விடுப்பு, தூக்கமற்று கண்விழிப்பது என்று சராமரியான மாற்றங்களை சந்திப்பவர்கள் குழப்பத்தில் தவிக்கிறார்கள். குழந்தை பெற்றுக் கொள்வதால் அழகு கெட்டு விடும் என்று நிறுத்துகிறார்கள் பெண்கள் என்கிற விஷயத்தில் பர்சனலாக எனக்கு உடன்பாடு இல்லை… எல்லாரும் அப்படி நினைப்பதுமில்லை. பெரும்பான்மை பெரும்பான்மை என்று நான் கூறுவது அதற்காகத்தான். 

குழந்தை பிறந்த பிறகும் வளர்ப்பில் முந்தைய தலைமுறை அளவு இல்லை என்றாலும்

அதிகமான பங்கு அவளுக்கே இன்னும் இருக்கிறது. பரவலான மாற்றங்கள் நிகழ்ந்தாலும் முழுமையான மாற்றங்கள் நிகழ வேண்டும் என்பதையே நானும் விரும்புகிறேன். 

மெனோபாஸ் ஆரம்பத்தில் இருந்து

**********”************************************

மாதவிடாய் சுழற்சி நிற்கும் வரை

********************************************

குடும்பத்திற்காக உழைக்கும் ராட்சத சுழற்சியை விட மாதவிடாய் சுழற்சி நிற்கும் காலத்தில் ஒரு பெண் அதீத சோர்வுக்குள்ளாகிறாள். 

அதற்கான முக்கிய காரணிகள்

 1. குழந்தை பிறப்பால் உருவான உடல், ஹார்மோன் மாற்றங்கள்
 2. குடும்பத்துக்காக, குழந்தைகளுக்காக போடும் உடல் உழைப்பு
 3. மாதவிடாய் சுழற்சிகளில் ஏற்படும் சிக்கல்கள். அதீத ரத்தப் போக்கு, வெள்ளைப் பாடு போன்ற பெண்  இயற்கையாக சந்திக்கும் சிக்கல்கள்
 4. தன்னுடைய இளமை வாழ்வு பறிபோகும் விரக்தி
 5. வளரிளம், வளர்ந்த குழந்தைகளுடன் ஏற்படும் மனத்தாங்கல்கள், தனக்கென யாரும் இல்லை என்கிற பதட்டம்
 6. குழந்தைகளின் வளர்ப்பில் காணாமல் போய் விட்டதாக நினைக்கும் தங்களின் பழைய ரொமான்ஸ் வாழ்க்கை, கணவனிடம் தோன்றும் சிறுவிலகல், இளமை குறைவதால் தற்காலிகமாக ஒதுக்குகிறானோ என்கிற பயம்
 7. குழந்தைகள் கல்லூரி, திருமண தேர்வுகளில் ஏற்படும் அயற்சிகள்.
 8. பூப்படைந்த நாள் முதல் உடல் ரீதியான தொந்தரவுகளுக்கு ஆளானவள் வயதாவதன் காரணமாக ஏற்படும் மன எரிச்சல் தாளாமையாக உருவெடுப்பது. 
 9. திடீர் திடீரென மாறும் சுழற்சியால் பொது இடங்களுக்கு செல்ல முடியாது தவித்தல். 
 10. இப்படியான உடல் மனச் சிக்கல்களால், பிரைவசி குறைவதனால் குறையும் தாம்பத்ய செயல்பாடுகள்
 11. கலவியில் பங்கேற்க நேரும் போது ஏற்படும் வஜைனல் உலர் சிக்கல்கள், அதற்கான சிகிச்சைகள், கர்ப்பப்பை சார்ந்த சிகிச்சைகள் என்று அடுக்கடுக்கான பிரச்னைகளில் குவிந்து வெடித்தல். 

மெனோபாஸ் ஆரம்பத்தில் இருந்து சுழற்சி முடியும் வரை குடும்பத்தினரின் உதவி இல்லை எனில் பெண் மேலும் சிதைந்து போவாள். இந்தக் காலகட்டத்தில் அவள் சந்திக்கிற பாலியல் வதைகள் எண்ணிலடங்கா. 

தனக்கென உருவாக்கும் மீ டைம்ஸ்,  முறையான மருத்துவ ஆலோசனைகள், பிரத்யேகமாக கணவனிடம் செலவழிக்கும் நேரங்கள் (கணவன் இருப்பின்) என்று தன்னை திசைதிருப்பிக் கொண்டால் மெனோபாஸ் பிரச்னைகளை எளிதில் கடந்து விடலாம்.
மாதவிலக்குக்கான முன்பின் நேர்கிற எண்ணச்சுழற்சிகளை புரிந்து கொண்டு அவளை நடத்தும் குடும்பங்களில் (கணவன், மகன் என்று எந்த உறவென்றாலும்) பெண் இன்னும் அற்புதமாகச் செயலாற்றுவாள் என்பது மட்டும் திண்ணம்.

2 thoughts on “விடாய் (எ) வாதை

 1. பெண்களை விட ஆண்கள் அதிகம் படிக்க வேண்டிய விஷயம் இது…

 2. மகிழ்ச்சி🎊மிகவும் அருமை🎈சிறப்பு❤️ அற்புதம் 🎊ஆனந்தம் 🙂 நல்💯வாழ்த்துகள்🎊

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *