வாழ்க்கை சொல்லும் வழியில் பயணிப்போம்.

திரைகடலோடியும் திரவியம் தேடு என்பது தமிழனின் பழமொழி, அன்று செல்வம் சேர்ப்பதற்காக தன்படை பலத்தின் துணை கொண்டு உலகின் பெரும்பகுதியை தமிழன் ஆண்டான் என்பது வரலாறு.

வெளிநாட்டில் குடியேற வேண்டும் என்ற எண்ணம் நிறைய பேருக்கு இருந்த காலம் அது. கணினி அறிவியல் மற்றும் பொறியியல் பட்டம் பெற்ற எனக்கு வாழ்வில் மிகப் பெரிய கனவுகளின்றி என் கல்லூரிப் படிப்பை முடித்தேன். திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த பெண்ணாகிய நான் பெரும்பான்மையினரைப் போல பட்டிணப் பிரவேசம் செய்து தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை மாநகரத்தை அடைந்து ஒரு உயிரூட்டுதல் (அனிமேஷன்) நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தேன்.

செப்டம்பர் 9/11 உலக வர்த்தக நிறுவனம் தரை மட்டமான பிறகு, நான் வேலை செய்த நிறுவனம் மூடபட்டதால், வேறு வேலை தேடும் நிலை ஏற்பட்டது. பொருளாதார தேவைகளுக்காக வேலை தேடினேன். அரபு நாட்டில் ஒரு புத்தக விற்பனை நிறுவனத்தில் அலுவலக வேலை கிடைத்து என் முதல் வெளிநாட்டுக் பயணத்தைத்  தொடங்கினேன். அங்கு அலுவலக வேலையுடன் புத்தக விற்பனை செய்த குடும்பத்திற்கும் குழந்தைகளுக்கும் புத்தகத்தை படிக்கும் விதத்தை விளக்கும் செயல்முறை வேலையும் எனக்கு கொடுக்கப் பட்டது. பல நாட்டுக் குழந்தைகளுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. என்னுடைய இன்றைய ஆஸ்திரேலியா வாழ்க்கைக்கு அதுவே அஸ்திவாரமானது.

அங்கு குழந்தைகள் எதைப் படித்தாலும் மனப்பாடம் செய்யாமல் அர்த்தம் புரிந்து படிப்பதைப் பார்த்து வெளிநாட்டில் குழந்தைகளை படிக்க வைக்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.  திருமணம் முடிந்தவுடன் 2008ம் ஆண்டு ஆஸ்திரேலியா விசாவுக்கு விண்ணப்பித்தோம்.

என் கணவருக்கு கத்தாரில் 2011ல் வேலை கிடைத்ததால் நாங்கள் 2013 முதல் 2014 வரை கத்தாரில் இருந்தோம். ஆஸ்திரேலியாவின் கடுமையான குடியேற்ற விதிகளால் எங்களுக்கு 2013 இல் தான் விசா கிடைத்தது.என் மகன்களின் படிப்பு இங்கு தொடங்க விரும்பி படிப்பதற்காக நாங்கள் ஆஸ்திரேலியா வந்தோம்.

என் கணவர் கத்தார் அரசாங்கத்தில் அவரின் திறமைக்கு சவாலான வேலை புரிந்ததால் அதை இழக்க மனமின்றி நான் என் மகன்களுடன் முதலில் வந்தேன். பயம் ஒருபுறம் இருந்தாலும், தைரியமாக வளர்ந்ததாலும், என் கணவர் கொடுத்த ஊக்கத்தாலும் ஆஸ்திரேலியா தலைநகர் கான்பராவில் என் கல்லூரித் தோழி வீட்டின் அருகில் வாடகைக்கு வீடு எடுத்தோம்

வீடு கிடைப்பது மிகவும் சிரமமாகத்தான் இருந்தது. எனக்கு வேலை கிடையாது.8 வயது மற்றும் 4 வயது மகன்கள், சிறு குழந்தைகள் அதிகம் குதிப்பார்கள் என்று நிறைய பேர் எங்களுக்கு  வீடு கொடுக்கவில்லை. என் தோழிக்கும் மிகவும் சிரமம் கொடுப்பதாக தோன்றியது. நாங்கள் வந்த நேரம் கடும் குளிர்காலம். முதல் குளிர்காலம் மிக கடினமாக இருக்கும். என் கணவர் கத்தாரில் இருந்து அனுப்பும் பணத்தில் பார்த்து பார்த்து செய்ய வேண்டி இருந்தது . என் தேவைகளைக் குறைத்து கொண்டு யாரிடமும் உதவி கேட்கக் கூடாது என்று வாழ்க்கையை ஒரு வைராக்கியத்துடன் தொடங்கினேன். என் தோழி எனக்கு ஒரு ஊன்று கோலாய் இருந்தாள் என்பதை நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன்.

நான் இருந்த முதல் வீட்டின் கீழே முதியவர் இருந்தார்.நம் ஊரில் உள்ள வீடுகள் போல் செங்கல் கட்டிடம் கிடையாது,மரத்திலான தளம் தான். வேகமாக நடந்தால் அவருக்கு இடி இடிப்பது போல இருக்கிறது என்று கண்டிப்பார்.அவருக்குப் பயந்து நானும் மகன்களும் மாலை முழுவதும் வெளியே விளையாடுவோம்.

வளர்ந்த நாடுகளுக்கும் நமது நாட்டுக்கும் உள்ள வேறுபாட்டை நான் ஆஸ்திரேலியாவில் கண்டேன். எனக்கு வேலை இல்லாததால் அரசாங்கம் நாங்கள் வாழ்வதற்கு மாதம் மாதம் பண உதவி செய்தது.

இங்கு அனேக மக்கள் அரசாங்க பள்ளியில் தான் படிக்கிறார்கள்.சரியான திட்டமிட்ட பாடத்திட்டம் உள்ளது.வாழ்க்கைப் பாடத்தை சிறு வயதிலிருந்தே கற்றுக் கொள்கிறார்கள்.குழந்தைகளுக்கும் அவர்கள் உணர்வுகளுக்கும் முக்கியத்தனம் கொடுக்கப் படுகிறது.அவர்கள் கற்றுக் கொள்வதை தெளிவாக விருப்பத்துடன் கற்றுக் கொள்கிறார்கள். இங்கு மக்கள் பெரும்பாலும் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கிறார்கள். உதவி மனப்பான்மை கொண்டவர்கள் அதிகம். வருடத்தின் எந்த நாளிலும் குழந்தைகளுக்கு பள்ளியில் விண்ணப்பிக்கலாம். அனைத்து வசதிகளும் அரசு பள்ளியில் உள்ளது. நான் என் இரு மகன்களையும் அரசு பள்ளியில் தான் படிக்க வைத்தேன்.

நான் பார்த்து ரசித்தது ஆஸ்திரேலியா குழந்தைகள் சிறு வயதிலிருந்தே தன் வேலைகளைத் தானே செய்து கொள்ள பெற்றோர்களால் பழக்கப்படுத்தப் படுகிறார்கள். அவர்கள் சிறு வேலை செய்தாலும் அதை ஊக்குவிக்கும் பொருட்டு அவர்களுக்கு சிறு நாணயம் அல்லது பணம் கொடுக்கப் படுகிறது.அதை அவர்கள் சேமித்து வைத்து தங்களுக்குத் தேவையானவற்றை வாங்கிக் கொள்கிறார்கள்.

நான் கற்றுக் கொண்ட சில விஷயங்கள் குழந்தைகள் கூறுவதைப் பெற்றோர்கள் காது கொடுத்துக் கேட்க வேண்டும். சில விஷயங்கள் வேண்டாம் என்றால் குழந்தைகளுக்கு புரியும்படி சொன்னால் குழந்தைகள் ஏற்றுக் கொள்கிறார்கள். 

இங்கு பலர் கல்லூரி படிப்பை முடிக்கவில்லை என்றாலும் பெரிய பதவியில் இருக்கிறார்கள். திறமை எங்கு இருந்தாலும் மதிக்கப்படுகிறது. குழந்தைகளும் படிப்பு போக விளையாட்டு,கலை,இசை,சமையல், மர வேலை,இரும்பு மற்றும் பல துறைகளை தன் உயர்நிலை பள்ளியிலே பழகிக் கொள்கிறார்கள். படிப்பு மட்டும் இங்கு பிரதானமாக இருப்பதில்லை. பல திறமைகளை சிறு வயதிலேயே கற்றுக் கொள்கிறார்கள். படிப்பு அழுத்தம் இல்லாததால் பல குழந்தைகள் தங்களுக்குப் பிடித்தத் துறையைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

நான் இங்கு வந்து 10 வருடம் ஆகப் போகிறது. ஒரு தெளிந்த நீரோடை போல வாழ்க்கைப் பயணம் செல்கிறது. என் பெற்றோரை பக்கத்தில் வைத்துப் பார்த்துக் கொள்ளமுடியவில்லை என்ற ஏக்கம் எனக்கு எப்போதும் உண்டு. தமிழ்நாட்டில் சொந்த பந்தங்களின் திருமணம் மற்றும் பல நல்ல நிகழ்வுகளைக் காணும் பாக்கியமும் கிடைப்பதில்லை. 

நான் என் சிறு வயதில் ஆசைபட்ட பலவற்றை இப்போது கற்கும் வாய்ப்பு கிடைக்கிறது. பாட்டு,திருப்புகழ்,நடனம்,தமிழ் கற்றுக் கொடுக்கும் வாய்ப்பு,அனைத்தும் கிடைத்தன. இங்குள்ள குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக் கொடுக்கும் வாய்ப்பு கிட்டியதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். இங்கு வேலை செய்வதால் தான் பொருளாதார ரீதியாக நம் நாட்டில் உள்ள சொந்த பந்தங்களுக்கு உதவி செய்யும் பாக்கியம் கிடைக்கிறது.

குழந்தைகள் இருவரின் திருமணத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில் என் சொந்த பந்தங்களுடன் வாழ்வைக் கழிக்க வேண்டும் என்பது இப்போதைய முடிவு. காலம் எனக்கு என்ன முடிவை வைத்திருக்கிறது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்,அது வரை வாழ்க்கை சொல்லும் வழியில் பயணிப்போம்

3 thoughts on “வாழ்க்கை சொல்லும் வழியில் பயணிப்போம்.

  1. அழகான இனிதான வாழ்க்கை, தேட தேட தெளிந்த நீரோடையாக ஓடிக்கொண்டிருக்க வாழ்த்துக்கள்!

  2. Congratulations Thilaks! Thanks for sharing your journey! It is indeed inspiring! Wishing you the very best always!

  3. மிகவும் அருமையான பதிவு, நானும் உங்களோடு சேர்ந்து சிலகாலம் சென்னையில் பணியாற்றியது மிகவும் அருமையான தருணம், உங்களுடைய கனவுகள் மென் மேலும் நினைவாக என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *