வலைத்தொடர்களில் திரளும் மனித நேரம்

தைகளாலானது இவ்வாழ்வு. மனித இனத்தின் சார்புடைய உலகமும் அதுவே. தொல்குடியான வேட்டை சமூகமாக பரிணமித்தபோதே கதைகளின் முக்கியத்துவத்தை வாழ்வோடு பிணைத்துக்கொண்டுவிட்ட இவ்வினத்தின் தொடர்ச்சியில் நாம் இங்கே இருக்கிறோம். பல்வேறு அழிவுகளுக்குப் பின்னும் அவற்றின் அனுபவங்களை பிறரோடு பகிர்ந்துகொள்கிற பழக்கம், தகவல்களைக் கடத்துகின்ற உத்திகளின் வழியாக பல நூறு ஆண்டுகள் கழிந்துவிட்ட தற்போதைய நிலையிலும்கூட நாளது தேதி கணக்கின்படி நமது அனுபவங்கள் பன்முகத்தன்மையோடு செழித்துக் கொண்டிருக்கின்றன.

தொழில்நுட்பங்கள் நம்மை பன்படுத்தத் தொடங்கி நூறு ஆண்டுகள் ஆகின்றன. அவற்றினூடே, நாகரிகம் என்கிற மனித வளர்ச்சிப் போக்கில் பின்பற்றி பேணவேண்டிய எளிய கலாச்சார விழுமியங்களோ அல்லது அவை கைவிடப்பட நேருகின்ற காரணச் சூழல்களோ முக்கியத்துவம் பெறுகின்றன. நம்முடைய ஒற்றைப் பயன்பாட்டினைக் கடந்த உபரி பொருள் உற்பத்தியோ அவற்றின் பெருக்கமோ சமூகப் பயன்பாட்டோடு பிணைக்கப்பட்டுள்ள கண்ணியின் நுணுக்கம் கவனத்துக்குட்படுத்தப்பட வேண்டிய ஒன்றாகும். செல்வங்களை பங்கிட்டுக்கொள்வதில் தொடங்கி லாபத்தை பிரித்தெடுத்துக் கொள்வது வரையிலான விநியோக அடுக்குகளை காலம்காலமாக மாற்றிக்கொண்டே வந்திருக்கிறோம். ஓர் அமைப்பு இன்னோர் அமைப்பை விரல் சுட்டிக் காட்டுவதற்கான காரணங்களை அரசியல் என்கிற மூல இயந்திரத்தோடு பெட்டி பெட்டியாக இணைத்துவிடலாம்.

இவை அனைத்திற்கும் கதைகளே அடித்தளம். அவற்றை வெவ்வேறு பாணிகளில், வடிவங்களில் மற்றும் உத்தி ரீதியாகவும் உருவாக்குவதில் மனித இனம் படிப்படியாக நன்கு தேர்ச்சி அடைந்துள்ளது.

கேமரா என்கிற தொழில்நுட்ப கருவியின் அடிப்படை பயன்பாடு என்பது அசைவுகளை பதிவு செய்வது (Documenting the moments) மட்டுமே. ஆனால், எந்தமாதிரியான அசைவுகள்?

த்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கி இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திற்குள்ளாகவே அதற்குரிய முக்கியத்துவத்தை அது எட்டியிருந்தது. முதன்மையாக கேமராக்கள், உலகப்போர் நிகழ்வுகளின் பதிவுகளுக்காக வெவ்வேறு விதங்களில் பெரிதும் பயன்பட்டன. அவற்றின் படப்பதிவுகளை இன்றும் நாம் காண்கிறோம்.

அப்போதைய சவாலாக இருந்தது ஒலியையும் கேமராவில் பதிவு செய்வ வேண்டியிருந்ததுதான். ஒளிப்படம் மட்டுமே என்பது மாறிப்போய் Sound Synchronization, சாத்தியமான இடத்தில் ஒளிஒலி படங்களாக பதிவாகின. அதற்கும் முன்னதாக பேசாப்படங்களிலேயே கேமரா வழியே கதை சொல்ல முடிந்தது. Documenting the moments-ஐ அடுத்து நாம் அவ்விடம் நோக்கி நகர்ந்துவிட்டோம்.

உலகப் போருக்கு பிந்தைய காலத்தில் கைக்கு அடக்கமான Home movie Cameras பொதுமக்களுக்கு கிடைக்கத் தொடங்கின. சுயாதீன சிறு படங்கள் அததற்குரிய சிறிய எல்லைகளுக்குள்ளே அவற்றுக்கான குறைந்த பார்வையாளர்களுக்காக உருவாகத் தொடங்கின. அப்பார்வையாளர்கள் பெரும்பாலும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களாக இருந்தனர். மிஞ்சிப் போனால் அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் அவற்றின் கூடுதல் பார்வையாளர்களாக இருந்திருக்கலாம். ஆனால், உள்ளடக்கத்தின்படி ஒரு சிறுகதைத்தன்மையை எட்டிவிடும் எத்தனிப்புகூட அவற்றிற்கு கிடையாது. பதிவானவை அனைத்தும் சுவாரஸியமான சிறு நிகழ்வுகள், இயற்கை அவதானிப்புகள், மனித நடத்தைகள் என எடிட்டிங்கில் கோர்க்கப்பட்ட தொகைப்படங்கள் மட்டுமே.

புதிதாக உருவாகியிருந்த மக்கள் ஈர்ப்பின் மீது, வியாபார மூளைகள் கவனம் செலுத்தும்போது அவை, படத்தயாரிப்பு என்கிற நிறுவனமயமாக்கப்பட்ட வரம்பிற்குள் அடங்கிடத் தொடங்கின. அங்கே, மூலதனம்-உழைப்பு-உற்பத்தி-பட விநியோகம்-லாப நஷ்ட கணக்குகள், என ஒரு செயல்வரிசை உருவானது. மக்களைப் பொறுத்தவரை சினிமா பார்க்க திரையரங்குகளுக்கு போவது என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டும் அல்ல, சினிமா என்கிற புதிய தொழில் உத்தியின்மீது இருந்த பிரமிப்பும்கூட. அதுவே இன்றைய வீச்சிற்கான அன்றைய காரணங்களில் ஒன்று. 

குறைந்த எண்ணிக்கையிலான பார்வையாளர்களின் மாதிரிகளைக் கொண்டு மெகா சைஸ் பார்வையாளர்களை உருவாக்கவும் கவர்ந்திடவும் முதலாளிய மூளைகள், நான் நீயென்று போட்டி போட்டுக்கொண்டு வேகமெடுத்தன. அதனால், பல ஸ்டுடியோக்கள் உருவாகின.

பேசாப்படங்கள் கதைகளைக் காட்டின. சினிமா என்கிற அடிப்படை பதம், அதனை செவ்வனே செய்தது. காட்சிகளின் வழியே கதையை சொல்லுவதற்கு சினிமா பல உத்திகளை உருவாக்கியது. அதற்கு பலதரப்பட்ட பங்களிப்புகள் உலகெங்கும் உள்ளன. வெறும் கதைகள், திரைக்குரிய கதைகளாக வடிவமைக்கப்பட்ட விதத்தில் நேரக்கணக்கிடுதலின் முக்கியத்துவத்தை ஒரு தொழில்நுட்பம் தம்முடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தது என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

இன்றைய டிஜிட்டல் யுகத்திலும் அதன் முக்கியத்துவம் தவிர்க்கவியலாதது. Celluloid என்கிற Film Strip இல்லாமல் போய் கணினியின் ஹார்ட் டிஸ்குகள் வந்துவிட்டாலும், அன்றைய சினிமாட்டோகிராபியின் அடிப்படைகளோடு தொழில்நுட்ப மாற்றம் செய்யப்பட்டுள்ள வடிவம்தான் இன்றைய டிஜிடல் கேமராக்களின் சினிமாட்டோகிராபி.

ஒரு நொடிக்கு இருபத்திநான்கு ஃபிரேம்கள் (24 frames per second) என்கிற மெக்கானிஸ கணக்கில் மாற்றம் இருக்கப் போவதில்லை. அப்படியென்றால் மட்டுமே கதாபாத்திரங்கள் திரையில் வசனங்களைப் பேச முடியும்.

நொடியைக் குறித்து பேசுகிறோம் எனும்போதே அது நிமிடங்களைக் குறித்ததாகவும், மணி நேரங்களைக் குறித்ததாகவும் உள்ளது. ஒரு முழுநீளத் திரைப்படம் என்பது முன்பு ஃபிலிம்களின் அடிக்கணக்கு அல்லது மீட்டர் கணக்கு. அவற்றை ரீல்களாகப் பிரித்து கேன்களில் அடைத்து திரையரங்குகளுக்கு அனுப்பிக்கொண்டிருந்தோம். எந்தக் கோணத்தில் சொல்வதாக இருந்தாலும், இவை அனைத்துமே மணித்துளிகளின் கணக்குத்தான். அதைப் பொறுத்துதான் நாள் ஒன்றிற்கு அரங்குகளில் எத்தனைக் காட்சிகளைத் திரையிடலாம் என்கிற கணக்குவரை வியாபாரத்திற்குரிய முடிவுகள் திட்டமிடப்படும். அதனையொட்டிதான் எத்தனை நீளமான படத்தைத் தயாரிக்கலாம் என்கிற கணக்குகளோடு, அதற்கேற்ப திரைக்கதைகளும் எழுத்தப்படும்.

காலமாற்றத்தில், டிஜிடல் முறை படப்பிடிப்புகளோ திரையிடல்களோ வந்தபிறகு ஃபிலிம்களின் அடிக்கணக்கிற்கு வேலையில்லாமல் போயிற்று. நேரிடையாகவே எத்தனை நிமிடங்கள் திரையில் ஓடக்கூடிய படம் என்கிற அளவு ஒரு கட்டுப்பாட்டிற்கும் வந்தாயிற்று.

ங்கும் மணித்துளிகளின் முக்கியத்துவத்தையே மறைமுகமாக பார்வையாளர்களிடம் கோருகிறோம். அவர்கள், தங்களின் அன்றாடத்திலிருந்து (இருபத்திநான்கு மணிநேரக் கணக்கில்) ஒரு திரைப்படத்திற்கென எத்தனை மணிநேரங்களைத் தரத் துணிவார்கள்? அல்லது அவர்களைத் தர வைக்கலாம் என்கிற வியாபார நோக்கு இதன் பின்னணியில், ஒரு படத்தயாரிப்பிற்கான அஸ்திவாரமாக உள்ளது. ஏனென்றால் அது பொருளாதாரம் சம்பந்தப்பட்டது. பொருளை செய்பவன்-விற்பவன்-வாங்குபவன் என்கிற வழக்கமான மும்முனைச் சந்தை அம்சம் கொண்டது.

கொரோனா நோய்த்தொற்று (COVID-19) காலத்திற்கும் முன்னதாகவே இன்டர்நெட் என்கிற இணையத்தொழில்நுட்பம் கடந்த இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக உலகெங்கிலும் தொழில்ரீதியாக பல விஷயங்களை மாற்றியமைப்பதன் வழியாக பொதுசமூக நுகர்வை பன்முகத்தன்மையோடு சாத்தியப்படுத்திவிட்டது.

போலவே, நாம் கதைகளைப் பார்க்கும் முறைகளும் ஏகத்திற்கு மாறிவிட்டிருந்தன. புத்தக வாசிப்பு பழக்கம், திரைப்படங்களைப் பார்க்கும் பழக்கம் என இரண்டின் வடிவங்களும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் பரிணமித்துள்ளன. Computer Desktop, Laptop, Kindle, Tablet, Android Mobiles என டிஜிடல் திரைகள் கையடக்க வடிவத்திற்கு மாறும்போது வாசிப்பு பழக்கமும், வீடியோக்களைப் பார்க்கும் பழக்கமும் நம்முடைய நேரத்தை நம்மை மீறி கையாளத் தொடங்கின. அதனைத் தவிர்க்கவியலாத இடத்திற்கு கொரோனா தொற்றுக்காலம் எல்லோரையும் கொண்டுபோய் நிறுத்தியது.

ஒரு பொழுதைப் போக்குவதற்கு வேறெங்கோ கிளம்பிப் போகவேண்டியதில்லை. அதற்கான சாதனங்கள் நம்மை வந்து எளிதாக அடைந்துவிட்டன. இவற்றுக்கெல்லாம் முன்னோடியாக வந்தவைதான் Home Theatre setups. பிறகு, சாதாரண மக்களின் நுகர்வுக்கும் அவை இரண்டாம்தரம் எனக் குறிப்பிடப்படுகின்ற கள்ளச் சந்தைகளில் சல்லிசாக கிடைத்தன. அதனையொட்டி பார்வையாளர்களின் அளவு அப்போதே பெருகிவிட்டது என்பதே உண்மை.

மேக்னேடிக் கேசட்டுகள் வழக்கொழிந்து, டிஜிடல் வட்டத் தகடுகள் வழக்கொழிந்து பின்னர், தற்போது எந்த வீடியோவையும் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். அவற்றை நம் உடையிலுள்ள பாக்கெட்டுகளிலேயே பத்திரப்படுத்திக்கொள்ளலாம் என்னும் அளவிற்கு சிறிய வடிவங்களில் நாம் பலமணி நேரங்களைச் சொந்தமாக்கிக்கொள்கிறோம். அவற்றைச் செலவிட நமது அன்றாடத்தின் இருபத்திநான்கு மணிநேரத்தை நமக்கேற்றபடி உடைத்து வைத்துக்கொள்ள வேண்டியது மட்டுமே பாக்கி.

விற்பனை எப்போதோ முடிந்துவிட்டது. தரவிறக்கம் செய்யும்போதே வியாபாரம் நடந்தேறிவிட்டது. நுகர்வாளர்/பார்வையாளர் எப்போதோ ரெடி.

மேம்பட்ட தொழில்உலகம் எதிர்காலப் பார்வையாளர்களைக் குறிக்கோளாகக் கொண்டுதான் அன்றைய காலத்தில் இயங்கத் தொடங்கின என்பதை அப்போதே அவதானித்திருக்கக்கூடிய எந்தவொரு சாமானியனும் ஓர் அரிய உயிரியாக மட்டுமே இருந்திருக்க முடியும். அவனுடைய மைனாரிட்டி குரல் எந்த சபையிலும் எடுபட்டிருக்காது. அதேவேளை, இன்றைய நிலையை எவரும் தவிர்க்கவும் முடியாது. (இதுபோலத்தான் வருங்காலமும்)

●●●

ரு கதைப்படைப்பின் நீளத்தைக் குறித்துத்தான் பேச விழைகிறோம் என்றால், ஒன்றரை மணி நேரத்திலிருந்து இரண்டரை மணி நேரத்திற்குள் சொல்லி முடிந்திடாத அளவுள்ள திரைக்கதைகளுக்கு மாற்று வடிவமாக முன்னர் வீடியோ தொடர்களைத் தொலைக்காட்சிகள் உற்பத்தி செய்தன. அது, இங்கே வாரப் பத்திரிகைகளில் தொடர்கதைகள் வாசிக்கும் பழக்கமிருந்த பழைய வாசகர்களை குறிவைத்து தயாரிக்கப்பட்டவை. பிறகு, வாரத்தொடர்கள் தொலைகாட்சியில் ஒளிப்பரப்பாகின. அதுவே பிறகு, தினத்தொடர்களாக உருமாற்றம் அடைந்து பெருகின. இன்றளவிலும் அவற்றிற்கு நம் நாட்டில் பரவலான பார்வையாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு அவை தயாரிக்கப்படுகின்ற தரம் பற்றின அக்கரையோ புகார்களோ இருப்பதில்லை. கதைகள் மட்டுமே அப்பார்வையாளர்களின் திருப்தியாகும்.

ஆனால், திரைப்படத்திற்கு மாற்றான வலைத் தொடர்கள் (Web Series) முற்றிலும் வேறு வகையறாவாகின்றன. ஆங்கிலத் தொடர்களாக வெளிவந்த பலதும் பிரபலம் அடைந்ததற்கான முக்கியமான காரணம், தொடக்கத்தில் அவை சிறிய எபிஸோட்களாக ஒவ்வொரு எபிஸோடும் பதினைந்திலிருந்து இருபது நிமிடங்கள் என்கிற அளவில் இருந்தன. பின்னர், மெதுவாக அவை ஒவ்வொரு வருடத்திற்கும் ஒரு சீஸன் என்கிற கணக்கில் பல வருடங்களாக வெளிவந்தன. ஒவ்வொரு சீஸனுக்கும் பத்து எபிஸோடுகள். எபிஸோடுகளின் நேர அளவைப் பொறுத்து எபிஸோடுகளின் எண்ணிக்கை குறையலாம் அல்லது கூடலாம். எத்தனை நிமிடங்களுக்கு ஒரு பார்வையாளரைத் திரையின் முன்னே உட்கார வைக்க முடியும் என்பதே அதிலுள்ள உழைப்பின் நோக்கம்.

எனவே, அவற்றின் தரத்திற்காக தாராளமாகச் செலவிடப்பட்டது. பிறகு, ஒரு எபிஸோட் ஒருமணி நேரத்தைத் தொடுமளவிற்கெல்லாம் வலைத் தொடர்கள் உருவாகத் தொடங்கிவிட்டன. இதற்கும் கொரோனா நோய்த்தொற்று காலத்திற்கும் காரண சம்பந்தமுண்டு எனலாம். அக்காலக்கட்டத்தில் பெருவாரியான சினிமா தியேட்டர்கள் முடங்கின. அதுவரையில் தயாராகியிருந்த எண்ணற்ற திரைப்படங்களுமே ஓ.டிடி. தளங்களை (OTT–over-the-top-Platforms) நம்பி மட்டுமே தேமேவென ரிலீஸ் ஆகின.

நெட்ஃபிலிக்ஸ், அமேஸான் ப்ரைம் வீடியோ போன்ற ஓ.டி.டி தளங்களின் வழியே சினிமா பார்வையாளர்களின் மனிதப் பழக்கம் பெரிதும் மாற்றம் கண்டதற்கு இருபத்தியோராம் நூற்றாண்டின் கோவிட் நோய்மைக்காலம் ஒரு முக்கியமான காரணமாகியது என்பது நிதர்சனம். அது வரலாறு. தற்சமயம் ஏகப்பட்ட ஓ.டி.டி தளங்கள் உருவாகியுள்ளன. அவை தவிர, மொபைல் ஆப் எனப்படுகிற பலவிதமான ஸாஃப்ட்வேர் அப்ளிகேஷன்கள். குறிப்பாக வீடியோக்களுக்காக என்றே உருவாக்கப்பட்ட தனி ரகங்கள் பல உள்ளன.

பார்வையாளர்கள், ஊர்களுக்கு இடையிலான தத்தம் பயண நேரங்களில், வீட்டிலிருந்து பணிபுரியும் இடத்திற்கும் – பணிபுரியும் இடத்திலிருந்து வீட்டிற்கும் இடைப்பட்ட பயண நேரங்களில், விடுமுறை நாட்களின் வெற்றுப் பொழுதுகளில் என அனைத்திலும் வீடியோ நேரங்களை நுகரும் பழக்கத்திற்கு வந்துவிட்டார்கள். இதில், பெரும்பாலும் திரைப்படங்களைக் காட்டிலும் வெப் சீரிஸின் எபிஸோடுகள் பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளன. அதில், போட்டிப்போட்டுக்கொண்டு தனித்து வெற்றிபெற அவற்றின் கதைப்பொருள், மற்றும் உருவாக்குவதில் உள்ள தரம். இவ்விரண்டு மட்டுமே வெற்றியை நிர்ணயிக்கின்றன.

தரத்தைப் பொறுத்தவரையில் சினிமாவிற்கு நிகரான தயாரிப்புகளை வெப் சீரிஸ் மேற்கொள்ளத் தொடங்கிவிட்டன. பிரபல சினிமா இயக்குனர்கள் வெப் சீரிஸ் தயாரிப்பாளர்களாகவும் இயக்குனர்களாகவும் இருப்பதைப் பார்க்க முடிகிறது. கராணம், இதன் சந்தை அளவு அத்தகையது. இவற்றில், குழந்தைகளுக்கான ‘அனிமே’ வலைத்தொடர்கள் (Anime web series) தனி உலகம்.

உலகளவில் பார்க்கும்போது குழந்தைகளிடம் மட்டுமே தன்னிச்சையாக செலவிடுவதற்கு அதிகமான மனித நேரம் கையில் உள்ளது. பெற்றோர்களுக்கு பிக்கல் பிடுங்கல்கள் ஏதும் செய்யதுவிடாமல் இருப்பதற்கு ஒரு ‘டேப்லெட் திரை’ அக்குழந்தைகளை தம் கட்டுக்குள் வைத்துக்கொள்ளுகிற தொழிநுட்ப ஏற்பாடு பெரியவர்களுக்கு ஏதுவானதாக இருக்கிறது.

அதனால்தான், பிரபலமான ஓ.டி.டி தளங்கள், தங்களின் வாடிக்கையாளர்களுக்கு பல User Windows-களை வாரி வழங்குகிறது. ஒரே வீட்டிற்குள் குறைந்தது மூன்று வெவ்வேறு திரைகள் பிஸியாக இருப்பதற்கான எளிய ஏற்பாடுதான் அது. மனித நேரத்தை கணிசமாக Consume பண்ணுகிற இந்த உத்தி சரியாக போனியாகியுள்ளது என்றுதான் சொல்லவேண்டும்.

வலைத் தொடர்களை அதற்குரிய Digitalized Money Tunnel எனலாம்.

●●●

யல் மொழிகளில் ஆங்கிலம், ஃபிரெஞ்சு, ஸ்பானிஷ், ஜப்பான், கொரியன் போன்றவை. இந்திய மொழிகளில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி போன்றவை வலைத் தொடர்களைத் தயாரித்து நமக்கு வழங்குகின்றன. அதிலிருப்பது சினிமாவிற்கு இணையான தரம்தானா? என்று பார்க்கும்போது உள்ளூர் தயாரிப்புகள் அதற்குத் தயாராக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், இந்தியில் சில உண்டு.

மற்றபடி, அயல் மொழிகளில் அவர்கள் அத்தொழிலை நன்கு உணர்ந்திருக்கிறார்கள். தயாரிப்பு நிறுவனங்கள் தங்களுக்கான பார்வையாளர்களை அனைத்து மொழியினூடாகவும் எளிதாக கவர்ந்துவிடுகின்றனர். இதன் வியாபார அளவு Universal என்பதால் அனைத்திலும் ஆங்கில சப்-டைட்டில்கள் உள்ளன. அவற்றோடு சேர்த்து, எண்ணற்ற மொழிகளில் அத்தொடர்களின் பிரதான கதையம்சம் சிதையாத வகைமையில் நல்லமுறையில் மொழிமாற்ற டப்பிங்கும் செய்யப்பட்டுவிடுகின்றது. அதில், நுணுக்கங்கள் தவறலாம். ஆனால், விஷயம் சிதையாது. அதற்கு நன்கு பழகிவிட்ட பார்வையாளர்களாக நாம் பெருகிவிட்டோம் என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

ஆங்கிலேயேர்கள், ஜப்பானியர்கள், கொரியர்கள், இந்தி மக்கள், மலையாளிகள், தெலுங்கர்கள், கன்னடியர்கள் என உலகக் கதாபாத்திரங்கள் அனைத்துமே நம் திரைக்குள்ளே தோன்றி தமிழில் பேசுகிறார்கள். வேறென்ன வேண்டும்?

திரைப்படங்களுக்கு இருப்பதைப் போல வலைத் தொடர்களுக்கு தனிக்கை (Censorship) கிடையாது. அது எதனையும் கட்டுப்படுத்துவதில்லை என்பதால், அந்தந்த பிராந்திய மனிதன் ஒரு கதைக்கேற்ப கதாபாத்திரமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் பட்சத்தில், அவனுடைய சொந்த மொழியின் சொலவடையாக பேசுகிற கெட்ட வார்த்தைகள் எதுவுமே தடையின்றி கேட்கக் கிடைக்கின்றன. சமூகத்திலும் அப்படி இருக்கிறதுதானே? அதுவே கதையாசிரியரின் சுதந்திரமாகவும் மாறுகிறது. அதுபோலவே வன்முறைக்காட்சிகள், செக்ஸூவல் காட்சிகள் என அவையும் கதைத்திரையை ஆக்கிரமிக்கும் போக்கில் வரைமுறை கிடையாது. அவை படமாக்கப்படுகின்றன, எடிட் செய்யப்பட்டு, இறுதி பின்னணி இசை கோர்க்கப்பட்டு, சிறப்பு சப்தங்களை ஒட்டிணைத்து.. என அத்தனை லட்சணங்களுடனும் வீட்டிற்குள்ளேயே காணக் கிடைக்கின்றன. அவற்றைத் தவிர்க்கவியலாது என்கிற பொதுபுத்தியை எப்போதோ அடைந்துவிட்டோம்.

இந்தியா போன்ற தேசத்தில், இந்தக் காரணத்தையே சுதந்திரம் சலுகை என்பதாக நினைத்துக்கொண்டு தம்மிஷ்டத்திற்கு வன்முறைக்காட்சிகளும் பாலியல் காட்சிகளும் கெட்டவார்த்தைகளும் பயன்படுத்தப்பட்ட வலைத் தொடர்கள் பலது உண்டு. அவற்றிற்கு இடம் தரக்கக்கூடிய கதைக்களங்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன என்பதும் கருத்தில் கொள்ள வேண்டிய ஒன்றுதான்.

பார்வையாளர்களுக்கு தொடர்ந்து ஒரு விஷயத்தை கொடுத்துக்கொண்டே இருந்தால், அது ரசனை என்கிற அடுக்கில் கால் ஊன்றிக் கொள்ளும். கதாபாத்திரத் தேர்வுகளில் உருவாகின்ற நாயகத் தோற்றங்களும் பிம்பங்களும் அப்படித்தான் வார்த்தெடுக்கப்படுகின்றன. என்ன சப்ஜெக்ட்? யார் உங்களின் பார்வையாளர்? அவர் ஏற்கனவே தயாராக உள்ளாரா? அல்லது உருவாக்க வேண்டுமா? –இதில்தான் ஒரு படத்தயாரிப்பு நிறுவனம் எப்போதும் கண்ணும் கருத்துமாக இருந்தாக வேண்டும்.

ங்கிலத்தில், FRIENDS வலைத் தொடர் பத்து சீஸன்களாக வெளியாகியது. 1994-2004 அதன் தயாரிப்புக்கான வெளியீட்டு காலகட்டமாக இருந்தது. ஏனென்றால் பார்வையாளர்கள் வருடக்கணக்கில் அதற்காக காத்திருந்து ஆச்சரியப்படுத்தினார்கள். பின்னர், அது ஒரு பழக்கமாக மாறிவிடும்போது, தயாரிப்பு நிறுவனங்கள் அந்த லாஜிக்கை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு வேலை செய்யத் தொடங்கிவிட்டார்கள். அத்தொடர் மொத்தம் 236 எபிஸோடுகள் என்கிறது இணைய வலைத்தளத்தின் புள்ளிவிபரம்.

இதில், நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. அத்தொடரின் ஒவ்வொரு சீஸனிலும் 24 எபிஸோடுகள் உள்ளன (கடைசியைத் தவிர). ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது ஒரு எபிஸோடிற்கு தோராயமாக 22 நிமிடங்கள் கணக்கிடப்பட்டுள்ளன. இத்தனைக்கும் அத்தொடர், சினிமாவிற்கு நிகரான தரத்துடன் தயாரிக்கப்படவில்லை. அது ஒரு மேடைநாடக பாணியில் உருவாக்கப்பட்ட ஒன்று. ஆனால், அதற்கான பார்வையாளர்கள் அவர்களிடம் உண்டு. அப்பார்வையாளர்கள் உலகம் முழுவதும் பெருகினார்கள் என்பது ஆச்சரியமான விஷயம்தான். ஒருவேளை Globalization-இன் ஓர் அம்சம் அதனை சாத்தியப்படுத்தியிருக்கலாம்.

Breaking Bad (2008-2013): இதுவொரு அமெரிக்க தொலைகாட்சித் தொடர். ஒரு தனிமனிதனின் துறை சார்ந்த அறிவும் திறனும் சுயநலமற்று வெளிப்படுவதினால் உருவாகும் சமூக வித்தியாசத்தை அடிப்படையாகக் கொண்ட திரைக்கதை. பரவலான கவனத்தை ஈர்த்ததற்கான காரணம் என்னவென்றால் தெளிவாக எழுதப்பட்டுள்ள பிரதான கதாபாத்திரத்தின் வார்ப்பும் அதிலுள்ள சூழல் முரணும்தான். ஒரு சாமானியனின் பிரத்யேக மனநிலையை தூண்டிவிடக்கூடிய அம்சம் இத்தொடரில் உள்ளது. மொத்தம் 5 சீஸன்கள், 62 எபிஸோடுகள். ஒவ்வொரு எபிஸோடும் தோராயமாக 47 நிமிடங்கள் திரையில் ஓடக்கூடியவை. அதன் தொடர்ச்சியாக வெளிவந்த Better Call Saul (2015-2022) மொத்தம் 6 சீஸன்கள், 63 எபிஸோடுகள். அதே நிமிட அளவுகள்தாம். முந்தையதைவிட இதன் தயாரிப்பு தரம் நன்றாக உள்ளது.

Game of Thrones (2011-2019): HBO தயாரிப்பில் வெளியாகி பெரிய அளவில் வெற்றிபெற்ற ஒரு வலைத் தொடர். மொத்தம் 8 சீஸன்கள், 73 எபிஸோடுகள். தோராயமாக 68 நிமிடங்கள் அதன் திரையோட்டம். அதனுடைய தயாரிப்பும் ஃபிலிம் மேக்கிங்கும் திரைப்படத்திற்கு இணையாக இருந்தது. அமெரிக்க எழுத்தாளர் George R.R. Martin எழுதிய நாவல் தொடர்வரிசையான A song of Ice and Fire-இல் முதன்மையானது A Game of Thrones நாவல். அதற்கடுத்தடுத்த நாவல் வரிசைகளில் A Clash of Kings, A Storm of Swords, A Feast for Crows, A Dance with Dragons என மொத்தம் ஐந்து தலைப்புகளில் ஏழு புத்தகங்கள் வெளியாகியிருந்தன. (இன்னும் வெளியாகவுள்ளன).

காரணம் என்னவென்றால், 2022-ல் House of the Dragon என்கிற பெயரில் அடுத்த வலைத்தொடர் தொடங்கிவிட்டது. இதுவரையில், 2 சீஸன்களோடு, 18 எபிஸோடுகள் வெளியாகியுள்ளன. தோராயமாக ஒரு எபிஸோடிற்கு 67 நிமிடங்கள். இவையும் அவரின் முந்தைய நாவல்களின் கிளைவரிசைகளை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. அதன் வெற்றியைத் தொடர்ந்து அவர் தன்னுடைய நாவல்வரிசையைத் தொடர்ந்து எழுதிக்கொண்டே போகிறார். ஒரு பக்கம் வாசகப்பரப்பு அவருக்கு விரிவடைந்துள்ளது. அதேவேளை, அவை வலைத்தொடர்களாகும்போது பார்வையாளர்களும் விரிவடைகிறார்கள்.

இதுபோன்ற ஆக்கங்களை ஆராயும்போது, ஒரு நாவலின் விரிவான தளத்திற்கும் அதுவே திரைக்கதையாக அமைக்கப்படும்போது காட்சிரூபமாக அது எழுகின்ற தோரணைக்கும் மைல் அளவிற்கு வித்தியாசம் உள்ளதை அவதானிக்க முடிகிறது. அது மிகவும் சவாலானதும் கூட.

Money Heist (2017-2021): ஸ்பானிய மொழி வலைத்தொடர். வங்கிக் கொள்ளையர்களின் வாழ்க்கை, நோக்கம் என இரட்டைப் பின்னணியோடு அமைந்துள்ள விறுவிறுப்பான திரைக்கதை இது. அதன் திரையாக்கம் பிரமாதமாக இருந்தது. இதுவரையில் மொத்தம் 3 சீஸன்கள், 41 எபிஸோடுகள் வெளியாகியுள்ளன. ஒவ்வொரு எபிஸோடும் தோராயமாக 47 நிமிடங்கள் திரையில் ஓடக்கூடியவை.

Squid Game (2021): இது கொரிய மொழி வலைத்தொடர். இதன் முதல் சீஸன் வெளியாகியுள்ளது. ஓர் அன்றாடங்காய்ச்சி மனிதனின் அதிர்ஷ்டம் குறித்த அவனுடைய தனிப்பட்ட நம்பிக்கையோ அவநம்பிக்கையோ ஒரு சவாலான விளையாட்டின் மூலம், ஒருவேளை வறுமை என்கிற நிலையிலிருந்து அவனுடைய தலையெழுத்தை மாற்றி அமைக்குமென்றால், அவன் எந்த எல்லை வரையில் தன்னுடைய உயிரை ரிஸ்க் எடுப்பான்? சாமானியனின் உளவியலோடு பார்வையாளர்களின் மனநிலையை பங்கெடுக்கத் தூண்டியது அதன் திரைக்கதை அமைப்பும் அதிலுள்ள சம்பவச் சூழல்களும். அருமையான திரையாக்கம் பார்வையாளர்களை வசப்படுத்தி வைத்திருந்தது. இதில், மொத்தம் 9 எபிஸோடுகள். ஒவ்வொரு எபிஸோடும் தோராயமாக 50 நிமிடங்கள் திரையில் ஓடக்கூடியது. இரண்டாம் சீஸனுக்காக பார்வையாளர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

House of Cards (2013-2018): அமெரிக்க வலைத்தொடர். வெள்ளை மாளிகையின் அரசியல் களத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைக்கதை. அதிலுள்ள சூது, சாமர்த்தியம், சாதுரியம், தொலைநோக்கு பார்வை, லஞ்சம், வஞ்சம் என அனைத்தும் எப்படியெல்லாம் வடிவமைக்கப்படுகின்றன? கண நேர முடிவுகளை எடுப்பதிலுள்ள பின்னணியை எவ்வாறெல்லாம் ஆராய வேண்டியுள்ளது? போன்றவற்றை நூல்பிடித்தபடி பயணிக்க பயணிக்க, இவ்வுலகின் முதலாளிய அரசுகளின் போக்குகளை ஓரளவு அடையாளங்கண்டுகொள்ள முடிகிறது.  அவை யாவும் மக்களின் தலையெழுத்தை குறி வைப்பவை. பார்வையாளர்களுக்கு ஏகப்பட்ட யூகங்களை அடைந்திட வழிவகுக்கும் திறனுள்ள திரைக்கதையமைப்பு. இதில், மொத்தம் 6 சீஸன்கள், 73 எபிஸோடுகள் வெளியாகியுள்ளன. ஒவ்வொரு எபிஸோடும் தோராயமாக 50 நிமிடங்கள் ஓடக்கூடியவை.

Mind Hunter (2017-2019): அமெரிக்க வலைத்தொடர். FBI அமைப்பிற்குள்ளே, கிரிமினல்களை வகை பிரிப்பதற்கும் அதிலே குறிப்பாக சீரியல் கில்லர்களின் மனோநிலைகளை ஆராய்ந்து அவற்றை முறையே கோப்புகளாக உருவாக்கிட முனையும் இரண்டு ஏஜெண்டுகளின் எத்தனிப்புகளைப் பற்றியது. மொத்தம் 2 சீஸன்கள், 19 எபிஸோடுகள் வெளியாகியுள்ளன. ஒவ்வொரு எபிஸோடும் தோராயமாக 50 நிமிடங்கள் ஓடக்கூடியவை.

இந்தியில்:

  • Pataal Lok (2020) S-1; E-9
  • The Family Man (2019-2021) S-2; E-19
  • She (2020-2022) S-2; E-14
  • Mirzapur (2018/2020/2024) S-3; E-29
  • Farzi (2023) S-1; E-8
  • Scam 1992 (2020) S-1; E-10
  • Scam 2003 (2023) S-1; E-10

போன்ற வலைத்தொடர்களைக் குறிப்பிட்டு சொல்லலாம். புதிய பிராந்திய பார்வையாளர்களை இவைப் பெற்றன.

அதுபோலவே தமிழில்:

  • Auto Shankar (2019) S-1; E-10
  • Queen (2019) S-1; E-11
  • November Story (2021) S-1; E-7
  • Irai (2022) S-1; E-6
  • Tamil Rockerz (2022) S-1; E-8
  • Vilangu (2022) S-1; E-7
  • Vadhandhi: The fable of Velonie (2022) S-1; E-8
  • Suzhal: The Vortex (2022) S-1; E-8
  • Mathagam (2023) S-1; E-9
  • Label (2023) S-1; E-10
  • Ayali (2023) S-1; E-8
  • Inspector Rishi (2024) S-1; E-10
  • Thalamai Seyalagam (2024) S-1; E-8

இவை தவிர தொகைக் கதைகளாக (Anthology Stories) தமிழில் வந்தவைகளில்:

  • Navarasa (2021) S-1; E-9
  • Modern Love Chennai (2023) S-1; E-6

தையம்சங்களைத் தவிர, பொதுவாகவே மொழிரீதியாக கடந்து என யோசிக்கும்போது, கதைகள் அல்லாத ஆவணத்தொகுப்புகள், பிரபல்யங்களின் சரிதைகள், போர்கள், கலாச்சாரம், பயணங்கள், அறிவியல், உளவியல், வரலாற்று ஆராய்ச்சி, அரசியல், இராணுவம், தத்துவம், கலை (இசை, ஓவியம், நாடகம், இலக்கியம்), என பல துறை சார்ந்த வலைத் தொடர்களும் ஏராளம் உள்ளன.

மனித அறிவை தனிப்பட்ட விதத்திலோ, பொது சமூகத் தேவையின் பொருட்டோ, பொழுதுபோக்காகவோ அவற்றை எடுத்துக்கொள்ளவும் உள்வாங்கிக்கொள்ளவும் ஒரு பார்வையாளராக நம்முடைய தேர்ந்தெடுப்பு எதன்பொருட்டு நிகழ்கிறது என்பதை வைத்து காட்சிரூபங்களின் அணுக்கமும் வளர்ச்சியும் வெவ்வேறு பரிமாணங்களை இனி வருங்காலந்தோறும் தொட்டுக்கொண்டே இருக்கும். முன்னர் சொன்னதுபோல தொழில்நுட்பம் வளர வளர நமது நுகர்வும் பெருகும்.

தற்போதைய காட்சி ஊடக நிலைப்படி, ஒரு சூப்பர் மார்க்கெட்டிற்குள் நுழைந்து நமக்கு வேண்டியதை வாங்கிக்கொள்ளலாம் என்கிற சுதந்திரம் போல ரகவாரியாக அனைத்து டிஜிட்டல் மயமான ஓ.டி.டி. தளங்களும் உள்ளன. அவற்றில் வகைமாதிரிகளோடு எண்ணற்ற வீடியோக்களும் கிடைக்கின்றன. 

அவை எப்போதுமே மனித நேரம் சம்பந்தப்பட்டது என்பதை சற்று ஆழ்ந்து யோசித்தால் பிடிபட்டுவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *