மொழியும் தொழில்நுட்பமும்

-நேர்காணல்

  1. மொழியின் அவசியம் என்பது ஆண்ட்ராய்ட் காலத்திற்குப் பிறகு எப்படியாக உள்ளது?

ஆண்ட்ராய்ட் யுகம் மனித உறவுகளை, வாழ்க்கையை, தகவல் தொடர்புகளை முன்னெப்போதும் இல்லாத வகையில் பெரிதாக மாற்றியமைத்திருப்பது உண்மை. 

ஆனால், மொழியின் தேவையை அது எந்த வகையிலும் மாற்றிவிடவில்லை. சிந்தனைக்கும், தகவல் சேமிப்புக்கும், தகவல் பறிமாற்றத்துக்குமான கருவியாக எப்போதும் போல மொழியே நீடிக்கிறது. மொழி பயன்படும் தளங்களின் தன்மையை, வடிவத்தை ஆண்ட்ராய்டு மாற்றியிருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம்.

ஏற்கெனவே படித்துக்கொண்டிருந்த மக்களை ஆண்ட்ராய் காலம் அதிக அளவில் கேட்க வைத்திருக்கிறது, பார்த்தபடி கேட்கவைத்திருக்கிறது. அங்கே செயல்படுவதும் மொழிதான். இன்னும் சொல்லப்போனால், எழுதுவதைவிட பேசுவதே, படிப்பதைவிட கேட்பதே, மொழியின் ஆதி வடிவம், அடிப்படை வடிவம். இப்போதும்கூட எழுத்து மொழிக்கான அடிப்படை பேச்சுமொழிதான். 

ஆனால், ஒரு பேச்சை, வேறொருவர், வேறிடத்தில், பிற்காலத்தில் கேட்க முடியாது என்பதுதான் பேச்சுமொழியின் குறைபாடாக இருந்துவந்தது. இந்தக் குறைபாட்டைப் போக்கும் வகையில், பேச்சுமொழிக்கு ஒரு நிலைத்தன்மையை, ஆவணத் தன்மையை ஏற்படுத்துவதற்காகப் பிறகு வந்ததே எழுத்துமொழி. ஆனால், பேச்சு மொழியில் சாத்தியமாகாத பல விஷயங்கள் எழுத்து மொழியில் சாத்தியமாயின. எழுத்து மொழி இல்லாமல் அருவ சிந்தனைகள் (abstract ideas) சாத்தியமாகி இருக்காது. அருவமாக்கல் இல்லாமல், நுட்பமான அறிவியல், தொழில்நுட்ப அறிவு சாத்தியமாகி இருக்காது. எனவே, நிறைய தகவல்களை, விரைவாக செயல்முறைக்கு உள்ளாக்க, அறிவைத் தேட, விவாதிக்க உரிய வடிவம் எழுத்துவடிவம். இயற்கை மொழியான பேச்சுமொழியின் உணர்வுபூர்வப் பிணைப்பை எழுத்து வழங்காது, எழுத்தின் சிந்தனை ஆழத்தை, நுட்பத்தை பேச்சு தராது. எனவே, செய்திகள், விவாதங்கள், கருத்துருக்கள் ஆகியவற்றுக்கான மொழியாக எழுத்தே இருந்துவந்தது. ஆனால், பேச்சு, காட்சிப் பதிவுகளை அறிவியல் சாத்தியமாக்கியிருந்தாலும், எழுத்து – பேச்சு மொழிகளுக்கு இடையிலான வேலைப் பிரிவினையில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால், ஆண்ட்ராய்ட் இந்த எல்லையை உடைத்துவிட்டது. பாரம்பரியமான எழுத்தின் தளங்களில் ஒலி/ஒளி ஊடகம் புகுந்துவிட்டது. இது சிந்தனை மரபின் செல்வாக்கை மட்டுப்படுத்தி, உணர்ச்சி மரபின் கையை ஓங்கவைக்கும். ஆனால், அறிவு மரபின் தரப்பில் நிற்பவர்கள், இனி காட்சி/குரல் ஊடகங்களை, அவற்றுக்கான மொழியைத் தேர்வு செய்து களமிறங்கவேண்டும். அந்த மொழிக்கான நுட்பங்களை கைவசமாக்கவேண்டும். இங்கே மொழியின் செல்வாக்கு குறையவில்லை. அதன் வடிவங்களுக்கு இடையிலான சமநிலைதான் குலைந்திருக்கிறது. 

2. மொழி மீது தொழில்நுட்பம் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் என்ன?

 உலக அளவில் மொழிகள் மீது தொழில்நுட்பம் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம். தமிழ் மீது தொழில்நுட்பம் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் என்று இரண்டு விதமாகப் பார்க்கலாம். ஆனால், பிற உலக மொழிகள் மீது தொழில் நுட்பம் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் பற்றி எனக்குத் தெரியாது. உலகின் பிற மொழிகளைவிட அதிகவேகமாக மாற்றங்களை, புதியவற்றை ஏற்றுக்கொள்கிற தன்மை உள்ள ஆங்கிலத்தின் மீது தொழில்நுட்பம் செலுத்தியிருக்கும் தாக்கம் மிகப்பெரியது. அவற்றில் முக்கியமானது, ஆங்கிலம் பெற்ற ஏராளமான புதிய சொற்கள். கூகுள் என்பது ஒரு நிறுவனத்தின் பெயர். பெயர்ச்சொல். இதை அடிப்படையாகக் கொண்டு ஆங்கிலம் உருவாக்கிக் கொண்ட ‘கூகுள்’ (ஐ கூகுள்ட் இட்) என்ற வினைச் சொல் மிகப் புகழ் பெற்றது. ட்வீட் என்பதும் அதைப் போல வினைச் சொல்லாக மாறிய பெயர்ச்சொல். எமோஜி என்ற கருத்தாக்கமும், அதையொட்டி ஏற்பட்ட சொல்லும் மொழிக்கும், சமூகத்துக்குமே புதியவை. அதைப்போல திறன்பேசிகள் ஏற்பட்ட பிறகு ஏற்பட்ட செல்ஃபி என்ற சொல்லைச் சொல்லலாம். இவையெல்லாம் வெறுமனே சொற்களின் தோற்றங்கள் மட்டுமல்ல. தொழில்நுட்பம் சமூகத்துக்கு கொண்டுவந்த புதிய புலப்பாடுகளைக் குறிக்க சமூகத்தில் ஏற்பட்ட புதிய சொற்கள் இவை. இவை விரைவாகப் பரவுவதற்கும் தொழில்நுட்பமே துணை செய்தது.  

தமிழுக்கு வருவோம். கூகுள், ட்வீட் போன்ற பெயர்ச் சொற்கள் வினைச் சொற்களாகும் தேர்வுகளில், அவற்றை தமிழ் அப்படியே எடுத்துக்கொள்கிறது. ‘கூகுள் செய்து பார்’, ‘ட்வீட் பண்ணு’ என்றுதான் சொல்கிறோம். இவற்றை மொழிபெயர்க்க முயல்வதோ, இவற்றை ஒட்டி தமிழில் சொல்லாக்கம் செய்ய முயல்வதோ அபத்தமாக இருக்கும் என்று ஒரு பார்வை இருக்கிறது. மறுபுறம், அதற்கான முயற்சிகளும் நடக்கின்றன. எடுத்துக்காட்டாக, ஃபேஸ்புக் என்பது நிறுவனப் பெயராக இருந்தாலும்கூட பரவலாக முகநூல் என்ற சொல்லாக்கம் ஏற்கப்படுகிறது. 

(இதில் வரும் புக் என்ற சொல், எழுதிமுடிக்கப்பட்ட நூலைக் குறிக்காமல், எழுதப்பட்டுக்கொண்டிருக்கும் ஏட்டைக் குறிக்கிறது. ஃபேஸ்புக் என்பதை மொழி பெயர்க்கலாமா என்கிற கேள்வியைத் தாண்டி, தர்க்கபூர்வமாக யோசித்தால் இது முகஏடுதான் முகநூல் அல்ல. ஆனால், சொல்லாக்கம் தர்க்கம், சிறந்த சொல் எது என்ற ஆய்வு ஆகியவற்றுக்கு உட்பட்டதல்ல. பரவலான ஏற்பே சொல்லாக்கத்தின் அடிப்படை.)

அதைப் போலவே, வாட்சாப் என்பதை சிலர் புலனம் என்று பயன்படுத்துகிறார்கள். அது அவ்வளவு பரவலாக ஏற்பைப் பெறாதது வியப்பல்ல. 

இது தவிர, நிறுவனப் பெயர்கள் இல்லாத வகையில், மென்பொருள், வன்பொருள், நிரல், செயலி, பலுக்கல், பின்னூட்டம், இணையம், இணைய தளம் போன்ற  நிறைய தொழில்நுட்பச் சொற்கள் தமிழுக்கு வந்துள்ளன. பெரும்பாலும் இவை ஆங்கிலத்தின் வழி மொழியாக்கம் செய்யப்பட்டவையாகவே இருக்கின்றன. மென்பொருள், வன்பொருள் என்ற சொல்லாக்கங்கள் சிறந்தவை அல்ல, இவற்றை கணிப்புலன், கணிப்பொறி என்று குறிப்பிடலாம் என்ற கருத்துகள் எல்லாம்கூட முன்வைக்கப்பட்டன. உண்மையில் ஆராய்ந்து பார்த்தால், வறட்டு மொழிபெயர்ப்பாக இல்லாமல், இவை அழகான சொல்லாக்கங்கள்தான். ஆனால், சொல்லும்போதே ஆங்கிலச் சொற்களோடு ஒப்பிட்டு அறியத்தக்கவையாக இருப்பதும் இத்தகைய தொழில்நுட்பச் சொற்கள் நிலைபெற இன்றியமையாதவை. தூய, துல்லியமான சொல்லாக்கம் செய்துவிட்டு அது ஆங்கிலத்தில் எந்தச் சொல்லைக் குறிக்கிறது என்று எடுத்த எடுப்பில் புரியாவிட்டால் அது நிலைபெறாது. 

இதில் குறிப்பாக கவனிக்கவேண்டியது என்னவென்றால், நானறிந்து வேறெந்த இந்திய மொழியிலும் இத்தகைய சொல்லாக்கங்கள் நிகழவில்லை. மற்ற இந்திய மொழிகள் பெரும்பாலும் ஆங்கில தொழில்நுட்பச் சொற்களை அப்படியே பயன்படுத்துகின்றன. இதற்கான காரணங்களையும், விளைவுகளையும் ஆராய்ந்தால் அதுவே தனிக் கட்டுரையாகும். தமிழில் சொல்லாக்கம் செய்வது என்ன பலன் தரும் என்று உங்களுக்குத் தோன்றலாம், எடுத்துக்காட்டாக இரண்டு சொற்களைப் பார்ப்போம். நெட்வொர்க் என்ற ஆங்கிலச் சொல், தமிழில் வலைப்பின்னல் அல்லது வலையமைப்பு என்று எழுதப்படுகிறது. இந்த சொல்லைப் பார்க்கும்போதே சிலந்தி வலையமைப்பு ஒன்று நம் கண்முன் தோன்றி, இச்சொல் குறிக்கும் புலப்பாடு (Phenomenon) எத்தகையது என்ற விவரத்தை மூளைக்கு இயல்பாக கடத்தும். ஆனால், நெட்வொர்க் என்று சொல்லும்போது இது நிகழாது. அல்லது அனைவருக்கும் நிகழாது. அதுபோலவே ‘சப் அட்டாமிக் பார்ட்டிக்கிள்’ என்றொரு சொற்றொடர். இதை அணுவுட் துகள் என்று நான் எழுதுவது உண்டு. இப்படிச் சொல்லும்போது அது அணுவுக்குள் இருக்கும் துகள் என்ற தகவலைக் கடத்திவிடுகிறது. இந்த ஆதாயம் சப் அட்டாமிக் பார்ட்டிக்கிள் என்று எழுதும்போது கிடைக்காது. தமிழ்ச் சொல்லாக்கங்கள், அறிவியலை, தொழில்நுட்பத்தை தமிழ்பேசும் மக்களின் நெஞ்சுக்கு நெருக்கமாக கொண்டு செல்கின்றன. 

இன்னொன்றையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

தனித்தமிழ் இயக்கம், அதைத் தொடர்ந்து திராவிட இயக்கம், அணியணியான அர்ப்பணிப்பு மிக்க தமிழாசிரியர்கள் போட்டுக்கொடுத்த சொல்லாக்க மரபு தொழில்நுட்பச் சொல்லாக்கங்களுக்கான உறுதியான அடிப்படையை வழங்கின. அதே நேரம், உலகெங்கும் பரவி, தொழில்நுட்ப உலகில் செயல்பட்ட தமிழர்களின் முனைப்பும், செயற்பாடுமே இத்தகைய தொழில்நுட்பச் சொல்லாக்க மரபை சாத்தியமாக்கின. இது தன்போக்கில், இயல்பாக நடந்துவிடவில்லை. 

அடுத்தபடியாக, LOL, ROFL, ASAP, FYI, ICYMI போன்ற ஏராளமான சுருக்க வெளிப்பாடுகள், இணைய வழி, சமூக ஊடக வழி உரையாடல்களில் பயன்படுத்தப்படுகின்றன. இதுபோன்ற சுருக்கங்கள் தமிழில் சாத்தியமாகவில்லை. ROFL என்பதற்கு இணையாக சிலர் விவிசி (விழுந்து விழுந்து சிரித்தேன்) போன்ற சுருக்கங்களை முயன்றனர். ஆனால், இவை புகழ் பெறவில்லை. 

நேரடியாக கண்ணுறத்தக்க இத்தகைய மாற்றங்கள் தவிர, மொழி உள்ளடக்கத்தின் வடிவத்திலும் தொழில்நுட்பம் ஏராளமான மாற்றங்களைச் செய்துள்ளது. 

3. தொழில்நுட்பத்தில் ஆங்கிலம் ஆட்சி செய்வதற்கான காரணிகளாக நீங்கள் பார்ப்பவை எவை? 

வரலாறு ஆங்கிலத்துக்கு சில சாதகங்களை வழங்கியது. அந்த மொழி பேசியவர்கள், தாங்கள் தோன்றிய சிறு தீவு நாட்டைக் கடந்து சென்று, இரண்டு மாபெரும் கண்டங்களைக் கைப்பற்றினார்கள். வட அமெரிக்க கண்டத்தின் பெரும்பகுதியும், ஆஸ்திரேலியாவும் முற்றிலும் ஆங்கிலக் குடியேற்றங்களாகின. இது தவிர, இன்றைய இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட இந்தியத் துணைக் கண்டத்தையும், வேறு பல  ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளையும் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்தார்கள். இத்தகைய அரசியல், வரலாற்று சாதகம் மட்டுமில்லாமல், ஆங்கில மொழி புதியவற்றை ஏற்றுத் தம்மை வலுவூட்டிக்கொள்ளும், விரிவுபடுத்திக்கொள்ளும் தன்மையைப் பெற்றுள்ளது. அப்படிச் செய்யும்போது அது தன் ஆங்கில அடிப்படையை இழக்கவில்லை. 

(இதைக் கூறும்போது, நமது தனித்தமிழ் ஆர்வத்தை, சொல்லாக்க ஆர்வத்தை ஆங்கிலத்தின் இந்த நெகிழ்வுக்கு எதிர்நிலையில் வைத்துவிடக்கூடாது. ஆங்கிலத்துக்கு இருக்கிற வரலாற்று சாதகங்கள் வேறு. தமிழ் எதிர்கொண்ட வரலாற்று சவால்கள் வேறு. ஆனால், தனித்தமிழ் ஆர்வத்தை நாம் தூய்மை வாதமாகப் பேணிவிடக்கூடாது என்பது என் கருத்து.) 

இது ஏன் என்று மொழியியல் வல்லுநர்கள்தான் ஆராய வேண்டும். இத்தகைய நெகிழ்வும், இயங்கும் தன்மையும், அரசியல், புவியியல், வரலாற்று சாதகங்களும், உலகை இணைக்கும் தன்மையும் அறிவியல் தொழில்நுட்ப முனையமாக ஆங்கிலத்தை மாற்றிவைத்திருக்கின்றன. குறிப்பாக தொழில்நுட்பம் என்ற வரயிலை இழுக்கும் எஞ்சினாக இருக்கிறது ஆங்கிலம். 

உலகத் தொழில்நுட்பத்துறை உலகு தழுவியதாக, இடைச்சார்வு (inter dependent) உடையதாக இருக்கிறது. மொழிகளுக்கு, சமூகங்களுக்கு இடையிலான ஊடகமாக ஆங்கிலம் இருக்கிறது. இதற்குப் போட்டியாக வேறொரு மொழி இல்லை என்பதே ஆங்கிலம் தொழில்நுட்பத்தில் ஆட்சி செலுத்தக் காரணம்.

நோக்கத்தகுந்த எதிர்காலத்தில், ஆங்கிலத்தை வேறொரு மொழியால் பதிலீடு செய்ய இயலாது. 

5. பிராந்திய மொழிகளில் தொழில்நுட்பத்தை வளர்த்தெடுக்க முடியுமா?

இந்த பிராந்திய மொழி என்ற சொல்லின் மீது எனக்கு கடுமையான ஒவ்வாமை உண்டு. பிராந்தியம் என்ற வட சொல்லை தமிழில் வட்டாரம் என்று எழுதலாம். ஒவ்வொரு மொழியும் ஒரு குறிப்பிட்ட மக்கள் கூட்டம் வாழும் வட்டாரத்தில்தான் தோன்றிப் புழக்கத்தில் உள்ளன. எனவே மொழியின் தன்மையே குறிப்பிட்ட வட்டாரத்தில் தோன்றிப் புழங்குவதுதான் எண்ணும்போது ஏன் மக்கள் மொழிகளை ஏன் வட்டார மொழிகள் என்று கொச்சைப்படுத்தவேண்டும். வட்டார மொழிகள் அல்லாதவை எவை? உலக அளவில் ஆங்கிலம். அதுதான் வட்டாரம் கடந்த தன்மையை எய்திய மொழி. காலனியாதிக்கத் தொழுநோய்த் தேமலாக உலகின் உடலெங்கும் பரவிய மொழி அது. அப்படி அது பரவிய அரசியல் வழிமுறை, அருவருக்கத் தக்கது என்றாலும், இன்றைய அதன் பயன் புறக்கணிக்கவியலாதது என்பதால் அதற்கு உலக மொழி என்ற தகுதியை வழங்குகிறோம். அப்படிச் செய்யும்போது அதன் காலடியில் தாய்மொழிகளை வைக்காமலேயே, தாய்மொழிகளின் வளர்ச்சியை அடகு வைக்காமலே செய்யவே முயல்கிறோம். இந்திய நோக்கில், இப்போது அப்படி ஆதிக்க மொழியாக, வட்டாரமே இல்லாத மொழியாக உருவெடுக்க முயல்வது இந்தி. இந்தி மொழியை அனைத்திந்திய மொழியாக ஆக்க முயல்வதற்குப் பின்னால் உள்ள அரசியல் ஆதிக்க வெறியே பிராந்திய மொழி என்ற இழிவுபடுத்தும் சொல்லுக்குப் பின்னால் ஒளிந்திருக்கிறது. எனவே அந்த சொல்லை நான் வெறுக்கிறேன்.

இந்திய அளவில் சொல்வதானால், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், குஜராத்தி, மராத்தி, வங்கம், அசாமி போன்ற மொழிகளை நாம் மாநில மொழிகள் என்று குறிக்கலாம். போஜ்புரி, அவதி, சந்தாலி போன்ற மொழிகளை மக்கள் மொழிகள் எனலாம். 

சரி நாம் கேள்விக்கு வருவோம். இந்திய மொழிகளில் தொழில்நுட்பத்தை வளர்த்தெடுக்கத் தேவையான அடிப்படைகளை உருவாக்கிக்கொண்ட மொழி என்றால், தமிழ் மட்டுமே என்பது என் கருத்து. அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, தமிழின் வேர்ச்சொல் வலு. இரண்டு, கடந்த சில பத்தாண்டுகளாக அறிவியல், தொழில்நுட்பச் சொல்லாக்கத்தில் நடந்திருக்கிற வேலைகள். ஆனால், பிற இந்திய மாநில மொழிகளும், மக்கள் மொழிகளும் இதற்குத் தகுதியானவை அல்ல என்று பொருள் அல்ல. அவையும் இந்த முயற்சிகளைத் தொடங்கவேண்டும். ஆனால், தமிழ்மொழி உரிமையை அடிப்படையாகக் கொண்ட அரசியல் இயக்கங்கள் இல்லாமல் தமிழின் இந்தச் சாதனை நடக்கவில்லை என்பதால், வலுவான அரசியல் இயக்கம் இல்லாமல், பிற மாநிலங்களில் இது சாத்தியமாகாது என்பது என் கருத்து. ஆனால் இது ஒரு முன் நிபந்தனையாக இருக்குமா என்று எனக்குத் தெரியவில்லை. இதைத் தவிர, அரசாங்க ஆதரவும், பரந்த மக்கள் பயன்பாடும் உள்ள இந்தி தன்னில் தொழில்நுட்பத்தை வளர்த்துக்கொள்ள முயலலாம். இந்தி அடிப்படையில் ஒரு புது மொழி, எனவே அதற்கான சில சாதகங்கள் அதில் உண்டு. அதைப்போலவே பிற மொழிகளில் இருந்து ஏற்றுக்கொள்ளும் நெகிழ்வும் இந்திக்கு உண்டு. ஆனால் பல வட இந்திய மொழிகளை தின்றுச் செரித்து உருவான மொழியே இந்தி என்பதால், வட்டார வேறுபாடுகள் அதில் அதிகம். எனவே தொழில்நுட்ப சொல்லாக்கங்களை செந்தரப்படுத்துவதும் சவாலான பணியாகவே இருக்கும். 

6. நீங்கள் பணிபுரிந்த செய்திப்பிரிவில் தகவல் தொழில்நுட்பத்தின் பயன்பாடும் மொழியின் பயன்பாடும் எப்படி இருந்தது?

தில்லியில் உள்ள பிபிசி அலுவலகத்தில், தமிழ்ச் சேவையின் டிஜிடல் பிரிவில் நான் வேலை செய்தேன். உலக அளவில் பிபிசி, நெடுங்காலம் முன்பிருந்தே சேவை வழங்கும் மொழிகளில் ஒன்று தமிழ். இந்திய மொழிகளில் முதலில் பிபிசி சேவையைத் தொடங்கிய மொழிகள் தமிழும், இந்துஸ்தானியும்தான். இன்றைய இந்தி, இந்துஸ்தானியாக இருந்த காலம் அது. ஆனால், 2017ல் பிபிசி தில்லியில் விரிவான இந்திய மொழிச் சேவைகளைத் தொடக்கியது. அப்போது ஏற்கெனவே இருந்து வந்த தமிழ், இந்தி சேவைகள் தவிர, தெலுங்கு, மராத்தி, பஞ்சாபி, குஜராத்தி ஆகிய நான்கு இந்திய மொழிகளில் சேவையைத் தொடங்கியது பிபிசி. இது தவிர, இந்தியாவில் பேசப்படும் வங்க மொழியிலும் சேவை உண்டு.

ஆனால், வங்கமொழிச் சேவை வங்க தேசத்தை மையமாக கொண்டு செயல்படுவது. உருது மொழிச் சேவை, பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படுவது. இந்த இரண்டு மொழிகளுக்கும் சிறிய அளவில் ஊழியர்களைக் கொண்ட பிரிவு தில்லியில் உண்டு. எனவே இந்தியாவில் புழங்கும் 8 மொழிகளுக்கான ஊடகர்கள் ஆங்கிலமும் சேர்த்து 9 மொழிகளில் இயங்கும் ஊடகர்கள் ஒரு குடையின் கீழ் வேலை செய்தோம். நான் அந்த அலுவலகத்தில் 6 ஆண்டுகள் வேலை செய்தேன். எனவே, ஏராளமான பண்பாட்டுப் பரிமாற்றங்கள் நிகழும். 

எல்லா மொழிச் சேவைகளிலும் டிஜிடல் ஊடகப் பிரிவே வளரும், முன்னுரிமைப் பிரிவாக வேலை செய்கிறது. இது தவிர, இந்தியத் தொலைக்காட்சிகளின் கூட்டுறவில் செயல்படும் தொலைக்காட்சி சேவை, சிறிய அளவிலான பண்பலை வானொலி சேவைகள் செயல்படுகின்றன. எனவே, பன்மொழி, பல்லூடகச் சூழல் அது. இவற்றில், இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் என்று பல நாடுகளில் புழங்கும் ஒரு சர்வதேச மொழிக்கான சேவையாக தமிழ்ச்சேவை இருக்கிறது. அடுத்தபடியாக, (உருது, வங்க மொழி நீங்கலாக) இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் புழங்கும் மொழியாக பஞ்சாபி இருக்கிறது. ஆனால், பஞ்சாப் இரண்டு வரிவடிவங்களைக் கொண்டிருக்கிறது. பாகிஸ்தானில் புழங்கும் பஞ்சாப் வரிவடிவம் ஷாமுகி என்றும், இந்தியாவில் புழங்கும் பஞ்சாபி வரிவடிவம் குருமுகி என்றும் அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் இயங்கும் பிபிசி பஞ்சாபி சேவை குருமுகி வடிவத்தில் செயல்படுகிறது. ஒரு மொழியாக இருந்தாலும், அதன் எழுத்தை சீராக அந்த மொழிபேசும் மக்களிடம் கொண்டு செல்வதில் ஒரு சவாலாக உள்ளது இந்த வரிவடிவப் பிரிவினை. 

இத்தகைய ஒரு பண்பாட்டு மாறுபாடு தமிழிலும் உண்டு. இலங்கையில் செயல்படும் தமிழ்ச் சேவைக்கான செய்தியாளர்கள் அனுப்பும் செய்திகள், இலங்கைத் தமிழுக்கே உரிய, தமிழ்நாட்டுக்குப் புதிதான சொற்கள் இருக்கும். இவற்றில் பெரும்பாலானவை தமிழ்நாட்டில் நெடுங்காலம் முன்பே வழக்கொழிந்துபோன சம்ஸ்கிருதச் சொற்கள். எடுத்துக்காட்டாக, பயணம் என்று சொல்வதற்கு விஜயம் என்றே எழுதுவார்கள். மூத்த பத்திரிகையாளர் என்பதை சிரேஷ்ட பத்திரிகையாளர் என்று எழுதுவார்கள். அதே நேரம், தமிழ்நாட்டுத் தமிழ் எதிர்கொள்ளும் சில சொல்லாக்கச் சிக்கல்களுக்கு ஈழத்தமிழில் தீர்வுகளும் இருக்கும். எடுத்துக்காட்டாக, சேர்மன், பிரசிடென்ட், லீடர் ஆகிய ஆங்கில சொற்கள் குறிக்கும் நுட்பமான வேறுபாடுகளைப் பிரித்துக் காட்ட தமிழ்நாட்டுத் தமிழில் தனித்தனி சொற்கள் இல்லை. தலைவர் என்ற ஒரே சொல்தான் உண்டு. இது சில நேரங்களில் பொருள் மயக்கம் ஏற்படுத்தும். இதில் சேர்மன் என்ற சொல் ஆங்கிலத்தில்கூட சிக்கலானது. பெண்களைக் குறிக்கும்போது சேர்பர்சன் என்று ஆங்கிலத்தில் எழுதுவார்கள். ஆனால், ஈழத் தமிழில் இதைக் குறிக்க தவிசாளர் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. அதைப்போல கான்ஸ்டிடியூஷன் என்ற சொல்லை தமிழில் பிழையாக அரசியல் சட்டம் என்றும், சம்ஸ்கிருதம் கலந்து அரசியல் சாசனம் என்றும் எழுதுகிறோம். ஆனால் தமிழ்நாட்டுத் தமிழில் இதை துல்லியமாக அரசமைப்புச் சட்டம் (அரசை அமைக்கும் சட்டம்) என்று எழுதுவோரும் உண்டு. ஆனால், இந்தக் குழப்பங்களுக்கு அப்பாற்பட்டு, ஈழத் தமிழில் இதை அரசியல் யாப்பு என்பர். அழகான சொல். இதைப்போல தமிழ்நாடும், ஈழமும் தமிழ்மொழியிலேயே கொள்ளவும் கொடுக்கவும் நிறைய உண்டு. ஆனால், தமிழ்நாட்டு வாசகர்கள் பெருமளவிலும், இலங்கை வாசகர்கள் குறைந்த அளவிலும் படிக்கும் இந்த செய்திகளில் இலங்கை வழக்காறுகளை எந்த அளவுக்கு வைத்துக்கொள்வது, தமிழ்நாட்டுச் சொற்களை எந்த அளவுக்குப் புகுத்துவது என்பது, செய்திகளை எடிட் செய்யும்போது எங்களுக்குத் தோன்றும் சவாலாக இருக்கும். 

இது தவிர, இந்தி, தெலுங்கு, மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி மொழிகளில் அந்தந்த நிலத்துக்கே உரிய அரசியலின் தாக்கம் இருப்பதையும் கவனித்திருக்கிறேன். ஒவ்வொரு மொழியிலும் சில சொற்களைக் கற்றுக்கொண்டு அந்த மொழி நண்பர்களிடம் பேசும்போது கிடைக்கும் மகிழ்ச்சியும், நேயமும் அளவற்றது.

இது தவிர தொழில்நுட்பத்தின் பயன்பாடு பற்றியும் கேட்டிருக்கிறீர்கள். இதை முழுமையாக, விரிவாக ஆராய்வது தனி வேலை. 

சுருக்கமாக சொல்வதானால், டிஜிடல், பல்லூடக கட்டமைப்பில், அனாலிடிக்ஸ் எனப்படும் பகுப்பாய்வு, சமூக ஊடகங்களில் செய்திகளைப் பகிர்வது, டிரெண்ட் எனப்படும் விவாதப் போக்குகளை ஆராய்ந்து அறிந்து அதற்கேற்ப செய்திகளைத் தயாரிப்பது, தேடுபொறிகளுக்கு ஏற்ப தலைப்புகளை, உள்ளடக்கங்களை திட்டமிடுவது (எஸ்.இ.ஓ.) ஆகிய தளங்களில் தொழில்நுட்பத்தின் பயன்பாடு உண்டு. இவை இல்லாமல், டிஜிடல் ஊடகங்களைத் திட்டமிட முடியாது. இது இதழியல், மொழியியல், தொழில்நுட்பம், சமூக ஊடகவியல் ஆகிய பல துறைகள் சங்கமிக்கும் புள்ளி. இவற்றைக் கற்பதும், போதிப்பதும் ஒரு பேட்டியில் நிகழக்கூடியது அல்ல. ஆனால், ஊடகம் கற்க விரும்புகிறவர்கள் கவனம் செலுத்தவேண்டிய புள்ளி. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *