பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் முதன் முறையாகப் பழவேற்காடு ஏரிக்குச் சென்றிருந்தேன். தனுஷ்கோடி உவர்நீர்ப்பரப்பில் பார்த்தது போலவே, அங்கும் வலசை வரும் பூநாரைகளின் பெருங்கூட்டத்தைக் கண்டு பூரித்து நின்றேன். இந்தியாவின் இரண்டாவது பெரிய உப்புநீர் ஏரியான பழவேற்காடு ஏரியின் 450 சதுர கிலோமீட்டர் பரப்பில் ஒரு சிறு பகுதிதான் தமிழக எல்லைக்குள் அமைந்திருக்கிறது. கொற்றலையாறு அதன் உயிர்ப் பிணைப்பாக இருக்கிறது. பழவேற்காடு ஏராளம் பன்னாட்டு வலசைப் பறவைகளின் நன்னபிக்கை முனை. ஏரியின் தமிழகப் பகுதியைச் சூழ்ந்துள்ள 29 கிராமத்து மீனவர்களுக்கும் நம்பகமான உணவாதாரமாக இருந்தது. பழவேற்காடு ஆறு – அங்குள்ள மீனவர்கள் அப்படித்தான் அழைக்கிறார்கள் – 2014இல் பார்த்தபோது சுருங்கி, மாசுபட்டுப் போயிருந்தது. ‘பழவேற்காடு அன்றைக்கு துபாய் போல இருந்தது’ என்று கவலையோடு சொன்னார் இராஜசேகரன் (கோட்டைக்குப்பம்). அந்த ஏரி சிதைவுற்ற கதையை நாராயணன், துரைமுத்து, மகேந்திரன் போன்றவர்கள் சொன்னார்கள். லார்சன் – டியூப்ரோ உள்ளிட்ட பல தொழிற்சாலைகள், இறால் பண்ணைகளோடு, இயந்திரப் படகு மீனவர்களின் பேராசையும் சேர்ந்து இந்த அட்சயப் பாத்திரத்தைப் பாழாக்கிவிட்டது.
தமிழ்நாட்டுக் கடற்கரையில் பழவேற்காடுக்கு இணையான ஒரு துயரக் கதையைச் சொல்ல வேண்டுமென்றால் அது நெம்மேலி, கழிவெளி நீர்நிலைகளின் கதையாக இருக்கும்.
நெம்மேலி ஈரநிலம்
செங்கல்பட்டு ஏரிகளின் மாவட்டம். பழவேற்காடு உப்புநீர் ஏரியைப் போலவே, தமிழ்நாட்டுக் கடற்கரையில் அமைந்துள்ள சூழலியல், பல்லுயிரிய முக்கியத்துவம் வாய்ந்த மற்றோர் ஈரநிலம் நெம்மேலி சதுப்புநிலம். இதன் நீர்ப்பிடிப்புப் பகுதி பல்வகைச் சூழலியல் கட்டமைப்புகளின் தொகுப்பு. 121 நீர்நிலைகள் தவிர, மனமத்தி, சிறுதாவூர், ஆமூர், தண்டலம், பையனூர், கொண்டங்கி உள்ளிட்ட 69 ஏரிகள், இள்ளலூர், மடையத்தூர், தண்டலம், ஆலந்தூர், அஞ்சூர், காட்டூர், சிறுகுன்றம், திருக்கழுகுன்றம், வல்லம், ஒரகடம் உள்ளிட்ட 20 காப்புக் காடுகள் இணைந்த இந்த நீர்ப்பிடிப்புப் பகுதியிலிருந்து ஓடிவரும் நன்னீரானது, கடலொட்டிய நில அமைப்பின் காரணமாக தேங்கி, கடல் ஏற்றவற்றங்களால் நுழையும் உவர்நீருடன் கலந்து, பரந்த உவர்நீர் உயிர்ச் சூழலை உருவாக்குகிறது.
சென்னைக்குத் தெற்காக முட்டுக்காடு கழிமுகம் தொடங்கி, தெற்கே கொக்கிலமேடு கழிமுகம் வரை கிழக்குக் கடற்கரைச் சாலைக்கும் பழைய மகாபலிபுரம் சாலைக்கும் இடையில், ஏறத்தாழ 30 கிலோமீட்டர் நீளத்தில் அமைந்திருக்கிறது நெம்மேலி கழி. இது ஓர் உவர்நீர்ப் பரப்பு. உவர்ச் சதுப்பு (salt marsh), மண்திட்டு (mudflat), அலையாத்திகள் உள்ளிட்ட பலவகைச் சூழலியல் கட்டமைப்புகளின் சேகரம்; 230க்கு மேற்பட்ட பறவைகளின் உய்விடம். இராம்சார் தலத்துக்கான நான்கு தகுதிக் கூறுகள் அமைந்த நீர்நிலை.
மாமல்லன் நீர்த்தேக்கம்
8,500 ஏக்கர் பரப்பு கொண்ட நெம்மேலி ஈரநிலத்தில் மாமல்லன் நீர்த்தேக்கத் திட்டத்துக்கு 2026 ஜனவரியில் அடிக்கல் நாட்டினார் மேனாள் முதல்வர் ஸ்டாலின். அதன் நோக்கம் ‘திருப்போரூர், திருக்கழுகுன்றம் வட்டங்களுக்கு நன்னீர் வழங்குவதற்காக’ என பின்னாளில் அறிவிக்கப்பட்டது.
அண்ணா பல்கலைக் கழகத்தின் நீர்வள மேம்பாட்டுத் துறை அளித்த தொழில்நுட்ப/பொருளாதார சாத்தியப்பாடு (Pre feasibility study) அறிக்கை, இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் வழங்கிய மூன்று மாத சூழலியல் ஆய்வறிக்கை- இந்த இரண்டும்தான் மாமல்லன் நீர்த்தேக்கத் திட்டத்தின் அடிப்படை என்கிறார்கள். மேற்குறிப்பிட்ட சூழலியல் ஆய்வு பருவமழைக் காலத்தில் அல்ல, கோடை மாதங்களில் நிகழ்த்தப்பட்டது என்பது ஆய்வறிக்கையின் போதாமை ஆகும். தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கிழக்குக் கடற்கரைச் சாலைத் திட்டத்தில் இதே தவற்றை இழைத்து, பிறகு பாதையைத் திருத்த வேண்டியதாயிற்று.
மாமல்லன் நீர்த்தேக்கத் திட்டத்தின் முதற்கட்டமாக 4,375 ஏக்கர் பரப்பைச் சூழ்ந்து தடுப்பணை (மடு) அமைக்கப்படுகிறது. இதற்காக தொட்டமைந்த பக்கிங்ஹாம் கால்வாயின் பாதையும் மாற்றியமைக்கப்படுகிறது. அது மட்டுமல்ல, கடலுடனான கால்வாயின் தொடர்பு தடைசெய்யப்படுகிறது.
தரவுகளின் போதாமை
மாமல்லன் நீர்த்தேக்கம் ஒரு நல்ல நோக்கத்தை முன்வைத்து, தவறான தரவுகளின் அடிப்படையில், தவறான இடத்தில் தொடங்கப்பட்டுள்ள பிழையான திட்டம்.
ஒரு நீர்நிலையின் நீரியல், சூழலியல் கூறுகளைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் குறைந்தபட்சம் ஓராண்டு பருவகால சுழற்சியைப் படித்தாக வேண்டும். அதற்குக் குறைவான ஆய்வினை அறிவர்ப் பட்ட மதிப்பீட்டுக்குக் கூட பல்கலைக்கழகங்களில் ஏற்க மாட்டார்கள். மதுரைப் பல்கலையில் 1994இல் நானும் அவ்வாறுதான் ஆய்வு மேற்கொண்டேன். சில பல்கலைக் கழகங்களில் நீர்நிலைகளின் ஈராண்டு, மூன்றாண்டு பருவச் சுழற்சியைப் படிப்பதுண்டு. கழிமுகங்கள்/ உவர்ச் சதுப்புகளைப் பொறுத்தவரை, கோடை காலத்திலும் பருவமழைக் காலத்திலும் நீரியல், சூழலியல், பல்லுயிரியக் கூறுகள் மாறுபட்டிருக்கும். கோடை காலத்தில் மணல்மேடு கட்டும் கழிமுகங்களில் ஓதங்கள் முற்றாகத் தடைபட்டிருக்கும். பருவமழைக்காலத்தில் கழிமுகத்துக்கு வந்துசேர்கிற உயிர்ச்சத்துகள் சேற்றில் படிந்து சேகரமாகி, மழைசாராக் காலத்தில் சிதைந்து, எளிமைப் படுத்தப்பட்டு ஓதங்களால் அவை கழிமுக நீரில் கலக்கும் உயிர்ச்சத்துகளின் இந்த ஆண்டுச் சுழற்சிதான் பாசி, மிதவை உயிரி உள்ளிட்ட தாவரங்களின் வளர்ச்சிக்கு அடிப்படை.
ஓர் உவர்நீர்நிலையில் பருவமழை, ஓதங்கள், நீரியல், காற்று, அடித்தரை மண், பல்லுயிரியம், அவற்றைச் சார்ந்த உள்ளூர்ச் சமூகங்களின் வாழிட, உணவாதாரம் இவற்றையெல்லாம் பழுதின்றிப் படித்த பிறகே இது போன்றொரு பெருந்திட்டம் தீட்டப்பட வேண்டும். ஆனால் முறையான சூழலியல் தாக்க மதிப்பீடு, சமூகத் தாக்க மதிப்பீடு ஏதும் இல்லாமல், தமிழக மீன்வளத்துறையின் தடையின்மைச் சான்றிதழ் பெறாமல் திட்டப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன என்பதே நாம் அறியப்பெறும் செய்தி. அரிதான பனிப்பூண்டு (Sundew / Drosera) தாவரங்கள் மற்றும் உவர் நிலத்தில் இனப்பெருக்கம் செய்யும் 13 வகை கடல்சார் உயிரினங்கள் (மீன், இறால், நண்டு) குறித்த தகவல்கள் விரைவு மதிப்பீட்டு அறிக்கையில் விடுபட்டுள்ளதாக கள ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இயற்கை என்னும் சங்கிலிப் பிணைப்பு
ஒரு சங்கிலியின் பலம் என்பது அதன் ஆகப் பலவீனமான கண்ணியைப் பொறுத்தது. நீர்நிலைகள் திணைநிலங்களை இணைக்கும் கண்ணிகள். நீர்நிலைகள் ஊடறுக்கப்பட்டால் நிலம் அதன் இயல்பை இழந்துபோகும். சூழலியல் கட்டமைவை ஒரு சங்கிலி என்று எடுத்துக்கொண்டால் உயிரினங்களே கண்ணிகள். நெம்மேலி ஆறு ஒற்றை நீர்ப்பரப்பு; அதில் குறிப்பிட்ட பகுதியை மூடிவிட்டால் உயிர்ச்சங்கிலி அறுந்துபோகும்.
இயற்கை ஒரு சீர்நிலை அமைப்பு. அனைத்து உயிரினங்களும் ஒன்றுடன் ஒன்று இணைக்கப் பெற்றுள்ளன. ஒரு நீர்நிலையில் பாசி ஒரு கண்ணி; புழு ஒரு கண்ணி; மீன் ஒரு கண்ணி. இதில் எந்தக் கண்ணி அறுந்தாலும் சூழலியல் கட்டமைப்பு நலிந்துபோகும். ஒரு வலசைப் பறவையின் வாழ்க்கைச் சுழற்சியில் அது தங்கல் செய்யும் ஒவ்வோர் இடமும் இன்றியமையாதது. அவற்றில் ஏதொன்று அழிந்தாலும் அந்தப் பறவையினம் அழிந்து போகும். ஓர் இனத்தின் அழிவு என்பது சூழலியல் சிதைவின் அடையாளம். இன்றைக்கு சூழலியல் கட்டமைவுகளின் அழிவினால் உலகளவில் நாள்தோறும் பல இனங்கள் அழிவைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. வளர்ச்சித் திட்டங்கள் போன்ற மனித இடையீடுகள் இதற்கு முழுமுதற் காரணமாகும்.
நீர்நிலைகளின் பல்முனைச் சேவைகள்
இயற்கையின் பெருங்கொடையான உவர்நீர்ப்பரப்புகள் சூழலியல், பல்லுயிரியம், பொருளாதாரம் உள்ளிட்ட பன்முக சேவைகளை வழங்குகின்றன. ஆனால் பொருளாதாரம் என்கிற ஒற்றை அளவுகோலின் அடிப்படையில்தான் மனிதர்கள் இயற்கையை நோக்குகின்றனர். நன்னீர்பரப்புகள் தருகிற சூழலியல் சேவைகள் அளவிட முடியாதவை. நீரியல் சுழற்சி, நிலத்தடிநீர்ப் புத்தாக்கம், காலநிலைத் தணிப்பு, பண்பாட்டுச் சேவை உள்ளிட்ட ஏராள நன்மைகள் நீர்நிலைகளால் கிடைக்கின்றன. ஈரநிலங்கள் வெள்ளநீர் மேலாண்மையிலும் வறட்சி தவிர்ப்பிலும் முக்கிய பங்கு ஆற்றுகின்றன. ஈரநிலங்கள் அழிந்துபோனால் பெருவெள்ளச் சூழலில் குடியிருப்புகள் நீர்க்கூண்டாக மூழ்கிப்போகும்.
பறவைகள் உய்விடம்
நெம்மேலி உவர்நீர்ப் பரப்புக்கு “சூழல் அறிவோம்” குழுவின் பறவை ஆர்வலர்கள் ராம்குமாரும் மதனும் 27 ஜூலை 2026இல் என்னை அழைத்துச் சென்றிருந்தனர். முட்டுக்காடு கழிமுகம், கோவளம், உப்பங்கழிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு என்னை அழைத்துச் சென்று, பலவகைச் சூழலியல் கட்டமைவுகளையும், ஒவ்வோர் இடத்திலும் புழங்கும் பறவைகளையும் காண்பித்தனர். நெம்மேலி உவர்நீர்ப்பரப்பு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த சூழலியல் கருவூலம் என்பதை நான் கண்டுணரக் கிடைத்த வாய்ப்பாக அப்பயணம் அமைந்தது.
..தொடர்ந்து 2026 ஆகஸ்ட் 2இல் சூழல் அறிவோம் குழுவின் ஏற்பாட்டில் நெம்மேலி இயற்கை நடையிலும் கலந்துகொண்டேன். இக்குழுவின் ஏற்பாட்டில் நான் கலந்துகொள்கின்ற மூன்றாவது இயற்கை நடை. ராம்குமாருடன் காலை ஆறு மணிக்கு அங்கே சென்று சேர்ந்துவிட்டேன். ஏறத்தாழ 40 பறவை ஆர்வலர்கள் அந்த நடையில் கலந்து கொண்டிருந்தனர். சிறார் முதல் முதியவர்கள் வரை. மாணவர்கள் முதல் தகவல் தொழில்நுட்பத் துறையினர், பேராசிரியர்கள் வரை. மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா மாநிலத்தவர்களும் அந்தக் குழுவில் இருந்தனர்.
‘பறவை மாமா’ சந்துரு அவர்களை வழிநடத்தினார். அவர் ஒரு பெரிய தொலைநோக்கியை அதற்கான நிலைநிறுத்தியுடன் காரில் கொணர்ந்திருந்தார். அதை இயக்கி, ஆர்வலர்கள் பறவைகளை நோக்க உதவுவதற்கு இரண்டு இளைஞர்கள் உடன் நின்றார்கள். பறவைகளின் மீதான பெருங்காதலோடும், இளம் நோக்கர்கள் மீதான தனிப்பட்ட அக்கறையோடும் அவர் பறவைகளைச் சுட்டிப் பேசிக்கொண்டிருந்தார். புதியவர்களைக் கவனத்தோடு அணுகினார்.
ஆர்வலர்களில் பலரும் சிறிய, பெரிய பைனாக்குலர்களுடன், உவர்நீர்ப்பரப்புகளில் புழங்கும் பறவைகளின் படங்களுடன் வழிகாட்டிக் குறிப்பேடுகள் வைத்திருந்தனர். பலர் உடன் கொண்டு வந்திருந்த குறிப்பேடுகளில் அன்றைக்குப் பார்த்த பறவைகளைக் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தனர். ராம்குமார், மதன் இருவரும் பறவைகளின் வண்ணப்பட அட்டைகள் வைத்துக் காண்பித்துக் கொண்டிருந்தனர். 1991இல் கன்னியாகுமரி மாவட்ட காப்பு வனத்தில் முதன்முதலாகக் கிடைத்த இயற்கை நடை, பறவை நோக்குதல் அனுபவங்களை நினைவூட்டியது இந்நடைப் பயணம். இந்திய பறவையியலின் தந்தை சலீம் அலியின் மாணவர் இராபர்ட் கிரப் ஓர் ஐந்துநாள் பயணத்தை ஏற்பாடு செய்து, அப்போது எங்களை வழிநடத்தினார்.
வாழிடப் பன்மயமும் உயிர்ப் பன்மயமும்
ஒரு சூழலியல் பெருங்கட்டமைவுக்குள் பல்வகை வாழிடங்கள் அமைந்திருக்கும். பலவகைப் பதார்த்தங்களை ருசியுடன் வழங்கும் ஓர் உணவு விடுதியைத் தேடி பல வகை உணவு இரசிகர்கள் தொலைவிலிருந்தும் வருவர். போலவே, விரும்பிய இரை உத்தரவாதமாய்க் கிடைக்கும் இடத்தைத் தேடி வலசைப் பறவைகள் ஆண்டுதோறும் வருகின்றன. இனப்பெருக்கத்துக்கும், குஞ்சுகளுக்கும்கூட அப்படித்தான். பறவைகளின் உணவுகளும் உணவுதேடல் முறைகளும் தனித்துவமானவை. அதற்கேற்றவாறு அவற்றின் கால்களும் அலகுகளும் தகவமைந்துள்ளன. நத்தைக்குத்தி நாரை, மீன்கொத்தி, நாரைகள், கொக்குகள், வாத்துகளின் அலகுகளைக் கவனித்தால் புரியும்.
கோவளம் – நெம்மேலி உவர் நீர்ப்பரப்பு ஒரு முக்கியமான பறவைகள் உய்விடமாக உள்ளது. 230க்கு மேற்பட்ட உள்ளூர் மற்றும் வலசைப் பறவைகள் கோவளம் – நெம்மேலி உவர்நீர்ப் பரப்புகளைச் சார்ந்திருக்கின்றன. பூநாரை, செந்நாரை, பெலிக்கான், கொக்கு, ஆள்காட்டி, பெருங்கண்ணி (Great thick knee), வாத்து, நீர்க்கோழி, ஆண்டுதோறும் வலசைக் காலங்களில் ஒரே நேரத்தில் 16,000 வலசை வாத்துகள் உட்பட மொத்தம் 45,000 பறவைகளைக் காண முடிவதாக மதராஸ் இயற்கையியலாளர் குழுமத்தின் (Madras Naturalist Society) கள ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில் 91 பறவையினங்கள் வலசை வருபவை; 31 இனங்கள் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் அட்டவணை 1இல் சேர்க்கப்பட்டவை. பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு இணையத்தின் (IUCN) சிவப்புப் பட்டியலில் வருகிற அழிவின் விளிம்பிலுள்ள பறவையினங்களில் 25 இங்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
இங்கு 47 பறவையினங்கள் (தோல் குருவி, கென்டிஷ் உப்புக்கொத்தி, ஆள்காட்டிப் பறவை, நெடுங்கால் உள்ளான் போன்றவை) இனப்பெருக்கம் செய்கின்றன என்கிறார், பறவை ஆர்வலர் மதன். அழிவின் விளிம்பிலுள்ள பெருங்கண்ணி மற்றும் செந்தலை வல்லூறு (Red-necked Falcon) ஆகியவையும் அடங்கும்.
நன்னீரும் கடல்நீரும் கலக்கும் நெம்மேலி ஈரநிலம் ஒற்றைத் தன்மை கொண்ட நீர்நிலை அல்ல, கழிமுகம், சதுப்பு, சேற்றுக்கழி, அலையாத்தி, உப்பங்கழிகள், புல்பரப்புகள், மரங்கள் என்பதான பலவகை வாழிடங்கள் கொண்டது. இனப்பெருக்கத்தை முன்னிட்டு காலம்தோறும் இங்கு வருகிற பறவைகள், மீன்கள் உள்ளிட்ட உயிரினங்கள் அதற்குத் தேர்ந்துகொள்ளும் இடங்களும் காலங்களும் வேறுபட்டவை. குஞ்சுகளுக்கான இரையும், பாதுகாப்பான புகலிடமும் தடையின்றிக் கிடைக்கும் காலங்களை, இடங்களை வலசை உயிரினங்கள் தேர்வு செய்கின்றன. உப்பங்கழிகளின் வரப்புகளில் முட்டையிட்டுப் பாதுகாக்கும் சில வலசைப் பறவைகளை அங்கு பார்க்க நேர்ந்தது. வளங்களுக்காக இனங்களுக்கிடையே போட்டியோ மோதலோ தேவயில்லாத அளவுக்கு இயற்கை படிமலர்ச்சி பெற்றுள்ளது.
இயற்கைக்கு இழப்பீடு தர முடியாது
‘பழைய மகாபலிபுரம் சாலை மேம்பாலம் அருகே போடப்பட்டுள்ள மெட்ரோ ரயில் கட்டுமானத் தடைகளால், 2024-இல் 84 மீட்டராக இருந்த ஒக்கியம் மடுவின் நீர்வழிப்பாதை எட்டு மீட்டராகச் சுருங்கியுள்ளது. இதனால் இயல்பான நீரோட்டம் தடைப்பட்டு நீண்டகாலமாகத் தேங்குவதால், மே, ஜூன் மாதங்களில் வழக்கமாக உருவாகும் வறண்ட மண் திட்டுகள் (Mudflats) இந்த ஆண்டு உருவாகவில்லை’ என்கிறார் ஆர்வலர் தீபக். தரையில் கூடு கட்டி இனப்பெருக்கம் செய்யும் பறவைகளின் வாழிடத்தை வெகுவாகப் பாதித்துள்ளது. அதோடு ஈரநிலத்தின் நன்னீர் உவர்நீர்ச் சமநிலையும் குலைந்துள்ளது.
செயற்கையாக தீவுகளை உருவாக்கி, திட்டத்தினால் பறவைகளுக்கு ஏற்படும் பாதிப்பைத் தவிர்ப்போம் என்பது நடைமுறையில் பயனற்றது. கடல் கடந்து, 2000 கிலோமீட்டர் தொலைவில் கிரேட் நிக்கொபார்த் தீவில் துறைமுகம்/ விமானநிலையம் போன்ற வளர்ச்சித் திட்டங்களுக்காக அழிக்கப்படும் 6000 ஏக்கர் ஆதி வனத்தை ஈடு செய்வற்காக ஹரியானாவில் வனங்களை உருவாக்குவோம் என்பது போன்றதுதான் இந்த முயற்சியும்.
பல்சமூக உணவாதார நம்பிக்கை அழிகிறது
கரைக்கடலின் மீன்வளம் அடிப்படையில் கரையிலுள்ள கழிமுகம் உள்ளிட்ட உவர்நீர்ப் பரப்புகளைச் சார்ந்திருக்கிறது. பருவமழை கொணரும் நன்னீரும் உயிர்ச்சத்துகளும் மட்டுமல்ல, குஞ்சுமீன்களும் இங்கிருந்துதான் கடலுக்குப் போகின்றன. கடலில் பாடு குறையும் பருவங்களில் விழுப்புரம் கடலோர மீனவர்கள் வாழ்வாதாரத்துக்கு பக்கிங்ஹாம் கால்வாயை நம்பியிருப்பது போலவே, செங்கல்பட்டு கடலோர கிராமங்களைச் சார்ந்த 12,000த்துக்கு மேற்பட்ட பாரம்பரிய மீனவர்களுக்கு நம்பகமான வாழ்வாதாரமாக இருந்து வருகிறது நெம்மேலி ஈரநிலம். மீனவர்கள் இந்நிலத்தை 14 பரவல்களாகப் பிரித்து கொண்டவலை, பன்னுவலை பயன்படுத்தி மீன்பிடிக்கின்றனர்.
‘கடலைப் பொறுத்தவரை சீசனுக்கு மீன் வாரதுன்னு எல்லாம் இப்ப இல்ல. தை, மாசி தெளிவுல கவலை, நெத்திலி, எறா, கானாங்கெளுத்தி கெடைக்கும். கோடையில கடலு ரஃபாயிடும். அப்ப கலக்குல வாளை, நண்டு, பருவ மீனுங்க கெடைக்கும். புரட்டாசில வஞ்சிரம் மாதிரி மீனுங்க கெடைக்கும். நெம்மேலி ஆத்துல சொறா, பாரை, வஞ்சிரம்,சீலா எல்லாம் ஆற்றைச் சுத்தியிருக்கற 16 ஊர்ல இருந்தும் பரவலா மீன்பிடிக்க வருவாங்க; கோவளம் ஊர்ல 540 தலைக்கட்டு இருக்கு; அதுல 250பேர் எப்போதும் நெம்மேலி பரவல்லதாம் வருவாங்க. சீசன்ல எல்லாருமே வந்துருவாங்க’ என்கிறார் நாராயணன் (52, கோவளம்). முட்டுக்காடு கழிமுகத்துல இப்ப யாரும் மீன்பிடிக்கப் போறதில்ல. அங்க கழிவுநீர் வந்திடிச்சி. ‘நெம்மேலி ஆத்துல உற்பத்தியாகற எறாதாம் கடலுக்குப் போய்ச் சேருது. இதை நீர்த்தேக்கமா மாத்துனா எங்கள் வாழ்வாதாரம் அழிஞ்சிடும், அதோட, கடல்தண்ணி குடியிருப்புக்குள்ள புகுந்து அழிச்சுடும்’ என்கிறார் இவர்.
பொதுவாக இருளர் பழங்குடிகளை எவரும் மீன்பிடி தொழிலுடன் இணைத்துப் பார்ப்பதில்லை. நிலப் பயன்பாடு முறைகள் மாறிப்போன புதிய சூழலில் அவர்கள் சில தலைமுறைகளாக உள்நாட்டு நீர்நிலைகளில் மீன்பிடிக்கவும் செய்கின்றனர். இருளர் உள்ளிட்ட உள்நாட்டு மீனவர்கள் எண்ணூர், முட்டுக்காடு, நெம்மேலி உள்ளிட்ட உவர்நீர்ப்பரப்புகளில் இறால் தடவிப் பிழைப்பு நடத்துகின்றனர். நீர்மட்டத்தைப் பொறுத்து இறாலை தடவியும், மூழ்கியும் பிடிப்பார்கள். சில நேரங்களில் வலை போட்டும் பிடிப்பதுண்டு.
பெரிய நெம்மேலியில் பழங்குடி இருளர் சமுதாய குடியிருப்பான கன்னியம்மன் நகருக்கு நாராயணன் (கோவளம்) எங்களை அழைத்துச் சென்றிருந்தார். மோகனா (48) ஐந்து வயதிலேயே எண்ணூர் ஓடையில் இறால் தடவப் போனவர். வலை வீசுகிற பல மீனவர்கள் பலரும் மோகனா நகர்கிற பாதையைப் பின்தொடர்கிற அளவுக்கு அவர் அனுபவசாலி. ‘அடுப்புல ஒல ஏத்தி வெச்சுகினு இறால் தடவப் போனேன்னா, அன்னிக்குப் பொழப்புக்குக் கெடச்சுடும். வீட்டுக்காரர் நண்டு பிடிச்சுட்டு வரேன்னு சொல்லிட்டுப் போனார்னா, 300 ரூபாய்க்காவது புடிச்சினு வந்துருவாரு, இப்ப அந்த நம்பிக்கை செத்துப்போச்சு! கடலை மறிச்சுட்டாங்க’ என்கிறார் மோகனா.
இந்த ஆழமற்ற பரந்த நீர்ப்பரப்பை மீனவர்கள் ‘பரவல்’ என்கின்றனர். உவர்நீர்நிலைகளின் உயிர்ச் செழுமைக்கு அவற்றின் குறைவான ஆழம் முக்கியமான காரணம். கடல் ஏற்றவற்றத்தைப் பொறுத்து கணுக்கால் அளவு முதல் முழங்கால் அளவு வரை ஆழம் மாறுபடும். பரவலை நன்னீர்த் தேக்கமாக மாற்றினால் அதன் மீன்வளம் அற்றுப் போகும் என்பது மீனவர்களின் கவலை. 2026 ஜனவரியில் நெம்மேலி நீர்த்தேக்கத் திட்டப்பணி தொடங்கிய பிறகு கடலிலிருந்து ஓதநீர் உள்ளே வருவது நின்றுபோனது. கேளம்பாக்கம், பையனூரில் கடல் ஓதநீர் நுழையும் பாதைகள் அடைக்கப்பட்டுவிட்டன. இனிமேல் அங்கே சினை இறால்கள் நுழைய வாய்ப்பே இல்லை. கோவளத்தில் இயங்கிவருகிற மைய அரசின் நிறுவனமான உவர்நீர் மீன்வளர்ப்பு மையம் (CIBA, ICAR) பண்ணை அமைப்பதற்காக மடுக்களை எழுப்பி, மழைவெள்ளம் ஓடிவருகிற பாதைகளை மறித்துவிட்டது. இது உள்நாட்டு, கடலோர மரபார்ந்த மீனவர்களின் உணாவாதாரத்தை அழித்துவிடும்; அது மட்டுமல்ல, புயல்காலத்தில் கடல்வெள்ளமும், பெருமழைவெள்ளமும் கிராமங்களைச் சூழ்ந்து அழிக்கும் பேரிடர் அபாயநிலை.
நீர்நிலை ஊடறுப்பு
கிழக்குக் கடற்கரைச் சாலை கடலோர நகரங்களை இணைத்து, சாலைப் பயணத்தைச் சொகுசாக்கியிருக்கிறது என்பதே மக்களின் புரிதல். ஆனால் அதற்கு இயற்கையும் கடலோரச் சமூகங்களும் என்ன விலை கொடுத்திருக்கின்றன என்பது பேசுபொருள் ஆவதில்லை. சாலையைத் தொட்டமைந்த பகுதிகளில் ஆலைகள், பண்ணை விடுதிகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் பெருகின. கடற்கரை மணல் மேடுகள் சிதைக்கப்பட்டன. ஆனால் கடலை ஒட்டி வாழ்ந்தாகவேண்டிய கடற்கரைச் சமூகங்கள் பலவும் இச்சாலைக்கு அப்பால் நகர்த்தப்பட்டன.
கிழக்குக் கடற்கரைச் சாலையினால் பாதிப்புக்குள்ளான மற்றொரு முக்கியமான சூழலியல் கட்டமைவு நெம்மேலி ஈரநிலம். இதனை ஊடறுத்தவாறு இந்த நெடுஞ்சாலை. ஓதமும் மழைவெள்ளமும் நீர்நிலையில் கலக்கும் வாய்ப்பு நிரந்தரமாகத் தடுக்கப்பட்டுவிட்ட நிலையில், ஒரே நீர்நிலையில் புழங்கிவந்த உயிரினங்கள் இரு கூறாக்கப்பட்டுவிட்டன. இரவில் சாலையைக் கடந்து மறுபுறம் போக முயலும் நண்டு, தவளை, பாம்பு போன்ற உயிரினங்கள் விரையும் வாகனங்களின் சக்கரங்களில் அரைக்கப்பட்டுக் கிடப்பதைக் காலையில் கடந்து செல்வோர் கவனிக்கலாம். திருவனந்தபுரம் – நாகர்கோவில் நான்குவழிப்பாதை திட்டத்தில் சூழலியல் செயல்பட்டாளர் லால்மோகன் முன்னெடுத்த வழக்கினால் வில்லுக்கீறி, சுங்கான்கடை பகுதியிலுள்ள நீர்நிலைகளில் தூண்களின்மீது சாலை அமைக்கப்படுகிறது. நெம்மேலி ஈரநிலத்திலும் இது போன்ற செயல்பாட்டாளர் இடையீடு இங்கு நிகழாமல்போனது கெடுவாய்ப்பு. நான்குவழி/ எட்டுவழிச் சாலைகள் காலநிலைத் தாக்கத்தை மேலும் மோசமாக்குகின்றன.
உப்புநீக்க ஆலையின் சூழலியல் அழுத்தம்
சென்னையின் வடக்கே மீஞ்சூரில் அமைக்கப்பட்டுள்ள கடல்நீர் உப்புநீக்க ஆலையில் நாளொன்றுக்கு 11கோடி லிட்டர் நன்னீர் உற்பத்தியாகிறது; சென்னைக்குத் தெற்கே நெம்மேலியில் இயங்கிவருகிற இரண்டு ஆலைகளில் 25 கோடி லிட்டர் நன்னீர் உற்பத்தி செய்கின்றனர். போரூரில் 40 கோடி லிட்டர் ஆலை நிறுவும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கின்றன. இந்த நான்கு ஆலைகளில் நாள்தோறும் 76 கோடி லிட்டர் நன்னீரை உற்பத்தி செய்வதற்கு 152 கோடிலிட்டர் கடல்நீரை உறிஞ்சியெடுத்து, 76 கோடி லிட்டர் உப்புக் கழிவுநீரை வெளியேற்ற வேண்டியிருக்கும். இப்படி வெளியேற்றும் கழிவுகளில் கலந்திருக்கும் குளோரின் மற்றும் நச்சு இரசாயனங்கள் கடல்நீரின் இயல்பை மாற்றி, கடலுயிரினங்களைப் பாதிக்கின்றன. கடல்நீரை உறிஞ்சியெடுக்கும் குழாய்களில் குஞ்சு மீன்களும் மிதவை உயிரிகளும் சிக்கி அழிகின்றன. நெம்மேலியிலுள்ள இரண்டு ஆலைகளில் உறிஞ்சுகுழாய் வடிகட்டிகள் ஜெல்லிமீன்களால் பழுதுபட்டதன் காரணமாக 2026 ஜூலையில் நன்னீர் உற்பத்தி 50 விழுக்காடாகக் குறைந்துபோனது. வழக்கமாக ஓரிரு ஆண்டுக்கு ஒருமுறையாவது ஜெல்லிமீன்களால் வடிகட்டிகள் அடைத்துக்கொள்ளுகின்றன. இம்முறை வழக்கத்தைவிட பெரிய ஜெல்லிமீன்கள் வந்துள்ளதாக ஆலை நிர்வாகம் தெரிவித்தது. இது இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் சென்னைக் கரைக்கடல்களில் பெருந்தொகையில் வந்த மலேஷிய நெட்டில் (கிறைசயோரா சைனென்சிஸ் – Chrysaora chinensis) இனமாக இருக்கலாம்.
ஜெல்லிமீன்களின் மிகைப் பெருக்கம்
இந்த இனம், மத்திய இந்தோ பசிஃபிக் பகுதியைப் பிறப்பிடமாய்க் கொண்டது. ஜெல்லிமீனின் உடலில் 97% நீர்தான். ஜெல்லிமீன் என்பது மீனல்ல, நீரோட்டத்தின் தயவினால் நகர்கிற மிதவை உயிரி. முதுகு நாணற்ற ஆதி உயிரின வகைகளில் ஒன்று. கடலாழங்களிலும், கிறைசயோரா சைனென்சிஸ் போல பரப்புக்கடலிலும் வாழ்பவை. 50 கோடி வருடங்களுக்கு முன்னால் தோற்றம் கொண்ட இந்த உயிரிகள், வெதுவெதுப்பான கடல்பகுதிகளில் அதிகமாகப் புழங்குகின்றன. வெப்பநிலை அதிகமாக நிலவும் சூழலிலும், உயிர்ச்சத்துகள் நிறைந்த பகுதிகளிலும் மெடூசாக்கள் வேகமாய் இனப்பெருக்கம் செய்து பல்கிப்பெருகும். ஐந்து, பத்து சதுர கிலோமீட்டர் பரப்பை ஆக்கிரமித்து, ‘ஜெல்லிமீன் அலை’யை உருவாக்கும். அதிவெப்பச் சூழலில் பாலிப் மொட்டுகள் படுவேகமாய்ப் பிளவுற்று (strobilation), ஏராளம் ஜெல்லிமீன் குஞ்சுகளைப் பிறப்பிக்கும். உயிர்ச்சத்துகள் நிறைந்த சூழலில் ஜெல்லிமீன்கள் மேலும் பல்கிப் பெருகிப் பரவலாகும்.
கிழக்குக் கடற்கரைகளில் விசை இழுவைமடி புழங்கிய காலத்தில் சிறு நண்டினங்கள் பல்கிப் பெருகின. சில பாடுகளில் மடிநிறைய நண்டுகள் சேர்ந்தன. விரிக்கிற வலைகளை நண்டுகள் துவம்சம் செய்தன. இயற்கையில் பல்லுயிர்களுக்கிடையே சமநிலை பேணப்படுகிறது. ஒன்றையொன்று சார்ந்திருக்கும் வாழ்க்கையில் ஓரினம் ஒட்டுமொத்தமாக அழிக்கப்படும்போது இயற்கையின் சமநிலை குலைந்துவிடுகிறது. குறிப்பிட்ட உயிரினங்கள் மிகையாக வேட்டையாடப்படுவதால் ஜெல்லிமீன்கள் போன்ற களையினங்கள் பெருகுவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடுகிறது.
கடல் மாசுபடுவதும், உயிர்ச்சத்துகள் மட்டுமீறிய அளவில் பெருகுவதும் பல உயிரினங்களுக்குப் பாதகமாகவும், களையினங்களுக்குச் சாதகமாகவும் ஆகிவிடுகிறது. புவி வெப்பநிலை அதிகரிப்பது உயிரினங்களுக்கு பாதகமானது. ஆனால், சில இனங்களுக்கு அதுவே சாதகமாக அமைந்துவிடுகிறது. ஜெல்லிமீன்களின் பெருக்கம் ஓர் உதாரணம். எல்லாக் காலங்களிலும் கடல் உயிர்ச்சூழலின் ஒரு பகுதியாக ஜெல்லிமீன்கள் வாழ்ந்திருக்கின்றன. என்றாலும், ஜெல்லிமீன் அலைகள் ஏற்படுவது அபூர்வம். நெம்மேலி உப்புநீக்கும் ஆலைகளிலிருந்து வெளியேற்றப்படும் நச்சுக் கழிவுகளால் நெம்மேலி ஈரநிலம் மற்றும் கரைக்கடல் சூழலியலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்த ஆய்வு ஏதும் மேற்கொள்ளப்பட்டதாய்த் தெரியவில்லை.
கடல்நீரை உப்புநீக்கும் ஆலைக்கு ஏராளமான மின்னாற்றல் செலவாகிறது. இந்த மின்னாற்றால் புதைபடிவ எரிபொருள் மூலம் உற்பத்தி செய்யப்படும் என்றால், அது பசுங்குடில் வளி பெருக்கத்துக்கும், உலக வெப்பநிலை ஏற்றத்துக்கும் காரணமாகும்.
நகர்ப்புற விரிவாக்கப் பசி
கடற்கரைப் பெருநகரமான சென்னை கடல் தவிர்த்த மூன்று திசையிலும் அசுர வேகத்தில் விரிவடைந்து கொண்டிருக்கிறது. அதன் தெற்கு நோக்கிய நீட்சியாக நெம்மேலி ஆற்றைச் சூழ்ந்துள்ள பகுதிகளில் எண்ணிக்கையில் அடங்காத பலமாடிக் குடியிருப்புகள் உயர்ந்து கொண்டிருக்கின்றன. பெருநகரத்தின் இப்போதைய நன்னீர்த்தேவை ஒழிய, புறநகரில் பெருகும் கட்டுமானங்கள்/ குடிமைத் தேவைகளுக்கான நன்னீர்த் தேவையும் ஒரு காரணம். எதை அழித்து எதைக் கட்டுவது என்பதுதான் சூழலியல் ஆர்வலர்கள் அரசிடம் எழுப்புகிற கேள்வி. நகர்ப்புறத் தேவைகளை கிராமங்களின் சூழலியலையும் வாழ்விட, உணவாதாரங்களையும் அழித்துத்தான் நிறைவேற்ற வேண்டும் என்பதில்லை. முனைந்து தேடினால் மாற்று வாய்ப்புகள் தென்படும். நகரங்களை எங்கு, எவ்வாறு விரிவுபடுத்த வேண்டும் என்பதை ரியல் எஸ்டேட் அதிபர்களல்ல, அரசுதான் நிர்ணயிக்கவேண்டும். கொள்கை அளவில் நகர விரிவாக்கத்துக்கு நெறிமுறைகள் வகுக்கப்பட வேண்டும். தன்னிறைவுக் குடியிருப்புகளைக் கொண்ட உப நகரங்கள் அரசினால் திட்டமிடப்பட வேண்டும். நன்னீர்த்தேவை, கழிவு மேலாண்மைச் சிக்கல், பசுமைப் போர்வையிழப்பு ஆகிய எல்லாச் சிக்கல்களையும் சிறப்பாக கையாள்வதற்கு உபநகரங்கள் ஒரு சிறந்த தீர்வாகும்.
மணற்குன்று என்னும் இயற்கை அரண்
தெற்கு பொய்கை நல்லூர் கிராமத்தை (நாகை மாவட்டம்) மணற்குன்றுகள் அரணாக நின்று சுனாமியிலிருந்து (2004) பாதுகாத்தது. பனைமரங்களோடு அமைந்திருக்கும் அம்மணற்குன்றுகளின் மறுபுறம் நெல்வயல்கள் உள்ளன. நன்னீர் மிகுதியாய்த் தேவைப்படும் நெல் சாகுபடிக்கு இம்மணல் குன்றுகளே ஆதாரம்! பனை விதைகள் நடவு செய்வதால் கடற்கோள், புயல், கடலரிப்பு போன்ற இயற்கை பேரிடர்களைத் தவிர்க்கலாம்/ தணிக்கலாம். ஏரி, கண்மாய்க் கரைகளை பனைமரங்கள் அரண்செய்து நிற்பது கண்கூடு.
காமராசர் முதல்வராயிருந்த காலத்தில் கடல் அரிப்பைத் தடுப்பதற்கு தமிழகத்தின் பல கடற்கரைகளில் பனை மரங்களை நட்டுள்ளார். பனைமரம் இந்தியாவின் பூர்வீக மரம் அல்ல, கிழக்கு ஆப்பிரிக்காதான் அதன் அசல் வாழிடம். இலங்கையில் பனை விதைகள் அதிக அளவு விதைக்கப்பட்டு, பனை மரங்கள் வளர்க்கப் பட்டது என்றும், நாளடைவில் இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு இடம்பெயர்ந்த மக்கள் தமிழக கடற்கரை பகுதிகளில் பனை விதைகளை நட்டு வளர்த்ததாகவும் ஒரு கருத்து உண்டு. இரண்டாயிரம் வருடங்களாக பனை தமிழில் பாடுபொருளாக இருந்திருக்கிறது. சங்க இலக்கியம் ‘பெண்ணையாம் பனை’, ‘பசியரைப் பனை’ என பலவாறு பனைமரத்தைச் சிறப்பிக்கிறது. கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து பனை இந்தியாவுக்கு வந்தது என்பது உண்மை எனின், அவ்வருகை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நிகழ்ந்திருக்க வேண்டும்.
இராவணன் மீசை (முள்ளி) உள்ளிட்ட புற்கள், தாழை, அடும்புக்கொடி உள்ளிட்ட படரும் கொடி வகைகள், கற்றாழை, கள்ளி போன்ற தாவரங்கள் மணற்குன்றுகளைப் போர்வை போல மூடிப் பாதுகாக்கின்றன. அவற்றின் வேர்கள் ஆழ்ந்து பரவி, நகரும் மணற்குன்றுகளுக்கு நிலைத்த தன்மையைத் தருகின்றன. மணற்குன்றுகள் அமைந்திருக்கும் பகுதிகளில் நிலத்தடி நன்னீர்வளம் மேம்பட்டிருப்பதை ஆய்வுகள் நிறுவியுள்ளன. தாழையின் மூட்டு வேர்கள் தகவாகவும் குன்றின் தாங்கிகளாகவும் நின்று உதவுகின்றன. படரும் தாவரங்கள் காற்றின் ஈரத்தையும் மழைநீரையும் மணலுக்குக் கடத்துகின்றன. பனை, மணற்குன்று, நிலத்தடி நன்னீர்- இம்மூன்றுக்குமான தொடர்பை நாம் இந்தக் கோணத்தில் அணுகுவது சரியாக இருக்கும்.
நிலத்தடி நீரைச் சேமிக்கவும், கடல் அரிப்பை தடுக்கவும் பனை மரங்கள் முக்கிய பங்காற்றி வருவதாக தமிழ்நாடு பனை மர தொழிலாளர் நல வாரியம் அண்மையில் குறிப்பிட்டது. 2023இல் வாரியம் சில தொண்டு நிறுவனங்களோடு சேர்ந்து கடலோர மாவட்டங்களில் பனை விதை நடவு மேற்கொண்டதாகவும் தெரிகிறது.
மணற்குன்றுகள் காற்றினால் உருவாகுபவை; காற்றின் தாக்கத்தினால் இயல்பாக நகர்ந்து கொண்டிருக்கும் குன்றுகளை ஓரிடத்தில் நிலைகொள்ள வைப்பதற்கு அரணாக நின்று உதவுபவை பனைமரக் கூட்டம். அவ்வாறான பனைமரக் கூட்டங்கள் அமைந்திருக்கும் மணல்வெளிக் கடற்கரைகளில் நெடிதுயர்ந்த குன்றுகளைக் காணலாம். நமது கடற்கரைகளில் உயிர்வேலியாக சவுக்குக் காடுகளை அமைக்கும் முறை கடந்த ஒரு நூற்றாண்டு கால அணுகுமுறைதான். சவுக்கு ஆஸ்திரேலியாவிலிருந்து இங்கு கொண்டுவரப்பட்டது. இராட்சத பாறாங்கற்களைக் கொட்டுவது கடலரிமானத்துக்குத் தீர்வாகாது. நெம்மேலி உள்ளிட்ட வடதமிழகக் கடற்கரைகளில் இயற்கை அரணாக மணற்குன்றுகளை உருவாக்கவேண்டும். பனை நடவு அதற்குச் சரியான வழிமுறை.
கடற்கரை ஒழுங்காற்று விதி மீறல்
உவர்ச் சதுப்புகளும், மண்திட்டுகளும் கடற்கரை ஒழுங்காற்று மண்டல அறிக்கையில் (பிரிவு 1அ) வளர்ச்சித் திட்டங்களுக்குத் தடை செய்யப்பட்ட பகுதிகளாகும். இன்றுவரை கழிவெளி, நெம்மேலி உட்பட, தமிழ்நாட்டுக் கடற்கரை ஒழுங்காற்று மண்டலத்தில் அமைந்துள்ள எந்த உவர்ச்சதுப்பும், சேற்றுக்கழியும் வரையறுக்கப்படவில்லை என்பது கடற்கரைப் பாதுகாப்பில் அரசுகள் வெளிப்படுத்திவரும் அலட்சியமே ஆகும். 1991இல் கடற்கரை ஒழுங்காற்று அறிவிக்கை வெளியிட்ட காலம் முதல் தொழில் நிறுவனங்களின் மீறல்களைக் கண்டுகொள்ளாமல் விட்டது மட்டுமின்றி, அரசே அந்த விதிகளை வசதிக்கேற்ப வளைத்தது.
காலநிலை பேரிடர் அபாயம்
கடந்த ஆண்டு ஜுலை முதல் வாரத்தில் மும்பை லோனாவாலாவில் பெய்த மழை ஆயிரம் ஆண்டுகளில் கண்டிராத பெருவெள்ளத்தை ஏற்படுத்தியது. 48 மணி நேரத்தில் 1290 மில்லிமீட்டர் மழை. கிட்டத்தட்ட ஒரு மாதகாலம் பெய்யவேண்டிய மழை இரண்டே நாட்களில் கொட்டித் தீர்த்தது. மும்பை-புனே பாதையில் நிலச்சரிவுக்கு உள்ளானது. பல இடங்களில் சாலைகள் முடங்கின. கிழக்குக் கடற்கரைகளும் சடுதியான மிகைமழைக்கு விதிவிலக்கல்ல. 2023 டிசம்பரில் காயல்பட்டினத்தில் (தூத்துக்குடி மாவட்டம்) ஓராண்டு பெய்யவேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித் தீர்த்தது – 950 மில்லிமீட்டர். 2017 ஒக்கிப் புயல் தொடங்கி, அண்மைக்கால வங்கக் கடல் புயல்கள் கணிப்புக்கு அப்பாற்பட்டவையாக அமைந்திருக்கின்றன. 2015லிருந்து வர்தா, ஒக்கி, கஜா, நிவிர் என்பதாக ஆண்டுதோறும் புயல்மழை பாதிப்புகளை கிழக்குக் கடற்கரைகள் சந்தித்துவருகின்றன. சோழமண்டலக் கடற்கரைகளில் வளர்ச்சித் திட்டங்களைப் பரிசீலிப்பவர்கள் கவனம் கொள்ளவேண்டிய செய்திகள் இவை.
மகா எல் நினோ 2026
தென்மேற்குப் பருவமழை 2014க்குப் பிறகு 2026இல் பெ ய்திருக்கிறது. எல் நினோக்கள் எப்போதும் தென்மேற்குப் பருவமழையை முடக்கின. அப்படி முடக்கிய ஆண்டுகளில் எல்லாம் வடகிழக்குப் பருவமழை தீவிரப்பட்டது; (வங்கக் கடல்) வெப்பமண்டலப் புயல்கள் தீவிரமானது; மைய, வட தமிழ்நாட்டுக் கடற்கரைகள் பெருவெள்ளப் பேரிடருக்கு உள்ளாயின. கடந்த ஓரிரு ஆண்டுகளில் பாக் நீரிணை, மன்னார்க்குடா கடல்களில் வெப்பநிலை 1.5 பாகை செல்சியஸ் அதிகரித்திருக்கிறது. வங்கக்கடல் வெப்பநிலை உயர்வதன் முத்தாய்ப்பாகவும் இதனைக் கருதலாம்.
பேரிடர் முற்காப்பு: தவறவிடும் படிப்பினைகள்
பேரிடர் தயார்நிலை என்பது முற்காப்பு நடவடிக்கை– இயற்கைச் சீற்றத்தின் அதிகபட்ச தாக்குதலை எதிர்கொள்ளுகிற அளவில் அடிப்படைக் கட்டுமானங்களை உருவாக்குவதே ஆகும். அண்மைக் காலங்களில் காலநிலை பேரிடர் தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கிறது. அது வளர்ச்சிப் பேரிடராக மாறும் அபாயத்தைத் தவிர்த்தாக வேண்டும். மாமல்லன் நீர்த்தேக்கம் அவ்வகையானது.
சோழமண்டலக் கடற்கரை இயல்பில் தாழ்ந்த நிலப்பகுதியைக் கொண்டதும், புயல் அபாயம் நிறைந்ததும் ஆகும். கடல் மட்டம் 25 சென்டிமீட்டர் உயர்ந்தால்கூட, சென்னை உள்ளிட்ட நகர்ப்புறங்களின் கடலொட்டிய பகுதிகள் மூழ்கிப்போகும். வர்தா புயலின்போது சென்னை, கடலூர் கடற்கரைகள் புயல்வெள்ளத்தில் மூழ்கின. கஜாப்புயல் தஞ்சை, நாகைக் கடற்கரைகளைச் சேற்றினால் மூழ்கடித்தது.
2004 டிசம்பரில் சுனாமிப் பேரிடர் தாக்கத்திலிருந்து தமிழகக் கடற்கரைகளைப் பாதுகாத்த நான்கு விஷயங்கள்- பக்கிங்ஹாம் கால்வாய், பிச்சாவரம், முத்துப்பேட்டை அலையாத்தி வனங்கள், மன்னார்க்கடல் பவளத்திட்டுகள், நாகப்பட்டினம் மணல்மேடுகள். இவை போன்ற இயற்கை அரண்களை மேம்படுத்த வேண்டும்.
2010களில் தொடர்ந்து ஏற்பட்ட வெப்பமண்டலப் புயல் அனுபவங்களுக்குப் பிறகு, இந்திய வெப்பமண்டல வானியல் ஆய்வு மையம் கிழக்குக் கடற்கரையின் புயல்வெள்ள அபாய வரைபடத்தை (Coastal Inundation map) வெளியிட்டது. செங்கல்பட்டு கடற்கரை பகுதியை பொறுத்தவரை புயல் காலங்களில் அலைகள் 1.68மீட்டர் அளவுக்கு உயரலாம், வெள்ளம் நிலப்பகுதியில் மூன்று மீட்டர் அளவுக்கு உயரலாம் என எச்சரிக்கிறது இந்த வரைபடம். நீர்த்தேக்கத்துக்காக அமைக்கப்படுகிற மடு, கடற்கோள் காலத்தில் ஒரு நீர்க்கூண்டாக மாறி, கடற்கரைக் கிராமங்களை மூழ்கடிக்கும் அபாயத்தை புறக்கணிக்கக் கூடாது.
சுனாமிக்குப் பிறகான 20 ஆண்டுகளில் கடற்கரைகளில் பொருத்தமான இடங்களில் மணற்குன்றுகள் உள்ளிட்ட இயற்கை அரண்கள்/ உயிர்வேலிகள், அலையாத்தி வனங்களை நிறுவியிருக்க வேண்டும். பறக்கும் இரயில்பாதை, நீலக்கொடிக் கடற்கரைகளில் காட்டிவரும் முனைப்பை அரசுகள் கடற்கரைப் பாதுகாப்பில் காட்ட வேண்டும். அலைவாய்க்கரைக்கு இணையாக அமைக்கப்பட்டுள்ள பக்கிங்ஹாம் கால்வாயைச் சீரமைத்து ஓடவிடுவது வறட்சிக்கும் பேரிடர் மேலாண்மைக்கும் ஏற்ற திட்டமாகும். நெம்மேலியில் நீர்த்தேக்கம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட வேண்டும். அதோடு நெம்மேலி ஈரநிலம் இராம்சார் தலமாக அறிவிக்கப்பட வேண்டும்.
தொடர்புடைய புகைப்படங்கள்













Simply, an art of storytelling! Dr VK lives and likes the nature, but makes the story such that the readers love it. Nemmeli could attract so much attention! I hope some policy makers and responsive officials spend time – once – to redraw their drafts before finalising the fate of Nemmeli and it’s communities.
Thank you Dr.Melchias for the critical appraisal. Very encouraging.
Few readers might see the the journey and labour behind a write-up of this kind.
The politicians aren’t in a position to evaluate an article like this from the scientific glass. They are, however expected to draw from the intelligentia to do the right evaluation – universities and research academia and dedicated NGOs. Being a large waterbody that has sustained biodiversity so long, with its rhythmic patterns of seasons, waves, tidal undulations, and climatic oddities, a year-round observation is a must to draw scientific conclusions. The ruling class need to be informed of this.
You are right Professor, the write-up addresses both the public and the powers that be.
I appreciate the excellent article by Prof. Vareethiah, which explains the important ecological issues to be considered before touching the landscape for any new, external activities, particularly any infrastructure development activities. I don’t think that any Environmental Impact Assessment team would brother this much to assess and understand technically and ecologically the Nemmeli wetlands and it’s association with larger marine ecosystems. The livelihood dependence of the people who traditionally living in and around these wetlands also will be facing the impacts. It’s a valuable document with scientific and ecological rigor, highlights the importance and at the same time cautioning the future impacts of its alteration. It’s a great work from Prof. Vareethiah and I appreciate it’s value..and I wish and pray that the highlighted points would reach the right policy makers and advisors.
Dr Christopher Guna