முச்சந்தி: பல்சமய இலக்கிய உரையாடல்

     உலக உயிர்கள் எல்லாம் மகிழ்வோடு வாழவே விரும்புகின்றன . அதற்கு புரிதல், விட்டுக்கொடுத்தல், உலக ஞானம் சக மனிதர்களோடு இணக்கம் என்ற எண்ணங்களை கட்டமைக்க மிக முக்கிய பங்காற்றுவது வாசிப்பு. உலக நாடுகளை ஆழ்ந்து நோக்கும் பொழுது எந்த நாடுகள் எல்லாம் வாசிப்பை வைத்திருக்கின்றனவோ அந்த நாடுகள் வல்லரசாகவோ அல்லது மகிழ்ச்சிகரமான நாடுகளின்  பட்டியலிலோ நிற்கும். தங்களுடைய பரந்துபட்ட வாசிப்பினால் அறிவினை வளர்த்துக் கொண்டு  அறிவு என்னும் ஆயுதத்தால் உலகை  ஆண்டு  வருகின்றன. மாணவப் பருவத்தில் வாசிக்க வைத்தல் என்பது இன்றைய சூழலில் சவாலான ஒரு செய்தியாக இருக்கிறது. தொலைக்காட்சிகளும் ஊடகங்களும் மாணவர்களையும் மக்களையும் வேறு பாதைக்கு கொண்டு செல்கின்றன.

வாசிப்பு என்ன செய்யும்? என்று  நீங்கள் கேட்பது சரிதான் . கதாநாயகனை பல திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம். இரண்டு சண்டைக் காட்சிகள் சண்டைக் காட்சிகள் நான்கு நடனங்கள் புகழ் பெற்ற கதாநாயகன் அல்லது நாயகியை கொண்டு படங்களே பெரும்பாலானவ சமூகத்தை அப்படியே பதிவு செய்யும் பூ, கர்ணன், பரியேறும் பெருமாள் போன்ற திரைப்படங்களில் மனிதனுடைய வலிகளை  வாழ்வியலை அப்படியே திரைக்கு கொண்டு வர  தேர்ந்த வாசிப்பாளனால் மட்டுமே முடியும். வாசிப்பு மனிதனை பண்படுத்தும், ஆற்றுப்படுத்தும், ஒருங்கிணைக்கும் ஒரு சக்தியாக இயக்கங்கள் திகழ்கின்றன. அவ்வாறு தோன்றிய இயக்கங்கள் மாபெரும் மாற்றங்களை உருவாக்கி இருக்கின்றது. அவ்வகையில் திருவண்ணாமலையின் முச்சந்தி பல குறிப்பிடத்தக்க பணிகளை செய்து இருக்கிறது.

                புழுதி இதழ் கட்டுரைக்காக    முச்சந்தி இயக்கம் குறித்து நெடுஞ்செழியன் ஐயாவுடனான உரையாடலை இங்கு தொகுத்து கூறியுள்ளேன். 

ஐயா முச்சந்தி இயக்கம் தொடங்கப்பட்ட விதம் குறித்து கூறுங்கள்……

                         மெல்லிய புன்னகையுடன் பேசத் தொடங்கினார் 1996 இல் பணிக்கு வந்த போது மாணவர்களை வாசிப்பு நோக்கி நகர்த்தும் வேட்கையால் நானும்  முருகேசன் என்ற ஆசிரியரும்  சுட்டுவிரல்  என்ற இதழை நடத்தினோம். இதில் வரக்கூடிய படைப்புகள் குறித்து உரையாட வட்டமாக உட்கார்ந்து பேசும் முறை உருவாக்கப்பட்டது . சில பல காரணங்களால் அந்த இதழ் தொடர்ந்து வெளி வரவில்லை. ஆனாலும் மாணவர்கள் எதையேனும் வாசித்து அதனை பகிர்ந்து கொள்ளும் முறை எங்கள் வீட்டின் வரவேற்பு வரையில் தொடர்ந்து நடந்து வந்தது

                இவ்வாறு தொடங்கப்பட்ட இந்த நிகழ்வினை முச்சந்தி என்று குறிப்பிட்டு அதில் பல மாணவர்களை பங்கெடுக்க செய்தோம் . மாணவர்களுடைய வாசிப்புத் திறனை மேம்படுத்த வெளியில் இருந்து பல ஆளுமைகளை அழைத்து வந்தோம். குறிஞ்சி வட்டம் என்கின்ற செஞ்சி பகுதியிலான இலக்கிய அமைப்பில் ஜெரா ,தமிழினியன் ,செந்தில் பாலா, மற்றும் இயற்கை இவர்களின் தொடர்பினால்  முச்சந்தியின்  நிகழ்வுகள் தொடர்ந்து நடந்தன.

2005 ஆம் ஆண்டு தி.பரமேஸ்வரி  உள்ளிட்ட ஆளுமைகள் முச்சந்தி அமைப்பில் வந்து உரையாற்றினர். இந்த தருணத்தில்  நம் முச்சந்தியில் உருவான மாணவர்கள் சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் மாநிலக் கல்லூரி உள்ளிட்ட நிறுவனங்களில் படித்துவிட்டு மீண்டும் திருவண்ணாமலைக்கு திரும்பி வந்தபோது அவர்கள் என்னிடம் ஒரு வேண்டுகோளை வைத்தனர்.பிரேம்  சிவகுமார் உள்ளிட்டவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க முச்சந்தி என்னும் அமைப்பாக இது பரிணமித்தது .தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க உறுப்பினராகவும் கலை இலக்கிய பெருமன்றம் திருவண்ணாமலை தமிழ்ச்சங்கம் அருணை இலக்கிய வட்டம் உள்ளிட்ட பல அமைப்புகளோடு நான் தொடர்பில் இருந்ததாலும் அந்த நிறுவனங்களில் நிகழ்வுகள் ஏதேனும் இருந்தால் முச்சந்தியில் கூட்டம் இருக்காது எப்பொழுதெல்லாம் இடையூறு இல்லாமல் இருக்கிறதோ அப்பொழுது கூட்டங்கள் தொடங்கும். என்னுடைய மாணவர்களையும் எழுத்தாளர் சங்கம் கலை இலக்கிய மன்றம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு அழைத்துச் செல்வதை அறிமுகப்படுத்துவதை நான் வழக்கமாகக் கொண்டிருந்தேன்.

சரி ….சாதாரண கூட்டமாக இருந்து இயக்கமாக முச்சந்தி வளர்ந்தது மகிழ்ச்சி அடுத்ததாக முச்சந்திக்கு என்று ஏதேனும் குறிக்கோள்கள் இருந்ததா ஐயா ?

  முச்சந்தி என்பது ஏன் எதற்கு எப்படி என்ற மூன்று கேள்விகளின் சங்கமம். எந்த ஒரு படைப்பையும் சிந்தனையையும் இந்த மூன்று வினாக்களில் முன்வைத்து விவாதித்துக் தெளிவு பெறுவது.

முச்சந்தியில் நூல்களை வாங்கி மாணவர்களுக்கு படிக்க தந்துவிட்டு அவர்களை எழுத்தாளர்களோடு உரையாட வைத்தல், புதிய நூல்களை அறிமுகம் செய்தல் ,கவிதைகளை சிறுகதைகளை  படைக்கவும் வாசிக்கவும் ஊக்குவித்தல் இவை முச்சந்தியினுடைய குறிக்கோள்களாக இருந்தன. 

மாணவர்களுக்காக தொடங்கிய கூட்டம் மாணவர்களால் இயக்கமானது சிறப்பு .மேலும் இந்த வாசிப்பில் எந்த விதமான நூல்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டன ஐயா?

          சென்னைப் பல்கலைக்கழக மாணவர்களான முருகன், சாந்தமூர்த்தி ,வெற்றி சங்கமித்ரா ஆகியோர் திருவண்ணாமலையில் வாசிப்பு இயக்கத்தைத் தொடங்கினர் .அந்த வாசிப்பு இயக்கத்தோடு இணைந்து முச்சந்தியும் தமிழில்  மிக முக்கிய நூல்களையும் தாய் நாவல் டால்ஸ்டாயின் நாவல்கள் ஆகியவற்றை மாணவர்களிடையே கொண்டு சேர்த்தது. பெரும்பாலும் இந்த நிகழ்வில் 40 முதல் 70 பேர் இணைவர். முட்டை ஓட்டில் இருந்து வெளிவரும் குஞ்சு போல மாணவர்கள் (இந்த இலக்கிய அமைப்புகளுக்கு புதிது என்பதால்) மிக மிக மெதுவாக தான் தங்களுடைய கருத்துக்களை வெளியிடுவார்கள். அதனால் மாலை 3 மணிக்கு தொடங்கக்கூடிய இந்த நிகழ்வு இரவு 9 மணி வரை கூட நீளும். இடையில் என்னுடைய இரமாதேவி அவர்கள் தேநீர் சிற்றுண்டி உணவுகள் இவற்றையெல்லாம் தந்து கொண்டே இருப்பதால் வெகு சுவாரசியமாக பல விடயங்களை மனம் திறந்து மாணவர்கள் உரையாடி பல புரிதலோடு இங்கிருந்து வெளியேறுவார்கள்.

முச்சந்தியில் உரையாற்றியோர் ஒரு குறித்து……

நிறைய பேரைக் குறிப்பிடலாம்.கவிஞர் தமிழரசி, கவிஞர் ராஜலட்சுமி ஆகிய கவிஞர்கள் தங்களுடைய நூல் குறித்து இங்கு உரையாற்றியுள்ளார் தி. பரமேஸ்வரி அவர்கள் எனக்கான வெளிச்சம் என்னும் நூல் குறித்து உரையாற்றியுள்ளார் குட்டி ரேவதி பச்சையப்பன் அவர்களின் கவிதை தொகுப்பினை பற்றி விமர்சனத்தை சொல்லும்பொழுது பெண்ணியம் தொடர்பான உரையாடலை இந்த நிகழ்த்தினோம் பேராசிரியர் மார்க்ஸ் அவர்களின் ஈழப்பயணம் குறி்த்து உரையாடினார்., நெய்வேலி பாரதிகுமார் செஞ்சி தமிழினியன், செந்தில் பாலா ,கவிஞர் வையவன், அதியன் ஆதிரை, நாஞ்சில்நாடன் பேராசிரியர் துளசி ராமசாமி ஆகியோர் தங்களுடைய நூல்கள் குறித்த மிக விசாலமான விவாதங்களை இங்கு மாணவர்கள் எழுப்பி உள்ளனர். 70 மாணவர்களும் பங்கெடுக்கும் அதே சமயம் பத்து மாணவர்கள் 15 மாணவர்களோடு கூட இந்த உரையாடல் நிகழ்ந்துள்ளது.

 முச்சந்தி தொடங்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறி உள்ளதா ஐயா ?

                நிச்சயமாக இந்த முச்சந்தியின் உடைய நோக்கமே அறியாத பகுதிகளை அறிய வைத்தல், புதிய எழுத்தாளர்ககளை அறிமுகப்படுத்துதல் முற்போக்குச் சிந்தனையும் சமசகப் புரிதலும் மனிதநேய உணர்வும் கொண்ட சிந்தனைகளை வளர்த்தலும் சிந்தனையாளர்களை வெளிக்கொணரச் செய்வதும் இந்த முச்சந்தியினுடைய அடிப்படை நோக்கம். இது சிறப்பாக நிறைவேறி உள்ளது கவிஞர் மனுஷியின் கவிதைகள், ,உங்களின் வண்டுகள் நாவல் உள்ளிட்ட பல புதிய எழுத்துகளை இங்கு நாங்கள் அறிமுகம் செய்தோம். இப்போது கூட செஞ்சி தமிழினியன். அவர்களின் வரவிருக்கும் புதிய நாவல் ஊத்தாம்பல்லாகுறித்த அறிமுகம் இங்கு நடைபெற்றது.

முச்சந்தியை பதிவு செய்துள்ளீர்களா ஒரு இயக்கமாக..

  வாசிப்பை மட்டுமே நோக்கமாகக் கொண்டதால் இதனை பதிவு செய்யவில்லை. என்னுடைய ஒரே நோக்கம் வாசிப்பினை விரிவு படுத்துதல் என்பதால் இதனை அமைப்பு என்ற நிலையில் அதற்கு ஒரு அங்கீகாரம் வாங்க வேண்டும் அப்படிங்கற உணர்வு இன்று வரை எனக்கு இல்லை .இந்த அமைப்பில் வந்து இணைபவர்கள் எல்லாம் ஏதேனும் ஒரு உயரத்தை தொட வேண்டும் வாசிப்பை தங்களுடைய வாழ்வியலாக கொள்ள வேண்டும் அப்படிங்கறது தான் ஒரே நோக்கம். சமீபமாக சாகித்ய அகாதமி விருது பெற்ற விருது பெற்ற எழுத்தாளர் சுப்ர பாரதி மணியன் ஐயா அவர்கள் திருக்குறள் காமராசு ஐயாவுடன் என்னுடைய இல்லத்திற்கு வந்திருந்து என்னுடைய நூல்கள் குறித்தும் முச்சந்தி குறித்தும்  பாராட்டிச் சென்றார்கள். இந்த அங்கீகாரங்கள் எனக்கு போதும் இதை எதிர்பார்த்தும் நான் இதை தொடங்கி நடத்தவில்லை மாணவர்களை உருவாக்க வேண்டும் என்கின்ற அடிப்படை தவிர்த்து வேறு எதுவும் என்னிடம் இல்லை.

முச்சந்தி  உருவாக்கிய மாணவர்கள் குறித்து…..

                          மீனா முச்சந்தி வாயிலாக பேரா அ.மார்க்ஸ் அவர்களொடு அறிமுகமாகி எழுத்தாளராக பெண்ணியச் சிந்தனையாளராக உண்மை கண்டறியும் குழு உறுப்பினராக அம்ருதாவில் கடைசிபக்க எழூத்துக்காரராக நல்லாசிரியராக வளர்ந்தூள்ளார் அமுல்ராஜ்  முச்சந்தி பார்வையாளராக கலந்து கொண்டு, இன்று கவிஞராக வரலாற்று ஆய்வாளராக வளர்ந்துள்ளார். ஆசிரியர் ஜெய்சங்கர்  சவ்வாதுமலை ஆய்வறிஞராக பலநூல்கள் வெளியிட்டுள்ளார். முருக சிவக்குமார் என் ஆசைப்படி நாடக நடிகனாகி ஊடகத்தில் உயிர்மை ஆனந்த விகடன் தமிழோசை  தினத்தந்தி தொலைக்காட்சி ஊடகம் என வளர்ந்து உயர்ந்த இடத்தில் பணியாற்றுகிறார். முதுகலை படீக்கும் போதூ அவரா இயக்கிய விடுதீ ஆவணப்படம் மாணவர் விடுதிகளின் தரத்தை உயர்த்தக் காரணமானது. முச்சந்தியில் கவனம் பெற்றது. அதுபோலவே,  ஒடியன் லட்சுமணனின் நாளி ஆவணப்படம் திரையிடல் கருப்பு கருணா உரையாடலோடு நடைபெற்றதும் குறிப்பிடவேண்டியநிகழ்வு.  அதேநேரம்  நாடறிந்த அறிஞரான வலம்வரவேண்டிய சிந்தனையாளர் இரா.செல்வன், கவிஞன் சு. வெங்கடேசன், ககியோரை மரணத்தின் வன்முறையில் இழந்து தவிக்கிறேன். போன்ற பல எழுத்தாளர்கள் உருவாகி தமிழகமெங்கும் விரிந்துள்ளனர். கம்பன் கழகத்தில் உரையாற்றியுள்ளனர் .பேச்சு ,எழுத்து   ஊடகம், திரைத்தூறை திறனாய்வு ஆசீரியர்  ,பேராசிரியர் ,அரசு அலுவலர் என்ற வகையில் முச்சந்தியின் மாணவர்கள் பல்துறைகளிலும் இணைந்துள்ளனர் என்பது எனக்கு தனிப்பட்ட முறையில் ஒரு மிகப்பெரிய மன நிறைவினை தந்துள்ளது.

முச்சந்தியின் எதிர்காலத் திட்டம்

          இனிவரும் காலங்களில் இந்த முச்சந்தியை இன்னும் பரவலாக்க வேண்டும் இணைய வழியிலும் இதனுடைய செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்று  திட்டமிட்டுக் கொண்டிருக்கிறேன் விரைவில் இணையத்திலும் முச்சந்தியில் உரையாடலாம்.

 முச்சந்தி குறித்து செஞ்சி தமிழினியன் ஐயா அவர்கள்…..

            வெவ்வேறு திசைகளில் இருந்து பயணப்படும் வாசகர்களையும் படைப்பாளிகளையும் இணைக்கின்ற அமைப்புதான் முச்சந்தி ஒரு படைப்பாளனின் நீல அகல உயரங்களை பல கோணங்களில் ஆராய்ந்து படைப்பாளனை ஊக்குவிக்க கூடிய ஒரு உன்னத செயலை செய்யக்கூடிய பேரமைப்பு முச்சந்தி. என்று செஞ்சி தமிழினியன் ஐயா அவர்கள் குறிப்பிடுகிறார் 

       பதிவு செய்யப்படாவிட்டாலும் பல மாணவர்களை உருவாக்கியதோடு மட்டுமின்றி இந்த கட்டுரையாளரான என்னைப் போன்ற புதிய எழுத்தாளர்களை, திறனாய்வாளர்களை ,அரசு  அலுவலர்களை உருவாக்கிய உருவாக்கிக் கொண்டிருக்கிற ஒரு அற்புதமான இலக்கியப் பணியை செய்து கொண்டிருக்கின்ற மிக முக்கிய அமைப்பு முச்சந்தி என்றால் அது மிகையாகாது . முச்சந்தியினுடைய பணிகள் மென்மேலும் சிறப்புற்று இன்னும் இன்னும் கூடுதலான மாணவர்களுடன் பலரை உருவாக்க நாமும் வாழ்த்துவோம். உருவாக்கி நடத்திக் கொண்டிருக்கக் கூடிய நெடுஞ்செழியன் ஐயா அவர்களுக்கு மகிழ்வும் அன்பும்…

வேறென்ன வேண்டும் நமக்கு?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *