“மானுடம் வென்றதம்மா!’தகஇபெ: ஒரு பண்பாட்டு இயக்கம்

பொதுவுடமை இயக்கத்தின் தமிழ் முகமாய்ப் பரிணமித்த இலக்கியப் பேராசான் ப.ஜீவானந்தம் 1961 மே திங்களில் கோவை மாநகரில் தோற்றுவித்த ஒரு பண்பாட்டு இயக்கம் தான் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்.

வரலாற்றுப் பின்னணி:

தேசத்தந்தை மகாத்மா காந்தி சுதந்திரப் போராட்டத்தின் தலைமையை ஏற்ற பின்னால், இந்தியா முழுமையும் காந்திஜியைச் சுற்றி ஒருசேர அணிதிரளத் தொடங்கிற்று. பள்ளிப் பருவத்திலேயே மகாத்மா காந்தியால் ஆகர்ஷிக்கப்பட்டு சுதந்திரப் போராட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டவர் தான் நம் ஜீவானந்தம். பின்னாளில் தந்தை பெரியாரின் பகுத்தறிவு மற்றும் சுய மரியாதைப் பிரச்சாரங்களால் கவரப்பட்டு பெரியார் இயக்கத்திலும் ஈடுபட்டு, பின்னர் ஒரு பொதுவுடமை இயக்கவாதியாக மலர்ந்தார். பின் இறுதிமூச்சு வரையிலும் ஒரு பொதுவுடமைவாதியாகவே வாழ்ந்தார். ஆனால் இந்தப் பொதுவுடமைவாதி தொடக்க முதலே ஒரு இலக்கியவாதியாகவும் வாழ்ந்து வந்தார். பண்டையத் தமிழ் இலக்கியங்களில் ஆழங்கால்பட்டு பயணிக்கும் போதே சமகால இலக்கியங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். தன் பேச்சுக்கள் எழுத்துக்கள் எல்லாவற்றிலும் இலக்கிய நயம் இழைந்தோடுவதை ஒரு பெரும் பண்பாகவே வரித்துக் கொண்டார். ஏன்  ஜீவாவே ஒரு கவிஞராகவும் திகழ்ந்தார்!

தமிழ் அன்னை பெற்றெடுத்தப் பெரும் கவிஞன் கம்பனிடமும், சுதந்திரப் போராட்டம் ஈன்றெடுத்த மகாகவி பாரதியிடமும் தன்னைப் பறிகொடுத்த பேராசான் ஜீவானந்தம், அவர்களை தம் ஆசான்களாகவே வரித்துக்கொண்டார். அதிலும் குறிப்பாக பாரதியை ஆன்மீகச்சிமிழுக்குள் அடைப்பதற்கு நடைபெற்ற முயற்சிகளுக்கு எதிராகக் கடுமையாகப் போராடி பாரதியை ஒரு மக்கள் கவிஞராகத் தமிழகம் முழுவதும் கொண்டு சேர்த்தார். இவ்வாறு  பேராசான் ஜீவா அரசியலையும் இலக்கியத்தையும் தன் இரு கண்களெனக் கொண்டு வாழ்ந்தார். இதுவே அவர் பின்னாளில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் என்ற அமைப்பைத் தோற்றுவிப்பதற்கான ஊற்றுக்கண்ணாக அமைந்தது எனலாம்.

சுதந்திரப் போராட்டம் என்பது வெள்ளையக் காலனி ஆதிக்கத்திற்கு எதிராக எழுந்த வீரஞ்செறிந்த போராட்டப் பேரலையாகும். இந்தப் பேரலை இந்தியத் திருநாட்டில் பல்வேறு இயக்கங்களை இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தோற்றுவித்தன. தேசத் தலைவர்களின் அனல் பறக்கும் விடுதலைப் பிரச்சாரங்கள் மக்களை அணி திரட்டின; இதைப் போலவே கவிஞர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் ஆகியோரையும் ஓரணியில் ஒன்று திரட்டத் தொடங்கின. இந்தத் திசை வழியில் பொதுவுடமை இயக்கத்தின் சிற்பி பி.சி ஜோஷியின் பெரு முயற்சியால் 1936 இல் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தோற்றம் கண்டது. அதேபோல் 1943 இல்  இந்திய மக்கள் நாடக மன்றம் உருக்கொண்டது. இவ்விரு அமைப்புகளும் சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் பெரும் பங்களிப்புகளை செய்தன. இவை இரண்டும் தமிழ்நாட்டிலும் செயல்பட்டன.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் கலைஞர்களும் இலக்கியக் கர்த்தாக்களும் தேச விடுதலைப் போராட்டத்தோடு இணைந்து நின்றார்கள். தமிழகம் முழுமையிலும் தமிழ்ச் சங்கங்கள், கலா மன்றங்கள்,  சன்மார்க்கச் சங்கங்கள், பாரதி சங்கங்கள், பாவேந்தர் மன்றங்கள், எழுத்தாளர் சங்கங்கள், வாசகர் வட்டங்கள் தோன்றி வளர்ந்தன. இவற்றில் தொ.மு.சி. ரகுநாதன், நா.வானமாமலை, தி.க. சிவசங்கரன் ஆகியோரின் முயற்சியில் தொடங்கப்பட்ட நெல்லை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் குறிப்பிடத்தக்கது. இது ஒரு வகையில் பின்னாளில் உருவான தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்திற்கு ஒரு முன்னோடியாக அமைந்தது எனலாம். இதேபோன்று இந்தக் காலகட்டத்தில் வெளிவந்த ஜனசக்தி, ஜனநாயகம், சாந்தி, சரஸ்வதி போன்ற இதழ்கள் அரசியல் விழிப்புணர்ச்சியையும், இலக்கிய விழிப்புணர்ச்சியையும் உருவாக்கி முற்போக்கு இலக்கிய மரபைக் கட்டமைக்கவும் செய்து கொண்டிருந்தன.  மட்டுமல்ல. இக்காலத்தில் மறைமலை அடிகள் தோற்றுவித்த தனித்தமிழ் இயக்கம் தமிழ் உணர்வை வளர்த்தெடுப்பதில் முக்கியப் பங்கு வகித்தது. ம.பொ.சியின் தமிழரசுக் கழகமும் தமிழ் உணர்வு ஒரு இயக்கமாக மாறிட பங்குப் பணி ஆற்றியது. 

தந்தை பெரியாரின் திராவிடக் கழகமும், அறிஞர் அண்ணாவின் திமுகவும் இந்தி ஆதிக்கத்திற்கு எதிராகத் திரண்டதும், தமிழ்ப் பெருமையை உயர்த்திப் பிடிக்க அணி திரண்டதும் தமிழகத்தில் ஒரு மறுமலர்ச்சியைக் கொண்டு வரத் தொடங்கிற்று. அதிலும் குறிப்பாக 1950 களின் முற்பகுதியில் நடைபெற்ற மொழிவாரி மாகாணப் போராட்டங்கள் தமிழ் மக்களின் மொழி உணர்வை ஒரு பேருணர்வாகக் கட்டி அமைத்தன என்று சொன்னால் அது மிகையன்று. அதே நேரத்தில் அக்காலத்தில் திராவிட இயக்கங்கள் கம்பன், பாரதி போன்ற மகாகவிகளைத் தமிழ் இன உணர்வுவாத அடிப்படையில் அணுகினார்கள்.

இந்தச் சூழலில் பேராசான் ஜீவாவின் தலைமையில் கலை இலக்கியங்களைச் சமூக அடிப்படையிலும், அறிவியல் அடிப்படையிலும் அணுக வேண்டிய அவசியத்தை முற்போக்காளர்கள் உணரத் தொடங்கினார்கள். சரஸ்வதி மற்றும் சாந்தி போன்ற இதழ்களுக்குப் பின்னர் ஜீவா தொடங்கிய தாமரை இதழ் முற்போக்கான படைப்பாளிகளை ஒன்றிணைக்கும் ஒரு களமாக மாறிற்று.

தமிழ் வரலாறு மற்றும் பண்பாட்டின் தனித்தன்மையை நன்கு உணர்ந்து கொண்ட பேராசான் ஜீவாவும் தோழர்களும் ஒரு கலை இலக்கிய அமைப்பின் அவசியத்தை உணரத் தொடங்கினார்கள். கலை இலக்கியத்தைப் பண்பாட்டு கண்ணோட்டத்தோடு அணுக வேண்டியதன் அவசியத்தையும், அதே நேரத்தில் கலை கலைக்காகவே என்ற கோட்பாட்டுக்கு எதிராகக் கிளர்ந்தெழ வேண்டிய தேவையையும் உணர்ந்து கலையும் இலக்கியமும் மக்களுக்காகவே என்ற பதாகையை உயர்த்திப் பிடிக்க வேண்டிய கட்டாயத்தையும் நன்கு உணர்ந்தார்கள். அதாவது நசிவு கலை இலக்கியப் போக்குகளுக்கு எதிராகப் போராடுவதற்கும், நல்ல கலை இலக்கியங்களைப் பேணிப் பாதுகாத்து புதுமையான கலை இலக்கியங்களைப் படைப்பதற்கும் வேண்டி கலைஞர்களையும் எழுத்தாளர்களையும் ஓரணியில் ஒன்று திரட்ட வேண்டும் என்ற முடிவுக்கு ஜீவாவும் தோழர்களும் வந்து சேர்ந்தார்கள். இதன் விளைவாகத்தான் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் தமிழ்ப் பண்பாட்டு உலகில் உதயமானது.

பெருமன்றத்தின் தோற்றம்:

இந்தியப் பொதுவுடமை இயக்கத்தின் சிற்பி பி.சி ஜோஷி தோற்றுவித்த முற்போக்கு எழுத்தாளர் சங்கம், இந்திய மக்கள் நாடக மன்றம் ஆகியவற்றின் ஒரு வழித்தோன்றலாகத்தான்  தமிழ்நாடு கலை  இலக்கியப் பெருமன்றம் உதயமானது.

இந்த இரு அமைப்புகளின் கிளை அமைப்புகளாக இல்லாமல் பேராசான் ஜீவா தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் என்ற தனி அமைப்பை உருவாக்கினார் என்பதன் பின்னணியையும் இங்கே நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்றால் எழுத்தாளர்களையும், இந்திய மக்கள் நாடக மன்றம் என்றால் நாடகக் கலைஞர்களையும் உள்ளடக்கிய அமைப்புகளாக இருக்கின்றன. ஆனால் ஜீவா தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் என்று ஒரு புதிய அமைப்பைத் தோற்றுவிக்கும் போது அவரின் கனவு ஒரு வெகுஜன அமைப்பாக இருந்தது எனலாம். அதாவது தமிழ் மண்ணின் மக்கள் மரபுகளை இனம் கண்டு, கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்களின் சங்கமமாக மட்டுமின்றி, கலை இலக்கிய ஆர்வலர்களையும் உள்ளடக்கிய ஒரு வெகுமக்கள் அமைப்பு வேண்டும் என்பதுதான் ஜீவாவின் கனவு.

சிந்துவெளி நாகரிகத்தின் அடிச்சுவடுகளில் இருந்து இதழ் விரித்து, பரம்பரை பரம்பரையாக இயற்கை மரபையும், மானுடச் சார்பையும், அறச்சார்பையும்  முப்பரிமாணமாகக் கொண்ட தனித்தன்மைமிக்க தமிழ்ப் பண்பாட்டுச் சூழல்தான் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் தோற்றப் பின்னணி எனலாம். 

அரசியல் ரீதியாக பொதுவுடமை இயக்கத்தின் தேசிய நீரோட்டத்தில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்ட பேராசான் ஜீவா தமிழ்ப் பண்பாட்டின் தனித்தன்மையை நன்கு உணர்ந்தவராக இருந்தார். இளமை முதலே அவருக்குள் இருந்த இலக்கிய ஆர்வம்,  மறைமலை அடிகளின் தனித்தமிழ் இயக்கத்தில் தொடக்கத்தில் கொண்டிருந்த ஈடுபாடு பின்னர் அதில் கொண்ட மாறுபாடு ஆகியவற்றோடு  ஜீவா தானே ஒரு கவிஞராகவும் இலக்கியவாதியாகவும் இருந்தார் என்பது இங்கே கூர்ந்து கவனிக்கத்தக்கது. 

இத்தகைய ஓர் ஆளுமையாக ஜீவா இருந்தார் என்பதுதான் அவரின் தனித்தன்மையாகவும் அமைந்தது. இதனால் இடதுசாரித் தலைவர்கள் மத்தியில் ஜீவாவின் இடம் தனித்துவம் மிக்கதாக இருந்தது. அவர் பேச்சிலும் மூச்சிலும் தமிழ் உணர்வு ஊடாடி நின்றவராக இயங்கினார். 1952 இல் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்ற சென்னை மாகாணச் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜீவா முதன் முதலில் தமிழில் பேசிப் புதுமை படைத்தவர். அவர் முயற்சி காரணமாக சட்டசபை நடவடிக்கைகள் பின்னர் படிப்படியாகத் தமிழில் நடக்க தொடங்கின. அதேபோல் சென்னை மாகாணத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை முதலில் முன் வைத்தவரும் ஜீவா தான். 

இவ்வாறு, தமிழ்நாட்டின் சமூக அரசியல் வாழ்க்கையில் கலை இலக்கியப் பண்பாடு எந்த அளவுக்குக் காத்திரமான பங்கு வகிக்கிறது என்பதை நன்கு உணர்ந்தவராக இருந்தார் ஜீவா. எனவேதான் தமிழில் ஒரு புதிய பண்பாட்டு இயக்கத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் கனவாகி நனவாகும் தருணத்தில், அகில இந்திய அளவில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கிளையையோ,  உள்ளது இந்திய மக்கள் நாடக மன்றத்தின் கிளையையோ அமைப்பதற்கு பதில், அவை இரண்டையும் இணைத்து, ஜீவா ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டார். இவ்வாறு கோவையில் தோற்றம் கொண்ட பண்பாட்டு இயக்கத்திற்கு தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் என்று பெயர் சூட்டினார். இதன் மூலம் கலைஞர்களுக்குத் தனி அமைப்பு, இலக்கியவாதிகளுக்குத் தனி அமைப்பு என்றில்லாமல், கலைஞர்களையும் இலக்கியவாதிகளையும் ஒரே கூரையின் கீழ் ஜீவா கொண்டு வந்தார். மட்டுமல்ல, பெருமன்றத்தில் இலக்கிய ஆர்வலர்களும் ரசிகர்களும் உறுப்பினர்களாக இடம்பெறும் ஒரு புதிய ஜனநாயக அமைப்பாகவும் தோற்றுவித்தார். சென்னை மாகாணம் என்று இருந்த காலத்திலேயே, தான் தோற்றுவித்த பண்பாட்டு அமைப்புக்கு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் என்ற பெயரை சூட்டினார் என்பது எங்கே உணர்ந்து பாராட்டத்தக்கது.

பெருமன்ற மாநாடுகள்:

தமிழகம் தழுவிய அளவில் தோற்றுவிக்கப்பட்ட முதல் பண்பாட்டு இயக்கமாக பெருமன்றம் உருவாக ஜீவாவுடன் தோளோடு தோள் நின்ற

தோழர்கள் தொ. மு. சி. ரகுநாதன்,  ஆர். கே. கண்ணன், கே. சி. எஸ். அருணாச்சலம், நா. வானமாமலை, கே. பாலதண்டாயுதம், தா.பாண்டியன், கே. எம். எஸ். பூவநாதன், எஸ். டி. சுந்தரம், அறந்தை நாராயணன், வெ. நா. திருமூர்த்தி, எம். கல்யாணசுந்தரம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், பி.இ. பாலகிருஷ்ணன், எம். பி. சீனிவாசன், மு. பழனியப்பன், மாஜினி,  சோமசுந்தரம், சிவகாம சுந்தரி, கடலூர் பாலன், வாழப்பாடி சந்திரன், ஆ பழனியப்பன், செம்பட்டு சுப்பையா ஆகியோராவர்.

இத்தகைய ஆளுமைகளின் முன்னெடுப்பில் கோவை மாநகரில் 1961 மே மாதம் நடைபெற்ற அமைப்பு மாநாட்டில் தமிழ்நாடு முழுமையிலும் இருந்து கலைஞர்களும், எழுத்தாளர்களும், நாட்டுப்புறக் கலைஞர்களும், இலக்கிய ஆர்வலர்களும் மிகுந்த உற்சாகத்துடன் திரண்டு வந்து கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் ஆற்றப்பெற்ற உரைகளும், நடத்தப்பட்ட கலை நிகழ்ச்சிகளும் தமிழ் கலை இலக்கிய உலகில் புதிய தடங்களைத் பதித்தன. மாநாட்டுக்குத் தலைமை தாங்கி பேராசான் ஜீவா பேசுகையில் “காலத்தின் குரலாக, சமுதாயத்தின் வாய் காது கண் நெஞ்சத்துடிப்பாகக் கலை இலக்கியப் பணிபுரியுங்கள்! நாளை விரிசோதியென மேதினியை மேவத்தகு ஆற்றலைப் படைத்த இன்றைய உண்மைத் துணுக்குகளை, அனுபவக் கூறுகளை, உணர்ச்சித் துளிகளை, ஆதர்சக் கதிர்களை இலக்கியத் துறையிலே ஆட்சி கொண்டு வாழ்வின் முயற்சியிலே வெற்றி பெறப் பணிபுரியுங்கள்!” என்று முழங்கிய முழக்கம் இன்றைக்கும் ஒரு முத்திரை வாக்கியமாகத் திகழ்கிறது.  பெருமன்றத்தின் அடிப்படை இலட்சியமாக “மனிதாபிமானம்” மையம் கொண்டது.  மட்டுமல்ல, ஜீவா கோவை மாநாட்டில் ஆற்றிய தலைமையுரைதான் கலை இலக்கியப் பெருமன்றத்தின் முதல் கொள்கை அறிக்கையாகவும் அமைந்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. 

இந்த முதல் மாநாட்டில் ஜீவா தலைவராகவும், தா பாண்டியன் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். மாநாட்டுக்கு பிறகு கூடிய முதல் மத்தியக் குழு கூட்டத்தில் பெருமன்றத்தின் நோக்கம் என்ன என்பது வரையறுக்கப்பட்டது:

“ தமிழ் மொழி அறிவையும் பற்றையும் வளர்ப்பது, கலை இலக்கியத் துறையில் வழி வழியாக வந்துள்ள நமது மனிதாபிமானப் பரம்பரையைப் பேணிக் காத்று அதனை மேலும் சோசலிசம், ஜனநாயகம், மனிதாபிமானம் ஆகிய பாதையில் மலரச் செய்து, கலை இலக்கியத் துறையில் இன, மத, நிற, சாதி வெறிப்போக்குகளையும், மூடநம்பிக்கைகளையும் எதிர்த்து தகர்ப்பது, நாட்டு ஒற்றுமை, பண்பாட்டு ஒருமைப்பாடு,நாடுகளுக்கு இடையே நல்லுறவு, உலக சமாதானம் முதலியவற்றைப் பேணிக் காப்பது அவற்றுக்காகப் பாடுபடுவது, மேற்கண்ட நோக்கங்களுக்கு துணை புரியும் நல்லிலக்கியங்களையும் கலைகளையும் பரப்புவது, பிற நாட்டு நல்லிலக்கியங்களைத் தமிழ் மக்களுக்கும் தமிழ்நாட்டு நல்லிலக்கியங்களைப் பிற மக்களுக்கும் எடுத்துச் சல்வது, சொல்வது.” மேற்கண்ட நோக்கங்களுக்கு எதிராக கலை இலக்கியத் துறையில் ஊறு செய்துவரும் தீய போக்குகளைக் கருவறுப்பது போன்றவை பெருமன்றத்தின் அடிப்படை நோக்கங்களாக முடிவு செய்யப்பட்டன.

பெருமன்றத்தின் வரலாற்றில் மாநாடுகள் மைல்கல்களாக அமைந்துள்ளன என்று சொல்லலாம். 1963இல் மதுரையில் நடைபெற்ற இரண்டாவது மாநாட்டில் தொ. மு. சி. ரகுநாதன் தலைவராகவும், தா. பாண்டியன் பொதுச்செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். 1966இல் பொள்ளாச்சியில் நடைபெற்ற மூன்றாவது மாநாட்டில் தலைவராக பேராசிரியர் நா. வானமாமலையும், செயலாளராக தா. பாண்டியனும், பொருளாளராக கே பாலதண்டாயுதமும் தெரிவு செய்யப்பட்டார்கள். பொள்ளாச்சி மாநாட்டில் தொ. மு.சி. ரகுநாதன் கொள்கை அறிக்கையைச் சமர்ப்பித்தார். இந்தக் கொள்கை அறிக்கையில் ரகுநாதன் போர்க்குணமித்த மனிதாபிமானம் என்ற கருத்தை வளர்த்தெடுத்தார்.1968 ல் திருச்சியில் நடைபெற்ற நான்காவது மாநாட்டில் மீண்டும் அதே தலைமை தொடர்ந்தது. 

10 ஆண்டுகளுக்குப் பிறகு 1978ல் திருப்பூரில் நடைபெற்ற 5 வது மாநில மாநாட்டில் தலைவராக நா. வானமாமலையும், செயலாளராக  கே சி எஸ் அருணாச்சலமும், பொருளாளராக ஆர். நல்லகண்ணுவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். திருப்பூர் மாநாட்டில் நா.வானமாமலை கொள்கை அறிக்கையைச் சமர்ப்பித்தார். மீண்டும் 10 ஆண்டுகளுக்குப் பிறகு 1988 இல் 

பாண்டிச்சேரியில் நடைபெற்ற 6வது மாநில மாநாட்டில் தலைமைக்குழுவாக தொ. மு. சி. ரகுநாதன், கே. சி. எஸ் அருணாச்சலம், குன்றக்குடி அடிகளார், திருச்சி தியாகராஜன், அமுதன் அடிகள் ஆகியோரும்,  பொதுச் செயலாளராக பொன்னீலனும், பொருளாளராக கவிஞர் வெ நாராவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். பாண்டிச்சேரி மாநாட்டில் பொன்னீலன் கொள்கை அறிக்கையைச் சமர்ப்பித்தார்.

1991 இல் கோவையில் நடைபெற்ற 7வது மாநாட்டில் மூத்த முன்னோடிகள் தலைமைக் குழுவாகவும், பொன்னீலன் பொதுச் செயலாளராகவும், சங்கரநாராயணன் பொருளாளராகவும் தெரிவு செய்யப்பட்டார்கள். ஒன்பது ஆண்டுகள் கழித்து 2000இல் சென்னையில் நடைபெற்ற  8வது மாநாட்டில் மூத்த முன்னோடிகள் தலைமைக் குழுவாகவும், பொன்னீலன் பொதுச் செயலாளராகவும், ரத்தினசாமி பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். 

2004இல் திருவண்ணாமலையில் நடைபெற்ற 9வது மாநாட்டில் தலைவராக பொன்னீலனும், பொதுச் செயலாளராக தனுஷ்கோடி ராமசாமியும், பொருளாளராக ரத்தினசாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். 2010ல் திருச்சி நடைபெற்ற 10வது மாநாட்டில் ஆ.சிவசுப்பிரமணியன் தலைவராகவும், இரா.காமராசு பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். 

2016 இல் மன்னார்குடியில் நடைபெற்ற 11 வது மாநில மாநாட்டில் தலைவராக சி சொக்கலிங்கமும் பொதுச்செயலாளராக இரா.காமராசுவும், பொருளாளராக ப.பா. ரமணியும் தெரிவு செய்யப்பட்டார்கள்.  மன்னார்குடி மாநாட்டில் கொள்கை அறிக்கையும் பண்பாட்டு அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டன.

2021இல் சாத்தூரில் நடைபெற்ற 12வது மாநில மாநாட்டில் தலைவராக சி.சொக்கலிங்கமும், பொதுச்செயலாளராக த.அறமும் பொருளாளராக ப.பா. ரமணியும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். சி.சொக்கலிங்கம் தலைவர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், 2023 ஜூனில் நடைபெற்ற திருப்பூர் மாநிலக் குழுவில் எஸ்.கே.கங்கா தலைவராக தெரிவு செய்யப்பட்டார். சாத்தூர் மாநாட்டில் மன்னார்குடி மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட கொள்கை அறிக்கை மற்றும் பண்பாட்டு அறிக்கையை முழுமைப்படுத்தி ஒரே கொள்கை அறிக்கையாக எஸ்.கே.கங்கா  சமர்ப்பித்தார். 

தமிழகம் முழுமையும்  கிளைகளைக் கொண்டு செயல்படுகிற  பெருமன்றத்தின் வாழ்க்கை வரலாற்றில் மாநில மாநாடுகள் திருப்புமுனைகளாக அமைகின்றன எனச் சொல்லலாம். அமைப்பு நடவடிக்கைகளை வழி காட்டுவதற்கும், கால மாற்றங்களுக்கு ஏற்றவாறு கொள்கை நிலைகளைத் தெளிவுபடுத்துவதற்கும் இத்தகைய மாநாடுகள் பேருதவியாக இருக்கின்றன. அமைப்பு நிலை பற்றிய விவாதங்களும், தலைமை அமைப்புகளை புதுப்பித்தலும் ஒருபுறம் என்றால், மறுபுறம் நடைபெறும் இலக்கிய அமர்வுகள் அந்தந்தக் காலத்தின் இலக்கியப் போக்குகளையும் பிரச்சனைகளையும் அலசி ஆராய்கின்ற ஆய்வு மையங்களாதலும் மாநாடுகளின் சிறப்பு அம்சமாக இருக்கின்றது.  இரவு நேரங்களில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகள் பெருமன்றத்தில் இயங்கும் கலைக்குழுக்களின் வெளிப்பாடுகளாகவும் திகழ்கின்றன.  இவ்வாறு மாநில மாநாடுகள் நடைபெறும் தருணங்களில், அதற்கு முன்னதாக கிளைகளும் மாவட்டங்களும் தத்தம் மாநாடுகளை நடத்தித் தங்களைத் தாங்களே புதுப்பித்துக் கொள்ளுகின்றன. இவ்வகையில் பெருமன்றத்தின் வரலாறு நெடுகிலும் புதுப்பித்தல் என்பது ஓர் இயல்பான நடைமுறையாக இருக்கின்றது. புதுச்சேரி மாநிலத்திலும் கலை இலக்கியப் பெருமன்றம் சுயமாகச் செயல்படுகிறது. என்றாலும் அது தமிழ்நாடு கலை இலக்கியப்  பெருமன்றத்தின் ஓர் உப அமைப்பாகவும் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதன் மாநில தலைவராக எல்லை. சிவகுமாரும், செயலாளராக பால கங்காதரனும், பொருளாளராக துரைசெல்வமும் செயல்படுகிறார்கள்.  இதேபோல் பெரம்பலூர் கடலூர் அரியலூர் ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த நாட்டுப்புறக் கலைஞர்கள் தமிழ்நாடு தோழர் ஜீவா அம்பேத்கர் நாட்டுப்புறக் கலைஞர்கள் சங்கம் என்ற அமைப்பாக சுயமாகச் செயல்படுகிறார்கள். இந்த அமைப்பும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் ஒரு உப அமைப்பாக இயங்குகிறது. இதன் மாநிலத் தலைவராக கண்ணதாசனும், செயலாளராக வீரமணியும், பொருளாளராக ரமேஷும் செயல்படுகிறார்கள்.

கலை இலக்கியச் செயல்பாடுகள்

கலை இலக்கியப் பெருமன்றம் ஆண்டாண்டுகளாய் பன்முகச் செயல்பாடுகளின் ஒரு தளமாகச் செயல்பட்டு வருகிறது. கிளைகள் அளவிலும், வட்டாரங்கள் அளவிலும், மாவட்டங்கள் அளவிலுமாகச் செயல்பாடுகள் விரிந்த அளவில் நடந்து வருகின்றன.

வாராந்திர மாதாந்திரக் கூட்டங்கள் நடத்துதல், ஆண்டு விழாக்கள் நடத்துதல், மகாகவி பாரதி, ஜீவா பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகியோர் நினைவாக விழாக்களை நடத்துதல், எழுத்தாளர்களை அறிமுகம் செய்தல், நூல் விமர்சனங்கள் செய்தல்,  படைப்பரங்கம் கருத்தரங்கம் நடத்துதல், நாடகங்கள் வீதி நாடகங்கள் நடத்துதல், படைப்பாளிகளை பாராட்டுதல், இலக்கியக் கோட்பாடுகளை அறிமுகம் செய்தல், முகாம்கள், பயிலரங்குகள், பட்டறைகள் எனப் பெருமன்றத்தின் செயல்பரப்புகள் பலப் பரிமாணங்கள் கொண்டவை.

புதுச்சேரி மாநிலக் கலை இலக்கியப் பெருமன்றம் மேற்படி நிகழ்வுகளோடு சங்கிரதாஸ் சுவாமிகள்,  தமிழ்  ஒளி, ஜீவா ஆகியோரின் விழாக்களை ஆண்டுதோறும் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் தமிழ்நாடு தோழர் ஜீவா அம்பேத்கர் நாட்டுப்புறக் கலைஞர்கள் சங்கம் ஆண்டுதோறும் அக்டோபர் 2 இல் தங்கள் மாநாட்டை நடத்தி வருகிறார்கள். அந்தத் தினத்தில் கலைஞர்களின் நிகழ்ச்சிகள் மாநாட்டின் பெருநிகழ்ச்சிகளாக  அமைகின்றன என்பதையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

கலை இலக்கியப் பெருமன்றத்தின் சில சிறப்புத் தொடர்ச் செயல்பாடுகளைப் பற்றியும் சொல்லியாக வேண்டும். எட்டயபுரத்தில் 60 ஆண்டுகளுக்கு மேலாக மகாகவி பாரதி விழாவும், பூதப்பாண்டியில் 40 ஆண்டுகளுக்கு மேலாக ஜீவா விழாவும் வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றன. பேராசிரியர் நாவா நினைவுக் கலை இலக்கிய முகாம் 40 ஆண்டுகளுக்கு மேலாக குமரியில் நடைபெற்று வருகிறது. இதைப் போல்

காருபாறை கிராமத்தில் 45 ஆண்டுகளுக்கு மேலாக பொங்கல் விழாவும், தக்கலையில் 40 ஆண்டுகளுக்கு மேலாக சுதந்திர தின விழாவும் நடைபெற்று வருகின்றன.

1960களில் “தமிழால் முடியாது” என்று தமிழ்நாட்டில் இருந்தே கூக்குரல்கள் எழும்பிய போது, “தமிழால் முடியும்”  என்ற நூல் மூலம் நாவா எதிர் வினையாற்றினார். தமிழகம் முழுவதும் கருத்தரங்குகளும் நடைபெற்றன.

1970களில் கோவையில் தோன்றிய வானம்பாடி என்ற பத்திரிகை ஒரு இலக்கியப் பேரியக்கமாக மாறியது. வாழ்வின் ஓலங்களே புதுக்கவிதை என்றிருந்த எதிர்மறைச் சூழலில், புதுக்கவிதையை மக்களின் போராடும் ஆயுதமாக முடியும் என்று எடுத்துக்காட்டியவர்கள் வானம்பாடியின் கவிப் பறவைகளான சிற்பி பாலசுப்பிரமணியம், புவியரசு கோவை ஞானி, அக்னி புத்திரன் ஆகியோர். இதன் பிறகு தான் புதுக்கவிதை ஒரு ஜனநாயக இயக்கமாக மாறிற்று.

படைப்பாளிகளுக்குக் கலை இலக்கியப் பெருமன்றமும் தாமரை பத்திரிகையும் நாற்றங்காலாகவே அன்றும் இன்றும் செயல்பட்டு வருகின்றன. இந்த நாற்றங்கால்களில் விளைந்த படைப்பாளிகளில் ஜெயகாந்தன், தொ. மு. சி. ரகுநாதன், பொன்னீலன், தி. க. சிவசங்கரன், சிற்பி பாலசுப்ரமணியம், புவியரசு, கொ.மா. கோதண்டம், ஆனந்தகுமார் ஆகியோர் சாகித்திய அகாதமியின் விருதுகளையும் பெற்றவர்களாக இருக்கிறார்கள்.

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் படைப்பாளிகளின் கொண்டாட்டமாகவும் குதூகலகமாகவும் இருந்து வருகிறது என்பதையும் எடுத்துச் சொல்ல வேண்டும். 1988 முதல் படைப்பாளிகளுக்கு விருதுகளை வழங்கும் ஒரு திட்டத்தை வகுத்து திறம்பட நடத்தி வருகிறது. ஆண்டுதோறும் இருபதுக்கும் மேற்பட்ட படைப்பாளிகளுக்குப்  பெருமன்றமும் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனமும்,  தோழமைகளும் இணைந்து இந்தத் திட்டத்தை ஒரு வெற்றியாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். முதல் 25 ஆண்டுகள் இத்திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பை கவிஞர் செந்தீ நடராஜன் ஏற்றுக் கொண்டிருந்தார். அதன் பிறகு அந்தப் பொறுப்பை பேராசிரியர் நா ராமச்சந்திரன் ஏற்று நடத்துகிறார். இன்று தமிழகத்தில் ஏராளமான விருதுத் திட்டங்கள் வழக்கில் வந்திருக்கும் நிலையில், இதற்கெல்லாம் ஒரு முன்னோடியாக பெருமன்றத்தின் திட்டம் 30 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஒரு முனோடியாக உருவாயிற்று என்று சொல்லலாம்.

ஆராய்ச்சி என்றொரு பரிமாணம்.

கலை இலக்கியப் பெருமன்றத்தின் செயல்பாடுகள் கலை இலக்கியத்தோடு மட்டும் நின்று விடவில்லை. இப்பெரு மன்றத்தில் கலைஞர்கள் எழுத்தாளர்கள் மட்டுமல்லாமல், இலக்கிய ஆர்வலர்களும் ரசிகர்களும் அங்கங்களாக இருக்கின்றனர் என்பது நாம் ஏற்கனவே சொல்லிவந்ததுதான். ஆனால் தமிழ்நாட்டில் உள்ள முற்போக்கான அறிவாளிகளும் தங்களை அங்கங்களாக ஆக்கிக் கொள்கிற ஓரிடமாக பெருமன்றம் இருந்து வருகிறது என்பதை இங்கே கோடிட்டுச் சொல்ல வேண்டும். குறிப்பாக இந்தத் திசை வழியில்  நா. வானமாமலையின் பங்குப்பணிகளைச் சொல்லியாக வேண்டும். 1961இல் கோவை மாநாட்டிலேயே நாட்டுப்பாடல்களைச் சேகரிக்கும் ஒரு குழு நா.வானமாமலை தலைமையில் அமைக்கப்பட்டது. அக்குழு தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் உள்ள நாட்டுப் பாடல்களைச் சேகரித்து நூலாக வெளியிட்டது. மார்க்சிய அறிஞராகவும் திகழ்ந்த நா. வணமாமலை இதன் மூலம் நாட்டுப் பாடல் ஆராய்ச்சியிலும் இறங்கினார். மேலும் 1967 இல் நெல்லை ஆய்வுக் குழுவை அமைத்தும், 1969ல் ஆராய்ச்சி பத்திரிகையைத் தொடங்கியும் தமிழ்நாட்டில் ஓர் அறிவுப்புரட்சியை உருவாக்கினார் என்றே சொல்லலாம்.

மார்க்சிய அடிப்படையிலும் அறிவியல் அடிப்படையிலும் ஆராய்ச்சிகள் நடந்திட வழி காட்டினார். அவரும் அவருடைய மாணவர்களும் தொடர்ச்சியாகச் செய்துவந்த  நாட்டார் இலக்கியச் செயல்பாடுகள் தமிழ் அறிவுலகில் நாட்டார் வழக்காற்றியல் என்ற துறையையே தோற்றுவிக்கும் நிலைக்குக் கொண்டுவிட்டன என்பது வரலாறு. 

நாட்டார் வழக்காறு, கலை இலக்கியம், தொல்லியல், மானிடவியல் ஆகிய துறைகளோடு அவற்றில் புழங்கி வந்த கோட்பாடுகள் பற்றிய விசாரணைகளையும்  நாவாவின் ஆய்வுக்குழு கச்சிதமாக செய்து வந்தது.

மட்டுமல்ல, இந்திய மற்றும் தமிழ்நாட்டு வரலாறு, இந்திய மட்டும் தமிழ்நாட்டுப் பண்பாடு ஆகியவற்றின் மீது மார்க்சியத் தத்துவ வெளிச்சத்தைப் பாய்ச்சி ஆராய்ச்சித் தளத்தை நாவா மேலும் வளர்த்தெடுத்தார். குறிப்பாக குமரி மாவட்டக் கலை இலக்கிய முகாம்களில்

கோட்பாடுகள், தத்துவம் பற்றிய அலசல்கள் எப்போதும் இருக்கும். இதே போல் பிற்காலத்தில் திருப்பூரில் நடைபெற்ற தத்துவ முகாம்களிலும், 

ராஜபாளையத்தில் நடைபெற்ற பண்பாட்டு முகாம்களிலும் தத்துவார்த்த உரையாடல் ஒரு தவிர்க்க முடியாத அம்சமாக இருந்து வந்திருக்கின்றது.

இவ்வாறு நாவாவின் பன்முகப்பட்டச் செயல்பாடுகள் கலை இலக்கியப் பெருமன்றத்தின் உள்கட்டமைப்புக்குள்ளே கலைஞர்கள்,  இலக்கியவாதிகள், இலக்கிய ஆர்வலர்கள், ரசிகர்களை மட்டுமல்லாமல் அறிவாளிகளையும் கவர்ந்திருக்கின்ற அரும்பணியை செய்துவிட்டது. விளைவாக கலை இலக்கியப் பெருமன்றம் ஒரு தத்துவக் களமாகவும் பரிணமிக்கத் தொடங்கி இருக்கிறது.

பண்பாட்டு இயக்கம்:

பொதுவான அர்த்தத்தில் கலை இலக்கியப் பெருமன்றம் என்பது ஒரு பண்பாட்டு இயக்கம் என்று சொல்லலாம். ஆனால் இன்றைய இந்தியச் சூழலில் பண்பாடு என்பதுஅதனுடைய எல்லைகளைக் கடந்து ஒரு நேரடி அரசியல் பிரச்சினையாகவும் மாறி நிற்கிறது. பண்பாட்டு வடிவங்களில் ஒன்றான மதத்தை  அரசியலில் கலந்து மதவாத அரசியல் தலையெடுத்து இருப்பதால் நாட்டின் ஜனநாயகத்திற்குப் பேராபத்து விளைந்துள்ளது. 

இந்து மதத்தை ஒரு அரசியல் ஆயுதமாகத் தரித்திருப்பதுதான் இந்துத்துவா என்று சொல்லக்கூடிய கோட்பாடு. இங்கே மதம் ஒரு பிரச்சனையே இல்லை. இந்து மதத்தின் போர்வையில் சாதிய ஏற்றத்தாழ்வுகளை உயர்த்திப் பிடிக்கிற உயர் ஜாதிகளின் அரசியல் தந்திரமே இது என்று சொல்லலாம்.

இன்று இந்துத்துவா தேர்தல் ஜனநாயகத்தின் மூலம் ஆட்சியைப் பிடித்து, ஜனநாயகத்தின் எல்லா அடிப்படைகளையும் தகர்த்துக் கொண்டிருக்கிற காட்சிகளைப் பார்க்கிறோம். இந்துத்துவா ஒரு பண்பாட்டு அரசியல் என்பதால், அதனை அரசியல் ரீதியாக வெற்றி கொண்டால் மட்டும் போதாது; மாறாக அதற்கு எதிர் நிலையில் மக்கள் சார்ந்த பண்பாட்டு அம்சங்களை முன்னெடுத்துப் போராட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதாவது இந்துத்துவ அரசியலுக்கு எதிரான ஒரு பண்பாட்டுப் போராட்டத்தை நாம் நடத்தி ஆக வேண்டும்.

எனவே இன்றைய நிலையில் பண்பாட்டுப் போராட்டம் என்பது அரசியல் அரங்கில் முன்னணியில் வந்து நிற்கின்ற ஒன்றாகும். கலை இலக்கியப் பெருமன்றம் ஒரு பண்பாட்டு இயக்கம் என்ற முறையிலும், இந்த நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பு என்ன விலை கொடுத்தேனும் காப்பாற்றப்பட வேண்டும் என்ற முறையிலும் பெருமன்றம் பண்பாட்டுப் போராட்டத்தில் இறங்கியாக வேண்டும். இந்தப் பண்பாட்டுப் போராட்டம் என்பது சித்தாந்தப் போராட்டத்தில் அதி முக்கியமான இடத்தை வகிக்கிறது என்று குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

இந்தியப் பண்பாடு என்பது ஒற்றைப் பண்பாடு அல்ல. எப்படி இந்தியத் தேசம் ஒற்றை நாடல்ல; அது ஒரு துணைக் கண்டம் என்று சொல்லுகிறோமோ அதுபோல இந்தியப் பண்பாடு என்பது பலப் பண்பாடுகளின் ஒரு கூட்டுத் தொகையே. ஒவ்வொரு தேசிய இனத்திற்கும், வர்க்கத்திற்கும், சாதிக்கும் தனிதனிப் பண்பாடுகள் இருக்கின்றன. இதில் இந்துத்துவா உயர்த்திப் பிடிக்கும் பண்பாடு என்பது மேட்டுக்குடிகளின் ஆதிக்கப் பண்பாடே.  

இதற்கு எதிரான மக்களின் ஜனநாயகப் பண்பாடை உயர்த்திப் பிடிக்க வேண்டியதுதான் நம்முடைய முக்கியமான கடமை. 

இந்த வகையில் கலை இலக்கியப் பெருமன்றம் தன் அங்கங்களை கலைஞர், எழுத்தாளர், அறிஞர், ஆர்வலர் என்ற நிலைகளில் மட்டுமல்லாமல், ஒரு பண்பாட்டுச் செயல்பாட்டாளராகவும் பரிணமித்துப் ஒரு பண்பாட்டுப் போராளியாகவும் மாறிட வேண்டியிருக்கிறது. அதாவது போர்க்குணமிக்க மனிதாபிமானிகளாக பரிணிமிக்க வேண்டி இருக்கிறது.

அறைகூவல்!

இவ்வாறு 60 ஆண்டுகளுக்கு மேலாக ஓர் உயிர்ப்புள்ள  பண்பாட்டு இயக்கமாகப் பெருமன்றம் இயங்கி வருகிறது.  1950 களில் நிலவிய நசிவு கலை இலக்கியப் போக்குகளுக்கு எதிராகப் போராடவும், புதுமையான கலை இலக்கியங்களைப் படைத்து பரப்பவும் கலைஞர்களையும் எழுத்தாளர்களையும் கலை இலக்கிய ஆர்வலர்களையும் ஓரணியில் திரட்டிய அமைப்பாக பெருமன்றம் இருந்தது. 

நெல்லை ஆய்வுக் குழு, ஆராய்ச்சி பத்திரிகை, நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகள் என 1960 களிலும் 1970 களிலும்  ஆகியவற்றின் தர்க்கபூர்வமான விளைவாக ஆய்வாளர்களும் ஆராய்ச்சியாளர்களும் பெருமன்றத்தின் அங்கங்களாக மாறினர். தொடர்ந்து பெருமன்றம் சமகால தத்துவ விசாரணைகளிலும் இறங்கி நின்று களமாடிக் கொண்டிருக்கிறது. 1990களில் சோவியத் சோசலிச வீழ்ச்சிக்கு பின் தத்துவ விசாரணைகள் பெருமன்றத்திற்கான ஒரு புதிய பரிமாணத்தைக் கொடுத்து வருகிறது.

இதே போல் 1990 களில் இந்துத்துவா ஒரு அரசியல் சக்தியாக வளர்ந்து ஆட்சி அதிகாரத்தை பிடிக்கும் அளவுக்கு வந்த போது, இந்தியச் சூழல் என்பது மதவாத அரசியலின் பிடிக்குள் மாட்டிக்கொண்டது. இதற்கு எதிரான ஒரு பண்பாட்டுப் போராட்டத்தை நடத்திட வேண்டிய அவசியமும் உயர்ந்து வருகிறது. சமகாலத்தில் இது ஒரு முக்கியப் பிரச்சினையாக விளங்குகிறது. மதவாத அரசியலின் மறைபொருளாக இருக்கும் மனு தர்மத்திற்கு எதிரான கருத்தியல் போராட்டத்தில் பெருமன்றம் முன்னணியில் நிற்க வேண்டி இருக்கிறது. எனவே ஜனநாயகம், சமூக நீதி, சமயச் சார்பின்மை,பாலின சமத்துவம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மனித உரிமைகள் உள்ளிட்ட சம தர்மம் என்னும் பதாகையை ஏந்தி பெருமன்றம் பயணித்துக் கொண்டிருக்கிறது.
வள்ளுவன், கம்பன், பாரதி, பாரதிதாசன், தமிழ் ஒளி,பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகியோரின் வழியில் பொருளாதாரச் சுரண்டலை முற்றாக ஒழித்து, சாதி சமூக ஒடுக்கு முறைகளை போராடி மண்ணோடு கிள்ளி எறிந்து, ஆணும் பெண்ணும் புவி மீது சமானமாக வாழ்ந்து செழிக்கும் புதிய தமிழகம் படைத்திட கவிஞர்களையும், கலைஞர்களையும், எழுத்தாளர்களையும், சிந்தனையாளர்களையும், விமர்சனங்களையும், ஆய்வாளர்களையும், கலை இலக்கிய ஆர்வலர்களையும் ஓரணியில் ஒன்று சேர்ந்து பாடுபட அறை கூவி அழைக்கிறது தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்.

அமைப்பு நிர்வாகிகள்: மாநிலத் தலைவர் S.K.கங்கா, மாநிலப் பொதுச் செயலாளர் மருத்துவர் த. அறம். மாநிலப் பொருளாளர் ப.பா.ரமணி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *