மாதவிடாய்

இன்றிலிருந்து மூன்று நாட்களுக்கு

தூம கிரகணம்

நிலவைக் கவ்விய யோனியின் வாதை

செந்நதியெனப் பாய்கிறது

சாண்டையின் கட்டற்ற போக்கு

வரைபடத்தின் ரேகைகளை

மாற்றி எழுதிப் பார்க்கிறது             

தோன்றும் புதிய பரப்புகளில்

சூறைத் தீ பற்றுகிறது

                                 -லீனா மணிமேகலை

இந்தக் கவிதையில் மாதவிடாய்க் குருதி வரைப்படத்தின் ரேகைகளை

மாற்றி எழுதிப் பார்க்கிறது என்று கவிஞரின் வார்த்தைகள் பலிக்குமா?

மாதவிடாய்‌ பற்றிப் பேசுவதே பெண்களை இழிவுபடுத்தும் செயலாக

நம்பப்படுகிறது. என் பாட்டிக்குத் தன் ‌மாதவிடாய் காலங்களில் துணியைத்

துவைத்து உபயோகிக்க வேண்டும், சமையலறைக்குள் ‌செல்லக்கூடாது, 

யார் முகத்திலும் விழிக்கக் கூடாது போன்ற பல கட்டுப்பாடுகள் இருந்தன.

என்ன தான் ‌என் அம்மா வினால் வீட்டுக்குள் செல்லும் உரிமையைப் ‌பெற‌

முடிந்த போதும் 1980கள் வரை கடைக்குச் சென்று நாப்கின் வாங்குவதென்பதே அவமானமாகக் கருதப்பட்டது.

இன்றும்‌ கூட கடைகளில் நாப்கின்கள் காகிதத்தில் சுற்றப்பட்டுத்தான் தரப்படுகிறது. நாப்கின்கள் மறைக்கப்பட வேண்டிய அவசியமென்ன.

இயற்கையாய் உடலில் ஏற்படும் மாற்றத்தைப் பற்றித் தெரியப்படுத்தாமல் ஏன் மறைக்க வேண்டும். சமுதாய மாற்றத்தைக் கொண்டு

வருபவையாகச் சித்தரிக்கப்படும் திரைப்படங்களில் கூட ஒரு பெண்கர்ப்பமடையவில்லை என்பதைக் காட்ட மட்டுமே நாப்கின்களைக்

காட்டுகின்றனர். மாதவிடாய் ‌சமயங்களில் ஒரு பெண்ணின் உடல் பிரச்சினைகள் மற்றும் மனக்குழப்பங்களைப் பற்றிய காட்சிகள் எப்போதும்

திரைப்படங்களில் வைக்கப்‌படுவதில்லை.

“நம்மால் காற்றைத் திசை திருப்ப முடியாது ஆனால் பாய் மரங்களைச் சரி செய்ய முடியும்” என்ற டாலி பார்ட்டன் கூற்றை யோசித்துப் பார்த்தால் அது கூறும் உட்கருத்து இயற்கையின் அனைத்து விதிகளுக்கும் கச்சிதமாகப் பொருந்தும்.

மனித உடல் என்பது பல்லாயிரக் கணக்கான செல்களால் நிறுவப்பட்டது. அதன் கட்டமைப்பில் ஒவ்வொரு உறுப்பின் பணியும், பயன்பாடும் மிகுந்த ஆச்சரியத்தைத் தருபவை.  அதிலும் ஒரு பெண்ணின் கருப்பை பிரசிவிக்கும் போது ஆயிரம் மடங்கு வளர்ச்சி அடைந்து ஒரு குழந்தையை ஏந்திக் கொள்வது என்பது பிரமிப்பைத் தருகிறது. அதுபோல உடலின் ஒவ்வொரு நிகழ்வும் சில அதிசயங்களை நமக்காகத் தேக்கி வைத்திருக்கிறது. அப்படி ஒரு நிகழ்வு தான் மாதவிடாய்.  ஒரு கருமுட்டை சிசுவாக உருமாறாத போது, கருப்பையின் புறணி உடைந்து ரத்தப்போக்கு ஏற்பட்டு மாதவிடாய் நிகழும். இது பெண்களுக்குப் பொதுவாக மாதம் தோறும் மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை நீடிக்கும்.

ஒரு பெண் பருவம் அடைதல் அல்லது பூப்பெய்துதல் என்பது இந்தச் சமூகத்தில் மகிழ்ச்சியாகக் கொண்டாடப்பட்டாலும் மாதவிடாய் என்று பெயரிட்டு அந்தச் சிறுமியை ஐந்து நாட்களுக்கு தீட்டு என்று தள்ளி வைக்கும் அவலம் இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. மாதவிடாய் பற்றிய போதிய அறிதல் இல்லாமலே 71% இந்தியச் சிறுமிகள் பூப்பெய்துகின்றனர். அவர்களின் முதல் மாதவிடாய் சமயங்களில் இரத்தப் போக்கைக் கண்டு அச்சுறுகின்றனர். மாதவிடாய் பற்றிப் பேசுவதும், தெரிந்து கொள்வதும் இங்கு பாவச் செயல் போல் பாவிக்கப்படுகிறது. இன்னும் நிறைய வீடுகளில் மாதவிடாய்ச் சமயங்களில் பெண்களுக்கு எதிராக நிறைய மூடப்பழக்கங்கள் வழக்கத்தில் உள்ளன. நன்கு படித்து  வேலைக்குச் செல்லும் என் தோழி கூட தன் மகளை தீட்டு என்று ஒதுக்கி வைப்பதையும், தனியாகப் பாயில் படுக்க வைப்பதையும் நான் பார்த்திருக்கிறேன். வலியாலும், இரத்தப் போக்காலும் வாடும் சிறுமிகளுக்கான ஆதரவையும், அன்பையும் தருவதைத் தவிர்த்து அவர்களை ஒதுக்கி வைக்கும் இது போன்ற மூடநம்பிக்கைகள் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்.

நான்கு வருடங்களுக்கு முன் இந்திய மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு (FOGSI) நடத்திய ஆய்வில் இந்தியப் பெண்கள் 13, 14 வயதில் பூப்படைந்த காலம் மாறி இப்போது 8 முதல் 14 வயதுக்குள் பூப்படைவதாகத் தெரிய வந்துள்ளது. நகரத்தில் வாழும் சிறுமிகள் பூப்படையும் வயதை விட இரண்டு வருடங்கள் முன்னதாகவே பூப்படைந்து விடுகின்றனர்‌ என்பதும் அதிர்ச்சியளிக்கும்‌ செய்தியாகும்.ஆரோக்கியமற்ற உணவு பழக்கவழக்கங்கள், குறைந்து போன விளையாட்டு நேரம் மற்றும் புதிய வாழ்க்கை முறை என்ற பல காரணங்களால் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளதாக மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும் இத்தகைய மாற்றம் சிறுமிகளுக்கு உடல் சார்ந்த பிரச்சனைகள், வளர்ச்சி குறைவு ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் உளவியல் சார்ந்த பிரச்சினைகளை உண்டாக்குவதாகவும் கூறுகின்றனர்.

சராசரியாக ஒரு பெண் தன் ஆயுளில் 450 மாதவிடாய்களை எதிர்கொள்கிறாள். அதேபோல 3500 நாட்களை இரத்தப்போக்குடன் கழிக்கிறாள். ஆனால் மாதவிடாய் சமயங்களில் ஒரு பெண் எதிர்கொள்ளும் உடல் பிரச்சினைகள் மற்றும்  மனக்குழப்பங்கள் பெரிதாகக் கண்டு கொள்ளப்படுவதில்லை. உதாரணமாக ஒரு ஏழைக் குடும்பத்தில் பருவமடைந்த சிறுமி பள்ளிக்குச் செல்லும் போது சரியான நாப்கின் அவளுக்குக் கிடைக்கப் பெறுவதில்லை. அதேபோல் சரியான நாளில் அவளுடைய மாதவிடாய் வராது போனால் பெரும் மனக்குழப்பத்திற்கு ஆளாக வேண்டியுள்ளது அவளின் பெற்றோர்கள் படிக்காதவர்கள் என்றால் நிலைமை இன்னும் மோசம். அந்தச் சிறுமியை மகப்பேறு மருத்துவரிடம் அழைத்துச் சென்று, அவளுக்கு வேண்டிய மருத்துவப் பரிசோதனைகளையும், அறிவுரைகளும் வழங்குவது தான் இந்த பிரச்சனைக்குச் சரியான தீர்வாகும் ஆனால் பெரும்பாலானோர் அதை முக்கியமான விஷயமாகக் கருதுவதில்லை. மாறாக அவள் தனியே படுக்க வைக்கப்படுவதும் அவளுடைய பிரச்சனைகளைக் கண்டு கொள்ளாமல் விடுவதுமாக நிலைமை இருக்கிறது.

மாதவிடாய் சமயங்களில் ஒரு பெண் அனுபவிக்கும் வலியைப் பற்றிய விழிப்புணர்வும் இங்கு குறைவு. லண்டன் நாளிதழ் ஒன்றுக்கு மருத்துவர் ஜான் குல்லிபர்ட் அளித்த பேட்டியில் அவர் “மாதவிடாய் வலி கிட்டத்தட்ட மாரடைப்பு வலியைப் போல் இருக்கும். ஐந்தில் ஒரு பெண்ணுக்கு டிஸ்மெனோரியா என்ற தீவிர வயிற்று வலிப் பிரச்சனை இருக்கிறது இந்த வலி இடுப்பு எலும்புகள் நகர்வதைப் போன்ற வலியாக இருக்கும்!!” என்று கூறுகிறார்.  2022 ஆம் வருடம் இந்திய மருத்துவ குழுமம் கொச்சியில் உள்ள லூலூமாலில் மாதவிடாய் வலியைப்பற்றிய விழிப்புணர்வுக்காக ஒரு நிகழ்வை நடத்தியது. மாதவிடாய் வலியை உருவாக்கக்கூடிய ஒரு கருவி சில ஆண்களுக்கு இடுப்பில் பொருத்தப் பட்டது. சிலர் வலி தாங்க முடியாமல் அழுதனர், சிலர் மூச்சு விட முடியாமல் தவித்தனர், இது போன்ற வலியைத் தாங்கள் அனுபவித்ததே இல்லை என்று வருத்தத்துடன் சிலர் தெரிவித்தனர்.  ஆகவே மாதவிடாய் வலி என்பது சாதாரணமானதல்ல என்பதை எல்லோரும் உணர்ந்து கொள்ள வேண்டும். மேலும் மாதவிடாய்ச் சுகாதாரம் மற்றும் மாதவிடாய்  ஏற்படுவதற்கான காரணங்கள், அதனுடைய பிரச்சனைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் 10 வயதிலேயே அனைத்துச் சிறுவர்களுக்கும் கற்பிக்கப்பட வேண்டும். மாதவிடாய் எந்த வயதில் ஆரம்பிக்கும், இரத்தப் போக்கை எப்படி எதிர்கொள்வது,  நாப்கின்கள் பயன்பாடு நாப்கின்களை அப்புறப்படுத்துதல், உடலில் ஏற்படும் மாற்றங்கள், ஹார்மோன் பாதிப்புகள் போன்றவை சிறுவர்களுக்குப் புரியும் படி தெளிவாக எடுத்துரைக்கப்பட வேண்டும்.   மாதவிடாய்ச் சமயங்களில் வீட்டில் உள்ள பெண்களின் வேலைகளைப் பகிர்ந்து கொள்ளவும். அவர்களின் வலியைப் போக்க சுடு தண்ணீர் ஒத்தடம் மற்றும் அவர்களுக்குத் தேவைப்படும் நாப்கின் மற்றும் மருந்துகளை வாங்கித்தருவது என்று அவர்களுக்குத் தேவைப்படும் ஆதரவைக் குடும்பம் தருவது மிகவும் முக்கியமானதாகும்.

ஒரு பெண்ணின் பிரச்சனைகளை அவளே தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பதைத் தவிர்த்து மாதவிடாய் போன்ற உடல் பிரச்சனைகளைப் பற்றியும் ஆண் பிள்ளைகளுக்கும் கற்றுத் தர வேண்டும். மாதவிடாயின் போது ஒரு பெண்ணிற்கு எப்படி உதவியாக இருக்கலாம்,  ஆதரவளிக்கலாம் போன்றவை ஆண்கள் அறிந்து கொள்வது மிகவும் அவசியமானதாகும். ஒரு மனிதனின் மாற்றம் ஒரு குடும்பத்தையும், ஒரு குடும்பத்தின் மாற்றம் சில குடும்பங்களையும், அதன் பிரதிபலிப்பு ஒரு சமூகத்தையும் மாற்றும் என்பதை நாம் அறிவோம்.  பல வருடங்கள் போராடிய பின் தான் பெண்களால் சமையலறையில் இருந்து வெளியே வர முடிந்தது. மாற்றங்கள் நிகழும்‌போது முன்னேற்றம் நிகழும். எனவே சற்று பின் தங்கியிருக்கும் குடும்பங்களில் வளரும் சிறுமிகளுக்கு மாதவிடாய் பற்றிய புரிதலை நாம் ஏற்படுத்த வேண்டும். பளு தூக்குவதிலும், நீச்சலிலும், ஓட்டப்பந்தயத்திலும், விண்வெளிக்குச் செல்வதிலும் இப்போதிருக்கும் பெண்களுக்கு ஐந்து நாட்கள் ரத்தப்போக்கும், வயிற்று வலியும் எந்த விதத்திலும் தடங்கலாய் அமையவில்லை. அதேபோல “அம்மா இன்னிக்கி என் கிளாஸ்ல ஒரு பொண்ணு வயசுக்கு வந்திட்டா மெடிக்கல் ரூமுக்குப் போய் அவளுக்கு நான் தான் நேப்கின் வாங்கிக் கொடுத்தேன்” என்று மகன்கள் ‌சொல்லும் நாள் வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

One thought on “மாதவிடாய்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *