மறந்து போன தமிழர்களின் மரபு வழி தொழில்நுட்பங்கள்

தமிழரின் மரபு வழி தொழில் நுட்பங்கள் பல இன்று நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் இருந்திருக்கின்றன. இன்றைய காலகட்டத்தில் அதன் சிறப்புகளைப் பற்றி பேச புகுகையில் சில விமர்சனங்கள் எழுவதை நாம் காண முடிகிறது. பழம் பெருமை பேசுவதில் என்ன பலன் என்ற கேலிக்கு உள்ளாவதுடன் முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல என்ற சொற்றொடரும் சிரிப்புக்கு உள்ளாகிறது. இருந்தாலும் நாம் நமது முன்னோர்களின் மரபு வழி தொழில்நுட்பங்களை பற்றி உரக்கப் பேச வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக உணர்கிறேன். அதன் விளைவு சில மரபு வழி தொழில்நுட்பங்கள் பற்றிய சில விளக்கங்களை சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

உலகின் முதல் கடலோடி ஆதித்தமிழன். தமிழர்கள் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே மரக்கலங்களில் உலகையே சுற்றி வந்து இருக்கின்றனர். காற்றின் உதவியுடன் மரக்கலங்களில் துணியிலான பாய்களைக் கட்டி கடலில் கலங்களை இயக்கும் தொழில்நுட்பத்தை அறிந்திருந்தனர். இந்த வகை 

பாய்களைக் கோலிகன் வாதிரியார் போன்ற சிறப்பு நெசவுத் தொழில் நுட்பம் தெரிந்த நெசவாளிகள் நெய்து வந்தனர்.

கோலிகன் என்று சொல்லிற்கு நெசவு தொழிலில் செய்யும் கீழ் சாதியினர் என்று பொருள் சொல்கிறது தமிழ் லெக்சிகன். மேலும் இவர்கள் கோலியர் என்றும் குறிக்கப்படுவர். இவர்களே கோலிகப்பறையர் என்றும் கோலியப்பறையர் என்றும் அறியப்படுகிறார்கள். இவர்கள் குமரி மற்றும் நெல்லை மாவட்ட பகுதியில் இருந்து வந்தனர் என்று சொல்லப்படுவது உண்டு. இவர்கள் நெய்யும் துணியும் கோலிகன் என்று குறிப்பிடப்படுகிறது. கோலிகன் என்பதற்கு a kind of coarse cloth as woven by kolikar என்று விளக்குகிறது தமிழ் லெக்சிகன். coarse cloth என்பது முரட்டு வகை துணியாகும். இந்த முரட்டு வகை துணி அந்தக் காலத்தில் பாய்மரக் கப்பலில் பாயாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. 

இவர்களைப் போலவே வாதிரியார் என்ற பிரிவினரும் பாய்மரத்துக்கான துணிவகையினை நெய்து வந்தனர் என்று தெரிகிறது. வாதிரு என்ற சொல்லுக்கு காற்று என்று பொருள் சொல்லும் தமிழ் மொழி அகராதி. காற்றுக்கும் பாய்மரக்கப்பல் பாய்க்குமான தொடர்பு சொல்லாமலே புரியும் தானே. 

பாய்மரத்துணியினை நெய்யும் சிறப்புத் தொழில் நுட்பத்தை கண்டறிந்தவர்கள் தமிழர்கள் தான். பொதுவாக துணி பலமான காற்று வீச்சில் எளிதில் கிழிந்து போய்விடும் இயல்பு கொண்டது. இந்த இயல்பு தன்மையை மாற்றும் விதத்தில் தான் தமிழரிடம் ஒரு சிறப்புத் தொழில்நுட்பம் இருந்தது. பருத்தித் துணியில் புளியங்கொட்டையை மாவாக அரைத்து, தோய்த்தால் புளியங்கொட்டையின் பசைத்தன்மை துணிக்கு வலுவும் கடினத்தன்மையும் கொடுத்து விடுகிறது. இந்தத் துணியை தான் பாய்மரத் துணியாக மாற்றினார்கள். அந்தத் துணிகள் எளிதில் கிழிந்து போகாது. எத்தகைய சூறைக் காற்றையும் எதிர் கொண்டு நிற்கும். 

அறிவியல் வளர்ச்சியின் விளைவாக கப்பல் ஓட்டும் தொழில் நுட்பம் மாறியதால் பாய்மரக் கப்பலுக்கான பாய்களின் தேவை அற்றுப் போனது. இதனால் இந்த நெசவாளிகளின் தொழிலும் நசிந்து போனது. 

நெல்லை மாவட்டத்தில் கோலியன்குளம் என்ற ஊர் இன்றும் உள்ளது. ஒரு காலத்தில் கோலியன்கள் நிறைந்திருந்ததால் இந்த ஊர் கோலியன் குளம் ஆனது. அவர்கள் தொழில் நசிவுக்குப் பின் கோலியன்கள் அந்த ஊரை விட்டு வெளியேறி விட்டனர். இன்று கோலியன்கள் ஒருவர் கூட அந்த ஊரில் கிடையாது.

சக்கரம் மனிதனின் கண்டுபிடிப்புகளில் ஒரு முக்கிய இடத்தை பெறுகிறது. மனிதநாகரீகத்தின் பரிணாம வளர்ச்சியில் சக்கரத்தின் கண்டுபிடிப்பு ஒரு தாவலை உண்டாக்கியிருக்கிறது. சக்கரம் கண்டுபிடிக்கப்பட்ட பின்பு தான் மண்பாண்டங்களை வனைய கற்றுக்கொண்டான். மண்பாண்டங்களின் உருவாக்கம் மனித நாகரிக வளர்ச்சியில் ஒரு மைல்கல். அது போலவே சக்கரங்களை பயன்படுத்தி வண்டியை உருவாக்கியதும் சிந்துவெளி நாகரிக காலத்திலேயே . வண்டியின் பயன்பாடு இருந்தது என்பதற்கான சான்றுகள் கிடைக்கின்றன. அது போலவே மட்பாண்டங்களின் பயன்பாடும் பொருநை கரை (ஆதிச்சநல்லூர்) நாகரிக காலத்திலேயே சிறந்து விளங்கியது என்பதை அகழாய்வுகள் காட்டுகின்றன.  சக்கரம் என்று வந்து விட்டாலே  அதற்கான நுண் கணக்கியலும் உருவாக்கப்பட வேண்டிய தேவையும் ஏற்பட்டுவிடுகிறது. சக்கரம் என்று எடுத்துக் கொண்டால் அதன் , விட்டம், மையம், சுற்றளவு போன்ற அளவுகள் பற்றிய அறிவு தேவைபடுகின்றன. 

 பொதுவாக இன்று நமக்கு கணக்கியலில் சக்கரத்தின் சுற்றளவை கண்டறிய π D என்ற சூத்திரத்தை பயன்படுத்துகிறோம். இது மேற்கத்திய கல்வி முறையின் வழியே நமக்கு அறிமுகமான அறிவு, ஆனால் இந்த கல்வி முறை நமக்கு அறிமுகமாகும் முன்பே வட்டத்தின் சுற்றளவு வட்டத்தின் பரப்பளவு போன்றவற்றை கண்டறிய நமது மரபில் எளிய முறைகள் இருந்து வந்திருக்கின்றன. ஆனால் காலப்போக்கில் அவற்றையெல்லாம் நாம் அறிந்து கொள்ளாமல் மறந்து விட்டோம். அப்படி மறந்து போனதின் விளைவாக அவை எல்லாம் மறைந்தும் போயின. நல்ல வேளை அவை எல்லாம் முற்றிலும் அழிந்து விடவில்லை. நமது பழங்குறிப்புகளில் அவை எல்லாம் புதைந்து கிடக்கின்றன. இதில் வேடிக்கை என்னவென்றால் இன்று நாம் மேற்கத்திய முறையில் கற்கும் சூத்திரங்களுக்கு மூலம் நமது பழங்குறிப்புகளே என்பது தான். வட்டத்தின் சுற்றளவை கண்டுபிடிக்க நமது பழங்குறிப்பில் காணும் சூத்திரம்:

“விட்டம் ஓர் ஏழு செய்து

திகைவர நான்கு சேர்த்து

சட்டென இரட்டிப்பு செய்தால்

திகைப்படும் சுற்று தானே” 

 அதாவது வட்டத்தின் விட்டத்தை ஏழு பங்குகளாக்கி அதனுடன் நான்கு பங்குகளைசேர்த்து அதை இரண்டால் பெருக்க வட்டத்தின் சுற்றளவு கிடைக்கும் என்பது இதன் பொருள். இந்த சூத்திரத்தை பயன்படுத்தி ஒரு வட்டத்தின் சுற்றளவை கண்டுபிடிப்போம். எடுத்துக்காட்டாக ஒரு மாட்டுவண்டி (சக்கடாவண்டி/பாரவண்டி) சக்கரத்தின் விட்டத்தை எடுத்துக்கொள்வோம். சக்கடாவண்டிச் சக்கரத்தின் உயரம் அதாவது விட்டம் 5 ¼ அடி. இந்த அளவு தமிழ்நாட்டில் மட்டுமல்ல ஒரிசா வரை காணப்படுகிற வண்டிகளின் சக்கரங்கள் அனைத்தும் இதே அளவில் தான் செய்யப்படுகின்றன என்பது சற்று ஆச்சரியம் தரக்கூடிய தகவல் தான். ஏன் இப்படி ஒரு தரப்படுத்தப்பட்ட (standardized) அளவை பயன்படுத்துகிறார்கள் என்பதை பின்னால் பார்ப்போம். இப்போது நமக்குத் தெரிந்த சூத்திரங்களை பயன்படுத்தி வண்டிச்சக்கரத்தின் சுற்றளவை காண்போம். முதலில் நமது மரபுவழி சூத்திரத்தைப் பயன்படுத்தி  ஐந்தேகால் அடி விட்டம் கொண்ட சக்கரத்தின் சுற்றளவு  5 ¼ அடியை ஏழு சமபங்காக்கினால் ஒரு பங்கின் மதிப்பு ¾ அடியாகும். மேலும் ஒரு நான்கு பங்கின் மதிப்பு  4 x ¾ =3. ஏழு பங்கின் மதிப்பான 5 1/4 அடியுடன் நான்கு பங்கின் மதிப்பு 3 யை கூட்டினால்      (5  ¼ + 3 = 8  ¼  X 2) = 16  ½  அடியாகும். நமது மரபு வழி சூத்திரத்தை பயன்படுத்தி கண்டறிந்த   சுற்றளவு 16 ½ அடியாகும்.  இப்போது πயை பயன்படுத்தி சுற்றளவை காண்போம். உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட π யின் மதிப்பு 3.1415 ஆகும். வட்டத்தின் சுற்றளவை கண்டுபிடிக்க நமக்கு சொல்லிக் கொடுக்கப்பட்ட  சூத்திரம் π D.  இதன்படி 3.1415 X 5  ¼  = 16.492875 ஆகும்.  நமது மரபுவழி  சூத்திரத்தை பயன்படுத்தி கண்டறிந்த மதிப்பு 16.5 ( 16 ½ ). பள்ளியில் படித்த சூத்திரத்தைப் பயன்படுத்தி கண்டறிந்த மதிப்பு 16.49285 ஆகும். நமது மரபுவழிசூத்திரத்தின் அடிப்படையில் கண்டறிந்த மதிப்பே துல்லியமானது. பள்ளிப்படிப்பு சூத்திரத்தின் அடிப்படையில் கண்டுபிடித்ததில்  0.007125 அளவிலான மதிப்பு விடுபட்டு போயிருக்கிறது. 

 நமது மரபுவழி சூத்திரத்தில் 22 மற்றும் 7 என்ற என்ற எண்களுக்கும் தொடர்பிருக்கிறது. (7+4X2=22) இதன்படி நமது மரபு வழி சூத்திரத்தின் அடிப்படையில் தான் πன் மதிப்பாக 22/7என்று கொண்டிருப்பார்களோ என்ற ஐயப்பட வாய்ப்பிருக்கிறது தானே. ஒரு வட்டத்தின் சுற்றளவு என்பது அதன் விட்டத்தைப் போல மூன்று மடங்கும் ஒரு சிறு பகுதியும் ஆகும் அந்த சிறு பகுதி என்பது விட்டதின் மதிப்பில் ஏழில் ஒன்றாகும். இந்த உண்மையை கண்டறிந்த நமது முன்னோர்கள் இதன் அடிப்படையிலேயே தான் நமது மரபுவழி சூத்திரத்தை உருவாக்கினர். நம்மிடம் புழக்கத்தில் இருந்த பின்ன முறை மேற்கத்தியர் அறியாத ஒன்று. அவர்களுக்கு அரை, கால் என்கிற பின்ன எண்களை  மட்டுமே சுட்ட தனி சொற்கள் உண்டு. மற்ற பின்ன எண்களை எல்லாம் இத்தனையின் கீழ் இத்தனை என்றே குறிப்பிட்டனர். நம்மிடமோ கால் ,அரை, முக்கால், அரைக்கால், மாகாணி  என்று ஒவ்வொரு பின்ன எண்ணையும் குறிக்க தனி தனி சொல் உண்டு. 1/320  என்ற பின்ன எண்ணை குறிக்க பயன்படுத்தப்பட்ட சொல் முந்திரி என்பதாகும். இந்த 1/320 எண்ணை மேலும் 320 பங்குகளாக பகுக்க வரும் எண் கீழ் முந்திரியாகும். கீழ் முந்திரி என்னும் பின்ன  எண்ணின்  வடிவம் 1/102400 என்பதாகும். இப்படி நுண்ணிய மதிப்பு கொண்ட எண்கள் நம்மிடையே புழக்கத்தில் இருந்ததால் நமது மரபு வழியில் துல்லியமாக எதையும் கணக்கிட முடிந்தது. எனவே π யை பயன்படுத்தும் போது நமது மரபு வழியில் கண்டறியும் துல்லியம் கிடைப்பதில்லை.

 மாட்டுவண்டி என்பது மனிதனால் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிற ஒரு வாகனம். மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்திய முதல் வாகனமும் இது தான் என்று கூட சொல்லலாம். நமது முன்னோர்கள் வடிவமைத்திருக்கும் இந்த மாட்டுவண்டியின் தொழில்நுட்பம் நம்மை சற்று கூடுதலாகவே ஆச்சரியப்பட வைக்கிறது. அதிலும் குறிப்பாக தமிழ் நாட்டில் பயன்படுத்தப்படும் சக்கடாவண்டி என்னும் பாரவண்டியை எடுத்துக்கொண்டால் அதன் வடிவமைப்பு தமிழ்நாடு மட்டும் அல்லாமல் கோரமண்டல் கடற்கரை பகுதி என்று குறிப்பிடப்படும் ஒரிசா வரை ஒரே மாதிரி இருக்கிறது என்கிற தகவல் சற்று யோசிக்க வைக்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது. 

 இந்தப் பகுதிகளில் பயன்படுத்தப்படும் மாட்டுவண்டிகளின் சக்கரத்தின் உயரம் 5  ¼ அடி என்று தரப்படுத்தபட்டிருக்கிறது. இந்தத் தரப்படுத்தல் என்பது ஏன் என்று சற்று பார்ப்போம். பொதுவாக ஒரு நபரை நெட்டையான ஆள் என்றோ குட்டையான ஆள் என்றோ அடையாளப்படுத்துவது நம்மிடையே இருந்து வரும் ஒரு பழக்கம். இந்த குட்டை நெட்டைக்கான அடிப்படை(reference point) என்று ஒன்று இருக்க வேண்டும் தானே. அதாவது சராசரி உயரம் என்பதாக. நம்மை பொருத்த வரை நம்ம ஊரில் மனிதனின் சராசரி உயரம் என்பது 5 ½ அடி என்பதாகும். இந்த சராசரி உயரத்தின்  ¾ பங்கு என்பது அதாவது எண் சாண் உடம்பு என்று சொல்வோமே அதில்  ¾  பங்கான 6 சாண் என்பது  4  1/8  (நாலரை அரைக்கால்) அடி ஆகும். இது மனிதனின் நெஞ்சு பகுதி வரை உள்ள உயரமாகும். 

 மாட்டுவண்டியின் நீளமான பகுதியின் பெயர்  ‘போல்’  என்பதாகும். இந்த போலின்  முனையில் தான் மாடுகளை பூட்ட பயன்படும் நுகத்தடியை பொருத்திக் கட்டுவார்கள். 5  ¼   அடி  விட்டம் கொண்ட  வண்டி சக்கரத்தின் ஆரம் 2 5/8 / (இரண்டே அரையே அரைக்கால்) அடி ஆகும் . சக்கரத்தின் மையத்தில் அச்சு சொறுகப்பட்டிருக்கும். இரு சக்கரங்களையும் இணைக்கும் இந்த அச்சின் மேல் தான் பாரம் தாங்கி (load bearing)யாக செயல்படும் தெப்பக்கட்டை அமர்த்தப்பட்டிருக்கும். இந்த தெப்பக்கட்டையின் மேல் தான் ‘போல்’ என்னும் நுகம் கட்டும் நீளக்கட்டை பொருத்தப்பட்டிருக்கும். இந்தப் போல் மற்றும்   தெப்பக்கட்டையும் சேர்ந்து 1  ½  அடி உயரம் இருக்கும். ஆக ஒரு வண்டியை படுக்கை மட்டத்தில் சமன் (balance) பண்ணினால் வண்டியின் உயரம் 4 1/8 அடியாக இருக்கும். அதாவது சக்கரத்தின் ஆரத்தின் அளவும் தெப்பக்கட்டையின் உயரமும் (2  5/8 + 1  ½ ) சேர்ந்து உயரம்       4  1/8  அடியாகும். ஒரு மாட்டின் கழுத்து வரை உள்ள உயரம் சராசரியாக 4  1/8 அடி. இத்தனை சராசரி உயரங்களின் அடிப்படையில் தான் நமது மாட்டுவண்டியினை வடிவமைத்திருக்கின்றனர் நமது முன்னோர்கள். அவர்களால்  இவ்வளவு  நுட்பமாக வடிவமைக்கப்பட்டுள்ள மாட்டு வண்டியை 4  1/8  அடி உயரத்தில் விரல் தொடலில் சமன் (feather touch balance) செய்ய முடியும். இந்த அமைப்பில் வடிவமைக்கப்பட்டிருக்கிற வண்டியில் ஏற்றப்படும்  பாரம் மாட்டின் கழுத்தை தாக்காது. எனவே மாட்டை வண்டியின் பாரம் தாக்காத விதத்தில் வடிவமைக்கப்பட்ட இந்த வண்டியை மாடு இழுக்க மட்டுமே சக்தியை செலவழித்தால் போதும். மாட்டினை பெரிய அளவில் பாரம் தாக்காத விதத்தில் வடிவைக்கப்பட்ட  நமது மரபுவழி வண்டியின் தொழில் நுட்பத்தின் தன்மையை புரிந்து கொள்கையில்  நமது முன்னோர்களின் அறிவுத்திறமையை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.

 மாட்டுவண்டியின் ஒவ்வொரு பாகத்தையும் செய்ய இன்னின்ன மரவகையைத் தான் பயன்படுத்த வேண்டும் என்று வரையறுத்திருக்கின்றனர் நமது முன்னோர்கள். அந்த வரையறையில் சில: 

சட்டம்…………… வாகைமரம்

குறியது……….. வாகைமரம்

ஆரக்கால்……. உன்னி

அலகு…………. தேக்கு

குடம்……….. வைமரம்

தெப்பக்கட்டை……. வேங்கை

போல்……… பாலோடி(அ)வேங்கை

நுகம்…… கொன்றை(அ)மஞ்சணத்தி(அ)புன்னை

நோக்காகுச்சு…… வைமரம்

தாங்குக்கட்டை…… வைமரம்                                                    பிள்ளைச்சட்டம்….. வாகை

குரங்குகம்பு……… கல்மூங்கில்

ஊனிகம்பு…. விடைத்தலை 

அளி……. மூங்கில்பட்டியல்

சக்கடா வண்டியின் ஒவ்வொரு பாகத்தையும் என்ன வகை மரத்தில் உருவாக்க வேண்டும் என்பதாக இந்தப் பட்டியல் விளக்குகிறது. 

 வண்டிச் சக்கரத்தின் விட்டம் எல்லாப் பகுதியிலும் ஒரே அளவில் தரப்படுத்தப்பட்டிருப்பது நமக்கு வேறு ஒரு சிந்தனையை  தருகிறது. இன்று தூரத்தை அளக்க கிலோ மீட்டர் என்ற அளவு பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த முறை நம் நாட்டில் 1957ல் தான் அறிமுகப்படுத்தப்பட்டு அமலுக்கு வந்தது. அதற்கு முன் மைல் என்ற அளவே நடைமுறையில் இருந்தது. இந்த அளவு முறை வெள்ளையர்களால் தான் நமக்கு அறிமுகம் செய்யப்பட்டதாக நம்பப் படுகிறது. ஆனால் நமது வண்டிச் சக்கரத்தின் சுற்றளவான 16 ½  அடி என்பது வேறு ஒரு செய்தியை சொல்வதாக தெரிகிறது. ஒரு மைல் என்பது 8 பர்லாங்க் ஆகும். 1 பர்லாங்க் என்பது 220 கஜம் அல்லது 660 அடி ஆகும். அப்படியெனில் 1 மைல் என்பது 5280 அடிகளாகும். வண்டிச்சக்கரம் ஒரு முறை சுற்றினால் கடக்கும் தூரம் 16 ½  அடியாகும். இப்படி 320 முறை வண்டிச்சக்கரம் சுழன்றால் அது கடக்கும் தூரம் 5280 அடியாகும் (16.5X320=5280). இதை இப்படியும் சொல்லலாம். அதாவது ஒரு முறை சுற்றும் போது அது கடக்கும் தூரம் 1/320 மைல் அதாவது ஒரு முந்திரி மைல் ஆகும். நமது பின்ன எண்ணில் 1/320 என்பது ஒரு முக்கியமான எண் ஆகும். எனவே மைலின் நீளத்தின் அடிப்படையிலேயே வண்டிச்சக்கரத்தின் சுற்றளவை அமைத்திருக்கின்றனர் என்று எண்ண தோன்றுகிறது. இதன் மூலம் மைல் என்ற அளவின் மூலக்கரு  மேலை நாடுகளுக்கு போய் அங்கிருந்து மைல் என்ற பெயரில் மறுமடியும் இங்கு அறிமுகமாகி இருக்கிறது என்று தான் சொல்லவேண்டும். ஒரு மாட்டு வண்டியின் சக்கரத்தை உருவாக்கும் போது நமது முன்னோர்கள் எவ்வளவு நுட்பமாக பலவற்றையும் கவனத்தில் எடுத்துக் கொண்டு செயல்பட்டிருக்கிறார்கள் என்பதை எண்ணும் போதும் நம்மவர்களின் மதிநுட்பத்தை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை

பொதுவாக தராசு என்றால் எடைக்கல் வைப்பதற்கு ஒரு தட்டு என்றும், எடை போட வேண்டிய பொருளை வைப்பதற்கு மற்றொன்றும் என்பதாக இரண்டு தட்டுகள் கொண்ட ஒன்றே நம்மால் புரிந்துகொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், நம் ஊர்களில் காலம்காலமாய்ப் பண்டங்கள் நிறுக்க நம் மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிற துலாக்கோல் என்பது ஒரு தட்டு மட்டுமே கொண்ட தராசு. இது இப்போதும் தமிழகத்தில் சில இடங்களில் பயன்ப்பாட்டில் உள்ளது.

  துலாக்கோல் என்கிற ஒத்தத்தட்டு தராசின் பயன்பாடு நம்நாட்டில் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக இருந்து வருகிறது. நமது பண்டை சிற்பம் ஒன்று இதன் கால நெடுப்பத்தை  மெய்ப்பிக்கிறது. அந்த சிற்பம் கழுகு தனது இரைக்காகத் துரத்தி வந்த புறாவை காக்கும் நோக்கில் சிபி சக்கரவர்த்தி கழுகுக்கு தனது தொடை சதையை வெட்டி துலாக்கோலில் எடையிட்டுத் தரும் காட்சியை விவரிக்கிறது. இந்த சிற்பம் சதையை நிறுக்க ஒத்தத்தட்டு தராசு பயன்படுத்தப்பட்டிருப்பதை நமக்குக் காட்டித் தருகிறது கண்ணி அறுபடாமல்  தொடர்ச்சியாக இன்று வரை நம் வாழ்வு முறையில் ஒத்தத்தட்டு தராசு பயன்பாட்டில் இருந்து வருவதை ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பழமையைக் கொண்டது இந்தச் சிற்பம் நமக்குப் புரிய வைக்கிறது. 

  இந்த ஒரு தட்டு தராசை நமது ஊரில் ‘வெள்ளிகாவரை’ என்று சொல்வார்கள். சில இடங்களில தூக்கு, தூக்குகோல் என்றும் சொல்லப்படுகிறது.’வெள்ளைக்கோல்வரை’ என்கிற சுத்தமான, அழகான தமிழ் சொல்தான் நம் வாய்களுக்குள் நுழைந்து சிதைந்து ‘வெள்ளிகாவரை’ என்று ஆகியிருக்கிறது. அதாவது அந்தக் கோலில் வெள்ளை நிறத்தில் சில கோடுகள் வரைந்திருப்பார்கள். அந்தக் கோடுகள்தான் எடைகளுக்கான குறியீடுகள். அதனால்தான் ‘வெள்ளைகோல்வரை’.

  கோலில் வரைந்திருக்கிற ஒவ்வொரு கோடும் ஒவ்வொரு எடையைக் குறிக்கும். அங்கும் இங்கும் நகர்த்துகிற மாதிரி அந்தக் கோலில் ஒரு சின்ன நூல் கயிறு கட்டியிருப்பார்கள். தேவையான எடைக்குண்டான கோட்டுக்குக் கயிற்றை நகர்த்தி, பிறகு அந்தக் கோட்டிலேயே கயிற்றை இறுக்கி, எடை போட வேண்டிய பொருளைக் கோலில் உள்ள ஒற்றைத் தட்டில்  வைத்து தூக்கி எடை போடுவார்கள். அப்போது துலாக்கோலின் கோல் படுக்கை வசத்தில் நேராய் இருந்தால் சரியான எடை காட்டுகிறது என்று அர்த்தம். 

  மேலாகத் தூக்கிக்கொண்டு இருந்தால் நிறுக்கப்படுகிற பொருள் நிறுக்க வேண்டிய அளவுக்கு அதிகமாய் துலாத் தட்டில் இருக்கிறது என்று அர்த்தம். கோல் கீழாகத் தாழ்ந்தால் நிறுக்கப்படுகிற பொருள் நிறுக்க வேண்டிய அளவுக்கும் குறைவாக இருக்கிறது என்று பொருள்.

  இப்போது புழக்கத்தில் இருக்கிற இரட்டைத் தட்டு தராசைவிட இந்த ஒற்றைத் தட்டு தராசுக்குச் சில விசேஷத் தன்மைகள் உண்டு. இரட்டைத் தட்டுத் தராசில் ஒரு கிலோ எடைக்கு ஒரு பொருளை நிறுக்க வேண்டும் என்றால் எடைக்கல் ஒரு கிலோ,பொருள் ஒரு கிலோ என்று இரண்டு கிலோ எடையைத் தூக்குவதற்கான சக்தியை நம் உடல் செலவழிக்க வேண்டும். ஆனால், ஒற்றைத் தட்டு தராசில் ஒரு கிலோ பொருளை நிறுக்க, ஒரு கிலோவைத் தூக்குவதற்கு வேண்டிய சக்தியைச் செலவழித்தால் போதும்.

  திருவள்ளுவர் சொன்ன, ‘சமன் செய்து சீர்தூக்கும் கோல்’ இந்த ஒற்றைத் தட்டு தராசுதான்.. இந்த சமன் செய்து சீர்தூக்கும் கோல் என்பது வேறு ஒன்றையும் நினைவுபடுத்துகிறது. தமிழ் மாதம் ஐப்பசிக்குத் துலாம் மாசம் என்ற பெயர் உண்டு. சூரியன், துலாம் ராசியில் சஞ்சரிக்கும் மாதம் இது என்பதால்தான் இந்தப் பெயர். சூரியன், துலாம் ராசியில் நுழைகிற நாள் அன்றைக்குப் பூமியில் பகலும் இரவும் சம நீளத்தில் இருக்கும். அதாவது பகல் 12 மணி நேரம், இரவு 12 மணி நேரம் என்பதாக. மற்ற நாள்களில் எல்லாம் பகலுக்கும் இரவுக்கும் நீளத்தில் கொஞ்சம் கூடுதல், குறைவு வித்தியாசம் இருக்கும். எனவே, சமமான நீளம் கொண்ட பகல் இரவை கொண்ட நாள் இருக்கிற மாதத்திற்கும் ராசிக்கும் துலாம் என்று பெயர் வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.

நமது மரபு வழி தொழில் நுட்பங்களை கண்டறிந்து அதில் உள்ள சிறப்பானவற்றை இனம் கண்டு அவற்றை மேம்படுத்துவதே இன்றைய காலகட்டத்தில் கட்டாயம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *