காலநிலை மாற்றம் உலக அளவில் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து தற்போது பரவலாக அறியப்படுகிற விவாதிக்கப்படுகிற ஒரு பொருளாக மாறியுள்ளது வரவேற்புக்குரியது என்றாலும் அது போதாது. காலநிலை மாற்றம் மனித குல அழிவுக்கு வித்தாகிறது என்கிற உண்மையை அறிவியல் அறிஞர்கள் மத்தியில் மட்டும் விவாதிக்கப்பட்டால் போதாது. நடுத்தர சாமானிய மக்கள் மத்தியிலும் காலநிலை மாற்றம் ஏற்படுத்தும் பேரழிவு விளைவகள் குறித்த விழிப்புணர்வை கொண்டு போவது மிக முக்கியம். ஏனெனில் அந்த பேரழிவினை ஏற்படுத்துவதில் அனைவருக்கும் பங்குண்டு.
காலநிலை மாற்றம் பருவ கால சுழற்சியில் பெரும் பாதிப்பை உருவாக்கி வருகிறது. வரைமுறையற்ற கார்பன் டை ஆக்ஸைடு வெளியீடும், மீத்தேன் போன்ற பசுமை குடில் வாயுக்கள் வெளியேற்றமும் இந்த பூமிப்பந்தை சூடாக்கிக்கொண்டே உள்ளது. சூரிய வெப்பம் நேரிடையாக மனிதன் மீது விழாமல் பாதுகாக்கும் ஓசோன் படலங்களை ஓட்டையிட்டு இந்த வாயுக்கள் ஏற்படுத்தும் விளைவுகள் ஆபத்தானது. மிதமிஞ்சிய கார்பனை உறிஞ்சும் பெருங்காடுகள் இன்று பெருமளவு அழிக்கப்பட்டு விட்டது. குறைந்தபட்சம் பூமிப்பந்தில் மூன்றில் ஒரு பங்காவது அடரந்த காடுகளின் இருப்புதான் அவசியம். ஏனெனில் காடுகளில் உள்ள மரங்கள் கார்பனை உறிஞ்சி மனித குலத்திற்கு நன்மை செய்து வருகிறது. ஆனால் மனிதனின் அதீத நுகர்வுக்காக காடுகளை அழிப்பதும், தொழிற்புரட்சி காலத்திற்குப்பின் கனிம வளங்களுக்காக காடுகளை கொள்ளையடிக்கும் கார்ப்பரேட்டுகளும் பெருகிவிட்டனர். அதனால் இன்று காடுகளின் இருப்பு ஐந்தில் ஒரு பங்காக குறைந்து போனது. தன்னையறியாமலேயே மனிதன் தன்தலையில் தீயை வைத்துக்கொள்வதற்கு சமமானது.
புதைசார் படிவங்களான நிலக்கரி, எண்ணெய், எரிவாயு போன்ற எரிபொருகள் பயன்பாட்டில் வெளிப்படும் கரியமில வாயுக்கள் உலக அளவில் மூன்றில் இரண்டு பங்காக உள்ள நிலையில் அடுத்த நிலையில் விவசாயம் சார்ந்த நெல் கோதுமை போன்ற பயிர்களினாலும், கால்நடை பராமரிப்பிலும் வெளிவரும் பசுங்குடி வாயுக்கள் இரண்டாமிடத்தில் உள்ளது. தொழிற்சாலைகள் வெளியேற்றும் கரியமில வாயுக்கள் முதலிடத்தில் இருக்கிறது. அடுத்த இடத்தில் உணவு உற்பத்தியில் 11சதமும், விவசாயம் சாரந்த தொழில்கள் மூலம் 26சதமும் வாயு வெளியேற்றம் 2018ல் இருந்ததாக ஐக்கிய நாடு அமைப்பு கூறுகிறது. இந்த வாயுக்கள் காலநிலை மாற்றத்தில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தி பருவசுழற்சியில் பாதிப்பினை ஏற்படுத்துகிறது.
உலக அளவில் வெப்பநிலை உயர்வு1901லிருந்து 2020 க்குள் 1 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது.இதனால் கடல்மட்டம் 1.7 மி.மீ உயர்விலிருந்து 1993ம் ஆண்டு முதல் 3.2 மி.மீட்டராக உயர்ந்துள்ளது.இதனால் பனிப்பாறைகள் 60 அடிவரை உருகியுள்ளது. 1979 முதல் ஆர்க்டிக் பனிப்பாளம் உருகி 40 சதம் வரை குறைந்துள்ளது. பசுங்குடி வாயுக்கள், கரியமில வாயுக்கள் போன்றவற்றை முழுவதும் காடுகள் உறிஞ்ச முடியாமல் பூமிப்பந்தின் மீதே இருப்பதால் இந்த பூமி சூடேறுகிறது. உருகும் பனிப்பாளங்களும் அதனால் ஏற்படும் கடல்நீர் மட்ட உயர்வும் பல சின்னஞ்சிறிய நாடுகளின் இருப்புகளுக்கே ஆபத்தானதாக இருக்கிறது. பருவகால மாற்றத்தில் ஏற்படும் மாற்றங்கள் பெருவெள்ளம், நிலச்சரிவுகள்,மண் அரிப்புகள் ஆகியவற்றை ஏற்படுத்துவதோடு, பஞ்சம், வறட்சியையும் ஏற்படுத்துகிறது. இதனால் காலந்தவறிய மழை மனித குலத்தின் உணவு பாதுகாப்பை பலவீனப்படுத்துகிறது.
காலநிலை மாற்றம் முக்கிய மூன்று விளைவுகளை ஏற்படுத்துகிறது. வெள்ளம், புயலை ஏற்படுத்துகிறது. இரண்டாவதாக கொடிய பஞ்சத்தை ஏற்படுத்துகிறது. மூன்றாவதாக மனித சக்தி என்ற முதலீட்டை நோய் மற்றும் சத்துக்குறைபாட்டினால் பலவீனப்படுத்துகிறது. தற்போதிருக்கும் வெப்பநிலை மேலும் 1 டிகிரி செல்சியஸ் உயர்ந்தால், 2040 ஆண்டுகளில் மனித குல இருப்புக்ககே பேராபத்தை உண்டு பண்ணும் என்று சுற்றுப்புற சூழலியர்கள் கூறுகின்றனர்.
எனவே கரியமில வாயு வெளிப்பாட்டை குறைக்க, கரியமில வாயு வெளிப்பாடும் உறிஞ்சலும் சமநிலையில் இருக்க முக்கியமாக மனித குலம் பின்பற்றவேண்டிய கீழ்க்கண்ட 12 வழிகளை சூழலியல் அறிஞர்கள் பரிந்துரைக்கின்றனர்.
1.பயன்பாட்டில் பசுமை சக்திக்கு முதலிடம் கொடுக்க வேண்டும். ஏனெனில் கரியமில வாயு வெளியேற்றத்தில் மூன்றில் இரு பங்கை புதைவடிவ எரிபொருட்களே வகிக்கின்றன. மாற்றாக புதுப்பிக்கத்தக்க எரிசக்திகளான சூரிய சக்தி, காற்றுசக்தி போன்றவற்றின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்.
2.எரிசக்திக்கு பாதுகாப்பும் முன்னுரிமையும் கொடுக்கவேண்டும்.
3. உங்களுக்கான உணவை பசுமை உற்பத்தியில் விளைந்த தானியங்கள், காய்கறிக்கு முன்னுரிமை கொடுத்து பயன்படுத்த வேண்டும்.
4.பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்.
5.பொது போக்குவரத்தை பயன்படுத்துவதும், கார் போன்ற வாகனங்களை தனியாக பயன்படுத்தாமல் கூட்டாக பயன்படுத்துவதும் நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும்.
6.தேவையின்றி டிஜிட்டல் தொழில்நுட்படங்களை பயன்படுத்தக்கூடாது.
7.விமானப்பயணங்களை தவிர்ப்பது நல்லது. விமானங்கள் வெளியிடும் புகைகளின் அளவு குறையும்.
8. கரியமில வாயு வெளியேற்றும் தொழிற்சாலைகளில் முதலீடுகளை செய்வதை விட சமூக நோக்கத்துடன் சுற்றுச்சூழல் பாதுகாக்கிற தொழில்களில் முதலீடு செய்ய வேண்டும்.
9. நாம் உண்ணும் உணவினில் சுற்றுச்சூழலை கெடுக்கிற உணவுவகைகளை தவிர்க்க வேண்டும்.
10. காடு மற்றும் மரங்களை பாதுகாக்க வேண்டும். 900 ஹெக்டேர் பரப்பில் மரங்களை நட்டு வளர்த்தால் அதன்மூலம் வெளியிடப்படும் கரியமில வாயுவால் மூன்றில் இரண்டு பங்கை உறிஞ்ச வைக்க முடியும்.
11.பொதுவாக சுற்றுச்சூழலை குடிமகனால் பாதுகாக்கவும் முடியும் ,அதை கெடுக்கவும் முடியும். எனவே அதை உணர்ந்து ஒவ்வொரு குடிமகனும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பங்கெடுப்பது அவர்தம் கடமையாகும்.
12. சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வை பெற்றால் மட்டும் போதாது. அதை அரசுகளின் பொறுப்பில் மட்டுமே விட்டுவிடக்கூடாது. அதற்கான நிர்ப்பந்தத்தை அரசுகளுக்கு ஏற்படுத்த மக்கள் வீதிகளில் இறங்கி போராட வேண்டும். எதிர்கால தலைமுறைகளுக்கு ஒரு பாதுகாப்பான உலகை கையளித்து செல்வது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்.
இந்தியாவுக்கான சுற்றுச்சூழல் அறிக்கை கூறுவதென்ன?
இந்தியாவில் 30,000 நீர்நிலைகள் ஆக்ரமிக்கப்பட்டுள்ளது. 1,50.000 டன் குப்பைகள் நகர்ப்புறங்களில் குவிகிறது. அவற்றில் பாதிதான் குப்பை கொட்டும் இடங்களுக்கு செல்கின்றன. மீதி அந்தந்த இடங்களிலேயே விடப்படுகின்றன.
காற்று மாசுபாட்டால் மனித வாணாள் 4 வருடங்கள் 11 மாதங்கள் இழக்கப்பட்டுள்ளது. அதிலும் கிராமப்புறங்களில் அந்த காலம் மேலும் கூடுகிறது. காரணம் காற்று மாசுபாட்டால் ஏற்படும் நோய்களே.
சுற்றுப்புற சூழல் காரணமாக நடைபெறும் குற்றங்கள் கூடிக்கொண்டே உள்ளது.நீதிமன்றங்கள் ஒவ்வொரு நாளும் குறைந்த பட்சம் 245 வழக்குகளையாவது சந்தித்து முடிவுக்கு கொண்டுவர வேண்டியுள்ளது.
2022 ம் வருடத்தில் ஜனவரி முதல் அக்டோபர் முடிய கிட்டத்தட்ட 271 நாட்களில் ஏற்பட்ட தட்பவெப்ப நிலையில் ஏற்பட்ட அதீத மாறுபாட்டால் சுமார் 2900 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகிலேயே இயற்கை பேரழிவுகளை சந்தித்த நான்காவது நாடாக இந்தியா உள்ளது. இதனால் 49 லட்சம் பேர் இடப்பெயர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டனர்.
காடுகளின் அழிவு பாதுகாக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது. 2017 லிருந்து 2021 வரை காடுகளின் பரப்பில் 0.5 சதம் கூடியுள்ளது. ஆனால் அது பெரும்பாலும் திறந்த வெளி காடுகளிலேயே நடந்துள்ளது. அடர்ந்த காடுகளில் மொத்த உயர்வில் வெறும் 3 சதம் மட்டுமே. கார்பன் உறிஞ்சலில் பெரும்பங்கு வகிப்பது அடர்ந்த காடுகளே.
ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு எடுத்த முடிவுகளின் அமுலாக்கத்தில் இந்தியா மேலும் 9 இடங்கள் சரிந்து 121 வது இடத்தில் உள்ளது.மற்ற தெற்காசிய நாடுகளான பங்களா தேசம், பூட்டான்,இலங்கை மற்றும் நேபாளம் ஆகியவற்றுக்கு கீழே இந்தியா உள்ளது.
இமாச்சல் பிரதேசத்தின் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி கவுன்சில் அறிக்கையின்படி பனிப்பாளங்கள் உருகியதால் 2019 முதல் 2021 முடிய 23,542 ச.கி,மீ ஆக இருந்த நதிநீர்ப்பரப்பு 19,183 ச.கி,மீட்டராக குறைந்து போனது. அதனால் அனைத்து நதிகளும் நீரின்றி வறட்சியை சந்திக்க நேர்ந்துள்ளது. சட்லெஜ் நதி மட்டுமே 45 சதமான நீரிழப்பை சந்திக்க நேர்ந்துள்ளது.
காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பேரழிவால் ஏற்படும் விபரீதங்கள் உணர்ந்த நாடுகள், அதை தடுப்பது குறித்து 1992ல் ரியோடி ஜெனிராவில் கூடி விவாதித்தார்கள். அந்த பூமி உச்ச மாநாட்டின் முடிவுகளை 196 நாடுகள் ஏற்றுக்கொண்டு 1994ல் கையெழுத்திட்டன. அவர்கள் நியமித்த முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட பிரதிநிதகள் குழுவின் மூலம் ஐக்கிய நாடுகளின் சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு அமைப்பு என்று ஓன்று உருவானது. இதற்கு பெயர்தான் காப் குழு.அதாவது கான்பெரன்ஸ் ஆப் பார்ட்டீஸ் ஆகும்.
- அமெரிக்கா சோவியத் யூனியனுக்கு இடையேயான பனிப்போர் முடிவுக்கு வந்த பின் இரண்டு ஜெர்மனியும் இணைந்தபின் பெர்லின் நகரில் 1995ல் முதலாவது காப் கூட்டம் நடந்தது. முதலிரண்டு கூட்டங்கள் எந்த முக்கியத்துவமுமின்றி முடிந்தது. மூன்றாவதாக ஜப்பானில் உள்ள கியோட்டாவில் நடைபெற்ற கூட்டம் முக்கிய சில முடிவுகளை எடுத்தது. அதன்படி வளர்ந்த நாடுகள் தங்கள் கரியமில வாயு வெளிப்பாட்டில் 5 சதம் குறைக்க ஒப்புக்கொள்ளப்பட்டது. கியோட்டா மாநாடு ஒரு திருப்பு முனை மாநாடு என்று அழைக்கப்பட்டது. ஆயினும் இந்த முடிவை வளர்ந்த நாடுகள் முழுமையாக ஏற்றுக்கொண்டது 2005 ல்தான். அதில் 192 நாடுகள் கையெழுத்திட்டன. 2012 க்குள் படிப்படியாக ஐந்து சதம் கரியமில வாயு வெளியேற்றத்தை நடைமுறைப்படுத்துவதெனவும் ஒத்துக்கொண்டன.
- மறுபடியும் 2015 ல் தோகாவில் கூடிய மாநாட்டில் கியோட்டாவில் ஏற்பட்ட ஒப்பந்தத்தில் சில மாற்றங்கள் கோரப்பட்டன. அதன்படி ஐந்து சத கரியமில வாயு வெளியேற்றத்திற்கான காலக்கெடு 2012 லிருந்து 2020 வருடத்திற்கு மாற்றப்பட்டது. ஆனாலும் அந்த ஒப்பந்தத்தை வளரந்த நாடுகள் இன்றளவும் அமுல்படுத்தவில்லை.
- இந்த நிலையில் 2015ல் நடந்த காப் 21 பாரீஸ் கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. 196 நாடுகளும் கலந்துகொண்டு பூமியின் வெப்பநிலையை இரண்டு டிகிரி செல்சியஸ் அளவுக்கு குறைப்பது என முடிவெடுக்கப்பட்டது. குறைந்த பட்சம் 1.5 டிகிரி செல்சியஸ் குறைக்க முயற்சிப்பது என்று முடிவு செய்தது. தொழிற்புரட்சி ஏற்பட்ட 18 மற்றும் 19 ம் நூற்றாண்டின் வெப்ப நிலையை ஒப்பிட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது.
- இந்த அளவை 2050 க்குள் முடிப்பதென்றும், ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை கூடி இதை பரிசீலனை செய்வதென்றும் முடிவெடுக்கப்பட்டது. அதன் படி காப் 26 கூட்டம் ஸ்காட்லாந்தில் வரும் அக்டோபரில் நடைபெற உள்ளது.
காலநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய ஆபத்துகளை களைய காப் அமைப்புகள் உறுதியான முடிவை எடுக்க வேண்டும். வளர்ந்த நாடுகளை வளரும் நாடுகள் நிர்ப்பந்தித்து வருகின்றன. தீவு நாடுகளோ தங்களை காப்பாற்றிக்கொள்ள போராடுகின்றன. கரியமிலவாயு மற்றும் பசுங்குடில் வாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்த மாற்று வழிகளும் சிந்திக்கப்படுகின்றன. எனினும் இப்போதைக்கு கரியமில வாயுவை வெளியேற்றுவது முக்கியமான முதல் நடவடிக்கை என அனைத்து நாடுகளும் ஏற்கின்றன. அதனால் வளரும் நாடுகள் ஏழை நாடுகளுக்கு ஏற்படும் இழப்பை வளரும் நாடுகள் ஏற்றுக்கொள்ளவேண்டுமென்று கோரிக்கையும் வலுத்து வருகிறது. ஏனெனில் தொழிற்புரட்சியின் பலனை முழுவதுமாக அனுபவித்து வளர்ந்த நாடுகள் அவை. மற்ற நாடுகள் எல்லாம் இப்போதுதான் முன்னேற்றம் கண்டு வருகின்றன.
எது எப்படியிருப்பினும் உலகம் முழுவதும் உள்ள மக்கள் இந்த காப் நாடுகள் கூடி கலையாமல் உறுதியான முடிவுகளை எடுத்து மனித குலத்தை காப்பாற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கின்றன. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் நாசகர விளைவுகளை அனைத்து மக்களிடமும் கொண்டு செல்லவேண்டும். வருங்கால தலைமுறைக்கு இந்த பூமிப்பந்தை எவ்வித சேதாரமுமின்றி ஒப்படைக்க வேண்டும். அதற்கு மக்கள் சக்தி ஒன்று திரண்டு அனைத்து நாடுகளையும் நிர்ப்பந்திக்க வேண்டும்.