
மனதை புத்துயிர்க்கச்செய்யும் உந்துவிசையில் மனிதர்களின் கூடுகைக்கு பெரும்பங்குண்டு. அத்தகைய பெருங்களிப்பில் இணைய ஆவலாய் மாமாவுடன் திருவிழாவிற்கு கிளம்பும் சிறுவன். உடன் அழைத்துச்செல்ல மனமில்லாத உறவுகள்…..அதற்குக் காரணம் அக்குழந்தை பார்வை மாற்றுத்திறனாளி என்பதே..
படிப்பவர்களுக்கு இதிலென்ன தப்பி ருக்கு? பார்வை இல்லாத குழந்தை திருவிழாவில் என்ன செய்யும்?.. கூட்டநெரிசலில் சிரமப்படும் னு தானே விட்டுச்சென்றிருக்கிறார்கள் என்று தோன்றினால் கூண்டிலேற்றப்படாத குற்றவாளிகளில் நீங்களும் ஒருவரே….. அங்கே போகாதே, இதை எடுக்காதே,இதைச் செய்யாதே என்று பார்வை மாற்றுத்திறனாளர்களின் புழங்கும் பரப்பை நிர்ணயிப்பது என்பது அவர்கள் மீதான அக்கறை அல்ல….அதிகாரம்….. என்று பாதிக்கப்பட்ட நபரில் ஒருவராக அதற்கு எதிராக எழுத்தை ஆயுதமாக்கி இப்புத்தகத்தின் மூலமாக சமர் செய்திருக்கிறார் எழுத்தாளர். வீட்டில் ஆரம்பித்து, பணிபுரியும் இடங்களில், பிரயாணங்களில், வங்கிகளில்,பழகும் நபர்களிடத்தில், திருமணத்தில், படிப்பில், சொத்துரிமையில்,பிள்ளை வளர்ப்பில் என அவர்கள் படும்பாடு சொல்லி முடியாதவை.
காப்பீட்டு திட்டம் அனைவருக்கும் பொதுவான தேவையாக தற்பொழுது கருதப்படுகிறது. ஆனால் பார்வை மாற்றுத்திறனாளர்களுக்கு விபத்துக் காப்பீடு மறுக்கப்படுவதும், வங்கிக் கணக்கு ஆரம்பிப்பதிலும், ஏ. டி. எம் அட்டை தரமறுப்பதும், பணியிடங்களில் பொறுப்புகளைத் தரமறுப்பதும், அதனை அபகரிப்பதும், அதிகார வக்கிர மனநிலையின் உச்சம்.
மனிதாபிமானம், புண் ணியம் என்ற பெயரில் அவர்கள் விருப்பமின்றி அவர்கள் சாப்பிடும் உணவிற்கு காசு தருவதும், பொது இடங்களில் அவர்களிடம் வச்சுக்கோங்க என கையில் காசை திணித்துவிட்டு செல்லும் மனநிலைக்கு பின்னால் ஒளிந்திருப்பது கருணையல்ல சக மனிதனை சமமாக ஏற்க மறுக்கும் ஆணவம்….
பெண்ணைச் சமமாக ஏற்க மறுக்கும் ஆணாதிக்க சமூகத்தில் பெண் பார்வை மாற்றுத்திறனாளிகள் சந்திக்கும் பணியிடப்பிரச்சனைகள்,திருமணம், பாலியல் பிரச்சனைகள் என நம்மால் புரிந்துணரமுடியாத பல சம்பவங்களை இப்புத்தகத்தின் வாயிலாக வெளிக்கொணர்ந்திருப்பது இதன் முக்கிய சிறப்பம்சம்.
இப்பெண்களின் வீட்டு பராமரிப்பும், பிள்ளை வளர்ப்பும் பிரமிக்க வைக்கிறது.. பார்வைமாற்றுத்திறனாளர்கள் பற்றிய தவறான எண்ணத்தை தோற்றுவிக்கும் நோக்கோடு,பெரிய எழுத்தாளர் என்ற போர்வைக்குள் ஒளிந்துகொண்டு கதை எழுதியிருப்பதை அவை எழுத்துகள் அல்ல….காகித குப்பைகள், அவர்கள் எழுத்தாளர்கள் அல்ல எழுத்துப்பிழையானவர்கள் என கர்ஜிக்கும் கட்டுரை மிக அருமை.
தனக்கு தேவையான உரிமைகள் அனைத்தும் போராட்டத்தின் வாயிலாகவே நிறைவேறின, இனி நிறைவேறவேண்டிய தேவைகள் அனைத்ததிற்கும் நாங்கள் போராட தயாராக இருக்கிறோம். போராட்டமும், ஒற்றுமையுமே மனித வாழ்வின் அடிநாதம் என நமக்கு இப்புத்தகத்தை முன்னுதாரணமாக தந்திருக்கும் எழுத்தாளர் மு. முருகேசனுக்கு நிறைய அன்புகள்.
தனக்கு என்ன வேண்டும் என்பது தெரியாமல் வாழ்வது ஒருவித அறியாமை என்றால், மற்றவருக்கு என்ன வேண்டும் என்பது நமக்குத் தெரியும் என நினைப்பதும் அந்த நினைப்பைச் செயல்படுத்த மற்றவருக்கு அழுத்தம் கொடுப்பதும் இன்னொருவித அராஜகம்.. அத்தகைய அழுத்தத்தை பார்வை மாற்றுத்திறனாளி கள் மீது சுமத்தும் நாம் ஒவ்வொருவரும் கூண்டலேற்றப்பட வேண்டிய குற்றவாளிகளே.
சுமதி
(அக்குபங்சர் மருத்துவர்)