மக்கத்தப்பா

ஓரடி ஆத்திச்சூடியும், ஈரடிக் குறளும், மூவடித் திரிகடுகமும் இவையெல்லாம் தருவது பொருள் பொதிந்த வாழ்வியல் அறம் எனத் தெரிந்ததுதான்.
ஆனால் சில நேரங்களில் சின்னஞ்சிறு கதைகளோ குறுநாவலோ கவிதையோ அழுத்தமாக ஒரு நிறைவுத் தன்மையைத் தந்துவிடுகிறது. அப்படியான சின்னஞ்சிறிய குறுநாவல் தான் தீன் அவர்களின் “மக்கத்தப்பா”.
முந்தைய நாவலான “யாசக”த்தில் தேவாலயங்களின் அமைப்பு, பிரார்த்தனை, பிரசங்கம் பற்றி தெளிவாகச் சொல்வார். அதுபோல “சந்தனத்தம்மை”யில் அம்மன் வழிபாட்டு முறையை அழகாகச்சொன்ன பாங்கும், இங்கே “மக்கத்தப்பா”வில் பள்ளிவாசல், தொழுகை சார்ந்த வார்த்தைகள் என இவையெல்லாம் மதம் கடந்த அல்லது மதநல்லிணக்க மனம் கொண்ட மனிதனால்தான் இப்படி எழுத முடியும்.
புத்தகம் வாசித்து முடித்து இத்தனை நாளில் எனது எண்ண அலைகள் எங்கெங்கோ சென்று வந்தது. பெரு மதங்களை பெரும் நம்பிக்கையோடும் பெரு விருப்போடும் பின்பற்றும் பெருந்தகையாளர்களின் புண்ணிய ஷேத்திரம் பற்றிய எண்ணங்களே அவைகள்.
எனது தாத்தா 1940களில் (வருடம் சரியாகத் தெரியவில்லை) காசிக்கு யாத்திரை சென்று வந்தார். அப்போது அவருக்கு வயது 39. அன்றைய காலகட்டத்தில் விரைவான போக்குவரத்து வசதி இல்லாத போது செல்வது மிகப் பெரிய விஷயம். இப்போதும் கணிசமான அளவு செல்கிறார்கள்தான். ஆனாலும் பக்தி சிரத்தையோடு செல்கிறார்களா? சுற்றுலா போலச் செல்கிறார்களா என்பது எனக்கு மட்டும் வரும் ஐயப்பாடா என்று தெரியவில்லை.
இந்தக் குறு நாவலில் யாருமற்ற தனியொருவராக தான் வந்துசேர்ந்த கிராமத்து மக்கள் எல்லோருக்கும் பரோபகாரியாக அவர்கள் சொன்ன வேலையெல்லாம் முகஞ்சுளிக்காது செய்து முடிக்கும் அப்துல் தான் மக்கத்தப்பா. அப்படி ஒரு மனிதனை சந்தித்துவிட மாட்டோமா என்ற ஆசையைத் தூண்டிவிட்டது. வாசிக்க வாசிக்க உள்ளூர்வாசிகள் ஒவ்வொருவரின் விதவிதமான எகத்தாளமும் கேலியும் நமக்குக் கோபத்தை உண்டுபண்ணுவதோடு எப்படியாவது அப்துல் ஹஜ் யாத்திரை சென்றுவிடமாட்டாரா என நம்மையே துவா செய்யத் தூண்டுகிறது.
அப்துல் போல இங்கே மேம்பட்ட லட்சிய வாழ்க்கை எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை. ஆயிசா தவிர்த்து யாருக்குமே அப்துலின் ஊரோ முந்தைய வாழ்வின் இரகசியமோ தெரியாது.
இவருக்கென்று வாழ்நாள் கனவும் லட்சியமுமான ஒன்றே ஒன்று தான் . இரசூலுல்லாவின் கால்கள் நடந்த மக்காவுக்கு ஹஜ் யாத்திரை சென்று மக்கத்து ஹராமில் நின்று துவா செய்யவேண்டும். அவ்வளவுதான். ஆனால் ஏதுமற்ற அத்துலுக்கு அது அத்தனை எளிதில் ஈடேறக்கூடிய காரியமா? என்றால் ஈடேறும்தான். அஃதொன்றைத் தவிர வேறு சிந்தனையே இன்றி இருக்கும் ஒரு மனிதனை அஸர் அழைக்கமாட்டாரா என்ன?
ஜமாத் தேர்தலால் ஊர் ரெண்டுபட்டுக் கிடந்த வேளையில் யார்பக்கமும் நிற்காமல் வேற்றூர் சென்ற அத்துலுக்கு அங்கே மதிப்பும் மரியாதையும் கூடிப்போகிறது.
தூய்மையானவரின் ஆசையை நிறைவேற்ற பிரபஞ்சம் துடிக்கும் என்பதற்கேற்ப படகுக்காரில் வந்த லுங்கி உரிமையாளரின் உதவியால் மக்காவுக்குப் போனது மட்டுமல்லாது மக்காவாசியாகவே ஆகி மக்கத்தப்பா ஆன தூய மனிதனின் வருகைக்காக மதரசா கல்படி மட்டுமல்ல வாசிக்கும் நாமும் ஏங்கித்தான் போவோம்.

மக்கத்தப்பா (குறுநாவல்)
ஆசிரியர் : எம்.எம். தீன்
நெல் வெளியீடு.
விலை :ரூ.75/-

2 thoughts on “மக்கத்தப்பா

  1. நிறைவான சிறந்த திறனாய்வு.
    வாழும் வரை வாழ்த்துகள்.
    இளம்பிறை.

  2. #மக்கத்தப்பா
    ஒரு மனிதனின் வாழ்வியல் களஞ்சியம் என்ற எண்ணம் என்னுள் வந்தது.
    எழுத்தாளர் தீன்! வார்த்தைகள் வழியே
    சிந்திக்க வைக்கும் பேராளன்.
    வாழிய நலம் சூழ!
    மேலும் வளர்க!
    தொடர்ந்து எழுதுக!
    அன்பின் நீட்சியில்
    இளம்பிறை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!