பொருளாதார அமைப்பே இப்புவியைச் சூறையாடும் நச்சுயிரி

வானுயர எழுந்து நிற்கிறது ஒரு பிரமிடு. அந்த பிரமிடு கற்களுக்குப் பதிலாக ஒன்றன்மீது ஒன்றாகக் கண்ணாடிக் குவளைகளை அடுக்கிக் கட்டப்பட்டிருக்கிறது. பிரமிடின் உச்சியில் இருக்கும் சில குவளைகளில் திராட்சை இரசமானது மேலிருந்து ஊற்றப்படுகிறது. அந்தக் குவளைகள் பொங்கி வழிந்து கீழிருக்கும் ஒவ்வொரு அடுக்கிலிருக்கும் குவளைகளையும் நிறைக்கின்றன. சற்று நேரத்தில் பிரமிடிலிருக்கும் ஒட்டுமொத்தக் குவளைகளும் திராட்சை ரசத்தால் நிரம்பி வழிகின்றன. எங்கும் மகிழ்ச்சியும், செல்வமும், நலன்களும் பொங்கி வழிகின்றன. 

இப்படித்தான் நமது பொருளாதார அமைப்பு உலகின் ஒவ்வொரு மனிதருக்கும் சகல சவுபாக்கியங்களையும் அள்ளித்தருவதாக கற்பனை வளமிக்கப் பொருளாதார நிபுணர்கள் நம்ப முற்படுகின்றனர்.

இங்கே பிரமிடின் ஒவ்வொரு குவளைகளும் பல்வேறு வர்க்கப்படி நிலைகளிலிருக்கும் குடிமக்களையும் (உச்சி அடுக்கில் முதலாளிகள், அடுத்து மேலாளர்கள், அதற்குக் கீழே நவீனக் கண்காணிகள், அடித்தட்டில் தொழிலாளர்கள்), வார்க்கப்படும் திராட்சை இரசமானது அரசின் மானியங்களையும் சலுகைகளையும் குறிக்கிறது. அதாவது, அரசு தனது கஜானாவைக் கவிழ்த்து உயர்தட்டு முதலாளிகளுக்கு அதனைத் தாரைவார்க்கும்போது அவர்கள் பெருந்தொழில்களில் அவற்றை முதலீடு செய்ய – அந்த முதலீடு ஏராளமான வேலை வாய்ப்புகளையும் பொருட்களையும் உற்பத்தி செய்து நுகர்வை அதிகரித்து ஒட்டுமொத்த தேசத்திலும் பாலாறும் தேனாறுமாய் பாயச் செய்கிறது.

நல்ல கற்பனைதான். இதில் பாதி உண்மை இல்லாமல் இல்லை. மீதிப் பொய்யோடு கூடவே சொல்லப்படாத உண்மைகளும் மறைந்து கிடக்கின்றன. இந்த பொய்களும் மறைக்கப்படும் உண்மைகளுமே ஒட்டுமொத்த உலகின் சமூக சூழல் சீர்கேடுகளுக்கும் நம் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் அச்சுறுத்திக்கொண்டிருக்கும் காலநிலை மாற்றத்துக்கும் அடிநாதமாக இருக்கின்றன. 

நம் உலகின் ஒட்டுமொத்தப் பொருளாதாரக் கட்டமைப்பும் தொடர் உற்பத்தியையும் பெருநுகர்வையும் சார்ந்தே இருக்கிறது. எவ்வளவு அதிகமாகப் பொருட்கள் உற்பத்தியாகின்றனவோ அவ்வளவு அதிகமாக நம் பொருளாதாரம் வளர்வதாகச் சொல்லப்படுகிறது. அதாவது நமது பொருளாதார வளர்ச்சியின் அளவுகோலாகவே ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்திதான் இருக்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும்போது வேலை வாய்ப்புகள் அதிகரித்து, பணப்புழக்கமும் நுகர்வும் அதிகரிப்பதாகவும் மக்களின் வாழ்க்கைத் தரம் அதனால் மேம்படுவதாகவும் இந்த பொருளாதார அமைப்பு நமக்குப் பாடமெடுக்கிறது.

இந்தப் பின்னணியிலேயே பெருநிறுவனங்களுக்கு ஏராளமான சலுகைகளையும் மானியங்களையும் அள்ளி வழங்கி  அதன்மூலமாக தொழில் சாம்ராஜ்ஜியங்களை நிறுவி பொருளுற்பத்தியையும் வேலை வாய்ப்புகளையும் பொருளாதாரத்தையும் வரிவருவாயையும் இவற்றின்மூலமாக சேவைகளையும் அதிகரிக்க அரசுகள் பெரும் முனைப்பு காட்டுகின்றன. இதன் ஒரு பகுதியாகவே ஒன்றிய அரசானாலும் சரி மாநில அரசானாலும் சரி முதலீட்டாளர்களை ஈர்க்கக் கடும் பிரயத்தனம் செய்வதைக் காண்கிறோம். இவர்கள் நம்பும் அந்தப் பொருளாதார சித்தாந்தம் ‘பொங்கி வழியும் பொருளாதாரம்’ (trickling down economy) எனப்படுகிறது. இந்தப் பொருளாதார வளர்ச்சியே நம் நல் வாழ்வுக்கும் தேசத்தில் வலிமைக்கும் ஆதாரமாக இருக்கிறது என்று நம்மில் பலரும் மனதார நம்புகிறோம். 

இப்படியான பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கவே தண்ணீர் உட்பட ஒவ்வொரு இயற்கை வளங்களும் தனியார் உடைமைகளாக மாற்றப்பட்டு விலைப்பட்டியலோடு சந்தைப்படுத்தப்படுகின்றன. நகைகள், சொகுசு வாகனங்கள்போன்ற நம் நல்வாழ்விற்கு அத்தியாவசியமற்ற ஆடம்பரப் பொருட்கள் உற்பத்தி செய்து குவிக்கப்படுகின்றன. தொடர் உற்பத்தியையும் நுகர்வையும் உறுதி செய்வதற்காக நம்முடைய நுகர் பொருட்கள் வெறுமனே ஒரு முறை மட்டுமே பயன்படுத்தித் தூக்கி எறியக்கூடியவையாகவோ அல்லது எளிதில் பழுதாகுபவையாகவோ திட்டமிட்டு வடிவமைக்கப்படுகின்றன. பழுதுபார்த்துப் பயன்படுத்துவதற்கான கட்டமைப்புகள் அடித்து நொறுக்கப்படுகின்றன. நீங்கள் அமர்ந்திருக்கும் இடத்திலேயே உங்கள் கடன் அட்டையைக் கொண்டு உங்களால் ஒருசில மணிநேரங்களில் ஒரு ‘ஸ்மார்ட் போனை’ வாங்கிவிட முடியும். ஆனால் தலைகீழாக நின்றாலும்கூட உங்கள் பழுதான ஸ்மார்ட் போனை பழுதுபார்க்க நீங்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்கு எவரையும் வரவைக்க முடியாது; நகரின் ஏதோவொரு மூலையிலிருக்கும் அங்கீகரிக்கப்பட்ட பழுதுபார்க்கும் நிலையத்துக்குச் சென்று அதன்பிறகு நாயாக பேயாக வீட்டிற்கும் அதற்குமாய் ஒருவாரம் நீங்கள் அலைய வேண்டியிருக்கும். 

வாங்கு – பயன்படுத்து – தூக்கியெறி… இதுதான் இன்றைய பொருளாதார அமைப்பின் தாரக மந்திரம். இங்கே எல்லாமே வணிகம்தான். பைக்கில் ஒருவருக்கு ‘லிப்ட்’ கொடுப்பதாக இருந்தாலும் சரி இல்லை பக்கத்துவீட்டுப் பிள்ளைக்குப் பாடம் சொல்லிக்கொடுப்பதாக இருந்தாலும் சரி. இங்கு தேவைகளைவிட இலாபங்களே எந்தப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட வேண்டுமென்பதைத் தீர்மானிக்கின்றன. உங்களால் ஒரு கட்டு நச்சற்றக் கீரையையோ பாதுகாக்கப்பட்ட இல்வசக் குடிநீரையோ எளிதில் வாங்கிவிட முடியாது; ஆனால் காற்றடைத்த சர்க்கரைத் தண்ணீரையோ புட்டிநீரையோ எங்கும் வாங்கிவிட முடியும்.

பணமே வாழ்வின் மையமாகவும் ஆதாரமாகவும் மாறியிருக்கிறது. இந்தக் காகிதக்கட்டு எவரிடம் அதிகமாக இருக்கிறதோ அவரே மதிப்புமிக்கவராக கருதப்படுகிறார். அவராலேயே இந்தப் பொருளாதார அமைப்பு உருவாக்கும் நுகர்பொருட்களையும் சேவைகளையும் பெற முடிகிறது. இந்தக் காகிதக் கட்டை அதிகமதிகமாய் சேர்ப்பதற்காக நம் பிள்ளைகள் தங்கள் வாழ்வைத் தொலைத்து கற்கும் எந்திரங்களாய் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் உலவுகின்றனர். ‘நல்ல வேலை… நல்ல சம்பளம்’ இதுவே அவர்களின் இலட்சியப் பயணமாக வரையறுக்கப்படுகிறது. நல்ல சம்பளம் தராத வேலையைச் செய்ய முடியாத ஒருவர் வாழ்வில் தோல்வியடைந்தவராய் கருதப்படுகிறார். இது பெரும்பாலானோரை மன அழுத்தத்திலும் நெருக்கடியிலும் தள்ள ‘நல்ல’ சம்பளத்தில் வேலையில் அமர்பவர்களும் ஏதோ ஒரு நிறுவனத்தின் முதலாளிகளுக்காய் உழைத்துக்கொட்டி, மேலும் நல்ல ஊதிய உயர்வுகளைப் பெறுவதற்காய் தம் இரவையும் பகலையும் வாழ்வையும் வேலையிலேயே கரைக்கின்றனர்.

இந்த பொருளாதார அமைப்பின் இன்னொருபுறம்ஒட்டுமொத்தப் புவியையும் அதன் உயிர்களோடு சூறையாடுவதாக அமைந்திருக்கிறது. இந்தப் பொருளாதார வளர்ச்சியை முன்னிட்டு எவ்வளவு அதிகமாகப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றனவோ அவ்வளவு அதிகமாக இயற்கை வளங்கள் சுரண்டப்படுகின்றன. எவ்வளவு அதிகமாக பொருட்களும் சேவைகளும் வணிகமயமாகின்றனவோ அவ்வளவு அதிகமாக அவை பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே கிடைப்பவையாக இருக்கின்றன. எவ்வளவு அதிகமாகப் பொருட்கள் உற்பத்தியாகின்றனவோ அவ்வளவு அதிகமாக நீரும் நிலமும் காற்றும் மாசுபடுகின்றன. எவ்வளவு அதிகமாக பொருட்களின் உற்பத்தி நிகழ்கிறதோ அவ்வளவு அதிகமாக வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு வாயு உமிழப்படுகிறது. அதாவது, நமது பொருளாதார வளர்ச்சி சித்தாந்தமும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக இருக்கின்றன.

நீங்கள் இப்போது இவ்வாறு சிந்திக்க்கூடும்: என்னதான் சுற்றுச்சூழல் முக்கியம்தான் என்றாலும் பொருளாதார வளர்ச்சி அதனைவிட முக்கியமானதுதானே? ஒன்றை அழிக்காமல் இன்னொன்று வளர முடியாது! வளர்ச்சிக்காக சில சமரசங்களைச் செய்துதான் ஆகவேண்டும்! 

எவ்வளவு சமரசம்? 

ஒவ்வொரு நாளும் உலகம் முழுதும் காலநிலை மாற்றத்தாலும் சூழல் சீர்கேடுகளாலும் ஆயிரக்கணக்கான மக்கள் கொத்துக்கொத்தாக செத்துக்கொண்டிருக்கிறார்கள். காற்று மாசுபாடு மட்டுமே ஆண்டுக்கு சுமார் 20 இலட்சம் மக்களை உலகம் முழுதும் கொல்கிறது. ஓக்கிப் புயல், கஜா புயல், வர்தா புயல், நிவர் புயல், மிக்ஜாம் புயல் என தமிழகம் மட்டுமே கடந்த 10 ஆண்டுகளுக்கு எத்தனைப் புயல்களை மட்டும் சந்தித்திருக்கிறது? இவை கெடுத்த வாழ்வாதாரங்களின் மதிப்பு என்ன? உருவிச் சென்ற உயிர்களின் விலை என்ன? பொருளாதார இழப்பு என்ன? நம் கார்பன் உமிழ்வு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டிருந்தால் இந்த காலநிலை மாற்ற நிகழ்வுகள் எண்ணிக்கையிலும் தீவிரத்திலும் அதிகரிக்கும் என்ற சூழலில் இன்னும் எவ்வளவுதூரம் நாம் நமது பொருளாதார வளர்ச்சியை விரிவுபடுத்துவது?

ஐநாவின் கீழான ஐபிசிசி அமைப்பானது உலகைக் காலநிலை மாற்றப் பேரழிவிலிருந்து காக்க வேண்டுமானால் ஒட்டுமொத்த கார்பன் உமிழ்வை 2030 க்குள் 50 விழுக்காடாகக் குறைக்க வேண்டுமென்று அறைகூவல் விடுக்கிறது. இந்த அறிக்கை வெளியாகி 6 ஆண்டுகள் கடந்து இன்னும் ஆறு ஆண்டுகளே அவகாசம் இருக்கும் நிலையிலும்கூட ஒட்டுமொத்த உமிழ்வில் ஒரு விழுக்காடுகூடக் குறைந்தபாடில்லை. இதற்கிடையே ஆளுக்கொரு மரம் நட்டு அல்லது தெருவுக்கொரு மியாவாக்கிக் காடு அமைத்து பூமியைக் குளிர்வித்துவிடலாமென்று பெரும்பாலானோர் அப்பாவித்தனமாக நம்பிக்கொண்டிருக்கின்றனர். மரங்களின் பயன்கள் ஏராளம் இருந்தாலும் இன்று நம்மைக் காலநிலை மாற்ற நெருக்கடியிலிருந்து காக்கும் திறன் அவற்றுக்கு இல்லை. இதைச் செய்திருக்க வேண்டிய கால அவகாசத்தை நாம் எப்போதோ கடந்துவிட்டிருக்கிறோம்.

வரலாறு காணாத வெப்ப உயர்வை உலகம் சந்தித்துக்கொண்டிருக்கிறது. பல்லாயிரம் ஆண்டுகளாய் உறைந்திருந்த பனிமலைகள் உருகத் தொடங்கியிருக்கின்றன. கடல் மட்டம் கிடுகிடுவென உயர்கிறது, கடலரிப்பும் கடல்நீர் உட்புகுதலும் அதிகரித்து வருகிறது; தீவுகள் மூழ்குகின்றன; உணவு உற்பத்தி குறைந்து வருகிறது; நெகிழி உட்பட பல்லாயிரம் நச்சுக்களால் நம் வாழிடம் அதன் மீழ்புதுப்பிக்கத்தக்க எல்லைகளைத் தாண்டி நாசமாகிக்கொண்டிருக்கிறது. வெப்ப அலைகள், காட்டுத் தீ, புயல்கள், பெருமழை, வறட்சி போன்ற காலநிலைத் தீவிர நிகழ்வுகள் எண்ணிக்கையிலும் தீவிரத்திலும் அதிகரித்து வருகின்றன. 

இத்தனைச் சீரழிவுகளுக்குக் காரணமான பொருளாதார நோக்கிலான வளர்ச்சியை, மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டே நாம் புவியின் சூழலைப் பாதுகாக்க முடியுமென்று நம்புவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்? வரம்புக்கு உட்பட்ட வளங்களைக் கொண்ட புவியில் வரம்பின்றி வளர்ந்துகொண்டே இருக்க முடியுமென்று நம்புவது எத்தனை நகைப்பிற்குரியது? இன்னும் எத்தனை நாள்தான் நாம் பொங்கி வழியும் பொருளாதாரத்தில் நம்பிக்கை வைக்கப்போகிறோம்? 

பிரமிடின் மேலிருக்கும் கோப்பைகள் என்றுமே நிறையப் போவதில்லை. திராட்சை இரசம் நிரம்ப நிரம்ப அந்தக் கோப்பைகள் கீழே சிந்திடாத வண்ணம்  பெருத்துக்கொண்டிருக்கின்றன. அவற்றின் தாகம் அரசாங்கத்தால் தணிக்க முடியாத அளவிற்கு தீவிரமானதாக இருக்கிறது. அடித்தட்டிலிருக்கும் கோப்பைகளில் இன்னும் சில துளிகள்கூட வந்து சேரவில்லை. இன்னொரு வகையில் சொல்வதானால் கீழிருக்கும் கோப்பைகளிலிருந்து ‘வரி’ என்ற பெயரில் உறிஞ்சப்படும் இரத்தம்தான் மேலிருக்கும் குவளைகளில் மானியங்களாக கொட்டப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் வெளியாகும் உலக ஏற்றத்தாழ்வு அறிக்கைகள் இதனைத் தெளிவாக உணர்த்துகின்றன.

இன்னொருபுறம் மேலிருக்கும் குவளைகளிலிருந்து வழியும் நச்சுக் கழிவுகளால் அடித்தட்டுக் குவளைகள் திணறுகின்றன. வளர்ந்த நாடுகளின் நச்சுக்கழிவுகள் பின்தங்கிய நாடுகளில் கொட்டப்படுகின்றன. நாடுகள் மற்றும் நகரங்களுக்கு உள்ளேயும்கூட மேட்டுக்குடிகளின் குப்பைகள் அடித்தட்டு மக்களின் வசிப்பிடங்களில் திணிக்கப்படுகின்றன. வளர்ச்சியின் பலன்கள் ஒருசாராருக்கும் கழிவுகள் இன்னொரு சாராருக்குமாய் பகிர்ந்தளிக்கப்படுகிறது. பொருளுற்பத்தியின் பலன்கள் மேட்டுக்குடியினருக்கும் காலநிலை மாற்றம் சூழல் சீர்கேடுகள்போன்ற அதன் சீரழிவுகள் அடித்தட்டு மக்களுக்கும் சென்று சேர்கின்றன. மழையோ, புயலோ அல்லது வெப்ப அலையோ குளிரூட்டப்பட்ட காங்கிரீட் வீடுகளுக்கு எதுவும் நேர்வதில்லை. விளிம்புநிலை மக்களே மழையானாலும் வெப்ப அலையானாலும் மரித்துப்போகின்றனர்.

இந்தப் பின்னணியில் இவர்களுக்காகப் பரிந்து பேசுவதாகச் சொல்லிக்கொள்பவர்கள் சந்தைப் பொருளாதார வளர்ச்சியை பசுமையாக மாற்றமுடியும் என்றும் அதற்குள்ளே எல்லோருக்கும் எல்லாவற்றையும் உறுதி செய்ய முடியுமென்றும் நம்புகின்றனர். பரிதாபம்! வளங்குன்றா வளர்ச்சி என்பது ஒரு போலி நம்பிக்கை. வளர்ச்சி, ஒருபோதும் வளங்குன்றாததாக இருக்கவே முடியாது. 

வரம்புக்கு உட்பட்ட வளங்களைக்கொண்ட இந்த உலகத்தால் எல்லோருக்கும் சொகுசான வாழ்வை வழங்க முடியாது. அத்தியாவசியத்திற்கும் மேலான மேட்டுக்குடி வாழ்க்கைத் தரத்தை எல்லோரும் அடையச் செய்வதற்கான முயற்சிகள் ஒரு கூட்டுத்தற்கொலையாகவே அமையும். நியாயமான – அதிக பாதுகாப்பான ஒரு சமூகத்தில் நாம் உண்மையிலேயே வாழ விரும்பினால் – இப்புவியின் ஆகப்பெரும்பாலான ஏழைகள் குறைந்தபட்ச நலன்களையேனும் பெறவேண்டுமென்று விரும்பினால் – நம்மில் பெரும்பாலானோர் அனுபவிக்கும் மேட்டுக்குடி சொகுசுகளையும் அந்த சொகுசுகளை வழங்கும் அரசியல் பொருளாதார அமைப்பையும் மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது. இவ்வுலகில் பாலாறும் தேனாறும் ஒடச்செய்வதாக நாம் நம்பிக்கொண்டிருக்கும் சந்தைப் பொருளாதார அமைப்பே நம்மைக் கொல்லும் நச்சுயிரியாக இருக்கிறது.

உங்கள் கோடாரிகளைத் தூக்கி எறிந்தால் மரங்கள் தாமாகவே தம்மை உயிர்ப்பித்துக்கொள்ளும். மரங்களையும், தொழில்நுட்பத் தீர்வுகளையும், சூரிய மின்தகடுகளையும் கட்டிப்பிடிப்பதை விடுத்து சகமனிதரைக் கட்டிப் பிடியுங்கள். அவர்களின் வெம்மையை உணருங்கள். மேடுகளை உடைத்து முகடுகளைத் தகர்த்துப் பள்ளங்களை நிரப்ப வேண்டிய நேரமிது. 

மனிதர்களுக்கிடையே பொருளாதார சமத்துவத்தை உருவாக்குவதும், அதனை அடைவதற்கான சமரசங்களுக்குத் தயாராகுவதுமே இன்று நம்முன்னிருக்கும் சவாலும் தீர்வும். நம் பொருளாதார அமைப்பை இலாபம் சார்ந்த உற்பத்தியிலிருந்து தேவை சார்ந்த உற்பத்திக்கு மாற்றுவதும் பொருளாதார சமத்துவத்தை உறுதி செய்வதுமே நாம் பிழைத்திருக்க ஒரே வழி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *