பெற்றோர் பராமரிப்பு என்பது குழந்தையின் வாழ்க்கையில் அடிப்படைத் தூணாக விளங்கும் ஒரு சமூக செயல்முறை. குழந்தையின் உடல் வளர்ச்சி, மனநலம், உணர்ச்சி நிலை, கல்வி தொடர்ச்சி மற்றும் சமூக ஒருங்கிணைப்பு ஆகிய அனைத்தும் பெற்றோர் வழங்கும் பராமரிப்பின் தரத்தைப் பொறுத்தே அமைகின்றன. பெற்றோர் பராமரிப்பு சரியான முறையில் வழங்கப்படாதபோது, குழந்தைகள் பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இதன் விளைவாக கல்வி விலகல், குழந்தைத் திருமணம், பாலியல் வன்முறை, குழந்தைத் தொழில், மனநல பாதிப்பு போன்ற பல்வேறு சமூக பிரச்சினைகள் உருவாகின்றன.
திருவண்ணாமலை மாவட்ட Child Welfare Committee முன் கொண்டு வரப்பட்ட வழக்குகளில் பெற்றோர் பராமரிப்பு இல்லாமை குழந்தைகளை எவ்வாறு அபாயகரமான சூழ்நிலைகளுக்கு இட்டுச் செல்கிறது என்பதையும், அதே சமயம் சரியான தலையீடு மற்றும் பராமரிப்பு வழங்கப்பட்டால் குழந்தைகள் எவ்வாறு மீள் வாழ்வு பெற முடியும் என்பதையும் தெளிவாக வெளிப்படுத்துகின்றன. இக்கட்டுரை, மேற்கண்ட நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு, பெற்றோர் பராமரிப்பின் அவசியத்தை கல்வியியல் நோக்கில் விளக்குகிறது.
பெற்றோர் பராமரிப்பு: கருத்து மற்றும் பரிமாணங்கள்
பெற்றோர் பராமரிப்பு என்பது குழந்தைக்கு உணவு, உடை, இருப்பிடம் வழங்குவதில் மட்டும் முடிவடையாது. அது கீழ்க்கண்ட பரிமாணங்களை உள்ளடக்கிய ஒரு முழுமையான செயல்முறையாகும்:
- உடல் பராமரிப்பு – சுகாதாரம், ஊட்டச்சத்து, மருத்துவ கவனம்
- மனநல பராமரிப்பு – பாதுகாப்பு உணர்வு, மனஅமைதி, ஆலோசனை
- உணர்ச்சி ஆதரவு – அன்பு, புரிதல், கேட்கும் மனநிலை
- கல்வி வழிகாட்டுதல் – பள்ளி தொடர்ச்சி, ஊக்கம், எதிர்கால திட்டமிடல்
- பாதுகாப்பு – வன்முறை, சுரண்டல், தவறான உறவுகளிலிருந்து பாதுகாப்பு
குழந்தை நலக் குழுவிற்கு வந்த வழக்குகளில் காணப்படும் பெரும்பாலான நிகழ்வுகளில், இந்தப் பரிமாணங்களில் ஒன்றோ அல்லது பலவோ பெற்றோரால் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
பாலியல் வன்முறை மற்றும் பெற்றோர் அலட்சியம்
குழந்தை நலக் குழுவிற்கு வந்த வழக்குகளில், குழந்தைகள் தங்களுடைய சொந்த உறவினர்களால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
ஒரு 15 வயது சிறுமி, தன் சித்தப்பாவால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியதும், அதை தாயிடம் தெரிவித்தபோதும், அது புறக்கணிக்கப் பட்டிருக்கிறது. இந்த பெற்றோர் அலட்சியமே, அந்தச் சிறுமியை வீட்டைவிட்டு ஓடச் செய்தது. இது பெற்றோர் பராமரிப்பு தோல்வியடைந்ததன் நேரடி விளைவாகும்.
அதேபோல், ஒரு சிறுமி பல ஆண்டுகள் ஒரு அரசு மருத்துவரால் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாகியபோதும், பெற்றோர் அதை அறியாமல் இருந்தனர் அல்லது அறிந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் விளைவாக, குழந்தை மனநல ரீதியாக பாதிக்கப்பட்டு சமூகத்தில் குழப்பமான நடத்தை காட்டியது
பெற்றோர்களின் தவறான தீர்மானங்கள்
குழந்தை நலக் குழுவிற்கு வந்த வழக்குகளில் பதிவாகியுள்ள பல நிகழ்வுகளில், பெற்றோர் “மரியாதை” மற்றும் “சமூக அவமானம்” என்ற காரணங்களை முன்வைத்து, குழந்தைகளை பள்ளியிலிருந்து நிறுத்தி, குழந்தைத் திருமணத்திற்கு உள்ளாக்கியுள்ளனர்.
16 வயது சிறுமி ஒருவர், 10ஆம் வகுப்பு முடித்த பிறகு கல்வியைத் தொடர அனுமதிக்கப்படாமல், 26 வயது ஆணுடன் திருமணம் செய்து வைக்கப்பட்டார். பெற்றோர் பராமரிப்பு என்பதன் உண்மையான நோக்கம் – குழந்தையின் எதிர்காலத்தை பாதுகாப்பது .
CWC தலையீட்டின் மூலம், அந்தச் சிறுமி மீண்டும் கல்வியில் சேர்க்கப்பட்டு, இன்று 11ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.
மாற்றுப் பெற்றோர்
ஒரு பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த சிறுவன், குடும்ப வறுமை காரணமாக 25,000 ரூபாய் முன்பணம் பெற்றுக்கொண்டு ஆடு மேய்ப்பதற்காக அடிமைத் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டான். பெற்றோர் பராமரிப்பு இங்கு பொருளாதார தேவைக்காக குழந்தையின் உரிமைகளை தியாகம் செய்துள்ளது.
Childline 1098, DCPU மற்றும் CWC இணைந்து அந்தச் சிறுவனை மீட்டு, மீண்டும் பள்ளியில் சேர்த்தது. இந்த நிகழ்வு, பெற்றோர் பராமரிப்பு தோல்வியடைந்த இடங்களில் அரசு அமைப்புகள் குழந்தையின் “மாற்றுப் பெற்றோராக” செயல்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது.
மனநலம்
குழந்தை நலக் குழுவிற்கு வந்த வழக்குகளில் குறிப்பிடப்பட்ட பல குழந்தைகள், பெற்றோர் மரணம், அலட்சியம் அல்லது வன்முறை காரணமாக கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர்.
ஒரு சிறுமி தாய், தந்தை இருவரையும் இழந்த நிலையில், மன அழுத்தம், தூக்கமின்மை போன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டாள். குடும்பத்தில் இருந்து தேவையான அன்பும் பாதுகாப்பும் கிடைக்காததால், Child Care Institution வழங்கிய பராமரிப்பே அவளுக்கு மீண்டும் வாழ்வின் நம்பிக்கையை அளித்தது.
இதன் மூலம், பெற்றோர் பராமரிப்பு என்பது மனநல பாதுகாப்பின் முதன்மை ஆதாரம் என்பதும், அது இல்லாதபோது குழந்தைகள் எளிதில் உளவியல் பாதிப்புகளுக்கு உள்ளாவர்.என்பது தெளிவு
Foster Care அமைப்பு:
குழந்தை நலக் குழுவிற்கு வந்த வழக்குகளில் குறிப்பிடப்பட்ட ஒரு 11 வயது சிறுவன், பெற்றோரை இழந்து சாலையோரத்தில் வாழ்ந்தான்.
. CWC தலையீட்டின் மூலம் foster care பெற்றோர் தேர்ந்தெடுக்கப்பட்டு, சட்டபூர்வ நடைமுறைகளின் அடிப்படையில் அந்தச் சிறுவன் பாதுகாப்பான குடும்பத்தில் ஒப்படைக்கப்பட்டான்.
இந்த நிகழ்வு, பெற்றோர் பராமரிப்பு இல்லாத குழந்தைகளுக்கு மாற்றுப் பெற்றோர் பராமரிப்பு (Alternative Care) எவ்வளவு அவசியமானது என்பதை விளக்குகிறது.
சட்டத் தலையீடு:
பெற்றோர் பராமரிப்பு தோல்வியடைந்த இடங்களில், சட்டம் தலையிட வேண்டிய நிலை உருவாகிறது.
Juvenile Justice Act, POCSO Act, Child Marriage Prohibition Act போன்ற சட்டங்கள், பெற்றோர் குழந்தையின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறினால், அரசுக்கு அந்தப் பொறுப்பை வழங்குகின்றன.
குழந்தை நலக் குழுவிற்கு வந்த வழக்குகளில், பெற்றோர் புகார் அளிக்க மறுத்த போதும், CWC தொடர்ந்து முயற்சி செய்து FIR பதிவு செய்து, குழந்தையின் உரிமைகளை பாதுகாத்துள்ளது. இது பெற்றோர் பராமரிப்பு ஒரு சட்டப்பூர்வ கடமை என்றும் விளக்குகிறது.
பெற்றோர் பராமரிப்பின் சமூக அவசியம்
குழந்தை நலக் குழுவிற்க்கு வந்த வழக்குகள் அனைத்தும் ஒன்றை தெளிவாகக் காட்டுகின்றன:
பெற்றோர் பராமரிப்பு தனிநபர் மட்டத்தில் தோல்வியடைந்தால், அதன் தாக்கம் சமூக அளவில் வெளிப்படுகிறது.
- கல்வி இழந்த குழந்தைகள் → வறுமைச் சுழற்சி
- பாதுகாப்பற்ற குழந்தைகள் → வன்முறை, சுரண்டல்
- மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் → சமூக ஒதுக்கல்
மாறாக, சரியான பெற்றோர் பராமரிப்பு வழங்கப்பட்டால், குழந்தைகள் கல்வியுடன், தன்னம்பிக்கையுடன் சமூகத்தில் ஒருங்கிணைகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்ட (Child Welfare Committee) குழந்தை நலக் குழு- வின் அனுபவத்தில், பெற்றோர் பராமரிப்பின் அவசியத்தை நடைமுறை அனுபவங்களின் மூலம் நிரூபிக்கின்றன. பெற்றோர் பராமரிப்பு இல்லாமை குழந்தைகளை அபாய நிலைக்கு தள்ளுகிறது; அதே நேரத்தில், சரியான பராமரிப்பு – பெற்றோரால் அல்லது மாற்றுப் பெற்றோர்/அரசால் – வழங்கப்பட்டால், குழந்தைகள் மீண்டும் வாழ்க்கையில் முன்னேற முடியும்.
எனவே, பெற்றோர் பராமரிப்பை தனிப்பட்ட குடும்பப் பொறுப்பாக மட்டும் பார்க்காமல், சமூக மற்றும் அரசுப் பொறுப்பாகவும் கருத வேண்டும். குழந்தைகளின் “சிறந்த நலன்” என்பதே எந்த முடிவிலும் முதன்மையாக இருக்க வேண்டும்.