அவளுக்கு யார் எதிரி?

பெண்ணை சுயமாகச்  சிந்திக்க விடாமல், வீட்டு வேலையை  செய்வதும்,  குழந்தைகளைக் கவனித்துக் கொள்வதும், கணவனை அனுசரித்து திருப்திப்படுத்தி  இப்படி இப்படியெல்லாம் நடந்து கொண்டால் தான் சரியான குடும்பப் பெண் என்று சொல்லிச்சொல்லி அவளை உருவேற்றி வைத்திருக்கின்றனர்.  அதிலிருந்து அவள் கொஞ்சங்கூட விலகி விடாதவாறு ஒட்டுமொத்தச் சமுதாயமும் கண்காணித்துக் கொண்டே இருக்கிறது. பெண்ணே பெண்ணுக்கு அனுசரணையில்லை என்பதும் மறுக்கமுடியாத உண்மையும் ஆகிறது. அந்தவகையில் சமீபத்தில் வெளியான

                 ஜெய ஜெய ஜெய ஜெய ஹே, அம்மு   திரைப்படங்களின் கதைக்கருப்படி ஒரு  பெண் சமூகத்தில், பெற்றோரால், கணவனால் நடத்தப்படுவதை,  ஒடுக்கப் படுவதை கழிவிரக்கத்தோடு பார்க்கிறதா இல்லையேல் இனியாவது இவ்வாறான ஒடுக்குமுறையைக் கைவிடுவதே குடும்ப வாழ்க்கைக்கு சிறந்தது; சமூகத்திற்கு நல்லது என்று பாடம் கற்றுக்கொள்ளுமா என்பதில்தான் பெண்ணின் முன்னேற்றம் அடங்கியிருக்கிறது.

எல்லாப் பெண்களுக்கும் (அன்பால்)  அடங்கிப் போவதில் எந்தச் சிக்கலும் இருப்பதாகத் தெரியவில்லை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்துதான் ஒரு எல்லைக்குப் பின்பே பிரச்சினைக்குத் தீர்வு காண்பதையோ அல்லது எதிர்த்துப் போராடுவதையோ தனித்து வெளியேறுவதையோ  கையிலெடுக்கிறாள்.

ஜெய ஜெய ஜெய ஜெய ஹே! 

எடுத்ததுமே மரத்தில் ஏறி  விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தைகளில் மகளை கீழே இறக்கி,’நீ விளையாடவேண்டிய இடம் வீட்டுக்குள்’… என்பதிலேயே பாகுபாடும் கட்டுப்படுத்தலும் அறிவிக்கப்பட்டுவிடுகிறது. நல்ல கல்லூரியில் இடம்கிடைத்தும் விரும்பாத படிப்பைத்திணிப்பதும்  அதையும் தொடரவிடாமல் திருமணம் செய்துவைப்பதும் ….

பெண்பார்க்கும் காட்சியில் மாப்பிள்ளை ராஜேஷ் தன் தொழில் சார்ந்து மட்டும்  பேசுவதும், திருமணம் முடிந்து அவனது வீட்டிற்குள் நுழையும்போதே மேஜைக்கண்ணாடி  உடைந்து டிவி ரிமோட் உடைந்து என்று எல்லாம் உடைபட்ட காட்சியின் தொடர்ச்சி தினப்படியான உணவு மாற்றப்படும் போது விசிறியடிக்கப்படும் தட்டும், விழும் அடியும் நமக்குள் கோபத்தைத் தூண்டும். பிறகு சமாதானப்படுத்த சினிமா, ஓட்டல் (அங்கேயும் இவன் மனதைப் போல வாழ்வைப்போல சிக்கலான வழக்கமாக உண்ணும் இடியாப்பமே) என்று பார்த்தால் அடுத்தடுத்த அடிகளுக்கு இதே நடைமுறை தொடர்கிறது. 

அம்மாவிடம் பேசி கணவன் தன்னை அடிக்கும் விபரத்தைச் சொன்னால் எல்லா அம்மாக்களும் சொல்ற அந்த இத்துப்போன அனுசரிச்சுப் போ என்கிற வார்த்தையும், ஆரம்பத்தில் அடிவாங்குவதைக் கண்டு மாமியார் பரிதாபப்பட்டாலும் யூ ட்யூபில் கராத்தே கற்றுக்கொண்டு திருப்பியடிக்கும் மருமகளானதும் தன் பிள்ளை எவ்வளவு அப்பாவி என்று சொல்லும்போது நமக்கெல்லாம் ஒரு கோபம் வரத்தான் செய்கிறது… பெண்ணுக்குப் பெண்தான் முதல் எதிரி.

பெண்டாட்டியோடு வாழத்தெரியாத பெரியம்மா மகன் அண்ணனொருவன் இவனையும் கராத்தே கற்கச் சொல்வதும், அவளுக்கு ஒரு புள்ளையக் குடுத்துட்டா புள்ளையப் பார்த்து வீட்டுவேலை செய்து உன்னையும் பார்த்து கிழவியாயிடுவான்னும் அப்போதான் நீ முழு ஆம்பளைன்னும் சொல்றதெல்லாம் கடுப்பாகுது.  எத்தனை முட்டாள்தனமானது.

ராஜேஷும் அண்ணனும்  போட்ட திட்டப்படி ஜெயா கர்ப்பமாகிறாள். திட்டம் தெரிந்ததும் ஆறுவாரம்தானே ஆகுது கலைக்க ஒரு நொடி போதுமே என்கிறாள்.

வீட்டைவிட்டு வெளியில் வந்து என்ன செய்யவேண்டுமோ அதற்கான வேலைகளில் இறங்குகிறாள். விவாகரத்து வழக்கு தொடுக்கிறான் ராஜேஷ். நீதிபதி ஒரு பெண். வழக்கை விசாரித்து ஜெயா பக்க நியாயம் உணர்ந்து பெண்ணுக்குத் தேவை நீதி,  சமத்துவம், பெண் சுதந்திரம் என்று அறிவுறுத்துகிறார்.

அம்மு

இந்தப்படத்தில் திருமணமான புதிதில் இயல்பாகப்போய்க்கொண்டு இருந்த நாட்கள் சின்ன மறதியால் ரவியின் சுயரூபம் வெளிப்படுகிறது.  காதல் அத்தனை கேவலமானதா ஒருநாள்கூட செக்ஸ் இல்லாம இருக்கமுடியாதான்னு அம்முவைப்பார்த்து ஒரு கேள்வி வேறு. அதேவேளை அம்முவை கர்ப்பமாக்குவதிலும் ஆணின் தந்திரமும் சுயநலமும் ஆண் சமூக உளவியல்.  

பிறகு அடிக்கத் தொடங்குகிறான். தப்பே பண்ணாம அடி வாங்கறதும் தன்னையே தான் திட்டிக்கிறதாகவும்… தன்மீது தனக்கே மரியாதை இல்லாததாகவும் உணர்கிறாள் அம்மு.

கணவன் ரவி அடிப்பதை தன் அம்மாவிடம் சொல்லி முறையிடுகிறாள் அம்மு. ஆனால் அவளது அம்மாவோ தான் அடிவாங்கியதைச் சொல்லும்போது, அப்பா அடித்ததை அதிர்ச்சியோடு கேட்கிறாள்.  அவளுக்கு அம்மா சொல்லும் பதில், ‘நான் அடிவாங்கியது இருக்கட்டும் ஆனா உனக்கு அறிவுரைன்னு எதும் சொல்லமாட்டேன். அடிக்கிறது தப்புதான். பொறுத்துட்டுப் போகணும்னு கிடையாது. உனக்கு என்ன தோணுதோ செய்,  என்கிறார்.

சந்தர்ப்பவசத்தால் சந்திக்க நேர்கிற கொலைக்குற்றவாளிக்கு பாதுகாப்பு தந்து அவன் தங்கையின் திருமணத்தைக் காண உதவிசெய்வதோடு புருஷனையும் பழிவாங்கப் போடும்  திட்டம் நிறைவேறுகிறது.

ரவிக்கு பணிநீக்கமும் தண்டனையும் கிடைக்கப் போவதால் அவனின் கெஞ்சல் கேட்கையில், நானும் எத்தனை தடவை கெஞ்சியிருப்பேன். நீங்க கேட்டீங்களா,’, என்கிறாள் அம்மு.

தென்னிந்தியத் திரைப்படங்கள் சொல்லும் கதைகள் தென்னிந்தியக் குடும்பங்களின் கதைதான்.

இந்த இரண்டு படங்களிலுமே ஆணாதிக்கம் அப்பட்டமாகத் தெரிகிறது. கணவன் தங்கள் மனைவியை அடிக்கிற பண்பு இருக்கிறது.    கலவி என்றால் மனமும் உடலும் உணர்வுபூர்வமாக ஊனுருக உயிருருகக் கலத்தலே கலவி. இங்கே கணவன் மனைவிக்கிடையே  நிகழ்வது உடலுறவுதான் அதுவும் ஆணின் விருப்பத்திற்கே நிகழ்கிறது. மனைவி (அம்மு) நெருங்கும்போது கணவனால் தரக்குறைவான வசைச்சொற்கள் பிரயோகிக்கப்படுகிறது.  அதுமட்டுமின்றி இங்கே  பெண் கர்ப்பமாவதும் அவள் விருப்பம் சார்ந்ததில்லை. பெண் உடல் அவளுக்கானதே இல்லை.

ஜெய ஜெய திரைப்படம் சரியான பகடியாகக் கையாளப்பட்ட திரைமொழி.  உண்மையாகவே இருந்தாலும் இதை சிரிக்காமல் யாரும் பார்த்துவிடமுடியாது.  நடிப்பும் அபாரம்.

                எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஒரு பெண் வெளியேறும்போது, அடுத்து என்ன பண்ணுவ என்கிற ஒற்றைக் கேள்விதான் எல்லாவற்றையும் தடுக்கின்ற ஒரு முக்கியமான தடையாகிறது. நடக்கறது நடக்கட்டும் பார்த்துக்கலாம் என்கிற தைரியத்தைத் தருவது கல்வி ஒன்று தான். அம்மு படத்தில் இரயில் நிலையத்தில் சந்திக்கும் பிச்சைக்காரர் முதல்முறை  அம்மு  வீட்டைவிட்டு வெளியேறிய போது சாப்பாடு மட்டும் பெற்றுக்கொண்டு எதுவும் சொல்லாமல் செல்கிறார். மீண்டும் இறுதியாக உறுதியாக வீட்டைவிட்டு வந்த அம்முவிடம் சரியோ தப்போ நம்ம முடிவ நம்மதான் எடுக்கணும், என்று சொல்வது அற்புத வாசகம்.  அதேபோல் அம்மு திரைப்படமானது பெண்கள் தங்கள் ஈகோபிடித்த கொடூரமான கணவனை எதிர்க்கத் துணிவது போன்ற சிறப்பான கதையம்சமும் கதாபாத்திரகளின் யதார்த்த நடிப்பும்  பெண்களின் மனதில் கேள்விகளை எழுப்பாமல் இருக்காது. சீண்டலும் பகடியுமாகச் சொல்லப்பட்டாலும் பார்வையாளர்கள் மைய இழை பிசகாமல் புரிந்துகொள்ள ஏதுவான காட்சியமைப்பு, நடிப்பு முக்கியமாக  வசனம் இவை அனைத்தும் திரைப்படத்திற்கு  பலம் சேர்க்கிறது.

இரண்டு படங்களுமே பெண் சுதந்திரத்தையும் பெண்கல்வியையும் பொருளாதார சமநிலையையும் பற்றிப் புரியவைக்கிறது. அதேபோல்  கிரேட் இந்தியன் கிச்சன்  தற்போது தமிழிலும் வந்திருக்கிறது.  திருமணமான புதிதில் மாமியாரிடம் யார்யாருக்கு என்ன பிடிக்கும் என்ற சம்பாஷணையில்  தொடங்கி மாமியாருக்கு என்ன பிடிக்கும் என்று கேட்கப்படும் கேள்விக்கு பதில் இல்லாததிலேயே அங்கு பெண்களுக்கு மரியாதையோ தனித்துவ விருப்போ ஒரு பொருட்டே இல்லை என்பது தெரிகிறது.

கணவனுக்கும் மாமனாருக்கும் வேண்டிய படியெல்லாம் வேலைக்குப் பழக்கும் வேண்டியபடி சமையல் ருசிக்கும் பழக்கும் உத்தி உச்சகட்ட வன்முறையாகத்தான் தோன்றுகிறது.  இதெல்லாம் ஆரம்பத்திலேயே ஒரு  பெண்ணாக மாமியார் தானே மாறியிருந்தாலோ அல்லது தனக்கடுத்து மருமகளுக்காகவாவது மாறவேண்டி கணவனுக்கும் மகனுக்கும் அறிவுறுத்தியிருந்தாலோ நல்லது. ஆனால் அப்படியேதும் நிகழாமல் அந்தக் கட்டமைப்பிலேயே குடும்பத்தை நகர்த்துவது எந்த வகை நியாயம்

நவீன யுகத்தில் நேரம் எத்தனை முக்கியமானது விறகடுப்பில் சோறு சமைப்பதும் அம்மியில் மசாலாவும் சட்னியும் அரைப்பதும் ஏற்கமுடிகிறதா  அதையெல்லாம்விட கல்யாணத்திற்கு முன் அதுவும் இந்தக் காலத்தில் ஒரு பெண்ணுக்கு உறவுக்கு முன்பான முன்விளையாட்டு தெரிந்திருப்பது ஒன்றும் குற்றமோ அசிங்கமோ இல்லையே இதுபற்றிக் கேட்கும் மனைவியைப் பார்த்து ஒரு கணவன் எத்தனை திமிரோடு உன் முகத்தைப்  பார்த்தா அப்டிச் செய்யத் தோணலன்னு சொல்றதெல்லாம் என்னவொரு அராஜக ஆம்பளைத்திமிர்.

மாதவிலக்கு இதுவொரு முக்கிய பிரச்சனையாக தீண்டத்தகாத , முகத்தில் கூட விழிக்காத ஒரு போக்கு ஒரு பத்தாம்பசலித்தனமெல்லாம் இன்னும் பலவீடுகளில் இருக்கிறது. அந்த வீட்டுக்கு வேலைக்கு வரும் பெண்மணியின் கருத்து அட்சர லட்சம் பெறும். அதாவது அவள் சொல்கிறாள், நானும் வீட்டுக்கு விலக்கானா ஒதுங்கி உட்கார்ந்தா சோத்துக்கு என்ன செய்யறது அடுத்தவேளைச் சோற்றுக்கு உத்தரவாதம் இருக்கவங்கதான் இப்டி சாத்திரம் பாக்கமுடியும் என்று சர்வசாதாரணமாகச் சொல்லிச் செல்வார். உண்மையும் அதுதானே என் பார்வையில் இந்த மூன்று திரைப்படங்களுமே ஆண்களும் பார்க்கவேண்டிய படம். ஏன் இப்படியான பெண்ணடிமைத்தனம் பற்றிப் பேசும் படங்களையும் ஆண்களே எடுக்கிறார்கள் பெண்ணே தான் அனுபவித்த, கண்டுணர்ந்த இதையெல்லாவற்றையும் திரைமொழியாக்க இயலாதா பெண்ணே எழுதி இயக்கினால் இன்னும் கனம்பெறும்தானே இந்தத் திரைப்படங்களில் பெண்,  அதாவது மகளோ மருமகளோ அனுபவிக்கும் சித்ரவதை அனைத்தும் மாமியார் அல்லது அம்மாவுக்குத் தெரிகிறது. ஆனாலும் அதுபற்றிய எந்தக் குற்றவுணர்வும் இன்றி அனுசரித்துப் போகச் சொல்வதே காலங்காலமாக நடக்கும்  குற்றச்செயல்.  சரி முந்தைய தலைமுறை செய்த அதே தவறை நாம் இனி செய்யவோ செய்ய அனுமதிக்கவோ கூடாது என்று ஏன் எந்தப் பெண்ணும் நினைக்கவில்லை  பெண் உடல் புனிதமாகப் பார்க்கப்பட்டு அதுவே சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதையும் எப்போது ஒவ்வொரு பெண்ணும் உணர்கிறாளோ அப்போதுதான் உடலையே ஆயுதமேந்த இயலும்.

இந்த உளவியல் பற்றியும் பேசவேண்டும். அந்தவகை எண்ணவோட்டம் பெண்ணுக்கே வெளிச்சம். அந்த நுட்பம் கல்வியறிவு பெற்ற பொருளாதாரச் சுதந்திரம் கொண்ட பெண்ணால் திரைமொழியாக்கப்படுவது மட்டுமல்ல. வாழ்வியலாகவும் வருமானால் நிலைமை சீர்படும். அப்படியான புரிதலையும் கேள்வியையும் சினிமாவின் வழியாக எளிய ஊடகத்தினூடே மக்களிடம் கொண்டு சேர்க்கும் தன்மையில் சமகால மலையாள சினிமாக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

8 thoughts on “அவளுக்கு யார் எதிரி?

  1. விமர்சனம் அருமை

  2. அற்புதமான கட்டுரை விஜி.. நேர்த்தியான, எளிமையான, ஆழமான, அடர்வான, அளவான, அம்சமான எழுத்து. ஊணும் உயிருமாக மனதும் மனதும் உடம்பு என்கிற ஊடகம் வழி கலப்பதே கலவி என்கிற சொல்லாடல் இந்த ஆணாதிக்க புத்திக்குள் இறங்கினாலே இங்கே கணிசமான மாற்றங்கள் நிகழும். மலையாள சினிமா பெண் சமத்துவம் குறித்த படைப்புகளில் வேகமாக முன்னோக்கி செல்கிறது. வாழ்த்துகள் ப்பா ❤️🌷🎶🦋🤝💐

    1. மகிழ்வும் அன்பும் நன்றியும்…

  3. மகிழ்வும் அன்பும் நன்றியும்….

  4. வணக்கம் தோழி . ஜெய ஜெய ஜெய ஜெய ஹே, அம்மு திரைப்படங்களை நான் என் மனைவி, மறுமகளுடன் உட்கார்ந்து பார்த்தேன். தமிழ் டிவி சீரியல் பார்க்கும் போது எதாவது தமது எதிர்வினையை கோபத்தை எரிச்சலை வெளிப்படுத்துவார் மனைவி ..உதாரணத்துக்கு பாண்டியன் ஸ்டோர் வந்தால் கூட்டுகுடும்பம் இப்போ எதுக்கு அதை கட்டிக்கிட்டு அழுவது என்பார். காரணம் சில பாதிப்பு தான். பாக்கிய லஷ்மி வந்தால் ..நம்மள விட்டு போனா அவனை டைவர்ஸ் பண்ணாம எதுக்கு இவ இப்படி சகிச்சுக்கிறா என்று திட்டுவா .இப்படி தப்பு பண்ண உனக்கு இந்த தண்டனைதான்ன்னு எனக்கு சொல்றாமதிரி இருக்கும் .மகா நதி பார்த்தா ..ப்ரெண்ட்ஸ்களை ரொம்ப நமபாத டா என்று படத்தின் நாயகனை பார்த்துசொல்வா. காரணம் நான் நண்பர்களால் நிறைய ஏமாந்து இருக்கேன். ஆனா இந்த இரு மலையாள படங்களை பார்க்கும் போது எந்த ரியாக்சனும் இல்ல. அதாவது எனக்கு சொல்வது போல் என்னை அறிவுறுத்துவது போல் ஏதும் இல்லை. உணவு விஷயத்திலும் குடும்ப பொறுப்பு முடிவு எடுக்கும் விஷயத்தில் எல்லாம் அவள்ராஜ்ஜியம் தான். சம்பளத்தை பில்லோடு கொடுத்து காய்கறி அறியும் டீ போடும் தேவைப்பட்டால் பாத்திரம் கழுவும் கணவன் நான் எனவே மலையாள ஹீரோக்களை வைத்து என்னை திட்ட முடியாது அந்த வகையில் என் மீது எனக்கு பெருமை உண்டு. சரி விஷய்த்துக்கு வருகிறேன்.. விஜய ராணி மீணாட்சி நூல் விமர்சன் செய்வதில் வல்லவர். பேசுவதிலும் கில்லாடி நல்ல வாசகர் . இப்போது தான் அவரின் சினிமா விமர்சனம் படித்தேன் ..நல்ல அவதானிப்பு சமூக பார்வை எளிய மொழி சினிமா குறித்த புரிதல் என பண்பட்டவராக இருக்கிறார் தெரிகிரார் இந்த எழுத்தின் மூலம். தொடர்ந்து அவர் இந்த சினிமா குறிதான எழுத்தைதொடர வேண்டும் இதில் பெண் எழுத்தாளர் பங்களிப்பு குறைவு . விஜயராணி என் தோழி என்பதில் எனக்கு பெருமிதம் வாழ்த்துக்கள்..– அமிர்தம் சூர்யா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *