பூப்பு முதல் மூப்பு வரை… அற்புதம் செய்யும் அக்குயோகா! 

ஒரு பெண்குழந்தை மண்ணில் பிறந்து கல்வி, கலை, விஞ்ஞானம் மற்றும் மெய்ஞ்ஞானம் என்ற எத்துறையில் சிறப்புப் பெற்றாலும் அவளின் வாழ்வில் ஏறத்தாழ 35 ஆண்டுகள் உடன் வரும் மாதவிடாய் குறித்தும் மாதவிடாய் கால பிரச்சினைகள் மற்றும் அதை சரிசெய்ய உதவும் அக்குயோகா சிகிச்சை முறைகளையும் வாழ்வியல் சார்ந்த ஆலோசனைகளையும் இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

அக்குயோகா – அறிமுகம்:

அக்குயோகா என்பது அக்குபங்சர் மற்றும் யோகா எனும் இருபெரும் பாரம்பரிய  மருந்தில்லா மருத்துவ முறைகளை ஒருங்கிணைந்து சிகிச்சை அளிக்கும் முறை ஆகும்.

இதில் நோய்க்கான அடிப்படை மூலக்காரணங்கள் ஆராயப்பட்டு அதற்கான அக்குபங்க்சர் ஊசிகள் அல்லது அக்குபிரஷர் புள்ளிகள், அதற்குரிய முத்திரைகள், யோகாசனங்கள்,மலர் மருத்துவம், உணவு மற்றும் வாழ்வியல் முறை ஆலோசனைகள் மூலம் சரிசெய்யப் படுகிறது.

பூப்பு பருவமடைதல் (Puberty):

ஒரு பெண் வளரத் தொடங்கும் போது அவளின் 9 முதல் 16 வயதிற்குள்  உடலில் நடக்கும் வளர்சிதை மாற்றத்தில் ஏற்படும் இயல்பான மாறுதலால் யோனி வழியாக இரத்தம் மற்றும் சில இழையங்கள் வெளியேறுவதை மாதவிடாய் என்கிறோம். இதன் பொருள் அவர்களின் கருப்பை, கருப்பை வாய், யோனி மற்றும் கருவளையம் ஆகியவை வளர்ச்சியடைந்து கருமுட்டைகளை வெளியிடத் தயார் நிலையில், மாதவிடாயின் ஆரம்பம் என்பது ஒரு பெண்ணின் உடல் கர்ப்பம் தரிக்க தயாராகும் செயல்முறை தொடங்குகிறது என்பதைக் குறிக்கிறது. இது சமயத்தில் உடலில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும். அதனால் உடல் தோற்றத்தில், உணர்ச்சி மற்றும் நடத்தையில் மாற்றம் ஏற்படும். இந்த நிகழ்வு பூப்படைதல் அல்லது பருவமடைதல் என்றழைக்கப்படுகிறது. 

மாதவிடாய் (Menstruation):

மாதவிடாய் அல்லது மாதவிலக்கு என்பது ஒரு பூப்படைந்த பெண்ணின் உடலில், மாதந்தோறும் சுழற்சி முறையில் நிகழும் ஒரு  மாற்றமாகும். 

பொதுவாக, ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் சமயத்தில் 50 முதல் 80 மி.லி அளவு ரத்தம் உடலிலிருந்து வெளியேறும். மாதவிடாய் சமயத்தில் வெளியேறுவது ரத்தம் மட்டுமல்ல. கர்ப்பப்பையின் உள் அடுக்கான `எண்டோமெட்ரியம்’ (Endometrium) மாதம்தோறும் புதிதாக உருவாகும். கருமுட்டைப் பையிலிருந்து வெளியேறும் கருமுட்டை, விந்தணுவைச் சந்தித்து அந்தப் பெண் கருவுற்றால் எண்டோமெட்ரியம் ஒவ்வொரு மாதமும் உருவாகி அப்படியே இருக்கும். கருவுறாத பட்சத்தில் நம் உடல் அதற்கேற்ற ஹார்மோன்களைச் சுரந்து அந்த அடுக்கை வெளியேற்றும். இரத்தம்  35 சதவீதமும் மீதம் எண்டோமெட்ரியம் அடுக்கின் இறந்த செல்கள், செர்விக்ஸ், வெஜைனா பகுதிகளிலிருந்து சுரக்கப்படும் திரவங்கள்  அனைத்தும் சேர்ந்து வெளியேறுவதை மாதவிடாய் என்கிறோம்.

பூப்பு கால உணவு:

பெண் குழந்தைகள், பூப்பெய்திய உடன், அவர்களுக்கு நல்ல ஆரோக்கியமான உணவுகள் வழங்க வேண்டும். குறிப்பாக, உளுந்து களி,வெந்தயக்களி, உளுந்து வடை, நல்லெண்ணெய், சிகப்பரிசி பயறு கலந்த புட்டு, கருப்புக்கவுணி அரிசி, , பனை வெல்லம் போன்றவை அவசியம். கிராமப் பகுதிகளில் நாட்டுக்கோழி முட்டையை அப்படியே குடிக்க கொடுத்து அதே முட்டை அளவு நல்லெண்ணெய்யும் குடிக்க வைப்பது வழக்கம்.

அடிக்கடி எள்ளுருண்டை, கடலை மிட்டாய், சுண்டல் வகைகள், முளைக்கட்டிய பச்சை பயறு, ஊறவைத்த வேர்க்கடலை மற்றும் அந்த பருவத்தில் கிடைக்கும் பழங்கள் போன்றவை நல்ல  ஆரோக்கியத்துடன் ஒழுங்கான மாதவிடாய் சுழற்சி நடைபெற உதவும்.

இவற்றுடன் முறையான மூச்சுப்பயிற்சி மற்றும் எளிய உடற்பயிற்சிகள் செய்வதால் ஆரம்பத்தில் இருந்தே ஆரோக்கியமான மாதவிடாய் இருக்கும். மேலும் யோகா வல்லுனர்களின் வழிகாட்டல்படி யோகப்பயிற்சிகள் செய்வது மிகுந்த பலனை தரும்

ஒழுங்கற்ற மாதவிடாய் (Irregular Periods):

ஒரு பெண்ணின் மாதவிடாய் மிகக் குறுகிய அல்லது மிக நீண்ட காலத்திற்கு நீடித்தால், அது ஒழுங்கற்ற மாதவிடாய் என்று அழைக்கப்படுகிறது. அதாவது, இந்த மாத மாதவிடாய் முடிந்த நாளில் இருந்து அடுத்த மாதவிடாய் 24 நாட்களுக்கு குறைவாகவோ அல்லது கடைசி மாதவிடாய்க்குப் பிறகு 38 நாட்களுக்கு மேல் வந்தால், அது ஒழுங்கற்றதாகக் கருதப்படுகிறது.

மாதவிடாய் முன் நோய்க்குறி (PMS) 

மாதவிடாய் முன் நோய்க்குறி (PMS) என்பது மாதாந்திர காலத்திற்கு முன்பு ஏற்படும் பல்வேறு உடல் மற்றும் உளவியல் அறிகுறிகள்  ஆகும்.  மாதவிடாய் சுழற்சி சராசரியாக 28 நாட்களுக்கு ஒருமுறை நீடிக்கும். மாதவிடாய்க்கு 10 முதல் 14 நாட்களுக்கு முன்பு PMS அறிகுறிகள் தோன்றும்.

அதீத இரத்தப்போக்கு  (Menorrhagia):

ஒரு பெண்ணின் மாதவிடாய் காலத்தில் ஏற்படக்கூடிய மற்றொரு பிரச்சனை இரத்தம் அதிகமாக வெளியேறுவதாகும் .

இரத்தம் கட்டி கட்டியாக வெளியேறுவது, ஒருநாளைக்கு 2-3 நாப்கின்கள் முழுவதும் நனைந்து வெளியேற்றுவது இவற்றைத்தான் அதீத ரத்தப்போக்கு என்கிறோம். 

அதீத இரத்தப்போக்கு ஏற்படுவதற்கான காரணங்கள்:

இளம்வயதில் அதிகமான இரத்தப்போக்குக்கு பிசிஓடி உள்ளிட்ட ஹார்மோன் பிரச்சனைகளும் 40 வயதுக்கு மேலானவர்களுக்கு ஃபைப்ராய்டு கட்டிகளும் காரணமாக அமைகின்றன

மாதவிடாய் இன்மை (Amenorrhea):

ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சந்தர்ப்பங்களில் தவறவிட்ட மாதவிடாய் அல்லது முழு மாதவிடாய் இல்லாததைக் குறிக்கிறது. குறைந்தபட்சம் மூன்று மாதவிடாயை தொடர்ச்சியாக தவறவிட்ட பெண்கள் அல்லது 15 வயதிற்குள் மாதவிடாய் தொடங்காத இளம்பெண்களுக்கு அமினோரியா இருப்பது கண்டறியப்படுகிறது.

உணவு முறை:

பிசிஓடி உள்ளிட்ட ஹார்மோன் பிரச்னைகளுக்கு உணவின் மூலம் உடல் எடையை சரியான அளவில் வைப்பதன் மூலம் சரிசெய்ய முடியும். அப்போது, அதீத ரத்தப்போக்கு மற்றும் மாதவிடாய் இன்மை பிரச்னையும் சரியாகும்.  இரும்புச்சத்து அதிகமாக உள்ள பழங்கள், காய்கறிகளை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். ராஜ்மா உள்ளிட்ட பீன்ஸ் வகைகள், நட்ஸ் வகைகள், முருங்கை கீரை, ஊறவைத்த வேர்க்கடலை, துவர்ப்பு சுவை நிறைந்த காய்கறிகள், வாழைப்பூ, மாதுளையின் வெள்ளைத் தோலுடன் சாறு, கருப்பட்டி மீன் உள்ளிட்ட புரதம் நிறைந்த உணவுகளை எடுப்பதன் மூலம் குணம் பெறலாம்.

கர்ப்பகாலம்:

மாதவிடாய்.. பெண்கள் பூப்படைதல் தொடங்கி மெனோபாஸ் காலம் வரை மாதவிடாயை சந்திக்காத காலம் ஒன்று உண்டு. அது கருவுற்ற நாள் முதல் பிரசவம் வரை. கருவுற்ற காலத்தில் உடலில் பல மாற்றங்கள் உண்டாகும். 

பிரசவித்த பிறகு 2 மாத காலங்களில் மாதவிடாய் சுழற்சி தொடங்கும். சிலருக்கு தாய்ப்பால் கொடுக்கும் காலம் வரை மாதவிலக்கு தள்ளிபோடப்படும். குறைந்தது 6 மாதங்களுக்கு பிறகு தான் மாதவிடாய் சுழற்சி மீண்டும் தொடங்கும். சிலருக்கு இது பொருந்தாது.

மாதவிடாய் பிரச்சனைகளும் கருவுறுதலும்:

மாதவிடாய் சுழற்சி என்பது  உடலியல் மாற்றங்களின் தொடர் ஆகும். இது FSH, LH, ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்டிரோன் போன்ற பல்வேறு ஹார்மோன்களால் கட்டுப்படுத்தப்படுகிறது

சாதாரண FSH அளவுகள்:

பருமடைவதற்கு முன்பு – 0-4 IU/L

பருவமடையும் போது – 0.3- 10 IU/L

மாதவிடாயின் போது 4.7-21.5 IU/L

மாதவிடாய் நின்ற பிறகு 25.8 -134.8 IU/L

இதில் ஒரு பெண்ணின் FSH அளவுகள் 30 IU/L அல்லது அதற்கு அதிகமாக இருந்தால், அவர்கள் மாதவிடாய் நிறுத்தத்தை அடைந்திருக்கலாம். ஆனால் கர்ப்பமாக முயற்சிக்கும் போது (FSH) அளவு அதிகமாக இருந்தால் குறைக்கவும் அல்லது குறைவாக இருந்தால் அதிகரிக்கவும் வாழ்க்கை முறை மாற்றங்களின் உதவியுடன்  கருத்தரிக்க முடியும்.

Follicle-stimulating hormone (FSH) அளவு குறைய:

சோயா புரதம் மாதவிடாய் நின்ற பெண்களில் (FSH) குறைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. உடலில் (FSH) அளவு குறைய டோஃபு மற்றும் சோயாபால் ஆகியவற்றை சேர்த்துகொள்ள வேண்டும்.

மேலும் DHEA (Dehydroepiandrosterone) மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் ஆகியவை இந்த (FSH) அளவை குறைக்க உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது

Follicle-stimulating hormone (FSH) அளவு அதிகரிக்க:

காய்கறிகள்,பழங்கள், முழு தானியங்கள் மற்றும் லீன் புரொட்டீன்ஸ் (புரத மூலங்கள்) .

ஹார்மோன் பிரச்சினை (Harmonal Imbalance):

தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும் இரவில் குறைந்தது 7 மணி நேரம் தூங்கவும்.

கார்டிசோலின் அளவை குறைக்க மன அழுத்த அளவை குறைக்க வேண்டும். மலர் மருந்துகளில் Hornbeam, Oak, Cerato மாதவிடாய் காலத்தில் ஏற்படும் மனம் சார்ந்த உடல் பிரச்சனைகளுக்கு நல்ல பலனை தரும்.

வாசனை எண்ணெய்கள் Aromatherapy  lavender, sage, and marjoram எண்ணெய்கள் மனதை அமைதியாக வைத்திருக்க உதவும். 

மூப்பு – மாதவிடாய் முடிவு (Menopause):

மெனோபாஸ் என்பது பெண்ணின் மாதவிடாய் சுழற்சியின் முடிவில் ஏற்படும் இயற்கையான உயிரியல் மாற்றம் ஆகும்.. ஒரு பெண்ணிற்கு 12 மாதங்கள் தொடர்ந்து மாதவிடாய் வரவில்லை என்றால் மாதவிடாய் நின்றதாக கூறப்படுகிறது. பொதுவாக 40 – 50 வயதுடைய பெண்களுக்கு ஏற்படும். இருப்பினும், இது வயது,  இனம், மரபியல், வாழ்வியல் முறை மற்றும் மருத்துவ நிலைமைகளைப் பொறுத்து மாறுபடும். பெண்களுக்கு பிறப்பின்போது ஃபாலிக்கல்ஸ் என்பது சுமார் 4 லட்சம் வரை இருக்கும். ஒவ்வொரு மாதவிடாயின் போதும் அது வெளியேறும். இறுதியாக அது சுமார் 300 லிருந்து 400 என்ற எண்ணிக்கையில்தான் இருக்கும். ஆனால் இந்த ஃபாலிக்கல்ஸின் எண்ணிக்கை என்பது பிறப்பிலேயே குறைவாக இருந்தால் அவர்களுக்கு இளம் வயதில் மாதவிடாய் நின்று போதல் பிரச்சனை ஏற்படும். 

கருப்பைகள் இறுதியில் முட்டைகளை உற்பத்தி செய்வதை நிறுத்தும் போது மாதவிடாய் நிறுத்தம் ஏற்படுகிறது அப்போது பெண் பாலின ஹார்மோன்( ஈஸ்ட்ரோஜன்) அளவு குறைகிறது, இது ஒரு பெண்ணின் இனப்பெருக்க காலம் முடிவுக்கு வருவதைக் குறிக்கும்.


மெனோபாஸ் காலத்தில் உணவு:

ஈஸ்ட்ரோஜனைப் போன்ற இரசாயன அமைப்பைக் கொண்ட இயற்கையாக விளையும்  தாவர கலவைகள், பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் எனப்படும். அவை ஈஸ்ட்ரோஜனின் ஹார்மோன் செயல்பாட்டைப் பிரதிபலிப்பதாக உள்ளது மற்றும்  உடல் ஈஸ்ட்ரோஜன் குறைபாட்டைச் சமாளிக்க உதவுகின்றன.  

ஆளிவிதை, சோயா, உலர்ந்த பழங்கள், கொட்டைகள், புரதம் நிறைந்த உணவுகள், பருப்பு வகைகளில் ஈஸ்ட்ரோஜன் சத்து அதிகம் இருக்கும். இவற்றுடன் காய்கறிகள், கீரை வகைகள், பழங்கள், சிறுதானியங்கள் போன்றவற்றை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதுடன் போதுமான தண்ணீர் குடித்தல் மூலம் மொனோபாஸ் கால அறிகுறிகளை எளிதாக சமாளிக்கலாம்.

மாதவிடாய் என்பது பெண்களின் வாழ்நாளில் பெரும்பகுதியில் தொடர்ந்து நிகழ்வதால் அதன் பாதிப்புகளை வரும்முன் காக்கவும் பிரச்சனைகள் வந்த பிறகு நோய்க்கான அடிப்படை காரணம் அறிந்து  ஆரோக்கிய வாழ்வியலுக்கு மீண்டு வர அக்குயோகா சிகிச்சை முறை மிகுந்த பலன் அளிக்கும்.

4 thoughts on “பூப்பு முதல் மூப்பு வரை… அற்புதம் செய்யும் அக்குயோகா! 

  1. பயனுள்ள கருத்துகள், சிறப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *