நெய்தல் பறவைகள்

“நிரை திமில் களிறாக, திரை ஒலி பறையாக

கரை சேர் புள்ளினத்து அம் சிறை படையாக

அரைசு கால் கிளர்ந்தன்ன உரவு நீர் சேர்ப்ப!”

என்கிறது ஒரு கலித்தொகைப் பாடல். “கடலில் மீன் பிடிக்கச் செல்லும் திமில் படகுகளை யானைப் படையாகவும், கடலலை ஓசையை முரசுப் பறையாகவும், கடலிலிருந்து கரைக்குச் செல்லும் பறவைகள் ஆள்படையாகவும் கொண்டு அரசன் போருக்குச் செல்வது போலத் தோன்றும் சேர்ப்பு நிலத்தலைவனே” என்று உரையாசிரியர்கள் இந்தப் பாடலுக்கு விளக்கம் தருகின்றனர். படைபோல விரைந்து செல்லும் பறவைகள் என்று இதில் குறிப்பிடப்படுவது பூநாரை (Flamingo) எனப்படும் உவர்நீர்ப் பறவையாக இருக்கலாம் என்கிறார் அறிஞர் பி.எல்.சாமி. கடல் காகம், நாரை, குருகு, சிறு வெண் காக்கை என பல்வேறு கடல் பறவைகளை சங்க இலக்கியம் பேசுகிறது. 

நெய்தல் நிலம் என்றவுடன் நமக்குப் பறவைகள் நினைவுக்கு வருவதில்லை. மீன்களும் திமிங்கிலங்களுமே கண்முன் நீந்துகின்றன. வானத்தையே பரப்பாகக் கொண்டு இயங்கும் பறவைகளை நாம் நீரோடு தொடர்பு படுத்துவதில்லை. ஆனால் கடல்சார் சூழலியலில் பறவைகளின் பங்கு முக்கியமானது. பல உணவுச்சங்கிலிகளில் பறவைகள் முக்கியமான உச்ச இடத்தில் இருக்கின்றன. ஒரு கடல் சூழல் நலமாக இருக்கிறதா இல்லையா என்பதைக் காட்டும் சுட்டு இனங்களாக (Indicator species) இருக்கின்றன. கடற்பறவைகளின் எச்சம் நிலத்துக்கு உரமாகிறது.கடலில் உணவு சேகரித்து நிலத்தில் இனப்பெருக்கம் செய்யும் கடல்சார் பறவைகள் நிலத்துக்கும் கடலுக்குமிடையே சத்துக்களை இடமபெயர்க்கும் கருவிகளாக செயல்படுகின்றன. கடலின் உணவுச்சங்கிலியில் பறவைகள் முக்கியப் பங்காற்றுகின்றன. சுருக்கமாக சொல்லப்போனால்,கடல் சூழல் சீராக இயங்குவதற்குக் கடல்சார் பறவைகள் அவசியமானவை.

கிட்டத்தட்ட 327 முதல் 350 இனங்கள், அதாவது மொத்த பறவைகளில் 3.5 விழுக்காடு இனங்கள் கடல்சார் பறவைகளாக வகைப்படுத்தப்படுகின்றன. எது கடல்சார் பறவை என்பதில் விஞ்ஞானிகளிடையே பெரிய விவாதம் நிலவுகிறது என்றாலும், இரைக்காகக் கடலையே நம்பியிருக்கும் பறவைகள் அனைத்துமே கடல்சார் பறவைகள் என்ற வரையறையை ஓரளவு எல்லாரும் ஏற்றுக்கொள்கின்றனர். நிலத்திலும் வானத்திலும் வாழ்வதற்குப் பழகிய பறவைகள் கடல்சார் சூழலுக்குத் தங்களைத் தகவமைத்துக்கொண்ட பரிணாம வரலாறு மிகவும் சுவாரஸ்யமானது. 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக இந்த மாற்றம் நடந்ததாக சொல்லப்படுகிறது. கடல்நீரில் உள்ள உப்பை வெளியேற்றும் உப்பு சுரப்பிகள், நீந்துவதற்கு ஏதுவாகக் கால் விரல்களிடையே சவ்வு போன்ற அமைப்புகள், நீருக்குள் இருக்கும்போது ஆக்சிஜன் தேவையை சரிசெய்துகொள்வதற்கான கூடுதல் ஹீமோக்ளோபின்/மயோக்ளோபின் மூலக்கூறுகள், நீர் புகாத இறகுகள் என கடலில் வேட்டையாடுவதற்குப் பல்வேறு தகவமைப்புகள் தேவை. எல்லா கடற்பறவைகளிடமும் இந்தத் தகவமைப்புகள் உண்டு. இதில் வியப்பு என்னவென்றால் எட்டுக்கும் மேற்பட்ட கடற்பறவை குடும்பங்களில் இந்தப் பண்புகள் தனித்தனியாகப் பரிணாம வளர்ச்சி அடைந்து உருவாகியிருக்கின்றன. மரபணு ரீதியாகப் பிரிந்திருந்தாலும் சூழலுக்கு ஏற்றபடி ஒரே மாதிரியான பண்புகள் இவ்வாறு வளர்ச்சியடைவதை ஒருங்கு படிமலர்ச்சி (Convergent Evolution) என்பார்கள். 

கடல்சார் பறவைகளின் வேட்டை முறைகள் ஆச்சரியமூட்டக்கூடியவை. ஒரே இடத்தில் ஒரே இரையைக் குறிவைத்தாலும் இவை வெவ்வேறு வேட்டை முறைகளைப் பயன்படுத்துகின்றன. ஒவ்வொரு வேட்டை முறைக்கும் ஏற்ப தகவமைப்புகளும் மாறுபடுகின்றன. சில நேரங்களில், ஒரு கடற்பறவையை உற்று கவனித்தாலே அதன் வேட்டை முறையைக் கணித்துவிடலாம். கடற்பறவைகள் நிலத்தில் இனப்பெருக்கம் செய்யும் பண்பு கொண்டவை. 95% கடற்பறவைகள் கூட்டமாகவே இனப்பெருக்கம் செய்கின்றன. பெரும்பாலான கடற்பறவைகள் ஆண்டுதோறும் ஒரே இடத்தில் இனப்பெருக்கம் செய்யக்கூடியவை. முதல்முறை இனப்பெருக்கம் செய்யும்போது, தாங்கள் பிறந்து வளர்ந்த அதே நிலப்பரப்பைத் தேடி வந்து முட்டையிடும் கடற்பறவைகளும் உண்டு. 

பென்குயின்கள், ஆலாக்கள், கூழைக்கடாக்கள், நாரைகள் போன்ற ஒவ்வொரு பறவை குடும்பத்தைப் பற்றியும் விரிவாகப் பேசவேண்டுமானால் தனித்தனிக் கட்டுரைகள் தேவைப்படும். அவற்றின் சூழலியல் அவ்வளவு சுவாரஸ்யமானது. உதாரணமாக வடமுனை ஆலா (Arctic tern) என்ற பறவையை எடுத்துக்கொள்ளலாம். பெயரைப் படித்தாலே இது ஆர்டிக் பனிப்பகுதியில் வாழும் பறவை என்பது தெரிந்துவிடும். அதிகபட்சம் 120 கிராம் எடை மட்டுமே வளரக்கூடிய இந்த சிறு பறவையின் வலசைப் பயணம் அலாதியானது. ஆர்டிக் பகுதியில் கோடைக்காலத்தில் இனப்பெருக்கம் செய்துவிட்டு வடமுனையிலிருந்து தென்முனையான அண்டார்டிக் பகுதி வரை இந்தப் பறவை வலசை போகிறது! இதனால் ஆர்டிக் மற்றும் அண்டார்டிக் ஆகிய இரு பகுதிகளின் கோடைக்காலத்தையும் இந்தப் பறவை அனுபவிக்கிறது. ஒட்டுமொத்தமாக ஒரு ஆண்டுக்கான வலசைப் பாதையைக் கணக்கிட்டால் சுமார் 95,000 கிலோமீட்டர் வரும். தன்னுடைய வாழ்நாளில் இந்த சிறு பறவை செல்லும் தூரத்தைக் கணக்கிட்டால் அது பூமியிலிருந்து நிலவுக்கு சென்று திரும்பிவரும் மூன்று பயணங்களின் தூரத்துக்குச் சமம்!

பல ஆண்டுகளாகவே மனித இனம் கடற்பறவைகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. அவற்றின் இறகுகளுக்காகவும் இறைச்சிக்காகவும் கடற்பறவைகள் வேட்டையாடி அழிக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக கடந்த சில தசாப்தங்களாகக் கடற்பறவைகளின் வீழ்ச்சி அதிகரித்திருக்கிறது. பல இனங்கள் அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. வெறும் அறுபதே ஆண்டுகளில் 69.7% கடற்பறவைகள் அழிந்துவிட்டன என்கிறது ஒரு ஆய்வு. 

2022ம் ஆண்டில் தெற்கு பசிபிக் பெருங்கடலில் New Caledonia Storm Petrel என்ற ஒரு கடற்பறவை இனத்தை மரபணு ஆராய்ச்சிக்கு உட்படுத்தினார்கள். இது வேறு இரு பறவை இனத்தின் வேறுபட்ட சிற்றினம் என்று விஞ்ஞானிகள் நினைத்திருந்தார்கள். மரபணு ஆராய்ச்சியின்போது இந்தப் பறவை இனத்தில் பல தனித்துவங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இது ஒரு தனி பறவை இனமாக அறிவிக்கப்பட்டது. ஆராய்ச்சியின் அடுத்த கட்டமாக இந்தப் பறவையின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டது. முடிவுகள் அதிர்ச்சியூட்டக்கூடியவையாக இருந்தன. இந்தப் பறவை இனத்தில் மொத்தமே 100 முதல் 1000 ஜோடிகள் மட்டுமே மீதம் இருந்தன! ஆகவே கண்டறியப்பட்ட அதே ஆண்டில் இந்தப் பறவை இனம் மிக அருகிய இனமாக (Critically Endangered) அறிவிக்கப்பட்டது! கடற்பறவைகளின் நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதை நாம் இந்த உதாரணத்தின்மூலம் புரிந்துகொள்ளலாம். 

கடற்பறவைகளின் வீழ்ச்சிக்கும் மீன்பிடித் தொழிலுக்கும் ஒரு முக்கியத் தொடர்பு உண்டு. ராட்சதக் கப்பல்களில் பிரம்மாண்ட வலைகளின்மூலம் தொடர்ந்து மீன்கள் பிடிக்கப்படும்போது மீன்களின் எண்ணிக்கை குறைகிறது. கடற்பறவைகள் கடல் உணவுகளை சாப்பிடுகின்றன என்பதால் மீன்கள் அழியும்போது கடற்பறவைகளுக்கு இரை கிடைக்காமல் போய்விடுகிறது. சிறு/குறு மீன்பிடித் தொழிலால் இந்தப் பிரச்சனை வருவதில்லை. Industrial fisheries எனப்படும் பெரிய அளவிலான மீன்பிடித் தொழில்களே இந்த பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இது மட்டுமில்லாமல் பெரிய வலைகள் மற்றும் மீன் கொக்கிகளில் தவறுதலாக மாட்டி (Accidental Bycatch) ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான கடற்பறவைகள் இறக்கின்றன.

மனிதர்கள் ஒரு தீவுப்பகுதிக்கு வரும்போது அவர்கள் கூடவே பல்வேறு விலங்குகளும் அந்த நிலப்பரப்பில் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இவ்வாறு அறிமுகப்படுத்தப்படும் விலங்குகள், அந்தத் தீவில் உள்ள உயிரிகளை மட்டுமல்லாமல், அங்கு இனப்பெருக்கம் செய்யும் கடற்பறவைகளையும் பாதிக்கின்றன. மனிதர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட நாய்கள், பூனைகள், எலிகள் ஆகியவை தீவுகளில் நுழைந்து கடற்பறவைகளின் குஞ்சுகளைத் தின்று அழிக்கின்றன. இது புதிய அச்சுறுத்தல் என்பதால் கடற்பறவைகளுக்கு இதை எப்படி எதிர்கொள்வது என்பதும் தெரிவதில்லை. 

இவை மட்டுமல்லாமல் கடல்நீர் மாசு, எண்ணெய்க் கசிவு, காலநிலை மாற்றம் ஆகியவையும் கடற்பறவைகளின் அழிவுக்குக் காரணமாக இருக்கின்றன. பனிப்பாறைகளை நம்பி வாழும் பென்குயின் போன்ற பறவைகள் காலநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமடைதலால் மிக அதிகமாக பாதிக்கப்படுகின்றன. வெப்ப அலைகள் அதிகமாகும்போதும் சராசரி வெப்பநிலை உச்சத்தைத் தொடும்போதும் இனப்பெருக்கத் தீவுகளில் பறவைகள் மொத்தமாக இறக்கின்றன (Mass deaths). உதாரணமாக, 2014ம் ஆண்டில் வடக்கு பசிபிக் கடலை ப்ளாப் என்ற வெப்ப அலை தாக்கியபோது 10 லட்சம் கடற்பறவைகள் இறந்தன. 2015ம் ஆண்டு கோடை காலத்தில் சராசரி வெப்பநிலை அதிகரித்தபோது அமெரிககவின் கடற்கரைகளில் கிட்டத்தட்ட 62000 முரே பறவைகள் இறந்தன. அறிமுகப்படுத்தப்பட்ட அயல் ஊடுருவி இனங்கள், மீன்பிடி வலைகள்/கொக்கிகளில் மாட்டி இறப்பது, காலநிலை மாற்றம் ஆகிய மூன்றுமே 66%க்கும் மேலான கடற்பறவை அழிவுக்குக் காரணம் என்கிறது ஒரு ஆய்வு.

2023ம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு அதிர்ச்சிகரமான ஆய்வுக்கட்டுரை வெளியிடப்பட்டது. கடற்பறவைகளில் ஒரு புதிய நோய் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக ஆய்வுக்குழுத் தலைவர் ஹேலி சார்ல்டன்-ஹவார்ட் அறிவித்தார். அந்த நோய்க்கு “Plasticosis” என்று பெயரிடப்பட்டது. கடலில் வேட்டையாடும்போது ப்ளாஸ்டிக்கையும் சேர்த்து விழுங்குவதால், கடற்பறவைகளின் வயிற்றுத் திசுக்களில் அழற்சியும் நார்த்தன்மையும் ஏற்படுகிறது என்று அந்த ஆய்வில் நிரூபிக்கப்பட்டது. வனவிலங்குகளில் ப்ளாஸ்டிக்கால் அழற்சி ஏற்படும் என்பதை நிரூபித்த முதல் ஆய்வு இது. இவ்வாறு அழற்சி ஏற்படுவதால் உணவு உட்கொள்வதிலும் அதை செரிப்பதிலும் பாதிப்பு ஏற்படும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். சில ஆண்டுகளுக்கு முன்பாக இறந்து கரை ஒதுங்கிய ஒரு கடற்பறவையின் வயிற்றில் ப்ளாஸ்டிக் பொருட்கள் நிரம்பி இருந்த புகைப்படம் வைரலானது பலருக்கு நினைவிருக்கலாம்.

அறுபது கோடி ஆண்டுகளாக இந்த பூமியில் வாழ்ந்து வெற்றிகரமாகத் தங்களை நிலைநிறுத்திக்கொண்ட கடற்பறவை இனங்கள் மனிதர்களால் ஏற்படும் மாற்றங்களைத் தாங்க முடியாமல் அழிந்துகொண்டிருக்கின்றன. கடற்பறவைகள் சந்திக்கும் பல பிரச்சனைகளுக்கு நம்மிடம் தீர்வு உண்டு. அதைப் பெரிய அளவில் உடனே செயல்படுத்தினால்போதும், அழிவைத் தடுத்துவிடலாம். 2030ம் ஆண்டுக்குள் நிலம் மற்றும் கடற்பகுதியில் 30% இடத்தைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிப்போம் என 2022ம் ஆண்டு உயிரிப் பல்வகைமை உச்சி மாநாட்டில் ஒருமித்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இவ்வாறு பாதுகாக்கப்படவேண்டிய இடங்களைத் தேர்ந்தெடுக்கும்போது கடற்பறவைகளையும் மனதில் வைத்து செயல்படவேண்டும் என்பதே சூழலியலாளர்களின் கோரிக்கை. மீன்பிடித் தொழில் மீதான கட்டுப்பாடுகள், தீவுகளைப் பாதுகாப்பது, காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் ஆகியவற்றை விரைவில் மேற்கொண்டால் கடற்பறவைகளின் அழிவைத் தடுக்க முடியும். 

தரவுகள்

  1. Biology of Marine Birds, E.A Schreiber and Joanna Burger, 2001.
  2. Vincent Bretagnolle et al, Fregetta lineata (Peale, 1848) is a valid extant species endemic to New Caledonia. Bulletin of British Ornithologists, 2022.
  3. Oro  and Martinez-Abrain. Ecology and Behaviour of seabirds. Marine Ecology. 2004.
  4. Hayley Charlton-Howard et al. Plasticosis:Characterising macro and microplastic associated fibrosis in seabird tissues, Journal of Hazardous Materials. 2023.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *