நூற்றாண்டுகளின் கலைஞன்

‘கிலுக்கம்’ மலையாளப் படம் . அதில் இன்னசன்ட் நடித்திருப்பார். திலகனுடைய வீட்டில் சமையல் செய்யும் பணியாள். அவரை அந்த வீட்டில் இருந்து அனுப்புவதற்கு மோகன்லாலும் ரேவதியும் திட்டம் போடுவார்கள். இன்னசன்ட் வாங்கிய லாட்டரி டிக்கெட்டுக்கு பரிசு விழுந்ததாக அவரிடம் பொய் சொல்லச் சொல்லிவிடுவார் மோகன்லால். ரேவதியும் மறுநாள் காலையில் செய்தித்தாளை எடுத்துக் கொண்டு வந்து உட்காருவார். துணி காயப் போட்டுக் கொண்டிருக்கும் பாவம் போல துணி காயப்போட்டுக் கொண்டிருக்கும் இன்னசன்ட் முன்பாக அமர்ந்து லாட்டரி டிக்கெட்டில் யாருக்கு முதல் பரிசு என்று சொல்லப்போகிறேன் என்று  லாட்டரி சீட்டின் எண்களைச் சொல்ல ஆரம்பிக்க, அதற்கான ஷாட் முழுவதும் இன்னசன்ட் முகத்துக்குத் தான். மனிதர் அசத்தியிருப்பார். ஒவ்வொரு எண்ணாக சொல்லச் சொல்ல, அவர் முகம் போகும் போக்கைப் பார்க்க வேண்டும். தனக்குத் தான் பரிசு என்றதும், “கிட்டி மோளே..எனிக்கு ப்ரைஸ் கிட்டி’ என்று தொப்பென்று கீழே விழுவார். விழுந்ததும் படுத்துக் கொண்டே சிரிப்பார்.. சிரித்துக் கொண்டே படுப்பார்.. நிமிர்ந்து ஒரு சிரிப்பு.. அதோடு பின்பு நேராக திலகனிடம் சென்று அத்தனை வருட கொதிப்பையும் காட்டுவார், “ஒரு கோட்டும், சூட்டும் போட்டுட்டு வாயில குச்சியை வச்சு புகையை இழுத்து இழுத்து விட்டு, காருல சாஞ்சு உக்கார்ந்து போனா..அது பெரிய மனுஷத்தனம் இல்ல..வேலைக்காரங்ககிட்ட எப்படி நடந்துக்கணும்னு தெரியனும்..அது இனி நான் உங்களுக்குக் கத்துத் தர்றேன்” என்று ஆரம்பிப்பார். அவர் சொல்கிற தோரணையும் வேலையை விட்டுப் போகப்போகிற அந்தக் கர்வமும்..ஜன்னலுக்கு ஜன்னல் நின்று குதித்து திலகனிடம் அவர் வாயாடுவதும்..லாட்டரியில் சீட்டு விழாத ஒருவர் செய்யும் அலப்பறைகளைப்  பார்த்து .திரையரங்கே விழுந்து விழுந்து சிரித்தது இன்னும் நினைவில் இருக்கிறது. இத்தனைக்கும் அது அச்சு அசல் திருநெல்வேலி கிராம மக்கள் கூடிக் களித்த சிவசக்தி திரையரங்கில். மொழி யாருக்கு வேண்டும் இன்னசன்ட் நடிக்கையில்? அவர் முக பாவம் ஒன்றே நமக்கு எல்லாவற்றையும் சொல்லிவிடும்..மொழியை அவர் கையாளும் விதத்திற்காக வேண்டுமானால் மலையாளத்தைக் கற்றுக்கொண்டு கூடுதலாக சிரிக்கலாம்.ஆனால் அவர் வரும் காட்சிக்கு குழந்தைகளுக்கும் சிரிப்பு நிச்சயம்.

முன்பெல்லாம் படங்களின் நகைச்சுவைக் காட்சிகளைத் தனியாக கேசட்டில் பதிவு செய்து விற்பனை செய்வார்கள். அதனைக் கேட்டபடி சிரிக்கலாம். ஆனால் இன்னசன்ட் நடிக்கையில் நாம் கேட்பதை விட பார்க்க வேண்டும். நிமிடத்துக்கு நிமிடம் மாறும் அவரின் முக பாவனைகள்.ஒரு நொடி விட்டால் கூட எதையோ இழந்து விட்டோமோ என்று தோன்றும்படியான முக பாவனைகள். ‘ராமோஜி ராவ் ஸ்பீக்கிங்’ படத்தில் அவர் நாடக கம்பெனியில் தாங்கிக்கொள்ள ஒருவர் கேட்டு வருவார். முதலில் மறுத்துவிடுவார் “நான் என்ன சத்திரமா நடத்திட்டு இருக்கேன்.படா வெளியே” என்பார். “நீங்க நல்லவர்னு ஊர்ல பேசிக்கிறாங்க” என்றதும் ஒரு பாவனை தருவார்,அது தான் இன்னசன்ட்.இதனை எந்தக் கேசட்டில் கேட்டு சிரிக்க முடியும்.பார்த்து தான்  களிக்க வேண்டும்.

இது மட்டுமல்ல, அவர் ஏற்று நடித்த எல்லாக் கதாபாத்திரங்களிலும் அவர் தான் கண்ட மனிதர்களைக் கொண்டு வந்துவிடுகிறார். ஒரு படத்தில் அவர் ஏற்று நடித்த பாதிரியார் வேடத்துக்கு தான் சந்தித்த ஒரு பாதிரியார் தான் முன்மாதிரியாக இருந்தார் என்று நேர்காணல்களில் சொல்லியிருக்கிறார். சுற்றியுள்ள மனிதர்கள் எவரையும் உள்வாங்கும் அவரது திறன் தான் ஒவ்வொரு படத்திலும் அவரிடமிருந்து வெளிவந்திருக்கிறது.

பள்ளி ஆசிரியர், மருத்துவர், போலிஸ், வீட்டு புரோக்கர், திருடன், குடிகாரத் தந்தை, பக்திமான் , அரசியல்வாதி, மூத்த அண்ணன், ரவுடி  என இந்த சமூகத்தின் எல்லா அடுக்குகளிலும் உள்ள மனிதர்களைத் திரையில் அவர் காட்டிய விதம்.இந்த எல்லா மனிதர்களுக்கும் ஒளிந்திருக்கும் நகைச்சுவையை அவர் வெளிப்படுத்திய விதம் தான் தொடர்ந்து அவரைக் குறித்து பேசவும் எழுதவும் வைக்கிறது. பொதுவாக பிரபலமான நடிகர் நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் மக்களின் மனதில் தங்கிவிடும். அபூர்வமாகத் தான் மற்ற நடிகர்களின் கதாபாத்திர பெயர்களை நினைவு வைத்திருப்பார்கள். இன்னசன்ட் எந்தக் கதாபாத்திரத்தில் நடித்தாலும் அந்தப் பாத்திரத்தின் பெயரை நிலை நிறுத்திவிடுவார். “லாசர் முதலாளி’, “மனார் மத்தாய்’, ‘கிட்டுண்ணி’ ‘சுவாமிநாதன்’ ‘பொஞ்சிக்கரா கேசவன்’ என நீளும் இந்தப் பெயர்களின் பின்புலமாக இருக்கும் படங்களும் அதன் காட்சிகளும் அவரை நித்தியமானவராக ஆக்கியிருக்கிறது.

திருச்சூர் வட்டார மொழியை இவரளவுக்கு சுவாசித்தவரும், ‘டைமிங்’ல் பேசியவரும் வேறு ஒருவர் இருக்க முடியுமா என்பது சந்தேகமே. இன்றைய நவீன  காலத்தில் ஒவ்வொரு வட்டாரத்திலும் புழங்கும் மொழிகள் பொதுத் தன்மையினை நோக்கிச் சென்று கொண்டிருக்கையில் தான் வாழ்ந்த பிரதேசத்தின் மொழியழகை இன்னசன்ட் போன்றவர்கள் நிலை பெறச் செய்து விடுகிறார்கள். அந்த மொழிக்கே உண்டான ஒரு இழுவையும், கார்வையும், லயமும், பட்டென்று தெறிக்கும் நக்கலும் அங்குள்ள மனிதர்களின் உடல்மொழியையும் அப்படியே பிரதிபலித்தவர் அவர். அவரே சொல்வது போல “மனிதர்களை அவர் நேசித்த விதம்’ தான் இப்படி அவருக்குள் வெவ்வேறு ரூபமாய் வெளிப்பட்டிருக்கிறது.

‘மனசினக்கர’ படத்தில் ஒரு குடிகாரத்  தந்தை அவர். மகன் வேடத்தில் ஜெயராம் நடித்திருந்தார். இருவரும் பேருந்தில் வருவார்கள். இன்னசன்ட் திடிரென உணர்ச்சிவசப்பட்டு, “மகனே..நான் பொறுப்பற்ற ஒரு அப்பா..உங்க அம்மச்சியை எனக்கு கட்டிக் குடுக்கும்போது எல்லாரும் கிளியை வளர்த்து குரங்கு கையில தர்ற மாதிரி’ னு சொன்னாங்க. அது செரியாப்போச்சு மகனே..” என்று வருத்தப்படுவார். பேருந்தில் இடுக்கிக் கொண்டு உட்கார்ந்திருக்கும் அந்த இடத்தில் உடல்மொழியைக் காட்டி அழ வைக்க முடியாத காட்சி அது. ஆனால் உருக வைத்துவிடுவார். பொறுப்பற்ற ஒரு அப்பாவாக அவர் அதற்கு முன்பு செய்த அட்டகாசங்கள் எல்லாம் மறந்து போய் நமக்கே அவரைப் பார்க்க கஷ்டமாகிவிடும். அப்படி ஒரு அற்புதமான மனவெளிப்பாடு அது. அடுத்த நிமிடம் மகன் அவரை கள்ளுக்கடைக்கு அழைத்து போய் “இஷ்டத்துக்கு குடி அச்சா” என்பார். உடனேயே அவர் முகம் மாறிவிடும். பேருந்தில் உருகியவரா அவர் என்றிருக்கும். மகனும் அன்று கள்ளு குடிக்க பக்கத்தில் உட்கார்ந்து முதன்முதலாக பள்ளிக்கூடப் பாடம் படிக்கும் மகனைப் பார்க்கும் கர்வத்தோடு பார்ப்பார். “என் பையனாக்கும்” என்பார் பெருமையாக கடையில் இருப்பவர்களிடம். இந்தப் படத்தில் தவற விடக்கூடாத, மலையாள திரைபப்டத்தின் கிளாசிக் நகைச்சுவைக்க் ஆட்சிகளில் ஒன்று, இன்னசன்ட் ரோட்டு ஓரத்தில் அமர்ந்து அரசியல் கட்சியின் கூட்டத்தை வேடிக்கைப் பார்ப்பது. கலைஞர்கள் சில நேரங்களில் உருவாக்கப்படுவார்கள். இன்னசன்ட் உருவாகியே வந்தவர்.

இன்னசென்ட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தவர். அந்த நாட்களைக் குறித்து அவர் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். ஒரு படத்தில் பாதிரியாராக நடித்துக் கொண்டிருந்தபோது ஆறு பக்க வசனத்தை அவர் ஒரே டேக்கில் சொல்ல வேண்டும். அப்படி நடிப்பதற்கு போய் நின்றபோது தான் அவருக்கு புற்றுநோய்க்கான பரிசோதனை முடிவு தெரிய வந்திருக்கிறது. தனக்கு நோய் பற்றிக்கொண்டது என்று தெரிய வந்ததும் முதலில் செய்தது குறைவுபடாமல் காட்சியை நடித்துக் கொடுத்தது தான். மனம் முழுக்க வெறுமையும், வேதனையும் நிரம்பிகொள்ள தான் தங்கியிருந்த இடத்துக்கு காரில்  வந்தபோது அவர் கூடவே கல்லூரி மாணவிகள் பயணம் செய்த ஒரு சுற்றுலாப் பேருந்து வருகிறது. அவர்கள் எல்லோரும் தலைகளை வெளியே நீட்டி ‘இன்னசன்ட்’ என்று கத்திக் கும்மாளமிடுகிறார்கள். அவர் நடித்த கதாபாத்திரங்களின் பெயர்களை உற்சாகத்தில்  சொல்கிறார்கள்.  தான் ஏற்படுத்தித் தந்த உற்சாகத்தின் வெளிப்பாட்டின் முன்னால் ஒரு சோக காவியமாகத் தான் வெற்றுக் கண்களோடு அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்ததை எழுதியிருக்கிறார்.

சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றிருந்தபோது மற்ற நோயாளிகளும் அவர்களது சொந்தக்கரார்களும் நகைச்சுவையே நடந்து வருகிறார்போல சிரித்ததை அவர் நினைவு கூர்ந்து ‘நகைச்சுவைக் கலைஞர்களுக்கான சாபம் இது. நாங்கள் எப்போதுமே உற்சாக பெரு ஊற்றாய் இருப்போம் என்றே எல்லாரும் நினைக்கிறார்கள்” என்கிறார். ஆனால் இது தான் அவரை நோயில் இருந்து வெளிக்கொண்டு வர உதவியிருக்கிறது.

தொடர்ந்த கீமோ சிகிச்சையினால் முடிகள் உதிர்ந்து உடல் மெலிந்து கன்னங்கள் ஒட்டிப் போய் பார்க்கவே அடையாளம் தெரியாத ஒருவராய் அவர் இருந்தபோது யாரும் தன்னைப் பார்க்கலாகாது என தனியறையில் இருந்திருக்கிறார். அதையும் மீறி தன்னைப் பார்க்க ஏவரேனும் வந்தால் தனக்கென செய்யப்பட்டிருந்த ‘விக்’கினை மாட்டிக்கொண்டு, பவுடர் போட்டுக் கொண்டு இறுக்கமான சட்டையை அணிந்தபடி வந்து அமர்ந்த கோலத்தையும் சொல்கிறார். ஒரு நடிகனுக்கு வரக்கூடாத வியாதி இது என்கிறார்.

வீட்டில் எவரும் தன் முன்னால் அழக்கூடாது என்று கட்டளையிட்டு கண்ணாடி முன்பாக நின்று தன்னைப் பார்த்து அழும் நிலைக்குத் தள்ளப்பட்டதை அவர் எழுதியிருக்கிறார். அதே நேரம் சோகப்படுவதில் என்ன இருக்கிறது, சிரித்தபடி இந்த நிலையைக் கடக்க முடியாதா என்று உள்ளுக்குள் ஏற்பட்ட தீர்மானம்  தான் அவரை இந்தப் புத்தகம் எழுத வைத்திருக்கிறது. அவர் நினைத்ததை அவர் சாதித்தார். எந்த வேதனையிலும், வலியிலும் மனிதனால் அதில் உள்ள மற்றொரு கோணத்தினைப் பார்க்க முடியும், அதிலும் மனிதன் எதிலும் நகைச்சுவை உணர்வினை எடுத்துக் கொள்ள முடியும்..இதைத் தானே படங்களில் நாம் செய்திருக்கிறோம் என்கிற எண்ணம் வர அவர் நோய் அவரை விட்டு விலகத் தொடங்கியிருக்கிறது.

அந்த நேரத்தில் அவரைத் தேடி ஒரு அரசியல்வாதி வீட்டுக்கு வந்திருக்கிறார். அவர் கிளம்புகையில் “எல்லாம் சரியாகிவிடும்” என்று சொல்ல, இன்னசன்ட் அதற்கு “ஆமா..அந்த அம்மாவும் அந்தப் பையனும் வந்துவிட்டால்.வந்து பார்ப்பவர்களின் கணக்குத்  தீர்ந்தது என நோயும் போய் விடும்”

“அப்படியா? அது யார் அந்த அம்மாவும் மகனும்?”

“அது தான். நம்ம எம்பி ராகுலும். அவருடைய அம்மை சோனியாவும்”

இன்னசன்ட்டின் ஊரான இரிஞ்சலக்குடாவில் தான் அவர் குடும்பத்துடன்  வாழ்ந்து கொண்டிருந்தார். அங்கு அவருக்கு பழக்கமான ஒரு பூக்கடைக்காரர் இருக்கிறார். அவரைக் குறித்து தனது புத்தகத்தில் எழுதியிருக்கிறார். பூக்கடைக்காரருக்கு பக்கத்து கடை ஒரு பழக்கடைக்காரருடையது.

 இன்னசென்ட்டைப் பார்க்க வருபவர்கள் அவருக்கு பழங்கள் வாங்க அந்தக் கடைக்குத் தான் வருவார்கள். பழக்கடையில் நல்ல வியாபரம். போகிற போக்கினால், புற்றுநோய்க்கு இந்த பழம் தான் தரவேண்டும் என்று கடைக்காரர் வந்தவர்களிடம் எல்லாம் புதுப் புது ‘ஐட்டங்களாக’ விற்றுக் கொண்டிருக்கிறார். ‘இன்னசன்ட் சேட்டாவுக்கு இந்தப் பழமென்றால் இஷ்டம்’ என்று வேறு ஒரு வியாபாரம். இதனைப் பொறுத்து பொறுத்து பார்த்த பூக்கடைக்கரருக்கு ஒரே எரிச்சல். ஒருநாள் இரவு கள்ளுக் கடை ஷாப்புக்கு போய் முழுதாக ஏற்றிக் கொண்டு வந்து பழக்கடையின் முன் நின்று பூக்கடைக்காரர் சொல்கிறார் “ஆணவத்துல ஆடாதடா!! இத்தனை நாள் உன்னோட வியாபாரமும் ஒரே நாள்ல எனக்கு கணக்கைத்  தீர்த்திடும்”. அதோடு மட்டுமல்லாமல் எப்போது இன்னசன்ட்டுக்கு நோய் என்று தெரிய வந்ததோ அதிலிருந்து பூக்கடைக்காரர் கடையை அடைப்பதேயில்லை என்கிறார் இன்னசன்ட். ஒருநாள் வேறு வழியில்லாமல் மகன்களுக்கு மொட்டையடிக்க பழனி போன பூக்கடைகக்ரர் மறுநாள் மதியமே அவசரமாக ஊருக்குத் திரும்பியிருக்கிறார். வந்த அவருக்கு அதிர்ச்சி. பேருந்தில் இருந்து இறங்கும்போது ஒரு மரண ஊர்வலம் சென்றிருக்கிறது. அதிலும் கிறித்தவ முறைப்படியான ஊர்வலம். உடைந்து போய்விட்டாராம் பூக்கடைக்காரர். ‘இப்படி ஏமாற்றி விட்டாரே இன்னசன்ட்’ என்று புலம்பிக் கொண்டே  ஒரு கடையின் மீதேறி பூத உடலை பார்த்திருக்கிறார். “தெய்வமே…இன்னசன்ட் என்னை ஏமாற்றமாட்டார்’ என்று கடையில் இருந்து இறங்கி பெருமிதமாக சொல்லியிருக்கிறார்.

இதனை இன்னசென்ட் சிரிக்க சிரிக்க எழுதியிருக்கிறார். உண்மையில் அவர் தனது நோயினால் கடந்த எல்லாவற்றையுமே வெளிச்சமானதாகவே பார்க்கத் தொடங்கியிருந்தார். புற்றுநோய் குணமாகி அவர் பழைய நிலைக்குத் திரும்பியதும் மறக்காமல் அந்தப் பூக்கடைக்காரருக்காக அனுதாபமும் பட்டிருக்கிறார்.

வாழ்க்கை குறித்த மாபெரும் தத்துவங்களும், உத்வேகமும் நாம் சார்லி சாப்ளினின் வார்த்தைகளில் இருந்து பெற முடியும். அவருடைய படங்களின் வகைமை சிரிப்பூட்டுவதாக இருந்தாலும் அதற்குள் அவர் வைத்திருக்கும் யதார்த்தமும், பேருண்மையும் தான் காலத்துக்கும் நிலைத்து நிற்கிறது. வலியையும் தோல்வியையும் ஒரு சுமையாக நினைக்காமல் ‘அதுவா வருது…அதுவே போகும்’ என்கிற மனநிலையில் இருப்பவரால் தான் சிரிக்க சிரிக்க சொல்ல முடிந்திருக்கிறது.

இன்னசன்ட்டின் திரை வாழ்க்கையைக் கடந்து அவர் தன்னுடைய உடலோடும், நோயோடும் போராடிய அந்தக் கணங்களை எடுத்து வைப்பதில் காட்டிய அந்த நுணுக்கம் என்பது வெறும் சம்பவங்களால் ஆனது அல்ல..ஒரு பாடத்தை சொல்லித் தந்து போயிருக்கிறார். வாழ்க்கை ஒரு பிரார்த்தனை என்பதை அவர் ஒவ்வொரு மணித்துளியும் உணர்ந்ததை நம் முன் காட்டியிருக்கிறார். சிலரை இந்த விதி இதற்காகவே தேர்ந்தெடுக்கும். நமது கடினங்களையும், துயரங்களையும் மறக்க வேண்டி சிரிப்பு காட்டியதைத் தாண்டி ‘உனக்கு ஒரு கடமை இருக்கிறது இனசென்ட்..; என்றே நோயினை இந்த விதி அவருக்கு பரிசளித்திருக்க வேண்டும். அதை புரிந்து கொண்டே நோயில் இருந்து மீண்டதும் அவர் அதிகமும் புற்றுநோய் குறித்தல்ல, அதில் இருந்து மீள முடியும் என்று செல்லும் இடங்களில் எல்லாம் ஓயாமல் சொல்லிக் கொண்டிருந்தார்.

அவர் பேசியதில் எல்லாம் இருந்து நாம் நோய் என்கிற வார்த்தைய நீக்கிவிட்டு வறுமை, முதுமை என எதைக் கொண்டும் நிரப்பிக் கொள்ளலாம். எல்லாவற்றுக்கும் சேர்த்து பேசிவிட்டுப் போயிருக்கிறார்.

அவருக்காக காத்திருந்த இயக்குனர்கள் அநேகம் பேர் மலையாளத் திரையுலகில் உண்டு. இன்னசன்ட் மட்டுமே இந்தக் கதாபாத்திரத்துக்கு சரியாக வருவார் என அவருடைய கால்ஷீட்டுக்காக தள்ளிப் போன படங்கள் உண்டு. இன்று ஒவ்வொரு படங்களாகப் பார்க்கும்போது தான் எத்தனை உயர்ந்த விஸ்வரூபத்தினை அவர் தந்திருக்கிறார் என்று புரிகிறது. இன்னும் ஐம்பது, நூறு வருடங்கள் கடந்து இவர் நடித்தப் படங்களைப் பார்க்கும் தலைமுறையினர் தங்களின் முன்னோர்களின் சாயல்களையே அதில் பார்ப்பார்கள். ‘என் அச்சனுடைய அச்சன் இப்படித் தான இருந்திருக்க முடியும்’ என்றும் நமது மண்ணில் இப்படியான கதாபாத்திரங்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதும்  அவர்களுக்கு புரியும்.

கதாநாயகர்கள் யாருக்கும் அவ்வல்வுய் எளிதாகக் கிடைக்காத வரம் இது. மனிதர்களை அப்படியே திரையில் காட்டியதில் இன்னசன்ட் செய்திருக்கிற சாதனை இப்போது அல்ல, இனி வரும் காலத்தில் தான் பேசப்பட உள்ளது.

இன்னசன்ட் போன்ற ஒரு நடிகர் நம்மை விட்டு நீங்கும்போது இனி அவர் ஏற்று நடிக்கவிருந்த கதாபத்திரங்கள் வேறு முகமின்றி தவிப்பதே அவர் இத்தனை வருட காலங்கள் நம்மை அவர் ஈர்த்ததற்கு சான்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *