நிறுவனப் படுகொலைக்கு “நீதி கேட்கும் ஜன கண மன”

சமகால கலை வடிவங்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதில் திரைப்படங்கள் தொடர்ந்து முதன்மையானது.

கலை கலைக்காகவே என்பதும் கலை மக்களுக்காகவே என்பதும் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு கொண்டிருப்பதும் அறிந்ததே. ஆனால் பண்பாட்டு கலாச்சார தளத்திலும் வணிக தளத்திலும் திரைப்படங்கள் சமகாலத்தில் எவ்வாறு மக்களின் உளவியலை கட்டமைக்கின்றன என்பதை பேசு பொருள் ஆக்குவது அவசியம். ஏனெனில் இரு நண்பர்களின் தேநீர் கடை விவாதத்தில் கூட ஐந்தாவது நிமிடத்தில் திரைப்படங்கள் வந்து அமர்ந்து கொள்கின்றன. இவ்வாறான சமூக சூழலில் சமகாலத்தில் என்ன வகையான பேசுபொருளை திரைப்படங்கள் கையாளுகின்றன என்பது முக்கியமானது.

 காலங்காலமாக கலை இலக்கிய வடிவங்களில் சமகாலத்தை பேசுவதை ஒரு பிரிவினர் கலை வடிவமாகவே கொள்வதில்லை. அவர்களைப் பொறுத்தவரை தனிமனித ஆற்றாமைகளை, துரோகங்களை, பெருமிதங்களை ,அகமன உணர்வுகளை பேசுவது, உருகி உருகி இழைப்பதே கலை அதில் எந்த சமூக அரசியலுக்கும் இடமில்லை. திரைப்படங்களிலும் இதன் தொடர்ச்சியை காண முடியும் . குடும்ப  உறவுகளின் சிக்கலை, காதலை பண்ணையார்களின் பெருமிதத்தை, ராஜாக்களின் பரிபாலனத்தை என காட்சிப்படுத்தி உச்சுக்கொட்ட வைத்த வரலாறும் நமக்கு இருக்கிறது. இவற்றிலிருந்து வேறுபட்டு சமகால வாழ்வியல் பாடுகளை பேசும் கலை வடிவங்களே மக்களுக்கானவை அப்படியான ஒரு திரைப்படம் தான் மலையாளத்தில் 2022-ல் வெளியான ஜன கண மன.

 சில ஆண்டுகளாகவே இந்திய உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகளை செய்தித்தாள்களில் கண்டு கடந்து சென்றிருக்கிறோம். இதுவரை எந்த தற்கொலைக்குப் பின்பும் அப்பட்டமாய் ஒளிந்து நிற்கும் உண்மைகளை சமூகம் உணர தயாராக இல்லை. ஊடகங்களோ அரசோ நீதித்துறையோ அதில் ஆர்வம் காட்டுவதும் இல்லை. ஏனெனில் இவை தற்கொலைகள் இல்லை “நிறுவனப்படுகொலைகள்”

 ரோகித் வெமுலாவும், பாத்திமாவும், முத்துக்கிருஷ்ணனும் மிகச் சமீபத்தில் இந்திய உயர் கல்வி நிறுவனங்களில் நிலவும் பாகுபாடுகளால் நிறுவன படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டவர்கள். இவ்வாறான ஒரு நிறுவன படுகொலையின் பின்னர் நிகழும் சம்பவங்களை கோர்த்து அற்புதமான அரசியல் திரைக்கதை உருவாக்கி இருக்கிறார் இப்படத்தின் திரைக்கதை ஆசிரியர் “ஷரிஷ் முகமத்” இயக்கம் டிஜு ஜோஸ் ஆண்டனி.

கர்நாடகாவில் உள்ள ஒரு மத்திய பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பெண் பேராசிரியர் ஒருவர் கொல்லப்படுகிறார். சாலை விபத்தாக கொல்லப்பட்டவரை பாலியல் வல்லுறவால் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டதாக மாற்றி ஊடகங்களும் அரசியல்வாதிகளும் தேசிய செய்தியாக்கி அரசியல் ஆதாயம் அடைகின்றனர். இந்த கொடூரங்களை வழக்கறிஞராக வந்து அம்பலப்படுத்துகிறார் பிரித்விராஜ்

ஒரு பெண் எரித்துக் கொல்லப்பட்ட செய்தி தேசிய நாளேடுகளிலும் காட்சி ஊடகங்களிலும் முதன்மை செய்தியாக விவாதிக்கப்படுகிறது. பாலியல் வல்லுறவாக்கி எரிக்கப்பட்டதாக சொல்லப்பட்டதால் உணர்ச்சி கொந்தளிப்பான செய்தியாக மாறுகிறது. பொது சமூகம் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கொந்தளிக்கிறது. ஒரு நல்ல பேராசிரியரை இழந்ததால் மாணவ சமுதாயமும் வீதிக்கு வருகிறது. காவல்துறையின் தீவிர விசாரணையில் நான்கு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு என்கவுண்டர் செய்யப்படுகின்றனர். நாடு முழுவதும் காவல்துறைக்கு பாராட்டுகளும் பூங்கொத்துகளும் குவிக்கின்றன. கெட்டவன் தண்டிக்கப்பட்டதாக பொது சமூகம் இயல்பு நிலைக்கு திரும்புகிறது. நிஜ வாழ்க்கையிலும் இதைத்தான் பொது சமூகம் விரும்புகிறது. மக்கள் விரும்புவதை செய்வது அதிகார வர்க்கத்திற்கு மிக எளிதாக மாறுகிறது. போலி என்கவுண்டர்களை விதந்தோதுவதன் விளைவை படம் மிக எதார்த்தமாக தோலுரிக்கிறது. சில நாட்களுக்கு முன்னர் தெலுங்கானாவில் ஒரு மருத்துவர் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகிறார். நாடு முழுவதும் பதட்டம் அடைகிறது. உடனே நீதி கிடைக்க வேண்டுமென சமூக ஊடகங்கள் ரத்தக்களரியானது. இரண்டே நாட்களில் யாரோ நான்கு பேரை காவல்துறை சுட்டுக்கொன்று, இவர்கள் தான் பாலியல் வல்லுறவாளர்கள் என்று சொன்னது. மக்கள் காவல் தெய்வமாக காவல்துறையை  கொண்டாடினர்.  பின்னர் கொல்லப்பட்டவர்கள் அப்பாவிகள் என நீதிமன்றத்தில் மனித உரிமை அமைப்புகள் மூலம் சொல்லப்பட்டது. இந்த நிஜ  சம்பவத்தை தான் அதன் பின்  காவல்துறையினர் எழுதிய அற்புதமான திரைக்கதையைத் தான் படத்திலும் பயன்படுத்தியுள்ளனர். அதனால்தான் இப்படம் உண்மைக்கு மிக நெருக்கமாக அமர்ந்து கொள்கிறது .

ஷபா மரியம் என்கிற மாணவர் நலனில் உண்மையான அக்கறையான பேராசிரியர் கொல்லப்படுகிறார்.ஏன் கொல்லப்படுகிறார் என்பதை இட ஒதுக்கீட்டை கேவலமாகப் பார்க்கும் மனநிலையில் உள்ள ஒவ்வொருவரும் அவசியம் கூர்ந்து நோக்க வேண்டும். குறிப்பாக இட ஒதுக்கீடு பெற்று அரசு பணிகளில் இருப்போரும் இட ஒதுக்கீடு பெற்று படித்து வேலை கிடைத்து தங்களை”மெரிட்டோரியசாக” நினைத்துக் கொண்டிருப்போரும் ஷபா மரியம் என்ற பேராசிரியர் கொலைக்குப்பின் ஆண்டாண்டு காலமாய் ஊறி கிடக்கும் சாதிய மனோபாவத்தை புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.கிராம புற மாணவர்களுக்கு அதிலும் சமூக அடுக்கில் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்டு இருக்கின்ற மாணவர்களுக்கு வாழ்வில் முன்னேற இங்கு கல்விதான் முதன்மை ஆயுதம். மற்ற மாணவர்களுக்கு எளிமையாக நடந்தேறும் சில விஷயங்கள் கூட, சாதியால் படிநிலையில் கீழ் நிலையில் வைக்கப்பட்ட பிரிவினருக்கு எளிதில் கிடைப்பதில்லை.உயர் கல்வி நிறுவனங்களில் இத்தகைய மாணவர்கள் நுழைவதில் அறியாமை தொடங்கி ஆங்கில வழிக் கல்விச் சிக்கல் ,பொருளாதார சூழல் முதலான பல்வேறு தடைகள் நிலவுவதை நாம் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். இவற்றையும் மீறி ஒரு மாணவர் படிப்பதற்கு அனுமதி பெறுகிறார் எனில் படித்து  முடிப்பதற்குள் அந்த நிறுவன வளாகத்திற்குள் எதிர்கொள்ளும் உளவியல் தாக்குதல்கள் கொடூரமானவை

 உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் அனைத்து சாதியினரும் சேர்ந்து படிப்பதற்கு இன்றைக்கு இட ஒதுக்கீட்டு இடங்கள் இருப்பதை நாம் அறிவோம். ஆனால் காலங்காலமாய் கற்பிக்கும் இடத்தில் இருக்கக்கூடிய கனவான்களின் அதிகாரங்கள் குறுநில மன்னர்களுக்கு உரியது. கற்பிக்கின்ற பேராசிரியர்களுக்கும் இட ஒதுக்கீடு இருக்கும் தானே என்று நீங்கள் நினைத்தால் அந்த அறியாமையை போக்க முயற்சி செய்யுங்கள். ஏனெனில், இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு உரிய பணியிடங்கள் அவர்களில் தகுதியானவர்கள் யாரும் இல்லை எனக் கூறி உயர் சாதியினருக்கு மடைமாற்றப்படுகிறது.விளைவு சாதிய மேலாதிக்க மனோபாவம் கொண்ட உயர் சாதி பேராசிரியர்கள் அவ்விடங்களில் நியமிக்கப்படுகிறார்கள். அவர்கள் சமூகநீதியா பேசுவார்கள் ?

ஜன கண மன திரைப்படத்தில் இப்படியான ஒரு மாணவி ஏழு ஆண்டுகள் பாடுபட்டு முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்கிறார். வருணாசிரமம் மனோபாவம் கொண்ட பேராசிரியர் அவரவர் அவரவர்க்குரிய குலத் தொழிலையே செய்ய வேண்டும் என்ற பொருண்மையில் அந்த ஆய்வு மாணவிக்கு வகுப்பு எடுக்கிறார். நிஜத்தில் நம் நாட்டில் உயர் கல்வி நிறுவன வளாக அழுத்தம் தாளாமல் தற்கொலை செய்யும் மாணவர்களைப் போல் தற்கொலை செய்து கொள்கிறார்

 அந்த மாணவி வழியறியாது சாவுக்குக் காரணமான பேராசிரியரின் பெயர் எழுதி வைத்து இறந்து போகிறார் . நிஜத்தில் சென்னை ஐஐடியில் பாத்திமா என்ற மாணவி “என் பெயரே எனக்கு பிரச்சனை” என்று எழுதி வைத்து இறந்து போனதை நினைவில் கொள்க.

 மாணவியின் இறப்புக்கு நியாயம் கேட்கும் சக பேராசிரியரான ஷபா மரியம் (மம்தா மோகன்தாஸ்) மாணவியின் இறப்புக்கு காரணமான அதே பேராசிரியரால் கருணை இன்றி சாலையில் கார் ஏற்றி கொல்லப்படுகிறார் ஒரு சாதாரண சாலை விபத்து எப்படி மறுநாள் தேசிய செய்தியாக மாற்றப்படுகிறது என்பதும், ஏன் மாற்றப்படுகிறது என்பதும் சிறப்பான திரைக்கதை நேர்த்தி .

பெண்ணை தெய்வமாக வணங்குவதாக சொல்லப்படும் இதே நிலத்தில்தான் பெண்பற்றிய செய்தியை எப்படி திரித்துச் சொன்னால் உணர்ச்சியைத் தூண்ட முடியும் என்பதை ஆளும் வர்க்கம் அறிந்திருக்கிறது. கொல்லப்பட்ட பேராசிரியரின் போஸ்ட்மார்ட அறிக்கை மறுநாள் மதியம் கிடைக்கிறது. முதல் நாள் இரவே அச்சிடப்படும் செய்தித்தாளில் இளம் பெண் பாலியல் வல்லுறவாக்கப்பட்டு எரித்துக் கொலை என செய்தி வருகிறது நாடு முழுவதும் பேசு பொருளாகிறது.

ஊடகங்கள் சொல்வதே இங்கே உண்மை. என்கவுண்டர் செய்யும் காவல்துறையே நீதிக்கு போதுமானது என்ற அதிவேக மனநிலையை பொது சமூகம் ஏற்க பழகிவிட்டது. விளைவு உண்மை யாரும் கண்டுகொள்ள விருப்பமின்றி அனாதை ஆக்கப்படுகிறது.

இந்த உண்மைகளை வெளிக்கொணரும் வழக்கறிஞராக பிரித்விராஜ் தோன்றுகிறார்.

எல்லாவற்றையும் அம்பலப்படுத்துகிறார் நீதிபதியின் மனநிலை வரை பதிந்து போயிருக்கும் பொது புத்தியினை வெளிச்சம் ஆக்குகிறார்.

பாகுபலிகளும், பொன்னியின் செல்வங்களும் கோலோச்சும் திரையுலகில் சமகால அரசியலை காட்சிக்கு காட்சி வடிவமைத்திருக்கிறார் இயக்குனர். தூத்துக்குடியில் தந்தையும் மகனும் காவல்துறையால் கொல்லப்பட்டதும்,கேரளாவில் பசிக்கு உணவு எடுத்த ஆதிவாசி இளைஞனை அடித்தே கொன்றதும், வட இந்தியாவில் மாட்டிறைச்சி வைத்திருந்தமைக்காக அக்லக் என்ற முதியவர் கொல்லப்பட்டதும் என எல்லா சமகால அரசியலையும் பார்வையாளர்களுக்கு கடத்துகின்றார்.

 ஒரு வணிக சினிமாவின் எல்லைக்குள் நின்று மிக காத்திரமான ஒரு அரசியல் வகுப்பை நிகழ்த்துகிறது, ஜன கண மன.

கல்வி நிறுவனங்களில் மாணவர்களை மூளைச்சலவை செய்து தங்கள் சித்தாந்தத்திற்கு பயன்படுத்திக் கொள்ளும் ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகளையும் படம் காட்சிப்படுத்த தவறவில்லை. ஒரு கலைஞனின் சமூகப் பொறுப்பு என்பது இவ்வாறு தான் இருக்க வேண்டும்.

கலை மக்களுக்கானது மக்களின் பாடுகளை வெளியில் சொல்ல ஏதுவான சக்தி மிகு ஊடகம் என்பதை ஒவ்வொரு கலைஞனும் உணர வேண்டும்.  ஜன கண மன குழுவினர் அதனை முழுமையாக உணர்ந்திருக்கின்றனர்.

3 thoughts on “நிறுவனப் படுகொலைக்கு “நீதி கேட்கும் ஜன கண மன”

  1. படம் பார்த்த நிறைவை அளிக்கிறது. வாழ்த்துகள் தோழர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *