நவீன தொழில்நுட்பம், மரபார்ந்த தொழில்களின் பரிணாமம்

நவீன அறிவியல் தொழில் நுட்பமும், மரபுசார் அனுபவ அறிவியலும் ஒன்றுக்கொன்று இயைந்தும் முரண்பட்டும் வருகின்றது. நவீன அறிவியல் கல்விமுறை மரபுசார் அனுபவ அறிவியலை முற்றிலும் நிராகரித்தே வந்துள்ளது என்றே சொல்லலாம். அதே வேளையில் மரபுசார் அனுபவ அறிவியலைப் பேசுபவர்கள் அதைப் புராண இதிகாசங்களுடன் ஒப்பிட்டுப் புனிதப்படுத்தும் போக்கையும் காணமுடிகின்றது.

இந்திய சமூகத்தில் “மெக்கல்லே” கல்விமுறை மரபுசார் அறிவியல் அறிவை முற்றிலும் நிராகரித்து மேலைநாட்டு கல்விமுறையை நடைமுறைப் படுத்தியுள்ளது. இந்திய சமூகம் நவீன கல்வி முறையை எளிதில் உள்வாங்கி அதில் முன்னேறியதற்கு அடிப்படைக் காரணம் மரபுசார் அறிவியல் அனுபவக் கல்வியில் இந்திய சமூகத்திற்கு இருந்த ஆழ்ந்த அறிவும் ஈடுபாடும் என்று சொன்னால் அது மிகையாகாது.

மனிதன் முதலில் கண்டுபிடித்த ஆயுதம் கல். விலங்குகளை வேட்டையாட கற்களை பயன்படுத்தத் துவங்கிய மனிதன் பின்னர் அவற்றை கூர்மையாக்கி தாக்கக் கற்றுக் கொண்டான். கற்களைப் போலவே விலங்குகளின் எலும்புகள் மற்றும் மரக்கட்டைகளையும் கூர்மையாக்கி விலங்குகளை வேட்டையாடப் பழகிக் கொண்டான். விலங்குகளின் ஓட்ட வேகத்திற்கு கற்களும், எலும்புகளும் மரக்கட்டைகளும் ஈடு கொடுக்க முடியவில்லை என்பதை அறிந்து கைகளால் எறியக்கூடிய ஈட்டி போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தத் துவங்கினான். பின்னர் கூர்மையான ஆயுதங்களின் விசையை முடுக்கிவிடும் வகையில் வில்லையும் அம்பையும் செய்யக் கற்றுக் கொண்டான். வில்லும் அம்பும் விசையை முடுக்கி இலக்கை விரைந்தும் பலமாக தாக்கியது. அப்படி விசையை முடுக்கி இலக்கை விரைந்தும் சக்தியோடும் தாக்கலாம் என்று ஆதிமனிதனின் மரபார்ந்த அனுபவ அறிவின் பரிணாம வளர்ச்சியே இன்றைய நவீன அறிவியல் தொழில் நுட்ப அடிப்படையிலான துப்பாக்கிகள், பீரங்கிகள் மற்றும் ஏவுகணைகள்.

ஆதிமனித சமூகத்தின் மற்றொரு முக்கிய கண்டுபிடிப்பு சக்கரம். சக்கரத்தின் கண்டுபிடிப்பு மனித சமூகத்தை வேகமாக முன்னோக்கி உருளச் செய்துள்ளது. ஆதியில் உருளை வடிவிலான மரங்களைப் பயன்படுத்தி பொருட்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லப் பயன்படுத்திய மனிதன் அனுபவ அறிவின் அடிப்படையில் உள்ளீடற்ற ஆரக்கால்களைக் கொண்ட சக்கரங்கள் எடை குறைவாகவும் விரைந்து செல்லும் என்பதைக் கற்றுக்கொண்டு அந்த வகையான சக்கரங்களை செய்யக் கற்றுக் கொண்டுள்ளான். பின்னர் சக்கரங்களை மண்பாண்டங்கள் செய்யவும் பயன்படுத்தியுள்ளான். மற்ற அறிவியல் கண்டுபிடிப்புகள் போல் சக்கரம் என்பது தனிமனிதனின் கண்டுபிடிப்பாக இருந்திருக்க வாய்ப்பில்லை. அது ஒரு சமூகத்தால் கண்டுபிடிக்கப்பட்டு சமூக வளர்ச்சிப் போக்கில் அனுபவ அறிவின் அடிப்படையில் இன்றைய நவீன சக்கரங்களாக பரிணமித்துள்ளதாகவே கொள்ள வேண்டியுள்ளது.

முதன்முதலில் சக்கரம் மெசபடோமியா என்றழைக்கப்படும் இன்றைய ஈராக் பகுதியில் கி.மு. 3500 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதை தொல்லியலாளர்கள் உறுதி செய்துள்ளனர். அதே வேளையில் கி.மு. 3300 ஆண்டுகளுக்கு முந்தைய சிந்து சமவெளி நாகரிகத்திலும் சக்கரங்கள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதாக தொல்லியல் சான்றுகள் தெரிவிக்கின்றன. அதேபோல் தமிழ் நிலப்பரப்பிலும் சங்க காலத்திலேயே சக்கரங்களால் செய்யப்பட்ட வண்டிகள் பயன்படுத்தப்பட்டு வந்ததை சங்க இலக்கியம் பதிவு செய்துள்ளது. 

“எருதே இளைய நுகம் உணராவே

சகடம் பண்டம் பெரிது பெய் தன்றே

அவல் இழியினும் மிசை எறினும்

அவணது அறியுநர்யார்? என உமணர்

கீழ் மரத்து யாத்த சேம அச்சு அன்ன”

என்ற புறநானூற்றுப் பாடல் “வண்டியில் பூட்டப்பட்ட இளமையான எருதுகள் நுகத்தடி பூட்டப்பட்டது அறியாமலும், பெரிய சக்கரங்களை கொண்டது என்றும், பொரும்பாரம் வண்டியில் ஏற்றப்பட்டுள்ளது என்றும் உணராமல் மூர்க்கமாக இழுத்துச் செல்லும்போது மேடு பள்ளங்களில் வண்டி ஏறி இறங்கி அதன் அச்சு முறிந்து விட வாய்ப்பு உள்ளது என்று அதற்காக மாற்று அச்சு (சேமஅச்சு) ஒன்றையும் உப்பு வணிகர்கள் வண்டியோடு கொண்டு சென்றனர்” என்கிறது. ஆக நவீன போக்குவரத்து மோட்டார் வாகனங்களில் கூடுதலாக சக்கரம் (ளுவநிநெல வலசந) கொண்டு செல்வதைப்போல சங்க காலத்திலேயே வண்டியுடன் கூடுதலாக அச்சைக் கொண்டு சென்றுள்ளனர். ஆக இன்றைய கூடுதல் சக்கரம் (ளுவநிநெல வலசந) என்பதற்கு முன்னோடி சேம அச்சு என்பதை அறிய முடிகின்றது.

அதுமட்டுமல்லாது உள்ளீடற்ற ஆரக்கால்கள் பொருத்திய மேம்பட்ட சக்கரங்கள் கொண்ட வண்டிகள் பயன்படுத்தப்பட்டு வந்ததையும் சங்க இலக்கியம் பதிவு செய்துள்ளது.

“கொழுஞ்சூட்டு அருந்திய திருத்துநிலை ஆரத்து

முழுவின் அன்ன முழுமர உருளி

எழூஉர் புணர்ந்தன்ன பரூஉக்கை நோன்பார்

மாரிக்குன்றம் மழை சுமந்தன்ன

ஆரை வேய்ந்த அறைவாய்ச்சகடம் ….”

கொழுவிய வட்டையிலே செருகப்பட்டுத் திருந்திய ஆரம், மத்தளம் போன்று முழு மரத்திலே கடையப் பெற்ற உருளி, கணைய மரங்களை இணைத்தாற்போன்ற வலிமை மிக்க பார், மேகங்களைப் போன்ற கடுமையான பாயால் வேயப்பட்ட கூரை, இத்தகைய உறுப்புக்களைக் கொண்ட வண்டி (சகடம்)’ என்கிறது பெரும்பாணாற்றுப்படை. மாட்டு வண்டிகளை பொதுவாக சக்கடா வண்டி என்பார்கள். சகடம் என்ற சங்ககாலச் சொல்லே சக்கடா என்று திரிபடைந்துள்ளது. விவசாயம் சார்ந்த மாட்டு வண்டிகள் பெரும்பாலும் ஒரே அளவிலான உயரமும் நீளமும் கொண்டவையாகவே உள்ளன. வண்டிச் சக்கரங்கள் செய்வதற்கு 2அடி நீளமும், 6 அங்குலம் அகலத்துடனான வளைந்த (ஊரசஎந) வடிவிலான ஆறு வட்டைகள் அல்லது அலகுகளை செய்து கொள்கிறார்கள். இந்த ஆறு வட்டைகளிலும் தலா இரண்டு வீதம் 12 ஆரக்கால்களை பொருத்தி 12 ஆரக்கால்களும் மையத்தில் உள்ள குடம் என்று சொல்லக்கூடிய உருளியில் இணைக்கப்படுகின்றது. ஆறு வட்டைகளையும் பிணைக்கும் வகையில் சக்கரத்தைச் சுற்றி இரும்புப் பட்டையால் இறுக்கி விடுகின்றார்கள். வண்டியின் ஒவ்வொரு பாகமும் அதன் தன்மைக்கு ஏற்ப வெவ்வேறு மரங்களால் செய்யப்படுகின்றது. உதாரணமாக மாடுகளின் கழுத்தில் அழுத்தாமல் இருக்க இலகுவான அதே நேரத்தில் உறுதியான மஞ்சனத்திக் கட்டைகளை நுகத்தடிகளாகப் பயன்படுத்துகின்றனர். 

இப்படி சக்கரங்கள் செய்யும்போது அவற்றின் ஆரம், விட்டம் மற்றும் சுற்றளவைக் கணக்கிட சூத்திரமும், தமிழ் நிலப்பரப்பில் இருந்து வந்தள்ளது. குறிப்பாக வட்டத்தின் சுற்றளவை கணக்கிட,

“விட்டமோர் ஏழு செய்து

திகைவர நான்கு சேர்ந்து

சட்டென இரட்டி செயின்

திகைப்பன சுற்றுத்தானே” என்கிறார் காக்கைப்பாடினியார்.

விட்டமோர் ஏழு செய்து         = விட்டத்தின் அளவு / 7

திகை வர நான்கு சேர்த்து    = விட்டம்+ (4 X விட்டம்/7)  

சட்டென இரட்டிப்புச் செய்து  = 2 (விட்டம் + (4 X விட்டம்/7)

கிடைப்பது           = 2 X 11 X விட்டம் /7  

வட்டத்தின் சுற்றளவு = (22/7 ) Xவிட்டம்               

இதையே நவீன அறிவியலின் கல்வி முறை π என்கிறது. அதாவது π = 22/7. நவீன அறிவியல் சூத்திரத்தின்படி வட்டத்தின் சுற்றளவு   πXd = (d- விட்டம்).

இந்த மரபார்ந்த அறிவியல் கணக்கு முறையை எளிய தச்சனும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமைப்படுத்தியுள்ளது கணக்கதிகாரம் என்னும் நூல். 

‘விட்டமதனை விரைவாயிரட்டித்து

மட்டு நான்மாவதினில் மாறியே

எட்டதினில்

ஏற்றியே செப்பிடி லேறும்

வட்டத்தளவும்

தோற்றுமெனப் பூங்கொடி நீ சொல்’

விட்டமதனை விரைவாயிரட்டித்து -2 X  விட்டம்

இட்டு நான்மாவதினில் மாறியே – (2 Xவிட்டம் X 4/ 20) 

                                             – [ ஒரு ‘மா’ என்பது 1/20]

எட்டதினில் ஏற்றியே – (2 X விட்டம் X 4/ 20) X 8  

  – 64/ 20 X விட்டம்

  – 3.2 X விட்டம்

இப்படி மரபார்ந்த அனுபவ அடிப்படையிலான அறிவியல் சூத்திரங்களை நவீன அறிவியல் பயன்படுத்தி வட்டத்தின் சுற்றளவை – 2 πr (r = ஆரம்), பரப்பளவை πr2  என்றும் கணக்கிட்டு வருகின்றது. π என்ற கிரேக்க மாறிலியின் மதிப்பு 22/7 என்பதை சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கிரேக்கர்களும், பாபிலோனியர்களும், இந்தியர்களும் அறிந்துள்ளனர்.

தச்சுப்பட்டறைகள் போல் கொல்லுப்பட்டறைகளும் தமிழ் நிலப்பரப்பில் சங்க கால முதலே இருந்து வந்துள்ளதை சங்க இலக்கியம் பதிவு செய்துள்ளது.

“கொல்லன் எறிபொன் பிதிரின்

சிறு பல தா அய்…”

‘கொல்லனின் உலைக்களத்தில் அடிக்கும் இரும்பின்பொறி சிதறுவதுபோல’ என்று சொல்லும் நற்றிணை பாடல் வரிகள் மூலமும் அறிய முடிகின்றது. அப்படி கொல்லன் இரும்பை அடிக்க தனது பட்டறையில் உலைக்களத்தில் தீயின் வெப்பத்தை அதிகரிக்கச் செய்ய துருத்தியை பயன்படுத்தியுள்ளான் என்பதை

“……….. கொல்லன்

குறுகு ஊது மீதி சலைப்

பிதிர்வின் பொங்கி

சிறு பல் மின்மினி போல”

‘அதாவது கொல்லன் பட்டறையில் காலால் மிதித்து துருத்தியை ஊதும்போது எழும் தீப்பொறிகள் மின்மினிப்பூச்சிகள் போல இருப்பதாக’ அகநானூற்றுப்பாடல் – 202ன் வரிகளில் கூறப்பட்டுள்ளது. சங்ககாலத்தில் இரும்பை உலையில் உருக்கி ஆயுதங்களும், கருவிகளும் செய்யப்பட்டுள்ளது. அதன் பரிணாம வளர்ச்சியே இன்றைய நவீன கொள்கலன்கள் மற்றும் கொதிகலன்கள் செய்யும் பெரும் இரும்புத் தொழிற்சாலைகளும் (டீழடைநச ஐனெரளவசநைள) மற்றும் வார்ப்புத் தொழிற்சாலைகளும் (குழரனெயசநைள) ஆகும். 

மரபார்ந்த உழவும் நவீன அறிவியலும்:-

வேட்டைச் சமூகமாக இருந்த மனிதன் மேய்ச்சல் சமூகமாக மாறியபின் அவனுக்கு கால்நடைகளை மேய்க்கும்போது ஓய்வு என்பது கிடைத்தது. அப்போது காடுகளில் விதைகள் மண்ணில் பட்டு முளைப்பதை அறிந்து கொண்டு விதைகளை சேகரித்து மண்ணில் தூவி முளைக்க வைத்துள்ளான். அப்படி விதைகளைத் தூவியபோது மழைநீரால் அடித்துச் செல்வதைத் தவிர்க்க பூமியைக் கிளறி விதைகளை விதைத்து மண்ணால் மூடியுள்ளான். அதேபோல் காட்டுப்பன்றிகள் கிழங்குகளுக்காக பூமியை தோண்டிய பள்ளத்தில் விதைகளை விதைத்தும் விவசாயம் செய்துள்ளான் என்பதனை,

“அருவி ஆர்க்கும் கழைபயில் நனந்தலைக்

கறிவளர் அருக்கத்து மலர்ந்த காந்தள்

கொழுங்கிழங்கு மிளிரக் கிண்டிக் கிளையொடு

கடுங்கண் கேழல் உழுதபூழி

நன்னாள் வடுபதம் நோக்கிக் குறவர்

உழா அது வித்திய பரூஉக் குறுஞ் சிறுதினை

முத்துவிளை யாணர் நாள் புதிது உண்மார்”

– புறநானூறு – 168. 

‘ஆர்ப்பரிக்கும் அருவியுள்ள, மிளகுக் கொடிகள் படர்ந்த மூங்கில் காட்டில், பன்றிக்கூட்டம் செங்காந்தள் கிழங்குகளை தோண்டி உண்டதால் ஏற்பட்ட புழுதியில் குறவர்கள் உழாமலேயே தினையை விதைப்பர். அதில் விளைந்த தினையை காட்டுப்பசுக்கள் மேயும்’ என்கிறது.

இப்படி பூமியை கிளறி விதைத்தால் பயிர்கள் நன்கு விளையும் என்பதை அறிந்து கொண்ட மனிதன், தானே இழுத்து உழவு செய்யும் வகையில் கலப்பையை செய்து கொண்டான். அதன்பின் மாடுகளைப் பயன்படுத்தி உழவைச் செய்துள்ளான். கலப்பைகளைக் கொண்டு உழுது விவசாயம் செய்யும் முறை சங்க காலத்திலேயே இருந்துள்ளது என்பதை, 

“நாஞ்சில் துஞ்ச, கோடை நீடிய

வைது அறு காலை”

நீண்ட நெடிய கோடை காலத்தில் மழையின்மையால் வறுமை மிகுந்து கலப்பைகள் யாவும் தொழிலற்று உறங்கிக் கிடந்தன என்கிறது அகநானூற்றுப்பாடல் 42.

வறண்ட நிலத்தில் மரத்தாலான கலப்பைகளைக் கொண்டு மட்டும் உழமுடியாது என்ற நிலையில் கலப்பையுடன் இரும்பால் செய்யப்பட்ட கொழுவை பூட்டி மாடுகளைப் பயன்படுத்தி ஆழமாக உழுது பயிர் செய்யக் கற்றுக் கொண்டுள்ளான். அப்படி உழுததை,

“குடிநிறை வல்கிச் செஞ்சால் உழவர்

நடை நவில் பெரும்பகடு புதவில் பூட்டி

படிவாய் அன்ன மடிவாய் நாஞ்சில்

உடுப்பு முக முழுக்கொழு முழுக ஊன்றி

தொடுப்பு எறிந்து உழுத துளர்படு துடவை”

உழவுத் தொழிலில் நன்கு நடை பயின்ற பெரிய எருதுகளைப் பூட்டி பெண்யானை முகத்தை ஒத்த கலப்பையில் உடும்பைப் போன்ற தோற்றமுடைய கூர்மையான கொழுவைப் பூட்டி அந்தக்கொழு முழுவதும் மறையும்படி ஆழமாக அமுக்கி உழுது விதைத்து பின்னர் களைக்கொட்டால் களைகளைக் கலைந்து பயிர் விளைவிப்பர் என்று பெரும்பாணாற்றுப்படை நமக்கு உரைக்கின்றது. இரண்டு மாடுகளைக் கொண்டு உழுது பழகிய மனிதன் பெரும் நிலப்பரப்பை உழவேண்டிய சூழல் ஏற்பட்டபோது இரட்டைக் கலப்பைகளை ஒரு ஜோடி மாட்டில் பூட்டி உழுதுள்ளான். பின்னர் ஒரே கலப்பையில் பல கொழுக்களை பூட்டி உழவு செய்ய அனுபவத்தில் கற்றுக் கொண்டான். இதற்கு பல் கலப்பை (பல பற்களை கொண்ட கலப்பை) என்று பெயரிட்டு அழைத்தனர். இந்த பல் கலப்பையின் பரிணாம வளர்ச்சியே நவீன அறிவியல் கண்டுபிடிப்பான உழவு மோட்டார் (Tractor)) என்றால் மிகையல்ல.

நவீன அறிவியல் கண்டுபிடிப்புகள் சூனியத்திலிருந்து சுயம்புவாக உருவானதல்ல. மரபார்ந்த அறிவியல் அனுபவ அறிவின் பரிணாமமே நவீன அறிவியல். மரபிலிருந்து கற்று நவீன அறிவியலை முன்னெடுத்துச் செல்வோம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *